Wednesday 31 July 2019

அப்பாவை தேடி









"அப்பா இருக்காரா"

"இங்க இல்ல, இப்போலாம் இங்க வாராதே கிடையாது "

"பொய் சொல்லாதீங்க, அவரு இங்கதான் இருப்பாரு, காலேஜ் பீசு கட்டணும், இன்னைக்கு தாரேன்னாரு"

"எம்பிள்ள ஆணையா சொல்லுகே அவர் இல்ல"

"அப்போ கதவ  தொரங்க, நா பாத்துட்டு இல்லைனா போய்கிடுகேன்"

பொறுமை இழந்து வெடித்துதான் போனேன், அதுவரை இல்லாத ஆத்திரம், யார் மேல் அப்பா மேல்தான், கதவை பலமாக தட்டினேன், மிகவும் பலமாக, கால்களால் உதைக்கவும் ஆரம்பித்தேன், அது ஒரு சிறிய கிராமம், ஊர் பெரியவர்கள் கூடிவிட்டார்கள், யாரும் என்னிடம் ஏன் இப்படி செய்கிறாய் என்ற கேட்க இயலாது, நான் என் அப்பாக்காக அவரின் இரண்டாவது மனைவி வீடு முன் பைத்தியக்காரனாய் கிறுக்குத்தனம் செய்துகொண்டிருந்தேன், மாதம் இருமுறை அவர்களும் இதை கவனிக்கிறார்கள், அவள் கதவை திறந்தாள், அப்பா அங்கே இல்லை, பெரும்விரக்தி அங்கிருந்த சாமி படங்களை உடைத்தேன், இதுவரை அவளும் என்னை அப்படி கண்டிருக்கமாட்டாள், வெளியே இறங்கி சைக்கிளை எடுத்து வேகமாக மிதித்து கிளம்பினேன், கோதைகிராமம் சிவன்கோயில் கடந்து சபரி அணை இசக்கியம்மன்  கோயில் அருகே அப்பா நடந்து வந்துகொண்டிருந்தார், அவர் என்னை கவனித்து விட்டார், நன்றாக குடித்திருப்பது அவரின் நடனமாடும் நடையிலே தெரிந்தது, என்னருகே வந்தார், சைக்கிளை ஓரமாக நிறுத்தி இசக்கியம்மன் கோயில் அருகே ஒதுங்கினேன்.

"உங்க அம்மையை கொல்லனும், கொன்னுட்டு ஜெயிலுக்கு போயாவது நிம்மதி கிடைக்கணும், இங்க எதுக்குல வந்த"

"நாளைக்கு காலேஜ் பீசு கட்டணும், நாந்தான் அன்னைக்கே சொன்னேன்லா" தேம்பி தேம்பி அழுதேன்.

"சரி நீ போ, அப்பா நாளைக்கு சாயந்திரம் தருவேன்"
நிலையில்லாமல் அசைந்து அசைந்து அவர் கோதைகிராமம் போகும் பாதையில் நடந்தார், எனக்கு எதிரே பரந்த பசும் வயல்வெளி, இந்த பக்கம் தோவாளை மலை அதை தொடர்ந்து தாடகைமலை, கூடவே சலசலத்து ஓடும் பழையாறு, மெதுவாய் அணையருகே சைக்கிளை தள்ளியபடி நடந்தேன், வண்ணான்துறையில் துணி துவைக்கும் சத்தம் கேட்டது, தென்னை மரங்களுக்கிடையே கட்டப்பட்டு இருந்த கயிறுகளில் துணிகள் அசைந்தாடியது, அணையின் மதகுகளில் கரும் பல்லிகள் அப்பியிருந்தன.

இது வழக்கமாக நடக்கும் ஒன்றுதான், இருந்தாலும் அது உண்டாக்கும் ரணம் என் உடல் எங்கும் பற்றியெரியும், நேரம் தெரியாமல் அங்கேயே உட்கார்ந்திருந்தேன், வீட்டுக்கு சென்றால் அம்மா அப்பாவிடம் பீசுக்கு ருபாய் வாங்கினாயா என்று கேள்வி கேட்பாள், இல்லை என்றால் எனக்கு சாமர்த்தியம் போதாது என்று அழுது கூப்பாடு வைப்பாள், இதற்கும் சேர்த்து என்னை ஏசுவாள்.   இதே சபரி அணை வழியாக அப்பாவின் சைக்கிளில் நானும் அம்மாவும் பொற்காலம் திரைப்படம் ராஜா தியேட்டரில் பார்த்தோம், திரும்பி வரும் வழியில் அப்பாவின் தோள்களிலே நான் உறங்கிவிட்டேன், கண்முழித்து பார்க்கும் போது வீட்டில் இருந்தோம், அந்த அப்பா மறுபடி வரப்போவதில்லை, இவர் அவர் இல்லை. 

அம்மாவை சொல்லியும் குற்றமில்லை, எல்லாம் நல்லபடியாக தான் போய்க்கொண்டிருந்தது, நான் ஆறாவது படிக்கும் போது அம்மாக்கு கடுமையான வயிற்று வலி, கோட்டார் ஆசுபத்திரிக்கு சென்றோம், கர்ப்பப்பையில் கல்  என தெரிந்தது, உடனடியாக ஆப்ரேஷன் செய்ய வேண்டும், அம்மாக்கு ஏ நெகடிவ் இரத்தவகை அப்பாதான் எங்கங்கோ தேடி அலைந்து இரத்தம் வாங்கி வந்தார்,  ஆப்ரேஷன் தியேட்டர் வெளியே நான் நின்றிருந்தேன் என் கையில் நூற்று எட்டு சரண கோஷம் புத்தகம் கொடுத்து படிக்க சொன்னார், "சாஸ்தா பாத்துபான்ல, ராக்கோடிகண்டன போய் பாத்துல வெடலு  போட்றக்கேன்"  என்றார். நானும் அதே புத்தகத்தை படித்து படித்து உறங்கியே போனேன், ஆச்சி என்னை எழுப்பினால், அம்மாவை ஸ்ட்ரெச்சரில் இழுத்து கொண்டு போனார்கள், தலையில் பச்சையுரையும், பச்சை நிற போர்வையாலும் மூடப்பட்டு கிடந்தாள், கண்கள் மூடி வாய் சிறிது திறந்து கிடந்தது, நர்ஸுகள் ஒன்றும் பயப்பட வேண்டாம் ஐ சி யு வார்டுக்கு கொண்டுபோய் இரண்டு நாள் கவனிப்பதாகவும் பின்னர் சாதாரண வார்டுக்கு கொண்டு போய்விடுவோம் என்றும் கூறினாள். அப்பா தைரியமாக இருந்தார், என்னை வீட்டுக்கு சைக்கிளில் அழைத்து போனார், போகும் வழியில் பரோட்டோ வாங்கிக்கொடுத்தார்.

அம்மா வீட்டுக்கு வந்ததும் , எனக்கு இன்றைக்கும் நியாபகம் உள்ளது, அதிகாலை இருக்கும் எங்கள் ஹோட்டலுக்கு தேவையான மாவு அரைக்க கிரைண்டர் ஓடிக்கொண்டிருந்தது, நான் சத்தத்தில் முழித்து பார்க்கும் போது அப்பா பீரோவில் எதையோ எடுத்துக்கொண்டிருந்தார், அவர் என்னை கவனிக்கவில்லை நானும் தூங்கிவிட்டேன், அதன்பின் அப்பா வீட்டுக்கு வரவே இல்லை, ஒரு மாதம் அப்பா எங்குமே கிடைக்கவில்லை, அப்பாவை தேடி அம்மா அவர் சொந்த ஊரான திருநெல்வேலிக்கு சென்றாள் , திரும்பி வந்த மாலை அழுது தீர்த்தாள், என் ஆச்சியையும் மாமாவையும் ஏசினாள், என்னை கட்டியணைத்து அழுதாள், அடுத்தநாள் என்னையும் அழைத்துக்கொண்டு திருநெல்வேலி சென்றாள், அப்பா வேறு ஒரு வீட்டில் இருந்தார், அவருடன் இன்று நான் யார் வீட்டுக்கு சென்றேனோ அவளும் இருந்தாள், மாமா கண்ணீர் முட்டி ஒரு ஓரமாய் நின்றிருந்தார், அப்பா தலையை குனித்தபடி எதையோ வெறித்து பார்த்து கொண்டிருந்தார், அவள் அம்மாவின் கால்களில் விழுந்து தேம்பி தேம்பி அழுதாள், "எனக்கு எதுவும் தெரியாதுக்கா, முத்து மாறி ஒரு பிள்ளையிருக்கே , ஏமாந்துட்டேனே" என்று தலையில் அடித்து அழுதாள், கெட்ட காலம் எல்லாம் சீக்கிரம் நடந்துவிட்டது, அவளை இங்கேயே தனியாக வீடு எடுத்து வைத்துக்கொண்டார், ஒரு நாள் விட்டு ஒரு நாள் ஒரு வீடு, பெரும்குடியும் உண்டு, அவர் வந்தாலே நாறும், ஆனால் எனக்கு அவரை அதிகம் பிடிக்கும்.

கன்யா சைக்கிள் மார்ட்டில் நான் சைக்கிள் வாடகைக்கு  எடுக்க சென்றாலே தெரியும் நான் அப்பாவை தேடி கோதைக்கிராமம் செல்கிறேன் என்று, எப்போதும் துணைக்கு முத்துவோ, விவேக்கோ கூட வருவதுண்டு,  மாமாக்கு இதெல்லாம் பிடிக்காது, அப்பா ஓடிப்போன அன்றே மாமா அம்மாவிடம் "எட்டி இவன இடவாடு தீத்திரலாம், வேணாண்டி இந்த தாயோளி, சபரியையும் சேத்து மூணு பிள்ளையா வளத்துக்கேன், கேளு மக்கா, இவன நம்பாதே" என்றார், அம்மாதான் அவரை விட்டுக்கொடுக்கவே இல்லை "வேணானே, அவர உட முடியாதுன்னே, நா யார்கிட்டயும் வரமாட்டேன், எனக்கு அவரு வேணும்னே" என உடைந்து அழுதாள், மாமா அதன்பின் இந்த பிரச்சனைகளில் தலை இடுவதில்லை, ஆனால் மாமாக்கு நான் அவரை தேடி போவதில் மாமாக்கு வருத்தம் உண்டு, அன்றைய நாள் அவர் என்னிடம் அன்பாய் பேசமாட்டார், எனக்கு தெரியும் மாமாக்கு நான் கோதைக்கிராமம் செல்வது பிடிக்காது என்று.

லேசாக மழைச்சாரல் விழுந்தவுடன் சுயநினைவுக்கு வந்தேன், மழை வெறிக்கும் முன்னே வேகமாய் சைக்கிளை மிதித்து கன்யாவில் சைக்கிளை விட்டு வீட்டுக்கு நடந்தேன், உள்ளே அம்மா அடுக்காளையில் இருந்தாள், நான் "அம்மா அப்பாவே பாத்தேன், ரூவா கேட்டேன், நாளைக்கு தாரேன்னாரு"  என்றேன், "எனக்கு ஒன்னும் தெரியாது, நாளைக்கு நீயே அவர பாத்து வாங்கி பீசு கட்டிரனும், எனக்கு முன்னால வந்து நிக்க கூடாது" என்றாள். எனக்கு தேவையான அனைத்துக்கும் காசை அப்பாவை தேடி தேடியே நான் வாங்க வேண்டிருந்தது, அவர் வேலை செய்த அனைத்து கடைகளிலும் என்னை தெரியும், சாயந்திர நேரம் அவரை தேடி ஹோட்டலுக்கு வெளியே நிற்பேன், பெரும்பாலும் நான் உள்ளே போய் அப்பாவை பற்றி கேட்க மாட்டேன், எனக்கு அதற்கான தைரியம் கிடையாது ஒரு கூச்சம் எந்நாளும் என்னை தடுப்பதுண்டு, அவரே என்னை கண்டு வெளியே வந்தால் தான் உண்டு, இல்லை யாராவது அப்பாவிடம் நான் காத்துக்கொண்டிருப்பதை கூறவேண்டும், என்னை உள்ளே அழைப்பார், சாப்பிட சொல்வார் நான் முடியாது என்பேன் , தேவைப்படும் காசை வாங்கிக்கொண்டு வேகமாக வெளியேறிவிடுவேன், அதுவரை அந்த ஹோட்டலில் நான் தலை தூக்கவேமாட்டேன். என்னால் அது முடியாது. 
   
அப்பாவை நான் யாரிடமும் விட்டு கொடுப்பதில்லை, சில நேரங்களில் குடித்து விட்டு அவர் அம்மாவை அடிக்கும் போது, அவரை தடுப்பதுண்டு ஒருமுறை ஆத்திரத்தில் அவரை தள்ளிவிட்டேன், அவரின் ஊக்கத்திற்கு என்னை அவர் அடித்தால் எதிர்த்து நிற்க என்னால் முடியாது, ஆனால் அதுபோல் பல சந்தர்ப்பங்களில் அமைதியாக சென்றுவிடுவார், என்னை அடிக்க கூட முயன்றதில்லை, அவர்க்கு நன்றாக தெரியும் அவர் செய்யும் தவறுகள் அதனில் இருந்து விடுபட என்னவோ குடி அவர்க்கு மருந்தானது, என்ன குடி அவரை அதன் ஆளுகைக்குள் கொண்டு போய் விட்டது.

சில நேரங்களில் காலம் நாம் எதிர்பார்ப்பதற்கு மாறாகவே அதன் போக்கை நிர்ணயிக்கும், மாமா மருத்துவமனையில் இருந்த நாட்களில் எனக்கு பெரிய நம்பிக்கை இருந்தது, நலமாக திரும்பி வருவார் என்றே எதிர்ப்பார்த்தேன், ஒரு இரவு அம்மா, பெரியம்மா மாமாவை போய் பார்த்துவிட்டு வந்து எதோ தவறாக நடக்கும் என்பது போல் அழுது தீர்த்தனர், நான் அவர்களை சமாதானப்படுத்தி தூங்கவைத்தேன், நள்ளிரவில் அடித்த கைபேசி அழைப்பு அதை உடைத்து சுக்குநீராய் ஆக்கியது, உடனடியாக மருத்துவமனை சென்று உயிர் இல்லாத மாமாவை ஸ்ட்ரெச்சரில் கண்ட நொடி என்னுள் ஏற்படுத்திய வலி இதயத்தின் அழுத்தத்தை அதிகரித்தது, உள்ளுக்குள் எழுந்த ஒரே எண்ணம் அப்பாவை தேடி இந்த தகவலை கூற வேண்டும்.

மாமாவை வீட்டுக்கு எடுத்து சென்று உள்ளே நுழைந்த போது அத்தை எந்திரிக்கவே இல்லை, நீலு என் சட்டையை பிடித்து அழுதாள் "சொல்லுங்க அத்தான், அப்பாக்கு எதுவும் ஆகாதுன்னு சொன்னிங்களே, எழுந்துக்க சொல்லு அப்பாவ" என்று அவள் கேட்ட கேள்விக்கு என் கண்ணீர்தான் பதிலாய் இருந்தது, பரமசிவன் மாமா ஆட்டோவில் அப்பாவை தேடி அவள் வீட்டுக்கு சென்றோம், "மாமா அவ வீடு உங்களுக்கு தெரியுமா", "தெரியும்  மக்கா, போய் பாப்போம்", "அங்க இருப்பாரா","அங்கதான் இருக்கனும், இருந்தா நல்லது", நடுஇரவு நாய்கள் ஊரை ஆக்கிரமித்து கொள்ளும் தருணம், அவள் வீடு பூட்டி இருந்தது, பரமசிவன் மாமா என்னை பார்த்தார், பிறகு அவரே கதவை தட்டி "லேய் லெட்சுமணா" என்றார், அவள் தான் பதிலுக்கு "அவரு இல்லனே" என்றாள், எனக்கு கோபம் அதிகமானது "நா சபரி வந்திருக்கேன்,அப்பாவ கூப்பிடுங்க" என்றேன், "லேய் இந்த நேரத்துல இங்க யாம்ல வந்தே" என்றார் அப்பா,"மாமா போய்ட்டுபா, நீ வாப்பா' என்றேன், அப்பா கதவை வேகமாய் திறந்து வெளியே வந்தார்,"என்னலே சொல்லுக", "ஆமாப்பா மாமா செத்துட்டு " என்று அழ ஆரம்பித்து விட்டேன், அவரும் அதே இடத்தில் உட்கார்ந்து தலையில் அடித்து அழ ஆரம்பித்து விட்டார், பின் ஆக வேண்டிய காரியங்கள் எல்லாம் முடிந்தது, மாமாக்கும் அப்பாக்கும் இடையே பல கோபதாபங்கள் இருந்தாலும் அவர்களிடையே ஆழமான பிணைப்பு உண்டு.

நான் சென்னை வந்து வேலை தேடி எனக்கு ஓரளவுக்கு சம்பளம் கிடைக்க ஆரம்பித்தது, எனக்கும் ஊருக்கும் இருந்த இடைவெளி அதிகரித்தது, அப்பாவும் நானும் பேசிக்கொள்வதும் குறைந்தது, அம்மாவை கைபேசியில் அழைக்கும் போதெல்லாம் அதிகமாய் அப்பா வீட்டில் இருப்பதில்லை, நானும் அவரை பற்றி விசாரிப்பதில்லை, அப்பா ஒரு வேலை என்னை அழைத்து பேசினால் எனக்கு தெரியும் அவர் குடித்திருப்பார், என்னிடம் பேச பெரிய தயக்கம் அவரை தடுப்பதுண்டு, நாங்கள் இருவரும் அவ்வளவாய் சிரித்து பேசியதில்லை, இருப்பினும் தெரிந்தோ தெரியாமலோ என்னுள் அவரால் பெரிய தாக்கம் ஒன்று உண்டானது, அவரை போல் மனைவியை குடும்பத்தை கவனித்து கொள்ளக்கூடாது.

ஒரு பொங்கல் விடுமுறையில் ஊருக்கு சென்று சென்னை திரும்பும் போது அம்மா மன்றாடி அப்பாவை வேலை பார்க்கும் கடையில் போய் பார்த்து விட்டு போகுமாறு கூறினாள் , வேண்டா வெறுப்பாக சென்றேன், அப்பா டீ ஆற்றிக்கொண்டிருந்தார், என்னை கண்டதும் மிகவும் மகிழ்ச்சியடைந்தார், எனக்கு டீ போட்டு குடிக்க சொன்னார், "சாப்டியால", "சாப்டேன் பா","நேரத்துக்கு சாப்பிடனும்ல, அதுக்குதான் வேலை பாக்கது, கண்ட பழக்கம்லா கத்துக்காதே, ஒழுங்கா இருக்கனும், அம்மாவ நல்லா பாத்துக்கோ", இதுதான் நாங்கள் பேசிய வார்த்தைகள், நான் அங்கிருந்து கிளம்பும் போது, அவர் என்னையே பார்த்து கொண்டிருந்தார்.

அது பிப்ரவரி மாதம், சென்னையில் வெயில் கொழுத்த ஆரம்பிக்கும் நேரம், ஒரு முன்மதிய நேரம், என்னை சுற்றி கல்லூரி மாணவர்கள், நான் ஒரு கணினி பயிற்சி நிலையத்தில் வேலை பார்த்து கொண்டிருந்தேன், வேலை பளு மிகுதியாய் இருந்தது, என் கைபேசி ஒலித்தது, மறுமுனையில் பெரியப்பா "லேய் சித்தப்பா கீழ விழுந்திட்டான்", நான் பேச ஆரம்பிக்கும் போதே இணைப்பு துண்டானது, நான் பதறி விட்டேன், அடுத்த அழைப்பு பெரியம்மாவிடம் இருந்து "லேய் சபரி அப்பா நம்மல எல்லாம் விட்டுட்டு போய்ட்டாம்ல", எனக்கு பேச்சு வரவில்லை, கை நடுங்க ஆரம்பித்தது, மொத்த உடலே உதற ஆரம்பித்துவிட்டது, வார்த்தைகள் தொண்டையை தாண்டி வெளிவரவில்லை, அனைத்தையும் கூறிவிட்டு பெரியம்மா எப்படியாவது வீட்டுக்கு வர சொல்லி அழைப்பை துண்டித்து விட்டாள், எனக்கு புரிந்தது பெரியப்பா அண்ணனுக்கு அழைக்க நினைத்து தவறுதலாய் என்னை அழைத்து விட்டார், நான் மேலாளரை பார்த்து நடந்ததை கூறினேன், அடுத்த நடந்த எல்லாமே வேகமாய் கடந்து போனது, ஆட்டோவில் கோயம்பேடு பேருந்து நிலையத்தை அடைந்தேன், நாகர்கோயிலுக்கு நேரடி பேருந்து இல்லை, மதுரை வரை மட்டுமே பேருந்து இருந்தது அதுவும் மதியம் ஒரு மணிக்கு தான், அப்போது மணி பன்னிரெண்டரை, நாங்கள் அங்கேயே அரை மணிநேரம் காத்திருந்தோம்,அதுவரை ஒரு சொட்டு கண்ணீர் வரவில்லை, நான் யாரிடமும் பேசவும் இல்லை, அது ஒரு நிலை அந்த நேரத்தில் சுற்றி நடப்பது எல்லாம் வேகம் வேகமாய் கடந்து போனது, தூரத்தில் ஒரு கண்ணீர் அஞ்சலி விளம்பரம் அதில் அப்பாவின் புகைப்படம் எனக்கு தெரிந்தது, தொண்டை விக்கி நெஞ்சு அடைத்தது கண்ணீர் முட்டி கொண்டு வந்தது, எதையுமே நான் கவனிக்கவில்லை என்னை சுற்றி மூன்று பேர் சமாதானபடுத்திக்கொண்டிருந்தனர், நான் அழுது கொண்டிருந்தேன், என் ஆழ்மனதில் ஒரே ஒரு குரல் தான் ஒலித்தது, அது "இனி நா அப்பாவ எங்கயும் தேடி போகாண்டம்”.                                                             

இசக்கி









"உண்மையாவா சொல்லுக, அவளுக்கு பிள்ளை இருக்கா, பொய் சொல்லாத டே" என்றார் எழுபதுக்கு மேல் வயதுடைய மாடசாமி.

"நா எதுக்குவே பொய் சொல்லணும்" பதிலுக்கு மல்லுக்கட்டினார் அதே வயதுடைய சுந்தரம்.

"ஆளு பாக்க நல்ல கிளிப்பிள்ளையாட்டு இருக்கா அதான் கேட்டேன்" சந்தேகத்துடன் பதில் கூறினார் மாடசாமி.

யார் அவள்? அவளா புதிதாய் இந்த தெருவுக்கு தாமசம் ஆயிர்க்கும்  கடுக்கரை காரிதான். மொத்தமே இருபது வீடு கொண்ட நீண்ட தெரு. தெருமுக்கில் சடை விரித்து, ஆங்காரமாய் இசக்கி ஒருத்தி வருடம் ஒருமுறை கொடை  கேட்டு பாவம்  கையேந்தி நிற்கிறாள், என்னென்னமோ மாறிவிட்டது. இவளுக்கு கொடை ஒரு கேடா! இதுதான் பெரும்பால் தெருவாசிகளின் எண்ணம். ஆனால் அடிமனதில் இன்னும் எரிந்து கொண்டிருக்கும் அவளின் பகைத்தீ எங்கே நம் வீட்டில் தொற்றி விடுமோ என்ற அச்சம் ஒழுங்காய் கொடை கழிக்கிறது. இசக்கிக்கும் கடுக்கரை காரிக்கும் என்ன சம்பந்தம், இந்த இசக்கியும் கடுக்கரை காரிதானம்.

நெடுநெடு உயரம், எடுப்பான தேகம், கரும்கூந்தல் இடை தாண்டியும் தொங்குகிறது, கோயில் பிரகாரங்களில் செதுக்கிருக்கும் ரதியின் முகம் அவளுக்கு, வெட்டிய பிறையாய் நெற்றி, சிறிய கூரிய மூக்கு, இவை கூட மறந்து போகும், மறக்காதது அவள் கண்கள். ஆம்,  ஏதோ ரகசியத்தை ஒளித்து வைத்துக்கொண்டு,  தெரிந்து கொள்ள வருபோர்க்கு அதை மறைக்க பாவிப்பது போலிருக்கும். நூல் சேலையில் தான் அதிகம் அவள் தரிசனம். புதிய தெருவுக்கு வந்து இரண்டு மாதங்கள் ஆகிற்க்கும், அதற்குள் எல்லா வீடுகளிலும் அவள் புராணம் தான். ஐந்து பெற்றவனுக்கும், பேரன் பேத்தி எடுத்தவனுக்கும், பதின்பருவ சிறுவர்க்கும் அவள் பற்றிய பேச்சுக்கள், விவரணைகள் பெரும் கிளுகிளுப்பு.

பின் என்ன, இது போதாதா பெண்களுக்கு, வசைகளும் புறணி பேச்சுகளும் இவள் பற்றியே அதிகமும் குழாயடிகளில், வீட்டு வராண்டாக்களில் வளமாய் வலம் வந்தது. அவள் முகத்திற்கு நேராய் பேச எவர்க்கும் திராணி இல்லை. அவள் காதிற்கு வராமலா போயிருக்கும்,  என்ன பெண்கள் இவர்கள், தெருவிற்கு வந்த புதிதில் சஜமாய் பழகியவர்கள்தானே!!, அப்புறமென்ன அவள் கட்டி கொண்டு வந்திருக்கும் ஆணிற்கு  அவளை விட சிறிய வயது  என்பதாலோ,  இல்லையேல் இவன் இரண்டாவது வந்தவன்தானே என்ற இளக்கறாமோ, எல்லா கண்ணகிகளுக்கும் இந்த மாதவி மேல் கோபம்.

இவள் குழந்தைக்கு இரண்டில் இருந்து மூன்று வயது இருக்கும், மூத்தவன் வாரிசு. அவன் எங்கு போனான்? எங்கோ போனான், தெருவிற்கு ஏன் இந்த ஆராய்ச்சி பட்டப்படிப்பு எல்லாம் இவள் மீது மட்டும் தனியாக, இவள் மற்ற பெண்களை போல் இல்லையே, அது மட்டும் தான் காரணமா!

முதலில் கட்டியவன் விபத்தில் இறந்து விட்டான். அப்போது இவளுக்கு இருபது வயது கூட ஆகிருக்காது, இளம்வயது, கையில் நான்கு மாத குழந்தை வேறு,  கூடிய வரை வீட்டில் இருந்தால், எத்தனை நாள் வீட்டிலே இருப்பது, இவளுக்கு அடுத்தும் வரிசையாய் நான்கு பெண் பிள்ளைகளை பெற்ற ஏழை அப்பா. வறுமை சாப்பாட்டுக்கு மட்டும் தான், குழந்தை குட்டிகளுக்கு இல்லை, அதற்கு மாத்திரம்  செழிப்பான காலம் அது, தாலியறுத்தவள் வீட்டில் வேறு தாலி ஏறுவது தான் எளிதா!

சொல்பேச்சும் ஏச்சும் கேட்கும் முன்னே தனியாய் வீடு எடுக்க துணிந்தாள், துணிந்தாள் என்பதை விட வேறு வழியில்லை அவளுக்கு.  துணைக்கு தாயை பெற்றவளும்  இருந்தாள். கால் வயிறு கஞ்சிக்கும் காசு வேண்டுமே, அருகில் இருந்த ஊரில் சந்தைதெருவில் பெரிய பலசரக்கு கடையில் வேலை, தேவைக்கான சம்பளம், குழந்தையை ஆச்சி கவனித்து கொண்டாள்.. யாரும் கவனிக்கவில்லை இவர்களை, தாங்களே ஓடிக்கொண்டிருந்தார்கள், யாரும் இடைஞ்சலாயும்  இல்லை.

 இவனை, ஆம் இவளை இரண்டாவது கட்டியவன், கட்டியவனோ இழுத்து கொண்டு வந்தவனோ, ஆள்  மாம்பழ நிறத்தில், அடர்த்தியாய் தாடியுடன், திடகாத்திரமாய்தான் இருந்தான். அவளுக்கு எல்லாவிதத்திலும் சரியான பொருத்தம். இதுதான் தெருக்கே பொறுக்கவில்லை.  ஒருவருடமாய் இந்த பழக்கம், இப்போது இந்த தெருவில் குடியேறி இருக்கிறார்கள்.     
  
என்ன பெரிய வயது ஆகிவிட்டது எனக்கு , இருபது கடந்திருந்தது, கணவன் இறந்து வருடம் ஆயாச்சு, அவனுக்காக நான் வருந்தினேனா. இல்லை,  எனக்கு அவனை  சுத்தமாக பிடிக்காது. வயதில் பத்து பதினைந்து வயது மூத்தவன், பெரும்குடிகாரன், சொத்து உண்டு.  ஆம்பளையா அவன், திருமணம் முடிந்த அன்றைக்கே அவன் வக்கிர புத்தியை காட்டியவன் ஆச்சே, அவன் அத்தனை வருட வெறியை என் மேல் எறிந்தான். தீப்படுக்கை.  ஒவ்வொரு இரவும், அவனின் மூச்சு எனக்கு வாடை , அவன் தேவைக்கு நான், காலை பணிவிடை செய்ய, இரவு உடல் தேவைக்கு, எனக்கான ஆசைகளை என்றைக்காவது கேட்டிருக்கிறானா. இன்றும் அவனை நினைத்து வருத்தப்பட  வேண்டிருக்கிறதா! அவன் இறந்த அன்றே பெரும்பீடை ஒழிந்தது என்றே தோன்றியது. அவன் இறந்த செய்தி கேட்டு வந்த கண்ணீர் கவலையிலா? , மகிழ்ச்சியிலா.

அவன் இறக்கும் போது கையில் நான்கு மாத குழந்தை எங்கு போவேன். அப்பனும் சரியில்லை, அம்மைக்கு வாயே இல்லை. நான் வீட்டை விட்டு கைக்குழந்தையுடன் இறங்கும் போதும் வாய் பொத்தி கண்ணீர் முட்டி நின்றாலே ஒழிய ஒரு வார்த்தை பேசினாளா. ஆச்சி இறங்கி வந்து விட்டால் என்னோடு. என்னிலை கண்டா, இல்லை என்னை கண்டா,  மூக்கன் செட்டியார் வீடுக்  கொடுத்தார். காரணம்  தெரியவில்லை, வாரம் ஒருமுறை வீட்டிற்கு வர ஆரம்பித்தார், ஆச்சியும் பாவம் என்ன செய்ய! , கையில் ஒரு ருபாய் இல்லை, அப்பாவின் பால்ய சிநேகிதர் தான்,  என் மேல் இரக்கமா!.

காசு கொடுக்க ஆரம்பித்தார், எனக்கும் சந்தைதெருவில் அவர் கடையிலே வேலை போட்டு கொடுத்தார். எனக்கு தெரியும் அவரின் பார்வையின் வித்தியாசம். அவரின் மகளை பார்ப்பதற்கும், அதே வயதுடைய என்னை பார்ப்பதற்கும். வாழ வேண்டுமே. யாரும் இல்லா நேரம், கடையில் அதை எடு, இதை எடு என என்னை குனிந்து நிமிர வேலை செய்ய வைத்து எதைப்  பார்க்கிறாரோ. பார்க்கட்டும் என்று விட்டு விட்டேன். அதில் என்ன சுகமோ அவர்க்கு, எனக்கு வேலை வேண்டுமே.

முகத்திற்கு பவுடரும் , கண்ணுக்கு மையும்  பூசி  கொண்டேன் நெடுநாட்களுக்கு பிறகு. வேலு, நான் என் மனதிற்குள் ஆணுக்கு கொடுத்த வரையறையில் சரியாய் பொருந்தியவன் அவனே, சந்தைதெருவில் ஆட்டோ வைத்திருந்தான், எனக்கு தெரியும் அவன் என்னை கவனிக்கிறான், யார் தான் கவனிக்கவில்லை, முகம் தவிர அத்தனையும் கழுகை போல் கொத்தி தின்பதை போன்ற எத்தனை ஆயிரம் பார்வைகளை கடந்திருப்பேன். அதுபோலன்றி அவனின் பார்வை எனைக்  காந்தம் போல் ஈர்த்தது, நானும் அவனைக்  கவனிக்க ஆரம்பித்தேன்.

ஒரு நாள் என் முன்னே நின்றான், என் கண்களை நேராய் பார்த்து, கடந்த காலம் எல்லாம் அறிந்தவனாய் ஒப்பித்தான், இது விதி என்றான். இதுவே தொடராது மாறும், நாம் மாற்றுவோம் என்றான். கிழட்டு பார்வையில் மாட்டி சிக்கி கொண்டிருந்த எனக்கு ஆசுவாசமாய் இருந்தது அவன் பேச்சு. நம்பினேன், செட்டியாரிடமே கூறினேன், அவரும் தவறில்லை நீயும் இளம்வயதுக்காரி உன் வாழ்க்கையை நீதான் தீர்மானிக்க வேண்டும் என்றார்.

ஆச்சிக்கும் இதில் பெரிதாய் வருத்தமில்லை, இரவில் குழந்தை உறங்கியதும் தனியாய் நான் படும் வேதனைகளை அவஸ்தைகளை அனுதினமும் அவள் கவனிக்கிறாளே. அவளும் ஒத்துக்கொண்டாள், திருச்செந்தூர் சென்று திருமணம் எளிதாய் முடித்து கொண்டோம்.

ஒவ்வொரு இரவும் நான் ஏங்கிய பழைய நாட்களுக்கும் சேர்த்து பழி தீர்த்து கொண்டேன். பிள்ளையும் வளர்ந்தது. மூன்று முறை கருக்கலைப்பு செய்ய சொன்னான். ஒரு பிள்ளையே போதும் என்றான், அதை தன் பிள்ளையாய் அள்ளி எடுத்து கொஞ்சினான். எனக்கே வியப்பு. இவ்வளவு நல்லவனா என்று.

நாட்கள் செல்ல செல்ல கழுதை தேய்ந்த கட்டெறும்பாய் என் மேல் இருந்த ஆசை அவனுக்கு முடிந்து விட்டதோ, ஒழுங்காய் பேசுவதில்லை. குழந்தையிடம் மட்டும் அப்பாவை போல் ஆனான். என்னிடம் தான் என்ன பிரச்சனையோ,   கூடாத பழக்கம் வேறு சேர்ந்து கொண்டது. கஞ்சா வாங்க என்னிடமே பணம் கேட்பான், ஆட்டோ ஒழுங்காய் ஓட்டுவதில்லை, நான் சம்பாதிக்கும் பணம் மட்டுமே, இடையில் ஆச்சியும் இறந்து விட்டாள். அதற்கும் என்னை பெற்ற இரண்டு புண்ணியவான்களும் வரவில்லை. குழந்தைக்கும் மூன்று வயது மேல் ஆகிவிட்டது, இருக்கும் இடம் சரி இல்லையென்று புதிதாய் இந்த தெருவிற்கு வந்திருக்கிறோம்.

இந்த தெருவில் மட்டும் என்ன ஆண்கள் வேறு உலகத்தில் இருந்து குடியேறியவர்களா! அதே கழுகு பார்வைதான், ஆண்களில் கிழவனுக்கும் சிறுவனுக்கும் வித்தியாசமில்லை. குழந்தையை தூக்குகிறேன் என்று இடுப்பில் கை வைத்த சிறுவனை முறைத்தேன், பிறகு அவன் மீண்டும் வரவில்லை. இசக்கி கோயில் பூசாரியோ நடை சாத்தி நேராய் இங்குதான் வருகிறார். கடவுளுக்கு அடுத்து என்னிடம் எதை தேடுகிறாரோ.

நாள் போக தெரு மக்கள் அவளை வேசி போல் பேச ஆரம்பித்து விட்டனர். இரண்டாவது கட்டியவன் ஆட்டோவில்,  நடுஇரவில் கூட இவள் வீட்டிற்கு ஆட்கள் வருகிறார்கள். இவள் வீட்டை ஒட்டிய மாடி வீட்டுக்காரி எல்லாம் ஒன்றுக்கு இரண்டாய் பரப்ப ஆரம்பித்தாள். மூன்று வயது குழந்தைக்கு என்ன தெரியும்?  பதின்பருவ சிறுவர்கள் அக்குழந்தையை தேவிடியா மவன் என்றே கிண்டல் அடிக்க ஆரம்பித்தனர்.

தெரு ஆண்களுக்கு நடப்பவை எல்லாம் மேலும் சாதகமாய் ஆனதை போன்றிருந்தது, அவள் வீட்டு முன் இரவு எவர்க்கும் தெரியாமல் ஆண்கள் போய் நிற்பதுண்டு, சிறுவர்களும் தான். இரண்டாவது கட்டியவன் ஆட்டோவிலே குடித்துவிட்டு அயர்ந்துவிடுவான். சிறுவன் ஒருவன் கதவை ஓரு இரவில் தட்டி அவள் அரிவாளோடு வெளியே வந்து எட்டி பார்த்தாளாம், தெரு பெண்கள் இவளை துளியும் மதிப்பதாய் இல்லை.

வேலுவிற்கு என்ன ஆனதோ தெரியவில்லை, செட்டியாரிடம்  இவனுக்கும் என்ன கொடுக்கல் வாங்கல். இதற்கும் எனக்கும் என்ன தொடர்பு. ஒன்றும் புரியாதவளாய் அவரின் வீட்டுக்கு என்னை அழைத்து சென்றான். செட்டியாரம்மா, குழந்தைகள் வீட்டில் இல்லை, அவர் மட்டும் இருந்தார்.  குழந்தையை அவன் கையில் வைத்து கொண்டு, அவரின் அறைக்கு என்னை போக சொன்னான். புரிந்து விட்டது, கிழட்டு கழுகின் தூண்டில் புழு இவன், நான்தான் மீன். முடியாது என்று கதறினேன், அடித்தான் மிதித்தான் என் கால்களை பற்றி அழுதான், அறைக்கு  போனேன், தீப்படுக்கை. அதே வாடை.

முகம் தெரியாத பலருடன் வீட்டுக்கு வந்தான், அதே தீப்படுக்கை, வாடை. என் குழந்தை பாவம் சொல்ல தெரியுமா அதற்கு பாவி சாராயத்தை ஊற்றி கொடுத்து தூங்கவைத்தான்.

தெருமுக்கு இசக்கிக்கு கொடை வந்தது, எங்கள் ஊர் காரிதான் இவளும், வாக்கப்பட்டு இந்த ஊருக்கு வந்திருக்கிறாள். குழந்தையும் பிறந்திருக்கிறது, கட்டியவன் வேறொருத்தி மேல் இருந்த ஆசையால், இவள் தலை மேல் கல்லை போட்டு கொன்று விட்டான் , பக்கத்தில் உறங்கி கொண்டிருந்த குழந்தை மேலும் கல் பட்டு அதுவும் செத்து விட்டது, ஆங்காரமாய் பேய் ஆகி பழி வாங்கிருக்கிறாள், அவளை அடக்கி இங்கே தெய்வமாய் ஆக்கிருக்கிறார்கள்.

வேலும் வீட்டில் இல்லை, மேளம் சத்தம் கேட்க கேட்க என் உடல் உதறியது. கையில் இருந்த குழந்தை வயதின் வளர்ச்சியின்றி தூங்கி கொண்டிருந்தது, மேகம்  இல்லா வானம் போல் குழப்பமின்றி இருந்தேன், எனக்கு எந்த பதட்டமும் இல்லை. முதலில் கட்டியவன், செட்டியார், வேலு, சந்தைதெரு ஆண்கள், புதிய தெரு ஆண்கள், அன்று என் இடுப்பை வருடிய சிறுவன் என எல்லோர் முகமும் கண் முன்னே வந்து மொத்தமாய் சுழன்று அடித்தது. ஒரு நிமிட அமைதியில் எதையோ உணர்ந்தேன். வீட்டின் உள்பக்க தாழ்பாளை பூட்டினேன்.

மொத்த தெருவே அவள் வீட்டு முன் நின்றது, செட்டியாரும் வந்து விட்டார். வேலு முழு போதையில் நினைவிழந்து ஓரமாய் கிடந்தான்  கதவை இரண்டு முரட்டு ஆசாமிகள் இடித்து தள்ளினார்கள். கதவு உடைந்தது.

எல்லா ஆண்களும் வாய் பிளந்து நின்றனர், எதை பார்க்க அவளை கொத்தினார்களோ அதை காட்டி கொண்டிருந்தாள். எதுவுமின்றி இருந்தாள். அவள் காலடியில் குழந்தையும் இருந்தது. தாலியை கழட்டி விட்டாள் போல, கழுத்தில் இல்லை, செட்டியார் உரக்க கத்தினார் "பாத்துட்டு இருந்தா எப்படி, சேலையை அறுத்து இரண்டையும் இறக்குங்கோ".                              
            

      

      


                    

                                              

               
        


இணைந்த கைகள்

  ஒரு மாலைநேரம், புதிய திரைப்படம். திங்கள் கிழமை,  மாலை நேரக்காட்சி,  இணைந்த கைகள்.  நிதானியுங்கள், அதே நேரம் உங்கள் மனைவி, அரசு மருத்துவமனை...