Saturday 25 April 2020

சிலுவையில் தொங்கும் சாத்தான் (வணிக கிறிஸ்து)






சிலுவை, பாவத்திற்கான சம்பளம் அல்லவா! அப்படியா சொன்னேன், சரி வைத்துக்கொள்வோம் அப்படியானால் மனிதகுமாரர் என்ன பாவம் செய்தார். இங்கே நிறுத்திக்கொள்ளுங்கள்,  தொடரும் முன் ஒரு அச்சம் உடலெங்கும் பற்றிக்கொள்கிறது. கிறிஸ்துவை உணர்ந்தவர்கள், தச்சனின் மகனை அறிந்தவர்கள், அவர் போதித்தவை வழி நடப்பவர், அவர் விரும்பிய புதிய உலகம் சிருஷ்டிக்கும் என்பதை  நம்பாமல் அவரையே காட்டிக்கொடுத்த யூதாஸின் நண்பர்கள், யூதாஸுக்கும் இங்கே இடமுண்டு. நீங்கள் மாத்திரம் தொடர்ந்து வாசியுங்கள். இங்கே பவுலின் வழியினர் வேண்டாம். ஆம், இது உங்களுக்கான பாதை அல்ல.  உங்கள் மேய்ப்பர், அதோ தெரிகிறதே கொல்கொதா மலைக்குன்று அங்கே இரத்தம் தோய்ந்த உடலில் ஈக்கள் மொய்க்க,  வலது விழி பிதுங்கி வெளிநிற்க, முன்பற்கள் சில உடைந்து, உதடு பிய்ந்து தொங்கும், வயிற்றின் கீழ்பக்கம் கிழிந்து பிரிந்த தோளில் சுருண்டு கிடக்கும் குடலை கொண்டவர் அல்ல.  உங்களுக்கானவர் வெண்ணுடை தரித்து, தலை வாரி, ஜொலிக்கும் கண்களுடன், ஒதுக்கப்பட்ட தாடியுடன்,  கைகளை விரித்து, கண்ணாடி மாளிகையில் நிற்கிறார். அவரின் பின்னே பரலோக சாம்ராஜ்ஜியம் விரிந்திருக்கிறது.  உங்களுக்கு தெரிகிறதா?  எட்டி பாருங்கள்.  நம்பிக்கையை அதிகப்படுத்துங்கள், பவுலின் மைந்தர்களே, தெரிகிறாரா உங்கள் ஆண்டவர்.  அவரின் பின்னால் செல்லுங்கள், வாட்டிகன் இருக்கிறது. ஐரோப்பாவின் வியாபார மையத்தின் குறியீடு அவர், அவரோடு புதிய விவிலியம் இருக்கிறது, அதில் கைவிடப்பட்டோரின், ஏழைகளின், நோயாளிகளின் மனதை வருட தேன் தோய்த்த வார்த்தைகள் பலவுண்டு. 

 அதிகப்பிரசங்கித்தனம், யார் இவன்?  என்ன அருகதை இருக்கிறது எங்கள் ஆண்டவரை பற்றி இவன் பேச! கைகளை மடக்கி கொண்டு, முஷ்டியை மடக்கி, ஆத்திரத்துடன் கண்கள் சிவக்க, நாவை மடித்து என்னை நோக்கி வரும்முன் கொஞ்சம் நிதானியுங்கள்.  என்னை பாருங்கள் ஏதாவது புலப்படுகிறதா?  நான் கருப்பாக இருக்கிறேன். நீங்கள் வெளுப்பாக இருக்கீறீர்கள்.  என் வயிறு தேடிக்கண்டுபிடிக்க வேண்டும், உங்களுக்கு கொடைவண்டி சாடி வெளிவர காத்திருக்கிறது. அழுக்கான ஆடையை அணிந்திருக்கிறேன், நீங்கள் சுத்தமான ஆடையுடன் உலா வருகிறீர்கள்.  மற்றபடி நமக்கு இரு கண்கள், ஒரே வயிறு, ஒரே குறி இன்னும் பல ஒரே ஒற்றுமையுடன். ஆனால், ஒரு பெரிய, ஆமாம் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது.  சங்கிலியின் ஒரு முனை என் கழுத்தில், மறுமுனை உங்கள் கைகளில்.  எந்த பக்கமும் இழுக்கலாம், உங்கள் வீட்டு குழந்தைகள் கைகளில் விளையாட்டாய் கொடுக்கலாம், அவர்கள் இழுத்துச்செல்ல நான் நாய் மாதிரி, நாய் வேண்டாம்,  நாய் கூட எங்களை விட கொஞ்சம் சுதந்திரம் ஆனதுதான். 

என் பெயரை சொல்லவேண்டுமே, இரண்டு பத்திகள் கடந்துவிட்டீர்கள், என் பெயர் முதூரி, கூகி வா தியாங்கோ சூட்டிய பெயர். கென்யா எங்கள் நாடு, எங்கள் நாடு கென்யா. நான் எங்கள் இரத்தத்தை உறிஞ்சும் சாத்தான்களை வெறுக்கிறேன். சாத்தான்கள், மனிதசதை, இரத்தம் அருந்தும் சாத்தான்கள்.  ஆண்டவர் சொன்னாரே, அப்பம் எனது உடல், திராட்சை ரசம் என் இரத்தம். இதற்கு வேறு அர்த்தம் இருப்பதே, சாத்தான்களே உங்களை கண்டபின் அறிந்துகொண்டேன்.  நீங்கள் எங்களுடைய சதையை தின்று, தாகத்திற்கு எங்கள் இரத்தத்தை குடிக்கிறீர்கள்.  எங்கள் உழைப்பை சுருண்டி, என் நாட்டின் கருப்பையை அறுத்து மலடு ஆக்குகிறீர்கள்.  நான் முதூரி,  கூகி வா தியாங்கோ எனக்கு இப்பெயரை சூட்டினார்.  கொஞ்சம் பொறுங்கள் ஜசிந்தா வரியிங்கா வருகிறாள். அவள் ஏதோ சொல்ல முற்படுகிறார்கள்.  ஒன்றை சொல்கிறேன், இத்தோடு விடை பெறுகிறேன் , வேண்டாம் அது ரகசியம், காக்கப்பட வேண்டும். 

சுகர் கேர்ள், எப்பேர்ப்பட்ட பட்டம். எங்கும் திரியலாம், மினுக்கலாம், தொடையை மாத்திரம் விரித்துகொண்டே இருக்கவேண்டும். அனலாய் கொதிக்கும் மூச்சுக்காற்று காலிடுக்கில் நுழைந்து உடல் சிலிர்க்கும், ஆண்களின் அகங்காரம் இங்குதான் எடுபடும்,   ஆனாலும் சிலநேரம் தலைகுனிய நேரிடலாம்.  அதுக்கும் சேர்த்து அடி எங்கள் பிருஷ்டத்திலே பலமாய் விழும், நான் அப்படியல்ல, நான் வரீயிங்கா. வெளுக்கும் தோலுக்கு களிம்புடன்  அலைந்து, முடியை சூடேத்தி நேராக்கி, வெள்ளை பெண்களை போல மாறி அலைந்தேன்.  எங்குமே,தலை நிமிர்த்தி எடுப்பாய் நிற்க பயம், என் மார்பை நோட்டமிடும் கண்களை சந்திக்க பயம், ஒருவேளை சந்தித்தால் சமிக்கையோ என எண்ணி தொடையை தடவுவான்.  முதலாளிகள், அயோக்கிய சவங்கள்.  தினமும் தேவாலயம் செல்வேன்,  விவிலியம் ஏந்தாத இரவுகள் இல்லை.  சிலுவையில் நமக்கான பாவத்தை சுமந்து நிற்கும் பெரும்கருணை கொண்ட ஆண்டவரிடம் தினமும் மன்றாடுவேன்.  ஆனால் ஒரு நாள் சாத்தானின் குரல் என்னுள் கேட்டது.  அது பெரும்கதை, நேர்த்தியாக கதைசொல்ல கூகி வா தியாங்கோ வேண்டும். 

இங்கே, என் மனதில் கனமான இரும்பை போல கனக்கும், கோலிசோடாவின் இடைநிற்கும் கோலியை போல அங்குமிங்கும் உருண்டோடும் சித்திரங்களும் என்றுமே அகலாமல்,  தாழ்ந்து கிடக்கும் கருமேகக்கூட்டம் போல வருத்தத்தை, கவலையை மழையாய் கொட்டும். நான் நனைவதில் எவ்வித பலனும் யாருக்குமில்லை.  ஆனால் எனக்காக நனைவேன். கென்யாவின், வியாபாரிகள் கருப்பான தோல் கொண்ட வெள்ளை மனதுக்காரர்கள்,  அவர்கள் ஏற்றுக்கொண்டு, தலைகவிழ்ந்து நிற்கிறார்கள்  ஐரோப்பாவாவின், வட அமெரிக்காவின், ஜப்பானின் முதலாளிகள் முன். நான் ஜசீந்தா வரியீங்கா, கருப்பின் அழகு இவர்களுக்கு எப்படி தெரியும்.  ஆப்பிரிக்காவின் அழகு இவர்களுக்கு புரியுமா?  எங்களின் இசை?  எங்கள் தொன்மங்கள்?  எங்கள் தெய்வங்கள்?... 

கடைசியாக என்ன சொன்னேன்,  தெய்வங்கள் என்றா சொன்னேன்?  கிறிஸ்துவின் அல்லாஹ்வின் சேனைகள் நிரம்பி இருக்கிறது ஆப்பிரிக்கா, இங்கே எங்கே போய் தேடுவேன் எங்கள் கடவுள்களை?  முதலாளிகள் கூறினார்கள், எங்கள் கடவுள் காட்டுமிராண்டிகள், பலி கேட்பவர்.  அப்படியா?  கேள்விகள் இன்றி ஒதுக்கப்பட்டது எங்கள் கடவுள்கள். முதலாளிகளே, உங்கள் கடவுள்கள் சுரண்ட ஆணையிட்டாரா?  அடுத்தவன் வீட்டை இடித்து, செங்கற்களை பொருக்கி உங்கள் மாடமாளிகைகளை எழுப்ப சொன்னாரா?  உங்களுக்கு தெரியுமா! நீங்கள் நூறு ஏழைகளின் வீட்டை இடித்து ஒரு மாளிகை எழுப்புகிறீர்கள்.  பலி கேட்கும் எங்கள் கடவுள் சிங்கத்தை போல, யானையை போல, சிறுத்தையை போல, உலகத்தின் நியதியை அறிந்தவர், பேராசை இல்லாதவர், மழை போல் உலகம் தளிர்க்கும் கருணை கொண்டவர், புவியை போல பரந்த மனம் கொண்டவர்.  நீங்கள் இங்கே அழைத்து வந்தது கிறிஸ்துவா?  இஸ்ரேலில் கோயிலில் பூசாரிகளை கண்டித்தவர், நோயாளிகளின் கைகளை அன்போடு தழுவியவர், இல்லை இல்லவே இல்லை நீங்கள் அழைத்து வந்தது சாத்தான்.  சத்தியமாக, நிச்சயமாக சொல்வேன் அது சாத்தான். வெண்ணுடை தரித்து, கைகளை அகல விரித்து, தலை வகிடு எடுத்து, தாடிகள் செதுக்கப்பட்டு, ஜொலிக்கும் கண்களுடன் நைரோபியிலும், இல்மோராக் தேவாலயங்களிலும் நிற்கும் அது கிறிஸ்துவா! கிறிஸ்துவை, அவரின் ஆன்மாவை நெருங்கியவர், அவரின் கைகளை தழுவியவர், ஆத்மார்த்தமாக அவர்பின் செல்வர் எவராவது சொல்லட்டும், இது கிறிஸ்துவா? 

 வெள்ளைத்தோல் காரர்களே, நாங்கள், உங்கள் அடிமைகள். உங்கள்  சாத்தானை சிலுவையில் அறைவோம். முதூரி இரகசியம் என்றாரே, என்ன தெரியுமா?  கென்யாவில் புரட்சி உருவாகிவிட்டது.

No comments:

Post a Comment

இணைந்த கைகள்

  ஒரு மாலைநேரம், புதிய திரைப்படம். திங்கள் கிழமை,  மாலை நேரக்காட்சி,  இணைந்த கைகள்.  நிதானியுங்கள், அதே நேரம் உங்கள் மனைவி, அரசு மருத்துவமனை...