Saturday 30 June 2018

தாய்மொழி வழிக்கல்வி

        தாய்மொழி வழிக்கல்வி 


பெரும்பாலும் இன்றைய சூழலில் சந்திக்கும் பெற்றோர் பெருமையாக சொல்வது தங்கள் குழந்தைக்கு பள்ளியில் இரண்டாம் மொழி பாடம் இந்தி அல்லது மற்ற மொழிகள், தப்பி தவிர கூட தமிழ் இல்லை. முதல் மொழி பாடம் ஆங்கிலம் தான். இது ஒரு உளவியல் சிக்கல், பெரும்பான்மை இந்த நிகழ்வுகள் சென்னை போன்ற மாநகரங்களில் தான். நாகர்கோயில், தேனி, தருமபுரி போன்ற சிறுநகரங்களில் அதிகம் காணப்படுவதில்லை.
ஒருவரின் தாய்மொழி வழி கல்வி அடிப்படை கற்றலின் சுய கட்டமைப்பை உருவாக்குகிறது, உதாரணத்திற்கு ஆரம்ப பாடசாலையில் அதிகபட்சம் நடைமுறை வாழ்வியலின் கல்விமுறைதான் பயிற்சிவிக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் பாடங்கள் இருந்தாலும் அதன் அர்த்தம் தாய்மொழியில் தான் ஆசிரியர்களே கற்று கொடுக்க முடியும். பின் தொடக்க பள்ளியிலிருந்து வேறு மொழி கல்வி முறை ஆரம்பிக்கும் போது, குழந்தைகள் கற்றலில் முதல் குழப்பம் அடைய ஆரம்பிக்கிறார்கள்.
வீடு, நண்பர்கள், சுற்றத்தார் உடன் தாய் மொழியில் உரையாடலும், பள்ளியில் வேறு மொழியும் முரணை உருவாக்கும். பயணம் சார்ந்து பயணிக்கும் நாம் மொழியில் தடுமாறுவது உண்மைதான். பெற்றோர்களின் முக்கிய காரணம் இது போன்ற சந்தர்ப்பங்களில் நாங்கள் தடுமாறியது போல் அவர்கள் பட வேண்டாம். உண்மையில் தாய்மொழியில் பயின்ற பலரும் வேலை நிமித்தமாக வெளியூரில் வசிக்கும் போது அந்த மொழியில் சரளமாக உரையாடுவதை காண முடியும். ஏன் நம் அருகிலே வடநாட்டில் இருந்து இங்கே தொழில் செய்யும் பலரும் தமிழில் சரளமாக உரையாடுவதை காணலாம். அரபு நாடுகளில், சிங்கப்பூரில் உலகமெங்கும் இந்தியர்கள் அந்தந்த நாட்டு மொழிகளில் வளமை உடனே இருக்கிறார்கள்.
என் நண்பர்களே இரண்டாம் பாடம் இந்தி (உதாரணத்திற்கு) பயின்றவர்கள் இந்தியை வாசிக்க மட்டும் தெரிந்து வைத்து இருக்கிறார்கள். ஆனால் தொழில் நிமித்தமாக பயணிப்பவர்களின் மொழி வளமை இவர்களை ஒப்பிடும் போது சராசரிக்கும் அதிகம். இயல்பிலே ஒரு மொழி நமக்கு தேவைப்படும் போது நம்மால் எளிதாக கற்றுக்கொள்ள முடியும்.
தாய்மொழி கல்வி பயிற்றுவித்தல் கற்பனை வளத்தை அதிகரிக்கும், எதையும் எளிதாக ஒப்பிட்டு பார்த்து, எளிய உதாரணங்களுடன் அறிந்து கொள்ள முயலும். தற்போதைய போட்டி வாழ்வியலில் பல மொழி தேவைதான், மாற்று கருத்து இல்லை, அதற்காக தாய்மொழி வழி கல்வியை முளையிலே கிள்ளி எறிவது பெரும் தவறு. தாய் மொழியில் பயின்ற பலர் பல துறைகளில் சாதனையாளர்கள்தான்.
நீங்களே தாய் மொழியில் பயின்று தான் தற்போதைய நிலையில் உள்ளீர்கள். கல்வியை தொழிலாக பாவிக்கும் சிலர்களின் பேராசையில் சிக்குவது நம் தலைமுறைதான்.
லெ ரா

இணைந்த கைகள்

  ஒரு மாலைநேரம், புதிய திரைப்படம். திங்கள் கிழமை,  மாலை நேரக்காட்சி,  இணைந்த கைகள்.  நிதானியுங்கள், அதே நேரம் உங்கள் மனைவி, அரசு மருத்துவமனை...