Sunday 3 May 2020

குற்றமும் தண்டனையும்: இரண்டு (கையில் ஏந்திய குருசு)






குரல் கேட்கிறது, சத்தமாக,  அசௌகரியமாக உணர்கிறேன். 'ஒப்புக்கொள்', 'மண்டியிடு', 'பாவத்தின் சம்பளம் உன் கைகளில் இருக்கிறது'. மீண்டும் அதே குரல், அழுகுரல்,  உணர்ச்சியற்ற வெறுமையான தொனியில் அதே குரல் 'நீ பாவப்பட்டவன்', 'மன்னிப்பை கேள்'.  யாரிடம் மன்னிப்பு கேட்க,  'ஆண்டவரிடம் கேள்'.  இல்லை யாரிடமும் மன்னிப்பைக்கோர நான் விரும்பவில்லை.  அதே குரல், எங்குமே விதவிதமான தொனியில், உணர்ச்சியில் அதே குரல். இங்கே எது குற்றம், உங்களின் அளவுகோல் என்ன?  இந்த கோளத்தின் ஒரு முனையில் நான் நிற்கிறேன், மறுமுனையில் நீங்கள் நில்லுங்கள், யோக்கியர்கள் மட்டுமே கல்லெறியுங்கள்.  எங்கே, உங்களின் அந்தரங்க ஆத்மாவின் திரையை விலக்குங்கள்.  முடியாது, இருண்மை சூழ்ந்த நிலத்தில்,  சலசலவென்று பிசுபிசுப்பான மலம் மண்டி நிறைந்திருக்கிறது. இவை என்ன தெரியுமா?  நீங்கள் செய்த குற்றம்.  நான் சொல்லட்டுமா?  குற்றத்தின் அளவுகோலை.. ஹா ஹா முடியாது, ஒவ்வொருவரின் குற்றத்தின் அளவுகோல் அவர்களிடமே கொடுக்கப்பட்டிருக்கிறது.  முடிந்தால் அகங்காரம் தவிர்த்து நீட்டி அளவீடு செய்யுங்கள்.  நீங்கள் என்னை மண்டியிட சொல்கிறீர்களா? முடியாது. 

மீண்டும் ஒரு குரல், அய்யோ தவிர்க்க முயல்கிறேன். பின் தோற்கிறேன். கருணையின் குரல்,   ஒரு சிறுமியுடையது போல, குழந்தைத்தனம் நிரம்பிய அதேவேளை அன்னையுடைய அணைப்பை அள்ளித்தெளிப்பது போல  அதே குரல்.  சோனியாவின் குரல், அவளேதான் மர்மெலாதோவின் மகள்.  குடிகார அப்பனின் சொத்து.  இவள் ஏழை குடிகாரனின் மகள். கருணையின் மகள். இவள் முன் நான் மண்டியிடுவேன்,  எப்போதுமே, மண்டியிடுவேன். இவள் சிலுவையை சுமப்பவள், என் பாவத்தையும் அவள் தோள்களில் ஏற்றி, மெல்லிய பாதங்களை முத்தமிடுவேன். அவளின் கண்ணீர் போதும், என் பாவம் கரைய ! இல்லை,  ஷிவதா, ஏன் அவள் முகம் முன்னே வரவேண்டும். சீ, இழிபிறவி நான். என் பாவத்திற்கு சிலுவை இல்லை, நான் இழைத்தது என்ன?  அதன் கனம் என்ன?  மூடன், புத்திசாலி, எது அறிவிஜீவி. நான் முட்டாள்,  மலப்புழு.  

ரஸுமிகின், இங்கே பலர்  ஏறத்தாழ உன்னைப்போலவே,  இதயத்தின் அத்தனை அறைகளிலும் கோட்பாடுகளும், நெறிமுறைகளும் குவித்து உள்ளத்தின் ஓரமாய் கிடத்திப்போடப்பட்டிருக்கும். அதிகம் பேசுபவன், நான் அறிந்தவரை அதிகம் பேசுபவன், அதிகமான நம்பிக்கையை விதைக்கிறார்கள். யாருக்காகவும் உடனடி இரக்கப்படவும் தெரியும். வாய்ப்புகளுக்காக பொறுமையுடன் காத்திருக்கவும் தெரியும். நம்பிக்கை அதிகம் தான், நல்வழியில் அதற்கான நேரம் வரும் எனும் நம்பிக்கையில் உலாவும், எதையும் தீர்மானித்து, கொள்கைப்பிடிப்பில் உறுதியோடு வாழும் ரஸுமிகின்கள் இந்நூற்றாண்டில் அதிகம்.  நான் உன்னை அதிகம் நேசிக்கிறேன்.  உண்மையாக சொல்கிறேன் நண்பா?  உன்னைத்தான் அதிகமும் வெறுக்கிறேன், ஹா ஹா ஹா. 

லூசின், சாத்தானின் உறைவிடம். இவர்களை எளிதில் அடையாளம் காணவியலாது.  நாம் லூஸினின் நெருங்கிய உறவினர்கள்தான். அவ்வப்போது, தலைதூக்கி வெளியே எட்டிப்பார்க்கும்.  நம்மை விஞ்சும் எவராவது அருகில் இருந்தால் லூசின் அவர்களை உரசிப்பார்ப்பான்.  கொஞ்சம் கர்வத்துடன், அவர்களின் உணர்ச்சியோடு விளையாடுவான். சந்தர்ப்பம் வாய்க்கும் போதெல்லாம் நம்முள் இருந்தபடி காய்களை சாமர்த்தியமாக நகர்த்த நம்மை உந்துவான். லூசின் நம்முள்ளே என்றும் இருக்கவே இறைவன் நிர்பந்தித்துள்ளான். லூஸினை வெளிகாட்டிக்கொள்ளாமல் இருப்பதே, சாத்தனிடம் இருந்து விலகி இருப்பதற்கான வழி. லூசின், இன்னொரு பெயர் லூசிஃபர்.

வாழ்க்கையின் எல்லா நொடிகளையும் தீயவனாய் கடந்துவிட்டு, வாழ்வின் கடைசி நிமிடங்களை முடிந்தளவு நல்லவனாய் மாற முயற்சித்து, பின் அதிலும் தோல்விகண்டு தன் முடிவை தானே எடுக்கிறான். ஸ்விட்ரிகைலோவ்,  முக்கியமான மனிதன். இவனின் முடிவுகள் புதிரானவை, குடிகாரனின் குழந்தைகளுக்கு நல்வாழ்வை உருவாக்க ஏன் உதவினான்.  இல்லை உண்மையிலே மனம் இளகி செய்த காரியமா? இல்லை, எங்கோ விவிலியத்தின் சிலவரிகள் இவன் அழுக்கடைந்த காதில்களில் ஊடுருவியிருக்கலாம். சரிதான், இந்த பன்றிப்பயல் இந்நகரத்தில் வாழ்ந்து வருவது சோனியாவின் பக்கத்து அறையிலே இல்லையா?  ஆச்சர்யம், சோனியா. எத்துணை மகத்தானவள் நீ ! உன்னையா இந்த ஜெர்மனிய வீட்டுக்காரி திட்டினாள். அவளுக்கு நரகம்தான். ஸ்விட்ரிகைலோவ், நீ செய்த பாவத்தின் சம்பளம் என்ன தெரியுமா?  ஒரு சிறுமியை போய், கூசுகிறது. எங்கே கற்கள் கிடக்கிறது,  ஜெருசலேமில் மதகுருக்கள் கொடுக்கும் தண்டனையை உனக்கு அளிப்போம். கீழ்த்தரமான செயல், பாவங்களை குவித்து, ஓர் புள்ளியில் திரும்பி அத்தனையும் ஏற்றுக்கொண்டால், மனம் துயரப்பட்டால், நீ தூயநீரால் உடல் கழுவிய தூய ஆத்துமா ஆகி விடுவாயா?  பன்றிப்பயலே உன் முடிவு ஆண்டவன் கைகளில் இல்லை. சீ, ஸ்விட்ரிகைலோவ். உன்னை நான் எவ்வளவு மதிக்கிறேன், விரும்புகிறேன் தெரியுமா?  குழப்பம், அச்சம், இயலாமை.  கடல் அலை போல என்றுமே உன்னை மோதியபடி இவ்வுணர்ச்சிகள். சிலவேளை நானும் உன்னைபோலவே உணர்கிறேன். தயக்கங்கள் அன்றி தவறுகள் புரிகிறேன். உங்களின் பார்வையில் தவறுகள், எனது பார்வையின் நியாயங்கள்.

லெபஸியாட்னிகோவ்,  சிடுசிடுப்பானவர்கள், முரட்டுத்தனமான கொள்கைகள் கொண்டிருக்கலாம். வெறுக்கத்தக்கவண்ணம் செயல்கள் நம்மை அவர்களை பற்றிய எண்ணங்களில் அருவருப்பை கக்கலாம். காத்ரீனா, பரிதாபப்பட்ட ஜீவன். மனம் இளகி, உனக்காக அழுதேன்.  கண்ணீரால் உன் சவத்தை நிறைப்பேன். நீ என் அன்னை, ஆற்றாமையின் அன்னை. சொர்க்கத்தின் கதவுகளை உதைத்து தள்ளுவேன். அங்கே, நீ ஒய்யாரமாக நடைபோடு உன் குலப்பெருமையோடு. உனக்காகத்தான் லெபஸியாட்னிகோவ்கள் படைக்கப்பட்டு இருக்கிறார்கள். உங்களின் பார்வையில் கசப்பான அனுபவத்தை அளிக்கலாம். ஆண்டவரே, லெபஸியாட்னிகோவ்களை என் கண்களுக்கு புலப்படுத்து. சோனியாக்களுக்காக உண்மையான, நெகிழ்வான, தூய ஆத்மாக்களின் கண்ணீர் அவர்களின் இதயத்தில் ஊற்றாய் நிறைந்திருக்கிறது. 

மர்மெலாதோவ், என் தந்தை. அருகில் இருந்து தரிசித்திரிக்கிறேன். கண்ணாடி முன் நான் நின்றால்,  மறுபக்கம்  மர்மெலாதோவ் என் தந்தையின் உருவமாய் நிற்கிறார். மர்மெலாதோவை அறிய நீ குடிகாரனாக இருக்கவேண்டும். இன்னும் நெருக்கமாக அறிய அவர்களின் குழந்தைகளாக இருக்கவேண்டும். மனைவியால் இயலாது. மர்மெலாதோவ், என் தந்தை.

ரஸ்கோல்நிகோவ், நான் தான். கோடரியை கைகளில் ஏந்தியவன். தெரியுமா?  உலகம் உரித்தெழ வேண்டும் புதிதாய். புதிய உலகம், சமத்துவமானது. ஏழைகளும், பணக்காரர்களும் ஒரே உணவுமேடையில் உணவருந்தலாம்.  அபத்தமான பேச்சு, புதிய உலகத்தில் ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடு இல்லை. அங்கே எல்லாம் ஒன்றே.  இது என்ன பிசுபிசுப்பான திரவம், என் கைகளில் வழிந்தோடுகிறது. மூட்டைபூச்சியின் இரத்தம், கோடரியால் அதன் மண்டையை பிளந்தேன். ஹா ஹா. நெப்போலியனை, தைமூரை, அலாவுதீன் கில்ஜியை, செங்கிஸ்கானை, அலெக்ஸாண்டரை போல.  

கைகள் எரிகிறது, அமிலம் போல எலும்புகள் வரை ஊடுருவி எரிகிறதே.  சிவப்பான திரவம், அய்யோ இது ஷிவதாவின் இரத்தம். பாவம், நான் கோழை.  இவளை ஏன் கொன்றேன்.  ஏன், ஏன்.  பாவம், நான் மகாபாவி. மனதின் அடியாழத்தில் வியாபித்த குழப்பங்கள், கேள்விகள். வான்மழையாய் பொழிந்து, பின் ஆவியாகி மேகமாய் கூடி,  ஒவ்வொரு துளியிலும் அதே குழப்பம், கேள்வி, முட்டாள்தனம், அகந்தை.  

சோனியா உன் பாதங்கள், மேன்மையான பாதங்கள். முத்தமிடுகிறேன். சொல்கிறேன், கேள்.  எல்லாவற்றையும் கேள். என்ன, இதை ஏன் என் கைகளில் திணிக்கிறாய். என் கோடரியை பிடுங்காதே. நிறுத்து, சோனியா.  அய்யோ இது சிலுவை, குருசு. எனக்கான சிலுவை, உன் கைகளால் கிடைத்திருக்கிறது. எனக்காக லாசரின் உயிர்த்தெழல் வாக்கியங்களை வாசிக்கிறாயா? சிவந்த கரங்களில் குருசை ஏந்திக்கொண்டேன், மண்டியிட்டேன், சோனியாவின் முன்பு. அவள் விவிலியத்தை கைகளால் ஏந்தி படித்துக்காட்டினாள்.  பத்தொன்பதாவது வாசகம், அதிலும் குறிப்பாக 

மென்மையான, சிறுமியுடைய குரலில் "இயேசு அவளை நோக்கி  'உன் சகோதரன் உயிர்த்தெழுந்திருப்பான்' என்றார்" நா தழுதழுக்க என்னை நோக்கினாள்.

நான் உயிர்த்தெழுந்து கொண்டிருந்தேன், கைகளில் குருசோடு, கண் நிறைந்த கண்ணீரோடு. 

No comments:

Post a Comment

இணைந்த கைகள்

  ஒரு மாலைநேரம், புதிய திரைப்படம். திங்கள் கிழமை,  மாலை நேரக்காட்சி,  இணைந்த கைகள்.  நிதானியுங்கள், அதே நேரம் உங்கள் மனைவி, அரசு மருத்துவமனை...