Saturday 27 June 2020

மாடன் நடை 4




சர்க்கரைப்பாயாசம் எப்போது மணக்கும் தெரியுமா? நெய்யில் வதக்கிய அண்டிப்பருப்பும், கிஸ்மிஸ் பழமும் சேரும் போது. அது நெய்யினாலா?  அண்டியினிலா?  என்பது வேறுக்கதை. ஆனால் மாடன் கோயிலில் டால்டாவில் வதங்கும். ஆரம்பத்தில் முசுறு போல கோவப்பட்ட மாடன், இப்போதெல்லாம் அந்த ருசிக்கே பழகிவிட்டார். கேட்டால் "மாரசானுக்கும் நாலு சக்கரம் வேண்டாமா? அவனுக்கும் குடும்பம்  இருக்கு. நமக்கு மணி அடிச்சிட்டே கிடந்தா போதுமா? உபகாரம் அவனுக்கு வேண்டாமா? வாய மூடு" என்பார் கோபத்தோடு.  மாடத்தி அன்றைக்கு கவனமாக இருப்பாள், வெள்ளிக்கிழமை யாருடையோ சிறப்போ! வெளியே அடுப்பில் பாயாசம் கொதிக்கிறது. மகராஜன் பாதி சந்தனகாப்பை அந்தரத்தில் விட்டபடி, வெளியே வந்தான்,  வழக்கமான துளசிப்பாக்கை மெல்ல. மாடத்தி மெதுவாய் சொன்னாள் மாடனிடம் "ஏங்க, இன்னைக்கு சர்க்கரைபாயாசமா இருக்குமோ, இருந்தா நல்லது. முண்டன் இரண்டு சிறப்புக்கு இருக்குமான்னு கேட்டான்,சிறப்பு வச்சவன்  காசு உள்ளவன் போல, அப்பமும் புட்டமதும் படையல்".  அப்பம் தெவிட்டிரும்,  புட்டமுது வாயில் ஒட்டி, பற்களை பூசிக்கொள்ளும் ".  மாடன் கண்களை மூடி "ஆமா, இன்னைக்கி முண்டனுக்கு கோளுதான். பாயாசம் தான் கொதிக்கு".  பின்னே சர்வ வல்லமை படைத்தவருக்கு வெளியே என்ன கொதிக்கிறது என்று தெரியாதா!.

பூஜை எல்லாம் முடிந்து, மகராஜன் வழக்கம் போல தனக்கு தேவையானதை எடுத்துவிட்டு கிளம்பினான். பாயாசம் அன்று கூடுதலான படையல் படைக்கப்படும்.  வெளியே பெரிய வட்டையில் பாயாசம் ஊருக்கு விளம்பும் போதே சிறிய வாளியோ, லோட்டவோ கொண்டு வருவார்கள், மற்றநாள் குத்துபோனி, சிறிய சோத்துப்பானைலாம் எடுத்து வந்து வாங்கிப்போவார்கள். பாவம் சர்க்கரைப்பாயாசம். மாடன் வெளியே வந்து வழக்கமான தூணில் சாய்ந்து கால்களை நீட்டினார், மாடத்தியும் உடனிருந்தாள் "பாயசத்தை வாழையிலையில போட்டு, ஆறவச்சு திங்கனும், அப்போதான் ருசி தெரியுமா? " என்றார் மாடன். "அது என்னவோ வாஸ்தவம்தான்" பதில் கூறினாள் மாடத்தி.  

குளிர்பரவி கிடந்த தெரு வழியே முண்டன் மாடங்கோயிலை நோக்கி நடந்தான். மனதிற்குள் சலனப்பட்டே நடந்தான். தலையை கவிழ்த்தபடியே கைகளை பின்னால் கட்டிக்கொண்டே உள்நுழைந்தான். "என்ன ஆச்சு ராசாக்கு, தலைய தொங்க போட்ருக்க" என்றார் வழக்கமான வெண்கல குரலுடன். "ஒன்னும் இல்ல அண்ணாச்சி,  இன்னைக்கு கோயிலுக்கு ஒருத்தன் வந்தான். பண்டுகதைலாம்  ஓர்மை வந்துட்டு. இப்போ வெள்ளாள பயக்க நம்மல பூச வச்சு கும்பிடுகானுக  ஆனா என்னோட நிலைமைக்கும் அவனுக தானே காரணம்". "அது சரிதான் இப்போ அந்த கத மயிரு எதுக்குடே.  இன்னா பாரு, இவ உனக்குத்தான் பாயாசம் எடுத்து வச்சிருக்கா. எதையும் போட்டு குழப்பிக்காம தின்னு". முண்டன் வேண்டாவெறுப்பாய் பாயாசத்தை சாப்பிட ஆரம்பித்தான். 

"பண்டுக்கதைலாம் அச போட்டா என்ன மாறப்போகு. நீ சங்கடப்படாதே" என்றார் மாடன்.  "எதுக்கு அத நினச்சேன். உமக்கு எல்லாம் வந்து சேரும். அதுல மிச்சமீதி எனக்கு. நேரா சிறப்புன்னு யாரு வாரா. நாசுவக்குடில பழைய ஆட்காரு உண்டு. அவாள் வைக்கது உண்டு. இவன் சிற்பம். எங்க அய்யாக்கு ஜாடை உண்டு. நீட்ட மூக்கும், ஒடுங்குன தாடையும். அய்யாவ பாத்த மாதிரி இருந்தான். ஏன் சொக்காரானா இருப்பான். எல்லாம் தெரிஞ்சிருக்கும். இவன கும்பிட ஆளு யாரு. பாதி பயக்களுக்கு ஒரு மயிரும் தெரியாது. நா உமக்கு காவலாம், காவலுக்கு காவல். " சிரித்தான் வேண்டாவெறுப்பாக முண்டன். 

முழுதாய் முடித்தவுடன் மாடன் கேட்டார் "என்னடே விசனப்படுக". முண்டன் "ஒரு பயல,  ஆமா சொன்னேன்ல அந்தப்பய, மாலையும், மஞ்சணையும் வாங்கி கொடுத்தான். அதான் அன்னைக்கு நடந்தது எல்லாம் கண்ணு முன்னாடி வந்துட்டு போயிட்டு.சின்ன பாடா படுத்தினான் ஊருகாரனுக. இப்போ கும்பிடுகானுக சாமி மண்ணாங்கட்டின்னு". மாடன் எதையும் வெளிக்காட்டாமல் காற்று வீசும் பக்கமாய் திரும்பினார். 

மாடத்திக்கு இருவருக்கும் இடையே உள்ள பலவிஷயங்கள் அறியாவிடைதான். மாடன் குணமறிந்து அதெல்லாம் கேட்பதில்லை. முண்டனும் கவிழ்த்த தலையை தூக்கவில்லை. "சரி விடுப்போ. இப்போ சங்கடப்பட்டு என்ன ஆவப்போவுது. என்கதையை கேட்டாலும் இதே சீறுதான். நம்மல என்ன இவனுக விரும்பி படைச்சானுவலா. எல்லாம் பயத்துல. நூறு இருநூறு வருஷத்துல எல்லாம் மாறி இப்போ உள்ள பயக்கமாறு கதைய மாத்தி ஆளு ஆளுக்கு ஒன்னு சொல்லுகானுக, கூடவே இவன் செட்டியாரு, வெள்ளாளன், நாசுவன், வண்ணான்னு சாமிக்கும் ஒரு சாதி புடிச்சாச்சு. நம்ம மயான சுடலை ஒரே சாதில வடசேரி பிள்ளமாருக்கா,  இல்ல ஒழுகினசேரி பிள்ளைமாருக்கானு சண்டை மயிரு வேற. " விரக்தியாய் முடித்தார் மாடன். 

இணைந்த கைகள்

  ஒரு மாலைநேரம், புதிய திரைப்படம். திங்கள் கிழமை,  மாலை நேரக்காட்சி,  இணைந்த கைகள்.  நிதானியுங்கள், அதே நேரம் உங்கள் மனைவி, அரசு மருத்துவமனை...