Saturday 29 August 2020

இணைந்த கைகள்

 




ஒரு மாலைநேரம், புதிய திரைப்படம். திங்கள் கிழமை,  மாலை நேரக்காட்சி,  இணைந்த கைகள்.  நிதானியுங்கள், அதே நேரம் உங்கள் மனைவி, அரசு மருத்துவமனையில் பனிக்குடம் உடைந்து துடிக்கிறாள்.  என்ன செய்வீர்கள். உங்களுக்கு என்ன தெரியும்,  அவளின் வேதனை, அற்ப ஆண் தானே நாம்,  என்னையும் சேர்த்துதான்.  பிரசவ வேதனை, அப்படியா?  எத்தனை வலி.  அ. முத்துலிங்கம் கதையில் வருகின்றபடி வலிக்கு ஒரு எண் உண்டு என்றபட்சத்தில் பிரசவத்தின் வலிக்கு எண் எத்தனை. அவரிடமே கேட்போம், எண் அகராதியில் இல்லையாம். சரி, பெண் உயர்ந்து,  ஆண் தாழ்ந்து! இருக்கட்டுமே, குறையோ நிறையோ பொறுங்கள் அய்யா.  பனிக்குடம் உடைந்து பெண்ணொருத்தி துடிக்கிறாள் உங்களுக்கு வலியின் எண் ஒருக்கேடு.  


ஆகஸ்ட் இரண்டு ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூறு,  இணைந்த கைகள் திரைப்படம் நாகர்கோயில் குமார் திரையரங்கில் திரையிடப்படுகிறது. கூட்டம் கூடுகிறது, ராம்கிகாகவா.  பாடல்களும் கேட்கலாம். சிந்துவும், நிரோஷாவும் நாயகிகள். அருண் பாண்டியன் இன்னொரு நாயகன். ஆபாவாணன் இயக்குனர். நல்ல படமா?  பார்க்கலாமா?  இதெல்லாம் லெட்சுமணனுக்கு தேவையில்லை.  மதியம் அடித்த சாராயத்தின் நெடி, இன்னும் வயிற்றை புளிப்பால் நிரப்ப, சாயந்திரம் அடித்த மறுநீருக்கு தலை வின்னென்று வலித்து எங்கெல்லாம் சுற்றி கடைசியில் குமார் திரையரங்கு தெரிந்தது. இதெல்லாம் நடந்தது ஆகஸ்ட் ஆறு. 


அவளுக்கு வயிறு வீங்கி இருக்கிறது. தடவி பார்க்கையில் மனதில் எழும் வினோத உணர்வுக்கு பெயர் தெரியவில்லை, ஆயினும் முகத்தில் மலரும் சிரிப்பை மறைக்காமல் அவளை பார்த்தேன். எண்ணெய் வழிந்த தலையில் பின்னலின் முனையில் சூடிய மல்லிகை மணமோ என்னவோ, எனக்கு அவளின் மணம் உடலில் கிளர்ச்சியை தூண்டியது "என்மேல வாடை அடிக்கு, உங்களுக்கு மட்டும் மணக்கோ" என்றாள்.  "எட்டி நிஜமா! நீ மணக்க,  எனக்கு அது மட்டும் தான் தோணுகு" என்றபடியே வயிற்றை தடவினேன்.  அவளின் வயிற்றின் மீது இருந்த கை,  ஒருமுறை அசைந்து பின் கீழேயிறங்கி பின் ஏறியது.  அவள் சிரித்தபடி என்னைப் பார்க்க "சேட்டையை கண்டியா.  இப்போவே, எம்பிள்ளையில்லா" என்றபடி நான் சென்றேன். அவள் என்னையே பார்த்தபடி நின்றாள்.  


"லேய், எத்தனை மாசம். நீ கொஞ்சம் காரியமா இருக்கணும்டே. வேலையெல்லாம் வரும் போகும். பிள்ளை பிறக்கும் போது, நீ தூக்கணும் முத. உம் பொஞ்சாதி, அங்கன பெத்ததும் முத கேள்வி என்ன கேப்பா தெரியுமா?  என் வீட்டுக்காரரு வெளிய நிக்காரனு. விளையாட்டு காரியம் இல்லடே. ஒரண்டையும் போகாம. அங்கேயே நிக்கணும். அதானே பொஞ்சாதிக்கு நாம குடுக்குற தைரியம்"  நம்பி மாமா பேசிக்கொண்டே போனார். "மாமா பாலு வண்டி ஏன் இங்கையே நிக்கு. போகட்டும், நா போறேன். அதெல்லாம் சும்மா நேரமாவே போய்டலாம்.  நீ போ மாமா" என்றபடி அங்கிருந்து நகர்ந்தேன்.  இதெல்லாம் நடந்தது வெள்ளிக்கிழமை, அதாவது ஆகஸ்ட் மூன்று.  


சீட்டுக்கட்டை சிலுப்பி, கைகளால் தேய்த்து, பின் ஏற ஏற தேய்த்து,  எல்லோரும் பார்க்கும்படி குலுக்கி,  பணம் கட்டி அமர்ந்த எல்லோருக்கும் வீசி, எடுக்கும் முன்னே ரம்மி காடை அடியில் சொருகி, இதையெல்லாம் ஒரு கலையாக வேலப்பன் செய்வான்.  எனக்கோ நெஞ்சு வலிக்க பரோட்டா தட்டி, சால்னா, கோழி சாப்ஸ், பொரிப்பு எல்லாம் சமைத்து கிடைக்கும் சம்பளத்தில் ஐம்பதை சீட்டு கழிக்காமல் சென்றால், ஏனோ அந்த நாள் முடிந்தபாடில்லை. என்னோடு சேர்த்து அது குறைந்தபட்சம் ஐந்து ஆறு பேருக்கு வாடிக்கையாகிவிட்டது. பதிமூன்று கார்டில் ரம்மி வருவதோ, ஜோக்கர் வருவதோ எனக்கு கவலையில்லை. என் வருத்தமெல்லாம் அதிகபட்சம் ஒற்றை கார்டுகள் வரக்கூடாது. தொடு சீட்டு இருக்க வேண்டும். அடுத்த அடுத்த ஆட்டையில் சீட்டுகள் அதுவாய் அமையும். சுற்றி இருப்பவர் வெளியே போடும் சீட்டை முழுதாய் கவனித்தாலே ஆட்டம் நம் கையிலே. மற்ற சூதாட்டம் போல, ஒருவன் புத்திசாலியாய் மற்றவர் முட்டாளாய் இருக்கவேண்டிய அவசியம் இங்கே இல்லை. என்ன அதிர்ஷ்டம் வேண்டும். இவள் ஒன்பது மாதத்தை கடக்க கடக்க தினம் தினம் எனக்கு அதிர்ஷ்டம் தான்.


ஸ்பாடோ, க்ளாவரோ என்னவோ முதல் வீற்றிலே ஒரு ஒரிஜினல் சேர்ந்து விடும். அதன்பின் ரம்மி பார்த்து, என் திறமை வேண்டாமா?  ரம்மி இறக்கும் போது, இதுதான் ரம்மி என மற்றவர் புரியாமல் எடுக்க வேண்டும். வேறு சீட்டை ரம்மி இதுதான் என்பது போல பாவலா செய்து குழப்ப வேண்டும்.  இதெல்லாம் ஒரு கலைதான்.  ஆனால் எந்த ஆணையும் கட்டியவொருத்தி இதையெல்லாம் ஏற்கமாட்டாள். பின் ஆறில் ஒருவன் தானே ஜெயிக்க வேண்டும். ஒரு ஆட்டையோ என்னவோ, தோத்தவன் பணம் எவன் சேப்பிலோ போனாலும், அதில் வரும் குடி பொதுவாக எல்லோருக்கும் உண்டு  பின் ஏன் சீட்டு விளையாட்டு எல்லாம். பங்கு பிரித்து குடிக்கவேண்டியது தானே. 


ஐந்து மாதம் இருக்கும் அவளுக்கு, நிலையான வேலையில்லை. சரியாக சொன்னால் மாடு வெட்டும் வேலை எனக்கு, அதன் இரத்தம் தெறித்த சட்டையோடு சீட்டு விளையாடிக்கொண்டிருந்தேன். அவளின் குரல் தான்,  வேகமாய் நடந்து முன்னே சென்றேன் "நீயெல்லாம் மனுஷனா, என்ன கொல்லுகிறீரே. சந்தோசம் உண்டா எனக்கு. வேலைக்கு போய்ட்டு வீட்டுக்கு வராமலா?  சீட்டு கழிப்பீரோ" அவளின் கைகள் என் சட்டையை கிழித்து கொண்டிருந்தது. கோபம் உச்சத்தில் ஏற கண்கள் அவளின் வயிற்றை நோக்க இப்போதெல்லாம் சீட்டு கழிப்பது அவளுக்கு தெரிய வாய்ப்பே இல்லை. என்ன ஒரு புத்திசாலித்தனம். 


சீமந்தம் கழியும்,  பணம் பாக்கெட்டில் நிரம்பியிருக்க வேண்டும். பூ மட்டும் கூடை கூடையாய் வேண்டும். அவளுக்கு மல்லிகை இஷ்டம். சாப்பாடுக்கு பிரச்சனை இல்லை. என்ன காலை நேரமாக நானே எந்திரித்தால் ஊர் மணக்க சோறும், குழம்பும், கறியும் உண்டு. சேலை வாங்கியாய்ச்சு. ஒரு போட்டோ வேண்டும். முழுவயிறில் அவளை நிறைத்து ஒரு போட்டோ. நடக்கட்டும், ராத்திரி வாங்கும் பாட்டிலில் கூட ஒன்றை காலையே குடித்தால் எல்லாம் நடக்கும் சரியாக. வாயில் எழும் நாத்தம் மாத்திரம் அவள் மூக்கில் நுழையாமல் இருந்தாலே போதும். ஒதுங்கி நின்று ஒற்றை ஆளாய் எல்லாம் முடிக்க சாமர்த்தியம் வேண்டும், எனக்கு அது இல்லையா பின்னே. 


கூட்டம் கூடியது, கை நிறைத்து வளையல். சிரித்தபடியே ஒரு முகம். இவளா! இத்தனை அழகு. முகம் நிறைத்து மஞ்சளும், பெரிய பொட்டும், கூந்தல் நுனி முடிய மல்லிகை, கனகாம்பரம் சரமும்.  பச்சை நிறப் பட்டுமாய், அய்யோ என் கண்ணே பட்டுவிட்டது. சாயந்திரம் சுத்திப் போடவேண்டும். வேர்வையில் குளித்த கருத்த தேகம், நான்தான். உள்பனியன் நனைந்து, சாரம் சாம்பாரும், பாயாசமும் மணக்க, இடுப்பில் கட்டிய துவர்த்தில் முகத்தை துடைத்தபடி, யாருக்கும் தெரியாமல் ஒரு டம்ளர் நிறைய பிராந்தி உள்ளே போனதும், மனம் ஆசுவாசப்பட்டு இளகியது. பின்னே மார்பை அணைத்து கைகள், முதுகில் மல்லிகை மணக்க அவள் பின்னே இறுக்க கட்டிக்கொண்டாள். 


கையில் குலுங்கிய கண்ணாடி வளையல், புன்னகை ததும்பிய முகம். பந்தி முடியும் போது, சாப்பிட்டவரின் கண்களில் தெரியும் உணவின் ருசி. நானே எல்லாம் ரசித்தபடி அடுத்த டம்ளர் ஊற்றினேன். இதெல்லாம் நடந்து ஒரு மாதம் ஆகியிருக்கும். இன்று ஆகஸ்ட் ஆறு, காலை வழக்கமான பரிசோதனைக்கு சென்றாள். இன்னும் வீட்டுக்கு திரும்பவில்லை. சாயந்திரம் செல்ல வேண்டும், கோட்டார் அரசு மருத்துவமனை.  இன்று வேறு சந்திரகிரகணமாம். மதிய வேளை, மணிகண்டன் வந்தான். பாவிக்கு என்ன அதிர்ஷ்டம்,  லாட்டரியில் ஆறாயிரம் விழுந்திருக்கிறது. விலைகூடிய சரக்கும், மீனும் கிழங்கும் இலை நிரம்பியிருக்க, என்ன சுகம். எத்தனை டம்ளர். கணக்கு வைக்க நான் யார்?  போவது வரை போகட்டும்.  


இணைந்த கைகள் திரைப்படம் திரையில் விரிந்தபோது, எழுந்த சத்தத்தில் கொஞ்சம் நிதானம் வந்தது. சரி, படம் முடியட்டும் கோட்டார் ஆசுபத்திரி செல்ல வேண்டும். படமும் என்ன கதை, யாரோ ஓடுகிறார். சிந்து அப்பப்பா அழகுதான் நீ! நிரோஷா அழுதுக்கொண்டே இருக்கிறாள். ராம்கிக்கு முடி சண்டையில் கூட கலையாதா?  சாராயம் என்ன எழவோ?  வயிற்றில் இன்னும் புளிப்பு வாடை.  இடைவேளை முடிந்து விட்டதா?  இல்லையா?  அடுத்த பாடல் சரிதான். பீடி பற்றவைப்போம். 


அருண் பாண்டியனுக்கு மகன் பிறக்கப்போகிறான், இங்கே ஒரு பாடல். ரயிலில் வேறு, செந்திலும் கூட இருக்கிறான். அருமையான தொடக்கம், வரிகள் கேட்போம் 'அந்தி நேர தென்றல் காற்று, அள்ளி செல்லும் தாலாட்டு. தங்க மகன் வரவை கண்டு தந்தை உள்ளம் பாடும் பாட்டு'. 


எங்கே காலையில் ஆசுபத்திரி சென்றவள் இன்னும் வீடு வரவில்லை.ஒரு வேளை நான் அங்கே இருந்திருக்க வேண்டுமோ. நம்பி மாமா சொன்னாரே. சைக்கிளில் வந்தேனா?  நியாபகம் இல்லை. சரி வெளியே செல்வோம். யாரிடமாவது வாங்கிக்கொள்ளலாம். நினைத்த மாதிரியே வெளியே வர, நம்பி மாமா பஜாரில் நின்றார். அவரிடம் காரியம் சொல்ல, கூடவே வந்தார். 


ஆசுபத்திரியில் ஜனம் நிறைய, எத்தனை நோயோ. பிரசவ வார்டு எங்கே. அம்மா, அத்தை வெளியே நின்றார்கள். "எப்பா, நேரத்துக்கு வந்துடீரு. சொல்லிவிட்டோம் ஆளு சொல்லிச்சா. மத்தியானம் வந்த வலி. பச்ச உடம்பு தாங்குமா" அம்மா சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, அத்தை சொன்னாள் "கிரகணம் வேற, இன்னும் முடியல".  நர்ஸ் ஒருத்தி வெளியே வந்தாள், அறிந்த முகம்.  "வீட்டுக்காரரு வந்துட்டாரு. அவள்ட சொல்லுங்க". "சுகப்பிரசவம் தாம் மா. இன்னும் அரைமணிக்கூறு" கூறினாள் அவள்.


அங்கிருந்த சுவரில் சாய்ந்து நின்றேன், தூரத்தில் கோயில் மணியோசை கேட்டது. "கிரகணம் முடிஞ்சு நட துறந்தாச்சு போல" அம்மை கூறினாள். குழந்தையின் அழுகுரல் அதே நர்ஸ் கையில் வெள்ளை துணி போர்த்திய பொதியோடு வந்தாள். "ஆம்பள பிள்ள,  அவளும் சுகம் தான். இப்போ மயக்கம். கொஞ்சம் கழிச்சு பாக்கலாம்" என்றாள் சிரித்தபடி. 


இரத்த சிவப்பில் ஒன்று அசைந்தபடி கிடந்தது. வெள்ளிக்கண்கள். அவளின் அக்கா கையில் வாங்கினாள், "கொளுந்தனாரே கையில வாங்குங்க. அப்பா ஆயாச்சு" புன்னகை ததும்ப கூறினாள். கையில் வாங்கினேன்.  எத்தனை நினைப்புகள், என் கையை பிடித்த பிஞ்சு கை. மனதில் ஒரு பாட்டு, இப்போது சில மணித்துளிகள் முன்னே கேட்டப்பாட்டு. முணுமுணுத்தபடி வாங்கினேன் 'தங்க மகன் வரவை கண்டு, தந்தை உள்ளம் பாடும் பாட்டு'.


No comments:

Post a Comment

இணைந்த கைகள்

  ஒரு மாலைநேரம், புதிய திரைப்படம். திங்கள் கிழமை,  மாலை நேரக்காட்சி,  இணைந்த கைகள்.  நிதானியுங்கள், அதே நேரம் உங்கள் மனைவி, அரசு மருத்துவமனை...