Thursday 21 February 2019

தெய்வங்கள் : அன்னை






பெருந்திரள் கூட்டம் மலைநாடு நோக்கி நகர்ந்தது, மலைநாட்டு தலைவன் காணும் காட்சி பிரமிப்பாய் அவன் கண் முன் விரிந்தது, இரை நிரப்பி ஊரும் பெரும்பாம்பை போல் இருந்தது நெய்தல் மக்களின் வருகை, வந்ததன் நோக்கம் என்னவென்று தலைவன் வினவினான், இருபனை உயர அலைகள் பல குடிவாழும் குடில்கள் மேல் ஆவேசம் கொண்டு மோத மிதவைகளும் கடலோடு போனது, இருந்த கூட்டமும் பாதியாய் ஆனது, மூத்த கிழவன் விரக்தியில் சொன்னான், துயர் தந்த பீதி நெய்தல் மக்கள் முகம் நிறைத்து அப்பிருந்தது. மூத்த கிழவன் இது பெரும்பாவம் என்றுரைத்தான்,

நெய்தல் மக்கள் குலத்தில் பிறந்த பெண் குழந்தை, இதுவரை காணா மலர்ச்சி கொண்ட கமலமுகம், குலவழக்கப்படி மூத்த கிழவன் முழு நிலவு நாளில், பெரும்மழை இரவில், ஒளிவீச்சாய் வானில் பெருங்கோடாய் மின்னல் பல கிளை பரப்பி வெட்டி மின்ன, பேரொலியாய் இடியும் முழங்க, குழு மொத்தமும் முழங்காலிட்டு கைகள் இரண்டும் வான் நோக்கி அரைக்கண் மூடி உணர்ச்சிப்பெருக்கில் நிலையிழந்து நின்றது, மூத்த கிழவன் கையில் அழகிய கன்னி நெய்தல் மலர் சூடி நடப்பதை அறியா மடந்தையாய் நின்றாள், வானில் இருந்து சிந்திய வெளிச்சம் குறைய குறைய கருமை படர்ந்தது, நாகப்பாம்பின் மணி பெரிதாய் மாறி நிலவை மறைக்கும் அபசகுனம் இந்நாள் என மூத்த கிழவன் மட்டும் அறிந்திருந்தான், விளிம்பு மட்டும் மின்னும் மோதிரமாய் மீதி இருந்து வெள்ளி கீச்சாய் கண் கூச செய்தது .

பெரும்பாவம் பிடித்து குடி மொத்தமும் அழியும் என்று முன்னோர் வகுத்த நாள் இதுவன்றோ, பலி கேட்கும் இக்கடலுக்கு  உயிர்பலியாய் கன்னி வேண்டும் என்றும் குறித்திருந்தமையால் கையில் ஏந்திய எதுவும் அறியா சிறுமியை கடல் அருகே அழைத்து சென்றான், பாதி முறிந்த பனை ஒன்றை கடற்கரை மணலில் ஊன்றி இருந்தனர், கன்னியை இறங்கி அப்பனை மேல் தலை வைத்து கடல் பார் என கிழவனும் சொல்ல அறியா சிறுமியும் சொன்னதை கேட்டாள், மிளா முதுகில் பிடுங்கிய எலும்பை கூறாக்கி நெடிய  வாள் வைத்திருந்தான் கிழவன், மங்கிய வெளியில் எல்லையில்லா நீலக்கோடு விரிந்து கிடந்தது, தரை தொடும் அலையை வருவதும் போவதுமாய் சிறுமி கண்டுகொண்டிருந்தால், காற்றை உள்ளிழுத்து கிழவன் ஒட்டிய வயிறை காற்றால் நிரப்பி பெருங்குரலெடுத்து கூவினான், பெய்யும் மழையை பாதி கீறி போவது போல வீசிய வாளின் வேகம் பனை மேல் கிடந்த பாவி சிறுமியின் உடல் வேறு தலை வேறு ஆக்கியது. முன்னின்ற கடலின் கோபமோ அலையின் வேகம் வெறியேறி கிடந்த உடலையும் தலையையும் உள்கொண்டு போனது, மறைத்த நாகமும் விலகி ஓட கருமை நீங்கி வெண்குளிர் வெளிச்சம் பரவியது, நெருங்கிய பீடை விலகி போனதாய் மூத்த கிழவன் கூக்குரலிட்டான்.

திங்கள்கள் ஓட, அடிநிலம் பெரும்குலுங்கு குலுங்கியது, அச்சம் கொண்ட கிழவனும் முன்னோர்கள் சொன்ன குகையை அடைந்தான், இதற்கு முன்னே பலி கொடுக்க சொன்ன அதே வழியில் ஏதும் செய்ய இயலாது, மலைநாடு செல்வதே உயிர் பிழைக்கும் வழி என குறிப்புகள் சொன்னது, குடியிருப்பை அடைந்து இடம் பெயர்தல் வேண்டும் என்று அனைவருக்கும் உரைத்தான், அவசியமான பொருட்களை மட்டும் கையில் கொண்டு பெண்கள் குழந்தைகள் கிளம்ப ஆண்கள் கூட்டம் ஆடும் குதிரையும் கட்டிக்கொண்டு பின்னே சென்றது, மூத்த கிழவன் முன்னின்று நடக்க பறவை கூட்டம் வான் நிறைத்து மலை முகடை நோக்கி பறந்தது. ஆடும் குதிரையும் கை தவிர்த்து வெறிகொண்டு முன் ஓட ஆரம்பித்தது, நடப்பது என்னவென்று யூகிக்கும் முன்னே, இருபனை உயர அலைகள் பல பின் வந்த பாதி கூட்டத்தை சுருட்டிக்கொண்டு உள்ளே போனது அஞ்சிய கூட்டம் முன்னோக்கி நகர்ந்து மலைநாடை அடைந்தது.    

அனைத்தையும் அறிந்த மலைநாட்டு கிழவன், நடந்தது எல்லாம் நடக்க வேண்டியதே, கடல் வாரி கொண்ட கன்னி, அதன் குழந்தையே, அவள் ஆளும் பரப்பு அது, வந்ததன் நோக்கம் எதுவென்று அறியும் வல்லமை நம் எவர்க்கும் இல்லை, போன கன்னியே இனி உங்கள் தெய்வம், அவளே என்றும் குமரியாய் உம்குலம் காக்கும் அன்னை, என்றும் கூறினான்.


மலை இறங்கி நெய்தல் கூட்டம் கடற்கரைக்கே சென்றது, கடலே அன்னையானது, அச்சிறுமியே என்றும் கன்னியாய் தெய்வமாய் நின்றாள், காலம் வேகமாய் ஓட, கன்னி அன்னையே வழி வழியாய் கதை பல சேர்ந்து மேலும் பிரமாண்டமாய் அக்குலத்தோடு வாழ்ந்து வந்தாள், கடல் உள்நோக்கி வெகு தூரம் சென்றிருந்தது, இரு கரும்பாறை வெளியே தெரிந்தது, வல்லம் ஏறி சிறு கூட்டம் ஒன்று இருபாறைக்கும் சென்றது, கடல் நீரில் ஊறிய பாறைகள் ஒன்றின் மேல் ஒற்றை  கால் ஊன்றிய தடம் சிறிதாய் தெரிந்தது, அவர்கள் கதை ஒன்றின்படி கன்னி அன்னை இக்கடல் உள் ஒற்றைக்கால் ஊன்றி பெருந்தவம் செய்கிறாள், சிலிர்த்த கூட்டம் அவ்வொற்றை காலடி இதுவென மண்டியிட்டு வணங்கியது, கன்னி அன்னையே மேலும் விஸ்தாரமாய் குமரி அன்னையாய் விரிந்தாள்.                                       

Tuesday 19 February 2019

பாட்டி சொன்ன கதை : 1


                                                    
    



"எதுவுமற்றது கருமை, இறுதி நிலையே கருமை, ரகசியங்கள் அடிமங்கி பதுங்கி கிடக்கும் அலகில் அடங்கா ஆழம் , விழிகொண்டு காண இயலா அரவங்கள் ஆடும் ஊழிப்பேராட்டம்  கருமை, முடிவிலி அது, புறவயமாய் அறிந்து கொள்ள இயலாத பல சிக்கல்களுக்கு  மனித மனம்  கொடுக்கும் வண்ணம்" கைகள் மடிக்கணியின் தட்டச்சை நிறுத்தி நிதானமாய் அழுத்தி கொண்டிருந்தது, ஓடும் இரயிலில் கடினமான பணியாகவே இருந்தது, இருட்டில் விழித்திருப்பதால் கண்கள் மிகவும் சொக்கிப்போனது, அருகில் இருந்த மற்ற பயணிகள் உறங்கி வெகுநேரம் ஆகியிருக்க வேண்டும், கைக்கடிகாரத்தில் நேரம் அடுத்த நாளுக்காக நொடி முல்லை சரியாக மாற்றும் நேரம் ஆகிருந்தது, என்னை இந்த பயணத்திற்கு தயார் செய்த நண்பன் கீழ் படுக்கையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான், மடிக்கணினியை மடித்து தோள்ப்பையில் சொருகி தலைக்கு இதமாய் வைத்துக்கொண்டேன், கூட கொஞ்சம் உடைகளும் இருந்ததால் இடைஞ்சலாய் இல்லாமல் உறங்குவதற்கு ஏதுவாகவே இருந்தது, இரயில் ஓடும் போது எழும் தடக் தடக் எனும் ஓசையும், அவ்வப்போது ஒலிக்கும் இரயில் ஒலிப்பானின் சத்தமும் என்னை உறங்க விடவில்லை, விழிகள் மூட மறுத்து கலகம் செய்தன, முடிந்தவரை முயற்சி செய்து விழிகளை இமைகொண்டு அடைத்தேன், உள்ளத்தின் அலைபாயுதலை தடுத்து நிறுத்த முடியவில்லை.

நாளை செய்யவேண்டிய வேலை என்னென்ன என்று மறுமுறை முதலில் இருந்து மனதிற்குள்ளே பட்டியலிட்டேன், அமானுஷ்யங்கள் எனக்கு அந்நியமானவை அல்ல, தர்க்க ரீதியாக அதை அணுகுவது முட்டாள்தனமானது, முடிந்தவரை அதை தர்க்கத்திற்கு அப்பாற்பட்ட பொதுவெளியில் பொருத்தி பார்ப்பதே சரி என்ற கோட்பாடு உடையவன் நான், ஆத்மார்த்தமாக நம் நுண்ணறிவோடு அதை புரிந்துகொள்ள குறைந்தபற்றம் முயற்சி செய்ய வேண்டும், திறந்திருக்கும் புறவிழியின் செறிவான கூறிய பார்வையுடன், அகக்கண்ணின் ஆழமான தெளிந்த பார்வையும் வேண்டும், எவ்வித முன்முடிவுகளின்றி, இயன்ற  வரை படிப்பறிவை ஓரம் கட்டி உளமே சரி என்ற முறையில் பகுப்பாய்வு செய்ய வேண்டும்.

அமானுஷ்யங்களை அதன் தொடர்பான நகர்வுகளை கவனித்திருக்கிறேன், என்றோ சிறுவயதில் இறந்த தன் கன்னி அக்காவுக்கு, வீட்டில் நடக்கும் ஒவ்வொரு சுபதினத்திற்கும் முந்தைய இரவு கன்னிப்பூசை செய்யும் அம்மா, சிறுவயதில் காய்ச்சலின் கொடுமையில் எழும் கெட்டகனவின் பயத்தில் விழித்து நான் கத்தி அழும் போது, அவள் அக்காவை "உன்னைய வீட்டுல வச்சு நல்லாத்தானே கவனிக்கேன், எம்புள்ளய இப்புடி கஷ்டப்படுத்திகியே" என்று வீட்டில் வைத்து கும்பிடும் அந்த கன்னி பெரியம்மையின் புகைப்படம் அருகே இருக்கும் திருநீறை நெற்றியில் பூசி தலையில் சிறிது போட்டு தூங்கவைப்பாள், அப்பாவோ மாடன் சாமியை கொல்லைக்கு போகும் போது வயக்காட்டில் கண்டாராம் என மேலும் பீதியை கிளப்புவார். இரவு நேரங்களில் இசக்கி அம்மன் கோயில் இருக்கும் தெருப்பக்கம் கூட போகக்கூடாது, அந்தப்பக்கம் சென்றால் இசக்கி ஓங்கி முதுகில் அடிப்பாளாம், திரும்பி பார்த்தால் அங்கேயே இரத்தம் கக்கி செத்து விடுவோமாம்.

எல்லா கதைகளும் அப்பா சென்னைக்கு சரவணா பவன் உணவகத்திற்கு வேலைக்கு வந்ததுமே பரண் மேல் ஏறியது, கன்னி பெரியம்மையின் புகைப்படம் தவிர, ஒடுக்கத்தி வெள்ளிக்கிழமை இன்றும் அவளுக்கு பூசை உண்டு, தீபாவளி பொங்கலுக்கு புது பாவாடை சட்டை அவளுக்கும் உண்டு, சிறுநகரங்களில் கிராமங்களில் சவம் எரிப்பதோ, புதைப்பதோ ஒருவித கிலியை உண்டாக்கும், அது சுடுகாடு அல்லது புதைக்காடின் பொலிவிழந்த அமைப்போ, பல கிளை கைகளை ஆங்காரமாய் விரித்து நிற்கும் ஆலின் தோற்றோமோ, சலனமின்றி ஓடும் ஆறும் கூட சில நேரம் பயமுறுத்தும், நிசப்தம் கூட அமைதியை குலைக்கும் வெளிக்காரணி.

நகரங்களில் அப்படிப்பட்ட எவ்வித அச்ச உணர்வும் எரியூட்டும் மின்தகன மைதானங்களில் உண்டாவதில்லை, எனவே என் சிறுவயதில் எழுந்த பல வினாக்கள் இங்கே எழுந்ததில்லை, கதம்பம் அடுக்கிய படுக்கையில் சவம் வைத்து அதன் மேல் கதம்பமும் அடுத்த அடுக்காய் வைக்கோலும் அதன் மேல் களிமண் குழைத்து நிரப்பி செம்மைப்படுத்தி புகை வெளியேறும் அளவில் தலைக்கு உடலுக்கு காலுக்கு என மூன்று ஓட்டைகளை பாலு தாத்தா செய்யும் போது, விசித்திரமாய் இருக்கும், எல்லோரும் ஆற்றுக்கு சென்று குளித்து சென்று விடுவார்கள், நானும் கார்த்தியும் பிணம் நன்கு எரியும் வேளையில் அங்கே வேடிக்கை பாப்போம், களிமண் தீயின் வெப்பத்தில் நன்றாக வெந்து எரியும் பிணம் வெளிவரா வண்ணம் அரணாய் நன்கு பிடித்து நிற்கும், பிணம் எரியும் வேளையில் குறுக்கு எலும்பு வெடித்து இடுப்பு மேல் பகுதி சிலசமயம் சில அடி தூரங்களுக்கு தூக்கி வீசிவிடும், சரியாய் அந்நேரத்தில் பாலு தாத்தா இடுப்பு எலும்பை நொறுக்கி விடுவார், அவர் சென்ற பின்னே நாங்கள் அங்கு செல்வோம், சிதிலம் அடைந்த எலும்பு குவியத்தில் மண்டை ஓடும், முதுகெலும்பும் அதோடு முன்னிற்கும் மார்பெலும்பும் இவையோடு இணைந்த கைகால் எலும்பும் அன்றையநாள் இறந்த ஆச்சியையோ, தாத்தவையோ, இளம்வயதில் இறந்த அய்யப்பன் அண்ணனையோ நியாபகம் படுத்தியதில்லை, எங்களுக்கு எல்லா கூடுகளும் ஒன்றாய் தெரிந்தது, கண் வாய் மூக்கு ஓட்டைகளில் சாம்பல் கலந்த அடிகங்கில் இருந்து எலும்பும் புகை மட்டுமே அதை நாங்கள் தொடர்ந்து பார்க்கும் ரகசியத்தை மறைத்து வைத்திருந்தது, இப்புகை சளி இருமலுக்கு நல்லதென கார்த்திக் கூறுவான்
                  
குலுங்கி குலுங்கி செல்லும் இரயிலின் ஓட்டமும் இவ்வித நினைவலைகளை மூளையின் ஒவ்வொரு கண்ணியில் இருந்தும் கிளப்பி கொண்டிருந்தது, விடைதெறியா பல்லாயிரம் பக்கங்களை விழித்திரையில் விரித்த வண்ணமே இருந்தது, எப்போது உறங்கினேன் என்ற நினைவில்லை, சுந்தர் என் காலை உலுக்கி எழுப்பி கொண்டிருந்தான்காலம் தாழ்த்தி உறங்கிய விளைவு அவன் என்னை உலுக்குவதும் என் கனவுலகில் நடப்பது போன்ற பிரமையை உருவாக்கியது, பட்டென கேட்ட கெட்டவார்த்தை காதில் நுழைந்து மூளையை எட்டியவுடனே எழுந்து உட்கார்ந்தேன்குறைவான உறக்கம் கண்களில் சிறுவலியை தந்தது, படுக்கையிலிருந்து இறங்கி கழிவறைக்கு சென்றேன், அதிகாலை குளிர் காற்று வாட்டியது, நாகர்கோயிலும் கன்னியாகுமரியும் அடுத்து வரும் நிறுத்தங்கள், பெரும்பாலோர் நெல்லையில் இறங்கியிருந்தமையால் இரயிலில் பயணிகள் அதிகமில்லை,, பயணத்தில் நீர் அதிகம் அருந்தாமல் இருந்ததும், இரயிலின் சூடும் காலை சிறுநீர் கழிப்பதை கடினமாக்கி விடும், முகம் கழுவி வாசலின் அருகே வந்து நின்றேன், ஆரல்வாய்மொழி தாண்டியிருக்க வேண்டும் காற்றாடிகள் தென்படவில்லை, பசுமையான வயல்வெளிகளும் தென்னைதோப்புகளும் பெரிய குளங்களும் அதன் கரையில் ஆலும் அரசும் தெரிந்தன, ஊகித்துக்கொண்டேன் நாகர்கோயிலை நெருங்கிக்கொண்டிருக்கிறோம், தூரத்தில் தாடகை மலை மெல்லிய வெளிச்சத்தில் வானில் வரைந்த கோடாய் உண்மையாக அந்த அரக்கி படுத்து கொண்டிருப்பது போலவே தெரிந்தது, உள்ளே சுந்தர் தோள்பைகளையும்கொண்டுவந்திருந்த சோனி கேமெராவையும் பத்திரமாக எடுத்துக்கொண்டான், இது போன்ற பொறுப்புகள் அவனுக்கானவை என அவனே முடிவு செய்திருப்பான்.

எளிமையான கிராமம் இவ்வூர்,  தேரேகால்புதூர் திரும்பி உள்ளே நுழையும் சாலையில் நாற்கர சாலை இடையே கரும்தார்பாம்பாய் ஊர்ந்து செல்கிறது,    நகரம் அருகில் இருந்தாலும் சிறுவயதில் நான் கண்ட காட்சிகள் இன்றும் அப்படியே இருந்தன, வெளியே ஓடிய சானலின் அகலம் மாத்திரம்  குறைந்துவிட்டது, நல்லவேளை சானலாவது மிச்சம் இருக்கிறது, இப்பெரிய குளம் அன்று நான் கண்ட அதே பச்சைவண்ண நீரால் நிரம்பியிருந்தது, "இறங்கி குளிப்போமாலா" என்று கார்த்திக் கேட்கும் போதே, ஐந்து தலை கொண்ட நாகம் என்னை இறுக்கியது, கால்கள் இரண்டும் அதன் கரிய வாலால் சுருக்கி மேல் கீழும் என்னை அசைத்து போன்ற பிரமை, சிறுவயதில் இக்குளத்தில் குளிக்கும் போது முங்கு நீச்சலில் கண் திறக்கா நிலையிலே நீந்துவேன், ஐந்து தலை கொண்ட பெரிய கரிய நாகம் ஒன்று இக்குளத்தில் அடியில் உள்ளது எனவும், தூர் வாரும் போது சிலபேர் பார்த்ததாகவும் ஆண்டாள் மாமா சொல்வதுண்டு, இன்றும் நீங்காது அச்சுறுத்தும் நாகம் அது, கடும் பசியில் தலை நிரம்பும் விஷேமேறி பெரும்சீற்றம் கொண்டு அது மேல் எழுந்தாலும் எழும் என்ற பீடிகை வலுத்தது, விலகி கார்த்திக்குடன் பேசிக்கொண்டு சகஜ நிலைக்கு வர முயற்சி செய்தேன். சுந்தர் குளக்கரையில் நின்று பல்வேறு கோணங்களில் அதை படம் பிடித்து கொண்டிருந்தான்.         குளக்கரை அருகே இருந்த  ஹோட்டலில் தேநீர் அருந்தி கார்த்திக் வீட்டுக்கு சென்றோம்.

வந்ததன் நோக்கம் மண்டையில் ஏறியது "நீ சொல்றது நிஜமாவா, நேர்ல பாத்தியா", கார்த்திக்கை நோக்கி கேட்டேன், அவன் சிறிது நேரம் மௌனமாய் இருந்தான், அந்த மௌனமே எனக்கு ஆயிரம் அர்த்தங்களை தந்தது, " முதல நம்பள, கத அடிக்கான்னு நினச்சேன், சரி ஒருவாட்டி போய் பாக்கலாமானு பார்த்தேன், சத்தியமா அரண்டுட்டேன், அது உண்மைதான்", எனக்கு மேலும் ஆர்வத்தை இப்பதில் உண்டாக்கியது, நான் விஸ்காம் படித்து உருப்படியாய் எதுவும் செய்யவில்லை, திகில் படங்கள் மேல் ஒரு அலாதி ஆர்வம், என் பள்ளித்தோழன் கார்த்திக்கும் சென்னையில் டி.எப்.டெக் முடித்துவிட்டு இங்கே ஊரிலே சொந்தமாய் திருமணங்களுக்கு போட்டோஷூட் மற்றும் வீடியோ எடுத்துக்கொடுக்கும் ஸ்தாபனம் நடத்தி வருகிறான், , சுந்தர் கல்லூரி தோழன், மூவருமே ஒரு குறும்படம் எடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் இங்கே இணைத்துள்ளோம், இன்சூடியஸ் ,கான்ஜுரிங், லைட்ஸ் அவுட் போன்ற கதைக்களம் கொண்ட திரைப்படம் தமிழில் வரவில்லை அதுபோன்ற வெளிச்சித்திரத்தை மனதிற்குள் உருவாக்கிக்கொண்டேன், திகில் கதைகளும், அமானுஷ்யங்களை தேடி தேடி படிக்க ஆரம்பித்தேன், எனக்கான அடிப்படை கதைகூறு சிக்கவில்லை, நெடுநாட்களுக்கு பின் கார்த்திக் நொண்டிகிழவியின் கதையை சொன்னதும் நேரடியாக அவளை சந்தித்து கதை கேட்க வேண்டும் என்ற ஆர்வத்தில் மீண்டும் என் ஊருக்கே வந்திருக்கிறேன்.           
                      


                        

இணைந்த கைகள்

  ஒரு மாலைநேரம், புதிய திரைப்படம். திங்கள் கிழமை,  மாலை நேரக்காட்சி,  இணைந்த கைகள்.  நிதானியுங்கள், அதே நேரம் உங்கள் மனைவி, அரசு மருத்துவமனை...