Monday 23 December 2019

மதுக்கடையில் என் நிழல்





மதுக்கடையில்  தனியாய் குடிப்பது சௌகரியம்.  கூடி நின்று குடிப்பதில், நண்பனின்,  உறவுக்காரனின்,  அடுத்தவனின் சோகக்கதையயை கேட்பதில் ஆர்வம் இல்லை.  தனியாய் நின்று யாரோ ஒருவரிடம் பேசி குடித்துணை ஆக்கி கொள்வேன். என் சார்பில்லா,  நான் அறியா கதைகளை கேட்பதில் என்னை விட்டு விலகி இருப்பதில் அழுத்தும் விசைகளான என் குடும்ப சூழலில் இருந்து விடுபடும் ஒரு தன்மகிழ்ச்சி.

நான் வசிக்கும் தி. நகரை சுற்றி உள்ள எல்லா மதுக்கடைக்கும் ஏகதேசம் சென்றிருப்பேன். கடைத்தெருக்கள் அமைந்துள்ள பகுதி ஆதலால் பெரும்பாலும் நின்றபடி குடிக்க தான் ஏற்பாடு,  என்றும் என் முதல் தெரிவு பாண்டி பஜார் மதுக்கடை, நேரம் குறைவாய் அதாவது கடை அடைப்பதற்கு அரை மணி நேரம் முன்பு எனில் உஸ்மான் ரோடு  ஜி. ஆர். டி எதிரே இருக்கும் கடை.  இங்கே மதுக்கடைகளுக்கா பஞ்சம். 

பெரும்பாலும் ஒன்பது மணிக்கு மேல்,  பஜார் ஜவுளிக்கடை,  பாத்திரக்கடை,  மின்சாதன கடைகளில் வேலை பார்க்கும் அடிநிலை ஊழியன் தான் மதுக்கடைகளை ஆக்கிரமத்து கொள்கிறான்.  ஓரமாய் நின்றபடி இவர்களை கவனிப்பேன், ஒரே நிம்மதி இவர்களிடம் பாசிசம் குறைவு. அசாமும், தூத்துகுடியும் கால்குப்பியை சமரசமாக பிரித்துக்கொள்வார்கள்.  ஒருமுறை எங்கோ கேட்ட நியாபகம்,  சரியாய்  நினைவில் இல்லை.

"ஏலேய், மாப்புள.  என் தங்கச்சிய நீயோ கட்டிக்கோ.  சொக்காரன் மயிர புடுங்கதான் வருவான்.  கலரு கம்மி டே.  நீ மட்டும் சரின்னு சொல்லுலே.  தாயோளி சிக்கன் வேகவே இல்ல" என நீண்டு கொண்டே போனது.  விழுந்தது வகை என திரும்பி விட்டேன்.

சென்னையின் வெயிலுக்கு ரம் எதற்கு என பல மூத்த குடிகாரர்கள் அறிவுரை கூறியதுண்டு. என்னவோ ஊர் பழக்கம் தொடர்கிறது. ஓல்ட் காஸ்க் கால் குப்பி, கருப்பு திராட்சை கொஞ்சம்,  தேவைக்கு தண்ணீர், கோல்ட் பில்டர் நான்கு இதுதான் என் பதிவு. மூன்று ரவுண்டு முடித்து பாண்டி பஜார் கடை வெளியே ஒரு சிகரெட் பற்றவைத்து முழுதாய் புகைத்ததும்  வாழ்க்கையின் எல்லா பிரச்சனைகளுக்கும் தற்காலிக தீர்வு கிடைத்தது போல ஆசுவாசபடுத்தி கொள்வேன்.

வேகமாக நடந்து, இல்லை ஓடி கொண்டிருந்தேன். இன்று சனிக்கிழமை. வாரக்கூலிகள் கடையை அடைத்து கொள்ளும் நேரம், போகும் வழியில் எதிரே பெரிய ஊர்வலம்,  சாலையில் வண்டிகள் மிக மிக மெதுவாய் நகர்ந்து கொண்டிருந்தது. சிறிய வண்டி நிறைத்து மாலை அலங்காரம், பட்டாசு சத்தம் வேறு. செத்தவனை அவ்வழியே பேருந்தில், இருசக்கர, மூன்று சக்கர, நான்கு சக்கர வாகனத்தில் சென்றவர்கள் திட்டியபடியே சென்றிருக்க கூடும். மனிதர்கள் செத்தவனுக்கும் சேர்த்து,  பாவம் சம்பாதிக்கிறார்கள். ரோடு எங்கும் வீசியபடி செல்லும் கோழிகொண்டைபூவை எப்படி காலையில் தூத்து தள்ளுவார்களோ!.

கடையின் முன்பு பெரும் கூட்டம், தள்ளு முள்ளு. முண்டியடித்து முன் சென்றேன், ஒல்லியான உடல்வாகு எளிதில் முன்னகர வைத்தது. கால்குப்பி வாங்கி வெளியே வந்தேன். எதிரே ஒருவர் நின்றிருந்தார். கழுத்து மறையும் அளவு வெண்நிற தாடி,  ஐந்தறை அடி இருப்பார். காதை தாண்டிய சுருள் முடி, பரதேசி போல் இருந்தாலும் அவர் கண்கள்  குளிர் நிறைந்தது போல தன்மையாய் இருந்தது.  வெளிர் நிற சட்டை மங்கி கசங்கள் இன்றி இருந்தது. கடும்காப்பி நிற முழுக்கால் சட்டை அணிந்திருந்தார்.தோளில் ஒரு ஜோல்னா பை.

மதுக்கடை கூட்டத்தில் இருந்து ஒரு ஆட்டோக்காரர் வெளிவந்து கையில் இருந்த குப்பியை அவரிடம் நீட்டினார், அது ராயல் சேலஞ்ச் கால் குப்பி.  ஆட்டோக்காரர் விடைபெற,  அவர் பாரின் உள்ளே சென்றார். நானும் பின் தொடர்ந்தேன்,  அவர் இருப்பதிலியே ஓரமாய் இருந்த மேஜையில் அமர்ந்தார், அதில் இரண்டு இருக்கைகள் மட்டுமே இருந்தது.  அவர் ஏற்கனவே ஒன்றில் அமர்ந்திருக்க, நான் இன்னொன்றில் அமர்ந்து கொண்டேன். 

முதல் கோப்பை நிறைத்து மது ஊற்றி இருவரும் அருந்தும் வரை இல்லா பரஸ்பரம்,  அடுத்த குவளைக்கு இருவரும் கண்டு சிரித்துக்கொள்ளும் குணாதிசயம் மதுக்கடைகளில் சாத்தியம்.  அவர் என்னை பார்த்து சிரித்தார்.  நான் உடனே பேச ஆரம்பித்தேன், 

"சைடு டிஷ் லாம் இங்க நல்லா இல்லே"  முகத்தை சுளித்தபடி சொன்னேன். 

தன் பையில் இருந்த கடலை மிட்டாயை நீட்டினார். அவர் தொடர்ந்தார். 

"தம்பிக்கு எந்த பக்கம்"

"மாம்பலம் ஏரிக்கரை தெரு"

"இருந்த ஏரிய காணும், தெருக்கு மட்டும் பேரு ஏரிக்கரை தெரு.  சொந்த ஊரு எது"

"நாகர்கோயில்"

"யேய், நானும் அங்கதான்."

"ஊருல ரசவடை, கிழங்கு, மாங்கா கிடைக்கும்.இங்க ஒன்னும் இல்ல"

"அப்டிலாம் இல்ல, அந்தந்த ஊருல என்ன இருக்குமோ, அதானே கிடைக்கும்,  வயக்காட்டில போய்ட்டு செம்மண்ணு தேட முடியுமோ, அங்க களிமண்ணு தானப்போ இருக்கும் . களிமண்ணுல தான் நெல்லு  விளையும்,  நீ படிச்ச படிப்புக்குத்தானே இங்க பொழைக்க வந்திருக்க,  கிடைக்கிறதுல வாழ பழகிக்கணும்"

"அது சரிதான்" என்றேன். ஊற்றிய கோப்பையில் இருந்த மதுவை இருவரும் சிறிது அருந்தினோம்.

"இப்போல்லாம் பாத்துக்கிடுங்க, மனுஷனுக்கு ஆசை கூடிட்டே இருக்கு" என்றார்.

நான் "அப்படியா" என்றேன். 

"நேத்திக்கு வர நூத்தியஞ்சு ரூபா குவாட்டர் , இன்னைக்கு நூத்தி தொன்னூறு" என்றார். அவரே அவரை நக்கல் செய்கிறார் என்று விளங்கியது. 

அவரின் தோரணையும் பேச்சும் என்னை போன்ற தினசரி வாழ்வின் அடையாளம் அவர் அல்ல என்பது மட்டுமே தீர்க்கமாய் மனதில் பதிந்தது. வார்த்தைகளை கவனமாய் கையாள வேண்டும் என மனதிற்குள் சொல்லிக்கொண்டேன். 

நாங்கள் அமர்ந்திருந்த இருக்கையின் மேல தகரம் பெயர்ந்து பின்னே பெரிய வேப்பமரம் ஒன்று தெரிந்தது. அதன் மேல் காகங்கள் சில கால் மடக்கி அதன் கூட்டினுள் இருந்தது. இவரின் பார்வை காகங்களை நோக்கியே இருந்தது. அடிக்கடி கனத்த வெண்கம்பியாய் தாடை எங்கும் பரவி இருந்த தாடியை தடவியபடியே இருந்தார். அவ்வப்போது அவரின் முகம் என்னையும் நோக்கியது.

மதுக்கடையின் சில மீட்டர் தள்ளி சுடுகாடு. நான் இங்கே வரும் போது சென்ற சவ ஊர்வலத்தின் கடைசி நடை அங்கேயே. தப்புமேளத்தின் ஒலி மெலிதாய் காதில் விழுந்து கொண்டிருந்தது.

"மனுஷனுக்கு எல்லாமே அடங்குறது சாவுலதான், தன்னை முழுசா ஒப்படைக்கும் ஒன்னு சாவு தான், பொண்டாட்டி, கூட்டுகாரன், மக்கமாரு, அப்பனும் அம்மையும் யாருட்டயும் நிஜம் கிடையாது.  ஒவ்வொருத்தருக்கும் ஒரு முகமூடி" என்றார்.

"செத்தா என்ன தெரியும், முன்னாடி அழுறது யாருன்னு கூட தெரியாது" என்றேன் நான்.

"அது சரிதான், ஆனா தெரிஞ்சும் ஆடுறோம். முடிவுன்னு ஒன்னு இருக்கு,  பெரிய மயிரா இருந்தாலும் இல்ல" என்றார்.

"மயிரு வாழ்க்கை" என்றேன் நான் சிரித்தபடி.

இருவருக்கும் கால் குப்பியின் முக்கால் பங்கு தீர்ந்து விட்டது.

"எதையோ நோக்கி ஓடிட்டு இருப்போம், கடந்து போறது எதுவும் கண்ணுக்கு தெரியாது. அடுத்தவன் முன்னாடி நா நல்ல நிலைமைல நிக்கணும்.  அடுத்தவனுக்கான வாழக்கையை நாம வாழ்ந்துட்டு இருக்கோம். இங்க நமக்கானது எது மிச்சம்" என்றார்.

"வானத்தில நட்சத்திரம் பாத்திருப்பீங்க,  சின்னதுல புத்தி இல்லாம அதுல தூரமா தெரியது தாத்தா, கிழக்கால இருக்கது ஆச்சி அப்படினு  சொல்லுவோம். அந்த அறியாமைல கூட ஒரு சந்தோசம் இருந்துச்சு" என தொடர்ந்தார்.

அவர் பேச ஆரம்பிக்கும் போது இடையிடையே எனக்கும் எல்லாம் தெரியும் என முனைவது போல உள்ளே செருகினேன். ஆனால் இப்போது அமைதியாய் இருந்தேன், அவர் பேசிக்கொண்டே இருந்தார்.

"நேத்து ஒரு நாய்க்குட்டி ரோட்டுல நிக்குது,  அதை தூக்க நா கிராஸ் பண்ணி போகணும். அத தாண்டி நூறு பேரு போறான்,  அந்த குட்டியை ஏசதுக்கு வண்டி நிக்குது, எவனும் இறங்கி தூக்கி அத ஓரமா கொண்டு விட மாட்டுக்கான். இதுல அந்த குட்டி பாவமா, இல்ல இவ்ளோ சுயமா எதை பத்தியும் கவலைப்படாத இவனுகள பாத்து கவலைப்படவா? "

ஆம், அவர் சொல்வது உண்மைதான். கடந்து போகும் போது காணும் காட்சியில் எதிலுமே உண்மையாய் உளம் நின்றதில்லை.நாய் குட்டியை நானும் கடந்து போயிருப்பேன்.

பேசிக்கொண்டு இருக்கும் போதே, கடுமையாய் இரும ஆரம்பித்தார். அவரால் இயல்பாக மூச்சு விட இயலவில்லை. இரண்டு நிமிடம் அவராய் தன்னை ஆசுவாசப்படுத்தி இயல்புநிலை திரும்பினார். என் பின்னே அவர் வயதொத்த இன்னொருவர் நின்றிருந்தார். 

"என்ன ராஜம் இருமல் அதிகம் ஆயிட்டு போல, குடிய குறைக்கலாம்" என்றார். இருவரும் ஏற்கனவே பரிச்சியம் ஆனவர்கள் என ஊகித்து கொண்டேன்.

"என்ன செய்ய,  நானும் நினைக்கேன். முடிய மாட்டேன்குது. ராத்திரி தூக்கம் இல்ல" என்றார்.

"ஏற்கனவே எமனை பாத்துட்டு வந்துட்ட. உன்கிட்ட சொல்லி திருத்த முடியாது. சரி நா வரேன்" என்றபடி வந்தவர் கிளம்பினார்.

நான் அவரை இரக்கமாய் கவனிப்பது அவர்க்கு அசௌகரியமாக இருக்கிறது போலும், என்னை நேராய் பார்ப்பதை தவிர்த்தார். 

"குடிய ஜெயிக்க முடியல. பலவாட்டி பாத்துட்டேன். தோத்துட்டு தான் இருக்கேன். " என்றார் தலையை நிமிர்த்தவில்லை. 

"நீங்க என்ன பண்றீங்க" என்றேன், நெடுநேரம் கழித்து நான் பேசினேன். ஆகவே குரலில் ஒரு கரகரப்பு இருந்தது.

"நமக்குன்னு ஒன்னு நிலையா கிடையாது. புத்தகம் வாசிப்பேன்,  எழுதுவேன், அதுதான் எல்லாம்"  

எனக்கு கொஞ்சம் உரைத்தது. இவரின் எண்ணமையம் சராசரி மனிதனின் ஓட்டத்தில் இருந்து சற்று விலகியே இருந்தது. சிறிது நேரம் எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தோம். பின் அவர் எழுந்து விடை பெற்று சென்றார். அவரின் பெயர் என்னுள் பதிந்தது 'ராஜம்'.

கடையில் இருந்து வெளியே வந்து வழக்கமான சிகெரட் பற்றவைத்தேன்,  மனதிற்குள் மீண்டும் மீண்டும் ஒலித்தபடி இருந்தது "குடிய ஜெயிக்க முடியல, தோத்துட்டு தான் இருக்கேன்" என்று அவர் கூறியது தான். 

அன்றைய இரவு என்றையும் போல சாதாரணமாய் இல்லை, மதுகுப்பியில் ஊறி மலந்து கிடக்கும் ஈச்சை போல, ஒவ்வொருமுறையும் எம்பி குதித்தேன், வெளிவரும் போதெல்லாம் இன்னொரு குப்பியில் அமிழ்ந்தேன். உடல் எங்கும் மதுவாடை பரவி இருந்தது. எழ எழ தாகம் அதிகரித்து கொண்டேயிருந்தது. உறங்கியது நினைவில் இல்லை. காலை எழுந்ததும் இனி குடிப்பதில்லை என முடிவு செய்தேன்.

ஆனால் அன்றைய இரவே, மதுக்கடை வாசலில் நின்றேன். அவரும் நின்றார். அவர் அருகே செல்ல தயக்கமாய் இருந்தது, அவருக்கும் அதுவே தோன்றிருக்க வேண்டும், தூரமாய் நின்று கொண்டார்.

பின் கொஞ்சம் கொஞ்சமாய் நாட்களை வாரம் ஆக்கினேன். நான் செல்லும் நாளெல்லாம் அவரை கண்டேன், சிலநாள் தள்ளாடியபடி வாகன நெருக்கம் நிறைந்த சாலையில் நடந்துகொண்டிருப்பார். வாரத்தை, மாதம் இருமுறை ஆக்கினேன். என்னுள் மாற்றம் தெரிவதாய் உடன் பணிபுரிவோர் கூறினார்கள். 

சில மாதங்கள் சென்றிருக்கும், மழைக்காலத்தில் அதுவும் மாலை நேரம் என்றால் மிளகாய் பஜ்ஜி என்னுடைய விருப்பம், வழக்கமான டீ கடைக்கு சென்றேன்.வெளியே மாலை நேர செய்தித்தாள் இருந்தது . உள்ளே பெட்டிச்செய்தியை கவனித்தேன் "சாலை விபத்தில் எழுத்தாளர் மரணம்".  

என்னவோ என் இயல்பில் மாற்றம், பதட்டமாய் இருந்தது, கூடவே வேர்க்கவும் செய்தது.செய்தித்தாள் புரட்ட மனமில்லை, உண்மையில் தைரியம் இல்லை. ஏன் அந்த பெயர் 'ராஜம்' என இருக்க கூடாது என்று தெய்வத்தை வேண்டிக்கொண்டேன்.   மீண்டும் காதில் அவர்  குரல் கேட்டது  "குடிய ஜெயிக்க முடியல, தோத்துட்டு தான் இருக்கேன்".  இதனை அவர் என்னிடம் கூறியபோது,  எனக்கு அது நானாகவோ தோன்றியது. நான் அவரின் இளைய நிழலாய் அசைந்தபடி அன்று எதிரே இருந்தேன். மீண்டும் என்னுடைய குரலும் அவரோடு இணைந்தபடி காதில் ஒலித்தது "ஆம், நாம் தோற்று கொண்டிருக்கிறோம், மது நம்மை ஜெயித்து கொண்டிருக்கிறது"..

Monday 16 December 2019

ராஜு தாத்தா 3 : சுடலை





வெயில் குறைந்து நாஞ்சில் காற்று மென்மையாய் வீசிக்கொண்டிருந்தது.  வானம் மங்கி மென் ஒளி பரவி இருந்தது.  கொக்கும், நாரையும் வான் நிறைத்து கூடு நோக்கி பறந்து கொண்டிருந்தது.  பொதுவாய் வெக்கையில் இருக்கும் மனநிலை அந்தியின் குளிர்ச்சியில் தணிந்து விடும். சுடலை வீட்டில் இருந்து இறங்கி கடைத்தெரு சந்திக்கு வந்தான். தூரத்து சரஸ்வதி திரையரங்கில்  'சிங்கார வேலனே தேவா' பாடல் ஒலித்து கொண்டிருந்தது. முகூர்த்த நாள் போலும் தலை நிறைத்து மல்லிகையும் கனகாம்பரமும் சூடி பெண்கள் கூட்டம் நடந்தபடி அங்கொன்றும் இங்கொன்றுமாய் போய் கொண்டிருந்தார்கள். 

ஐப்பசி மழையில் கரை தழுவி ஓடும் பழையாற்றின் வெள்ளம் போல அவன் எண்ணமெங்கும் நிறைத்து, நீரின் சுழியுள் இழுப்பவளாய் சிவகாமி அவன் வாழ்வை நிறைத்திருந்தாள். அதன் தாக்கம் என்னவோ,  இறுமாப்பில்  இறங்கி மாமன் வீட்டுக்கு நடந்து கொண்டிருந்தான். மாமனிடம் என்ன வேண்டி கிடக்கிறது. ஆனால் அன்று எவனோ புதிய பாலம் மேல் கல் எறிந்ததற்கு, மின் விளக்குகளை உடைத்ததற்கு,  அவரின் கோபம் ஏன் என் பக்கம் திரும்பியது. திராவிடம் பேசும் கட்சிகள் அல்லவோ செய்தது.

தேவையில்லாத ஊர் பொதுக்கூட்டம், மாமனுக்கு மருமகனுக்கும் புகைச்சலை ஏற்படுத்தியது. இறங்கி போய்த்தான் இருக்கலாம், ஆனால் ஊரார் முன்னிலையில் மாமன் திட்டி விட்டாரே. யோசித்து கொண்டே நடக்கும் போது வீடு வந்து விட்டது. வீட்டில் நுழைந்தாலே முன்அரங்கில் பெரிய காந்தி படம் மாட்டப்பட்டு இருந்தது. அது பெரிய வீடு, முன்னே அரங்கு, தொடர்ந்து மங்களா, பின் சாமான்கள் ஒதுக்கும் சிறிய அறை, அதன் இடையே சிறிய பூஜையறை,  கடைசியில் அடுக்காளை,  அதை தொடர்ந்து சிறிய வெந்நீர்பறை. பனைந்தடி கிடத்தி  அதன் மேல் எழுப்பப்பட்ட மேல் தட்டு. 

வீட்டில் நுழையும் போதே வாசற்படியில் மாமாவின் செருப்பு கிடக்கிறதா என்று கவனித்தான். இரு கால் செருப்பும் ஒரே சீராய் கழட்டி போடப்பட்டு இருந்தது. உள் நுழையும் போதே மாமா இருமும் ஒலி கேட்டது.

"அத்தே" என்று அத்தையை அழைத்தான்.

மாமா தட்டுப்படியில் இறங்கும் ஓசை கேட்டது. கீழிறங்கி அவனை பார்த்து.

"உள்ள வாடே, சட்டம்பி" என்றார். வழக்கமாய் இல்லாமல் ஒரு வித தயக்கத்துடன் உள்நுழைந்தான். மாமா அங்கிருந்த மரநாற்காலியில் அமர, அவன் நின்று கொண்டே இருந்தான்.

"என்னடே, ஒவ்வொண்ணா சொல்லனுமா. இருடே"

அத்தையும் சிவகாமியும் அடுக்காளையில் இருந்து முன்அரங்கிற்கு வந்தனர். மாமா சாய்ந்து உட்கார்ந்து மேலே பார்த்தபடி, கைகளை பிசைந்து கொண்டிருந்தார். சுடலை  நாற்காலியின் ஓரமாய் உட்கார்ந்து நகம் கடித்து கொண்டிருந்தான். 

அத்தை ஆரம்பித்தாள்,  "ஏங்க, அவன்தான் வீட்டுக்கு வந்துட்டான்.எதுக்கு இரண்டு பேரும் துஷ்டி வீட்ல இருக்க மாறி வாய பொத்திட்டு இருக்கீங்க"

"அவன்ட என்ன பேச, முன்னாடி நாம ஒன்னு சொன்னா, காது கொடுத்து கேப்பான். இப்போ பெரிய ஆளாயிட்டான். பொசுக்குன்னு சூடாயிருகான்."

"இல்ல மாமா, அன்னைக்கு புத்தி  இல்லாம கத்திட்டேன்."

"புத்தி இல்லமா தான் அப்டி பேசினீரோ, பெரிய மனுஷா. நீ கண்டையாட்டி அன்னைக்கு! சங்கடமா போச்சு. அடுத்தவன் முன்னாடி பேசுனது பெரிசில்ல மக்ளே. நா பேசுனது உனக்கு புரியலைன்னே தான் வருத்தம்."

"இல்ல மாமா, உங்களுக்கே தெரியும். லைட் உடைச்சது. சினிமா பார்ட்டினு. அப்புறம் எதுக்கு ஊர் முன்னாடி என்ன ஏசி,  பாலத்துக்கு கிட்ட போக்கூடாதுனு சொன்னீங்க"

"நீ அங்க போன என்னடே பண்ணிருப்ப? "

"உடைச்சவன் கை எழும்ப முறிச்சிருப்பேன்!"

"கேட்டையாடி முறிச்சிருப்பார்லா?  எனக்கு தெரியும் இவன பத்தி,  அன்னைக்கு ஏசுனது, உரைச்சுதான். பாலத்துக்கு முன்னாடியே நின்னான். இரண்டு நாளும். அதுக்குதான்,  இவனுக்கு எதுக்கு இதுலாம். வேல ஒன்னு பாத்து வச்சிருக்கேன். நீ ஒழுங்கா அங்க போனா போதும்."

"மாமா,  நீங்க சொன்னா சரி"

"சரி டே,  இன்னும் இரண்டு மூணு நாளுல, தியேட்டர் ஓனர் வருவாரு. நா பேசிட்டு சொல்லுகேன், அதுக்கு அப்புறம் இருந்து நீ போ சரியா"

அவன் சரி என்று தலை அசைக்க, மாமா தட்டுபடி ஏறி மாடிக்கு சென்றார். 

"மக்கா,  சால வாங்கிற்கேன்.இருந்து சாப்டுட்டு போ. அட சண்டாளி, வந்து எவ்ளோ நேரம் ஆச்சு, மருமகனுக்கு டீ போட்டேனா பாத்தியா! இப்போ கொண்டாறேன்" என்றபடி அத்தை அடுக்காளைக்கு செல்ல, சிவகாமி மாத்திரம் நின்றிருந்தாள்.

"எப்பா, உங்க இரண்டு பேருக்கும் இடைல எப்பிடி தான் மாறடிக்க போறேனோ!" என்றபடி தலையில் அடித்து விளையாட்டாய் சிரித்தாள்.

"சரி உண்டியல்ல எவ்ளோ வச்ருக்க" என்றான் சுடலை.

"உனக்கு எதுக்கு"

"அத வச்சுத்தான், தாலிச்சரடு செய்யணும்" என்றான்.

'போங்க அத்தான். சரி இந்தவாட்டி சுசீந்திரம் தேரோட்டத்துக்கு போயிட்டு கன்யாரி போகணும். கூட்டிட்டு போவியா"

"அதுக்கு இன்னும் இரண்டு மாசம் இருக்குடி.  மாமா கல்யாணதுக்கு நாள் பாக்குது,  அம்மை சொல்லிச்சு. உன்ன கட்டிட்டு கூட்டிட்டு போறேனான்னு தெரிலியே"

அத்தை வேகமாய் வந்தாள், டீ குவளையை அவனிடம் நீட்டி "குடி மக்கா,  பேசிட்டு இருந்த நியாபகத்துல மறந்துட்டேன். இரு சாப்பிட்டுட்டு போ"

"இல்ல அத்தே,  வேண்டாம். அம்மை எனக்காகத்தான் பொங்கிட்டு இருக்கா. " என்றபடி டீயை வேகமாய் குடித்து வெளியே வந்தான். வாசலில் சிவகாமி சிரித்த படி நின்று கொண்டிருந்தாள்.

நேரம் இருட்டி இருந்தது,  ஒழுகினசேரி சந்திப்பு வரவும். எதிரே மாரி நின்று கொண்டிருந்தான். சந்திப்பில் இருந்து ஆற்றுக்கு செல்லும் வழியில் பாழ் அடைந்து கிடக்கும் எங்கோடி கண்ட சாஸ்தா கோவில் உண்டு. சில வருடம் ஆயிருக்கும் பூஜை கழிந்து,  பூட்டியே கிடக்கிறது. தினமும் ராத்திரி மாம்பட்டை குடிக்கும் கும்பல் உள்ளே இறங்குவது உண்டு.

மாரியிடம் "இன்னைக்கி உள்ள எவனோ இறங்கிற்கானா? " கேட்டான் சுடலை.

"சலம்பல் கேக்குவோய், ஆளு உள்ள உண்டு"

சுடலையும், மாரியும் மெதுவாய் சாஸ்தா கோவில் பக்கம் சென்றனர். கோவில் மேட்டில் எழுப்பி கட்டப்பட்டு இருந்தது. சுடலை மெதுவாய் மேலே உன்னி ஏறி, மாரியையும் ஏற்றி விட்டான். அரச மரம் பின்னால் சத்தம் கேட்கவே,  கீழ்க்கிடந்த கல்லை தூக்கி அங்கு எறிந்து, "எந்த தொட்டிப்பய பின்னாடி கிடக்கான். அப்பனைக்க இடம்ல இது. இங்க வந்து குடிக்க,  வெளிய போல நாய" கத்தினான் சுடலை.

பின்னால் ஆட்கள் ஓடும் சத்தம் கேட்டது. சுடலைக்கு தினசரி வேலையாகி விட்டது. சிறுவயதில்  பல முறை இந்த கோவிலுக்கு வந்திருப்பான். கார்த்திகை மாதம் கட்டு கட்டி எத்தனை முறை சபரி மலை சென்றிருப்பான். கோவிலை சரி செய்ய வேண்டுமென்றால் முதலில் ஊராரை ஒன்றாக்க வேண்டும். அவன் அவனுக்கு வசதி பெருகவே ஊரும் இரண்டாய் விட்டது. 

ஆறுமுகம், சுப்பிரமணி இரண்டு ஊர் பெரியமனுஷனின் உள்பகை பாவம் சாஸ்தாவை தண்டித்து விட்டது. யோகமூர்த்தியின் கோயிலில் தினம் தினம் மாம்பட்டை கச்சேரி.  இக்கோயிலை சீரமைக்க வேண்டும். சுடலை கோயிலின் கீழ் திண்டிறங்கி,  மீண்டும் சந்திப்புக்கு வந்தான். மாரியிடம் விடை பெற்று வீட்டுக்கு சென்றான்.

உள்ளே, அம்மா அடுக்காளையில் சமைக்கும் ஒலி கேட்டது. வெந்தய புளிக்கறி போல,  வெந்தயம் பொடி உள்ளியோடு சேர்ந்து வதக்கும் மணம் வந்தது.  

"யம்மா" என்று அம்மையை அழைத்தான். 

"லேய் வந்திட்டியா,  கொஞ்சம் இரு மக்கா. சோறு பொங்கிட்டேன். புளிக்கறி கொதிக்கவும். முட்டை அடை போட்டு தாரேன்."

"சரி, மாமா வீட்டுக்கு போய்ட்டு வந்தேன்"

"சந்தோசம் மக்ளே, அவன் சொல்ல கேளு. உங்க அய்யா போனதுக்கு அப்புறம். நமக்கு அவன விட்டா யாரு. காசு வந்ததுக்கு அப்புறமும் மாறலடே. சின்னதுல எப்டியோ அப்பிடியே இருக்கான். உங்க அத்த காரியையும் சொல்லணும். அம்மைக்கு இப்போதான் நிம்மதி. நா கண்ண மூடினாலும் உனக்குன்னு நாலு பேரு வேண்டாமா"

சுடலைக்கும் மனதில் உறுத்தி கொண்டிருந்த ஏதோ ஒன்றில் இருந்து விடுபட்ட நிம்மதி. வீட்டின் சுவரில்,  மாமா,  அத்தை கையில் சிவகாமியும் கூடவே இவனும் சிறுவனாய் நிற்கும் புகைப்படம் மாட்டப்பட்டு இருந்தது.அதில் மாமாவின் வலதுகை  இவனின் தோள்களை அழுத்தி அணைத்தபடி இருந்தது.

Saturday 7 December 2019

செவலை




"தோ தோ, ச்சு ச்சு ச்சு" என்று அவன் அழைத்துக்கொண்டு ஓட, அதுவும் அவன் பின்னாலே ஓடியது.  செவலை நிறத்தில்,  காதோரம் மட்டும் வெள்ளை நிறத்தில் நாய்க்குட்டி.  அவன் கால்களுக்கு இடையே ஓடி மீண்டும் அவன் முன்னால் நின்று கால்களுக்குள் நுழைந்து ஓடியது. 

அந்த வயல்காட்டில் யாரும் இல்லை. வானம் மங்கிக்கொண்டிருந்தது. கருக்கள் நேரம் வீட்டுக்கு சென்று விடவேண்டும் என  ரமணியும் முத்துவும் வேகமாக நடக்க அவர்கள் பின்னாலே செவலை குட்டியும் ஓடியது.  ரமணி திரும்பி பார்த்தான், அது வலப்பக்கமாக தலையை சாய்த்து வாலை ஆட்டியது. அவனுக்கு இதை வீட்டுக்கு எடுத்து செல்ல ஆசை, முத்துவுக்கோ பயம்,  உடனே 

"லேய், உனக்கு மண்டைக்கு கழியலயா.  இதுக்க தள்ள இங்கதான் சுத்திட்டு கிடக்கும். பேசாம வால"

"அழவோல இருக்கு. நா எங்க வீட்டுக்கு தூக்கிட்டு போறேன். எட்டி குட்டி, எங்க வீட்டுக்கு வாரியா. டெய்லி உனக்கு பாலு, பிஸ்கட் தாரேன்" என்று செவலையை பார்த்து பேச ஆரம்பித்தான்.

"எப்படில பார்த்த பொட்டைக்குட்டின்னு. சரி வா சீக்கிரம் போவோம்.இருட்டிட்டு இருக்கு."

ரமணி செவலையை நெஞ்சோடு தூக்கி வாரிக்கொண்டான், அதுவும் அவனை வாஞ்சையோடு தன் நாவால் நக்கி புது எஜமானரோடு சென்றது.

'மக்கா, நாளைக்கு விடிஞ்சதும் இத தூக்கிட்டு கோட்டார் நாய் ஆசுபத்திரிக்கு போய் தடுப்பூசி போட்டுரு சரியா" என்றான் முத்து.

"ஆமா,  நீ உன் சைக்கிள் எடுத்துட்டு வருவியா,  அதிலியே போயிட்டு வந்திருவோம்."

"தடுப்பூசி போடல,  நம்ம டைகர் மாதிரி இதுக்கும் நாய் போலியோ வந்திரும். டைகர் எப்படி இருக்கும்,  கொழுகொழுனு குட்டிலியே சூப்பரா இருக்கும்."

"நாகராஜா கோயில் பின்னாடி வயல்ல விட்டுட்டு போகும் போது,  நம்ம பின்னாலயே ஓடி ஒடி வந்துச்சு. இப்போ அது எங்க கிடக்கோ"

"எங்க அம்மா, இப்போவும் நைட் சொல்லிட்டு தான் படுக்கும். அப்போல்லாம் ராத்திரி ஊழ விட்டுட்டே இருக்கும்,  வாய்ல நுரை வந்திரும். நாலு காலையும் தரைல தேச்சு ரத்தம் வடியும். கொஞ்ச நேரம் கழிச்சு அதுவே அமைதியாய் படுத்திரும். அம்மா தான் காயத்திருமேனி எண்ணெய ரத்தம் வந்த இடத்துல தேச்சு விடுவா. " இதை சொல்லும் போதே முத்துக்கு  கொஞ்சம் கவலை தொற்றிக்கொண்டது. 

இருவரும் பேசிக்கொண்டே நடந்தார்கள். வானம் இருட்ட,  பறவைகள் கூட்டம் தாழ்ந்து பறந்து கூடு நோக்கி சென்று கொண்டிருந்தது. இவர்கள் பேசுவதை செவலையும் ஏதோ புரிவது போல் பேசும் போது மாறி மாறி இருவரின் முகத்தை பார்த்துக்கொண்டு இருந்தது.

"இப்போ வேற குட்டி எடுக்கணும்,  அப்பா ஆராம்பலி போகும் போது எடுத்துட்டு வருவாரு. பெரிம்மா சொல்லிச்சு வெள்ளையம்மா குட்டி போட்ருக்காம். டைகரும் அதுக்கு குட்டிதான்." என்றான் முத்து.

ரமணியின் வீடு வந்தது,  அது ஒரு சிறிய ஓட்டு வீடு. கால் சென்ட் இடத்தில் கட்டப்பட்டு இருந்தது. ஓட்டின் மேலே மழை நீர் ஒழுகாமல் இருக்க பெரிய தார்ப்பாய் கொண்டு மூடப்பட்டு இருந்தது. வீட்டின் வெளிப்புற சுவற்றின் காரைகள் பெயர்ந்து கிடந்தது. வீட்டின் வெளிக்கொண்டி மூடி இருந்தது. அவன் விளையாட போகும் போது,  தாழிட்டு சென்றான். அவன் அம்மா இன்னும் நெசவு கூடத்தில் இருந்து வரவில்லை. முத்து நாளை காலை சைக்கிள் கொண்டு வருவதாய் கூறிவிட்டு ரமணியின் வீட்டுப்பாட நோட்டை வாங்கி கொண்டு சென்றான்.

தன் கையில் இருந்த செவலையை இறக்கி கீழே விட்டான். அது அவன் வீட்டின் கதவை பிராண்டி விளையாடியது. மீண்டும் அவன் முன்வந்து கால்களுக்குள் நுழைந்து தன் நாவால் உட்கார்ந்து இருந்த அவனை வருடியது. வீட்டை திறந்து அவன் அம்மா வழக்கம் போல் வைக்கும் பெரிய நாழியின் உள்ளிருந்து மூன்று ருபாயும்,  பாத்திரம் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த பரணில் இருந்து சிறிய வாளியை எடுத்துக்கொண்டான்.  செவலையின் கழுத்தில் சிறிய சணல் கயிறு கொண்டு கட்டி வீட்டின் முன்னிருந்த பழைய மரத்தூணில் கட்டினான். 

"நீ இங்கேயே இரு, நா போய் பாலும் பிஸ்கட்டும் வாங்கிட்டு வாரேன்,  சரியா" 

செவலை தனியாய் இருப்பதால் அவனுக்குள்  சிறிய பயம் எங்கே  அம்மா வந்து  இதை ஏன் கொண்டு வந்தாய் என்று திட்டிவிடுவாளோ?  என்று. வேகமாய் சென்று பாலும் பிஸ்கட்டும் வாங்கி வீட்டுக்குள் நுழையும் போது, அம்மா அங்கே அமர்ந்திருந்தாள்.ஒல்லியான தேகம்,  நெசவு கூடத்தில் பறக்கும் நூல் பிசிறுகள் அவள் முடியில் ஒட்டிக்கொண்டு இருந்தது. 

"லேய்,  எங்க இருந்து எடுத்துட்டு வந்த இத" என்று சொல்லும் போதே,  செவலை அம்மாவின் மடியில் ஏறி அவளின் கன்னத்தை நாவால் வருட ஆரம்பித்தது. கூச்சத்தில் அவள் சிரிக்க,  ரமணிக்கே மகிழ்ச்சியாய் இருந்தது. அம்மா அவ்வளவு சிரிப்பது இல்லை.  ஆம் ரமணியின் அப்பனை போல் ஒருவனை  கட்டியவள்  எப்படி சிரிக்க முடியும். பாவி வேலைக்கும் செல்வதில்லை,  வீட்டுக்கும் ஒழுங்காய் வருவதில்லை. முழுநேர குடிகாரன். இவர்களுக்கு குடிக்க மட்டும் எங்கிருந்து காசு வருகிறதோ!.

அம்மா அதனிடம் கொஞ்சி கொண்டிருக்கும் போதே, அவன் கையில் இருந்த பாலை ஆற்றிக்கொண்டிருந்தான். உள்ளூற மகிழ்ச்சிதான், அம்மா எப்படியும் இதை வேண்டாம் என்று சொல்லமாட்டாள்,  யார்தான் சொல்வார் இது போன்ற அழகான செவலை குட்டியை. சிறிய வாளியின்  மூடியை திறந்து அதனுள் கொஞ்சமாய் பால் ஊற்றி அதனருகே வைத்தான். செவலை அதை நக்கி நக்கி குடித்தது,  ஒரே தடவையாய் மொத்தமாக குடித்து,  தன் பிஞ்சு வாயால் கத்தியது. ரமணியும் அவனது அம்மாவும் அதையே பார்த்துக்கொண்டு இருந்தனர்.

நேரம் இருட்ட அம்மா அடுக்காளையில் சோறு வடித்து கொண்டிருந்தாள். அந்த வீட்டில் அடுக்காளை, பூஜையறை, படுக்கையறை எல்லாம் ஒன்றுதான்,  ஆக எங்கும் தனி தனியாய் எழுந்த போக அவசியம் இல்லை, இதுவும் வசதிக்குத்தான். ரமணி செவலையோடு விளையாடிக்கொண்டிருந்தான். ஓடி ஆடி விளையாடிய குஷியில் செவலை தூங்கி விட்டது. அதற்கு பிறகுதான் ரமணி அங்கிருந்து எழுந்தான், இரவுணவை முடித்துக்கொண்டு இருவரும் உறங்க பாய் விரித்தனர்.

உறங்கி ஒரு மணி நேரம் இருக்கும், வீட்டின் கதவை தட்டும் ஓசை கேட்டது. அம்மா எழுந்து கதவை திறந்தாள், அது அப்பாதான். நிற்க முடியாத அளவு போதை,  பெரும் சாராய நாற்றம் வீட்டுக்குள். அப்படியே நின்ற இடத்தில் படுத்து உறங்கி விட்டார். அம்மா மீண்டும் வந்து ரமணியின் அருகில் படுத்து உறங்கி விட்டாள். ரமணிக்கு தெரியும் இதுபோன்ற நேரங்களில் அம்மா அமைதியாய் இருப்பாள்,  காலை பொழுது விடிந்ததும் இங்கு ஒரு பெகளம் இருக்கிறது.

"ஒரு வேலைக்கும் போறதில்ல, பொட்டச்சி எவ்ளவுதான் ஒரு வீட்டுக்கு பண்ணுவா. கொஞ்சம் மனசாட்சி வேண்டாமா",  காதுக்குள் இவை நுழையும் போது ரமணி விழித்துக்கொண்டான். வெளியே தலையை எட்டி பார்த்தான். அம்மா செவலைக்கு  டீ வைத்து இருந்தாள். அது வீட்டின் கதவை பிராண்டியபடி  விளையாடி கொண்டிருந்தது.  அப்பா தலையை தொங்க போட்டபடி அமர்ந்திருந்தார்.

வழக்கமான ஒன்றுதான், ரமணி எழுந்து வீட்டிற்கு வெளியே அமர்ந்தான். சண்டை பெரிதானது போல,  அப்பாவும் எழுந்து நின்று கத்த ஆரம்பித்து விட்டார். ரமணிக்கு இது பழைய சங்கதி, செவலைக்கு இது புதிது அல்லவா. எதுவும் அறியா குட்டி அவன் அப்பாவின் கால்களை சுற்றியபடி விளையாடிக்கொண்டு இருந்தது. 

சண்டை பெரிதாக அவன் அம்மா தலையில் அடித்துக்கொண்டு, அப்பாவை திட்டிக்கொண்டே  அழ ஆரம்பித்தாள். ஒரு தருணத்தில் அவரும் சண்டையிட ஆரம்பித்தார்.மேலும் பெரிதாக அவர் கோபத்தில் வெடித்தார். கெட்ட வார்த்தைகள் காதுகள் கூச சண்டை நடந்தது. இது எதுவும் அறியா செவலை அப்பாவின் கால்களை சுற்றியபடி விளையாடி கொண்டிருந்தது. இதையெல்லாம் ஓரமாய் அமர்ந்தபடி ரமணி பார்த்துக்கொண்டு இருந்தான், எதையுமே அவன் உள்வாங்காமல் அமைதியாய் இருந்தான்.

அவன் அம்மா கடும்கோபத்தில் அப்பாவின் சட்டையை கிழிக்க, அவரும் அம்மாவை தள்ளி விட்டார்.மேலும் கோபம் தனியாதவராய், காலுக்கடியில் விளையாடி கொண்டு  இருந்த செவலையை ஓங்கி மிதித்து விட்டார். ரமணிக்கு இப்போதுதான் செவலை நியாபகம் வந்தது.ஓடி போய் செவலையை பார்த்தான்.அவன் அப்பா அங்கிருந்து நகர்ந்து வெளியே சென்று விட்டார்.அம்மாவும் அழுதபடி இருந்தாள்.

செவலை கத்தியபடி இருந்தது, அதன் சிறிய கண்ணின் ஓரத்தில் நீர் வழிந்து கொண்டு இருந்தது.ரமணிக்கு எதுவும் புரியவில்லை, அவனும் அழுதபடி அதை எடுத்து நெஞ்சோடு அணைத்தான். மேலும் கத்த திராணி இல்லாமல் அவன் மடியிலே படுக்கிடந்தது. சிறிது நேரம் கழித்து மெதுவாய் அதை இறக்கி விட்டான். செவலை மெதுவாய் எழுந்து நின்றது. அதன் தலை வலப்புறமாக திரும்பியே இருந்தது. 

ரமணி அதன் தலையை நேராய் மென்மையாய் திருப்ப அது வழியால் துடித்தது, அதன் சிறிய கண்ணின் ஓரத்தில் நீர் நிறைந்து இருந்தது.அதனால் தலையை நேராக வைக்க இயலவில்லை. வலப்புறமாக தலை சாய்ந்தே இருந்தது. ரமணியின் அம்மா அன்று வேலைக்கு செல்லவில்லை. செவலையின் கழுத்தில் காயத்திருமேனி எண்ணெய் தடவி கொடுத்தாள் அவன் அம்மா. அன்றைக்கு முழுவதும் அது படுத்தே கிடந்தது. முத்து சொன்னபடி வரவில்லை.

நேரம் இருட்ட இருட்ட வலியால் ஊழையிட ஆரம்பித்தது. இரவு முழுவதும் கத்தியபடி இருந்தது. அடுத்த நாள் அவன் அம்மா அவனிடம், 

"மக்ளே, இது கொண்டு எங்கையாவது உட்ருமா. இத பாக்க பாக்க உங்க அப்பா மேல வெறி வருது" என்றாள்.

ரமணியும் எதுவும் மறுத்து பேசவில்லை. செவலையை தூக்கி கையில் எடுத்துக்கொண்டான்,  வலப்புறமாய் திரும்பி இருந்த தலையை தூக்கி அவன் கன்னத்தை நாவால் வருடியது. வீட்டுக்கு வெளியே வரவும், முத்து சைக்கிள் உடன் வீட்டுக்கு வெளியே நின்றான்.

"நேத்து,  பெரிம்மா வீட்டுக்கு வந்திருந்துச்சு.அதான் வரல" என்றான்.

"நாம நாகராஜா கோயில் வயலுக்கு போவோமா. இத கொண்டு அங்க விட்ருவோம்" என்றான் ரமணி.

பின் கேரியரில் ரமணி அமர, முத்து சைக்கிளை மிதித்தான். செவலை வலப்புறமாய் திரும்பி இருந்த தலையை தூக்கி அவன் வீட்டை பார்த்தது, அவன் அம்மா வெளியே நின்றிருந்தாள்.செவலையின் வால் அங்கும் இங்கும் ஆடி கொண்டு இருந்தது.

செவலையின் வாசனை வீட்டில் நிறைந்து இருந்தது, மதிய நேரம் ரமணியின் அம்மா வாசலின் வெளியே விறகு அடுப்பில் சோறு வடித்து கொண்டு இருந்தாள். ரமணி உள்ளே படுத்திருந்தான். வெளியே செவலை கத்துவது போல இருந்தது. எழுந்து வெளியே ஓடினான். அவனது அப்பா கையில் செவலை, 

"நாகராஜா கோயில் கிட்ட வாரேன், இது ரோட்டுக்கு சைடு ல நிக்கி. எப்படி வந்துச்சோ தெரில,  வண்டில அடிபட்டுச்சுனா, அதான் எடுத்துட்டு வந்துட்டேன். எப்டி ல அங்க போச்சு ."

பேசிக்கொண்டே அப்பா இறக்கி விட, அது ரமணியிடம் ஓடியது. அதன் தலை கொஞ்சம் நேராய் இருந்தது.



Tuesday 26 November 2019

நனையாத குடை





அலுவலகத்தில் இருந்து திரும்பும் போதுமுள்ள  இறுகிய முகத்துடனே இருந்தேன்.  லிப்ட்க்காக காத்திருக்கும் அளவு பொறுமை இல்லை.  முன்தள்ளிய சிறிய தொப்பையை சுமந்து கொண்டு படிக்கட்டுகள் வழியே கீழிறங்குவதே என்னை போன்றவருக்கு உடல் பயிற்சிதான்.  இத்தனைக்கும் மூன்றாவது மாடிதான். என்னை கடந்து வயதில் இளைய ஒல்லியான
 இளைஞன் ஒருவன் வேகமாக இறங்கி சென்றான்.  தரைத்தளம் சென்று வாகன நிறுத்தத்தில் ஆக்டிவாவை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு பறந்தேன் வழக்கமான 40 கி/ம வேகத்தில். பெங்களூரின் குளிர் அந்த நகரத்தையே குளிர்சாதன பெட்டியில் அடைத்து வைத்தது போலிருந்தது.

வெள்ளிக்கிழமை என்றாலே இந்த துறை சார்ந்த சிலர்க்கு திருவிழா மனநிலைதான். வீட்டுக்கு செல்லும் வழியிலே எனக்கு பிடித்தமான ராயல் சேலஞ்ச் கால் குப்பியும், கருப்பு திராட்சை கொஞ்சமும் வாங்கி கொண்டேன். வீட்டை திறந்து சோபாவில் அமர்ந்தேன். வீடு மிக சுத்தமாக இருந்தது. ஜன்னல் ஓரங்களில் அறையின் மேல் ஓரங்களில் வலை இல்லை. காகித சிதறல்களோ, வெட்டிய காய்கறியின் மிச்ச மீதியோ எதுவும் தரையில் இல்லை.

நானும் சகியும் மீராவும், மூவரும் இணைந்து கைகளை தூக்கியபடி நாவினை வெளிநீட்டி கடற்கரை மணலில்,  பின்மதிய வேளையில் எடுத்த புகைப்படம்  பொருத்தி இருந்த டிவியின் மேல் இருந்தது. டிவியை ஆன் செய்து, யூடுபில் இளையராஜாவின் பாடல்களை பாடவைத்தேன். குளியலறை சென்று என்னை சுத்தப்படுத்தி எனக்கு பிடித்தமான கண்ணாடி டம்ளரில் 45மில்லி விஸ்கி ஊற்றி,  90மில்லி தண்ணீர் ஊற்றி ஒரு மடக்கு குடித்தேன். அடுத்து திராட்சையில் வாயில் போட்டு மென்றேன். இந்த விஸ்கியும் திராட்சையும் என்றைக்குமே என் நண்பனை நியாபக படுத்தும்.

இளையராஜாவின் 'மன்றம் வந்த தென்றலுக்கு' பாடல் ஆரம்பிக்கும் போது என் கைபேசியில் சகி அழைத்தாள், அது எப்படி சகி என அழைப்பிலே தெரியும். அவளுக்கென தனி அழைப்பு மணி ராஜாவின் 'வளையோசை' புல்லாங்குழல் இசைத்துணுக்கு,  வெள்ளிக்கிழமை தவறாது நடப்பதில் இவளின் அழைப்பும் ஒன்றே. கைபேசி அழைப்பை ஏற்றேன், 

"ஹலோ மணி, வீட்டுக்கு வந்துடீங்களா, என்ன பண்றீங்க"

"இப்போதான்மா வந்தேன், பாப்பா வீட்டுக்கு வந்துட்டாளா. சும்மா டிவி பாத்துட்டு இருக்கேன்"

"பாப்பா வந்துட்டா,  உள்ள புக் படிச்சுட்டு இருக்கா. நீங்க பழக்கி விட்ட பழக்கம்  எப்போவும் புக்ஸ் தான்,  நைட் நேரத்துக்கு தூங்க மாட்றா. சரி அங்க எத்தனையாவது ரவுண்டு"

"சீ இன்னைக்கு மூட் இல்ல, குடிக்கல. போன வாட்டி அப்டித்தான், நைட் குடிச்சுட்டு காலைல பயங்கரமா தலைவலி." நான் பேசிக்கொண்டிருக்கும் போதே அவள் இடைமறித்தாள். 

"ஹலோ, எத்தன வாட்டி சொல்லிருக்கேன். இதே டையலாக் பன்னிரெண்டு வருஷமா எல்லா சனிக்கிழமை காலைலயும் சொல்றீங்க ஆனா ட்ரிங்க்ஸ் பண்றத விடல"

"ஏங்க ஒரு நிமிஷம் பாப்பா பேசணுமாம்"

"அப்பா"

"சொல்லுமா, என்ன படிக்கிற"

"கொற்றவை,  நெஸ்ட் வீகென்ட் த்ரீ டேஸ் லீவ் வருது.என்னைய மதுரை கூட்டிட்டு போறிங்களா"

"சரி மா, அப்புறமா அப்பா டிக்கெட் இருக்கானு பாத்து போட்டுடறேன்"

"லவ் யூ அப்பா, சரி நா இப்போ மதுரை சாப்டர்  வந்துட்டேன். நாளைக்கு காலைல நிறைய பேசணும்". 

"சரி மா, லவ் யூ. சீக்கிரம் தூங்கு சரியா". "சரிப்பா".

"ஏங்க அவள கெடுகிறதே நீங்கதான். கேட்டது எல்லாம் கொடுக்கீறீங்க". அவள் பேசிக்கொண்டிருக்கும் போதே அடுத்த 45மில்லியும் ஒரு  திராட்சையும் முடிந்தது.

"இல்ல மா,  அவ கேட்டது எல்லாம் நா பண்ணல. அதுலே எது சரியோ அத மட்டுமே பண்றேன். ஆனா என் பொண்ணு எப்போவும் சரியானத மட்டுமே கேக்கிறா".

"போதும் பா,  உங்க அப்பா மக புராணம். சரி நைட் என்ன டின்னர்".

"இன்னும் முடிவு பண்ணல, தோசை மாவு இருக்கு. ஸ்விக்கில செட்டிநாடு சிக்கன் கறி ஆர்டர் பண்ணனும்".

"ஸ்விக்கில ஆர்டர் பண்றத குறைங்க, ஒரு நிமிஷம் அவர் வந்துட்டாரு. நா வைக்கிறேன். எப்போ போல லேட்டா வராம நாளைக்கு சீக்கிரம் வாங்க" என்ற படி தொடர்பை துண்டித்தாள்.

ராஜாவின் 'ராஜா என்பார் மந்திரி என்பார், ராஜ்ஜியம் இல்லை ஆள' பாடல் ஒலித்து கொண்டிருந்தது.

அவளை விரட்டி காதல் செய்யவில்லை. ஒரே கல்லூரி, அதுவும் ஒரே வகுப்பு அதற்கான சந்தர்ப்பத்தை உருவாக்கவில்லை. முதல் வருடம் பெரிதாய் ஈர்ப்பு ஒன்றுமில்லை. பின் எந்த தருணம், சூழல் அவளை கவனிக்க வைத்தது என நினைவில் இல்லை. நாங்கள் படித்த காலம் பொறியியல் அவ்வளவு பரிச்சயம் கிடையாது, எங்கள் கல்லூரி தோவாளை மலையின் நேர் பின்புறம் அமைந்திருந்தது. புதிதாக திறக்கப்பட்ட கல்லூரி,  கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்கள், ஊரில் இருந்து கல்லூரிக்கு அழைத்து வர பேருந்து என எல்லாம் உண்டும். நான் ஒழுகினசேரி,  அவள் வடிவீஸ்வரம் பேருந்தும் ஒன்றே.  அவ்வூரில் மழை பொழிந்தபடி இருக்கும்,  தாழ்ந்து மிதக்கும் கார்மேக கூட்டம் எப்போதும் மழை பொழிய தயாராய் இருக்கும். 

அதுவும் ஒரு மழை நேரம்,  செமஸ்டர் தேர்வின் போது,  எங்கள் பேருந்தில் அன்றைய நாள் மாணவர்கள் குறைவு. கல்லூரியை பேருந்து அடையும் போது பேய் மழை. என் கையில் குடை இல்லை,  என் முன்னால் அவள் இறங்கி விட்டாள். புத்தகத்தை சட்டைக்குள் மறைத்து நான் படிக்கட்டு வழியே தலையை வெளி நீட்டும் போது அவள் குடையுடன் எனக்காக நின்றிருந்தாள். நான் கீழிறங்க குடைக்குள் என்னை அடைத்துவிட்டாள். 

அளவில் சிறிய குடை,  மழை துளி மேல்பட அவள் என்னிடம் மேலும் நெருங்கினாள். என்னையும் மழையில் நனையாதவாறு உள்ளே வர சொன்னாள். எதுவும் உணர்ந்து அதன்படி நடக்கும் நிலையில் நான் இல்லை,  இழுத்துக்கொண்டு  போவது போல் அவளோடு நடந்தேன். மழை நீரோடு மண்ணும் இணைந்த கலங்கிய நீர் போல நானும் அவளும் நடந்து தேர்வு அறையை அடைந்தோம். அந்த குடை முழுக்க நிறைந்திருந்த பவுடர் மணமும்,  அவளின் மணமும் என்னுள் முழுதாய் இறங்கி இருந்தது. அன்றைய தேர்வு முடிந்து பேருந்தில் ஏறி வீடு திரும்பிக்கொண்டிருந்தோம். மழை மேகம் கலைந்து ஒரு செவ்வொளி பரவி இருந்தது,  பேருந்தின் ஜன்னல் இருக்கையில் அமர்ந்திருந்த அவளின் முடியில் பட்டு ஜொலித்தது,  பேருந்து  அவள் நிறுத்தத்தை அடைந்தது. அதன் அருகே டீக்கடை ஒன்று உண்டு, எப்போதும் ராஜாவின் பாடல்கள் ஒலிக்கும். அவள் இறங்கும் போது 'கோடைகால காற்றே' பாடல் இதமாய் காதில் நுழைந்தது. அவள் இறங்கி நடக்க ஆரம்பித்தாள்,  பேருந்து மெதுவாய் வளைவில் திரும்ப நான் அவள் போகும் பாதையில் தலையை திருப்பி பார்த்தேன்,  அவளும் பார்த்தாள்.

கல்லூரி நாட்களில் மகிழ்ச்சியான நேரங்கள் கல்வி சுற்றுலா செல்வது. பெயர் தெரியாத அலுவலகத்தின் பெயரை முன்வைத்து பிடித்தமான இடங்களுக்கு செல்வது வழக்கம். அது மூன்றாம் வருடம் அதிரப்பள்ளி அருவிக்கு சென்றோம்,  நாங்கள் நண்பர்கள் கூட்டம் அவசரமாய் அருவியின் கீழ் பகுதிக்கு இறங்கி சென்றோம்,  அவளோடு போகவே ஆசை ஆனால் நண்பர்கள் விடவில்லை. அருவியின் சாரல் எங்களை நனைத்து விட்டது,  நனைந்தபடியே நின்றிருந்தோம்,  தோழிகள் கூட்டம் எங்களருகே வந்தது. சாரலின் ஒரு துளி அவள் புருவத்தில் ஒற்றை வைரம் போல் மின்னியது. இதுதான் சரியான தருணம் என அவள் அருகே சென்றேன். மெதுவாய் உரையாடலை ஆரம்பித்தேன்.

"எவ்ளோ பெரிய அருவி இல்ல"

"சூப்பரா இருக்கு" என்று கைகளை கன்னத்தில் வைத்து சிரித்தாள்.

"புன்னகை மன்னன் இங்க தான் எடுத்தாங்க" என்றேன். அவளுக்கு ஏற்கனவே தெரியும் இருந்தும் "அப்படியா" என்றாள்.

"இதே மாதிரி இன்னொரு நாள் உன்கூட இங்க வரணும்"

"வந்துட்டா போச்சு"

"அன்னைக்கு உன் கைய என்னோட கையால இறுக்க பிடிச்சுக்கணும்" எனும் போதே. என் கைகளை இறுக்க பிடித்து "அது ஏன் இன்னொரு நாளைக்கு" என்றபடி என்னை பார்த்து மென்மையாய் சிரித்தாள். அருவியின் ஓலம் என் மனதிற்குள் பேரொலியாய் ஒலித்தது. 

சட்டென்று எழுந்தேன். நினைவில் மூழ்கி விட்டால் நேரம் போவது தெரியாது. 90மில்லி தான் முடிந்திருந்தது. அடுத்த மில்லியை ஊற்றி விட்டு என் கல்யாண வீடியோவை டிவியில் ஓட விட்டேன். நானும் அவளும் ஒல்லியாய் இருந்தோம். தாலி கட்டும் நேரம் என் கைகள் நடுங்கியது. கட்டிய உடன் சுற்றி இருப்பவரை மறந்து அவள் நெற்றியில் முத்தமிட்டேன். பால்யம் எப்படி ஏங்க வைக்குமோ, அதே போல் என்னை ஏங்க வைக்கும் தருணங்களில் இதுவும் ஒன்று, மற்றொன்று மீராவை என் கைகளில் நான் முதன்முறை வாங்கிய தருணம். யாரிடம் கூறினாலும் நம்பவில்லை,  என் மீரா அன்று என்னை பார்த்து புன்முறுவல் கொண்டாள்.

வேகமாய் அடுத்த மில்லியை ஊற்றி முடித்துக்கொண்டு, படுக்கைக்கு சென்றேன். அவள் என்னோட இருந்த நாள் வரை குடித்து விட்டு சாப்பிடாமல் என்னை உறங்க விட்டதில்லை. என்னை விட்டு பிரிந்து இன்றோடு ஆறே முக்கால் வருடம் ஆகி விட்டது. அப்போது மீராக்கு ஆறு வயது,  என்னவென்று அறியாத வயதில் அவளுக்கு நான் கொடுத்த பெரும் துயரம் அது. ஏன் எங்களுக்குள் அப்படியொரு சண்டை. மீராவின் நான்கு வயது முதல், ஆறு வயது வரை. முழுதாய் இரண்டு வருடம் மகிழ்ச்சியாக நினைத்து பார்க்க ஒரு நாள் கூடவா இல்லை. ஏன் சண்டை, எதற்கு என்ற காரணமும் இல்லை. அவளை நான் ஏன் பிரிய வேண்டும்.

மிக தைரியமான பெண் அல்லவா சகி,  எதற்கு அவளை வெறுத்தேன். எனக்குள் எழும் பல குழப்பங்களுக்கு சரியான பதிலை அவள் அளித்ததா? இல்லை சில நேரங்களில் என்னை மிஞ்சிய அவளின் முதிர்ச்சியா?  எங்கே அவளிடம் நான் கீழிறங்கி போக வேண்டும் என்ற ஆணின் பொறாமையா?  தாழ்வுணர்ச்சியா?  இதன் விடை எது. அவளை வேலைக்கு செல்லாதே எனுமளவுக்கு நான் ஏன் மாறினேன். மொத்தமாய் எது என்னை மாற்றியது. வேலையில் அவளின் சம்பளம் இல்லை அவளின் முன்னேற்றமா?  அவள் என்னவள் அல்லவா?  இருப்பினும் ஏன் இத்தனையும் வேகமாய் கடந்தது. வாழ்வின் என் பெரும்சுமையை குறைத்தது தான் இவள் செய்த தவறா?  இல்லை என்னை முந்தி செல்லும் அவளின் திறமையா?  எதுவாயினும் கடந்து போன, நான் இறங்கி இருக்க வேண்டிய தருணங்களை  முற்றிலுமாய் இழந்துவிட்டேன், அதைவிட தவிர்த்து விட்டேன் என்பதே சரியாய் இருக்கும்.

பிரியும் தருணம் கூட என்னிடம் உடைந்து அழுதாளே, குழந்தைக்காக இதை நாம் ஏன் மறுமுறை சிந்திக்க கூடாது என,  எத்தனை நாட்கள் நான் வருவேன் என்று  காத்திருந்து திரும்பி சென்றிருப்பாள்.நான் விரும்பியது இதுதானோ என்னிடம் அவள் தோற்க வேண்டும். இதையெல்லாம் இன்று யோசிக்கும் நான், அன்று அம்மனநிலையிலே இல்லை. 

மீராவுக்கு ஏழு வயது தொடங்கிய நேரம். அவள் இரண்டாவது திருமணம் பற்றி என்னிடம் பேசி முடிவெடுக்க வந்தாள். நான் அவளின் எண்ணங்களை சொல்லி முடிக்கும் வரை தலையை நிமிர்ந்து பார்க்கவில்லை. கடைசியாய் எதாவது சொல்ல விரும்புகிறாயா எனும் போது,  வாரத்திற்கு இரண்டு நாள் மீரா என்னோடு வர வேண்டும் எனும் போது, சரி என தீர்க்கமாய் சொல்லி வேகமாய் நடந்து சென்றாள்.

நான் அடுத்த வார இறுதி மீராவை அழைத்து செல்ல அவளின் வீட்டு முன் ஆட்டோவில் இருந்து இறங்கினேன். அவனும் அவளோடு வந்தான். என்னை பார்த்து புன்னகையுடன் நலம் விசாரித்தான். மீராவின் ஒவ்வொரு பிறந்த நாளுக்கு மட்டும் அவள் வீட்டுக்கு செல்வது வழக்கம். நாட்கள் வேகமாய் செல்ல, இன்று எனக்கு ஒரு நல்ல தோழியை போல  என்னுடன் பயணிக்கிறாள். அதுவும் அவளாக முன் வந்து என்னிடம் கூறியது. என் மனதில் இன்றைக்கும் இவளை தவிர பெண்ணொருத்தி இல்லை.

 நினைவுகள் ஒவ்வொன்றும் உறங்க விடவில்லை. ஒரு வழியாய் உறங்கி போனேன். காலை எழுந்த போது கைபேசியில் இரண்டு விடுபட்ட அழைப்புகள் மீராவோடது. அவளை விட்டு பிரிந்த நாட்களில் எனக்கு பெரிதும் துணையாய் இருந்தது புத்தகங்களே. இன்னொன்று ராஜா. என் எல்லா மனநிலைகளுக்கும் அவரின் இசை ஏதாவது ஒன்று கூடவே பயணிக்கும். புத்தகங்கள்  என் மகளோடு அவளின் அன்னையை தவிர்த்து பேச பெரிதும் உதவியது. மீராவுக்கு குறும்செய்தி அனுப்பி, இதோ அவளுக்காக நான் புதிதாய் வாங்கிய புத்தகங்களை என் பையில் நிரப்பி குளிக்க சென்றேன். வழக்கமான உணவகத்தில் மூன்று இட்லிகளை விழுங்கி அவள் வீட்டுக்கு சென்றேன்.

எப்பொழுதும் செய்வது தானே அவளின் வாசல் கதவருகே ஹார்ன் இருமுறை அழுத்தினேன். இந்த ஊரிலும் மழை பெய்யும் நேரம் முடிவு செய்ய இயலாது. சிறிய சாரல் பொழிய ஆரம்பித்தது. மீரா எனக்காக வெளியே காத்திருந்தாள். அவள் பின் இருக்கையில் ஏறி வண்டி சிறிது தூரம் சென்று இருக்கும். சகியின் குரல் பின்னால் கேட்டது.

"மீரா, ஒரு நிமிஷம் குடை எடுத்திட்டு வரேன். நில்லுங்க"

வண்டியை ஓரம் கட்டினேன்,  அவள் ஓடி வந்தாள். கையில் குடை. சாரலின் ஒரு துளி அவளின் ஒற்றை புருவத்தில்  வைரம் போல மின்னியது.

"பாத்து போங்க, மழைல நனையாதீங்க" என்றாள்.

சரி என்று தலையை ஆட்டி கிளம்பினோம். மீரா கேட்டாள். 

"போன்ல நல்லாதானே பேசுறீங்க, அப்புறம் ஏன் நேர்ல அம்மாட்ட பேச மாட்ரிங்க".

இதற்கான விடை எனக்கு தெரியும். ஆனால் என் மகளுக்கு அது தெரிந்து ஒருவேளை என்னை வெறுத்து விடுவாளோ என எண்ணி வேறு விஷயங்கள் பேசி அவளை மாற்றினேன். நான் ஆண் என்றதே, பெண் எனக்கு கீழே எனும் சராசரி ஆணின் மனநிலை அன்று. இன்றோ என்னுடன் பின் இருக்கையில் என் தோளை இறுக்கி பிடித்து இருக்கும் மீரா என்னை மாற்றுகிறாள். ஏன் இதே நான் சகியின் இறுக்கத்தில் மாறவில்லை. மகளுக்கும் மனைவிக்கும் ஆண் மனதின் வேறுபாடு தான் என்னவோ.

 சகியின் அன்பு பரிசுத்தமானது,  ஆண் எனும் இறுமாப்பே அன்பு எனும் அடை மழையில் என்னை முழுதாய் நனைக்காத குடையாய் மறைத்து விட்டது. ஆம் மழை பெய்தும் நனையாத குடை நான். 

நான் மணியன் சகுந்தலா. வயது முப்பத்தேழு.






Friday 22 November 2019

ஐரீன்


ஒருவரின் மேல் உருவாகும்  பிரியம் இந்தந்த காரணிகளில் பிறக்க வேண்டும் என்ற நிர்பந்தம் ஏதுமில்லையே? அவளை கண்ட முதல் தருணம் இன்னும் ஏன் நினைவுகளை விட்டு விலகவில்லை.  நான் அதனை போகாது தடுத்து அடைத்து வைத்துள்ளேனா?  எதுவாயினும் அது என்னுள் உண்டாக்கும் குதூகலமும், சந்தோச கொந்தளிப்பும் எனக்கானவை.

சில நினைவுகள் கனவுகளை போல, காலை விடிந்ததும் கலைந்து விடுவதை போல, சட்டென்று கடந்து போகும். எந்நேரமும் நம்முள் அழுத்தி வைக்கப்பட்டு நம்மோடு பயணிக்கும். சிலரும் அப்படித்தான், பேருந்திலோ, இரயிலிலோ நம்மோடு பயணிக்கும் பயணியை போல மணி நேரங்களிலோ, நாட்கணக்கிலோ நமக்கே தெரியாமல் நம்மோடு பயணிப்பார்கள். அப்படிதான் அன்றைய நாள் பணி நிமித்தமாய் சந்தித்த நபர் தன்னை அறிமுகப்படுத்தும் போது "ஐரீன்" என்ற பெயரை கூறினார்.

எட்டாம் வகுப்பில் நுழைந்த வருடம்,  இன்னும் ஓர் வருடம் காத்திருக்க வேண்டும் முழுகால் சட்டை அணிய!,  ஒரே பள்ளியில் படித்த ஊர்  நண்பர்கள்.  அதுவும் என் இருக்கையை, உணவை, திருட்டு பீடியை பகிரும் நண்பனும் கூடவே.  பள்ளிக்கு செல்வதும், வீடு திரும்புவதும் அவனோடு.  ஐந்து பைசாக்கு கிடைக்கும் பாக்கு மிட்டாயும், விக்ஸ் மிட்டாயும் வாங்கி சட்டைப்பையில் நிறைத்து சாப்பிட்டுக்கொண்டே நடப்போம்.  பள்ளி விட்டதும் டியூசன் பின் விளையாட்டு என கவலைகள் இல்லா வாழ்க்கை,  அதிகபட்ச ஆசை பாய் கடையில் வாரம் ஒரு நாள் இரவுணவுக்கு பரோட்டா. வார இறுதிக்கு காத்திருப்போம்.பம்பரம், கலச்சி, ஆவியம் மணியாவியம் என விளையாட்டுகள் நீண்டுகொண்டே போகும். ஆகாரம் தேவையில்லை. 

ஒரு முன்மதிய நேரம், நாங்கள் தெருவின் நடுவே  விளையாடிக்கொண்டிருந்தோம்.  தெருமுனையில் ஆட்டோ ஒன்று வந்தது, உள்ளேயிருந்து முப்பத்தைந்து வயது இருக்கும் பெண் ஒருவர் இறங்கினார்.  அவள் பின் ஐந்து ஆறு வயதிருக்கும் சின்ன பெண்ணொருத்தி, தொடர்ந்து இவளும் இறங்கினாள். பாவாடை சட்டை அணிந்திருந்தாள், கிறிஸ்தவர்கள் போல பொட்டு, நகை எதுவும் இல்லை. எங்களை கடந்து பூட்டி கிடந்த சுப்பிரமணி வீட்டை திறந்து உள்ளே சென்றனர். 

என்னை இல்லை இல்லை எங்களை கடந்து செல்லும் போது, அவளின் தலை குனிந்தே இருந்தது.  எனக்குள் ஒருவித பதட்டம், நான் இதுவரையில் உணராதது.  அவள் போய் வீட்டின் உள் நுழையும் வரை. கண் சிமிட்டவில்லை அவளை நோக்கி இருந்த விழிகளை மீட்டு இயல்பு நிலைக்கு திரும்ப சில வினாடி நேரம் பிடித்தது. 

பின்னர் கடந்த ஒவ்வொரு காலை மாலை வேலையும் அவள் வெளியே வருவது பள்ளிக்கு செல்லவும், டியூசன் செல்ல மட்டுமே.  நகரின் பெரிய கிறிஸ்தவ பள்ளியில் படித்தாள். ஞாயிறு அதிகாலையிலே தேவாலயம் செல்வாள், அதற்காகவே அத்துணை வருடம் இல்லாமல் ஞாயிறு சூரியன் விடிவதை காண நேர்ந்தது.  

எப்படியோ என் நண்பனுக்கும் என் புதிய மாற்றம் உணர்ந்தது.  அதுவும் நன்மைக்குத்தான்.  ஒரு மதிய நேரம் எப்போதும் போல இல்லாமல் எங்கள் தெரு பெண்கள் மட்டும் அவர்கள் வீட்டுக்குள் நுழைந்து பேசி சிரித்தபடி வெளியே வந்தார்கள்.  என் அம்மையும் தான். 

"அம்மா என்னாச்சு அங்க, ஏன் எல்லாரும் போறீங்க"

"உனக்கு எதுக்குல அதுலாம், பெரிய மனுஷன் ஆயிட்டியோ"

"சொல்லும்மா என்னாச்சு"

"அது மேரியம்மா மூத்த பொண்ணு இருக்குல்ல அவ பெரிய மனுஷி ஆயிட்டா"

எனக்கும் அக்கா, பெரியம்மாவின் மகள் இருப்பதால் அதன் அர்த்தம் புரிந்தது.  "சரி அவ பேரு என்னம்மா".  என் அம்மை என்னை வித்தியாசமாய் முறைத்தாள், பின் "ஐரீன்" என்றாள். 

"ஐரீன்", முதல் முறை அவள் பெயரை என் அம்மையின் வாயாலே கேட்டேன். பெரியவளாய் ஆன அடுத்த நாள்,  கிறிஸ்தவர் என்றாலும் தலைக்கு தண்ணீர் ஊற்றும் சடங்கு கழிக்க முடிவு செய்தனர். எனக்குள் ஒரு கேள்வி இருந்தது. "அவளின் அப்பா எங்கே". மனதிற்குள் அழுத்தி வைக்க முயன்றும் அம்மையிடம் கேட்டு விட்டேன்.

"முத்து மாறி ரெண்டு பொம்பளை பிள்ளைகள விட்டுட்டு சண்டாள பாவி வேற எவ கூடையோ போய்ட்டான். எனக்கு மட்டும் அப்டி ஒருத்தன் வந்திருக்கணும் சங்குல சவுட்டி இருந்த நாள் போதும்னு என் தாலிய அறுத்திருப்பேன்". அம்மை சொன்னதும் எனக்குள் அவள் மேல் இன்னும் பிரியம் கூடியது.

அம்மை மேலும் தொடர்ந்தாள் "அந்த அம்மாதான் வலை கம்பெனில வேல பாத்து ரெண்டு பிள்ளைகளையும் வழக்குது,  அவங்க அப்பன் குடிகார பய போல, அப்பப்போ இங்க வந்து தொட்டிப்பய குடிக்க ரூவா கேப்பானா, பாவம் மூணும்".

மேலும் சங்கடம் ஆனா மனநிலை,  நியாபகம் இருக்கிறது. யாரோ ஒருவன் அவள்  வீட்டு முன் நின்று சண்டையிட்டு இருந்தான். தெரு மக்கள் தான் தலையிட்டு தீர்த்து வைத்தனர்.அவன் தான் அப்பனாய் இருக்க வேண்டும். குடி தான் எல்லாம் என்றால்,  எதற்கு குழந்தை பெற்று கொள்கிறார்களோ. 

தலைக்கு தண்ணீர் ஊற்றிய நாள் தெருவில் உள்ள பெண்கள் எல்லாம் அவள் வீட்டில் தான் இருந்தார்கள். வெளியே கோவில் நடை பக்கத்தில் பாய் விரித்து இட்லி, சாம்பார்,  ரசவடை, கேசரி என பந்தி போய் கொண்டிருந்தது. எனக்கு அவளை பார்க்க வேண்டும், முதல் முறையாய் தாவணி கட்டிய அவளை காண வேண்டும். 

சிறிய வீடு அது, அவளை சுற்றி தோழிகளாய் இருக்க வேண்டும். அவளை மறைத்து நின்றிருந்தனர். எவ்வளோவோ எட்டியும் அவள் நெட்டி சுட்டியை தாண்டி பார்க்க முடியவில்லை. ஒருவழியாய் அவளின் முகம் தெரிந்தது. பெரிய சாந்து பொட்டு, அவளின் சாதாரண முகம் அன்று பவுடர் அதிகமாய் தெரிந்தது. கூட்டத்தில் யாரோ என்னை தள்ளி சாப்பாடு பந்தி அருகே அழைத்து சென்றனர். ஆனால் அன்றைய இரவு உறக்கம் இல்லை, அவளின் பொட்டு வைத்த அந்த முகம் எண்ணங்களை நிறைத்தபடி இருந்தது.

எத்தனை ஞாயிறுகள் கடந்து இருக்குமோ, ஒவ்வொரு முறையும் அவளிடம் பேச முயற்சி செய்தும் இயலவில்லை. அவளின் அருகில் நிற்க கூட தைரியம் இல்லை. அவளின் முகத்தை எட்டி பார்த்த அத்தருணம் மட்டுமே, நினைவில் எஞ்சி இருந்தது. 

அரையாண்டு பரீட்சை நேரம்,  அடுத்த நாள் கணித தேர்வு டியூசன் செல்ல வீட்டில் இருந்து வெளியே வந்தேன். அவளின் வீட்டு முன் காவல் அதிகாரி சில பேர் நின்று இருந்தனர். புரியாமல் விழித்தபடி அங்கு சென்றேன். அவளை அழுதபடி கண்டேன், அவள் அம்மா அழவில்லை. என்ன  என்று விசாரித்து முடிப்பதற்குள் அவள் குடும்பம் அங்கிருந்து நகர்ந்தது. தெரு முனையில் ஆட்டோ வந்தது,  அதற்குள் அவளின் அம்மா, தங்கை,  அவளும் ஏறினாள். ஆட்டோ அங்கிருந்து நகர ஆரம்பிக்க வெளியில் தலையை எட்டி என்னை பார்த்தாள், நான் அறிந்து அன்று தான் அவள் என்னை பார்த்தாள். ஆட்டோ அங்கிருந்து சென்றது.

அடுத்த நாள் அவள் வீட்டு சாமான்களை மாற்றி கொண்டிருந்தனர். என்னவென்று புரியவில்லை, ஏன் என்ன நடக்கிறது என புலம்பி நிற்கும் போதே என் அம்மை முன்னாடி நின்று கொண்டிருந்தாள்.

"மேரிக்க மாப்ள, குடிகார பய ரயில் ல விழுந்துட்டானாம்,  சவம் செத்தும் கெடுக்கான், அவங்க அம்மா மேக்க முளகுமூடு அங்கேயே போறாங்களாம்".

எனக்கு என்னவென்று அறிந்து கொள்ளும் வயது இல்லை, இருப்பினும் என் கண்கள் கலங்கி இருந்தது. என் மனதில் ஒரு பெயர் மட்டும் பதிந்தது "ஐரீன்". இதோ என் முன்னால் இன்னொரு ஐரீன்.  இது அவளாக இருக்குமோ!.

Wednesday 20 November 2019

வெறுப்பின் சம்பாத்தியம்



கடந்த முறை தெருக்குழாயில் நடந்ததுபோல் இன்றைக்கும் ஒரு பெகளம் இருக்கிறது என்பது பெரும்பான்மை தெருவாசிகளின் எண்ணம்.  அதிலும் ஆண்களுக்கு அதில் அலாதி ஆர்வம், பெண்களின் சண்டையை பார்ப்பதில் அப்படி என்ன போதை வஸ்தோ ஜன்னல் வழி எட்டி பார்ப்பது, கதவிடுக்கு வழியே காண்பது என பல கள்ளத்தனம்.  கடைத்தெரு கடைகளுக்கு தண்ணீர் எடுக்கும் சிரட்டை இசக்கி மாமாக்கு இதில் தவளை வேடம். ஏன் இரண்டு பக்கமும் மாமாவின் நியாயம் வேண்டும், பாவம் அவர் என்ன செய்வார், வீட்டில் அவரும் புருஷன் தானே?  இந்த பெண்களை எப்படி தான் வழிக்கு கொண்டு வர?  ஆமாம் ஏன் இவர்க்கு சிரட்டை எனும் முன்மொழி, அதுவா சிறுவயதில் கோயில் முன் உடைபடும் விடல் தேங்காயை  பொறுக்குவதில் வல்லவராம். குடும்ப பெயராய் தொடர்கிறது,  இவர் பையனின் பெயர் சிரட்டை மணி. 

கமலத்தின் வீட்டு வாசல் திறந்து கிடந்தது, அவளின் அம்மா வெளி திண்ணையில் கால் நீட்டி அமர்ந்திருந்தாள். அவளின் கண்,  எதிர் வீட்டு ருக்மணியை எதிர்நோக்கி காத்திருக்கிறது போல! விழி மூடாமல் பார்த்திருந்தாள். ருக்கு வீட்டு கதவு திறப்பது போல தெரிந்தது. கிழவி கொஞ்சம் உஷாரானாள், கதவை திறந்து இரண்டு குடத்துடன் ருக்கு குழாயடிக்கு நடந்தாள்.சொல்லி வைத்தார் போலும் கிழவியும் இரண்டு குடத்தை எடுத்துக்கொண்டு அவள் பின்னாலே குழாயடிக்கு நடந்தாள்.

கமலம், வயது நாற்பதை நெருங்கிருக்கும். இங்கே உள்ளுக்குள் எழும் ஒரு கேள்வி. அவள் திருமணம் ஆனவளா?  ஒரு ஆண் பெண்ணை காணும் போதெல்லாம் அவளை பற்றி அறிந்து கொள்ள துடிக்கும் முதல் கேள்வி திருமணம் ஆனவளா? திருமணம் ஆகிவிட்ட பெண்ணிற்கோ ஆகாதவளை கண்டால் இளக்காரம். என்ன குணமோ! இதில் என்ன குற்றமோ!. கமலத்திற்கு இங்கே திருமணம் தேவையில்லை. அவளின் குடும்பம் இந்த ஊருக்கு குடிபெயர்ந்து இரண்டு தலைமுறை ஆயாச்சு. மேற்கே மலையாள எல்லையில் இருந்து வந்தவர்கள், பேச்சில் இன்னும் மலையாள நெடி உண்டு. அவளின் அம்மா இன்னும் முண்டு கொண்டுதான் மேலே மறைக்கிறாள்.

கமலத்திற்கு மற்றவரை போல தோளில் நிறமிகள் சரியாய் இல்லை, இதுவே பிரச்சனை. சிறுவயதில் அங்கொன்றும் இங்கொன்றும் இருந்தது, பருவ வயதில் வெளியே நன்கு தெரிய ஆரம்பித்து விட்டது. தோழிகளின் கல்யாண வீடுகளுக்கு ஆரம்பத்தில் சென்றாள், இந்த ஒழுக்கசீர் சமூகம் தான் விடுமா? காது பட பல பேசி நெடுநாள் வீட்டிலே அடைந்து கிடந்தாள். கிழவி தான் பாவம் பெண்ணை எண்ணி பல நாள் வருத்தப்பட்டாள். என்ன நடந்ததோ, கமலம் மீண்டும் வெளியே நடமாட ஆரம்பித்தாள். அவளின் காது பட யாரவது அவளின் புறம் பற்றி பேசினால், அர்ச்சனை நெடுநேரம் நீடிக்கும். ஆண்களின் காது கூட கூசும்,  பின்னே இந்த அர்ச்சனை வார்த்தைகள் ஆணிற்குரியது எனும் எண்ணமே,  இவள் பேசும் போது பொறுக்க முடியவில்லை.

எறும்பு கூட்டம் முன்னே செல்லும் ஒற்றை எறும்பை தொடர்ந்தே செல்லுமாம்,  இங்கே அந்த ஒற்றை எறும்பு ருக்கு. ஊர் வடக்கே குறத்தியறை, இங்கே வாக்கப்பட்டு வந்தவள். கட்டியவன் அணஞ்சபெருமாள். டவுணில் ஆட்டோ ஓட்டுகிறான். மனைவியின் சொல்கேட்கும் மணாளன். ருக்குவுக்கு இத்தெருவில் குடியேறிய நாள் முதல் என்ன முன்பகையோ கமலம் மேல், முன்ஜென்ம கோபமோ, கிடைக்கும் இடங்களிலெல்லாம் அவளை பற்றி ஒன்றுக்கு இரண்டாய் புறணி பேசுகிறாள்.

கமலத்திற்கு வாழ்வதற்கு என்ன வழி? வீட்டில் மாவிரைக்கும் இயந்திரம் உண்டு. ஆட்டுக்கல்லை கொண்டு இன்னும் யார் அரைத்து கொண்டிருப்பார். தெருமக்களும் கடைத்தெரு உணவகங்களும் இட்லிக்கும், ஆப்பத்திற்கும் மாவு இங்கே அரைப்பதுண்டு. அளவுக்கேற்ற படி காசு வாங்கிக்கொள்வாள்.
அம்மைக்கு கிடைக்கும் முதியோர் உதவித்தொகையும், சேர்த்த பணத்தையும் வட்டிக்கும் விட்டு வந்தாள். 

அன்றைய நாள், சிரட்டை மாமா குழாயடியில் கடைகளுக்கு தண்ணீர் பிடித்துக்கொண்டு இருந்தார். பொதுவாய் குழாயடியில் ஆட்கள் குறைவாய் இருந்தால் மாமாவுக்கு சந்தோசம் தாளாது. பின்னே விரைவாய் வேலையை முடித்து சாராயம் குடிக்க சென்று விடலாம், ஆனால் அவர் நேரம் ருக்கு இரண்டு குடத்தை கொண்டு குழாயருகே வைத்தாள். பின்னாலே கிழவியும் வந்தாள். 

"இசக்கி அண்ணே, காலைல இருந்து தண்ணி பிடிக்கியீலே, கொஞ்சம் வழி விடுவும்" என்றாள் ருக்கு.

"தாயி கொஞ்சம் பொறுக்கணும், இன்னும் மூணு குடத்தோட நா போயிருவேன்" இது சிரட்டை மாமா.

"சரி" என்று அமைதியானாள் ருக்கு. சிரட்டை மாமாவுக்கு ஒன்றும் விளங்கவில்லை. கிழவி ஏன் அமைதியாக நிற்கிறாள்.இந்நேரம் இவள் ஏச்சு கேட்டிருக்க வேண்டுமே! சரி வந்த வகை லாபம் என்று கையில் இருந்த குடங்களை நிறைத்து நடையை காட்டினார். ருக்கு குடத்தை குழாயடியில் வைத்தாள், எதிர்நின்ற கிழவியை ஏற இறங்க பாத்தவளுக்கு மனதிற்குள் சலசலப்பு. கிழவி வழக்கத்திற்கு மாறான மனநிலையில் இருக்கிறாள் என்று முகத்திலே தெரிந்தது.

கிழவி ஆரம்பித்தாள் "எம்மா உன்கிட்ட பேசணும்". ருக்குவுக்கு ஏமாற்றமே, தோதுவான வார்த்தைகளை தேன் போல நாவில் தடவியவளுக்கு அம்மா என்று அழைத்தது அவளின் எண்ண ஓட்டத்தை கலைத்தது.

"நேத்து மேலாங்கோட்டுக்கு போனேன் சாமிட்ட குறி கேக்க. எங்க மேல பொம்பள சாபம் இருக்காம்,  இங்க சாபம் உடுற அளவுக்கு நீதான்மா இருக்க. அதான் என் மவளுக்கு இப்டி உடம்பு ல வாரி போட்ருக்குமாம்,  சாமி சொல்லிச்சு".

ருக்குவுக்கு மனதிற்குள் சிறிய குதூகலம், தன்னுடைய சாபத்தின் வீரியம் அவளை மகிழச்செய்தது. "எம்மா சாமி, உங்க மேல நா என்ன மண்ணாங்கட்டிக்கு சாபம் போடணும். ஊரே போடுதே.எதுக்கு எங்கிட்ட வந்து நிக்க".

"இல்லமா சாமி இன்னொன்னும் சொல்லிச்சு,    எம்மவ வாயால சபிச்சவ போட்ட சாபம்னு சொல்லிச்சு மா".

ருக்குவுக்கு இது அதிர்ச்சி இல்லை,  "உன் மவ ஒழுங்கு, ஊரேயே ஏசுகா. அவளுக்கு என்ன நோயோ,  எங்க கிட்ட மல்லுக்கு நிக்கா." என தொடரும் போதே, கிழவி இடைமறித்தாள். "போதுமா, இன்னும் சபிக்கண்டாம். நேத்து மத்தியானம் சாப்பிட்டதும் வாந்தி எடுத்தா கொஞ்சம் இரத்தமும் வந்துச்சு. இது மூணாவது நாலாவதோ வாட்டி. ஆசான் டா போனே. கொஞ்சம் நல்ல பாத்துகிட்டு நோயை இழுத்து வச்சிருக்கானு ஏசினாரு. மருந்த தினமும் திங்க சொன்னாரு. நா மனசு கேக்காமா மேலாங்கோடு போனது. அங்க சாமி இத சொல்லிச்சு. இப்போல்லாம் நாம பண்ற எல்லாத்துக்கும் இந்த ஜென்மத்துலே சாமி பாவகணக்கு எழுதிருமாம். நேத்துல இருந்து அவ வெளியவே வருல பாத்தியா."

ருக்குவுக்கு கலக்கம் உண்டானது, முதல் முறையாய் கமலம் மேல் பரிதாபம் உண்டானது கிழவியோடு கமலம் வீட்டுக்கு சென்றாள். தெரு மக்களுக்கு பெரும் அதிர்ச்சி ஒருபக்கம், குழப்பம் ஒரு பக்கம். அரை மணிநேரம் வீட்டுக்குள் இருந்தவள், வெளியே வந்த போது கண் கலங்கி இருந்தது. தன் வீட்டுக்குள் நுழைந்தவள்,  வீட்டு பூஜை அறையில் மாட்டி இருந்த அவள் அப்பாவின் படத்தின் முன் கைகூப்பி நின்றிந்தாள்.

அவள் மனதிற்குள் அங்கும் இங்கும் எங்கும் நிற்காது எண்ணங்கள் சலசலத்தபடி ஓடி கொண்டிருந்தது. அவளின் ஆழ்மனத்திற்குள் ஒரே கேள்வி திரும்ப திரும்ப எதிர் ஒலித்தது. "நாம செஞ்சு பாவத்துக்கு, இந்த ஜென்மத்திலே பாவகணக்கு உண்டுன்னா. அதுனால தானோ என் வயித்துல எதுமே ஜனிக்கல".


Tuesday 19 November 2019

ராஜு தாத்தா 2: சுடலை





புதிய பாலம் கட்டியதும், பழைய பாலம் இருந்த சுவடு இல்லாமல் போனது. இருப்பினும் கட்டுமான கருங்கற்கள் இடித்து அப்படியே பழையாற்றின் மீது கொட்டி விடப்பட்டு இருந்தது. மேல்நிற்கும் பாலத்தின் அடியில் இன்னும் தலை குனிந்து கீழ்பாலம் நிற்கிறது.  ஊரே திருவிழா போல இருந்தது தெற்கே சுசீந்திரம், மேற்கே தக்கலை, வடக்கே கடுக்கரை வரை ஆட்கள் மாட்டுவண்டி பூட்டி வந்து பார்த்து சென்றனர். அலங்காரமும், வாழைமர முகப்பும் இதுவரை ஊர் மக்கள் கண்டிராத பிரமாண்டமும் புதிதாய் இருந்தது  

          சுடலை அங்கிருந்த ஆலமூட்டின் ஓரம் ஒதுங்கி எல்லாவற்றையும் கவனித்து கொண்டிருந்தான். தூரத்தில் கீழத்தெரு சுப்ரமணியம்பிள்ளை குடும்ப  பொம்பளைகள் வருவது தெரிந்தது. கையில் இருந்த பீடியை அணைத்து, தலையில் கட்டியிருந்த சிவப்பு தோர்த்தை மடக்கி கையில் வைத்து கொண்டான். அவனுக்கு தெரியும் சிவகாமியும் வருவாள் என்று. எட்டி பார்த்தான் குளித்து முடித்து ஈரம் காயாமல் ஒதுக்கி கட்டிருந்த முடிக்கற்றையில் அவள் வீட்டின் வெளியே பூத்த சாமந்தி மலர்ந்து இருந்தது. மஞ்சள் பூசிய முகத்தில். நெற்றிடையே சாந்து போட்டு யாரும் காணாதவாறு குறி இருந்தது. கால் கொலுசின் சத்தம் நின்றிருந்த சுடலையின் காதில் நுழைந்தது.

சிவகாமியும் கூட்டத்தில் அவனை தான் தேடினாள். ஆற்றின் சலசலப்பும், கொட்டியிருந்த கருங்கற்களில் துணி துவைத்து அலசும் ஓசையும், பாலத்தின் மேல் கூடியிருந்த கூட்டத்தின் கூச்சலையும் தாண்டி ஒருபுறம் ஒலித்து கொண்டிருந்தது. சொந்த தாய்மாமன் மகள், இருப்பினும் நேரடியாய் அவளிடம் பேச தைரியம் இல்லை. மாமனோ வாத்தியார், ஊருக்கு நல்லது கெட்டது கூறும் பொறுப்பில் இருப்பவர். அக்காவின் மகன் எனுமளவுக்கு சுடலையின் சொந்த வாழ்க்கையில் தலையீடு அதிகம். பொறுக்க முடியாது எனும் நிலையில் மாமனோடு சிறு மனவருத்தம். லெனினும் சே வும் சுடலையின் ஆதர்ச நாயகர்கள். எங்கே புரட்சி என்று சண்டைக்காரன் ஆயிடுவானோ என்ற பதற்றம் மாமனுக்கு. பின்னே வாத்தியார் காந்திய வழி.      

சுடலையின் பக்கத்தில் நின்றிருந்த பெரியவர் பேச ஆரம்பித்தார்.

"நாடார் சரியான ஆளூடே, அனக்கம் இல்லாம காரியத்த பண்ணிருவாரு. காங்கிரஸ் இன்னும் இருக்குடே. இந்த சினிமா வசனம் எல்லா நிக்குமா", அருகில் இருந்த இளைஞன் ஆரம்பித்தான்.

"நீறு சும்மா கிடவே கிழம், இனி நாங்கதான். காங்கிரஸ்லா பண்டுவோய். நம்மல ஏமாத்துகணுவ.எங்க ஆளுதான் இனி எல்லாம்."

பெரியவருக்கோ பொறுக்க முடியவில்லை. தன்னை கிழம் என்றதை விட, காங்கிரஸின் மறுப்பு அவரை கொந்தளிக்க வைத்தது. விடாமல் ஆரம்பித்தார்.

"மக்கா, புது பொண்டாட்டி கதையா இருக்கும். அப்புறம் தெரியும் இதுக்கு அம்மையே கொள்ளாம்னு"

பெரியவர் பேசுவது காதில் விழுந்தும், பதில் சொல்லாமல் இளைஞர் கூட்டம் நகர்ந்து சென்றது. நடப்பதை எல்லாம் கவனிக்கும் சுடலையின் கண்கள் என்னவோ சிவகாமியை நோக்கியே இருந்தது. சிறுவயதில் இதே பழையாற்றின் கரைக்கு வீட்டுக்கு தெரியாமல் அவளோடு வந்து போனது, பூவரசம் இலையில் அவளுக்காக பீப்பீ செய்து கொடுத்தது. அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தது. அருகில் இருந்த கிழவருக்கு மனதில் இருப்பதை யாரிடமாவது கொட்டி விட வேண்டும். சுடலையிடம்,

"மக்கா நீ நடராஜ வாத்தியார் மவன்தானே", அவனும் ஆமாம் என்பது போல் தலையசைத்தான்.

"பாத்தியா மக்ளே, சினிமா பாத்து சீரழியுற கூட்டத்த. நீ சொல்லு மக்கா நாடார் நினைக்கலான. இந்த பாலம் இங்கன வந்திருக்குமா. ஐப்பசி கார்த்திகைக்கு நீந்திதான் திருநவேலிக்கு போவணும், மாமா சொல்லது சரிதானே" சுடலைக்கு இவரிடம் இருந்து தப்பிக்க வேண்டும். ஆனால் சிவகாமி நகர்ந்து இங்கே வருவது போல் இருந்தது. ஆகா பெரியவர் பேசுவதை கேட்டுத்தான் ஆகவேண்டும். பெரியவர் மீண்டும் தொடர்ந்தார்.

                                   "எங்க மைனி மக கட்டி கொடுத்தது திருநவேலி. கல்யாணம் முடிஞ்சு மறுவீடுக்கு போய்ட்டு. உடன் மறுவீடு வரணும். கல்யாணத்து அன்னைக்கே நல்ல மல. மூணு செம்பு பொங்கி வச்சு. வடிச்சது எல்லாம் மிச்சம். சவத்த பொங்கி வச்சது தூர போட முடியுமா, சமயல்  தாலாக்குடி பார்ட்டி. அன்னைக்குனு பாத்து சிறுபயறு பாயசமும் பாலு பாயசமும் மணக்கு மக்கா.அந்தலா இலை அள்ளுகவனுவ கூட போய் பறக்கிங்கால் போய் கொடுத்துட்டு வந்தோம்." பெரியவர் அப்பப்போ சுடலை கவனிக்கிறானா என்பதையும் பார்த்துக்கொண்டார்.

சுடலை கவனித்துதான் ஆகவேண்டும், சிவகாமி பெரியவரின் பின்னே ஆலமரத்தின் அடியில் நின்று ஆற்றின் ஓட்டத்தையும் அதன் நடுவே எழும்பி நிற்கும் பெரிய பாலத்தின் தூண்களையும் பார்த்தவாறே ஒரு கண்ணால் சுடலையும் பார்த்துக்கொண்டாள். சுடலைக்கு அங்கிருந்து நகரக்கூடாது "அப்புறம் என்னாச்சு" என்றான் பெரியவரிடம்.

இது போதாதா பெரியவருக்கு "நா சொன்னேலா, உடன் மறுவீடு. அங்க திருநவேலில இருந்து புறப்படும் போதே மல. பஸ்ல எறியாச்சு. தேராப்பூர் தாண்டிருப்போம், என்கோடியாண்ட வேண்டிட்டே தான் வந்தேன். சரியா கீழ பாலம் முங்கி தண்ணி ஓடுகு. மாப்பிள்ளையும் பொண்ணையும் என்ன செய்ய, நம்ம மாமா ஒருத்தர் கோச்சபிளாரத்துல இருந்தாரு, நா நடந்து போயி மாட்டுவண்டி எடுத்துட்டு வந்து கொண்டு போயி விட்டேன்". பெரியவர் பேசிக்கொண்டே தலைமாட்டில் காத்திருந்த பீடிக்கட்டில் இருந்த பீடி ஒன்றை எடுத்து பற்ற வைத்தார்.நன்றாய் உள்ளிழுத்து புகையை ஊதியவுடன். மறுபடியும் ஆரம்பித்தார்.

"இப்போ சொல்லு மக்கா, எத்தன வருஷம் மழை பெஞ்சி ஒதுங்கி. இங்கயும் அங்கேயும் போகாம இருந்திருப்போம். இப்போ உள்ள பயல்களுக்கு இதெல்லாம் புரியுமா. பக்தவச்சலம் தொறந்த பாலம். நாடார் மாதிரி இன்னொருத்தர் வர முடியுமா, காங்கிரஸ்லா." என்றபடி சுடலையை பார்த்து சிறுபுன்னகையுடன் விடை பெற்றுக்கொண்டார்.                                      

சிவகாமியின் அம்மா வேலம்மை சுடலை அருகே வந்து "அந்த பெரியவர்ட்ட பேசிட்டு இருந்தய, அதான் ஒதுங்கி நின்னோம். நீ மாமாட்ட வந்து பேசேன். நம்ம மாமாதானே, சரசுவதி தியேட்டர்ல மேனேஜர் வேல இருக்குனு சொன்னாரு. அவரு பேசினா உனக்கு கண்டிப்பா கிடைக்கும்". வேலம்மையின் பின் நின்று சிவகாமி சரி என்று சொல்லுமாறு தலையாட்டினாள். சுடலைக்கு மறுக்கவும் முடியாது. அவர் முன் போய் நின்று பேசுவது அவ்வளவு கடினம் இல்லை. இருப்பினும் அன்று அவர் முன் நடந்த விதம் அவரை காயப்படுத்திருக்கும். அந்த குற்ற உணர்ச்சியே அவனை தடுக்கிறது. 

"இல்லத்தே, மாமா மூஞ்ச நேருக்கு பாக்க சங்கடமா இருக்கு" என்று தயங்கினான்.

"உங்க மாமாதானே, எதையும் மனசுல வச்சுக்காம மாமாகிட்ட.சரியோ தப்போ பேசிடு. எல்லா பிரச்சனையும் மனசுல போட்டு பூட்டி வச்சாத்தான் நெஞ்சு கனக்கும். பேசாம எல்லாம் சரி ஆயிருமா. நாளைக்கு இவள கட்டினாலும் ரெண்டு பேரும் மூஞ்ச தொங்க போட்டுட்டே அலைவீங்களா, இன்னைக்கு ராத்திரியே வீட்டுக்கு வா. அவரும் உன்ன தேடுகாரு. தினமும் வீட்டுக்கு வர பிள்ள, ரெண்டு மூணு நாலு வரலேன்னு அவரும் புலம்புகாரு".

சுடலையும் வேலம்மையும் பேசிக்கொண்டிருக்கும் போதே சுடலையின் கைகள் பின்னால் பூவரசம் இலையில் பீப்பீ செய்து கொண்டிருந்தது.  அவர்கள் விடைபெற்று நகரவே யாருக்கும் தெரியாமல் என அவன் நினைத்துக்கொண்டு சிவகாமியின் கைகளில் அதை திணித்தான்.  முன்னே சென்ற பொம்பளைகள் கூட்டத்தில் இருந்து திரும்பி பீப்பீயை வாயில் வைத்து ஊதி சிவகாமி மிதந்து போனாள். 

சுடலைக்கு ஒன்றில் மட்டும் தெளிவு இருந்தது. தன் எதிர்காலத்தில் அவனுக்கான எல்லா நிலைகளிலும் வாழ்க்கை சக்கரத்தின் அச்சாணி இவள் என்று.  எதுவும் நிலையில்லாதது.  இதில் சொந்த தாய்மாமனிடம் என்ன வீராப்பு வேண்டி கிடக்கிறது. புருஷனை இழந்து அம்மை நடுத்தெருவில் நின்ற வந்தபோது இந்த மாமன் தானே கூட நின்றான்.  தன் பிள்ளை போல என்னை பாவித்தானே, கொள்கை ரீதியாக நான் எடுத்த முடிவுக்கு ஆதிப்புள்ளி இவன் தானே.  சரி என்று முடிவெடுத்தபடி அன்று இரவே மாமனை பார்க்கவேண்டும் என முடிவெடுத்தான். 

Tuesday 12 November 2019

மாடன் நடை

                   

வழக்கமான பூசைகள் முடிந்ததும் பூசாரி மாடன் முன் படைத்த சீப்பு பழத்தில் மூன்றை தவிர, சுண்டலில் கொஞ்சம், பொரியில் கொஞ்சம் வைத்து மீதம் முழுவதும் தன் கூடைப்பையில் அடைத்து கதவை பூட்டினார். எரிந்து தேய்ந்த ஊதுபத்தியின் சாம்பல் முன் விரித்த தும்பு இலையின் மேல் கிடந்தது. மஞ்சணை, களப மணம் அறை நிறைத்திருந்தது.

 தெருமக்கள் நடை கொஞ்சம் தீர்ந்து நடுச்சாமம் ஆன பின்.  மாடன் மெதுவாய் வெளியே வந்தார், அங்கும் இங்கும் நோட்டம் இட்ட பின் யாரும் இல்லை என்றவுடன் வேல்கம்பை எடுத்துக்கொண்டு தெருவுக்கு வந்தார்.  மாடத்திக்கு சுண்டல் உப்புசத்தை உண்டாக்கி விட்டது. அவள் வராமள் மாடன் மட்டும் நடந்தார். கச்சையின் மணி சத்தம் ஜல்ஜல் என்று குலுங்கியது, அவ்வப்போது வேல்கம்பை சப்பென்று தரையில் ஊன்றி நடந்தார்.

தெருவின் நாலுமுக்கு சந்திக்கு வரும்போது ஏற்கனவே காத்துக்கொண்டிருந்த முண்டனும் நின்றான். இருவரும் பொடிநடையாய் கீழத்தெரு இசக்கியை பாத்துவிட்டு வரலாம் என்று நடந்தனர்.  ஓரிடத்தில் மாடன் சடாரெனெ நின்று விட்டார்.

"என்னவோய் நின்னுட்டியே" என்றார் முண்டன்.

"ஏலேய் இந்த முடுக்குக்குள்ள கடைசி வீட்டுக்குள்ள நல்ல பாதி வெட்டி வச்ச பனத்தடி மாதிரி ஒருத்தன் கிடக்கானான்னு பாருல"

ஏன் என்று எதிர்கேள்வி கேட்டால் மாடனுக்கு பிடிக்காது. முண்டன் மெதுவாய் உள்நுழைந்து லேகை பார்த்து வெளிவந்தான்.

"யாருவோய் ஆளு இது"

"ஆளு தண்ணிவண்டி,  சமயத்துல நம்ம நடை முன்னாடிதான் விழுந்து கிடப்பான்,  குடிச்சாதான் சவம் இப்பிடி, மத்தபடி ஆளு நல்ல குணம்டே..மட்டையாயிட்டானா? "

"நல்ல போதை தான், நாத்தம் அடிக்கு. காலு ரெண்டும் ஏனைக்கு கோணையா கிடக்கு..சரி இந்த நடுசாமத்துல எதுக்கு அவன பாக்க சொல்றியே? "

"நம்ம மேலே அவனுக்குள்ள பிரியம் சுத்தமான பசுபாலாட்டும்,  நம்ம எல்லைக்குள்ள எல்லாரும் சுகமா தூங்கணும் லா,  அதுக்குத்தானே நாம காவக்காக்குறோம்,  சமயத்துல முண்டனுக்கு எல்லாம் மறந்திருது"

"என்னவே செய்ய நம்மள தெருவுக்கு வெளிய வச்சிருக்கானுக,  விளக்கும் இல்ல. மொத்தமா இருட்டுக்குள்ள தான் கிடக்கேன். சரி காது கொடுத்து வெளிய கேட்டா? கெட்டவார்த்தை தான் விழுது. சுத்தியும் நாசமண்ணா போச்சு"

மாடனுக்கு சிரிப்பு அடக்க முடியவில்லை,  மனதிற்குள் நினைத்து கொண்டார். ஊருக்கு வெளியே இருப்பதினால் இவனுக்கு ஆணின் ரூபம் தெரிகிறது. ஊருக்குள் இருப்பதால் எனக்கு பெண்ணின் ரூபம் தெரிகிறது. ஏன் இந்த மாடன் மட்டும் ஊருக்குள். இவன் சுடுகாட்டில் வாழும் சுடலை இல்லை, ஊரோடு வாழும் விடுமாடன்.

சிலஅடி நடந்திருப்பார்கள்,  மாடனுக்கு என்ன மணம் பிடித்ததோ? சட்டென உடம்பை உலுப்பி, வேல்கம்பை வலுவாய் தரையில் ஊன்றி "ஏட்டி சிரிக்கியுள்ள வெளிய வாட்டி" என்று தெருமுனையில் மண்டி கிடந்த களத்தின் முன் நின்று கத்தினார்.

"சாமி நா எம்பாட்டுக்கு இதுக்குள்ள இருக்கேன்,  என்ன எதுக்கு கூப்டுக? " என்று எதிர் பெண்குரல் கேட்டது.

முண்டனுக்கு சங்கதி புரிந்து விட்டது. கூடவே தெரு நாய்களும் மாடனுக்கு பின் வரிசையாய் நின்று விட்டது. அதில் ஒரு வல்லுப்பட்டி குறைக்க ஆரம்பிக்க,  மாடன் வேல்கம்பை தரையில் சட்டென்று ஊன்றி ஒரு முறை முறைத்தார்.அத்தனையும் அமைதியாகி விட்டது. "பின்ன நேரம் காலம் தெரியாம கத்த வேண்டியது" முண்டன் மனதிற்குள் நினைத்து கொண்டான்.

"இங்க பாரு பொம்பள, இது நா காவல் காக்கிற எல்லை. நீ இப்போ இங்கன இருந்து வெளிய போ"

"சாமி நா எங்க போக,  இந்த களத்து முக்குல கிடந்துக்கேன், நீங்கதான் மனசு வைக்கனும்"

"இல்லமா, இது சின்ன புள்ளைக விளையாடுற இடம்மா" என்றார் முண்டன் கனிவாக.

"சாமி நானும் புள்ள பெத்தவன்தான், ஒரு தொந்தரவு செய்ய மாட்டேன்"

"சரி நீ எந்த ஊரு காரி" என்றார் மாடன்.

"கடுக்கரை சாமி"

"எட்டி நீ இடைல தூக்கு போட்டு செத்தீள்ள அந்த பொம்பளையா"

"ஆமா சாமி"

மாடனுக்கு மனசு கனத்தது, தொண்டை விக்கி "நீயாமா, செய் என்ன செய்ய இந்த மனுஷ பயக்கள, சண்டாள பயலுவ. அல்பாய்சுலா போய் சேந்துட்ட! சரி நீ இங்க கிட. எம்புள்ளைகளுக்கு துணையாட்டு இருக்கனும் சரியா?" கையில் இருந்த திருநீறை அவள் நெற்றியில் பூசி மாடன் நடந்தார்.

முண்டனுக்கு பொறுக்க முடியவில்லை "ஏணுவோய் இப்டி செஞ்சீறு, உமக்கு என்னாச்சு". "நீ சும்மா கிடல,  நீரு எப்டி சாமியாநீறு" பதிலுக்கு சொன்னார் மாடன். மேலும் கோபம் அடைந்தவர் "இவள உயிரோடு படுத்துனானுவ, இப்போ செத்துட்டா! இப்போமாச்சும் நிம்மதியா இருக்கட்டும்". முண்டன் அமைதியாய் நடந்தார்,  கீழத்தெரு இறங்கி தோப்புக்குள் நுழைந்தனர்.

இசக்கி முன் படைத்த அத்தனை படையலும் அப்படியே இருந்தது, பின்னே இசக்கி கோவக்காரி. களப, சாம்பிராணி கூட்டு வாசனை தூக்கலாகவே இருந்தது. "எம்மா இசக்கி" என்றார் மாடன். "வாணே, என்ன ஆளு இந்த பக்கம்.காத்து இந்த பக்கமா அடிச்சுதோ" என்றாள் சிரித்தபடி இசக்கி.

"ஒண்ணுமில்ல, சும்மா ஒரு எட்டு பாத்துட்டு வரலாம்தான்னு வந்தேன்".

இசக்கி, மாடன், முண்டன் என மாறி மாறி  பேச்சு நீள நேரம் நீண்டதே  தெரியவில்லை.  விடியும் நேரம் ஆனது போல,அடிவானில் வெள்ளிக்கோடாய் வெளிச்சம் மின்ன,  மாடனும் முண்டனும் இசக்கியிடம் விடை பெற்று தங்கள் இடத்திற்கு செல்ல ஆயத்தமாயினர்.

மாடன் ஆரம்பித்தார் "இவ யாருனு நினைக்க,  இந்தா முன்னாடி ஓடுது பழையாறு,  இதுல மிதந்து வந்தா, இங்க தோப்புல  ஒதுங்கி. இங்க இருக்கணுவக்கு பூச்சி, பூரான், பாம்புல இருந்து துணையா இருந்தா?  அப்புறம் நானும் கோட்டையடி மாடனும் சேந்து இவள இசக்கியா இங்கன அமத்தினோம், அதுலாம் பண்டு டேய்"

முண்டன் தலையை ஆட்டியாட்டி ஆமோதிப்பது போல கூடவே நடந்து வந்தார். நாலுமுக்கு சந்தி வந்ததும் மாடன் "இந்த கடுக்கரை காரிய கண்ணு வை, நல்லபடியா நடந்தா.அவளுக்கும் ஒரு நல்லத செஞ்சு மேக்கே அமைத்திருவோம். " என்றபடி தன் கோயிலுக்குள் நுழைந்தார்.






Saturday 9 November 2019

ராஜு தாத்தா





1
ராஜு தாத்தா, ஒடுங்கிய உருவம், கரிய பனைத்தடி போல இறுகிய உடம்பு நெருக்கிய கன்னங்கள், முன் நீண்டு நிற்கும் மேல்வாய் பல், மஞ்சள் படர்ந்த மங்கிய கண்கள், வெண்பஞ்சாய் தலை நிறைத்து நிற்கும் முடி, எதற்கெடுத்தாலும் கை தட்டி சிரிக்கும் அந்த பாவனை, கடைத்தெருவில் யாருக்கும் எதற்கும் உதவியாய் அங்கும் இங்கும் சிறுபிள்ளையாய் ஓடும் இவர்க்கு என்ன வெகுமானம் தருகிறர்கள், மகனின், பெயரனின்  வயது ஒத்த இந்த கடைத்தெரு சிறுவியாபாரிகளுக்கு இவர் என்ன உபயோகத்திற்கு, பகலிலும் மாலையிலும் கடைகளுக்கு தேநீர் விநியோகத்திற்கும், இரவு வேளைகளில் சாராயம் வாங்கி கொடுப்பதற்கும் இவர் வேண்டுமே.

வயது என்னவென்று கடைத்தெருவில் யாருக்கும் உறுதியான தகவல் இல்லை, ஒரு எழுபது இருக்குமோ, அல்லது அதற்கும் மேல் இருக்குமோ, அவரிடம் கேட்க நேர்ந்தால் "எதுக்கு மக்கா, தாத்தாவுக்கு பொண்ணு பாக்க போறியா? இந்த வயசுலயும் தாத்தா ஜம்முன்னு இருக்கேன்னா, சின்னதுல சாப்பிட்டது,இப்பல்லா என்ன தின்னு கிளிக்கீங்க" என்ற அவர் வேறு உபவாசம் கொடுக்க ஆரம்பித்துவிடுவார், இந்நேரங்களில் அவர் பேசுவதை நிறுத்த நாம் வேறு ஒரு பேச்சை ஆரம்பித்தால் "எழவு பயலுக்கு பொறந்தவனே, நா சொல்றது கேளு முதல" என்று மேலும் திட்ட ஆரம்பித்துவிடுவார்.

எங்குதான் தங்குவாரோ, பகல் பொழுதில் எங்கும் காணக்கிடைப்பார், இரவுகளில்  வெயில் காலங்களில் வேப்ப மரத்தடியில் முருகேசன் தேநீர் கடை வெளியே கல்பெஞ்சில் சுருண்டு, கிழிந்த கம்பளியை போர்த்தி கொண்டு தலைமாட்டில் எரியும் கொசுவத்தி புகை சூழ உறங்கிக்கொண்டிருப்பார், மழை பனிக்காலங்களில் பாய்க்கடை வெளியே வராந்தாவில் தஞ்சம் புகுவார், அவருக்கென ஒரு ட்ரங்க் பெட்டி உண்டு, மாடன் கோயில் பூசை சாமான்கள் ஒதுங்கிய அறையில் ஓரத்தில் அதுவும் இருக்கும், அவரை தவிர யாருக்கும் அதில் என்ன இருக்கும்  என்ற ரகசியம் தெரியாது, அப்படியென்ன வைரமும் இரத்தினமும் வைத்திருக்க போகிறார் என்ற ஏளனம் யாரும் அதை திறப்பதில்லை, ஆக பூட்டும் இல்லை அதற்கு.

வெயில் விழும் முன்னே சப்பாத்து படித்துறையில் குளித்து, சுடுகாடு மாடன் திருநீரை நெற்றி நிறைத்து பூசி, புடைத்த நெஞ்செலும்பு வெளி தெரிய கடைத்தெருவுக்கு வருவார், எங்கு வேண்டுமோ அங்கு உணவு அருந்தி கொள்வார், கடைகளில் உதவியாய் இருப்பதால் கொடுக்கும் பணத்தை கணக்கு பார்க்காமல் வாங்கிக்கொள்வார்,  

தாத்தாக்கு எல்லார் மேலும் பிரியமுண்டு, காமாட்சி மேல் மட்டும் கொஞ்சம் அதிகப்படியான பிரியம், எல்லோரும் அப்படித்தானே, கடைத்தெருவில் தாத்தாக்கு அடுத்து எல்லோர்க்கும் காமாட்சியை தெரியும், தாத்தாதான் அவனுக்கு காமாட்சி என்ற பெயரை சூட்டினார், ஆண் பிள்ளைக்கு எதற்கு பெண் பெயர் என்று கேட்டதற்கு பெரியவருக்கு கோபம் வந்துவிட்டது, பிறகு எல்லோரும் ஒப்புக்கொண்ட பிறகே கிழவர் சிரித்தார் , அதை வரை ஒரே முறைப்புதான் எல்லோரையும்.

இவனும் அவரைப்போல, இந்த கடைத்தெருவுக்கு எதனாலோ ஒதுங்கி வந்தவர்கள், தாத்தா வாழ்க்கை முடியவிற்கும் காலம் வந்தார், இவன் வாழ்க்கை aதொடங்கவிருக்கும் காலம் வந்தான். வெகு நாட்களாக காமாட்சியை கடைத்தெருவில் காணவில்லை, பார்க்கும்போது மட்டும் அள்ளிக்கொஞ்சி அகம் மகிழும் நேசம் இருவர்க்கும்.

 இதுபோக கிட்டு ஒருவனையும் பக்கம் சேர்த்துக்கொள்வார், நாற்பதுக்கு மிகாமல் வயது, முழுநேர குடிகாரன், இவனுக்கு இரவு நேர குடிக்காகவே மட்டுமே தாத்தா, பேய் இறங்கி அலையும் நேரம் வரை பேச்சும் சிரிப்பும் களைகட்டும், சுடுகாடு போகும் வழியில் ஆற்றங்கரை  இறக்கத்தில் ஆலமூட்டு இசக்கி கோயில் பின்புறம் தான் இந்த கச்சேரி.

வழக்கமான நேரம் ஆக ஆக கிட்டுக்கு கை கால் ஏன் மொத்த உடலே நடுங்க ஆரம்பிப்பது புரிந்தது, குடி நோயாளிகளிக்கென பொருத்தும் அறிகுறி எது, நெஞ்சு படபடவென அடித்தது, விந்தையான மனம் விரிந்து நனவிழி அமிழ்ந்தது, வெண்மையான சுத்தமான உடை அணிந்த ராஜு தாத்தா அவன் அருகிலே வருவது போல் இருந்தது, வாய் மெதுவாய் பிளந்து எச்சில் ஓரமாய் கூடி நின்று வழிந்து கொண்டிருந்தது.

"என்னவே இம்புட்டு நேரம், சல்லத்தனம், மண்டைக்குள்ள குடைய ஆரம்பிச்சுட்டு, நல்லவேள வந்துட்டீரு, இல்ல சவம் விழுந்து இப்போ குழில போட்ருப்பானுக "

கைதட்டி சிரித்தபடியே "என்னாலே, எனக்கு முன்னாடி உனக்கு குழி கேக்கா, சவத்து பயலே, ஓங்கி குறுக்குல மிதிச்சேன், குழியே தேவையில்ல, நேர பழையாத்துல விழுந்து, ஆடி அமாவாசைக்கு கன்னியாரி போயிருவா" என்றார்.

"உன்னோட வயசுக்கு நீரு எரிஞ்சு, நாலஞ்சு தெவசம் முடிஞ்சர்க்கணும், வாழ்ந்து என்னதான் கிழிக்க போரிரோ"

"நீதான் எனக்கு சேத்தும் கிழிக்கேல, நீ அடிக்க தண்ணிக்கு எனக்கு முன்னாடி போய் சேர்ந்திருவால பாத்துக்கோ'

பேச்சு நீண்டுகொண்டே போனது, தாத்தா இடுப்பில் சொருகி இருந்த அரைபாட்டில் ரம்மை எடுத்து வெளியே வைத்தார், ஆலமூட்டின் அடியே இவர்கள் ஒதுக்கி வைத்திருக்கும் பித்தளை டம்ளரையும், அங்கிருந்த சிறிய சருவத்தில் ஆற்றில் இறங்கி நீரை நிரப்பி, டம்ளர்களையும்  கழுவி கிட்டு அமர்ந்தான், தாத்தா சட்டை பாக்கெட்டில் இருந்த பீடிக்கட்டை வெளியே போட்டு ஒன்றை எடுத்து பற்ற வைத்தார், கதவில்லா இசக்கி அம்மன் கோயில் வெளியே யாரோ அன்றைக்கு படைத்தது, சுண்டலும் பாளையம்கோட்டான் பழம் மூன்றும் கிடந்தது, அதை எடுத்து ரம்முக்கு தோதுவாய் சாப்பிட எடுத்துக்கொண்டார்கள்.

கால் வாசி ரம் ஊற்றி, தண்ணீர் மீதி நிரப்பி டம்ளர் நிரம்ப முதல் குடி குடிப்பது வரை இருவரும் பேசிக்கொள்ளவில்லை, ரம் அடிவயிற்றில் இறங்கி உள்ளுக்குள் இருந்த அத்தனை கசடுகளையும் நீக்கியதும், கிட்டுக்கு கண்பார்வை மெதுவாய் அதிகரித்தது, அப்போதுதான் கவனித்தான், புது வெள்ளை சட்டை, வேஷ்டி அணிந்து தாத்தா அமர்ந்திருந்தார், இருட்டில் பாட்டிலை பார்த்தான், அதுவும் விலை அதிகமான ரம், ருசிக்கும் போதே தெரிந்தது, இருந்தாலும் இப்போதுதான் எல்லாவற்றையும் தெளிவாய் கவனித்தான், பின்னே ஒரு சிறிய அளவு உள்ளே இறக்கி இருக்கிறான் அல்லவா.

"என்னவோய், ஆளு புது மாப்பிளையாட்டும் வந்திருக்கீரு, என்ன விஷேசம் "

"எழவு இப்போதான் கண்ணு தெரியால உனக்கு"

"சரி என்ன விஷயம், சீவி சிங்காரிச்சு வந்திருக்கீரு"

"ஒண்ணும் இல்லடே, ரொம்ப வருஷம் கழிச்சு சின்ன சந்தோசம், அதான்"

"கத அடிக்காதவே, உமக்கு என்ன கவல, எப்போவும் சிரிச்சுட்டு சந்தோசமா தான இருக்கீரு"

"போல முட்டாப்பயலே, சிரிச்சுட்டு இருந்தா, சந்தோசமா"

"அப்போ என்ன இத்தன நாலா சந்தோசமா இல்ல நீ"

பேச்சு சிறிது நேரம் தடைபட்டது, காரணம் இருவரும் மும்முரமாய் அடுத்து டம்ளரை ரம்மை கொண்டு நிரப்பி கொண்டனர், ஒரே மூச்சில் குடித்து முடித்து, சுண்டல் கொஞ்சம் வாயில் போட்டுக்கொண்டு அடுத்த பீடியை பற்றவைத்து மீண்டும் உரையாடல் ஆரம்பித்தது.

"என்ன சொல்ல, சிரிச்சேன், குளிச்சேன், சாமி கும்பிட்டேன், சாப்பிட்டேன், குடிச்சேன் ஆனா ராத்திரி தூக்கம் வராது மக்கா, பொரண்டு பொரண்டு படுப்பேன், நாயெல்லாம் கத்தும், கண்ணு அங்கேயும் இங்கேயும் அலைஞ்சு அதுவா ஓஞ்சு தூங்குவேன்" தாத்தா சொல்லிக்கொண்டிருக்கும் போதே கிட்டு ஒரு பழத்தை உரித்து அவர்க்கு பாதியை நீட்டினான், அவரும் அதை வாங்கி அப்படியே விழுங்கி மென்று இதை தொடர்ந்தார்.

"எனக்கு என்ன வயசாகுனு நினைக்க" என்று கிட்டுவை நோக்கி கேட்டு ஒருகண்ணை மூடி அவன் பக்கமாய் காதை குவித்து அவன் பதிலுக்காக காத்திருந்தார் .

"என்ன ஒரு எழுவத்தஞ்சு எம்பது இருக்குமா "

எதிர்பார்த்த பதில் வந்த மகிழ்ச்சியில் அவருக்கே உரித்தான கைகளை தட்டி பற்கள் இன்னும் வெளியே தெரிய சத்தமாய் சிரித்தார்.

எரிச்சல் பிடித்தவனாய் கிட்டு "எதுக்கு இப்போ கத்துக, வயச சொன்ன முடிஞ்சு" என்றான் கோபமாக.

"அறுவத்தஞ்சு தான் ஆச்சு எனக்கு, பாக்க எப்படி இருக்கேன் பாத்தியா"

அதிர்ச்சியான கிட்டு "என்னவே சொல்லுக , உடம்புலாம் தளந்து போச்சு, பத்து வயசு கூட இருக்க மாதிரி தெரியிற"

"எல்லாம் சேட்டை, நா பண்ணின சேட்டை, யாரிட்டயம் சொன்னது இல்ல, இன்னைக்கு என்னவோ தெரில சொல்லணும்னு தோணிச்சு, உன்கிட்ட சொல்லலாம், நீ கேட்ப, ராத்திரி நான்தான குடிக்க வரணும், வேற யாரு வருவா" என்று மேலும் சிரித்தார்.

அடித்த இரண்டு டம்ளரும் கிட்டுவை நிதானமாக்கி விட்டது, "பத்து பன்னிரண்டு வருஷம் இருக்கும் உன்ன இங்க கடைத்தெருவில பாத்தது, நல்ல மெலிஞ்சு எலும்பும் தோலுமா வந்த, நியாபகம் இருக்கு, எங்க அய்யாதான் உம்ம இங்க சேத்துக்கிட்டாரு"

"அந்த நண்ணிக்காகத்தான் எழவு உன்கூட ராத்திரி வர வேண்டி கிடக்கு, நல்ல மனுசன்  சீக்கிரம் போய் சேந்துட்டாரு, அவரு போனாரு நீ நாசமலா போயிட்ட"

"என்னவே செய்ய, அம்மை சின்னதிலே போய்ட்டா, அய்யாவும் போய் சேந்துட்டாரு, ஒருத்திய லவ் பண்ணினேன், அவளும் வேற ஒருத்தன கட்டிட்டு போய்ட்டா, யாருக்குவே நம்ம தேவை, செத்துரலாம் தான், தைரியம் இல்ல, நீ சொன்னேயே உறக்கம் இல்லனு, அந்த மயிருக்குத்தான் நா குடிக்கது"

நீண்ட நேரம் இருவரும் பேசவில்லை, எங்கோ வேறு திசையில் வெறித்து பார்த்து கொண்டிருந்தனர், நள்ளிரவு காற்று வேகமாக வீசியது, ஆலமர விழுதுகள் ஒன்றுக்கொன்று உரசி சத்தம் எழுப்பி கொண்டிருந்தது.   
பழையாற்றில் சலனமின்றி ஓடிய நீரின் அமைதி அவர்கள் இருவரின் உள்ளேயும் புகுந்தது, சிலநேரம் பேசிக்கொள்ளாமல் அருகருகே உட்கார்ந்திருப்பதும் ஒருவித ஆசுவாசம் தான், தூரத்தில் சுடுகாட்டில் பிணம் எரியும் தீ காற்றின் வேகத்தில் நடனம் ஆடுவது போல் இருந்தது, நடுநிசி புள்ளினங்கள் கத்தி கூப்பாடு போட்டு கொண்டிருந்தது. கிட்டு கடைசியில் எஞ்சியிருந்த ரம்மை டம்ளரில் நிரப்பி தண்ணீரையும் நிறைத்து பெரியவர் முன்னே நீட்டினான், அதை கையில் வாங்கி கால்மாட்டில் வைத்துக்கொண்டே பேச ஆரம்பித்தார்.

"சின்னதுல அளவோலதான் இருந்தேன், எங்க அம்மா சொல்லுவா, அப்பா தியேட்டர்ல வேல பார்த்தாரு, இந்தா தீவண்டி ஸ்டேஷன் போற வழியில லாரி செட்டு இருக்கு பழைய சரஸ்வதி தியேட்டர்"

"என்னவே சொல்லுக உமக்கும் இந்த ஊருதான, நா கிழக்கலா நினச்சேன்,அப்பாவும் அங்க தானே வேல பாத்தாரு"

"ஆமா, அவரு மேனேஜர். எங்க அய்யா டிக்கெட் கொடுக்கிற வேலை. உங்க அய்யாக்கு என்ன சின்னதுலேயே தெரியும். தெரிஞ்ச ஊருன்னாலதான இங்க வந்தேன், இல்ல அன்னிக்கே செத்திருப்பேன்" சொல்லி முடிக்கும் போதே டம்ளரை எடுத்து படக்கென்று குடித்து, சிறிது கனைத்து அடுத்த பீடியை பற்ற வைத்தார்.

கிட்டுவுக்கு மேலும் எதுவும் கேட்க கூடாது என்றே தோன்றியது, கிழவர் இன்னைக்கு வழக்கமான மனநிலையில் இல்லை, ஆக இதன்மேலும் அவர்  விருப்பப்படவில்லை குழம்பிக்கொள்ள, பழையதை நடந்ததை நினைத்து வருத்தப்படப்போவதால் கடந்தவை மாறப்போவது இல்லை, எல்லோருக்குள்ளும் சோகக்காவியம் பல உள்ளுக்குள் ஏறிக்கொண்டோ அல்லது வலிந்து திணிக்கப்பட்டோ படம் எடுக்கும் பாம்பாய் வெளிவர காத்திருக்கும், சிலநேரங்களில் அதை ஆறப்போடுவதே நல்லது, இது கிட்டுவிற்கு நன்றாக தெரியும்.

"சரிவே வாரும் கிளம்புவோம், நடுச்சாமம் ஆச்சு"

"இல்ல, எனக்கு மனசுக்கு சரியில்லை, நீ போ நா வந்திருவேன்"

இது சரிப்பட்டு வராது, கிழவர் வீம்புக்காரன், அவருக்காய் தோன்றினால் ஒழிய இப்போது இவ்விடத்தை விட்டு நகரமாட்டார்.

"சரி, பேச்சுல நா கேட்ட கேள்விக்கு பதில சொல்லலியே"

அவனை ஏறிட்டு பார்த்து, "ஏல நா எவ்வளவு சென்டிமெண்டா இருக்கேன், உனக்கு பதிலு மயிறு கேக்கோ, போல முட்டாப்பயலே".

கிழவர் எளிதில் பழையநிலைக்கு திரும்ப அவரை கோபப்படுத்தினாலே போதும், இதில் கிட்டுவுக்கு நல்ல பயிற்சி உண்டு, பின்னே இத்தனை காலம் கிழவருடன் காலம் தள்ளிருக்கானே.

இருவரும் நடந்து பாலம் கடந்து சந்திப்புக்கு வந்தனர், ஒரு பக்கம் எங்கோடி கண்ட சாஸ்தாவும், அவர்க்கு பக்கவாட்டிலே வலது பக்கம் உயர்ந்த மேடையில் வந்து போகும் வண்டிகளை வேடிக்கை பார்த்தவாறு பெரியாரும் நின்றுகொண்டிருந்தார். அக்கா கடையில் பாதி ஷட்டர் மட்டும் மூடியபடி வியாபாரம் நடந்து கொண்டிருந்தது, இருவரும் சாலையை கடந்து கடைக்குள் நுழைந்தனர், தோசை மட்டுமே மிச்சம் இருந்தது, ஆளுக்கு மூன்று தோசை இலையில் போட்டு சால்னா ஊற்றும் போதே, ஷட்டரில் லத்தியை கொண்டு தட்டும் சத்தம் கேட்டதும், பரிமாறுபவர் கல்லா பெட்டிக்கு பக்கத்தில் இருந்த பெரிய பொட்டலத்தை நீட்டினார், அதை வாங்கிய ஏட்டய்யா பக்கத்திலே மூடியிருந்த நாடார் கடையில் வெற்றிலையும், பச்சைபழமும், சிகரெட்டும் வாங்கிக்கொண்டு நடையை கட்டினார், வழக்கமாக நடக்கும் சம்பவங்களில் ஒன்றுதான் இது.

சாப்பிட்டு முடித்து ஆளாளுக்கு விடைபெற்று கிட்டு வீட்டுக்கு நடையை கட்டினான், கிழவர் வேப்பமரத்தின் அடியில் உட்கார்ந்தபடி பீடி பற்றவைத்தார்.                                                 
   

                                    
                                                           

இணைந்த கைகள்

  ஒரு மாலைநேரம், புதிய திரைப்படம். திங்கள் கிழமை,  மாலை நேரக்காட்சி,  இணைந்த கைகள்.  நிதானியுங்கள், அதே நேரம் உங்கள் மனைவி, அரசு மருத்துவமனை...