Sunday 23 February 2020

Jojo Rabit (மனிதம் நிறைந்தது)



Jojo Rabit:



ஆஸ்கார் விருதுக்கு பின்னர் பெரும் வரவேற்பு இந்தியாவில் கிடைத்துள்ளது. சென்னையில் லூக்ஸ் சினிமாவில் சினிமா பற்றிய சிறந்த, திறந்த பார்வையுடைய சாருவுடன் இணைந்து பார்த்ததில் மகிழ்ச்சி (இது சாருவுக்கு தெரியாது). நகைச்சுவையுடன் வரலாற்றின் பெரும் அவலத்தை இத்தனை எளிதாக ஒன்றரை மணிநேரத்தில் பார்வையாளனுக்கு கடத்துவதில் அனாசியமாக இயக்குனர் ஜெயித்துள்ளார். 

ஜோஜோ, ஜெர்மனியின் சிறுவன் மாத்திரமே அல்ல. அவனைப்போன்ற சிறுவர்கள் ஈழத்தில், காஷ்மீரில், வடகொரியாவில்,  ஈராக்கில், சிரியாவில், வியட்நாமில் இருந்திருக்கலாம். ஒரு போர், காரணம் எதுவாயினும் உயிர்களை பலிக்கொள்ளும். இங்கே நாசிப்படைகள் யூதர்களை தேடி தேடி கொன்றுக்குவிக்கிறது. ஜோஜோக்கும் எதிரி யூதர்கள். படம் முழுக்க ஜோஜோ மாத்திரம் காணும்  ஹிட்லரின் வசனங்கள் கூறியது, அர்த்தம் நிறைந்தது. கண்மூடித்தனமா ஒருவரின் யூத வெறுப்புக்கொள்கை,  ஜெர்மானியர்கள் வேர்களின் அடியாழத்தில் வரை ஊறிப்போயிருந்தது. அங்கே சிறுவர்களுக்கும் ஒரு படை இருந்திருக்கிறது. அதில் ஒருவனே ஜோஜோ. 

கொலை, ஒரு முயலை கொல்லச்சொல்ல அதற்கு எதிர்வினையாற்றும் ஜோஜோ. நாம் உண்மை என நம்பும் ஒன்றை, சிலசமயம் ஆழ்மனம் மறுக்கும். அது ஆன்மாவின் சக்தி. ஜோஜோவும் அப்படித்தான். தான் ஒரு ஜெர்மானியன் என்பதே போதுமானதாக இருக்கிறது யூதர்கள் கொல்லப்பட. படம் நெடுகிலும் பல கவித்துனமான காட்சிகள். உதாரணத்திற்கு ஜோஜோவின் வீட்டில் மறைந்து வாழும் இளம்பெண் எல்ஸாக்கு, அவளின் காதலன் எழுதியதாக ஜோஜோ வாசிக்கும் கடிதங்கள். நேர்த்தியான, ஆழமான காட்சியமைப்பு. 

யூதர்களை பற்றி எல்சா விவரிக்க, ஜோஜோ அதனை புத்தகமாக எழுதுகிறான். அதில் யூதர்களை தேவதைப்போல எல்சா வரைகிறாள், மாறாக ஜோஜோ எங்குமே யூதர்களை கொடியவர்களை போல சித்தரிக்கிறான். இறுதியில் ஜோஜோ பரிசுத்தமான தேவதையாக மாறுகிறான். ஒரு விபத்தில், ஜோஜோவின் முகத்தில் சில வடுக்கள் ஏற்படுகிறது.  அவனை 'அசிங்கம்' என ஜெர்மானிய சிறுவர்ப்படை கிண்டல் செய்கிறது. அவர்களின் கேப்டன் கே வும் தான்.  ஆனால் அவன் மாத்திரமே தூயஆன்மாவாக வருகிறான். அடிப்படையில் ஜெர்மானியன் என்பதாலே யூதர்களை வெறுக்கும் ஒருவன், பின் மனிதம் என்ன?  என்பதை அறிகிறான்.  

உரையாடல்கள் மிகவும் நுணுக்கமாக எழுதப்பட்டு இருக்கிறது. அது ஜோஜோ,  அவனுக்கும் அம்மாவுக்கும், அவனுக்கும் எல்ஸாக்கும், அவனுக்கும் ஹிட்லருக்கும், அவனுக்கும் ஆர்க்கீ (அவன் நண்பன்) என எல்லாமே சாதாரணமான ஆனால் வலிமையான வார்தைத்தொடர்கள். 

யுத்தம் கதையின் பின்புலம், ஆயினும் நகைச்சுவை மனித மனதின் குரூரத்தை தோலுரிக்கிறது.  முக்கியமாக சிறுவர்களுக்கு பயிற்சி அளிக்கும் போது சிறுவர்கள் போர் புரியவும், சிறுமிகள் படுக்கையை தயார் செய்யவும் பயிற்சி அளிக்கிறார்கள். திரையரங்கில் சிரிப்பொலி கேட்டாலும், உள்ளுக்குள் அரித்திற்கும். ஆர்க்கீ அமெரிக்கர்களை பற்றி பேசும் இடங்களெல்லாம் நையாண்டிகளின் உச்சம். 

ஜோஜோவின் அம்மா, ஸ்கேர்லெட் ஜான்சன். ஒரு காட்சி பதம்,  அப்பாவாக, அம்மாவாக நிகழ்த்தும் ஒரு நாடகம், பிரிவின் வலி, அதிலும் அன்னையின் அரவணைப்பு மேலோங்கி இருந்தது. கேப்டன் கே சரியான கதாபாத்திர வடிவமைப்பு. உதவியாளராக நடித்திருக்கும் குண்டுப்பெண்ணும் நன்றாக நடித்துள்ளார். 

எல்சா, வலிகள் நிறைந்தவள். அவளின் வாழ்க்கை ஒரு பொந்தில் அடங்கியுள்ளது. அடிக்கடி வெளியே வருகிறாள், அவளின் ஒரே கேள்வி போர் முடிந்துவிட்டதா? எனக்கு அந்த வீடு, ஜோஜோவின் இதயமாகவும், அதனுள் அவனின் அக்கா இங்கின் அறையில் அவ்விடுக்கில் வாழும் எல்சா ஒரு தேவதையாகவும் தெரிந்தார்கள். அவன் இருட்டில் குழம்பித்தவிக்கும் போதெல்லாம், எல்சா அவனுக்கு வெளிச்சத்தை பாய்ச்சுகிறாள். காட்சிகள் ஏதாவதொரு ஒரு காட்சியுடன் இணைகிறது. குறிப்பாய் தூக்கில் தொங்கும் மனிதர்களின் காலணி, முயல்,  ஷூ லேஸ் கட்டும் இடங்கள், கேப்டன் கேவின் புதிய ராணுவ உடை எனப்பல. 

ஜோஜோவின் அம்மா எல்ஸாக்கு உதவுவது, ஜோஜோ வீட்டிற்குள் ஜெர்மனிய அதிகாரிகள் சோதனையிடுவது, எல்சா அங்கே இங்காய் நடிப்பது, கேப்டன் கேவின் விசாரணை,  ஜோஜோ அம்மாவிற்கு நிகழும் துயரும், எதிர்வினையாய் எல்ஸாவின் நெஞ்சில் அழுத்தும் ஜோஜோவின் கத்தி. என எல்லாமே நிகழ்வுகளின் பிணைப்பு. 

வாழ்வைப்பற்றி ஜோஜோக்கு அம்மா வழங்கும் அறிவுரை அது நிகழும் சலனமில்லா நீர் நிறைந்த சிறிய அணைக்கட்டு, வாழ்வை கொண்டாட நடனமாடும் அம்மா. அக்காட்சியின் நீட்சியாய் இருவரும் மிதிவண்டியில் செல்லும் வலியில் போரில் இருந்து திரும்பும் வீரர்களின் டிரக்,  கை கால் இழந்த வீரர்களின் மிரட்சியான பார்வை, இப்படி நகைச்சுவை ததும்பும்  திரைப்படத்தில் உணர்ச்சிகரமான காட்சிகளும் நிறைந்திருக்கிறது. 

போர் காட்சிகள் மனதை பதைபதைக்க வைத்தது. குண்டுகள் வெடிக்கும் தெருக்கள் வழியே ஜோஜோ ஓடும் போது பின்னணியில் ஒலிக்கும் இசை மென்மையாக மனதை வலிக்கச்செய்தது.  கேப்டன் கேயின் இறுதிநொடிகள் என அழுத்தமான காட்சிகள். 

முயல், ஒரு குறியீடு. ஆரம்பத்தில் கொல்ல மறுப்பது. அம்முயலும் கூண்டில் இருக்கிறது, எல்சாவும் ஜோஜோ வீட்டில் ஒரு கூண்டுக்குள் வாழ்கிறாள். ஜோஜோ அவளையும் கொல்லத்துடிக்கிறான். ஜோஜோவின் யூதர்கள் புத்தகத்தில் வரைந்திருக்கும் முயலின் சித்திரமும் கூண்டுக்குள் இருக்கிறது. இறுதியில் கூண்டு திறக்கிறது. 

உலகப்போரின் வலி,படம் நெடுகிலும் தொடர்கிறது. ஜோஜோவின் ஹிட்லராக இயக்குனரே நடித்துள்ளார். இது ஆஸ்காருக்கு தகுதி உள்ளதா?  இல்லையா?  என்பதில் நான் நுழைய விரும்பவில்லை. இது மனிதம் பேசும் படம். இறுதிக்காட்சியில் ஒலிக்கும் இசையில் நாமும், நம் உள்ளமும் நடனம் ஆடினால். நீங்கள் மனிதம் நிறைந்தவர்கள். 

போர், காரணம் எதுவாயினும் மறுக்கப்பட, தவிர்க்கப்பட வேண்டியது. மதங்களுக்கும் இனங்களுக்கும் அப்பாற்ப்பட்டது அன்பு. அதன் ஆதிஊற்று அன்பு. 

அன்புடன், 
வைரவன் லெ ரா. 

No comments:

Post a Comment

இணைந்த கைகள்

  ஒரு மாலைநேரம், புதிய திரைப்படம். திங்கள் கிழமை,  மாலை நேரக்காட்சி,  இணைந்த கைகள்.  நிதானியுங்கள், அதே நேரம் உங்கள் மனைவி, அரசு மருத்துவமனை...