Monday 16 December 2019

ராஜு தாத்தா 3 : சுடலை





வெயில் குறைந்து நாஞ்சில் காற்று மென்மையாய் வீசிக்கொண்டிருந்தது.  வானம் மங்கி மென் ஒளி பரவி இருந்தது.  கொக்கும், நாரையும் வான் நிறைத்து கூடு நோக்கி பறந்து கொண்டிருந்தது.  பொதுவாய் வெக்கையில் இருக்கும் மனநிலை அந்தியின் குளிர்ச்சியில் தணிந்து விடும். சுடலை வீட்டில் இருந்து இறங்கி கடைத்தெரு சந்திக்கு வந்தான். தூரத்து சரஸ்வதி திரையரங்கில்  'சிங்கார வேலனே தேவா' பாடல் ஒலித்து கொண்டிருந்தது. முகூர்த்த நாள் போலும் தலை நிறைத்து மல்லிகையும் கனகாம்பரமும் சூடி பெண்கள் கூட்டம் நடந்தபடி அங்கொன்றும் இங்கொன்றுமாய் போய் கொண்டிருந்தார்கள். 

ஐப்பசி மழையில் கரை தழுவி ஓடும் பழையாற்றின் வெள்ளம் போல அவன் எண்ணமெங்கும் நிறைத்து, நீரின் சுழியுள் இழுப்பவளாய் சிவகாமி அவன் வாழ்வை நிறைத்திருந்தாள். அதன் தாக்கம் என்னவோ,  இறுமாப்பில்  இறங்கி மாமன் வீட்டுக்கு நடந்து கொண்டிருந்தான். மாமனிடம் என்ன வேண்டி கிடக்கிறது. ஆனால் அன்று எவனோ புதிய பாலம் மேல் கல் எறிந்ததற்கு, மின் விளக்குகளை உடைத்ததற்கு,  அவரின் கோபம் ஏன் என் பக்கம் திரும்பியது. திராவிடம் பேசும் கட்சிகள் அல்லவோ செய்தது.

தேவையில்லாத ஊர் பொதுக்கூட்டம், மாமனுக்கு மருமகனுக்கும் புகைச்சலை ஏற்படுத்தியது. இறங்கி போய்த்தான் இருக்கலாம், ஆனால் ஊரார் முன்னிலையில் மாமன் திட்டி விட்டாரே. யோசித்து கொண்டே நடக்கும் போது வீடு வந்து விட்டது. வீட்டில் நுழைந்தாலே முன்அரங்கில் பெரிய காந்தி படம் மாட்டப்பட்டு இருந்தது. அது பெரிய வீடு, முன்னே அரங்கு, தொடர்ந்து மங்களா, பின் சாமான்கள் ஒதுக்கும் சிறிய அறை, அதன் இடையே சிறிய பூஜையறை,  கடைசியில் அடுக்காளை,  அதை தொடர்ந்து சிறிய வெந்நீர்பறை. பனைந்தடி கிடத்தி  அதன் மேல் எழுப்பப்பட்ட மேல் தட்டு. 

வீட்டில் நுழையும் போதே வாசற்படியில் மாமாவின் செருப்பு கிடக்கிறதா என்று கவனித்தான். இரு கால் செருப்பும் ஒரே சீராய் கழட்டி போடப்பட்டு இருந்தது. உள் நுழையும் போதே மாமா இருமும் ஒலி கேட்டது.

"அத்தே" என்று அத்தையை அழைத்தான்.

மாமா தட்டுப்படியில் இறங்கும் ஓசை கேட்டது. கீழிறங்கி அவனை பார்த்து.

"உள்ள வாடே, சட்டம்பி" என்றார். வழக்கமாய் இல்லாமல் ஒரு வித தயக்கத்துடன் உள்நுழைந்தான். மாமா அங்கிருந்த மரநாற்காலியில் அமர, அவன் நின்று கொண்டே இருந்தான்.

"என்னடே, ஒவ்வொண்ணா சொல்லனுமா. இருடே"

அத்தையும் சிவகாமியும் அடுக்காளையில் இருந்து முன்அரங்கிற்கு வந்தனர். மாமா சாய்ந்து உட்கார்ந்து மேலே பார்த்தபடி, கைகளை பிசைந்து கொண்டிருந்தார். சுடலை  நாற்காலியின் ஓரமாய் உட்கார்ந்து நகம் கடித்து கொண்டிருந்தான். 

அத்தை ஆரம்பித்தாள்,  "ஏங்க, அவன்தான் வீட்டுக்கு வந்துட்டான்.எதுக்கு இரண்டு பேரும் துஷ்டி வீட்ல இருக்க மாறி வாய பொத்திட்டு இருக்கீங்க"

"அவன்ட என்ன பேச, முன்னாடி நாம ஒன்னு சொன்னா, காது கொடுத்து கேப்பான். இப்போ பெரிய ஆளாயிட்டான். பொசுக்குன்னு சூடாயிருகான்."

"இல்ல மாமா, அன்னைக்கு புத்தி  இல்லாம கத்திட்டேன்."

"புத்தி இல்லமா தான் அப்டி பேசினீரோ, பெரிய மனுஷா. நீ கண்டையாட்டி அன்னைக்கு! சங்கடமா போச்சு. அடுத்தவன் முன்னாடி பேசுனது பெரிசில்ல மக்ளே. நா பேசுனது உனக்கு புரியலைன்னே தான் வருத்தம்."

"இல்ல மாமா, உங்களுக்கே தெரியும். லைட் உடைச்சது. சினிமா பார்ட்டினு. அப்புறம் எதுக்கு ஊர் முன்னாடி என்ன ஏசி,  பாலத்துக்கு கிட்ட போக்கூடாதுனு சொன்னீங்க"

"நீ அங்க போன என்னடே பண்ணிருப்ப? "

"உடைச்சவன் கை எழும்ப முறிச்சிருப்பேன்!"

"கேட்டையாடி முறிச்சிருப்பார்லா?  எனக்கு தெரியும் இவன பத்தி,  அன்னைக்கு ஏசுனது, உரைச்சுதான். பாலத்துக்கு முன்னாடியே நின்னான். இரண்டு நாளும். அதுக்குதான்,  இவனுக்கு எதுக்கு இதுலாம். வேல ஒன்னு பாத்து வச்சிருக்கேன். நீ ஒழுங்கா அங்க போனா போதும்."

"மாமா,  நீங்க சொன்னா சரி"

"சரி டே,  இன்னும் இரண்டு மூணு நாளுல, தியேட்டர் ஓனர் வருவாரு. நா பேசிட்டு சொல்லுகேன், அதுக்கு அப்புறம் இருந்து நீ போ சரியா"

அவன் சரி என்று தலை அசைக்க, மாமா தட்டுபடி ஏறி மாடிக்கு சென்றார். 

"மக்கா,  சால வாங்கிற்கேன்.இருந்து சாப்டுட்டு போ. அட சண்டாளி, வந்து எவ்ளோ நேரம் ஆச்சு, மருமகனுக்கு டீ போட்டேனா பாத்தியா! இப்போ கொண்டாறேன்" என்றபடி அத்தை அடுக்காளைக்கு செல்ல, சிவகாமி மாத்திரம் நின்றிருந்தாள்.

"எப்பா, உங்க இரண்டு பேருக்கும் இடைல எப்பிடி தான் மாறடிக்க போறேனோ!" என்றபடி தலையில் அடித்து விளையாட்டாய் சிரித்தாள்.

"சரி உண்டியல்ல எவ்ளோ வச்ருக்க" என்றான் சுடலை.

"உனக்கு எதுக்கு"

"அத வச்சுத்தான், தாலிச்சரடு செய்யணும்" என்றான்.

'போங்க அத்தான். சரி இந்தவாட்டி சுசீந்திரம் தேரோட்டத்துக்கு போயிட்டு கன்யாரி போகணும். கூட்டிட்டு போவியா"

"அதுக்கு இன்னும் இரண்டு மாசம் இருக்குடி.  மாமா கல்யாணதுக்கு நாள் பாக்குது,  அம்மை சொல்லிச்சு. உன்ன கட்டிட்டு கூட்டிட்டு போறேனான்னு தெரிலியே"

அத்தை வேகமாய் வந்தாள், டீ குவளையை அவனிடம் நீட்டி "குடி மக்கா,  பேசிட்டு இருந்த நியாபகத்துல மறந்துட்டேன். இரு சாப்பிட்டுட்டு போ"

"இல்ல அத்தே,  வேண்டாம். அம்மை எனக்காகத்தான் பொங்கிட்டு இருக்கா. " என்றபடி டீயை வேகமாய் குடித்து வெளியே வந்தான். வாசலில் சிவகாமி சிரித்த படி நின்று கொண்டிருந்தாள்.

நேரம் இருட்டி இருந்தது,  ஒழுகினசேரி சந்திப்பு வரவும். எதிரே மாரி நின்று கொண்டிருந்தான். சந்திப்பில் இருந்து ஆற்றுக்கு செல்லும் வழியில் பாழ் அடைந்து கிடக்கும் எங்கோடி கண்ட சாஸ்தா கோவில் உண்டு. சில வருடம் ஆயிருக்கும் பூஜை கழிந்து,  பூட்டியே கிடக்கிறது. தினமும் ராத்திரி மாம்பட்டை குடிக்கும் கும்பல் உள்ளே இறங்குவது உண்டு.

மாரியிடம் "இன்னைக்கி உள்ள எவனோ இறங்கிற்கானா? " கேட்டான் சுடலை.

"சலம்பல் கேக்குவோய், ஆளு உள்ள உண்டு"

சுடலையும், மாரியும் மெதுவாய் சாஸ்தா கோவில் பக்கம் சென்றனர். கோவில் மேட்டில் எழுப்பி கட்டப்பட்டு இருந்தது. சுடலை மெதுவாய் மேலே உன்னி ஏறி, மாரியையும் ஏற்றி விட்டான். அரச மரம் பின்னால் சத்தம் கேட்கவே,  கீழ்க்கிடந்த கல்லை தூக்கி அங்கு எறிந்து, "எந்த தொட்டிப்பய பின்னாடி கிடக்கான். அப்பனைக்க இடம்ல இது. இங்க வந்து குடிக்க,  வெளிய போல நாய" கத்தினான் சுடலை.

பின்னால் ஆட்கள் ஓடும் சத்தம் கேட்டது. சுடலைக்கு தினசரி வேலையாகி விட்டது. சிறுவயதில்  பல முறை இந்த கோவிலுக்கு வந்திருப்பான். கார்த்திகை மாதம் கட்டு கட்டி எத்தனை முறை சபரி மலை சென்றிருப்பான். கோவிலை சரி செய்ய வேண்டுமென்றால் முதலில் ஊராரை ஒன்றாக்க வேண்டும். அவன் அவனுக்கு வசதி பெருகவே ஊரும் இரண்டாய் விட்டது. 

ஆறுமுகம், சுப்பிரமணி இரண்டு ஊர் பெரியமனுஷனின் உள்பகை பாவம் சாஸ்தாவை தண்டித்து விட்டது. யோகமூர்த்தியின் கோயிலில் தினம் தினம் மாம்பட்டை கச்சேரி.  இக்கோயிலை சீரமைக்க வேண்டும். சுடலை கோயிலின் கீழ் திண்டிறங்கி,  மீண்டும் சந்திப்புக்கு வந்தான். மாரியிடம் விடை பெற்று வீட்டுக்கு சென்றான்.

உள்ளே, அம்மா அடுக்காளையில் சமைக்கும் ஒலி கேட்டது. வெந்தய புளிக்கறி போல,  வெந்தயம் பொடி உள்ளியோடு சேர்ந்து வதக்கும் மணம் வந்தது.  

"யம்மா" என்று அம்மையை அழைத்தான். 

"லேய் வந்திட்டியா,  கொஞ்சம் இரு மக்கா. சோறு பொங்கிட்டேன். புளிக்கறி கொதிக்கவும். முட்டை அடை போட்டு தாரேன்."

"சரி, மாமா வீட்டுக்கு போய்ட்டு வந்தேன்"

"சந்தோசம் மக்ளே, அவன் சொல்ல கேளு. உங்க அய்யா போனதுக்கு அப்புறம். நமக்கு அவன விட்டா யாரு. காசு வந்ததுக்கு அப்புறமும் மாறலடே. சின்னதுல எப்டியோ அப்பிடியே இருக்கான். உங்க அத்த காரியையும் சொல்லணும். அம்மைக்கு இப்போதான் நிம்மதி. நா கண்ண மூடினாலும் உனக்குன்னு நாலு பேரு வேண்டாமா"

சுடலைக்கும் மனதில் உறுத்தி கொண்டிருந்த ஏதோ ஒன்றில் இருந்து விடுபட்ட நிம்மதி. வீட்டின் சுவரில்,  மாமா,  அத்தை கையில் சிவகாமியும் கூடவே இவனும் சிறுவனாய் நிற்கும் புகைப்படம் மாட்டப்பட்டு இருந்தது.அதில் மாமாவின் வலதுகை  இவனின் தோள்களை அழுத்தி அணைத்தபடி இருந்தது.

No comments:

Post a Comment

இணைந்த கைகள்

  ஒரு மாலைநேரம், புதிய திரைப்படம். திங்கள் கிழமை,  மாலை நேரக்காட்சி,  இணைந்த கைகள்.  நிதானியுங்கள், அதே நேரம் உங்கள் மனைவி, அரசு மருத்துவமனை...