Wednesday 31 July 2019

அப்பாவை தேடி









"அப்பா இருக்காரா"

"இங்க இல்ல, இப்போலாம் இங்க வாராதே கிடையாது "

"பொய் சொல்லாதீங்க, அவரு இங்கதான் இருப்பாரு, காலேஜ் பீசு கட்டணும், இன்னைக்கு தாரேன்னாரு"

"எம்பிள்ள ஆணையா சொல்லுகே அவர் இல்ல"

"அப்போ கதவ  தொரங்க, நா பாத்துட்டு இல்லைனா போய்கிடுகேன்"

பொறுமை இழந்து வெடித்துதான் போனேன், அதுவரை இல்லாத ஆத்திரம், யார் மேல் அப்பா மேல்தான், கதவை பலமாக தட்டினேன், மிகவும் பலமாக, கால்களால் உதைக்கவும் ஆரம்பித்தேன், அது ஒரு சிறிய கிராமம், ஊர் பெரியவர்கள் கூடிவிட்டார்கள், யாரும் என்னிடம் ஏன் இப்படி செய்கிறாய் என்ற கேட்க இயலாது, நான் என் அப்பாக்காக அவரின் இரண்டாவது மனைவி வீடு முன் பைத்தியக்காரனாய் கிறுக்குத்தனம் செய்துகொண்டிருந்தேன், மாதம் இருமுறை அவர்களும் இதை கவனிக்கிறார்கள், அவள் கதவை திறந்தாள், அப்பா அங்கே இல்லை, பெரும்விரக்தி அங்கிருந்த சாமி படங்களை உடைத்தேன், இதுவரை அவளும் என்னை அப்படி கண்டிருக்கமாட்டாள், வெளியே இறங்கி சைக்கிளை எடுத்து வேகமாக மிதித்து கிளம்பினேன், கோதைகிராமம் சிவன்கோயில் கடந்து சபரி அணை இசக்கியம்மன்  கோயில் அருகே அப்பா நடந்து வந்துகொண்டிருந்தார், அவர் என்னை கவனித்து விட்டார், நன்றாக குடித்திருப்பது அவரின் நடனமாடும் நடையிலே தெரிந்தது, என்னருகே வந்தார், சைக்கிளை ஓரமாக நிறுத்தி இசக்கியம்மன் கோயில் அருகே ஒதுங்கினேன்.

"உங்க அம்மையை கொல்லனும், கொன்னுட்டு ஜெயிலுக்கு போயாவது நிம்மதி கிடைக்கணும், இங்க எதுக்குல வந்த"

"நாளைக்கு காலேஜ் பீசு கட்டணும், நாந்தான் அன்னைக்கே சொன்னேன்லா" தேம்பி தேம்பி அழுதேன்.

"சரி நீ போ, அப்பா நாளைக்கு சாயந்திரம் தருவேன்"
நிலையில்லாமல் அசைந்து அசைந்து அவர் கோதைகிராமம் போகும் பாதையில் நடந்தார், எனக்கு எதிரே பரந்த பசும் வயல்வெளி, இந்த பக்கம் தோவாளை மலை அதை தொடர்ந்து தாடகைமலை, கூடவே சலசலத்து ஓடும் பழையாறு, மெதுவாய் அணையருகே சைக்கிளை தள்ளியபடி நடந்தேன், வண்ணான்துறையில் துணி துவைக்கும் சத்தம் கேட்டது, தென்னை மரங்களுக்கிடையே கட்டப்பட்டு இருந்த கயிறுகளில் துணிகள் அசைந்தாடியது, அணையின் மதகுகளில் கரும் பல்லிகள் அப்பியிருந்தன.

இது வழக்கமாக நடக்கும் ஒன்றுதான், இருந்தாலும் அது உண்டாக்கும் ரணம் என் உடல் எங்கும் பற்றியெரியும், நேரம் தெரியாமல் அங்கேயே உட்கார்ந்திருந்தேன், வீட்டுக்கு சென்றால் அம்மா அப்பாவிடம் பீசுக்கு ருபாய் வாங்கினாயா என்று கேள்வி கேட்பாள், இல்லை என்றால் எனக்கு சாமர்த்தியம் போதாது என்று அழுது கூப்பாடு வைப்பாள், இதற்கும் சேர்த்து என்னை ஏசுவாள்.   இதே சபரி அணை வழியாக அப்பாவின் சைக்கிளில் நானும் அம்மாவும் பொற்காலம் திரைப்படம் ராஜா தியேட்டரில் பார்த்தோம், திரும்பி வரும் வழியில் அப்பாவின் தோள்களிலே நான் உறங்கிவிட்டேன், கண்முழித்து பார்க்கும் போது வீட்டில் இருந்தோம், அந்த அப்பா மறுபடி வரப்போவதில்லை, இவர் அவர் இல்லை. 

அம்மாவை சொல்லியும் குற்றமில்லை, எல்லாம் நல்லபடியாக தான் போய்க்கொண்டிருந்தது, நான் ஆறாவது படிக்கும் போது அம்மாக்கு கடுமையான வயிற்று வலி, கோட்டார் ஆசுபத்திரிக்கு சென்றோம், கர்ப்பப்பையில் கல்  என தெரிந்தது, உடனடியாக ஆப்ரேஷன் செய்ய வேண்டும், அம்மாக்கு ஏ நெகடிவ் இரத்தவகை அப்பாதான் எங்கங்கோ தேடி அலைந்து இரத்தம் வாங்கி வந்தார்,  ஆப்ரேஷன் தியேட்டர் வெளியே நான் நின்றிருந்தேன் என் கையில் நூற்று எட்டு சரண கோஷம் புத்தகம் கொடுத்து படிக்க சொன்னார், "சாஸ்தா பாத்துபான்ல, ராக்கோடிகண்டன போய் பாத்துல வெடலு  போட்றக்கேன்"  என்றார். நானும் அதே புத்தகத்தை படித்து படித்து உறங்கியே போனேன், ஆச்சி என்னை எழுப்பினால், அம்மாவை ஸ்ட்ரெச்சரில் இழுத்து கொண்டு போனார்கள், தலையில் பச்சையுரையும், பச்சை நிற போர்வையாலும் மூடப்பட்டு கிடந்தாள், கண்கள் மூடி வாய் சிறிது திறந்து கிடந்தது, நர்ஸுகள் ஒன்றும் பயப்பட வேண்டாம் ஐ சி யு வார்டுக்கு கொண்டுபோய் இரண்டு நாள் கவனிப்பதாகவும் பின்னர் சாதாரண வார்டுக்கு கொண்டு போய்விடுவோம் என்றும் கூறினாள். அப்பா தைரியமாக இருந்தார், என்னை வீட்டுக்கு சைக்கிளில் அழைத்து போனார், போகும் வழியில் பரோட்டோ வாங்கிக்கொடுத்தார்.

அம்மா வீட்டுக்கு வந்ததும் , எனக்கு இன்றைக்கும் நியாபகம் உள்ளது, அதிகாலை இருக்கும் எங்கள் ஹோட்டலுக்கு தேவையான மாவு அரைக்க கிரைண்டர் ஓடிக்கொண்டிருந்தது, நான் சத்தத்தில் முழித்து பார்க்கும் போது அப்பா பீரோவில் எதையோ எடுத்துக்கொண்டிருந்தார், அவர் என்னை கவனிக்கவில்லை நானும் தூங்கிவிட்டேன், அதன்பின் அப்பா வீட்டுக்கு வரவே இல்லை, ஒரு மாதம் அப்பா எங்குமே கிடைக்கவில்லை, அப்பாவை தேடி அம்மா அவர் சொந்த ஊரான திருநெல்வேலிக்கு சென்றாள் , திரும்பி வந்த மாலை அழுது தீர்த்தாள், என் ஆச்சியையும் மாமாவையும் ஏசினாள், என்னை கட்டியணைத்து அழுதாள், அடுத்தநாள் என்னையும் அழைத்துக்கொண்டு திருநெல்வேலி சென்றாள், அப்பா வேறு ஒரு வீட்டில் இருந்தார், அவருடன் இன்று நான் யார் வீட்டுக்கு சென்றேனோ அவளும் இருந்தாள், மாமா கண்ணீர் முட்டி ஒரு ஓரமாய் நின்றிருந்தார், அப்பா தலையை குனித்தபடி எதையோ வெறித்து பார்த்து கொண்டிருந்தார், அவள் அம்மாவின் கால்களில் விழுந்து தேம்பி தேம்பி அழுதாள், "எனக்கு எதுவும் தெரியாதுக்கா, முத்து மாறி ஒரு பிள்ளையிருக்கே , ஏமாந்துட்டேனே" என்று தலையில் அடித்து அழுதாள், கெட்ட காலம் எல்லாம் சீக்கிரம் நடந்துவிட்டது, அவளை இங்கேயே தனியாக வீடு எடுத்து வைத்துக்கொண்டார், ஒரு நாள் விட்டு ஒரு நாள் ஒரு வீடு, பெரும்குடியும் உண்டு, அவர் வந்தாலே நாறும், ஆனால் எனக்கு அவரை அதிகம் பிடிக்கும்.

கன்யா சைக்கிள் மார்ட்டில் நான் சைக்கிள் வாடகைக்கு  எடுக்க சென்றாலே தெரியும் நான் அப்பாவை தேடி கோதைக்கிராமம் செல்கிறேன் என்று, எப்போதும் துணைக்கு முத்துவோ, விவேக்கோ கூட வருவதுண்டு,  மாமாக்கு இதெல்லாம் பிடிக்காது, அப்பா ஓடிப்போன அன்றே மாமா அம்மாவிடம் "எட்டி இவன இடவாடு தீத்திரலாம், வேணாண்டி இந்த தாயோளி, சபரியையும் சேத்து மூணு பிள்ளையா வளத்துக்கேன், கேளு மக்கா, இவன நம்பாதே" என்றார், அம்மாதான் அவரை விட்டுக்கொடுக்கவே இல்லை "வேணானே, அவர உட முடியாதுன்னே, நா யார்கிட்டயும் வரமாட்டேன், எனக்கு அவரு வேணும்னே" என உடைந்து அழுதாள், மாமா அதன்பின் இந்த பிரச்சனைகளில் தலை இடுவதில்லை, ஆனால் மாமாக்கு நான் அவரை தேடி போவதில் மாமாக்கு வருத்தம் உண்டு, அன்றைய நாள் அவர் என்னிடம் அன்பாய் பேசமாட்டார், எனக்கு தெரியும் மாமாக்கு நான் கோதைக்கிராமம் செல்வது பிடிக்காது என்று.

லேசாக மழைச்சாரல் விழுந்தவுடன் சுயநினைவுக்கு வந்தேன், மழை வெறிக்கும் முன்னே வேகமாய் சைக்கிளை மிதித்து கன்யாவில் சைக்கிளை விட்டு வீட்டுக்கு நடந்தேன், உள்ளே அம்மா அடுக்காளையில் இருந்தாள், நான் "அம்மா அப்பாவே பாத்தேன், ரூவா கேட்டேன், நாளைக்கு தாரேன்னாரு"  என்றேன், "எனக்கு ஒன்னும் தெரியாது, நாளைக்கு நீயே அவர பாத்து வாங்கி பீசு கட்டிரனும், எனக்கு முன்னால வந்து நிக்க கூடாது" என்றாள். எனக்கு தேவையான அனைத்துக்கும் காசை அப்பாவை தேடி தேடியே நான் வாங்க வேண்டிருந்தது, அவர் வேலை செய்த அனைத்து கடைகளிலும் என்னை தெரியும், சாயந்திர நேரம் அவரை தேடி ஹோட்டலுக்கு வெளியே நிற்பேன், பெரும்பாலும் நான் உள்ளே போய் அப்பாவை பற்றி கேட்க மாட்டேன், எனக்கு அதற்கான தைரியம் கிடையாது ஒரு கூச்சம் எந்நாளும் என்னை தடுப்பதுண்டு, அவரே என்னை கண்டு வெளியே வந்தால் தான் உண்டு, இல்லை யாராவது அப்பாவிடம் நான் காத்துக்கொண்டிருப்பதை கூறவேண்டும், என்னை உள்ளே அழைப்பார், சாப்பிட சொல்வார் நான் முடியாது என்பேன் , தேவைப்படும் காசை வாங்கிக்கொண்டு வேகமாக வெளியேறிவிடுவேன், அதுவரை அந்த ஹோட்டலில் நான் தலை தூக்கவேமாட்டேன். என்னால் அது முடியாது. 
   
அப்பாவை நான் யாரிடமும் விட்டு கொடுப்பதில்லை, சில நேரங்களில் குடித்து விட்டு அவர் அம்மாவை அடிக்கும் போது, அவரை தடுப்பதுண்டு ஒருமுறை ஆத்திரத்தில் அவரை தள்ளிவிட்டேன், அவரின் ஊக்கத்திற்கு என்னை அவர் அடித்தால் எதிர்த்து நிற்க என்னால் முடியாது, ஆனால் அதுபோல் பல சந்தர்ப்பங்களில் அமைதியாக சென்றுவிடுவார், என்னை அடிக்க கூட முயன்றதில்லை, அவர்க்கு நன்றாக தெரியும் அவர் செய்யும் தவறுகள் அதனில் இருந்து விடுபட என்னவோ குடி அவர்க்கு மருந்தானது, என்ன குடி அவரை அதன் ஆளுகைக்குள் கொண்டு போய் விட்டது.

சில நேரங்களில் காலம் நாம் எதிர்பார்ப்பதற்கு மாறாகவே அதன் போக்கை நிர்ணயிக்கும், மாமா மருத்துவமனையில் இருந்த நாட்களில் எனக்கு பெரிய நம்பிக்கை இருந்தது, நலமாக திரும்பி வருவார் என்றே எதிர்ப்பார்த்தேன், ஒரு இரவு அம்மா, பெரியம்மா மாமாவை போய் பார்த்துவிட்டு வந்து எதோ தவறாக நடக்கும் என்பது போல் அழுது தீர்த்தனர், நான் அவர்களை சமாதானப்படுத்தி தூங்கவைத்தேன், நள்ளிரவில் அடித்த கைபேசி அழைப்பு அதை உடைத்து சுக்குநீராய் ஆக்கியது, உடனடியாக மருத்துவமனை சென்று உயிர் இல்லாத மாமாவை ஸ்ட்ரெச்சரில் கண்ட நொடி என்னுள் ஏற்படுத்திய வலி இதயத்தின் அழுத்தத்தை அதிகரித்தது, உள்ளுக்குள் எழுந்த ஒரே எண்ணம் அப்பாவை தேடி இந்த தகவலை கூற வேண்டும்.

மாமாவை வீட்டுக்கு எடுத்து சென்று உள்ளே நுழைந்த போது அத்தை எந்திரிக்கவே இல்லை, நீலு என் சட்டையை பிடித்து அழுதாள் "சொல்லுங்க அத்தான், அப்பாக்கு எதுவும் ஆகாதுன்னு சொன்னிங்களே, எழுந்துக்க சொல்லு அப்பாவ" என்று அவள் கேட்ட கேள்விக்கு என் கண்ணீர்தான் பதிலாய் இருந்தது, பரமசிவன் மாமா ஆட்டோவில் அப்பாவை தேடி அவள் வீட்டுக்கு சென்றோம், "மாமா அவ வீடு உங்களுக்கு தெரியுமா", "தெரியும்  மக்கா, போய் பாப்போம்", "அங்க இருப்பாரா","அங்கதான் இருக்கனும், இருந்தா நல்லது", நடுஇரவு நாய்கள் ஊரை ஆக்கிரமித்து கொள்ளும் தருணம், அவள் வீடு பூட்டி இருந்தது, பரமசிவன் மாமா என்னை பார்த்தார், பிறகு அவரே கதவை தட்டி "லேய் லெட்சுமணா" என்றார், அவள் தான் பதிலுக்கு "அவரு இல்லனே" என்றாள், எனக்கு கோபம் அதிகமானது "நா சபரி வந்திருக்கேன்,அப்பாவ கூப்பிடுங்க" என்றேன், "லேய் இந்த நேரத்துல இங்க யாம்ல வந்தே" என்றார் அப்பா,"மாமா போய்ட்டுபா, நீ வாப்பா' என்றேன், அப்பா கதவை வேகமாய் திறந்து வெளியே வந்தார்,"என்னலே சொல்லுக", "ஆமாப்பா மாமா செத்துட்டு " என்று அழ ஆரம்பித்து விட்டேன், அவரும் அதே இடத்தில் உட்கார்ந்து தலையில் அடித்து அழ ஆரம்பித்து விட்டார், பின் ஆக வேண்டிய காரியங்கள் எல்லாம் முடிந்தது, மாமாக்கும் அப்பாக்கும் இடையே பல கோபதாபங்கள் இருந்தாலும் அவர்களிடையே ஆழமான பிணைப்பு உண்டு.

நான் சென்னை வந்து வேலை தேடி எனக்கு ஓரளவுக்கு சம்பளம் கிடைக்க ஆரம்பித்தது, எனக்கும் ஊருக்கும் இருந்த இடைவெளி அதிகரித்தது, அப்பாவும் நானும் பேசிக்கொள்வதும் குறைந்தது, அம்மாவை கைபேசியில் அழைக்கும் போதெல்லாம் அதிகமாய் அப்பா வீட்டில் இருப்பதில்லை, நானும் அவரை பற்றி விசாரிப்பதில்லை, அப்பா ஒரு வேலை என்னை அழைத்து பேசினால் எனக்கு தெரியும் அவர் குடித்திருப்பார், என்னிடம் பேச பெரிய தயக்கம் அவரை தடுப்பதுண்டு, நாங்கள் இருவரும் அவ்வளவாய் சிரித்து பேசியதில்லை, இருப்பினும் தெரிந்தோ தெரியாமலோ என்னுள் அவரால் பெரிய தாக்கம் ஒன்று உண்டானது, அவரை போல் மனைவியை குடும்பத்தை கவனித்து கொள்ளக்கூடாது.

ஒரு பொங்கல் விடுமுறையில் ஊருக்கு சென்று சென்னை திரும்பும் போது அம்மா மன்றாடி அப்பாவை வேலை பார்க்கும் கடையில் போய் பார்த்து விட்டு போகுமாறு கூறினாள் , வேண்டா வெறுப்பாக சென்றேன், அப்பா டீ ஆற்றிக்கொண்டிருந்தார், என்னை கண்டதும் மிகவும் மகிழ்ச்சியடைந்தார், எனக்கு டீ போட்டு குடிக்க சொன்னார், "சாப்டியால", "சாப்டேன் பா","நேரத்துக்கு சாப்பிடனும்ல, அதுக்குதான் வேலை பாக்கது, கண்ட பழக்கம்லா கத்துக்காதே, ஒழுங்கா இருக்கனும், அம்மாவ நல்லா பாத்துக்கோ", இதுதான் நாங்கள் பேசிய வார்த்தைகள், நான் அங்கிருந்து கிளம்பும் போது, அவர் என்னையே பார்த்து கொண்டிருந்தார்.

அது பிப்ரவரி மாதம், சென்னையில் வெயில் கொழுத்த ஆரம்பிக்கும் நேரம், ஒரு முன்மதிய நேரம், என்னை சுற்றி கல்லூரி மாணவர்கள், நான் ஒரு கணினி பயிற்சி நிலையத்தில் வேலை பார்த்து கொண்டிருந்தேன், வேலை பளு மிகுதியாய் இருந்தது, என் கைபேசி ஒலித்தது, மறுமுனையில் பெரியப்பா "லேய் சித்தப்பா கீழ விழுந்திட்டான்", நான் பேச ஆரம்பிக்கும் போதே இணைப்பு துண்டானது, நான் பதறி விட்டேன், அடுத்த அழைப்பு பெரியம்மாவிடம் இருந்து "லேய் சபரி அப்பா நம்மல எல்லாம் விட்டுட்டு போய்ட்டாம்ல", எனக்கு பேச்சு வரவில்லை, கை நடுங்க ஆரம்பித்தது, மொத்த உடலே உதற ஆரம்பித்துவிட்டது, வார்த்தைகள் தொண்டையை தாண்டி வெளிவரவில்லை, அனைத்தையும் கூறிவிட்டு பெரியம்மா எப்படியாவது வீட்டுக்கு வர சொல்லி அழைப்பை துண்டித்து விட்டாள், எனக்கு புரிந்தது பெரியப்பா அண்ணனுக்கு அழைக்க நினைத்து தவறுதலாய் என்னை அழைத்து விட்டார், நான் மேலாளரை பார்த்து நடந்ததை கூறினேன், அடுத்த நடந்த எல்லாமே வேகமாய் கடந்து போனது, ஆட்டோவில் கோயம்பேடு பேருந்து நிலையத்தை அடைந்தேன், நாகர்கோயிலுக்கு நேரடி பேருந்து இல்லை, மதுரை வரை மட்டுமே பேருந்து இருந்தது அதுவும் மதியம் ஒரு மணிக்கு தான், அப்போது மணி பன்னிரெண்டரை, நாங்கள் அங்கேயே அரை மணிநேரம் காத்திருந்தோம்,அதுவரை ஒரு சொட்டு கண்ணீர் வரவில்லை, நான் யாரிடமும் பேசவும் இல்லை, அது ஒரு நிலை அந்த நேரத்தில் சுற்றி நடப்பது எல்லாம் வேகம் வேகமாய் கடந்து போனது, தூரத்தில் ஒரு கண்ணீர் அஞ்சலி விளம்பரம் அதில் அப்பாவின் புகைப்படம் எனக்கு தெரிந்தது, தொண்டை விக்கி நெஞ்சு அடைத்தது கண்ணீர் முட்டி கொண்டு வந்தது, எதையுமே நான் கவனிக்கவில்லை என்னை சுற்றி மூன்று பேர் சமாதானபடுத்திக்கொண்டிருந்தனர், நான் அழுது கொண்டிருந்தேன், என் ஆழ்மனதில் ஒரே ஒரு குரல் தான் ஒலித்தது, அது "இனி நா அப்பாவ எங்கயும் தேடி போகாண்டம்”.                                                             

2 comments:

இணைந்த கைகள்

  ஒரு மாலைநேரம், புதிய திரைப்படம். திங்கள் கிழமை,  மாலை நேரக்காட்சி,  இணைந்த கைகள்.  நிதானியுங்கள், அதே நேரம் உங்கள் மனைவி, அரசு மருத்துவமனை...