Sunday 17 February 2019

சாளை மீன் பிறந்த கதை









                சந்தைக்கு போய் நல்ல நல்ல காய்கறியை பொறுக்கியெடுத்து, விறவு அடுப்பில் மரப்பொடி நிரப்பி, சுள்ளிவிறகு போகுமளவு கையால் குழிபோட்டு, அரிசியை நன்றாக நீரில் கடைந்து சோத்துப்பானையில் போட்டால், அரிசி வெந்து சோறு வடிய நேரம் கொஞ்சம் அதிகமாவே பிடிக்கும், இதற்குள்ளே தேங்காயை உடைத்து, உடைத்த நீரை வீணாக்காமல் அப்படியே குடித்து, திருளக்குத்தியில் பூ பூவாய் திருவி, அம்மியில் துருவிய தேங்காய், பொடியுள்ளி, சீரகம், மிளகு, தேவைக்கு பச்சைமிளகாய், உப்பு,கொஞ்சம் புளியும் சேர்த்து  அரைத்து, தடியங்காய் அல்லது வெள்ளரிக்காய் வெட்டி வைக்கும் போது, உலை பொங்கிவிடும், சோறை வடிக்க பானையை கவிழ்த்து சிறிய டம்ளரை அடைகொடுத்து வெந்த நீரை வடிய விட வேண்டும், வெட்டிய காய்கறியை அவிய போட வேண்டும் , அது வெந்ததும், சீன்சட்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, காய்ந்த வத்தல், கறிவேப்பிலை போட்டு தாளித்து வெந்த காய்கறியும், அரைப்பையும் சேர்த்து கொதிக்க விட வேண்டும், குழம்பு கொதித்ததும் உருளைகிழங்கை வேறு பொரியல் செய்ய வேண்டும், இத்தனையும் சமைக்கும் அம்மைக்கு வெப்ராளம் வராது, நான் சாப்பிட அமரும் போதுதான் மெதுவாய் பால் பொங்குவது போல் பொங்கிவரும், அம்மையிடம் ஏதாவது குறை சொல்லாமல் சாப்பிடும் பழக்கம் உணவு நன்றாயிருந்தாலொழிய மற்ற நேரம்  சாலையோர கடையில் வாங்கிய பஜ்ஜியில் ஒட்டிய எண்ணெய் போல் என்னைவிட்டு விலகுவதில்லை.   

                    வேகாத வெயிலில் கிரிக்கெட் விளையாடி விட்டு வீட்டுக்கு கிளம்பும் போது, பசி வயிற்றை கிள்ளும், கீழத்தெரு கடந்து வீட்டுக்கு செல்லவேண்டும், வழியிலே மணியின் வீடு, பேட்டும் பந்தும் அங்குதான் வைத்திருப்போம், விளையாட கிளம்பும் நேரம்  எளிதில் எடுத்துக்கொள்ளலாம், மணியின் வீட்டை நெருங்கும் போதே மீன் குழம்பு வாசனை நெம்பி இழுக்கும்,  மணியின் அம்மா எப்போதும் " மக்கா இங்க சாப்பிடுல" என்பாள், நான் வேண்டாம் என்று மறுக்கும் போதே, "ஏம்ல உங்க அம்மைக்கு தெரிஞ்சா ஏசுவாளா, "எங்க வீட்லலாம் சாப்பிட கூடாதுனு சொல்லிருக்காலா", "இல்ல அத்தே, நா வீட்லயே சாப்பிட்டுக்கேன்"  என்று நான்  சொல்லும் போதே, எனக்கு தெரியும் அதுவல்ல காரணம் பாறைதுண்டம், நெய்மீன், நெத்திலிமீன்  இல்லை கணவா மீன் இவைதான் மணிக்கு அம்மா மீன்குழம்பில் சேர்ப்பவை, எனக்கோ  சாளை மீனை தவிர வேறு மீன் பிடிக்காது, ஏன் சாளையை கூட குழம்பில் சேர்த்ததை சாப்பிட மாட்டேன், அதற்காக எண்ணெய் சட்டியில் முங்குமளவு போட்டு பொரிக்கவும் கூடாது, ரெண்டு பக்கமும் மசாலா பூசி தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி வாட்டி எடுக்க வேண்டும், மற்ற மீன் சேர்த்த குழம்பை கூட தொடும் பழக்கம் கிடையாது, தொட்டுக்கொள்வதற்கு மரசீனி கிழங்கை மைய்ய அவித்து மஞ்சள் பொடி கொஞ்சம் சேர்த்து, தேங்காய் துருவி தேவைக்கு உப்பு சேர்த்தால் இதைவிட சொர்க்கம் வேறு என்ன வேண்டும், நாவூற இதை நினைத்து கொண்டே வீட்டுக்கு சென்றால் எனக்காக புளிக்கறியும் உருளைக்கிழங்கு பொரியலும் காத்துக்கொண்டிருக்கும், உணவுக்கு அளந்த நாக்குதான் இது, பழையதும் மோர் மிளகாயும் போதும் கைமுட்டு வடிய அள்ளி குடிக்கலாம், இருப்பினும் மீன் வாசனை நுகர்ந்த மூக்கு அதை நாவிற்கும் கடத்தி விடுகிறதே, 

            நான் கண்டிருக்கிறேன்  எனது சித்தி சாப்பிடுவதை, சோற்றை தட்டத்தில் குவித்து, மீன் குழம்பை ஊற்றி நன்றாக பிசைந்து, ஒரு சின்ன  பந்து அளவுக்கு கைகளால் அதை உருட்டும் போதே, பார்ப்பவருக்கு பசி எடுத்துவிடும், ஒவ்வொரு உருண்டைக்கும் தொட்டுக்கொள்ள தொடுக்கறி உண்டு,  இதுபோக சாளையை முள்ளின்றி உருவி சாப்பிடுவாள், ஆச்சிக்கோ சாளை அவியலும் ரசமும் போதும், முருங்கையும் மாங்காயும் நல்ல பக்குவத்தில் அவிந்து அவியலுக்கே மேலும் சிறப்பு சேர்க்கும், மாறாக நான் சாப்பிடும் போது என் உள்ளங்கையில் சாப்பாடு படாது, இதை பார்க்கும் போதெல்லாம் ஆச்சி கூறுவாள் "இப்புடி சாப்பிட்டா பகவான் படி அளப்பாரா'.

               உள்ளுக்குள் நினைத்து கொள்வேன் இதற்கும் பகவானுக்கும் என்ன சம்பந்தம், பின்னர் ஒருநாள் சுடலைமாடன் கோயில் வில்லுப்பாட்டில் "பகவான் படி அளக்க பூலோகம் சென்ற வேளையிலே, தேவி பார்வதி இரண்டு கட்டு எறும்பை குங்கும சிமிழுக்குள் அடைத்து வைத்தாள், படி அளந்து பகவான் கைலாயம் திரும்பும் போது, பார்வதி வெளியே உட்கார்ந்திருந்தாள், பகவான் கேட்டார் 'பெண்ணே பார்வதி ஒருநாளும் இல்லா திருநாளாய் என்ன வெளியே அமர்ந்திருக்காய்', 'பகவானே எல்லாருக்கும் படி அளந்து விட்டீர்களா', ஆமாம் என்றார் பகவான், பார்வதி குங்கும சிமிழை திறக்கும் போது, உள்ளே இரண்டு அரிசிகள் கிடந்தன,பகவான் எல்லார்க்கும் படி அளந்து விட்டார்". படி அளப்பதற்கான காரணத்தை புரிந்து கொண்டேன்.

                விஷேச காலங்களில் வீட்டில் அண்ணன், தம்பி என எல்லோரும் சேர்ந்து சாப்பிட உட்காரும் போது, நாஞ்சில்நாட்டுக்கே உரிய கறி பதார்த்தங்கள் தும்பு இல்லையில் இடமில்லை எனும் அளவுக்கு நிரம்பி இருக்கும், அண்ணனோ பருப்புக்கு வாழைக்காய் துவட்டல், சாம்பாருக்கு அவியலும், தயிர் பச்சடியும், ரசத்திற்கு இஞ்சி கிச்சடி அல்லது நார்த்தங்காய் பச்சடி, சிறுபருப்பு பாயசத்திற்கு பப்படம் அல்லது பழம், பால் பாயசத்திற்கு பூந்தி இல்லை போளி என சாப்பிடும் நேரம் புகுந்து விளையாடுவான், அவனுக்கு பரிமாற அனைவருக்கும் மகிழ்ச்சியாய் இருக்கும், மாறாக எனக்கு நானே தான் பரிமாற கொள்ள வேண்டும்,ஒரு அளவுக்கு மேல் மிகுதியாய் இருந்தாலுமே சாப்பிட முடிவதில்லை, பிரட்டி கொண்டு வரும், இதுபோக  மிக மெதுவாக சாப்பிடும் பழக்கம் கொண்டவன் நான், இதனாலே எல்லாருடன் இணைந்து சாப்பிட நான் விரும்ப மாட்டேன், சாப்பாடு பதார்த்தங்களிலும் அதிக மெனக்கடல்  இல்லாவிட்டாலும், குறிப்பிட்டவை நான் விரும்பும் ருசியில் இல்லை என்றால் சமைத்தவருக்கு நேராக சொல்லிவிடும் பழக்கமும்  உண்டு. சாளை மீன் குழம்பும் கிழங்கும், உள்ளிதீயல் சிறுபயறு தொவரன், வெந்தய புளிக்கறி காணத்துவையல் என சிறிய பட்டியல் நீளும், அம்மையோ ஆச்சியோ எனக்கு விரும்பியது சமைத்தாலும் அந்தந்த கறிக்கு தனிச்சுவை உண்டு, அதற்குரிய  ருசி வரவில்லை என்றால் சாப்பிட்ட திருப்தி வருவதில்லை,

               மற்ற கறியும் குழம்பும் கூட மனதை தேற்றி சாப்பிடலாம், சாளை அப்படி இல்லை, சாளையை கீறும் போது உலும்பல் வாடை அளவாய் அடிக்கும், தலை நறுக்கி கீறி வைத்த சாளைத்துண்டுகளை மீன் சட்டியில் வைக்கும் போது, சட்டியின் நிறத்திக்கேற்ப அதன் மேல் செதிலை தேய்த்து எடுப்பது நாஞ்சில் பகுதிகளில் வழக்கம். கொதி மணமே ஒரு குழம்பின் ருசியை தீர்மானிக்கும், சாளையின் கொதிமனம் அடுக்காளையை தாண்டி காற்றில் பரவி, அவ்வழியே போவோரை அவ்வீட்டின் மேல் பார்வை ஒன்றை பதிக்க செய்யும்.   

                  திருமணம் ஆனபின் மறுவீடு என சொந்தக்காரர் ஆளாளுக்கு வீட்டுக்கு அழைப்பர், எல்லார் வீட்டிலும் கோழிக்குழம்பும் சோறும், இல்லை கோழி பிரியாணி,  மிக நெருங்கிய உறவினர் வீட்டுக்கு செல்லும் முன்னே சைவ உணவே போதும் என்று சொல்லும் அளவுக்கு ஆகிவிட்டது, ஏன் இவர்கள் எல்லாம் இந்த நேரங்களில் சாளை வாங்கி குழம்பு வைக்க கூடாது என்று கூட தோன்றியதுண்டு.

                     சிறுவயதில் ஆற்றுக்கு குளிக்க போகும்வழியில் புளிய மரம் ஒன்றுண்டு, குறிப்பிட்ட காலஇடைவெளியில் மாவுப்புளி  கிடைக்கும், காய்க்கும் பழத்திற்கும் இடைப்பட்ட பருவம் அது,கிளிப்பச்சை நிறத்தில் அதன் உட்பகுதி இருக்கும், அதன் ருசி சுர்ரென்று நாவில் ஏறும், ஒரு நாள் புளி பறிக்க செல்லும் வழியில் பச்சையாக ஒன்று புல்லில் நெளிவதை கண்ட  முருகன், சட்டென கையில் அதை பிடித்து இழுத்தான், அது நீளமான பச்சைப்பாம்பு, உடனே மணி "லேய் அது உயிரோடு இருக்கும் போதே ரெண்டு கையால  ஒரு ராவு ராவி இழுத்தா, நீ எது சமைச்சாலும் டேஸ்டா இருக்கும்" என்றான், கூறிய உடன் எல்லாரும் ராவி எடுத்து அதை தரையில் விட்டபோதும், அது எங்களை எல்லாம் ஒரு பார்வை பார்த்து விட்டு சடாரென வயக்காட்டில் புகுந்து மறைந்து போனது.                        

                         சென்னையில் குடியேறி  சைதாப்பேட்டை மீன் சந்தை சென்று சாளை மீனை மத்தி என அழைக்கும் போதே இனம்புரியாத துயரம், அதுவும் நாஞ்சில்நாட்டில் கிடைப்பதை விட கொஞ்சம் வடிவத்தில்  பெரிதாகவே இருந்தது, அம்மை மீனை அழுத்தி பார்த்து வாங்கி வர சொன்னாள், ஐஸ் மீன் என்றால் அழுத்தினால்  கல்லு மாதிரி இருக்கும், அன்றைக்கு  பிடித்திருந்தால் அழுத்தும் போது நாள்பட்ட மஸ்கோத் அல்வா போல் அதன் மேல்பகுதி இருக்குமாம், இங்கேயோ எடை போட்டு தான் மீன் வாங்க முடியும், கன்னியாகுமரி  போல கூறுக்கு வாங்க முடியாது,  காசு கொடுத்து வாங்கிய பிறகுதான் தொட்டு பார்க்கமுடியும், ஒருவேளை அழுத்தினால் கல் போல இருந்தால், எதுக்கு வம்பு என்று வாங்கி வீட்டுக்கு சென்றால், வாங்கியது மண்டை வீங்கி சாளையாம், சென்னையில் மீனே வாங்க கூடாது எனுமளவுக்கு தோன்றியது.

                      இதுதான் இப்படி என்றால்  நண்பர்களோடு  தங்கிய அறையில் மெரினா போய் சாளை  வாங்கி வந்து நண்பன் குழம்பு வைத்தான், பாவி கோழி அவிப்பதை போல மீனை முதலிலே போட்டு விட்டான், வெறும் மீன்முள் தான் மிதந்தது. சாளையை  எப்போதும் கொதிக்கும் போது போட்டு உடனே இறக்கி விட வேண்டும், அந்த சூட்டிலேயே வெந்து விடும்.

                    சிறுவயதில் சாப்பிட்ட பல தொடுகறிகளின், குழம்புகளின் ருசி பெரும்பாலும் மாறிவிட்டது, சாளை மீனின் ருசி நாவில் இருந்து அழிக்க முடியாதது, சிறுவயதில் விறகு அடுப்பில் மண் சட்டியில் பத்து ரூபாய்க்கு வாங்கிய சாளையில் குழம்பு வைத்து, ரேஷன் அரிசி சோறும், கிழங்கும், வாழையிலை விரித்து சுடசுட சாப்பிடும் போது, ஒரு மணம் கிளம்பி உடல் எங்கும் சாளையின் ருசி இறங்கும், எரிப்பு தாங்காமல் நாக்கு துடிக்கும் ஆனாலும் கை அடுத்த கவளத்தை வாயில் நுழைக்கும், செல்வத்தில் திளைத்த குடும்பமோ, நிலக்கிழாரோ இல்லை என் அப்பா, அவர் ஒரு சமையல்காரர், கல்யாண வீடுகளில் சமைக்க வாங்கும் பலசரக்கு சாமான்களில் பலசரக்கு  துண்டில் குறிப்பிட்ட சாதனங்கள் இல்லை அப்பா சாமியாடிவிடுவார், எதை கொடுத்தாலும் அமிர்தமாய் உண்ணும் பழக்கம் அவர்க்கு, பிரியாணி சமைத்துவிட்டு வீட்டில் பழையகஞ்சியும் துவையலும் ஒரு பிடி பிடிப்பார்.அப்பா பெறும் சமையல் காரர், ஆனாலும் அவருக்கு அம்மா வைக்கும் மீன் குழம்பு மேல் தனி பிரியம், அப்பா அடிக்கடி "இந்த மீன் குழம்பு ஒன்னு பொட்டச்சிக வச்சாதான் தனி டேஸ்ட், ஆம்பள கைக்கு மீனு ருசி வராது" என்பதுண்டு, ஆனாலும் அம்மையோ, மனைவியோ,ஆச்சியோ, பெரியம்மையோ, அத்தையோ வைக்கும் மீன் குழம்பில் எல்லா நாளும் அந்த தெய்வீக ருசி வருவதில்லை, ஆமாம் ருசி தெய்வீகத்தோடு தொடர்புடையது.

                     பணி நிமித்தமாக பெரிய உணவகங்களுக்கு சாப்பிட செல்லும் போது, பிஷ் ரோல், தந்தூரி பிஷ் கிடைக்கும், ஆசைக்கு சாப்பிடலாம் திருப்தி இருக்காது, சாப்பிடும் போது நண்பர் கேட்டார்  "என்ன சாப்டிரீங்க, இப்புடி சாப்பிட்டா உடம்பு வைக்காது", நான் "இல்ல, எனக்கு இதுல்லாம் ஒத்து வராது" என்றேன்,"உங்களுக்கு என்னதான் இஷ்டம்" என்றார், பதிலுக்கு  "எனக்கு மீன் குழம்பு தான் பிடிக்கும், அதிலயும் சாளை மீன் தான் பிடிக்கும்", ஓ சார்டின், குட் பார் ஹெல்த்" என்று சிரித்தார்.

                    கிழங்கை பரங்கியர்கள் அறிமுகப்படுத்தினாலும்  அதை மீனுக்கென்று மாற்றியவர்கள் நம்மக்களே, பஞ்ச காலங்களில் கிடைக்கும் படி நெல்லுக்கும், கிழங்குக்கும் போக மனிதர்களின் உடல் ஊக்கத்திற்கு தேவையான சத்தை நம் கடல்களில் நிறைந்து பெருகி இருக்கும் சாளையும் அளித்திருக்கும். சாளை மீன் விலையும் அதிகமில்லை, தெரிந்த  கதையொன்றில் மனிதகுல பசி அடங்க கடவுள் காராம்பசுவையும், தென்னை மரத்தையும் அனுப்பியது போல, கடலிலே சாளையை படைத்திருப்பார் என்றே தோன்றுகிறது.  என் சாளை மீன் கதையை கேட்ட இன்னொரு நண்பர் ஏன் நீங்களே சமைக்க கூடாதா? என்றார், நானும் முயற்சி செய்தேன் அப்பா கூறியது போல் சாளை மீன் குழம்பின் ருசி ஆண்கள் கைகளுக்கு பகவான் அருளவில்லை, ஒரு வேளை இதிகாசத்தில் பகவானுக்கும் பகவதிக்கும் மீன் குழம்பு சமைப்பதில் பெகளம் உண்டாகி, அது பிரளயமாகி கடைசியில் பகவான் பகவதியை மன்னித்து அருளும் போது, இனிமேல் சாளை மீன் குழம்பின் ருசி பெண்கள் கைக்கே வாய்க்க வேண்டும்  என்ற வரம் பெண்கள் சார்பாய் பகவதி வாங்கியிருந்தாலும் இருக்கலாம்.    
                   
                        சாளை மீனை கூறுக்கு வாங்கிவந்து, தண்ணியில் ஊறபோட்டு வைக்கும் போதே, வீட்டு பூனை காலை சுற்ற ஆரம்பித்துவிடும், அருவாமனை எடுத்து மீன் தலையை நறுக்கி, செதிலை லேசாக கீறி மீன்தோலை சீவ வேண்டும், பின் நீளவாக்கில் கீறி உள்ளே உள்ள குடல் இதர கழிவுகளை பிடுங்கி அதற்காகவே காத்துநிற்கும் பூனைக்கு போட வேண்டும், பின் கருங்கல்லில் மீனின் மேல் உள்ள வெள்ளை செதில் போகும் அளவுக்கு ராவி எடுக்க வேண்டும்,  நாஞ்சில் தாண்டி மீனை  இவ்வளவு சுத்தம் செய்வதை நான் கண்டதில்லை, குழம்பில் வெள்ளையாய் மீன் மிதக்கும், மீன் கழுவுவது சமையல் கலையில் மிகநுணுக்கமானது, எல்லார்க்கும் வருவதில்லை, கழுவிய மீனை கொஞ்சம் மஞ்சள் சேர்த்து மீன் சட்டியில் போட்டு பூனை எடுக்காத அளவுக்கு மூட வேண்டும், சென்னையில் கவலை இல்லை இங்குள்ள பூனைக்கு திருடுவது எல்லாம் மறந்து போச்சு, சில வீடுகளில் தான்  பூனை என்பதையே அதற்கு நினைவு படுத்த வேண்டும் .

                     நல்ல தேங்காயை எப்போதும் தூக்கி போட்டு பார்த்து வாங்க வேண்டும், எடை அதிகம் இருந்து உள்ளே நீர் குலுங்கும் சத்தம் கேட்டால்  இளந்தேங்காய், எடை இல்லாமல் இருந்தால் முத்திய தேங்காய், எடை குறைவாய் இருந்தும் நீர் குலுங்கும் சத்தம் கேட்டால் கருக்கு தேங்காய், முத்திய தேங்காய் வறுத்து அரைக்கும் குழம்புகளுக்கு சாலச்சிறந்தது, இளந்தேங்காயை உடைத்து பூப்பூவாய் துருவி, அம்மியில் போட்டு சீரகம், மிளகு, காய்ந்த வத்தல், பொடியுள்ளி உப்பு, துருவிய தேங்காய், மஞ்சள், மல்லி, சிறிய நெல்லிக்காய் அளவு புளி  சேர்த்து அரைக்க வேண்டும், விறகு அடுப்பில் மீன் சட்டி வைத்து தேங்காய் எண்ணெய் சிறிது ஊற்றி கறிவேப்பிலை, நறுக்கிய பொடியுள்ளி சேர்த்து பொன்னிறம் வரும் அளவுக்கு தாளித்து, அரைப்பையும் சேர்த்து, தேவைக்கு நீர் சேர்த்து கொதிக்க விடவேண்டும்,  குழம்பு கொதிக்கும் முன்னே மீனையும், நீளவாக்கில் கீறிய பச்சைமிளகாய், பெரிதாய் நறுக்கிய தக்காளி பழம் மூன்றையும்  சேர்க்க வேண்டும், கொதிக்கும் போது மீன் வெந்து பச்சைமிளகாயின் காரம் சரியான பக்குவத்தில் இறங்கி, தக்காளியின் புளிப்பும் இனிப்பும் சேர்ந்தும் அமிர்தம் தயாராகும், பொரித்த சாளையும், அவித்த கிழங்கு கறியும், வாழையிலையில் போட்டு சாப்பிடுவதை தவிர வேறென்ன வேண்டும்,  ருசியில் உள்ளம் கிறங்கி போகும், இந்த போதைக்கு ஈடாய் எதுவுமில்லை.

                      இப்போதெல்லாம் அரிதாய் இந்த ருசியை உணரமுடிகிறது, காலமாற்றத்தில் விறகு அடுப்பு எங்குமில்லை, மீன் சட்டியும் காணக்கிடைப்பதில்லை, சாளையின் ருசியும் புவிவெப்பமயமாவதில் மாறி விட்டதா தெரியவில்லை, கடைசியாக இரண்டு வருடம் முன்  பெரியம்மை வீட்டிலும், பேருகாலம் சென்ற  மனைவி வீட்டில் போன வருடமும் அந்த ருசி கிடைத்தது, மொத்தமாய் சாளை குழம்பின் ருசி மீனில் மட்டுமில்லை, இளந்தேங்காயில், சேர்க்கும் சீரகத்தில், மிளகில், பச்சைமிளகாயில், தக்காளியில், மீன் சட்டியில், மண் அடுப்பில், எரிக்கும் விறகில், எல்லாவற்றிக்கும் மேல் சமைப்பவரின் பக்குவத்தில் உள்ளது, ஒருவேளை மணி கூறியதை போல  சாளை குழம்பு சமைக்கும் போது மட்டும், சமைப்பவர்க்கு கையில் பச்சைப்பாம்பை கொடுத்து ஒரு ராவு ராவி சமைக்க சொல்லலாமோ.                                                                                                              

    

No comments:

Post a Comment

இணைந்த கைகள்

  ஒரு மாலைநேரம், புதிய திரைப்படம். திங்கள் கிழமை,  மாலை நேரக்காட்சி,  இணைந்த கைகள்.  நிதானியுங்கள், அதே நேரம் உங்கள் மனைவி, அரசு மருத்துவமனை...