Saturday 7 December 2019

செவலை




"தோ தோ, ச்சு ச்சு ச்சு" என்று அவன் அழைத்துக்கொண்டு ஓட, அதுவும் அவன் பின்னாலே ஓடியது.  செவலை நிறத்தில்,  காதோரம் மட்டும் வெள்ளை நிறத்தில் நாய்க்குட்டி.  அவன் கால்களுக்கு இடையே ஓடி மீண்டும் அவன் முன்னால் நின்று கால்களுக்குள் நுழைந்து ஓடியது. 

அந்த வயல்காட்டில் யாரும் இல்லை. வானம் மங்கிக்கொண்டிருந்தது. கருக்கள் நேரம் வீட்டுக்கு சென்று விடவேண்டும் என  ரமணியும் முத்துவும் வேகமாக நடக்க அவர்கள் பின்னாலே செவலை குட்டியும் ஓடியது.  ரமணி திரும்பி பார்த்தான், அது வலப்பக்கமாக தலையை சாய்த்து வாலை ஆட்டியது. அவனுக்கு இதை வீட்டுக்கு எடுத்து செல்ல ஆசை, முத்துவுக்கோ பயம்,  உடனே 

"லேய், உனக்கு மண்டைக்கு கழியலயா.  இதுக்க தள்ள இங்கதான் சுத்திட்டு கிடக்கும். பேசாம வால"

"அழவோல இருக்கு. நா எங்க வீட்டுக்கு தூக்கிட்டு போறேன். எட்டி குட்டி, எங்க வீட்டுக்கு வாரியா. டெய்லி உனக்கு பாலு, பிஸ்கட் தாரேன்" என்று செவலையை பார்த்து பேச ஆரம்பித்தான்.

"எப்படில பார்த்த பொட்டைக்குட்டின்னு. சரி வா சீக்கிரம் போவோம்.இருட்டிட்டு இருக்கு."

ரமணி செவலையை நெஞ்சோடு தூக்கி வாரிக்கொண்டான், அதுவும் அவனை வாஞ்சையோடு தன் நாவால் நக்கி புது எஜமானரோடு சென்றது.

'மக்கா, நாளைக்கு விடிஞ்சதும் இத தூக்கிட்டு கோட்டார் நாய் ஆசுபத்திரிக்கு போய் தடுப்பூசி போட்டுரு சரியா" என்றான் முத்து.

"ஆமா,  நீ உன் சைக்கிள் எடுத்துட்டு வருவியா,  அதிலியே போயிட்டு வந்திருவோம்."

"தடுப்பூசி போடல,  நம்ம டைகர் மாதிரி இதுக்கும் நாய் போலியோ வந்திரும். டைகர் எப்படி இருக்கும்,  கொழுகொழுனு குட்டிலியே சூப்பரா இருக்கும்."

"நாகராஜா கோயில் பின்னாடி வயல்ல விட்டுட்டு போகும் போது,  நம்ம பின்னாலயே ஓடி ஒடி வந்துச்சு. இப்போ அது எங்க கிடக்கோ"

"எங்க அம்மா, இப்போவும் நைட் சொல்லிட்டு தான் படுக்கும். அப்போல்லாம் ராத்திரி ஊழ விட்டுட்டே இருக்கும்,  வாய்ல நுரை வந்திரும். நாலு காலையும் தரைல தேச்சு ரத்தம் வடியும். கொஞ்ச நேரம் கழிச்சு அதுவே அமைதியாய் படுத்திரும். அம்மா தான் காயத்திருமேனி எண்ணெய ரத்தம் வந்த இடத்துல தேச்சு விடுவா. " இதை சொல்லும் போதே முத்துக்கு  கொஞ்சம் கவலை தொற்றிக்கொண்டது. 

இருவரும் பேசிக்கொண்டே நடந்தார்கள். வானம் இருட்ட,  பறவைகள் கூட்டம் தாழ்ந்து பறந்து கூடு நோக்கி சென்று கொண்டிருந்தது. இவர்கள் பேசுவதை செவலையும் ஏதோ புரிவது போல் பேசும் போது மாறி மாறி இருவரின் முகத்தை பார்த்துக்கொண்டு இருந்தது.

"இப்போ வேற குட்டி எடுக்கணும்,  அப்பா ஆராம்பலி போகும் போது எடுத்துட்டு வருவாரு. பெரிம்மா சொல்லிச்சு வெள்ளையம்மா குட்டி போட்ருக்காம். டைகரும் அதுக்கு குட்டிதான்." என்றான் முத்து.

ரமணியின் வீடு வந்தது,  அது ஒரு சிறிய ஓட்டு வீடு. கால் சென்ட் இடத்தில் கட்டப்பட்டு இருந்தது. ஓட்டின் மேலே மழை நீர் ஒழுகாமல் இருக்க பெரிய தார்ப்பாய் கொண்டு மூடப்பட்டு இருந்தது. வீட்டின் வெளிப்புற சுவற்றின் காரைகள் பெயர்ந்து கிடந்தது. வீட்டின் வெளிக்கொண்டி மூடி இருந்தது. அவன் விளையாட போகும் போது,  தாழிட்டு சென்றான். அவன் அம்மா இன்னும் நெசவு கூடத்தில் இருந்து வரவில்லை. முத்து நாளை காலை சைக்கிள் கொண்டு வருவதாய் கூறிவிட்டு ரமணியின் வீட்டுப்பாட நோட்டை வாங்கி கொண்டு சென்றான்.

தன் கையில் இருந்த செவலையை இறக்கி கீழே விட்டான். அது அவன் வீட்டின் கதவை பிராண்டி விளையாடியது. மீண்டும் அவன் முன்வந்து கால்களுக்குள் நுழைந்து தன் நாவால் உட்கார்ந்து இருந்த அவனை வருடியது. வீட்டை திறந்து அவன் அம்மா வழக்கம் போல் வைக்கும் பெரிய நாழியின் உள்ளிருந்து மூன்று ருபாயும்,  பாத்திரம் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த பரணில் இருந்து சிறிய வாளியை எடுத்துக்கொண்டான்.  செவலையின் கழுத்தில் சிறிய சணல் கயிறு கொண்டு கட்டி வீட்டின் முன்னிருந்த பழைய மரத்தூணில் கட்டினான். 

"நீ இங்கேயே இரு, நா போய் பாலும் பிஸ்கட்டும் வாங்கிட்டு வாரேன்,  சரியா" 

செவலை தனியாய் இருப்பதால் அவனுக்குள்  சிறிய பயம் எங்கே  அம்மா வந்து  இதை ஏன் கொண்டு வந்தாய் என்று திட்டிவிடுவாளோ?  என்று. வேகமாய் சென்று பாலும் பிஸ்கட்டும் வாங்கி வீட்டுக்குள் நுழையும் போது, அம்மா அங்கே அமர்ந்திருந்தாள்.ஒல்லியான தேகம்,  நெசவு கூடத்தில் பறக்கும் நூல் பிசிறுகள் அவள் முடியில் ஒட்டிக்கொண்டு இருந்தது. 

"லேய்,  எங்க இருந்து எடுத்துட்டு வந்த இத" என்று சொல்லும் போதே,  செவலை அம்மாவின் மடியில் ஏறி அவளின் கன்னத்தை நாவால் வருட ஆரம்பித்தது. கூச்சத்தில் அவள் சிரிக்க,  ரமணிக்கே மகிழ்ச்சியாய் இருந்தது. அம்மா அவ்வளவு சிரிப்பது இல்லை.  ஆம் ரமணியின் அப்பனை போல் ஒருவனை  கட்டியவள்  எப்படி சிரிக்க முடியும். பாவி வேலைக்கும் செல்வதில்லை,  வீட்டுக்கும் ஒழுங்காய் வருவதில்லை. முழுநேர குடிகாரன். இவர்களுக்கு குடிக்க மட்டும் எங்கிருந்து காசு வருகிறதோ!.

அம்மா அதனிடம் கொஞ்சி கொண்டிருக்கும் போதே, அவன் கையில் இருந்த பாலை ஆற்றிக்கொண்டிருந்தான். உள்ளூற மகிழ்ச்சிதான், அம்மா எப்படியும் இதை வேண்டாம் என்று சொல்லமாட்டாள்,  யார்தான் சொல்வார் இது போன்ற அழகான செவலை குட்டியை. சிறிய வாளியின்  மூடியை திறந்து அதனுள் கொஞ்சமாய் பால் ஊற்றி அதனருகே வைத்தான். செவலை அதை நக்கி நக்கி குடித்தது,  ஒரே தடவையாய் மொத்தமாக குடித்து,  தன் பிஞ்சு வாயால் கத்தியது. ரமணியும் அவனது அம்மாவும் அதையே பார்த்துக்கொண்டு இருந்தனர்.

நேரம் இருட்ட அம்மா அடுக்காளையில் சோறு வடித்து கொண்டிருந்தாள். அந்த வீட்டில் அடுக்காளை, பூஜையறை, படுக்கையறை எல்லாம் ஒன்றுதான்,  ஆக எங்கும் தனி தனியாய் எழுந்த போக அவசியம் இல்லை, இதுவும் வசதிக்குத்தான். ரமணி செவலையோடு விளையாடிக்கொண்டிருந்தான். ஓடி ஆடி விளையாடிய குஷியில் செவலை தூங்கி விட்டது. அதற்கு பிறகுதான் ரமணி அங்கிருந்து எழுந்தான், இரவுணவை முடித்துக்கொண்டு இருவரும் உறங்க பாய் விரித்தனர்.

உறங்கி ஒரு மணி நேரம் இருக்கும், வீட்டின் கதவை தட்டும் ஓசை கேட்டது. அம்மா எழுந்து கதவை திறந்தாள், அது அப்பாதான். நிற்க முடியாத அளவு போதை,  பெரும் சாராய நாற்றம் வீட்டுக்குள். அப்படியே நின்ற இடத்தில் படுத்து உறங்கி விட்டார். அம்மா மீண்டும் வந்து ரமணியின் அருகில் படுத்து உறங்கி விட்டாள். ரமணிக்கு தெரியும் இதுபோன்ற நேரங்களில் அம்மா அமைதியாய் இருப்பாள்,  காலை பொழுது விடிந்ததும் இங்கு ஒரு பெகளம் இருக்கிறது.

"ஒரு வேலைக்கும் போறதில்ல, பொட்டச்சி எவ்ளவுதான் ஒரு வீட்டுக்கு பண்ணுவா. கொஞ்சம் மனசாட்சி வேண்டாமா",  காதுக்குள் இவை நுழையும் போது ரமணி விழித்துக்கொண்டான். வெளியே தலையை எட்டி பார்த்தான். அம்மா செவலைக்கு  டீ வைத்து இருந்தாள். அது வீட்டின் கதவை பிராண்டியபடி  விளையாடி கொண்டிருந்தது.  அப்பா தலையை தொங்க போட்டபடி அமர்ந்திருந்தார்.

வழக்கமான ஒன்றுதான், ரமணி எழுந்து வீட்டிற்கு வெளியே அமர்ந்தான். சண்டை பெரிதானது போல,  அப்பாவும் எழுந்து நின்று கத்த ஆரம்பித்து விட்டார். ரமணிக்கு இது பழைய சங்கதி, செவலைக்கு இது புதிது அல்லவா. எதுவும் அறியா குட்டி அவன் அப்பாவின் கால்களை சுற்றியபடி விளையாடிக்கொண்டு இருந்தது. 

சண்டை பெரிதாக அவன் அம்மா தலையில் அடித்துக்கொண்டு, அப்பாவை திட்டிக்கொண்டே  அழ ஆரம்பித்தாள். ஒரு தருணத்தில் அவரும் சண்டையிட ஆரம்பித்தார்.மேலும் பெரிதாக அவர் கோபத்தில் வெடித்தார். கெட்ட வார்த்தைகள் காதுகள் கூச சண்டை நடந்தது. இது எதுவும் அறியா செவலை அப்பாவின் கால்களை சுற்றியபடி விளையாடி கொண்டிருந்தது. இதையெல்லாம் ஓரமாய் அமர்ந்தபடி ரமணி பார்த்துக்கொண்டு இருந்தான், எதையுமே அவன் உள்வாங்காமல் அமைதியாய் இருந்தான்.

அவன் அம்மா கடும்கோபத்தில் அப்பாவின் சட்டையை கிழிக்க, அவரும் அம்மாவை தள்ளி விட்டார்.மேலும் கோபம் தனியாதவராய், காலுக்கடியில் விளையாடி கொண்டு  இருந்த செவலையை ஓங்கி மிதித்து விட்டார். ரமணிக்கு இப்போதுதான் செவலை நியாபகம் வந்தது.ஓடி போய் செவலையை பார்த்தான்.அவன் அப்பா அங்கிருந்து நகர்ந்து வெளியே சென்று விட்டார்.அம்மாவும் அழுதபடி இருந்தாள்.

செவலை கத்தியபடி இருந்தது, அதன் சிறிய கண்ணின் ஓரத்தில் நீர் வழிந்து கொண்டு இருந்தது.ரமணிக்கு எதுவும் புரியவில்லை, அவனும் அழுதபடி அதை எடுத்து நெஞ்சோடு அணைத்தான். மேலும் கத்த திராணி இல்லாமல் அவன் மடியிலே படுக்கிடந்தது. சிறிது நேரம் கழித்து மெதுவாய் அதை இறக்கி விட்டான். செவலை மெதுவாய் எழுந்து நின்றது. அதன் தலை வலப்புறமாக திரும்பியே இருந்தது. 

ரமணி அதன் தலையை நேராய் மென்மையாய் திருப்ப அது வழியால் துடித்தது, அதன் சிறிய கண்ணின் ஓரத்தில் நீர் நிறைந்து இருந்தது.அதனால் தலையை நேராக வைக்க இயலவில்லை. வலப்புறமாக தலை சாய்ந்தே இருந்தது. ரமணியின் அம்மா அன்று வேலைக்கு செல்லவில்லை. செவலையின் கழுத்தில் காயத்திருமேனி எண்ணெய் தடவி கொடுத்தாள் அவன் அம்மா. அன்றைக்கு முழுவதும் அது படுத்தே கிடந்தது. முத்து சொன்னபடி வரவில்லை.

நேரம் இருட்ட இருட்ட வலியால் ஊழையிட ஆரம்பித்தது. இரவு முழுவதும் கத்தியபடி இருந்தது. அடுத்த நாள் அவன் அம்மா அவனிடம், 

"மக்ளே, இது கொண்டு எங்கையாவது உட்ருமா. இத பாக்க பாக்க உங்க அப்பா மேல வெறி வருது" என்றாள்.

ரமணியும் எதுவும் மறுத்து பேசவில்லை. செவலையை தூக்கி கையில் எடுத்துக்கொண்டான்,  வலப்புறமாய் திரும்பி இருந்த தலையை தூக்கி அவன் கன்னத்தை நாவால் வருடியது. வீட்டுக்கு வெளியே வரவும், முத்து சைக்கிள் உடன் வீட்டுக்கு வெளியே நின்றான்.

"நேத்து,  பெரிம்மா வீட்டுக்கு வந்திருந்துச்சு.அதான் வரல" என்றான்.

"நாம நாகராஜா கோயில் வயலுக்கு போவோமா. இத கொண்டு அங்க விட்ருவோம்" என்றான் ரமணி.

பின் கேரியரில் ரமணி அமர, முத்து சைக்கிளை மிதித்தான். செவலை வலப்புறமாய் திரும்பி இருந்த தலையை தூக்கி அவன் வீட்டை பார்த்தது, அவன் அம்மா வெளியே நின்றிருந்தாள்.செவலையின் வால் அங்கும் இங்கும் ஆடி கொண்டு இருந்தது.

செவலையின் வாசனை வீட்டில் நிறைந்து இருந்தது, மதிய நேரம் ரமணியின் அம்மா வாசலின் வெளியே விறகு அடுப்பில் சோறு வடித்து கொண்டு இருந்தாள். ரமணி உள்ளே படுத்திருந்தான். வெளியே செவலை கத்துவது போல இருந்தது. எழுந்து வெளியே ஓடினான். அவனது அப்பா கையில் செவலை, 

"நாகராஜா கோயில் கிட்ட வாரேன், இது ரோட்டுக்கு சைடு ல நிக்கி. எப்படி வந்துச்சோ தெரில,  வண்டில அடிபட்டுச்சுனா, அதான் எடுத்துட்டு வந்துட்டேன். எப்டி ல அங்க போச்சு ."

பேசிக்கொண்டே அப்பா இறக்கி விட, அது ரமணியிடம் ஓடியது. அதன் தலை கொஞ்சம் நேராய் இருந்தது.



1 comment:

  1. அப்பாவும் செவலையும் ஒன்றாகும் படிமம் போல் உள்ளது இறுதியில்.
    அப்பாவின் தலையும் நேராகியிருக்குமா.

    ReplyDelete

இணைந்த கைகள்

  ஒரு மாலைநேரம், புதிய திரைப்படம். திங்கள் கிழமை,  மாலை நேரக்காட்சி,  இணைந்த கைகள்.  நிதானியுங்கள், அதே நேரம் உங்கள் மனைவி, அரசு மருத்துவமனை...