Tuesday 12 May 2020

மாடன் நடை 3





நாஞ்சில் நாட்டில் ஒரு பழமொழி உண்டு 'ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும்', மாடன் கோயிலின் பின்நின்ற வேப்பமரம் பேயாட்டம் ஆடியது. தாடகை, தோவாளை மலையில் இருந்து இறங்கிய காற்று வேகமாய் தத்தியார்குளம் மேலோடி படர்ந்து ஒழுகினசேரி மாடன் மேல் பட்டபடி சென்றது. கோயில் வெளிநடையில் கால்நீட்டி மாடன் அமர்ந்திருந்தார். கருத்த உலக்கையின் மேலே மயிர் படர்ந்தது போலவிருந்தது கால். கச்சையை அவிழ்த்து, ஒதுக்குபுரையின் உள்ளேயிருந்த காவிச்சாரத்தை அணிந்திருந்தார். எதையோ யோசித்தபடி கைகளால் தலைமுடியை நீவியபடி தூரத்தில் இருந்த நாலுமுக்கை வெறித்தபடி இருந்தார். நீள நீளமான சுருள் முடி, சிலநேரம் விரல்களில் சிக்கியது, பின் மாடன் மெதுவாய் முடிகளை ஒதுக்கினார். மாடத்தி, படையலில் போட்டிருந்த வெத்திலையும் கோரைப்பாக்கையும் மடித்து வாயில் போட்டு மென்றபடியே வந்தாள். கோரைப்பாக்கை பட்டென கடிக்க,  கடக்கென்று சத்தம் கேட்டு மாடன் திரும்பினார். மாடத்தி வாயின் ஓரம் வடிந்த எச்சிலை வலதுகையால் துடைத்தபடி கள்ளச்சிரிப்போடு அவரருகே அமர்ந்தாள்.

"என்னங்க காவலுக்கு போலையா"  என்றபடியே கைகளால் கால்களை நீவிக்கொடுத்தாள். பின்னே பகல் முழுக்க நின்றிருக்கிறாள் அல்லவா.

"இல்லட்டி, இன்னைக்கு முண்டன போக சொல்லிட்டேன்.மொத்தம் நாலு சுத்து, ஒவ்வொரு முக்குக்கும் சேத்து போய்ட்டு வந்திருவான். "

"ஏன் உமக்கு என்ன நோக்காடு" என்றாள் சலித்தபடி.

"ஏன் சொல்லமாட்டே,  குந்தாணி மாரி பக்கத்துல நின்னு எதுக்கு. கூட மாட ஏதாச்சும் ஒத்தாசி உண்டா. நேத்து நடைக்கு சுடுகாடு வர போயிட்டு வந்தேன். இன்னைக்கு பாத்து எவனோ மெட்ராஸ்காரன் வந்து, சேய் சங்கடம். அந்த பயலால காலைல ஒரு சந்தனகாப்பு,  சாயங்காலம் வேற ஒரு அலங்காரம். எழவு உட்டானா இந்த மாராசன். காலு சின்ன உலையா உலையுது"

"சரி அப்பப்போ நடக்கறது தானே. அவனுக்கு என்ன நேத்தியோ. அப்புறம் எதுக்கு இன்னைக்கு இவ்ளோ அலட்டல்"

"அந்த நன்னிய நினச்சா சுகமாத்தான் இருக்கு. குலதெய்வம்னா சும்மாவா. எங்க போனாலும் மனசு கனத்து, சங்கடம் வந்தா. நம்மளாதான் நினைக்கான். அது இரத்தத்துல இல்ல, அவனவன் வேறுல ஊறுனது.  உறவும் முதலும் அறுபடாது" மாடன் புன்சிரிப்புடன் கூறினார். மாடத்தியும் ஒத்திசைவாக "எல்லாமே நம்ம புள்ளைங்கதானே.  எங்கயிருந்தாலும் நம்ம நினைப்பு உண்டு அவாளுக்கும். சரி சுடுகாட்டுக்கு சாமி வேட்டைக்கு போச்சோ! எழவு சாராயத்துக்கு தானே போனீரு"

"எழவுல போக, நேத்தைக்கு குடிச்ச சாராயம் சரி இல்ல. அரசாங்கம் விக்கிற கருமாந்திரம். இப்போல்லாம் கள்ளு கிடைக்கலலா. கிடைச்சாலும் மறைச்சு படையலு வச்சு. வச்சவனுகளே தூக்கிட்டு போயிருவானுக.  சரி  இன்னைக்கி பாத்தியா, சந்தனக்காப்புல புருவத்துக்கு மேல வளைவு ஒழுங்கா வரல. மாராசனும் அப்டி இப்டி என்னலாமோ பண்ணுகா. ஒன்னும் எடுபடல. என்ன காரணம்ன்னு நினைக்க.  எனக்கு கண்ணு சொக்கி அங்கேயும் இங்கேயும் போய்ட்டு கிடக்கு. சிக்கு தெளியல. அப்புறம் நம்ம பயல நினைச்சு பாத்தேன். பூஜைக்கு சமயம் வரவும்,  சரியா நானே பொருத்தி வச்சுட்டேன். அதை பாத்துட்டு அவனுக்கு கண்ணு கலங்கிட்டு" மாடன் நெகிழ்ச்சியாய் கூறினார்.

"எப்போ தீவாரானை காட்டும் போதா" மாடத்தி நக்கலாய் கேட்டது போலவிருந்தது. இருப்பினும் மாடன் வெளிக்காட்டாமல் "ஆமாட்டி நீயும் கண்டயோ". "உமக்கு மண்டைக்கு சரியில்ல, தீவாரானை காட்டும் போது,  சாம்பிராணி தட்டுல இருந்த புகை அவன் கண்ணுல பட்டு தண்ணீ வந்துட்டு.  கண்ணு கலங்குனாம், அதப்பாத்து இவரு கலங்குனாராம். நீரு ஆளு இழகிட்டிரு,  இப்போல்லாம் பழைய கோவம் இல்ல. "

சாந்தமாக மாடன் சொன்னார் "அசைவம் சாப்டுட்டு இருந்த சாமிய, பொங்கலு, புளியோதரை, சர்க்கரை பாயாசம் சாப்பிட வச்சா என்னவாகும். இப்போ புதுசா அப்பமும், புட்டமுதும் நாசமா போக. சமயத்துல கொண்டைக்கடலையை அவிச்சு கொடுக்கான்"

"அது சரிதான். வருஷம் ஆச்சு ஆடு வெட்டி நமக்கு பூஜை போட்டு" என்றாள் மாடத்தியும் ஆமோதித்தபடி.

"உனக்கு நியாபகம் இருக்காட்டி, ஒரு முரட்டு செவலை ஆடு.  நம்ம செல்லம் வாத்தியார் வீட்டுல வெட்டுனானுக.  அப்போ சுடலையாண்டி கிடந்தான். எல்லாம் இப்போ நினைச்சாலும் கண்ணு முன்னாடி வருகு.  அப்போ மாராசனுக்கா தாத்தா தான் பூசாரி. இவாளும் பாவப்பட்ட ஜீவன் தான். மடிக்காம நமக்கு படியளக்கு" 

"முரட்டு கிடா, திமிரியெடுத்து,  ஒரு பயல முட்டிச்சே.அவன் பேரு என்ன"

"அவனா, பேரு நியாபகம் இல்ல. ஒரு வட்டப்பேரு வச்சுதான் பயக்க கூப்டுவானுக. என்ன பேரு. ஆங் ஓர்மை வந்துட்டு,  மாங்காடி. அப்போ கோயில்ல மாம்பழ சீசனுக்கு மாம்பழ காடி காச்சுவானுக. இவரு என்ன பண்ணுவாரு.  பூஜை முடிஞ்சு, எல்லாருக்கும் பிரசாதம் கொடுத்துட்டு உருளிய கழுவபோட்ருக்கும்லா.  அதுல கைய போட்டு வழிச்சு நக்கிருக்கான். புறங்கையில்ல நக்கத பாத்த எவனோ பேரு வச்சுட்டான். மாங்காடி, இப்போ ஒரு பொடிசு சுத்தும் நீ பாத்திருப்பா. அதுக்கு பேரும் மாங்காடி.  அந்த நாரபயலுக்க பேரனாம். நல்ல கூத்து. தாத்தானுக பேரு பேரனுக்கு.  இப்போல்லாம் எங்க அந்த மாதிரிலாம் நடக்கு. காலம் மாறிட்டு" கலகலவென்று சிரித்தார் மாடன்.

"சரி நேத்து என்ன கருமத்தை குடிச்சீங்க, இப்போ வர சிக்கு இருக்கு" மாடத்தி இப்போதுதான் கேக்கவந்ததையே கேட்டிருக்கிறாள். மாடனை பேசவைக்கவே பண்டுக்கதைகளை பேசி, மாடனை உசுப்பேத்தி விட்டாள். இனி யார் விட்டாலும், மாடன் நிறுத்தப்போவதில்லை. கேட்டால் என்ன கேக்கவிட்டால் நமக்கென்ன, வந்தது வகை.

இதெல்லாம் நடக்கும் போதே முண்டன் வந்துவிட்டான். "என்னடே காரியம் கொள்ளாமா? " கேட்டார் மாடன். "ஒரு குறை இல்லே, ஊரே நிம்மதியா உறங்குகு. பின்னே ஒம்ம இடம்லா" கண்ணை சுருக்கி கூறினான் முண்டன். "கொமைக்கையோ!" என்றார் உர்ரென்று. "இல்ல அண்ணாச்சி" என்றான் தலையை தாழ்த்தியபடி.  "கேட்டியா டே, நேத்திக்க கதையை உனக்க மையினி கேக்கா. சொல்லட்டா" என்றார் மாடன் இடதுகையால் தொடையை தட்டியபடி,  "ஆமா, சொல்லிட்டாலும்.  நீங்க விடுங்க மைனி. ஆனாலும் நேத்து மயான சுடலை சொன்ன ஒரு கதை மட்டும் இப்போ வர கண்ணு முன்னாடி வருகு. இந்த பொம்பளைங்க என்ன பாவத்த செஞ்சி தொலைச்சாளுகளோ. எந்த சென்மத்துல தீருமோ." 

"என்ன கதை கொளுந்தனாரே" கதைக்கேட்க ஆர்வமானாள் மாடத்தி.

"நல்ல கதைலாம் இல்ல, சங்கடம். தொண்டை அடைச்சு, நெஞ்சு கனக்கு. அந்த பொம்பளைய நினச்சா" முண்டன் கூறிவிட்டு அமைதியானான்.  "விதி டே, மனுஷ  பயக்களுக்கு விதி. நாம காவலுக்குன்னு, கொறைய தீக்கண்ணு ஆனப்பொறவு,  அழிக்கதையும் ஆக்கதையும் அவனுகள்ட்ட கொடுத்தோம். நல்லது கெட்டது தீர்மானிக்க அவனுக்கு அறிவுண்டு. ஆனாலும் கைல நாலு சக்கரம் வந்ததும். அங்க உள்ளேயிருந்த மனுசன் போய், காசு பணம் பிடிச்ச  பேய் புடிக்கும். அதுலயும் அரிப்பு எடுக்கிற சில பிசாசுகளால  பொம்பளைக வாழ்க்கை சீரழியு" மாடன் வானத்தை வெறித்தபடி கூறினார். தோவாளை மலையின் வரைவு நிலவொளியில் மின்னியது. 

"பொண்ணு மேக்க,  கடையல் பக்கம். குறுப்புன்னு சொல்லுவாங்க. நல்ல நிறம், லட்சணம்.  கட்டினவன் ஆகக்கேடு. குடின்னா குடி.  விடிஞ்சண்ணைல இருந்து சாராயம். ரப்பர் எஸ்டேட்ல வேல. அது இந்த கம்யூனிஸ்ட் ஆளுக சங்கம். பய ஒழுங்கா போகலன்னு, வேலைல இருந்து தூக்கிட்டானுக.  இவன் நாரோயில் வந்து நம்ம வைரம் தியேட்டர்ல டிக்கெட் கிழிக்க வேலைக்கு சேந்துட்டான்.  அங்கேயும் குடிதான். அப்புறம் இவள இங்க சோழாரத்துல வீடு பாத்து அமத்திருக்கான். பொண்டாட்டி கிளி, மாப்பிள்ளை குடிகார குரங்கு.  சகவாசம் சரியில்ல.  ஊத்தி கொடுத்து, வீட்டுக்கே வந்து, குடிக்க ஆரம்பிச்சு, கடைசி  பொண்டாட்டிய.." முண்டன் அங்கே நிறுத்தினான்.

மாடத்தி கவலையுடன் "என்ன பாவம் செஞ்சாலோ, அவளை பெத்தவ.  இப்புடி ஒருத்தனுக்கு கட்டி கொடுத்திருக்கு".  மாடன் கோயில் கதவில் சாய்ந்தபடி மீண்டும் தலைமுடியை நீட்டிக்கொடுத்தவாறு இருந்தார்.கண்களில் ஒளியில்லை, நீர்த்துளி கண்ணை நிறைத்திருந்தது.

"எத்தனை நாள் பொறுத்திருப்பாளோ, ஆளு இல்லாத நேரம் பாத்து தீ வச்சுட்டா. எறிஞ்சி ஒண்ணுமே இல்லமாத்தான் சவம் சுடுகாடு வந்திருக்கு. அனாதை பொணம், அவ ஊரு ஆளுங்க வரல. சண்டாள பயலாள அவ பேரு தேவிடியா ஆயிருச்சு. தாயோளி அவன் சங்குல மிதிச்சு கொல்லனும். அப்புறம் முனிசிபாலிட்டி ஆளுங்க எரிச்சுட்டு போனதுக்கு அப்புறம் மயான சுடலை போய் அவளை எழுப்பிருக்கு. அப்புறம் நேத்து முழுக்க அவள நினச்சு வருத்தப்பட்டாரு." உச் கொட்டியபடியே முண்டன் நிறுத்தினார்.  "முரட்டு ஆளுலா, அவரு கலங்கிட்டாரா" என்றாள் மாடத்தி.

"கருங்கல் ஆத்தங்கரை ஓரமா  கிடக்குனு வச்சுக்கோ. தண்ணி பட்டு பட்டு கறைய ஆரம்பிச்சுரும். கல்லா  கறையல மக்களே, தண்ணீ கறைய வைக்கும்.  மனுசன் சுடுகாட்டுல எல்லாருக்கா கதையும் கேக்காருளா.  கொலைகாரனும், திருடனும், பாவப்பட்டவனும் அங்கதான் கடைசி போறான். போய் திருந்தி என்ன மயிரு புண்ணியம். வாழும் போது பாவத்த சம்பாதிக்கோம். செத்தா சம்பாதிச்ச பாவம் மட்டும் கூட வரும், வேற எந்த மயிரும் வராது." மாடன் ஓங்கி தரையில் குத்தியபடி கத்தினார். காற்று பலமாக வீச, நாய்கள் ஊளையிட்டது.  மாடத்தி கையால் மாடனின் முதுகை தடவிக்கொடுத்தாள். மாடன் மாடத்தியை நோக்கி மெலிதாய் சிரித்தார்.

"அவ சொல்லிருக்கா அவர்ட்ட 'சாமி உயிரோடு இருக்கும் போதுதான் ஆம்பளைங்க கண்ணு என்ன மேஞ்சுது, அப்போ எரிஞ்சு கிடக்கேன். உயிரு தொண்டைல நிக்கு.  பாவாடை இறுக்கி கட்டி, கீழ தொடைக்கு இடுக்குல ஒழுங்கா எரியலை.  புகைய பாத்து வீட்டுக்கு உள்ள வந்தவனுக அதுலயும் தொடைக்கு இடையிலேயே கண்ண வச்சு நோட்டமிட்டானே, அப்பவும் கைய வச்சு மறைக்க இழுக்கேன். கை அசையலை, கண்ணுல தண்ணி முழுக்க நின்னுச்சு. செத்தும் எனக்கு நிம்மதியில்லயே.'  கையெடுத்து கும்பிட்டு அழுதிருக்கா அந்த பொம்பளை.  சுடலை இளகி ஒன்ன இசக்கி ஆக்கிருகேன்னு கேட்ருக்கு, ஆனா அவ வேண்டாம். ஆம்பளைங்க இல்லாத ஏதாவது ஒரு பிறவி இருந்தா கொடுங்க. ஆசைப்பட்ட மாதிரி வாழ்ந்துட்டு மோச்சம் வாங்கியிருகேன் சாமின்னு அழ.  சுடலை வரம் கொடுத்துட்டாரு" முண்டன் மூச்சுவிடாமல் பேசி முடித்தார்.

மாடத்தி மாடனை நோக்கி "எப்போ இந்த பொம்பளைங்க நிம்மதியா இருப்பாளுகளோ." என்றாள். "நாம நிக்கிற, நம்மல தாங்குற இந்த பூமியும் பொம்பளத்தான்.  பொறுமை நல்லது தப்பில்ல, ஆனா கெட்டதுக்கும் பொறுக்கிறது, கூட நிக்கது தப்பு. ஆம்பளைங்க கீழ நாமங்கிற நினைப்பு போனும். நடக்கும் கொஞ்சம் கொஞ்சமா மாறுகு. மனுசன் மாறுவான். இப்போல்லாம் படிப்பு கூடுகு. எல்லாம் மாறும். மாறிட்டே இருக்கும். முன்னாடி நம்ம அம்மைமாறு மாராப்பு போடமுடியலை. இப்போ அப்படியில்ல. பாவச்சாவு செத்தது எல்லாம் இசக்கியா மாறி பொம்பளைங்க கூட நிக்கும், கொஞ்சம் கொஞ்சம்மா மாறுகு. இசக்கின்னு சொன்னதும் நியாபகம் வருது.  லேய் முண்டா, நாளைக்கு நீராழி இசக்கிய பாக்க போனும் மறந்து தொலைச்சிராத. " பேசிக்கொண்டிருக்கும் போதே,  தோவாளை மலை பின்னே செந்நிற கதிர் தெரிவது போலவிருந்தது. முண்டன் விடைபெற்று கிளம்ப, மாடத்தி மாடனை கைத்தாங்கலாக எழுப்பி கோயிலுக்குள் அழைத்துச்சென்றாள்.

No comments:

Post a Comment

இணைந்த கைகள்

  ஒரு மாலைநேரம், புதிய திரைப்படம். திங்கள் கிழமை,  மாலை நேரக்காட்சி,  இணைந்த கைகள்.  நிதானியுங்கள், அதே நேரம் உங்கள் மனைவி, அரசு மருத்துவமனை...