Monday 23 December 2019

மதுக்கடையில் என் நிழல்





மதுக்கடையில்  தனியாய் குடிப்பது சௌகரியம்.  கூடி நின்று குடிப்பதில், நண்பனின்,  உறவுக்காரனின்,  அடுத்தவனின் சோகக்கதையயை கேட்பதில் ஆர்வம் இல்லை.  தனியாய் நின்று யாரோ ஒருவரிடம் பேசி குடித்துணை ஆக்கி கொள்வேன். என் சார்பில்லா,  நான் அறியா கதைகளை கேட்பதில் என்னை விட்டு விலகி இருப்பதில் அழுத்தும் விசைகளான என் குடும்ப சூழலில் இருந்து விடுபடும் ஒரு தன்மகிழ்ச்சி.

நான் வசிக்கும் தி. நகரை சுற்றி உள்ள எல்லா மதுக்கடைக்கும் ஏகதேசம் சென்றிருப்பேன். கடைத்தெருக்கள் அமைந்துள்ள பகுதி ஆதலால் பெரும்பாலும் நின்றபடி குடிக்க தான் ஏற்பாடு,  என்றும் என் முதல் தெரிவு பாண்டி பஜார் மதுக்கடை, நேரம் குறைவாய் அதாவது கடை அடைப்பதற்கு அரை மணி நேரம் முன்பு எனில் உஸ்மான் ரோடு  ஜி. ஆர். டி எதிரே இருக்கும் கடை.  இங்கே மதுக்கடைகளுக்கா பஞ்சம். 

பெரும்பாலும் ஒன்பது மணிக்கு மேல்,  பஜார் ஜவுளிக்கடை,  பாத்திரக்கடை,  மின்சாதன கடைகளில் வேலை பார்க்கும் அடிநிலை ஊழியன் தான் மதுக்கடைகளை ஆக்கிரமத்து கொள்கிறான்.  ஓரமாய் நின்றபடி இவர்களை கவனிப்பேன், ஒரே நிம்மதி இவர்களிடம் பாசிசம் குறைவு. அசாமும், தூத்துகுடியும் கால்குப்பியை சமரசமாக பிரித்துக்கொள்வார்கள்.  ஒருமுறை எங்கோ கேட்ட நியாபகம்,  சரியாய்  நினைவில் இல்லை.

"ஏலேய், மாப்புள.  என் தங்கச்சிய நீயோ கட்டிக்கோ.  சொக்காரன் மயிர புடுங்கதான் வருவான்.  கலரு கம்மி டே.  நீ மட்டும் சரின்னு சொல்லுலே.  தாயோளி சிக்கன் வேகவே இல்ல" என நீண்டு கொண்டே போனது.  விழுந்தது வகை என திரும்பி விட்டேன்.

சென்னையின் வெயிலுக்கு ரம் எதற்கு என பல மூத்த குடிகாரர்கள் அறிவுரை கூறியதுண்டு. என்னவோ ஊர் பழக்கம் தொடர்கிறது. ஓல்ட் காஸ்க் கால் குப்பி, கருப்பு திராட்சை கொஞ்சம்,  தேவைக்கு தண்ணீர், கோல்ட் பில்டர் நான்கு இதுதான் என் பதிவு. மூன்று ரவுண்டு முடித்து பாண்டி பஜார் கடை வெளியே ஒரு சிகரெட் பற்றவைத்து முழுதாய் புகைத்ததும்  வாழ்க்கையின் எல்லா பிரச்சனைகளுக்கும் தற்காலிக தீர்வு கிடைத்தது போல ஆசுவாசபடுத்தி கொள்வேன்.

வேகமாக நடந்து, இல்லை ஓடி கொண்டிருந்தேன். இன்று சனிக்கிழமை. வாரக்கூலிகள் கடையை அடைத்து கொள்ளும் நேரம், போகும் வழியில் எதிரே பெரிய ஊர்வலம்,  சாலையில் வண்டிகள் மிக மிக மெதுவாய் நகர்ந்து கொண்டிருந்தது. சிறிய வண்டி நிறைத்து மாலை அலங்காரம், பட்டாசு சத்தம் வேறு. செத்தவனை அவ்வழியே பேருந்தில், இருசக்கர, மூன்று சக்கர, நான்கு சக்கர வாகனத்தில் சென்றவர்கள் திட்டியபடியே சென்றிருக்க கூடும். மனிதர்கள் செத்தவனுக்கும் சேர்த்து,  பாவம் சம்பாதிக்கிறார்கள். ரோடு எங்கும் வீசியபடி செல்லும் கோழிகொண்டைபூவை எப்படி காலையில் தூத்து தள்ளுவார்களோ!.

கடையின் முன்பு பெரும் கூட்டம், தள்ளு முள்ளு. முண்டியடித்து முன் சென்றேன், ஒல்லியான உடல்வாகு எளிதில் முன்னகர வைத்தது. கால்குப்பி வாங்கி வெளியே வந்தேன். எதிரே ஒருவர் நின்றிருந்தார். கழுத்து மறையும் அளவு வெண்நிற தாடி,  ஐந்தறை அடி இருப்பார். காதை தாண்டிய சுருள் முடி, பரதேசி போல் இருந்தாலும் அவர் கண்கள்  குளிர் நிறைந்தது போல தன்மையாய் இருந்தது.  வெளிர் நிற சட்டை மங்கி கசங்கள் இன்றி இருந்தது. கடும்காப்பி நிற முழுக்கால் சட்டை அணிந்திருந்தார்.தோளில் ஒரு ஜோல்னா பை.

மதுக்கடை கூட்டத்தில் இருந்து ஒரு ஆட்டோக்காரர் வெளிவந்து கையில் இருந்த குப்பியை அவரிடம் நீட்டினார், அது ராயல் சேலஞ்ச் கால் குப்பி.  ஆட்டோக்காரர் விடைபெற,  அவர் பாரின் உள்ளே சென்றார். நானும் பின் தொடர்ந்தேன்,  அவர் இருப்பதிலியே ஓரமாய் இருந்த மேஜையில் அமர்ந்தார், அதில் இரண்டு இருக்கைகள் மட்டுமே இருந்தது.  அவர் ஏற்கனவே ஒன்றில் அமர்ந்திருக்க, நான் இன்னொன்றில் அமர்ந்து கொண்டேன். 

முதல் கோப்பை நிறைத்து மது ஊற்றி இருவரும் அருந்தும் வரை இல்லா பரஸ்பரம்,  அடுத்த குவளைக்கு இருவரும் கண்டு சிரித்துக்கொள்ளும் குணாதிசயம் மதுக்கடைகளில் சாத்தியம்.  அவர் என்னை பார்த்து சிரித்தார்.  நான் உடனே பேச ஆரம்பித்தேன், 

"சைடு டிஷ் லாம் இங்க நல்லா இல்லே"  முகத்தை சுளித்தபடி சொன்னேன். 

தன் பையில் இருந்த கடலை மிட்டாயை நீட்டினார். அவர் தொடர்ந்தார். 

"தம்பிக்கு எந்த பக்கம்"

"மாம்பலம் ஏரிக்கரை தெரு"

"இருந்த ஏரிய காணும், தெருக்கு மட்டும் பேரு ஏரிக்கரை தெரு.  சொந்த ஊரு எது"

"நாகர்கோயில்"

"யேய், நானும் அங்கதான்."

"ஊருல ரசவடை, கிழங்கு, மாங்கா கிடைக்கும்.இங்க ஒன்னும் இல்ல"

"அப்டிலாம் இல்ல, அந்தந்த ஊருல என்ன இருக்குமோ, அதானே கிடைக்கும்,  வயக்காட்டில போய்ட்டு செம்மண்ணு தேட முடியுமோ, அங்க களிமண்ணு தானப்போ இருக்கும் . களிமண்ணுல தான் நெல்லு  விளையும்,  நீ படிச்ச படிப்புக்குத்தானே இங்க பொழைக்க வந்திருக்க,  கிடைக்கிறதுல வாழ பழகிக்கணும்"

"அது சரிதான்" என்றேன். ஊற்றிய கோப்பையில் இருந்த மதுவை இருவரும் சிறிது அருந்தினோம்.

"இப்போல்லாம் பாத்துக்கிடுங்க, மனுஷனுக்கு ஆசை கூடிட்டே இருக்கு" என்றார்.

நான் "அப்படியா" என்றேன். 

"நேத்திக்கு வர நூத்தியஞ்சு ரூபா குவாட்டர் , இன்னைக்கு நூத்தி தொன்னூறு" என்றார். அவரே அவரை நக்கல் செய்கிறார் என்று விளங்கியது. 

அவரின் தோரணையும் பேச்சும் என்னை போன்ற தினசரி வாழ்வின் அடையாளம் அவர் அல்ல என்பது மட்டுமே தீர்க்கமாய் மனதில் பதிந்தது. வார்த்தைகளை கவனமாய் கையாள வேண்டும் என மனதிற்குள் சொல்லிக்கொண்டேன். 

நாங்கள் அமர்ந்திருந்த இருக்கையின் மேல தகரம் பெயர்ந்து பின்னே பெரிய வேப்பமரம் ஒன்று தெரிந்தது. அதன் மேல் காகங்கள் சில கால் மடக்கி அதன் கூட்டினுள் இருந்தது. இவரின் பார்வை காகங்களை நோக்கியே இருந்தது. அடிக்கடி கனத்த வெண்கம்பியாய் தாடை எங்கும் பரவி இருந்த தாடியை தடவியபடியே இருந்தார். அவ்வப்போது அவரின் முகம் என்னையும் நோக்கியது.

மதுக்கடையின் சில மீட்டர் தள்ளி சுடுகாடு. நான் இங்கே வரும் போது சென்ற சவ ஊர்வலத்தின் கடைசி நடை அங்கேயே. தப்புமேளத்தின் ஒலி மெலிதாய் காதில் விழுந்து கொண்டிருந்தது.

"மனுஷனுக்கு எல்லாமே அடங்குறது சாவுலதான், தன்னை முழுசா ஒப்படைக்கும் ஒன்னு சாவு தான், பொண்டாட்டி, கூட்டுகாரன், மக்கமாரு, அப்பனும் அம்மையும் யாருட்டயும் நிஜம் கிடையாது.  ஒவ்வொருத்தருக்கும் ஒரு முகமூடி" என்றார்.

"செத்தா என்ன தெரியும், முன்னாடி அழுறது யாருன்னு கூட தெரியாது" என்றேன் நான்.

"அது சரிதான், ஆனா தெரிஞ்சும் ஆடுறோம். முடிவுன்னு ஒன்னு இருக்கு,  பெரிய மயிரா இருந்தாலும் இல்ல" என்றார்.

"மயிரு வாழ்க்கை" என்றேன் நான் சிரித்தபடி.

இருவருக்கும் கால் குப்பியின் முக்கால் பங்கு தீர்ந்து விட்டது.

"எதையோ நோக்கி ஓடிட்டு இருப்போம், கடந்து போறது எதுவும் கண்ணுக்கு தெரியாது. அடுத்தவன் முன்னாடி நா நல்ல நிலைமைல நிக்கணும்.  அடுத்தவனுக்கான வாழக்கையை நாம வாழ்ந்துட்டு இருக்கோம். இங்க நமக்கானது எது மிச்சம்" என்றார்.

"வானத்தில நட்சத்திரம் பாத்திருப்பீங்க,  சின்னதுல புத்தி இல்லாம அதுல தூரமா தெரியது தாத்தா, கிழக்கால இருக்கது ஆச்சி அப்படினு  சொல்லுவோம். அந்த அறியாமைல கூட ஒரு சந்தோசம் இருந்துச்சு" என தொடர்ந்தார்.

அவர் பேச ஆரம்பிக்கும் போது இடையிடையே எனக்கும் எல்லாம் தெரியும் என முனைவது போல உள்ளே செருகினேன். ஆனால் இப்போது அமைதியாய் இருந்தேன், அவர் பேசிக்கொண்டே இருந்தார்.

"நேத்து ஒரு நாய்க்குட்டி ரோட்டுல நிக்குது,  அதை தூக்க நா கிராஸ் பண்ணி போகணும். அத தாண்டி நூறு பேரு போறான்,  அந்த குட்டியை ஏசதுக்கு வண்டி நிக்குது, எவனும் இறங்கி தூக்கி அத ஓரமா கொண்டு விட மாட்டுக்கான். இதுல அந்த குட்டி பாவமா, இல்ல இவ்ளோ சுயமா எதை பத்தியும் கவலைப்படாத இவனுகள பாத்து கவலைப்படவா? "

ஆம், அவர் சொல்வது உண்மைதான். கடந்து போகும் போது காணும் காட்சியில் எதிலுமே உண்மையாய் உளம் நின்றதில்லை.நாய் குட்டியை நானும் கடந்து போயிருப்பேன்.

பேசிக்கொண்டு இருக்கும் போதே, கடுமையாய் இரும ஆரம்பித்தார். அவரால் இயல்பாக மூச்சு விட இயலவில்லை. இரண்டு நிமிடம் அவராய் தன்னை ஆசுவாசப்படுத்தி இயல்புநிலை திரும்பினார். என் பின்னே அவர் வயதொத்த இன்னொருவர் நின்றிருந்தார். 

"என்ன ராஜம் இருமல் அதிகம் ஆயிட்டு போல, குடிய குறைக்கலாம்" என்றார். இருவரும் ஏற்கனவே பரிச்சியம் ஆனவர்கள் என ஊகித்து கொண்டேன்.

"என்ன செய்ய,  நானும் நினைக்கேன். முடிய மாட்டேன்குது. ராத்திரி தூக்கம் இல்ல" என்றார்.

"ஏற்கனவே எமனை பாத்துட்டு வந்துட்ட. உன்கிட்ட சொல்லி திருத்த முடியாது. சரி நா வரேன்" என்றபடி வந்தவர் கிளம்பினார்.

நான் அவரை இரக்கமாய் கவனிப்பது அவர்க்கு அசௌகரியமாக இருக்கிறது போலும், என்னை நேராய் பார்ப்பதை தவிர்த்தார். 

"குடிய ஜெயிக்க முடியல. பலவாட்டி பாத்துட்டேன். தோத்துட்டு தான் இருக்கேன். " என்றார் தலையை நிமிர்த்தவில்லை. 

"நீங்க என்ன பண்றீங்க" என்றேன், நெடுநேரம் கழித்து நான் பேசினேன். ஆகவே குரலில் ஒரு கரகரப்பு இருந்தது.

"நமக்குன்னு ஒன்னு நிலையா கிடையாது. புத்தகம் வாசிப்பேன்,  எழுதுவேன், அதுதான் எல்லாம்"  

எனக்கு கொஞ்சம் உரைத்தது. இவரின் எண்ணமையம் சராசரி மனிதனின் ஓட்டத்தில் இருந்து சற்று விலகியே இருந்தது. சிறிது நேரம் எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தோம். பின் அவர் எழுந்து விடை பெற்று சென்றார். அவரின் பெயர் என்னுள் பதிந்தது 'ராஜம்'.

கடையில் இருந்து வெளியே வந்து வழக்கமான சிகெரட் பற்றவைத்தேன்,  மனதிற்குள் மீண்டும் மீண்டும் ஒலித்தபடி இருந்தது "குடிய ஜெயிக்க முடியல, தோத்துட்டு தான் இருக்கேன்" என்று அவர் கூறியது தான். 

அன்றைய இரவு என்றையும் போல சாதாரணமாய் இல்லை, மதுகுப்பியில் ஊறி மலந்து கிடக்கும் ஈச்சை போல, ஒவ்வொருமுறையும் எம்பி குதித்தேன், வெளிவரும் போதெல்லாம் இன்னொரு குப்பியில் அமிழ்ந்தேன். உடல் எங்கும் மதுவாடை பரவி இருந்தது. எழ எழ தாகம் அதிகரித்து கொண்டேயிருந்தது. உறங்கியது நினைவில் இல்லை. காலை எழுந்ததும் இனி குடிப்பதில்லை என முடிவு செய்தேன்.

ஆனால் அன்றைய இரவே, மதுக்கடை வாசலில் நின்றேன். அவரும் நின்றார். அவர் அருகே செல்ல தயக்கமாய் இருந்தது, அவருக்கும் அதுவே தோன்றிருக்க வேண்டும், தூரமாய் நின்று கொண்டார்.

பின் கொஞ்சம் கொஞ்சமாய் நாட்களை வாரம் ஆக்கினேன். நான் செல்லும் நாளெல்லாம் அவரை கண்டேன், சிலநாள் தள்ளாடியபடி வாகன நெருக்கம் நிறைந்த சாலையில் நடந்துகொண்டிருப்பார். வாரத்தை, மாதம் இருமுறை ஆக்கினேன். என்னுள் மாற்றம் தெரிவதாய் உடன் பணிபுரிவோர் கூறினார்கள். 

சில மாதங்கள் சென்றிருக்கும், மழைக்காலத்தில் அதுவும் மாலை நேரம் என்றால் மிளகாய் பஜ்ஜி என்னுடைய விருப்பம், வழக்கமான டீ கடைக்கு சென்றேன்.வெளியே மாலை நேர செய்தித்தாள் இருந்தது . உள்ளே பெட்டிச்செய்தியை கவனித்தேன் "சாலை விபத்தில் எழுத்தாளர் மரணம்".  

என்னவோ என் இயல்பில் மாற்றம், பதட்டமாய் இருந்தது, கூடவே வேர்க்கவும் செய்தது.செய்தித்தாள் புரட்ட மனமில்லை, உண்மையில் தைரியம் இல்லை. ஏன் அந்த பெயர் 'ராஜம்' என இருக்க கூடாது என்று தெய்வத்தை வேண்டிக்கொண்டேன்.   மீண்டும் காதில் அவர்  குரல் கேட்டது  "குடிய ஜெயிக்க முடியல, தோத்துட்டு தான் இருக்கேன்".  இதனை அவர் என்னிடம் கூறியபோது,  எனக்கு அது நானாகவோ தோன்றியது. நான் அவரின் இளைய நிழலாய் அசைந்தபடி அன்று எதிரே இருந்தேன். மீண்டும் என்னுடைய குரலும் அவரோடு இணைந்தபடி காதில் ஒலித்தது "ஆம், நாம் தோற்று கொண்டிருக்கிறோம், மது நம்மை ஜெயித்து கொண்டிருக்கிறது"..

No comments:

Post a Comment

இணைந்த கைகள்

  ஒரு மாலைநேரம், புதிய திரைப்படம். திங்கள் கிழமை,  மாலை நேரக்காட்சி,  இணைந்த கைகள்.  நிதானியுங்கள், அதே நேரம் உங்கள் மனைவி, அரசு மருத்துவமனை...