Sunday 26 April 2020

A Hidden Life (Based on a true story)





ஆஸ்திரிய நாட்டு விவசாயின் கதை, மெசியாவின் வார்த்தைகளின் கனத்தை நெஞ்சில் தாங்கியவனின் கதை, மனைவியை ஆத்மார்த்தமாக நேசித்தவனின் கதை, குழந்தைகளை வாஞ்சையோடு அள்ளிக்கொஞ்சியவனின் கதை, அன்னையை அன்புடன் கவனித்தவனின் கதை, நண்பர்களோடு கையில் பீரோடு சிரித்தபடி அரட்டை அடித்தவனின் கதை, போரை வெறுத்தவனின் கதை, ஹிட்லரை வெறுத்தவனின் கதை.  இது பிரான்ஸின் கதை, அவன் மனைவி ஃபனியின் கதை, அவர்களின் காதல் கதை, முழுமையான கிறிஸ்துவனின் கதை,  மொத்தத்தில் இயற்கையின் கதை. 

ஆஸ்திரியா ஜெர்மனியின் நட்பு நாடு, இரண்டாம் உலகப்போரின் காலகட்டத்தில்,  ஜெர்மனியோடு இணைந்து நட்பு நாடுகளும் போர் புரிந்துகொண்டிருக்கிறது.  வீரர்கள் எப்படி உற்பத்தி ஆகிறார்கள், அவன் விவசாயியோ, ஆசிரியனோ, கொல்லனோ, தச்சனோ அரசாங்கம் அழைத்தால் கையில் துப்பாக்கி ஏந்தி குறிபார்த்தோ இல்லையோ எதிரிகளை கொல்லவேண்டும், எதிரிகளின் குருதி நிலத்தின் ஆறாய் ஓடவேண்டும். ஹிட்லரின் தாகம் தீர வேண்டும். 

ஆஸ்திரிய மலைமுகடுகளின் அடிவாரத்தில் விவசாயம் செய்கிறான் பிரான்ஸ், காதல் மனைவி, அம்மா, மூன்று குழந்தைகள், மனைவியின் சகோதரி, சில நண்பர்கள் என அமைதியான, இயற்கையோடு இயைந்த வாழ்க்கை. இடையில் போர்ப்பயிற்சி பெற அழைக்கப்படுகிறான், அந்நேரம் எதிரி நாடு சரணடைவது போல தெரிய, திருப்பி கிராமத்திற்கே அனுப்பப்படுகிறான்.  ஒரு நாளின் நீளம் எவ்வளவு,  அது முழுக்க முழுக்க மனைவியின் மேல் தீராக்காதலுடன் வாழ்கிறான். இறைவனுக்கு விசுவாசமாய் இருக்கிறான்.  அவனது அன்பின் ஊற்றாய் நெடுக இயற்கையும் துணை நிற்கிறது. வெண்மையான, குளிர்ந்த மேகக்கூட்டம் மோதும் ஆல்ப்ஸ் மலைச்சிகரமும், விழி எட்டி திரும்பும் முனை வரை மலைச்சரிவுகளில் புல்வெளியும், சலசலத்து ஓடும் ஆற்றின் நீரோட்டமும், மலை அடிவாரத்தில் கட்டப்பட்ட அழகிய தேவாலயமும் இவர்களை ஆசிர்வதித்தபடியே இருக்கிறது.  இடையில் போர் முடியவில்லை, தொடர்கிறது தன்னையும் எப்போது வேண்டுமானாலும் அழைக்கலாம் என உணர்கிறான். மறுக்கிறான், கிராம தேவாலய பங்குத்தந்தையிடம் போருக்கு செல்ல தான் தயாரில்லை என மறுக்கிறான்.  கிராம தலைவர் பேசுகிறார், அதற்கும் மறுக்கிறான். விஷயம் கசியத்தொடங்க கிராமம் மொத்தமாய் அவர்களை வெறுக்கிறது. அவனின் இச்செயலுக்கு காரணம், மனைவியின் மீதுள்ள மோகம் என பழி ஃபனியின் மேல்.  பொறுக்கிறான், உடைகிறான், அலைக்கழிப்பில் மிதக்கிறான், ஒருநிலையில் ஏற்றுக்கொள்கிறான். 

அன்றைய காலகட்டம்,  ஹிட்லர் இரட்சிக்க வந்தவர் போல தன்னை முன்னிறுத்தினார்,  அவரின் குரல், எழுத்து எல்லாமே புரட்சி, இனவெறுப்பு, ஜெர்மானிய மீட்சி என சமரசம் இன்றி பெரும்கூட்டம் நாஜிக்களாக அவர்பின் நின்றது. போருக்கு வலுவான, நடுவயது காரர்கள் கட்டாயம் சென்றாக வேண்டும், யாருக்காக தன் இனத்திற்காக, நாட்டுக்காக. இல்லையேல் அது பாவம், அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். கிராம மக்கள் பிரான்ஸின் குடும்பத்தை வெறுக்க, ஒதுக்க அதுவே காரணம். 

நிர்பந்தம் காரணமாய் போருக்கு செல்கிறான், ஃபனி பிரியாவிடை கொடுக்கிறாள். தன்னை அதற்கு தயார்ப்படுத்துகிறாள், குழந்தைகளை, அவன் அன்னையை அரவணைக்கிறாள். இரயில் கிளம்புகிறது, கைகள் பிரிகிறது. ஜெர்மனி சென்றவன்,  'ஹெய்ல் ஹிட்லர்' சொல்ல மறுக்கிறான்.  ஹிட்லரின் வார்த்தைகள் மேல் சத்தியம் செய்ய மறுக்கிறான். விளைவு சிறை, கொடும்சிறை. 

ஒரு திரைப்படத்தின் வெற்றி அதன் ஆரம்ப நிமிடங்களில் இருக்கிறது. நம்மை முழுக்க உள்ளிழுக்கும் ஆற்றல் ஆரம்ப காட்சிகளுக்கே உண்டு.  அதற்கு உதாரணம் இப்படத்தின் ஆரம்ப காட்சிகள். பிரான்ஸ் மனம் நிலையழிந்து அலையும் திரியும் தருணம் எல்லாம், கிறிஸ்துவை நினைக்கிறான், அவரின் வார்த்தைகளை நம்புகிறான். படம் முழுக்க, குறியீடாய் கிறிஸ்துவின் வார்த்தைகள் அவனுள் எழும் நேரமெல்லாம், இயற்கை பிரம்மாண்டமாய் காட்சிகளாய் திரையில் விரிகிறது. இயற்கையே ஆதிரூபன், இயற்கைக்கு கீழேயே நாம்.  

காதல், எது காதல். கையை கிழித்து, குருதியில் காதலியின் பெயரை எழுதுவதா? இல்லை கடல் கடந்து அவள் முன் நிற்பதா?  எது காதல். ஃபனி காதலின் உச்சம், அவன் வார்த்தைகளை நம்புகிறாள், அவன் முடிவுகளோடு துணை நிற்கிறாள்.  பிரான்ஸின் விசுவாசம் கிறிஸ்து, ஆனால் அவன் நம்பிக்கை ஃபனி. கடிதங்கள் மூலமே ஒவ்வொருக்கொருவர் நம்பிக்கையை விதைத்து, வாழ்வின் ஒவ்வொரு நொடியை எதிர்நோக்கும் உந்துதலை அறுவடை செய்கிறார்கள். காதல் மகத்துவம் ஆனது.

ஃபனிக்கும் அவள் சகோதரிக்கும் இடையேயான பிணைப்பு. பிரான்ஸின் அம்மாவிற்கும் ஃபனிக்கும் இடையிலான ஒரு உரையாடல், போரின் வலியை அனுபவித்த பெண், இன்னொருத்தி அதனை அனுபவிக்கப்போகிறாள் என அறிந்து உடைகிறாள். ஒருவிதத்தில் இங்கே ஃபனிக்கும் அவள் அன்னையாகிறாள். பிரான்ஸை சந்திக்க ஃபனி தந்தையோடு செல்கிறாள், அவனை சந்திக்க இயலவில்லை. ஃபனியிடம் மன்னிப்பை கோருகிறார், அவரும் பிரான்ஸை வெறுக்கவில்லை. மாறாக இயலாமை அவரை நொறுக்குகிறது.

ஒருமனிதனின் அகங்காரம், இனவெறி போரை தூண்டி, சங்கிலியை போல நீண்டு எல்லோரின்,  நாட்டின் குடியானவரின் வாழ்வில் விஷம் கொண்ட நாகமாய் படமெடுக்கிறது. நாஜிக்களின் சிறை பிரான்ஸை, அவனின் மனசின் திரையை கிழிக்கிறது. அவன் அழுகிறான், கூவுகிறான். பாதையில் மட்டும்  தெளிவாய் இருக்கிறான்.அவனின் மேய்ப்பர் யார் என அறிவான். அவரின் வார்த்தைகளின் கனம் அவன் இதயத்தில் கனக்கிறது. வழக்கு நீதிமன்றம் செல்கிறது, வழக்கறிஞர் அவனிடம் மன்றாடுகிறார். ஹிட்லரின் வார்த்தைகள் மேல் சத்தியம் செய், இதயத்தில் இருந்து வேண்டாம், வெறும் வார்த்தைகளாக எண்ணிக்கொள் சத்தியம் செய்ய வேண்டுகிறார். மறுக்கிறான், அவனது கிறிஸ்துவின் வார்த்தைகள் கொல்வதை பாவம் என்கிறது.  இங்கே நாஜிக்கள் கையில் விவிலியம் ஏந்தியபடி,  கழுத்தில் குருசுடன், யுத்தகளத்தில் கொல்கிறார்கள். யூதர்கள் ரத்தம் தங்கள் மேல்பட்டால் மகிழ்கிறார்கள். 

நீதிபதி கேட்கிறார், நீ இதை செய்வதால் எதை கொண்டு போகப்போகிறாய். இதில் என்ன உன் பிடிவாதம், அவனுக்கு தெரியவில்லை.  ஆனாலும் மறுக்கிறான். விளைவு உச்சபட்ச தண்டனை.  விஷயம் ஃபனிக்கு தெரியவர, பங்குத்தந்தை உடன் பெர்லின் புறப்படுகிறாள், இருவரும் சந்திக்கிறார்கள்.  பங்குத்தந்தை கெஞ்சுகிறார் இறைவன் வார்த்தைகளை இதயத்தில் இருந்தே அளக்கிறார்,  நிலைப்பாட்டை மாற்று என கேட்கிறார். பிரான்ஸ் அமைதியாய் இருக்கிறான், ஃபனி அவனிடம் தன் காதலை கூறுகிறாள், நீ எடுக்கும் எந்த முடிவுக்கும் தான் துணை நிற்பதாய் கூறுகிறாள். இருவரையும் சூழல் பிரிக்கிறது. பின் நடப்பவை பிரான்ஸின் விருப்பம் போல நகர்கிறது. 

இங்கே எனக்கு தோன்றியது ஒரே வரிதான் shutter island-ல்  இறுதியில் வரும் வரிகள் 

"Which would be worse,  to live as a monster or die as a good man".

இவ்வரிகள் இங்கே பிரான்ஸ்காக எழுதப்பட்டது போல தோன்றியது. தீர்மானம் மற்றும் நம்பிக்கை நம்மை எங்கு வேண்டுமானாலும் நகர்த்தும். ஃபனியின் காதலை பெற, நாம் பிரான்ஸாக வாழ வேண்டும்.

இப்படத்தின் ஆன்மா இசையும், காட்சிமொழியும். 

No comments:

Post a Comment

இணைந்த கைகள்

  ஒரு மாலைநேரம், புதிய திரைப்படம். திங்கள் கிழமை,  மாலை நேரக்காட்சி,  இணைந்த கைகள்.  நிதானியுங்கள், அதே நேரம் உங்கள் மனைவி, அரசு மருத்துவமனை...