Monday 23 September 2019

கர்த்தர் உம்மோடும் இருப்பார்







கட்டைப்பைகளில் நல்லபெருமாள், சிங்கராயநாடார் துணிக்கடை பெயர் தென்பட்டதுமே ஊகித்துக்கொண்டேன் நாகர்கோயில் வாழ் சென்னை வாசிகள் இவர்கள் என, கன்னியாகுமரி விரைவு இரயில் தாம்பரத்தில் எட்டாவது அல்லது ஏழாவது நடைமேடையில்  நின்று போவது வழக்கம், ஒவ்வொருமுறையும் பதட்டமின்றி இரயிலை பிடிக்க என்னால் இயலவில்லை. சோழிங்கநல்லூரில் பேருந்து கிடைத்து தாம்பரம் வர வர சென்னைக்கும் எனக்கும் உண்டான நெருக்கம் சிறுக சிறுக குறைந்து கொண்டேயிருக்கும்.

தாம்பரம் இரயில் நிலையம் வெளியே சூடாக ஒரு காபி குடித்தவுடன் கொஞ்சம் தெளிவடைந்து பதட்டம் குறையும், இருந்தும் அரைமணி நேரம் முன்பாகவே வந்து இரயிலுக்கு காத்திருப்பது வாடிக்கையாகி விட்டது, சென்னையில் தேங்காய் வாங்குவதற்கு மாதத்தில் ஒரு பெருந்தொகை ஒதுக்க வேண்டும், பின்னே தினமும் துவையலோ, புளிக்கறியோ, சட்னியோ, தீயலோ தேங்காயின்றி நாஞ்சில் நாட்டு வீடுகளில் சமையலில்லை, இதற்காகவே ஊரில் இருந்து பெரும்சுமடு தேங்காய் தூக்கிவருவார்கள், சிலர் சக்கையை கூட கட்டி கொண்டு வருவதுண்டு.

மாறாக இங்கிருந்து பெரும்பான்மை இளைஞர் கூட்டம் எடுத்து செல்வது அழுக்கு பொதிகளே, பார்க்க மினுப்பாய் உடையணிந்து உயர்ரக தோள் பைகளில் திணித்து எடுத்துச்செல்வதே இரண்டு வாரம் உடுத்திய உடுப்புகள்தான். ஊருக்கு செல்லும் நாட்கள் நெருங்க துணி துவைப்பது நின்று விடுகிறது, காதுகளில் சிறுஒலி பொருத்திகளை சொருகி கொண்டு நிற்கும் என் போன்ற இளைஞர்களை கடந்து உட்கார இடம் கிடைக்கிறதா என்று நகர்ந்தேன். இரயிலின் ஒலியெழுப்பானின் பெரும் சத்தம் கேட்டது.

முண்டியடித்து  பெரும்கூட்டம் ஏறியபின் இரயில் ஏறினேன், இருக்கையில் அமர்ந்து பெட்டிகளை ஓரிடத்தில் ஒதுக்கியவுடனே சற்று ஆசுவாசமானேன், என்னெதிரே பெரியமீசையை முறுக்கி,  கரிய நிற மூங்கிலால் முடையப்பட்ட தேகம் கொண்ட நெடுமனிதர் அமர்ந்திருந்தார், கட்டம் போட்ட சட்டையும், வேஷ்டியும் காலில் லூனார்ஸ் செருப்பும் அணிந்திருந்தார், கை கழுத்தில் தங்கம் மின்னியது, அவர் அருகே குறுகிய உடலும், மஞ்சள் பூசிய முகமுமாய் அவர் மனைவி, காதுகளில் பெரிய வட்ட கம்மலும், கழுத்தில் முறுக்கு சங்கிலியும் மினுமினுத்ததும் கால்களுக்கு அடியே சொறுவியிருந்த கட்டைப்பையில் பெரிய குப்பியில் நிரப்பப்பட்ட நீரை தானும் பருகி, அவர்க்கும் குடிக்க கொடுத்தாள், இந்த பக்கம் பெரிய தொப்பையுடன், முன் வழுக்கை கொண்ட சிவந்த நிறக்காரர் அமர்ந்திருந்தார், மூக்கு கண்ணாடி கொஞ்சம் இறங்கி கைகளில் வைத்திருந்த கையேடை பார்த்து கொண்டிருந்தார், மேலும் என் வயதுடைய இரண்டு பேர் கைபேசியில் ஏற்கனவே மூழ்கியிருந்தனர், கால்பங்கு நரைத்த, வட்ட மூக்குக்கண்ணாடி அணிந்த  கன்னியாஸ்திரி ஒருவரும் இருந்தார்,

மாலை நேர இளவெயில் வெளியே வேடிக்கை பார்க்க நன்றாக இருந்தது, அதனூடே நகரத்தின் வெக்கையும் தூசியும் கலந்து மங்கலாய் திரைப்படங்களில் காட்டப்படும் எகிப்து போன்றிருந்தது, இரயில் செங்கல்பட்டு வந்திருக்கவில்லை அதனுள் இரண்டு திருநங்கைகள் கைதட்டியபடியே வசூலில் இருந்தனர், அவர்களின் பார்வை என்னை போன்ற இளைனர்களையே குறிவைக்கும், அவர்கள் தான் எவ்வித மறுப்புமின்றி காசு கொடுப்பது, இதற்காகவே தயாராய் சில்லரைகளை வைத்திருப்பேன், அனுபவத்தால் உதிர்த்த எண்ணம், ஆங்காங்கே அழும் குழந்தைகளின் சத்தம், நாகர்கோயிலின் பலவித பேச்சுக்கள், கர்த்தரும் மக்கள் திலகமும் பாடல் வழியே கையில் இருந்த உண்டியல் குலுங்க கண் பார்வையிழந்த அண்ணன்  வழியே இரயிலில் நிரம்பியிருந்தனர்.

குலுங்கி செல்லும் இரயில் எப்போதும் புது அனுபவமே, சுவாரசியமான கதைசொல்லிகள் ஒவ்வொரு பெட்டியிலும் இருந்தனர், நமக்குத்தான் கதை கேட்க நேரமில்லாமல் கைப்பேசிகளை நோண்டியபடி உட்கார்ந்திருக்கிறோம், என்னருகே உட்கார்ந்திருந்த பெரியவர் மெதுவாய் மனைவியிடம் பேச ஆரம்பித்தார்.

"எட்டி நீ அங்கன உங்க அம்மை வீட்டுக்கு மட்டும் தலையை காணிச்சுட்டு வந்தரனும், பெரிய அத்தே , சின்ன அத்தே வீட்டுக்கு போகணும்னு வேலையலா வச்சுக்காத"

"நா எதுக்கு அங்கல்லாம் போனும், சதிஷ் கல்யாணம் முடிச்சிட்டு அம்மையை பாத்துட்டு கிளம்பிரனும்"

இருவரும் பேசிக்கொள்வதை வைத்து ஊர் திருமணத்திற்கு செல்கிறார்கள் என்று புரிந்துகொண்டேன், வெகுநேரம் பேசிக்கொண்ட பின் மெதுவாக என்னை பார்த்து புன்னகைத்தார், நானும் மெலிதாய் சிரித்தேன்.

"தம்பி எங்க போறீங்க, நாரோயிலா"

"ஆமாங்க நாகர்கோயில் தான்" பேச்சு வெகுநேரம் இழுத்துக்கொண்டே போனபின், அவர் "பத்து பதினஞ்சு வருஷத்துக்க முன்னாடி சோளிங்கநல்லூர்ல, மேடவாக்கத்துல இரண்டிலயும் இடம் கிடந்துச்சு, நா மழைக்கு மேடவாக்கம் சவுரியம்னு இங்கன வாங்கி போட்டேன், அப்போ சோளிங்கநல்லூர்ல இதவிட ரேட் கம்மி, இப்போ பாத்துக்கிடுங்க அங்கன வாங்கிக்கலாம்னு தோணுது, சவத்தை என்ன செய்ய" என்று வருத்தப்பட்டார், பேசாமல் இருந்த தொப்பை காரரும் பேச்சில் இணைந்தார்.

"அது இப்போ இந்த ஐடி வந்து, லேண்ட் வேல்யூ கூடிட்டு" என்றார்.

பெரியவரும் "இந்த ஐடி காரனுக வந்தானுக விலைவாசி எல்லாம் ஏறிட்டு, நல்ல சம்பாத்தியம், எனக்க ரெண்டு மவனும் அங்கணத்தான் வேல பாக்கணுவ" என்றார்.

அரசியல், பொருளாதாரம், கன்னியாகுமரி வாழ்க்கை  என பேச்சு நீண்டுகொண்டு போனது, ஆர்வமூட்டும் இவர்கள் பேச்சு சுவாரசியமாக இருந்தது, கன்னியாஸ்திரி கையில் இருந்த விவிலியத்தையே படித்து கொண்டிருந்தார், வந்து போகும் பிச்சைக்காரர் ஒவ்வொருத்தருக்கும்  ஐந்து ருபாய் எண்ணி சிரித்தபடியே கொடுத்து கொண்டிருந்தார்.

வண்டி திண்டிவனத்தை நெருங்கியதும், இரவுணவு கட்டிக்கொண்டு வந்தவர்கள் சாப்பிட ஆரம்பித்தனர், புதிய நண்பர்கள் இருவரும் தாங்கள் கொண்டுவந்த சப்பாத்தியையும், இட்லியையும் பகிர்ந்து உண்ண ஆரம்பித்தனர். சடாரெனெ என் இருக்கை அருகே ஒருவர் குழந்தைகள் புத்தகத்தை அடுக்கினார், அடுக்கிய புத்தகங்கள் என் மேல் சரியவே எரிச்சல் அடைந்த பார்த்து வைக்குமாறு கத்திவிட்டேன், அவரும் உடனே மன்னிப்பு கேட்டார், பிறகு தான் கவனித்தேன் அவர் பார்வை அற்றவர் என்று, கன்னியாஸ்திரி என்னை சிறிய வெறுப்புடன் பார்ப்பதை போல் தோன்றியது, மாறாக அவரோ பார்வை அற்றவரை பார்த்து "சின்ன பையன் உங்கள பாக்காம கத்திட்டான், கர்த்தர் உங்கள ஆசீர்வதிப்பார்" என்றார், எனை பார்த்து கனிவோடு "வெளிய கோவப்பட கூடாது" என்ற சிறுபுன்னகை கலந்து கூறினார்.

அவர்கள் கூறியது மனம் கொஞ்சம் குற்றஉணர்ச்சியில் இருந்து வெளிவர ஏதுவாய் இருந்தது,  அவரும் "சார் குழந்தைகள் புத்தகம், கதை புத்தகம், நீதிக்கதைகள் ஒன்னு இருபது ரூவாய், மூணு எடுத்தா ஐம்பது ரூவாய்" என்று கூறிக்கொண்டே இருந்தார், கன்னியாஸ்திரி உடனே இரண்டு புத்தகங்களை எடுத்துக்கொண்டு ஐம்பது ரூபாயை நீட்டினார், அவரும் ரூபாயை தடவிக்கொண்டு "எத்தன புக் மேடம்" என்றார், "மூணு எடுத்திருக்கேன், ஐம்பது ரூவா கொடுத்திருக்கேன்" என்று  கன்னியாஸ்திரி கூறினார், குற்ற உணர்ச்சியில் தகித்தாலும் ஒரு புத்தகத்தை மட்டும் எடுத்துக்கொண்டு இருபது ரூபாயை அவரிடம் கொடுத்தேன். அவரும் அடுத்த இருக்கைகளுக்கு நகர்ந்தார்.

ஏதோ கண்கள் அவரை நோக்கியே இருந்தது, நான் இரயிலில் ஏறியபின் இன்று என்னை கடந்த இரண்டு திருநங்கைகள், பாடல் பாடிய விழி அற்றவர், இப்போது நான் கண்ட புத்தகம் விற்பவர் என எத்தனை பேரை இந்த இரயில் சுமக்கிறது, பயணசீட்டு பரிசோதகர்கள் இவர்களை விரட்டுகிறார்கள், தினம் தினம் இதனை எதிர்கொள்ளும் திராணி இவர்களுக்கு இருக்கிறது, பெரும்பாலும் இவர்கள் விழுப்புரம் கடந்து பயணம் செய்வதில்லை, இரயில் திண்டிவனம் அடைந்தது.

கன்னியாஸ்திரியும் கொண்டு வந்த பிரட்டும், ஜாமும் சாப்பிட்டு மறுபடியும் விவிலியத்தையே வாசிக்க ஆரம்பித்தார், எனக்குள்  பல எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தது, நான் அவரிடம் மன்னிப்பு கேட்கவில்லை அதுவே மனதுக்குள் மேலும் உறுத்திக்கொண்டு இருந்தது, பெட்டியில் அவர் இருக்கிறாரா என்று எட்டி பார்த்தேன், எங்கும் அவர் இல்லை, இரயில் திண்டிவனத்தில் இருந்து கிளம்பியது, அடுத்து விழுப்புரம் அங்குதான் இரவு உணவு சாப்பிடுவது வழக்கம், கனத்த குரல் காரர் டின்னர் டின்னர் என்ற கத்தியபடி உணவு வேண்டியவர்க்கு என்னென்ன வேண்டும் என்ற குறிப்பெடுத்தபடி சென்றார்.

மெதுவாய் எழுந்து கழிவறை சென்றேன், புத்தகம் விற்பவர் மூடிய இரயில் கதவின் அருகே அமர்ந்திருந்தார், அவரிடம் மன்னிப்பு கேட்கும் படி தோன்றியது, அவர் அருகே சென்றேன், என் பின்னால் கைபேசியில் பேசியபடியே ஒருவர் வந்தார், ஏதோ தடுத்தது, பின்னே நகர்ந்து கழிவறைக்குள் நுழைந்தேன்.

எனக்கே என் மேல் ஆத்திரம் கூடியது, வியர்த்து கொட்டியது, ஏதோ பெரிய தவறொன்றை செய்த குற்றவாளியாக என்னை உணர்ந்தேன், அவரிடம் நேராக மன்னிப்பு கேட்பதில் என்ன தயக்கம், எனக்காகத்தான் அந்த கன்னியாஸ்திரி இவரிடம் மன்னிப்பு கேட்டாரே, நான் ஏன் கேட்க வேண்டும், மேலும் இவர்தான் தவறுதலாக புத்தகங்களை என் மேல் விழ செய்தார், என் தவறு ஒன்றுமில்லை, புத்தகங்கள் விழுந்ததால் என்ன ஆயிச்சு, ஒன்றும் ஆகவில்லை நான் தான் ஏதோ எரிச்சலில் கத்திவிட்டேன், கூட யாரும் அதை கவனிக்கவில்லை, கன்னியாஸ்திரி மட்டுமே கவனித்தாள், அவளுக்கும் தெரியும் இதில் என் தவறு ஏதுமில்லை என்று.

என்னென்னவோ எனக்குள் கூறி வெளியே வந்தேன், அவர் அங்கேயே அமர்ந்திருந்தார், அவர் கைகள் மூடிய இரயில் கதவின் வெளியிடுக்கில் எதையோ தேடுவது போல் இருந்தது, அருகே சென்று "அண்ணே என்ன தேடுகீங்க" என்றேன்.

"சார்  போன்   பேசிட்டு இருந்தேன், கைதவறி கீழ விழுந்திட்டு, இங்க கொஞ்சம் கிடக்கான்னு பாருங்க ப்ளீஸ்" என்றார்.

நானும் கதவை திறந்தும், இரயில் படியில் மெதுவாய் அமர்ந்தும் தேடி பார்த்தேன், கைபேசி இருப்பதாய் தெரியவில்லை, அவரிடம் "அண்ணே போன் இதுல இல்ல, கீழ விழுந்தருக்கும்னு நினைக்கேன்" .

"சரி விடுங்க, நீங்க பாத்து உள்ள வந்து கதவை சாத்துங்க"

"யாருக்காவது பேசணும்னா சொல்லுங்க, நா போன் பண்ணுகேன்" என்று என்னிடம் இருந்த இரண்டில் ஒரு கைபேசியை எடுத்து "நம்பர் சொல்லுங்க" என்றேன்.

"இல்ல சார் வேண்டாம், இப்போ விழுப்புரம் வந்துரும்"

"விழுப்புரத்துல தான் வீடா"

"இல்ல பக்கத்துல போனும், ட்ரெயின் இறங்கி பஸ் ஏறி போனும், எங்க ஆளுங்க ஸ்டேஷன்ல நிப்பாங்க, சேர்ந்து போயிடுவோம்"

"உங்க ஆளுங்கனா யாருன்னே"

"அவங்களும் என்ன மாதிரிதான், வேற வேற ட்ரெயின் ஏறி புக் விப்போம், ராத்திரி எட்டரை மணிக்கு விழுப்புரம் வர மாதிரி கடைசி ட்ரெயின் ஏறிறுவோம்"

"இதுல என்ன கிடைக்கும், கவர்மெண்ட் வேலைக்கு ட்ரை பண்ணலாம்லா"

"அப்படியே கவர்மெண்ட் கொடுத்திரும், போங்க சார், எங்கள்ல படிச்சவனுக்கே வேலை கொடுக்கிறது கஷ்டம், இதுல எனக்கா, கிடைக்கது சாப்பிடத்துக்கு போதும்" என்றார் விரக்தியாக.

"போன் வேற போச்சு, என்ன பண்ணுவீங்க"

"விழுப்புரத்துல பழைய போன் கடைல போய் பழையவிலைக்கு வாங்கணும், எங்களுக்கு பிரச்சனை இல்ல, பட்டன் போன் போதும், டச் தான் ரேட் ஜாஸ்தி" என்று நாக்கை மடித்து கண்களை சுருக்கி சிரித்தார்.

என்னிடம் ஐநூறு ருபாய் சட்டை பாக்கெட்டில் இருந்தது, அதை எடுத்து கொடுக்க உள்மனம் சொல்லியது, ஆனால் என்னவோ அதை தவிர வேறு விஷயங்களை பேசிக்கொண்டிருந்தேன்.

இரயில் மெதுவாய் விழுப்புரம் நெருங்கிக்கொண்டிருப்பது தெரிந்தது, இருபக்கமும் வரிசையாய் வீடுகள், ஐநூறு ருபாய் எனக்கு பெரிய தொகை இல்லை, அவருக்கோ இது பெரியது, ஒரு சாதாரண விசையழுத்தி கைபேசி வாங்க இதுவே போதுமானது.

இரயில் விழுப்புரம் வந்ததும், அவர் மெதுவாக கம்பியை பிடித்து லாவகமாக இறங்கினார், பழக்கமாக இருக்க வேண்டும், தூரத்தில் அவரை போல சிலர் நின்று கொண்டிருந்தனர், இரண்டடி நடந்து திரும்பி என்னை நோக்கி "சார்தான் பாவம், எனக்காக போன தேடி பாத்தீங்க, ரொம்ப தேங்க்ஸ்" என்றபடி மெதுவாய் நடந்து சென்றார், என்னவோ என் பாக்கெட்டில் இருந்த ஐநூறு ருபாய் மிகவும் கனத்தது, அவரிடம் நான் மன்னிப்பும் கேட்கவில்லை, விழுப்புரத்தில் உணவருந்த விருப்பமின்றி இரயிலில் ஏறினேன், பெட்டியில் எல்லோரும் உறங்க ஆயத்தமாயினர், எனக்கு என்னவோ உறுத்தல் அதிகமாகி இருந்தது, கன்னியாஸ்திரி விவிலியத்தை மூடி என்ன காரணமோ என்னை பார்த்து "கர்த்தருக்கு ஸ்தோத்திரம், குட் நைட்" என்று கூறியபடி படுக்கையில் ஏறி படுத்து கொண்டார்.

நானும் என் படுக்கையில் ஏறி கண்களை மூடினேன், என் மேல் மலை போல் குவிக்கப்பட்ட புத்தகங்கள் சரிந்தது, கன்னியாஸ்திரி மட்டும் விவிலியத்தை வாசித்தபடியே என்னை பார்த்து "கர்த்தர் உம்மோடும் இருப்பார்" என்றார்.                                                                                                             
                                                                         
      
          

இணைந்த கைகள்

  ஒரு மாலைநேரம், புதிய திரைப்படம். திங்கள் கிழமை,  மாலை நேரக்காட்சி,  இணைந்த கைகள்.  நிதானியுங்கள், அதே நேரம் உங்கள் மனைவி, அரசு மருத்துவமனை...