Sunday 15 March 2020

ராஜு தாத்தா 4: சுடலை





மாலை ஆரம்பிக்கும் வேளை, தியேட்டரின் வாசல் முன் கூட்டம் நிரம்பியது.  மேனேஜர் ரூமில் இருந்து சுடலை வெளியே வந்தான்.  டிக்கெட் கொடுப்பவர் கவுன்டர் அருகே செல்லவும்.  கூட்டம் முண்டியடிக்க ஆரம்பித்தது. திடமான தோள்கள் உடைய சுடலை கூட்டத்தை நெறிப்படுத்தி கொண்டிருந்தான். அவனது உருவமும் குரலுமே போதுமானதாய் இருந்தது. கூட்டம் சரியாய் நகர்ந்தபடி போய் கொண்டிருந்தது.  இந்நகரில் சினிமா கொட்டாய் எல்லாம் மூடி, பெரும் தியேட்டர்கள் பெறுக ஆரம்பித்த காலம்.  தலை நிறைந்த மல்லிகை சூடிய பெண்கள் கூட்டம் தனியாய் அவர்களுக்கான வரிசையில் நின்றது.  இப்போதெல்லாம் ஆண்கள் தேவையில்லை, பெண்கள் தைரியமாய் குழந்தைகளோடு படம் காண வருகிறார்கள். 

தூரத்தில் மாரி வருவது போல இருந்தது.  அவன் ஒருவித பதட்டத்தோடு இருப்பதை அவனின் தெளிவற்ற நடை காட்டி கொடுத்தது.  வேகமாய் வந்தவன், சுடலையை பார்த்து "சீக்கிரம் வாடே, மாமாக்கு கலியலை.  ஆஸ்பிடல் கூட்டிட்டு போய்ட்டாங்க.  நீ உடனே வா". 

கேட்டதும் சுடலை பதறியபடி அவனது சைக்கிளை மிதித்து வேகமாய் மருத்துவமனை நோக்கி சென்றான்.  மாரி பின்னே அமர்ந்து கொண்டான்.  "என்னாச்சுடே". 

"தெரியல, நெஞ்சு வலிக்குனு சொல்லிருக்காரு.  அத்தே சோடா வாங்கி கொடுத்திருக்கு. பின்னாடி ஆளு, நல்லா சோந்துட்டாரு,  பாலசுப்ரமணியம் கூட்டிட்டு போயிருக்கு.  நீ வேகமா போடே.  பயப்படாண்டாம்". 

செம்மாங்குளம் நிறைத்து நீர் இருந்தது. சாலையில் மாட்டுவண்டிகள் இரண்டு போய்க்கொண்டு இருந்தது.  சுடலை வேகமாக சைக்கிள் மிதிப்பதால் வியர்வை நெற்றி நிறைத்து, கன்னம் வழியே கழுத்தில் வடிந்து கொண்டிருந்தது. குளக்கரையில் வரிசையாய் நின்ற வேப்பமரமும், புங்கை மரமும் காற்றில் அசைந்து மென்தென்றலை வீசி சுடலைக்கு சாரளம் வீச, இதமாய் உணர்ந்தான். அதற்குள் மருத்துவமனை நுழைய, சைக்கிளை மாரியிடம் கொடுத்து உள்ளே ஓடினான். உள்ளே அத்தையும், கமலமும் அழுதபடி அமர்ந்துயிருந்தனர்.  அவனை கண்ட மறுநொடி, கமலம் ஓடிவந்து, சுடலையின் சட்டையை பிடித்து, 

"அத்தான், அப்பா மயங்கிட்டு.  என்ன உள்ள விடமாட்டுக்காங்க. என்னய உள்ள கூட்டிட்டு போ. அப்பா... அப்பா... "

என அழுதபடி, அவனை குலுக்கினாள். அத்தை எழுந்திருக்க இயலாமால், அவனை தன்னருகே அழைத்தாள். சுடலை அவள் அருகில் சென்று மண்டியிட்டு அமர்ந்தான். 

"காலைல அழவோல இருந்தாரே, மதியம் சாப்டுட்டு தூங்கினாரு. சாயந்தரம் கிழங்கு அவிச்சு கொடுத்தேன். தின்னுட்டு இருந்தாரே, டப்புன்னு நெஞ்ச பிடிச்சுட்டு உக்காந்தாரு. நான் ஓடி போய், நாடார் கடைல சோடா வாங்கி கொடுத்தேன். ஆனா,... "

என்றபடி, அழுதுகொண்டே அவன் மார்பில் சாய்ந்து கொண்டு,  வார்த்தைகள் வற்றிப்போய் உளறினாள். அருகே, கமலம் வர, அவள் கைகளை பிடித்து மென்மையாய் வருடிக்கொடுத்து அவளையும், இன்னொரு கையால் அத்தையின் தலையை தடவிக்கொடுத்து ஆறுதல் படுத்தினான். 

எந்தவொரு சிந்தனையும் எழவில்லை. கண்கள் மட்டும் மாமாக்கு சிகிச்சை அளிக்கும் அறையை நோக்கி இருந்தது. படபடப்பை உடலெங்கும் பரப்பி இதயம் துடித்துக்கொண்டு இருந்தது. மூச்சை மெதுவாய் நிறுத்தி, பின் விட்டு தன்னை ஆசுவாசப்படுத்தினான். சிகிச்சை அறையில் இருந்து மருத்துவர் வர, மூவரும் சட்டென்று எழுந்து ஓடினர். 

மருத்துவர், முன்வழுக்கை மறைய திருநீரால் பட்டை அணிந்து இருந்தார். அவரை கண்டநொடியே, எதையும் சரிப்படுத்தும் வல்லமை உடையவர் போல சுடலை உணர்ந்தான். அவரும், வெளியே வந்ததும், பேண்ட் பாக்கெட்டில் கைவிட்டு கைக்குட்டையை வெளியெடுத்து, கழுத்தின் ஓரத்தில் வடிந்த வியர்வையை துடைத்தபடி, 

"சார், இன்னைக்கு என்ன சாப்பிட்டாரு" என்றார். 

"காலைல இட்லி சாம்பார், மதியம் தீயலும் சிறுபயறு தொவரனும், சாயந்தரம் கிழங்கு அவிச்சு கொடுத்தேன்" என்றாள் அத்தை. 

"எல்லாம், பயங்கர வாய்வு அயிட்டம் மா. மூணையும் ஒரே நாள்ல சாப்ட்ருக்காரு.  அதான் வாய்வு நெஞ்ச அடைச்சுட்டு. சரி நைட் என்ன கொடுக்க உத்தேசம் இருந்துச்சு"

"நைட் பூரி கேட்டாரு"

சொல்லிமுடிக்கும் போதே "சரியா போச்சு, வயசாயிடுச்சு சார்க்கு. சாப்பாட்டுல கட்டுப்பாடு தேவ.  பயப்பட ஒன்னும் இல்ல, ட்ரிப் போட்ருக்கு.  இன்னைக்கு நைட் மட்டும் இருக்கட்டும். இப்போ தூங்கிட்டு இருக்காரு. கொஞ்சம் கழிச்சு நார்மல் வார்டுக்கு அனுப்பிருவோம். பயப்படாண்டாம் கேட்டிலா.  "

கூறியபடியே அவர் நகர, மூவரும் கைகூப்பி அவருக்கு நன்றி கூறினார்கள். பின் ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டே நின்றார்கள். 

அத்தை "சொன்னா கேக்குற ஆளா. நா சொல்லுகேன், கிழங்கு நாளைக்கு அவிப்போம்னு.  நாக்கு துடிக்குது, அவி அவினு உயிர எடுத்தாரு. இனி, பாரு நாக்கை வெட்டுகேன் உங்க மாமாக்கு, சின்ன பாடா படுத்துகாரு. வயசான காலத்துல. கல்யாணம் இன்னும் ரெண்டு வாரத்துல இருக்கு. நெனப்பு வேண்டாமா, வெள்ளாள நாக்கை நறுக்கணும். தீவனம் போதும், வேற ஒன்னும் வேண்டாம்" என்றபடி சுடலையை பார்த்து அழுகையோடு சிரித்தாள். 

கமலம் சுடலையை நோக்கி "அத்தான் நீங்க சொன்னாதான் கேக்கும். நீ சொல்லு"

சுடலை, பெருமூச்சு விட்டு, வலதுகையால் நெஞ்சை தடவியபடி "ஒரு நிமிஷம், மூச்சு நின்னுட்டு. இப்பதான் நார்மலா இருக்கு. அத்தே மாமாவை இங்க ஏசி ஏதும் சொல்லாண்டாம். வீட்டுக்கு வரட்டும் பாப்போம்"

பக்கத்தில் செவிலியர் ஒருவர் வர, மூவரும் பேச்சை குறைத்து அவளை நோக்கினர்.  "சார், முழிச்சிட்டார். சுடலை யாரு, உள்ள கூப்பிட்டாரு. வேற யாரும் வரக்கூடாது. இது ஸ்பெஷல் வார்டு" என்றாள். 

சொல்லிமுடிக்கும் முன்னே சுடலை அறைக்கு நடக்க ஆரம்பித்தான். கமலம், அம்மா அருகே சென்று ஏதோ பேசுவது போல அவனுக்கு கேட்டது.  உள்ளே, மாமா கட்டிலில் அமர்ந்து இருந்தார். கையில் ட்ரிப் ஏறிக்கொண்டு இருந்தது. 

சுடலையை பார்த்ததும் "மக்ளே, வாய் கசக்கு. ஆரஞ்சு முட்டாய் வாங்கிட்டு வருவியா. சரி, டாக்டர் அத்தைட்ட எல்லாம் சொல்லிட்டாரோ.  சண்டாளி இனி ஒன்னும் தரமாட்டா. வாய்வு தாண்டே. நான் கொஞ்சம் பயந்துட்டேன். என்னனா வயசு ஆயிட்டு. கல்யாணம் ரெண்டு வாரத்துல இருக்கா. பொறவு இன்னைக்கே போய்ட்டேன்னா. பொட்டப்புள்ளைய வச்சு என்ன செய்வா. பயம் இல்ல, நீ இருக்க. நீதானே மூத்தவன்.  கொள்ளி போட நீ இருக்க. அது வர யோசிச்சுட்டேன். நீ அவளை சமாளி. ஆனா, அடுத்து வரும்போது ஆரஞ்சு முட்டாய் வாங்கிட்டு வாடே" என்றார் அவரின் வழக்கமான நக்கல் சிரிப்புடன். 

"மாமா, நீலாம் சீக்கிரம் போகமாட்டே கேட்டியா. உனக்கு ஒன்னும் ஆவாது. எம்பிள்ளைக்கு கல்யாணத்துக்கு வர நீ இருப்ப.  நீ தூங்கு முத. அவாள நான் பாத்துகேன். வரும்போது ஆரஞ்சு முட்டாய் வாங்கிட்டு வாரேன்" என்றபடி வெளியே வந்தான். 

அத்தை இவன் வருகைக்காக காத்திருந்தவாறு "மருமகனும், மாமாவும் என்ன பேசுனீங்கோ". "ஒன்னும் இல்ல, நைட் சுடுகஞ்சி கேட்டாரு.  நீங்க இங்கயே இருங்க. நான் கமலத்தை கூட்டிட்டு போறேன்" என்றான். 

"சரி, மருமவனே. நைட் அவ உம்ம வீட்லயே இருக்கட்டும். நீ கஞ்சியும், அத்தைக்கு இட்லியும் கொண்டு வா. அப்புறம் வெந்நீர் போட்டு எடுத்துட்டு வா. "
மாலை மங்கி, வெளிச்சம் குறைந்த வேளையில் சைக்கிளில் பின்னே கமலம் அமர, சுடலை மெதுவாக வண்டியை ஓட்டினான். மருத்துவமனை மறையவும், கமலத்தின் கைகள் சுடலையின் தோளை பிடித்துக்கொண்டது. வானில் பறவைகள் பாடியபடி கூடு திரும்பிகொண்டு இருந்தது. தென்றல் வீசிக்கொண்டு இருந்தது.  

இணைந்த கைகள்

  ஒரு மாலைநேரம், புதிய திரைப்படம். திங்கள் கிழமை,  மாலை நேரக்காட்சி,  இணைந்த கைகள்.  நிதானியுங்கள், அதே நேரம் உங்கள் மனைவி, அரசு மருத்துவமனை...