Thursday 6 February 2020

ஒரு கொலை






காற்றில் ஈரம்  நிறைத்து, தணுத்து கிடந்த நிலத்தில்,  நெருக்கமான இரப்பர் மரங்களும் சேர்ந்து அடைத்து அவ்விடத்தின் குளிரை மேலும் அதிகரித்தது.  இரப்பர் மரத்தின் சருகுகள் மேலே, சரிந்த அவ்வுடலின் கிழிந்த வயிறு வழியே வெளியேறிய குருதி குளிரில் உறைய ஆரம்பித்து கொண்டிருந்தது.  தலை குப்புறக் கிடந்த உடலின் வயிறில் குடல் பிதுங்கி வெளித்தெரிந்தது.  சுற்றி இருந்த இருட்டு அவ்விடத்தின் தன்மையை மேலும் விகாரம் ஆக்கியப்படி இருந்தது, கூடவே ஆந்தை அலறலும். 

உடலிலிலிருந்து சில அடி தூரம் தள்ளி இளைஞன் ஒருவனும், முதுமை ஆரம்பித்த ஆண் ஒருவரும் நின்று கொண்டிருந்தனர். கைகளைக் கட்டி அக்குளின் இடையே சொருகி குளிருக்கு இதமாய் வைத்திருந்தான் இளைஞன்.  அவனுக்கு பழக்கமான ஒன்றுதான், நல்லது இருட்டில் ஈ உடல் மேல் ஆய்வது தெரியவில்லை. அதுவே போதுமானதாக இருந்தது. இரத்தம் பழகி விட்டாலும், உடலின் குத்தப்பட்ட இடத்தை  அடைத்து ஆயும் ஈக்கள் அவனுக்கு ஒவ்வாமையைக் கொடுக்கும், அந்த ரீங்காரமும் இவனை நிலைகுலையச் செய்யும்.  மேலும் சிலர் வரவேண்டும், அது வரை இங்கே நின்றாக வேண்டும். அருகில் நிற்பவர்,  எதுவும் பேசாது அசைவின்றி நின்றார். தூரத்தில் யாரோ கை அசைத்து அவனை அழைப்பது போல தெரிந்தது.  உடலை நாய்கள் குதறி விடாமல் இருக்க, பக்கத்திலிருந்தவரை அதனருகே நிறுத்தி  அவன் சென்றான்.  

"வண்டி வந்துட்டு இருக்கு, ஆளு லேகை தெரியல. முத யாரு இத பாத்ததுன்னு சொன்ன? " என்றார் வந்தவர்,  இருசக்கர வாகனத்தில் முன்கூட்டியே வந்துவிட்டார். சரியாக இவன் நிறுத்திய வண்டியின் அருகேயே அதுவும் நின்றது. 

இவன் "அய்யா ,  அய்யா!" என்று, தூரத்தில் தகர கொட்டாயில் ஒருவர் மட்டும் நுழையும் படி அமைந்திருந்த அறை அருகே சென்றான். அங்கிருந்த  மஞ்சள் நிற குண்டு பல்ப் மட்டுமே அந்த எஸ்டேட் முழுவதற்கும் ஒளியைச் சிறிது கொடுத்தது. 

உள்ளே கையில் இருந்த ஓல்ட் மங்க் கால்குப்பியை டம்ளரில் ஊற்றியபடி கிழவர் அமர்ந்திருந்தார். இவன் வருவது தெரியும் போல,  அவன் வரும் திசை நோக்கினார், வந்தவன் காத்திருக்கும் படி செய்கையால் கூறியபடி, சிறிது தண்ணீர் கலந்து குடித்தபடி குளிரைத் தவிர்க்க மங்கி குல்லாவும்  மப்ளரும் அணிந்து அவனோடு வந்தார்.

"தாத்தா,  சார் இன்ஸ்பெக்டர்," என்று வந்தவரை  அறிமுகப்படுத்தினான் இளைஞன்.

"சாயங்காலம், ஆறு மணிகாக்கும் என்னோட டூட்டி. உள்ள வாரேன். ஏதோ சரியில்லைன்னு மனசு சொல்லிச்சு. வர வழில இந்த ஆளு கிடந்தாரு. உயிரு கிடக்குன்னு தான் முதல்ல நினச்சது. தொட்டு பாக்கையில்லே உடம்பு தனுதுட்டு. ஆபீஸ் போன் பண்ணி  விசயத்தை சொல்லிட்டேன்," என்றார் கிழவர், எவ்வித தடுமாற்றம் இன்றி.

"ஆளு பாக்கையிலே லேகை தெரியுதா. நீரு பாத்திருக்கீரா? "

"ஆள தெரியாது, சமயத்துல பாத்திருக்கேன். எஸ்டேட்லே எங்கயாச்சும் அகப்படும்."

"கூட யாராவது வருவாங்களா?"

"இல்லை, ஒத்தைக்குத்தான் நான் கண்டுரக்கது."

ஆய்வாளர் கை அசைத்து அவரை போகும்படி சொன்னார்.

அமரர் ஊர்தி வந்தது. உடலை வண்டியில் ஏற்றியபின்,  வந்த மூவரும் இருசக்கர வாகனத்தில் ஏறி, கிளம்ப ஆயத்தமாயினர். இளைஞன் பின் இருக்கையில் அமரச் சென்றான். காவல் ஆய்வாளர் அவனை நோக்கி,  

"நீ இறங்கு டே. கிழவரு ஆளு கள்ளம் பறையது மாறியாக்கும் இருக்கு. அவர விசாரிச்சுட்டு வா. ஆளப் பத்தி ஏதாச்சும் அவர்க்கு தெரியும். பெட்டுனு போகாதே. தள்ளி நின்னு செய்றத கவனி. உனக்கே தோணும் என்ன கேள்வி கேக்கணும்னு. உனக்கு இதுதான் தனியா முத கேசு கேட்டியா?"

வந்தவர் கிளம்ப, இளைஞன் தனியாய் நின்றான். வெயிலை மட்டுமே அறிந்த அவன், மழையும் மழை சார்ந்த ஊரையும் இங்கு தான் கண்டான். அங்கோ நிழலுக்கு கூட மரம் இல்லை, இங்கோ வெயில் பட இடமில்லை.  அடர்ந்த மரத்தின் பாதி மட்டுமே வெயில் நிரப்ப இயலும். இந்த அணைக்கட்டின் மறுபுறம் கேரளம்,  அதனால் இறந்தவன் நக்சல் ஆகக் கூட இருக்கலாம் என தோன்றியது.  இல்லை இருக்காது,  இறந்தவனின் உடலமைப்பை கவனித்ததில்,  தொப்பையான வயிறும், சரியாக சவரம் செய்த முகமும் அவன் நக்சல் அல்ல, என்பதைப் போல இருந்தது. சரி யாராக இருக்கட்டும், இறந்துவிட்டான். யார் இவன்? இப்போதெல்லாம் கம்யூனிசம் பேசினாலே நக்சல் மாவோயிஸ்ட் என்ற பயம் தொற்றிக் கொள்கிறதே!  எனப் பல கேள்விகள் அவனை துளைத்தன. எண்ணம் எங்கும் நிறைத்து அவனுள் உள்ளுக்குள் ஒலிக்கும் எந்த கேள்விக்கும் விடையில்லை. நடந்தபடி அங்கிருந்த பலா மரத்தின் பின் நின்றுகொண்டான். அந்த எஸ்டேட்டின் தூரத்தில் ஒரு கொடிக்கம்பி இருந்தது, முனையில் கிழிந்த கம்யூனிஸ்ட் கொடி தொங்கியது.  பிறந்த ஊரில் பனையேறி அப்பா, இவனும் சிறிய வயதில் பனையேறுவான். கள் இறக்குவான், பின் நொங்கு பதநீர் என சுருங்கிக் கொண்டது தொழில். எதற்கும் பல மைல் நடக்கவேண்டும். இதுவே வலுவான உடலைக் கொடுத்தது. காவல் துறையில் தேர்ச்சி பெற்று, துணை ஆய்வாளர் ஆகிவிட்டான்.

தகரக் கொட்டாயில் கிழவர் அசைவது மஞ்சள் ஒளி பட்டுச் சிதறிய நிழலில் தெரிந்தது. அவரை அழைக்கச் செல்லும் போது, அங்கிருந்த கால்குப்பியில் பாதி குறைந்து இருந்தது. சரி அரைமணி நேரம் கடந்திருக்கும்,  முழுக் குப்பியையும் முடித்திருப்பார். அவனுக்குள் எல்லாம் ஓடிக் கொண்டிருந்தது. அவன் அங்கிருந்த நீண்ட நேரத்தில் குளிர் மேலும் கூடியிருந்தது,  முழங்கை வரை மடித்திருந்த முழுக்கைச் சட்டையை மணிக்கட்டு வரை இழுத்து கொண்டான். உள்ளங்கைகளை உரசி வெப்பம் ஏற்படுத்திக் கொண்டான். கிழவர் வெளியே வருவது போல இருந்தது, இருட்டும் அணிந்திருந்த மங்கி குல்லாவின் காரணமாய் அப்போது முகம் தெளிவாய்த் தெரியவில்லை. ஆனால் மஞ்சள் பல்பின் நேரே நிற்க முகம் தெளிவாய்த் தெரிந்தது.

அவனுக்கு இவரைத் தெரியும், இந்த சிறிய ஊருக்கு வந்த புதிதில் சந்தித்த முதல் மனிதர் இவர்தான். காணிக்குடியிருப்பில் வீடு,  காணிக்குடியிருப்பு அணை கடந்து செல்லவேண்டும். கொஞ்சம் தைரியம் வந்தது, தெரிந்தவர் தான் பேசிக்கொள்ளலாம். 

கையில் இருந்த டார்ச் லைட்டை அடித்து சுற்றிமுற்றியும் பார்த்த கிழவர், மெதுவாய் இறந்த உடல் கிடந்த பகுதிக்குச் சென்றார். யார் இந்த எஸ்டேட்டில் இந்த நேரத்தில் இருக்க போகிறார்கள் என்ற தைரியமோ! கிழவர் எதையும் கவனிக்காமல் வேகமாகச் சென்றார். இவன் அவர் பின்னாலே மெதுவாய் ஒரு மரம் விட்டு  ஒரு மரமாக மறைந்தபடி சென்றான். ஏன் இவர் இந்நேரம் அங்கு செல்கிறார்,  என்ற கேள்வியின் பதில் அவர் பின்னால் சென்றால் மாத்திரம் கிடைக்கும் என்பதை அறிந்து எவ்வித சலனமின்றி நிதானமாய் வைக்கும் அடி ஒவ்வொன்றிலும் அவனின் கவனம் இருந்தது. 

உடல் கிடந்த இடம் அருகே சென்றதும், கிழவரின் முகம் வாடி இருந்தது போல இருந்தது. இவன் மேலும் கண்களைச் சுருக்கி அவரை நோக்கினான், கண்கள் கலங்கி இருந்தது போல இருந்தது,  என்ன விந்தை கிழவர் அழுகிறார். யார் இறந்தவன்,  இவனைத் தெரியுமா எனும் போது இல்லை என்றாரே? தேரிக்காட்டில்  பனை உரசும் காற்றில் முயல் பிடித்தவனின் கண்கள் மிகவும் கூர்மையாய் கிழவனை கவனித்தது.

திடீரெனக் கிழவர் மயங்கி சாய்வது போல தெரிந்ததும், எதையும் யோசிக்காமல் ஓடி விழுந்தவரை தாங்கி கொண்டான். நினைவின்றி இருந்தவரைத் தாங்கித் தகர கொட்டாய் கொண்டு சென்றான்.  அவர் புலம்புவது போல இருந்தது,  காதினைக் குவித்து அதைக் கேட்டான் 'எம்பிள்ள,  எம்பிள்ள. பரசு,  பரசு' என்பது போல கேட்டது. சட்டென்று எழுந்த கிழவர், அங்கே இவனைப் பார்த்ததும் அதிர்ச்சியானார். 

இருந்தாலும் பின் சகஜமாய் அங்கிருந்த பிளாஸ்டிக் குப்பியில் இருந்த நீரைக் குடித்து தெளிவானர். சில நேரம் நிசப்தமாய் இருக்க, அவன் ஆரம்பித்தான். 

"அய்யா சொல்லுங்க உங்களுக்கு செத்தது யாருன்னு தெரியும். மறைக்காம சொல்லுங்க,  நீங்க அழுதது நா பாத்தேன்."

கிழவர் எதுவும் நடக்காத மாதிரி அமர்ந்திருந்தார். எங்கோ பயிற்சியில் அறிந்த பாடம் திடீரென்று கத்தினான் "சொல்லும், போலீஸ் கேசுல போணுமா. உண்மையா சொன்னா விட்ருவேன். இல்ல நாளைக்கு ஸ்டேஷன் தான்." பேசிமுடித்ததும் தான், ஏதோ தவறு செய்தது போல உணர்ந்தான். வயதில் பெரியவர், இவரிடமா இப்படி பேசினேன். தலை கவிழ்த்து சிறிது நேரம் நின்றிருப்பான்.  கிழவர் எதுவும் பேசவில்லை, அமைதியாக இருந்தார். பின் பேச ஆரம்பித்தார்.

"பரசு எம்பிள்ள, காணிக்குடில படிச்சான்.நல்ல புத்தியுண்டு. " பேசும் போதே அழ ஆரம்பித்தார். பின் கண்ணீரை துடைத்துக்கொண்டு பேச ஆரம்பித்தார். 

"படிச்சி என்ன புண்ணியம், பிள்ளைய பரலோகம் அனுப்பவா படிக்க வச்சேன். எங்க நிலம் அணைக்கட்டு தாண்டியும் உண்டு. இந்த ரப்பர் எஸ்டேட் காரங்க எங்க நிலத்தை கேட்டானுங்க. கவெர்மென்ட்ல ஆளுங்க வந்தாங்க,  காசு கீசு தாரேன்னு சொன்னாங்க. இது எங்க காடு, எப்புடி கொடுக்க. டவுனுக்கு தண்ணீ வேணும்னு பாதி காடு டேம்முக்குள்ள முங்கி கிடக்கு. இதையும் கேட்டா, எங்க போவோம். எம்பிள்ள கேசு போட்டான். சந்தோசமா எங்க ஆளுங்க எல்லாரும் பெருசா பேசுனாங்க.  ஆனா இழப்பு எனக்குத் தானே" கண்ணீர் வழிந்தபடி இருந்தது.

இளைஞன் எதுவும் பேசவில்லை,  அது எங்கோ தன் கதையைப் போல இருந்தது. கடற்கரை ஒட்டிய பகுதியில் மணல் எடுத்த ஆலை விஸ்தாரமாய் விரிந்து சிறிது சிறிதாய் இவன் வசிக்கும் கிராமத்திற்கு வர, வேறு ஊருக்கு நகர்ந்தவர்கள் அவர்கள்.  கிழவர் தொடர்ந்தார். 

"கேசு நடந்துட்டு இருந்துச்சு. அணைக்கட்டு பக்கத்துல கிடந்தான், குத்தப்பட்டு. நானும் இருந்தேன் பக்கத்துல. ஒண்ணும் முடிலயே, எம்பிள்ள போச்சே. " மேலும் அழுதார்.

"குத்துனவன ரெண்டு வாரம் முன்னாடி இந்த எஸ்டேட் ல பாத்தேன். அவன்தான் எம்பிள்ளையைக் கொன்னான்.  போலீசும் வந்துச்சு ஒன்னும் நடக்கல. இதே எஸ்டேட் ல நைட் காவலுக்கு ஆளு வேணும்னு சொன்னாங்க. நா வந்தேன். இவன் எஸ்டேட் ஆளுதான், ராத்திரி குடிக்க, பொம்பள சுகத்துக்கு வரத கண்டு வச்சேன்".

"இன்னைக்கும் வந்தான், குத்திட்டேன். ஆனா எம்பிள்ள வருமா? " மேலும் அழுதார். 

கிழவரை என்ன சொல்ல, தேற்றவா. இல்லை இப்போதே என்னுடன் அழைத்துச் செல்லவா?.  கிழவர் எதுவும் பேசாமல் அமர்ந்து இருந்தார். நெடு நேரம், இவனும் எதுவும் பேசவில்லை. ஏதோ விழிப்பு  வந்தவனாய் எழுந்தான், கிழவனின் கண்கள் கொஞ்சம் தெளிந்து இருந்தது, மென்மையான சிரிப்பு அவரிடம் மிஞ்சி இருந்தது. அவ்விடம் விட்டு நகர்ந்து தங்கியிருக்கும் வீட்டிற்கு வந்தான்,  இரவு விழித்ததின் சோர்வு உறங்கி போனான்.

அசைவின்றி உறங்கி கொண்டிருந்தது அவன் உடல் மட்டுமே, சில்லிட வைக்கும் நினைவுகள் அவனை அச்சுறுத்தியது. சிறுவயதில் அப்பாவின் தோள்களில் ஏறி பனை மீது ஏற முயற்சி செய்வான். பனையின் தண்டு சொரசொரப்பான செதில்களை போன்ற அமைப்பை கொண்டது. பொறுமையாக கற்றுக் கொடுப்பார். இவனும் விரைவாகவே கற்றுக்கொண்டான். வாழ்வின் முக்கிய தருணங்களை அப்பாவிடம் பகிர்ந்து கொண்டது பனைமர  நிழலில்தான். அதே பனையடியில் அப்பா குத்தப்பட்டு கிடந்த காரணம் அவ்வயதில் விளங்கவில்லை. இன்று ஓரளவுக்கு புரிந்தது. சட்டென்று எழுந்தான், பெரும் குழப்பம் அவனை வாட்டியது. ஒரு வேலை கிழவரின் மகன்  நானாக இருந்திருந்தால் அப்பாவுக்கு இப்படி ஒரு எண்ணம் வந்திருக்குமா.  எதையும் நினைத்து வருந்துவதில், பரிதாபப்படுவதில் அர்த்தமில்லை.  புறப்பட்டு  மாலை காவல் நிலையம் சென்றான். செல்லும் வழியில் கிழவர் அவனுக்காக காத்திருப்பது போல இருந்தது,  அவர் அருகே சென்றான்.

கிழவர் வாடி இருந்தார். நேற்றை விட மெலிந்தவர் போல இருந்தார்.  அவரின் கண்களை தவிர்த்தான்.  "ராத்திரியே வந்திருப்பேன். எம்பிள்ள புதைச்ச இடத்தைப் பாக்கப் போனேன். ஒரு வருஷம் ஆச்சு இன்னையோடு. வாரேன், கூட்டிட்டு போவும்."

இளைஞன் எதுவும் பேசவில்லை,  இங்கே குத்தப்பட்ட இறந்த இவரின் மகனும், அங்கே தன் ஊரில் குத்தப்பட்டு இறந்த தந்தையும் அவனுக்கு ஒரே நிகழ்வின் விளைவாகவே தெரிந்தன. இருப்பினும் இவர் செய்ததும் கொலைதான். அவன் நேற்று கண்ட எல்லா காட்சிகளுக்கும் சாட்சி இல்லை,  இருந்தாலும் குற்றமாகவே எண்ணினான். இறுதியாய் இதைத்தான் நினைத்திருந்தான். சட்டத்தை ஏமாற்ற விரும்பவில்லை, நீதி பொதுவானது.  ஆனால் ஏனோ ஒரு சிலர்க்கு சட்டை பாக்கெட்டில் பணக்கட்டாய் கிடக்கிறது.  அவரை காவல் நிலையம் அழைத்துச் செல்லும் போது அவன் தன்னிலையில் இல்லை.  ஏதோ தவறு இழைப்பவனைப் போலவே உணர்ந்தான்.  நீதியின் முன் கிழவர் குற்றவாளி,மனிதம் கொலையை வலியுறுத்தவில்லை.  அப்பா சொல்வது நினைவில் வந்தது "ஒவ்வொரு பனையும் நம்ம பாட்டன், முப்பாட்டன்.  அதுக்கும் உசுரு உண்டு. பிள்ளையைப் போல பாத்துக்கிடனும். "  அதே போலத் தான் இவர்களுக்கு காடு.  முடிந்தவரை தன்னை ஆறுதல் படுத்திக்கொண்டான்.  கிழவர் அவனோடு நடந்தார், அவரின் பார்வை மாலை வெயிலின் மென் ஒளியில் விளிம்பாய் தெரிந்த மலையின் முனையை நோக்கி இருந்தது. 


கிழவர் செய்தது கொலை என்றால், எவ்வித குறுகுறுப்பும் இன்றி காடுகளை அழித்து, அங்குள்ளவர்களை விரட்டுவது எவ்வகையில் நியாயம். சுயலாபத்திற்காக தினம் தினம்  இயற்கையைக் கொலை செய்யும்  கொலைகாரர்களை யார் தண்டிக்கப் போகிறார்கள். அவர்கள் கால்கீழ் செத்துக்கிடந்த காட்டில், புதிதாய் கட்டப்பட்ட காவல் நிலையத்தின் உள் இருவரும் நுழைந்தார்கள். அதைச் சுற்றிலும் இரப்பர் மரங்கள் சூழ்ந்து இருந்தன. ஆம் எளியவரின் காட்டை அழித்து, வலியவர்களின் இரப்பர் காடு  எழும்பி இருந்தது.

No comments:

Post a Comment

இணைந்த கைகள்

  ஒரு மாலைநேரம், புதிய திரைப்படம். திங்கள் கிழமை,  மாலை நேரக்காட்சி,  இணைந்த கைகள்.  நிதானியுங்கள், அதே நேரம் உங்கள் மனைவி, அரசு மருத்துவமனை...