Saturday 29 August 2020

இணைந்த கைகள்

 




ஒரு மாலைநேரம், புதிய திரைப்படம். திங்கள் கிழமை,  மாலை நேரக்காட்சி,  இணைந்த கைகள்.  நிதானியுங்கள், அதே நேரம் உங்கள் மனைவி, அரசு மருத்துவமனையில் பனிக்குடம் உடைந்து துடிக்கிறாள்.  என்ன செய்வீர்கள். உங்களுக்கு என்ன தெரியும்,  அவளின் வேதனை, அற்ப ஆண் தானே நாம்,  என்னையும் சேர்த்துதான்.  பிரசவ வேதனை, அப்படியா?  எத்தனை வலி.  அ. முத்துலிங்கம் கதையில் வருகின்றபடி வலிக்கு ஒரு எண் உண்டு என்றபட்சத்தில் பிரசவத்தின் வலிக்கு எண் எத்தனை. அவரிடமே கேட்போம், எண் அகராதியில் இல்லையாம். சரி, பெண் உயர்ந்து,  ஆண் தாழ்ந்து! இருக்கட்டுமே, குறையோ நிறையோ பொறுங்கள் அய்யா.  பனிக்குடம் உடைந்து பெண்ணொருத்தி துடிக்கிறாள் உங்களுக்கு வலியின் எண் ஒருக்கேடு.  


ஆகஸ்ட் இரண்டு ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூறு,  இணைந்த கைகள் திரைப்படம் நாகர்கோயில் குமார் திரையரங்கில் திரையிடப்படுகிறது. கூட்டம் கூடுகிறது, ராம்கிகாகவா.  பாடல்களும் கேட்கலாம். சிந்துவும், நிரோஷாவும் நாயகிகள். அருண் பாண்டியன் இன்னொரு நாயகன். ஆபாவாணன் இயக்குனர். நல்ல படமா?  பார்க்கலாமா?  இதெல்லாம் லெட்சுமணனுக்கு தேவையில்லை.  மதியம் அடித்த சாராயத்தின் நெடி, இன்னும் வயிற்றை புளிப்பால் நிரப்ப, சாயந்திரம் அடித்த மறுநீருக்கு தலை வின்னென்று வலித்து எங்கெல்லாம் சுற்றி கடைசியில் குமார் திரையரங்கு தெரிந்தது. இதெல்லாம் நடந்தது ஆகஸ்ட் ஆறு. 


அவளுக்கு வயிறு வீங்கி இருக்கிறது. தடவி பார்க்கையில் மனதில் எழும் வினோத உணர்வுக்கு பெயர் தெரியவில்லை, ஆயினும் முகத்தில் மலரும் சிரிப்பை மறைக்காமல் அவளை பார்த்தேன். எண்ணெய் வழிந்த தலையில் பின்னலின் முனையில் சூடிய மல்லிகை மணமோ என்னவோ, எனக்கு அவளின் மணம் உடலில் கிளர்ச்சியை தூண்டியது "என்மேல வாடை அடிக்கு, உங்களுக்கு மட்டும் மணக்கோ" என்றாள்.  "எட்டி நிஜமா! நீ மணக்க,  எனக்கு அது மட்டும் தான் தோணுகு" என்றபடியே வயிற்றை தடவினேன்.  அவளின் வயிற்றின் மீது இருந்த கை,  ஒருமுறை அசைந்து பின் கீழேயிறங்கி பின் ஏறியது.  அவள் சிரித்தபடி என்னைப் பார்க்க "சேட்டையை கண்டியா.  இப்போவே, எம்பிள்ளையில்லா" என்றபடி நான் சென்றேன். அவள் என்னையே பார்த்தபடி நின்றாள்.  


"லேய், எத்தனை மாசம். நீ கொஞ்சம் காரியமா இருக்கணும்டே. வேலையெல்லாம் வரும் போகும். பிள்ளை பிறக்கும் போது, நீ தூக்கணும் முத. உம் பொஞ்சாதி, அங்கன பெத்ததும் முத கேள்வி என்ன கேப்பா தெரியுமா?  என் வீட்டுக்காரரு வெளிய நிக்காரனு. விளையாட்டு காரியம் இல்லடே. ஒரண்டையும் போகாம. அங்கேயே நிக்கணும். அதானே பொஞ்சாதிக்கு நாம குடுக்குற தைரியம்"  நம்பி மாமா பேசிக்கொண்டே போனார். "மாமா பாலு வண்டி ஏன் இங்கையே நிக்கு. போகட்டும், நா போறேன். அதெல்லாம் சும்மா நேரமாவே போய்டலாம்.  நீ போ மாமா" என்றபடி அங்கிருந்து நகர்ந்தேன்.  இதெல்லாம் நடந்தது வெள்ளிக்கிழமை, அதாவது ஆகஸ்ட் மூன்று.  


சீட்டுக்கட்டை சிலுப்பி, கைகளால் தேய்த்து, பின் ஏற ஏற தேய்த்து,  எல்லோரும் பார்க்கும்படி குலுக்கி,  பணம் கட்டி அமர்ந்த எல்லோருக்கும் வீசி, எடுக்கும் முன்னே ரம்மி காடை அடியில் சொருகி, இதையெல்லாம் ஒரு கலையாக வேலப்பன் செய்வான்.  எனக்கோ நெஞ்சு வலிக்க பரோட்டா தட்டி, சால்னா, கோழி சாப்ஸ், பொரிப்பு எல்லாம் சமைத்து கிடைக்கும் சம்பளத்தில் ஐம்பதை சீட்டு கழிக்காமல் சென்றால், ஏனோ அந்த நாள் முடிந்தபாடில்லை. என்னோடு சேர்த்து அது குறைந்தபட்சம் ஐந்து ஆறு பேருக்கு வாடிக்கையாகிவிட்டது. பதிமூன்று கார்டில் ரம்மி வருவதோ, ஜோக்கர் வருவதோ எனக்கு கவலையில்லை. என் வருத்தமெல்லாம் அதிகபட்சம் ஒற்றை கார்டுகள் வரக்கூடாது. தொடு சீட்டு இருக்க வேண்டும். அடுத்த அடுத்த ஆட்டையில் சீட்டுகள் அதுவாய் அமையும். சுற்றி இருப்பவர் வெளியே போடும் சீட்டை முழுதாய் கவனித்தாலே ஆட்டம் நம் கையிலே. மற்ற சூதாட்டம் போல, ஒருவன் புத்திசாலியாய் மற்றவர் முட்டாளாய் இருக்கவேண்டிய அவசியம் இங்கே இல்லை. என்ன அதிர்ஷ்டம் வேண்டும். இவள் ஒன்பது மாதத்தை கடக்க கடக்க தினம் தினம் எனக்கு அதிர்ஷ்டம் தான்.


ஸ்பாடோ, க்ளாவரோ என்னவோ முதல் வீற்றிலே ஒரு ஒரிஜினல் சேர்ந்து விடும். அதன்பின் ரம்மி பார்த்து, என் திறமை வேண்டாமா?  ரம்மி இறக்கும் போது, இதுதான் ரம்மி என மற்றவர் புரியாமல் எடுக்க வேண்டும். வேறு சீட்டை ரம்மி இதுதான் என்பது போல பாவலா செய்து குழப்ப வேண்டும்.  இதெல்லாம் ஒரு கலைதான்.  ஆனால் எந்த ஆணையும் கட்டியவொருத்தி இதையெல்லாம் ஏற்கமாட்டாள். பின் ஆறில் ஒருவன் தானே ஜெயிக்க வேண்டும். ஒரு ஆட்டையோ என்னவோ, தோத்தவன் பணம் எவன் சேப்பிலோ போனாலும், அதில் வரும் குடி பொதுவாக எல்லோருக்கும் உண்டு  பின் ஏன் சீட்டு விளையாட்டு எல்லாம். பங்கு பிரித்து குடிக்கவேண்டியது தானே. 


ஐந்து மாதம் இருக்கும் அவளுக்கு, நிலையான வேலையில்லை. சரியாக சொன்னால் மாடு வெட்டும் வேலை எனக்கு, அதன் இரத்தம் தெறித்த சட்டையோடு சீட்டு விளையாடிக்கொண்டிருந்தேன். அவளின் குரல் தான்,  வேகமாய் நடந்து முன்னே சென்றேன் "நீயெல்லாம் மனுஷனா, என்ன கொல்லுகிறீரே. சந்தோசம் உண்டா எனக்கு. வேலைக்கு போய்ட்டு வீட்டுக்கு வராமலா?  சீட்டு கழிப்பீரோ" அவளின் கைகள் என் சட்டையை கிழித்து கொண்டிருந்தது. கோபம் உச்சத்தில் ஏற கண்கள் அவளின் வயிற்றை நோக்க இப்போதெல்லாம் சீட்டு கழிப்பது அவளுக்கு தெரிய வாய்ப்பே இல்லை. என்ன ஒரு புத்திசாலித்தனம். 


சீமந்தம் கழியும்,  பணம் பாக்கெட்டில் நிரம்பியிருக்க வேண்டும். பூ மட்டும் கூடை கூடையாய் வேண்டும். அவளுக்கு மல்லிகை இஷ்டம். சாப்பாடுக்கு பிரச்சனை இல்லை. என்ன காலை நேரமாக நானே எந்திரித்தால் ஊர் மணக்க சோறும், குழம்பும், கறியும் உண்டு. சேலை வாங்கியாய்ச்சு. ஒரு போட்டோ வேண்டும். முழுவயிறில் அவளை நிறைத்து ஒரு போட்டோ. நடக்கட்டும், ராத்திரி வாங்கும் பாட்டிலில் கூட ஒன்றை காலையே குடித்தால் எல்லாம் நடக்கும் சரியாக. வாயில் எழும் நாத்தம் மாத்திரம் அவள் மூக்கில் நுழையாமல் இருந்தாலே போதும். ஒதுங்கி நின்று ஒற்றை ஆளாய் எல்லாம் முடிக்க சாமர்த்தியம் வேண்டும், எனக்கு அது இல்லையா பின்னே. 


கூட்டம் கூடியது, கை நிறைத்து வளையல். சிரித்தபடியே ஒரு முகம். இவளா! இத்தனை அழகு. முகம் நிறைத்து மஞ்சளும், பெரிய பொட்டும், கூந்தல் நுனி முடிய மல்லிகை, கனகாம்பரம் சரமும்.  பச்சை நிறப் பட்டுமாய், அய்யோ என் கண்ணே பட்டுவிட்டது. சாயந்திரம் சுத்திப் போடவேண்டும். வேர்வையில் குளித்த கருத்த தேகம், நான்தான். உள்பனியன் நனைந்து, சாரம் சாம்பாரும், பாயாசமும் மணக்க, இடுப்பில் கட்டிய துவர்த்தில் முகத்தை துடைத்தபடி, யாருக்கும் தெரியாமல் ஒரு டம்ளர் நிறைய பிராந்தி உள்ளே போனதும், மனம் ஆசுவாசப்பட்டு இளகியது. பின்னே மார்பை அணைத்து கைகள், முதுகில் மல்லிகை மணக்க அவள் பின்னே இறுக்க கட்டிக்கொண்டாள். 


கையில் குலுங்கிய கண்ணாடி வளையல், புன்னகை ததும்பிய முகம். பந்தி முடியும் போது, சாப்பிட்டவரின் கண்களில் தெரியும் உணவின் ருசி. நானே எல்லாம் ரசித்தபடி அடுத்த டம்ளர் ஊற்றினேன். இதெல்லாம் நடந்து ஒரு மாதம் ஆகியிருக்கும். இன்று ஆகஸ்ட் ஆறு, காலை வழக்கமான பரிசோதனைக்கு சென்றாள். இன்னும் வீட்டுக்கு திரும்பவில்லை. சாயந்திரம் செல்ல வேண்டும், கோட்டார் அரசு மருத்துவமனை.  இன்று வேறு சந்திரகிரகணமாம். மதிய வேளை, மணிகண்டன் வந்தான். பாவிக்கு என்ன அதிர்ஷ்டம்,  லாட்டரியில் ஆறாயிரம் விழுந்திருக்கிறது. விலைகூடிய சரக்கும், மீனும் கிழங்கும் இலை நிரம்பியிருக்க, என்ன சுகம். எத்தனை டம்ளர். கணக்கு வைக்க நான் யார்?  போவது வரை போகட்டும்.  


இணைந்த கைகள் திரைப்படம் திரையில் விரிந்தபோது, எழுந்த சத்தத்தில் கொஞ்சம் நிதானம் வந்தது. சரி, படம் முடியட்டும் கோட்டார் ஆசுபத்திரி செல்ல வேண்டும். படமும் என்ன கதை, யாரோ ஓடுகிறார். சிந்து அப்பப்பா அழகுதான் நீ! நிரோஷா அழுதுக்கொண்டே இருக்கிறாள். ராம்கிக்கு முடி சண்டையில் கூட கலையாதா?  சாராயம் என்ன எழவோ?  வயிற்றில் இன்னும் புளிப்பு வாடை.  இடைவேளை முடிந்து விட்டதா?  இல்லையா?  அடுத்த பாடல் சரிதான். பீடி பற்றவைப்போம். 


அருண் பாண்டியனுக்கு மகன் பிறக்கப்போகிறான், இங்கே ஒரு பாடல். ரயிலில் வேறு, செந்திலும் கூட இருக்கிறான். அருமையான தொடக்கம், வரிகள் கேட்போம் 'அந்தி நேர தென்றல் காற்று, அள்ளி செல்லும் தாலாட்டு. தங்க மகன் வரவை கண்டு தந்தை உள்ளம் பாடும் பாட்டு'. 


எங்கே காலையில் ஆசுபத்திரி சென்றவள் இன்னும் வீடு வரவில்லை.ஒரு வேளை நான் அங்கே இருந்திருக்க வேண்டுமோ. நம்பி மாமா சொன்னாரே. சைக்கிளில் வந்தேனா?  நியாபகம் இல்லை. சரி வெளியே செல்வோம். யாரிடமாவது வாங்கிக்கொள்ளலாம். நினைத்த மாதிரியே வெளியே வர, நம்பி மாமா பஜாரில் நின்றார். அவரிடம் காரியம் சொல்ல, கூடவே வந்தார். 


ஆசுபத்திரியில் ஜனம் நிறைய, எத்தனை நோயோ. பிரசவ வார்டு எங்கே. அம்மா, அத்தை வெளியே நின்றார்கள். "எப்பா, நேரத்துக்கு வந்துடீரு. சொல்லிவிட்டோம் ஆளு சொல்லிச்சா. மத்தியானம் வந்த வலி. பச்ச உடம்பு தாங்குமா" அம்மா சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, அத்தை சொன்னாள் "கிரகணம் வேற, இன்னும் முடியல".  நர்ஸ் ஒருத்தி வெளியே வந்தாள், அறிந்த முகம்.  "வீட்டுக்காரரு வந்துட்டாரு. அவள்ட சொல்லுங்க". "சுகப்பிரசவம் தாம் மா. இன்னும் அரைமணிக்கூறு" கூறினாள் அவள்.


அங்கிருந்த சுவரில் சாய்ந்து நின்றேன், தூரத்தில் கோயில் மணியோசை கேட்டது. "கிரகணம் முடிஞ்சு நட துறந்தாச்சு போல" அம்மை கூறினாள். குழந்தையின் அழுகுரல் அதே நர்ஸ் கையில் வெள்ளை துணி போர்த்திய பொதியோடு வந்தாள். "ஆம்பள பிள்ள,  அவளும் சுகம் தான். இப்போ மயக்கம். கொஞ்சம் கழிச்சு பாக்கலாம்" என்றாள் சிரித்தபடி. 


இரத்த சிவப்பில் ஒன்று அசைந்தபடி கிடந்தது. வெள்ளிக்கண்கள். அவளின் அக்கா கையில் வாங்கினாள், "கொளுந்தனாரே கையில வாங்குங்க. அப்பா ஆயாச்சு" புன்னகை ததும்ப கூறினாள். கையில் வாங்கினேன்.  எத்தனை நினைப்புகள், என் கையை பிடித்த பிஞ்சு கை. மனதில் ஒரு பாட்டு, இப்போது சில மணித்துளிகள் முன்னே கேட்டப்பாட்டு. முணுமுணுத்தபடி வாங்கினேன் 'தங்க மகன் வரவை கண்டு, தந்தை உள்ளம் பாடும் பாட்டு'.


Friday 28 August 2020

சத்தியத்தை பிரதிபலிப்பது

 




பதினெட்டாவது அட்சக்கோடு எங்கே, செகந்தராபாத்தை சொல்கிறாயா?  நிஜாம் ஹைதெராபாத்தின் இரட்டை நகரம். நம் திருநெல்வேலி, பாளையங்கோட்டை போல. பாரத் சர்க்கார், நிஜாம்,   சட்டைக்காரர்கள், துலுக்கர்களிடமிடையே சந்திரசேகரன் விளங்கா மனநிலையில் வாழ்கிறான். யாரோடது இந்நகரம், நான் இங்கே யார்?  அப்பா ரயில்வே செர்வண்ட்.  அப்புறம் ரெபியூஜிஸ்.  பொறுங்கள், ரெபியூஜிஸ் நாங்களும் தானே. பால்யம் முழுவதும் பயம் படர்ந்த நாட்கள், யாரிடம் அடி வாங்கப்போகிறேனோ.  தமிழ் பேசும் நம்மிடமும் தான் வித்தியாசங்கள் 'அவாள்', 'அவிய', 'அவுக', 'அவைங்க', 'அதுங்க' இன்னும் எத்தனை.  பாவம் சந்திரசேகரன் இதை அறியவில்லை.  ஒருவேளை நிஜாமுக்கும் பாரத் சர்க்காருக்கும் நடந்த சண்டையில் பிழைக்க வந்தவிடத்தில், பிழைக்க வேறு தொனியில் சொன்னால் உயிரோடு வாழ வேண்டுமென்றால் மீண்டும் ஆரம்பத்திற்கே வரவேண்டும் தானே.  


கிரிக்கெட், அலிகான், ஷேர்வானி. இங்கே விடப்பட்ட விஷயங்கள் இருக்கிறது.  ஒரு வேளை சந்திரசேகரன் அய்யராய் இல்லையேல், பிரியாணி எழுதப்பட வேண்டியிருக்கும். நிஜாம், தக்காணம் ஆளும் உணவை அய்யரின் கதையில் தேடுவது மடத்தனம். இதற்காகவே நிஜாமுக்கு பெரிய சலாம்.  அதிலும் உலகப்போர்கள் நடக்கிறது, பட்டேல் வேறு இந்தியாவை ஊசி நூல் கொண்டு தைப்பது போல எதெல்லாமோ இணைக்கிறார்.  திருவாங்கூர் இணைகிறது, சர். சி. பி ஓடவிரட்டப்பட்டு ஆரல்வாய்மொழி வெளியே தாண்டிவிட்டார்.  ஒரே வித்தியாசம், திருவாங்கூர் பத்மநாபதாசன் ஆண்டது.  புரியவில்லையா,  இது இந்துக்கள், அது முஸ்லிம்கள். ஆம் நிஜாம் முஸ்லீம் தானே.  ஏற்கனவே பாகிஸ்தான் பிரிந்தாயிச்சு. நிஜாமின் கஜானா கொஞ்சம் கரைந்து அங்கே போனது, ஒரே இனம் அல்லவா.  

எருமைக்கும், பசுக்கும் வித்தியாசம் நாம் உருவாக்கியதுதானே! இரண்டுமே பாலை கொடுக்கிறது. இதில் மலையாளியை கொஞ்சம் விடலாம், இரண்டின் கறியையும் மய்ய அவித்து 'வைக நேரத்து பரிபாடிக்கு' தொட்டுக்கொள்ளலாம்.  கனவுகள் உருவாகும் சிலநேரம் உண்டு, நாம் கடந்துவந்த காலமே கனவாகும் சாத்தியம் பால்யத்திற்கு உண்டு. அது டெக்கானோ, மதராசோ ஒன்றுதானே. விளையாடிய  ஆலமரம், அரசமரம் இல்லாத ஊருக்கு நீங்கள் போக விருப்பப்படுவீர்களா?  அதுதானே இன்னும் நம்மை உயிர்ப்போடு வைத்திருக்கிறது. இது எல்லாமே சேர்ந்துதான் சந்திரசேகரன். என்றோ தைத்த கோட்டும், இடுப்பை காட்டிக்கொடுக்கிறது. கரண்டையையோ கடக்காத முழுக்கால் நிக்கரும் சரிதான்.  அம்மையும் உண்டு, உடன்பிறந்தாரும் உண்டு. ரயில்வே செர்வண்ட் அப்பா, பாஸுக்கு பஞ்சமில்லை. எதையோ பேசி இலவச காட்சி சினிமா. குதிரைக்காரன் உண்டு, இன்னும் பேரம் பேசத் தெரியவில்லை.  எப்படியோ நிம்மதி, நிச்சலமான இரவு,  சுகந்தம்.  


யார் இந்த வெள்ளைக்குல்லா அணிந்த காங்கிரஸ் காரர்கள், கம்யூனிஸ்ட் எல்லாரும். ராஜாஜிக்கு என்ன வேலை,  காந்தி குடும்பத்தில் சம்பந்தம். போதாதா?  என்ன எழவு தேசமோ.  நாற்பது வருடம் கழித்து பார்த்தால் கண்ணீர் வடியும்.  இதற்காகவா இந்தபாடு பெருமாளே! 


லம்பாடி, பறைச்சேரி, பாரக்ஸ் எங்குமே பெண்கள் உண்டு சந்திரசேகரா! சங்கீதம் ஆழ்வாரோ, புதிய வாத்தியாரே. பாரதி தெரியாத வேதியல் வாத்தியார். அவருக்கு தமிழ் தெரியுமாம்.  போதும், கல்லூரி. நரஸிம்ஹா ராவ். தண்ணீரை விட, இங்கையும் விட ரத்தம் கனமானதே. அதில் இட்ட ஒப்பம்.  வேண்டும் பாரத்.  இணைவோம் பாரத்துடன். எங்கே பாதி குடும்பங்கள், திருவாரூர், மதராஸ் என போய்க்கொண்டே இருந்தால், எல்லா நாளும் ஒன்றாகுமோ. ஒரு நாள் அங்கே இதே நிலைமையானால் வேறு எங்கே போகும் கால்கள்.  


காந்தி, சுடப்பட்டார். சாலைகளில் நிசப்தம், அமைதி. ரேடியோக்கள் பேசுகின்றன, பலக் கோடி காதுகள் குவிகின்றன. கொன்றது யார், துலுக்கனா?  இல்லை பிராமணன். முட்டாள் பிராமணன் கொன்று விட்டது பிரேதம், உடல், சவம். சத்தியத்தை அல்ல. நேரு சொன்னாரே அதே வார்த்தை 'சத்தியத்தின் பிரதிபலிப்பு நம் எல்லோரின் நெஞ்சிலும் உறைந்துவிட்டது'.  அவரை எங்கே பார்ப்பேன், ஆவியாக! அதிலும் வெள்ளை முண்டுடன், மூக்கில் சற்றே தாழ்ந்த கண்ணாடியுடன் நிற்பாரா?  ஆம் கையில் தடிக்கொண்டு, சரி ராட்டினம் எங்கே. போதும், போதும். சத்தியத்தின் பிரதிபலிப்பு, இந்த வார்த்தையே போதும்.  


பின் ஒருநாள், பக்கத்து வீட்டு காசிம் வந்தான் கத்தினான். ஏன் இந்த காலம் நிலையாய் நிற்காது. யார் யாரோ அவன் வீட்டில், அவன்தான் இல்லை.ரெபியூஜிஸ்.  பின் போர், இந்தியா, நிஜாம் போர். எங்குமே போகவேண்டாம் ஊரடங்கு. எத்தனை நாட்கள் சோளரொட்டி,  பாலும், மோரும் மாத்திரம்.  செவ்வானம் தெரிய ரயில் நிலையம் நோக்கி ஓடினேன், குண்டு சத்தம். அலறல்.  எங்கெங்கோ ஓடும் கால்கள், இதில் எது இந்துக்கள், முஸ்லிம்கள். கோணல்மாணலாய் சந்துக்கள். ஒரு வீட்டில் விழ, ஆணும், பெண்ணும் உண்டு. பேயறைந்த பார்வை, என்னைப்பார்த்து சிறுமி வந்தாள். கையெடுத்து கும்பிட்டாள், நான் வருகிறேன், அவர்களை விடு. பாவாடை சமீசில் நாடா அவிர நின்றாள் துருத்திய எலும்புகள் தெரிய, குமட்டியது. நான் வெளியே ஓடினேன். தூரத்தில் பாகிஸ்தானில் மதுகுப்பியோடு ஒருத்தர், இதையெல்லாம் எழுதிக்கொண்டிருந்தார். அவரின் பெயர் 'மண்டோ'.  பதினெட்டாவது அட்சக்கோடு இதை எழுதியது சந்திரசேகரானாய் அடியேன் 'தியாகராஜன்'. 


Friday 21 August 2020

ராம்

 



வானிற்கும் மண்ணிற்கும் இடையே இவ்வெளி பலயுகங்களாக மிதந்துக்கொண்டிருக்கிறது. என்ன ஆச்சரியம்? மணிக்கணக்கில், நாட்களில், வாரங்களில் வயிறை தடவியபடி படுத்திருப்பேன், அப்பொழுதெல்லாம் விரல்கள் நண்டின் கொடுக்குகளை போல வயிற்றின் மேலே ஆயும், நிலவையோ, நட்சத்திரத்தையோ வெறித்து பார்த்தபடி பலமணிநேரம் உமிழ்நீரை விழுங்கியபடி இருந்திருக்கிறேன். நிலக்கரியை அள்ள அள்ள தின்று எரியும் பெரும் அடுப்பினை போல பசி தீயாக எரிந்துகொண்டிருக்கும். நா வறண்டு கண்கள் அயர்ந்திருப்பினும், நிலவின் அருகே கண்களை அலைபாயவிட்டிருப்பேன். எத்தனை குளிர்ச்சியானது. இவ்வெளியை கடந்து தானே விழியின் ஒளி சென்றிருக்கும். ஆனாலும் இதன் இருப்பையோ, ஊஞ்சலை போல முன்னும் பின்னும் நகருவதை நான் கவனிக்கவில்லையோ, உண்மையிலே ஆச்சரியம் தான். எங்கே தவறவிட்டேன்! எப்படி தவறவிட்டேன். விடை தேடி அலைவதில் பயனில்லை. சரி, எங்கே ராம்? அவனும் இதை கடந்திருக்க வேண்டும். அவனுக்கு முன்னே நான் வந்து விட்டேனா? இல்லை அவன் வருகைக்காக காத்திருக்கிறேனா? கட்டாயம் அவன் வந்திருப்பான், இல்லை வருவான். ஒருவேளை இனிதான் வரவேண்டும் எனில், அவனுக்காக காத்திருப்பதில் மகிழ்ச்சிதான். ஆம் அவனின் சிறிய பாதங்களை கண்டு எத்தனை நாள் ஆகிறது, கொஞ்சம் பேசவும் செய்கிறான் என பாலா கூறியது நினைவில் வந்தது. என்னை போலவே இருக்கிறானாம், இதனைக்கூறும் வேளையெல்லாம் அவ்வளவு வெட்கம் அவள் குரலிலே தெறிக்கும் , முகம் எப்படி ஒளிரும் இத்தருணத்தில். எவ்வளவு இழப்பு, நான் தானே இழக்கிறேன். யாருக்காக எல்லாமே என் பாலாவிற்க்காக, துர்கா, சரஸ்வதி, லெட்சுமிக்காக மூன்று சக்திகளுக்கு அப்பா நான். கடைசியில் ராம், அயோத்திக்கு அவனை கூட்டிச்செல்ல வேண்டும், ராமஜென்ம பூமியில் என் குட்டி ராமின் பாதங்கள் படவேண்டும்.

சொர்க்கம் எங்கோ! வானத்திலோ! இல்லை. வயிறார உணவும், வீட்டிற்கு அனுப்புவதற்கு சிறிது பணமும்

கிடைக்கும் இடங்கள் எல்லாமே சொர்க்கம் தானே. உறக்கமும் தானாக வருகிறது, வயிறு நிறைந்துவிட்டால் தூங்கிவிடலாமே, மனம் கனமின்றி இலகுவாக இருந்தது. ராமிற்கு ஒரு நடைவண்டி வாங்கி கொடுக்கவேண்டும். இங்கே, கடைத்தெரு சென்று வரும்வழியில் குழந்தை ஒன்று நடைவண்டியோடு நடை பயின்றுகொண்டிருந்தது. நேரம் அறியாது அங்கே நின்றபடி என் மொழியால் அவனை உற்சாகப்படுத்தினேன். அப்பா அடிக்கடி சொல்வதுண்டு ஒரு காரியத்தை செய்துமுடிக்க ஒரு நான்கு நல்லவார்த்தை வேண்டும் என்று, நானும் ஏதோ மிதப்பில் கைதட்டி அவனை குதூகலப்படுத்த நினைக்க, குழந்தை அழுதபடி ஓடிவிட்டது, தவழ்ந்தபடியே. வந்தவர்களில் சிலரின் கண்கள் சிவந்தபடியும், நாக்கு உதடுகளினுள் மடிந்தபடியும் இருந்தது. நகர்ந்து விட்டேன், உள்ளத்தின் அத்தனை அடுக்குகளிலும் ராமின் சிரித்த முகமே நிறைந்திருக்கும். நானும் குழந்தையாக இருந்தேன். ராமும் அப்பாவாக மாறுவான். தலைகீழாக மாறும் நிலை உண்டு. ஆனால் ராமை நான் அப்பாவாக கவனிக்கிறேன். அவனின் முதல் அடியை கொண்டாடுகிறேன். இதில் பிழை இல்லையே, ஆனால் நான் அவனோடு இருந்திருக்க வேண்டும்.

தமிழ் பேசும் இப்பிரதேசம் என்னை இழிவாக பார்ப்பது போல தோன்றும், எங்கோ இருந்து வந்தவன் இவன் என்பது போல, நாங்களும் உங்கள் தூரத்துச்சகோதரர்கள் என கூவத்தோன்றும். யாருக்கும் இதில் பலனில்லையே, சதுரங்கத்தில் காய்கள் போல நீங்களும், நாங்களும் எதிரெதிரே, நகர்த்தும் அரசியல் நமக்கு புரிவதில்லை. ஆனால் எனக்கு இப்பிரதேசம் முக்கியமானது, ஆம் இங்கே நான் மூன்று வேளை உண்கிறேன், என் குடும்பமும். மகள்களில் மூத்தவள் அவள் அம்மாவிற்கு உதவியாக இருக்கிறாள். மற்ற இருவரும் பள்ளிக்கு செல்கிறார்கள், இலவசக்கல்வி. இங்கே பெண்களின் நிலை உயர்வாக உள்ளது. எங்கள் பிரதேசம் அப்படியில்லை, ராமிற்கு இதையெல்லாம் நான் சொல்ல ஆசைப்பட்டேன். அவனிற்கு எல்லாமே கிடைக்கிறது, அதற்காகத்தான் நான் இருக்கிறேனே. அவன் பிறந்து மூன்று மாதங்கள் கழித்தே அவனைக்காண நேர்ந்தது. சிவந்த மலரை போலவிருந்தான். என் கண்களில் இருந்து வடிந்த நீர் அவன் பாதங்களில் பட்டதும், அவன் சிரித்தான். என் சக்திகள் என்னை சுற்றிக்கொண்டு நின்றனர். ஒரு வாரம் தான் அங்கே தங்கமுடிந்தது. மகிழ்ச்சியான நாட்கள், எட்டு மாதங்கள் கடந்துவிட்டது. அதற்குப்பின் இங்கே திரும்பிவிட்டேன். சிலநேரம் நடப்பவை கனவுகள் போல மறுபடியும் கிடைப்பதில்லை. ராமுடன் அங்கிருந்த நாட்கள் அப்படியானவை.

எனக்கு சொந்தமாக நிலம் இருந்தது. அங்கே உருளை விதைப்போம். போதுமான எல்லாம் கிடைத்தது, இரவுகள் இனிமையாக கடந்தது, உறங்க நான் பிரயாசை பட்டதில்லை, அதன் பிறகு இப்போதுதான் நான் கண்களை மூடியவுடன் உறங்குகிறேன். ஒரு பெரிய தொழில்நிறுவனத்திற்காக என் நிலம் அற்பக்காசுக்கு வாங்கப்பட்டது. அதன் பின் நெடுநாட்கள் வெறும் ரொட்டியோடு நாட்கள் கழிந்தன. பின் எப்படியோ இங்கே வரநேர்ந்தது. அதன்பின், என் வீட்டில் மூன்று வேளையும் உணவு உண்கிறார்கள். பாலா பசுமாடு வாங்கியிருக்கிறாள் கடந்த மாதம் கூறினாள். கடனாக வாங்கிய பணம் மூலம்தான், நான் இம்மாதம் முதல் கூடுதலாக இரண்டு மணிநேரம் வேலை செய்கிறேன். அப்படியானால் குறைந்த நாட்களில் கடனை திருப்பிக்கட்டி விடலாம்.

முதலில் ஒரு சிறிய நகரத்தில் கட்டிடப்பணி, அங்கே பெரும்பாலும் பெரிய மீசைகொண்ட மனிதர்கள் தான். விறைப்பான முகம் கொண்ட மேஸ்திரி எனக்கு, ஆனால் கனிவானவர். சனிக்கிழமை எங்களுடன் அமர்ந்தே மது அருந்துவார், எங்களுக்கு வாங்கிக்கொடுப்பதை சம்பளத்தில் பிடித்துக்கொள்வார். உணவு மூன்று வேளையும் இலவசம், இரவு ரொட்டியும் சப்ஜியும் நாங்கள் சமைத்துக்கொள்வோம். என்னோடு எங்கள் பிரதேசத்தை சார்ந்த இருபது பேர் இங்கே வந்திருந்தோம். நாங்கள் கட்டியது ஒரு ஆறு மாடி வணிக வளாகம். இரண்டு வருடம் அங்கே இருந்தேன். அப்போதுதான் லெட்சுமி பிறந்தாள். பின் இங்கே தலைநகரத்திற்கு வந்துவிட்டோம். பதினெட்டு மாடி அடுக்கு குடியிருப்புகள். தொடர்ச்சியாக கட்டிக்கொண்டிருந்த பெரும் நிறுவனம் ஒன்றில் ஒப்பந்த அடிப்படையில் வேலை. இன்னும் பத்து வருடம் கவலையில்லை என்னுடன் சித்தாள் வேலை பார்க்கும் கௌரி கூறினாள். பாலா நெடுநாளாக நச்சரித்தாள் பசுமாடு வாங்க, எல்லாம் கணக்கில் கொண்டு வாங்க சொல்லிவிட்டேன் கடந்த மாதம் வாங்கிவிட்டாளாம்.

ஒரு சனிக்கிழமை மது அருந்தும்போது லாலு கூறினான், காலரா மலேரியா போல ஒரு நோய் பரவுகிறதாம். வெளிநாட்டில் இருந்து விமானத்தில் வருபவர்கள் மூலமாக பரவுகிறது என. அதன்பிறகு ஒரு வாரம் இருக்கும், எங்களை தங்கிய அறைக்கே திருப்பி அனுப்பி விட்டார்கள். ஒரு இரண்டு வாரம் எங்குமே, யாருமே வெளிவரக்கூடாது என்று. பாலாவிடம் விசாரித்தேன், அங்கே பிரச்னை எதுவுமில்லை கவனமாக இருக்கச்சொன்னாள். ராமிற்கு காய்ச்சல் என்றாள். நான் என்னிடம் இருந்த கடைசி பணத்தையும் அவளுக்கு அனுப்பிவிட்டேன். உணவிற்கு ஒரு வாரம் கவலையில்லை, மூன்று வேளையும் கிடைத்து. பின் இரண்டு வேளை என குறைந்துவிட்டது. தூக்கத்தை, பசியை என்னால் தடைபோட இயலவில்லை. அப்போதெல்லாம் விட்டத்தில் படுத்தபடி நட்சத்திரங்களை எண்ணுவேன். அதே நட்சத்திரங்கள், அதே எண்ணிக்கை போல எனக்கும் அதே பசி. கூடவே ராமை, பாலாவை, சக்தியை பற்றிய நினைவுகள். தூக்கம் இல்லாமல் போக நினைவுகளும் காரணம்.

தினமும் பாலாவிடம் இருந்து அழைப்பு வரும், ராமை பற்றியே பேச்சுக்கள் இருக்கும். காய்ச்சல் இன்னும் குறைந்தபாடில்லை. கையில் காசுமில்லை, போக்குவரத்து எங்குமே இல்லை. நான் ராமபிரானிடம் வேண்டிக்கொள்வேன். அவன் வாடியிருப்பான், ராமபிரானின் ஆட்சி நடக்கிறது என அரசாங்கமே சொல்லிவிட்டது. அயோத்தியில் பசியில் மக்கள் வாழ்ந்தார்களா? தெரியவில்லை ஆனால் நாங்கள் பசியால் வாடுகிறோம். பொய்யாகி விடாதா? நடந்ததெல்லாம். அங்கே, எல்லாருமே பெண்கள் என்ன செய்வார்கள். நான் அங்கிருந்தால் பேருதவியாக இருக்கும். ஆனால் இங்கிருந்து செல்ல வழியே இல்லை. நடந்துதான் போகவேண்டும். ஏற்கனவே சிலர் நடந்து செல்கிறார்கள் என்று கௌரி செய்தியில் பார்த்தாளாம் கூறினாள்.

ராமிற்கு காய்ச்சல் குறைந்தபாடில்லை. அவனை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்கள். எனக்கு மூச்சு அதிகமாக வாங்கியது. உணவும் நேரத்திற்கு கிடைத்தபாடில்லை. நோய் பெரிதாக பரவுகிறதாம், செய்தியை கௌரி அடிக்கடி சொல்லிக்கொண்டே இருந்தாள். கௌரி அழகான பெங்காலி பெண். அவளுக்கு குழந்தைகள் இல்லை, கணவன் எங்கோ வேறிடத்தில் வேலை பார்க்கிறான். அவனை நான் பார்த்திருக்கிறேன். மாதம் இருமுறை இங்கே வருவான். அவனின் முகம் வெண்மையான பாலின் நிறத்தில் இருக்கும். அன்றைய இரவு கௌரியும், அவனும் தூரமாய் சென்று விடுவார்கள். இங்கே நாங்கள் குலாவவா இயலும். அன்றைய நாள் பாலாவின் நினைவில் சுயமைதுனம் செய்வேன். அவ்வளவே என்னால் முடியும்.

பாலா அன்று மிகவும் அழுதாள். மிகவும் பலவீனமாக அவளின் குரல் இருந்தது, மூத்தவள் துர்கா தைரியமாக பேசினாலும், முடிந்தால் இங்கே வாருங்கள் அப்பா எங்களுக்கு தைரியமாக இருக்கும் என்றபடியே முடித்தாள். நடந்தாலும் பத்து நாட்களுக்கு மேல் ஆகும், லாலு ஒரு மிதிவண்டி ஏற்பாடு செய்தான். கூடவிருந்த மற்ற நண்பர்கள் உணவு கொஞ்சம், பணம் கொஞ்சம் கொடுத்தார்கள். ராமிற்காக என் கால்கள் சைக்கிளை மிதித்தது. தார்சாலைகள் கம்பீரமாக இருந்தது. வெயில் கொதித்தது. எங்குமே நிழலை காணமுடியவில்லை. மரங்கள் முடிந்தவரை அரசாங்கத்தால் வெட்டப்பட்டு இருந்தது. தண்ணீர் ஆங்காங்கே கிடைத்தது. சிலநேரம் பிஸ்கட், பன் கொடுப்பவருடன் நான் புகைப்படம் எடுக்க வேண்டும், அது மட்டுமே நிர்பந்தம்.

பல பிரதேசங்கள், விதவிதமான மொழி உச்சரிப்பு. கடுமையான அனல் காற்றோடு கூடிய வெயில் வாட்டியது. கிடைத்த இடத்தில் உணவு, இரண்டு நாட்கள் கடந்துவிட்டது. சைக்கிள் சிலநேரம் ஓடியபடியே இருக்கும் என் பிரக்ஞையின்றி, நினைவெல்லாம் ராம் சிரித்தபடி விளையாடி கொண்டிருப்பான். அவனுக்கு கண்ணிற்கு கீழே சிறிய மச்சம் இருக்கும், என் அப்பாவை போலவே. எப்படி இருப்பானோ, காய்ச்சல். அவன் சிறிய உடல் தாங்குமா? பாலா எப்படி சமாளிக்கிறாளோ! தினமும் மூன்றுவேளை அழைப்பாள். காய்ச்சல் குறையும், அவனை தூக்கி கொஞ்ச வேண்டும். இரவுகளில் கிடைத்தவிடத்தில் தூக்கம், கண்கள் மூடியபடி படுத்திருப்பேன். உறங்க முடியாது. உடல் அயற்சியால் ஓய்வெடுக்கவே படுத்திருப்பேன். கனவுகளில் சாலை அரக்கனை போல என்னை வாரி விழுங்கும். நான் விழும்போதெல்லாம், குழந்தையின் கைகள் என்னை தாங்கும், பாலாவின் உடல் வாசனை நாசியை துளைக்கும். ராம் தவழ்ந்து , ஒரு கட்டிலின் அடியில் நுழைவான். சாலை என்னை பிரட்டிபோடும் நான் எழுந்து, கட்டிலுக்கு அடியே தலையை நுழைப்பேன். கட்டில் என் தலையை அழுத்தும், நான் விழிப்பேன்.

அன்றைய நாள் மிகவும் உற்சாகமாக விடிந்தது. நான் இரண்டு நாட்களில் வெகுதூரம் வந்துவிட்டேன். கோதாவரியை நெருங்கி விட்டேன். நதியெல்லாம் அன்னையை போல, இப்போது அதன் மேல் எழுப்பிய பாலத்தில் நின்றுகொண்டிருந்தேன். நின்றபடி அதனை வணங்கினேன். மனிதர்கள் குறைவாகவே கண்ணில்பட்டார்கள். வெயில் தாழ்ந்துகொண்டிருந்தது. கதிரவனின் ஒளி தங்கம் போல நீரில் மின்னியது. பசி இப்போதெல்லாம் பெரிதாக வாட்டுவதில்லை. பாலாவின் அழைப்பு வந்தது. ராமபிரானை வேண்டிக்கொண்டே பேச ஆரம்பித்தேன். பேசியது துர்கா, தடுமாற்றமாக பேசினாள், வார்த்தைகள் சரியாக இல்லை. பதட்டத்தில் இருப்பது போலவிருந்தது. பாலா மயக்கமாக இருக்கிறாளாம். ராம் மூச்சின்றி இருக்கிறான். மருத்துவர்கள் எதுவுமே கூறவில்லை, எடுத்துவிட்டு செல்ல கூறிவிட்டாராம்.

கால்கள் நடுங்கி, கைகள் உதறியது. வார்த்தைகள் எழவில்லை. தேற்றக்கூட யாருமில்லை. நான் அமர்ந்துவிட்டேன். அழைப்பை துண்டிக்கவில்லை. ராமின் சிரிப்பு காதில் ஒலித்துக்கொண்டே இருந்தது. இருட்டிக்கொண்டு வந்தது. நான் அழுதுகொண்டே இருந்தேன். யாரென்று தெரியவில்லை, ஒரு வயதான பிராமணர் தோள்களை அழுத்தி புரியாத மொழியில் பேசினார். நான் அவர் கைகளை பற்றிக்கொண்டேன். சிலநேரம் என்னோடு அமர்ந்தார். பின் தோள்களை தட்டிக்கொடுத்து அங்கிருந்து சென்றார். அவரின் பாதங்களின் தடத்தை கண்டேன், அது மின்னியது.

நான் சைக்கிளை மிதிக்க ஆரம்பித்தேன். இரண்டு நாட்கள் கடந்துவிட்டது. கையில் பணமும் இல்லை. நான் நேற்றில் இருந்து எதுவுமே சாப்பிடவில்லை. பாலாவிடம் இருந்து அழைப்பும் இல்லை. இரண்டு தடவை அவளின் அண்ணன் அழைத்தார். எல்லாமே அவர்மூலம் முடிந்துவிட்டது. வேகமாக சைக்கிளில் சென்றேன். ஓய்வே இல்லை, மனம் என்னிடம் கட்டுப்படவில்லை. ராமின் கடைசி முகமும் காணக்கிடைக்கா பாவியாக உணர்ந்தேன். அது ஒரு நெடுஞ்சாலை, கால்கள் அதன்போக்கில் மிதிக்க சுயநினைவின்றி இருந்தேன். எல்லாமுமே நினைவுகளால் நிரம்பியது. தத்ரூபமாக காட்சிகள் விரிந்தது. நான் பாலாவை திருமணம் செய்தது, என் சக்திகள் பிறந்தது, ராம் பிறந்தது. ராம் என் மடியிலே சிறுநீர் போனான், சுற்றி எல்லாருமே சிரித்தார்கள் ராமும்தான். அயோத்தி செல்லவேண்டும். அவனின் பாதங்களை ராமஜென்ம பூமியில் படவேண்டும், என் பிரார்த்தனைகள். ஒளி கண்களை கூசச்செய்தது. ஏதோ மோத, பறந்தேன். தலையில் பலமான அடிபட்டது.கண்கள் சுருங்கியது. பாலா, துர்கா, சரஸ்வதி, லெட்சுமி, ராம் அங்கே நின்றார்கள். நான் எழுந்தேன். இலகுவாக உணர்ந்தேன். பறக்க ஆரம்பித்தேன்.இந்த வெளி அப்போதுதான் கண்களில் பட்டது.ஏதோ உள்ளுணர்வு ராமும் இங்கே வருவான் என சொல்ல அவனுக்காக காத்திருக்கிறேன். அவனின் பாதங்களில் முத்தமிட வேண்டும்.

நான்காம் விதி

 


“இந்தப் போராட்டங்கள் தேவையா? நாம் தோற்றுப்போய்விட்டோம் அல்லவா? கால் கடுக்க நிற்பதில் என்ன பிரயோஜனம்? தண்ணீர் வேண்டும், தொண்டை வறண்டுவிட்டது. மாலிக் இதைப் பற்றி என்ன சிந்தித்துக்கொண்டு இருக்கிறாய்? பேசு, நான்கு மணிநேரம் ஆகியிருக்கும் உன்னுடைய வார்த்தைகளைக் கடைசியாக என் செவிகள் உள்வாங்கி. உனக்குப் பிரமை பிடித்துவிட்டது. நீயும் என்னுடன் வா, நான் உன்னை அழைத்துச்செல்கிறேன். தலைவரிடம் அனுமதி வாங்கிக்கொள்ளலாம். பேசு மாலிக். அய்யோ என்ன கொடுமை இது? பசி வேறு வாட்டுகிறது. காட்டமான இவ்வெயில் உன்னைப் பொசுக்கவில்லையா? மறுபேச்சும் வரவில்லை. மாலிக் என்னவாயிற்று?”

மாலிக் நினைவிழந்தவனைப் போலக் கீழே விழப்போனான். தம்போ அவனைத் தாங்கிப்பிடித்திக்கொள்ள, கூட்டத்தினர் இருவரையும் முன்னே நகர வைத்துத் தூரமாய் இருந்த ஒற்றைப் பனைமரத்தின் கீழே அமர வைத்தனர். தம்போ இந்தப் பெரிய தீவிற்கு வந்த நாள் முதல் இன்றைக்கு வரை அவனுக்கு இருக்கும் ஒரே நண்பன் மாலிக் மட்டுமே. சூழ்ந்து நின்றுகொண்டிருந்த கூட்டம் அங்கிருந்து கலைந்து சென்றனர். ஒருவருக்கொருவர் ஏதோ முணுமுணுத்துக்கொண்டே சென்றனர். தம்போ சென்றவர்களை நோக்கிப் புலம்பிக்கொண்டிருந்தான்.

“நான் அடுத்து என்ன செய்ய வேண்டும் கூறுங்கள். இவன் என் நண்பன். அசைவின்றிக் கிடைக்கிறான். இதோ பாருங்கள், எப்படி இவனை எழச்செய்வேன். என்னுடன் இருக்கும் பனைமரத்தாயே, நீ எனக்கு உதவு. இவனைக் குணப்படுத்து.”

தம்போவின் முன்னோர்கள் இயற்கையை வழிபட்டவர்கள். அவனுக்கு இயற்கையின் ஒவ்வொரு படைப்புமே இறைவன். தம்போ குழந்தையாய் இருக்கும்போது வலுவில்லாதவன் போல இருந்தான். அவனுடைய தாய் அவர்களுடைய மொழியில் பலமானவன் என்ற அர்த்தத்தில் தம்போ எனும் பெயரிட்டார். ஆனால் இன்னும் அவன் பலமில்லாதவன் போலத்தான் இருந்தான். ஒல்லியான தேகமும் கருமை படர்ந்த தோலும் நெடுநெடு உயரமும் சுருள் முடியும் எங்கிருந்தாலும் அவனைத் தனியாய் அடையாளப்படுத்திக் காட்டும்.

தம்போ நம்பிக்கையுடன் அவர்கள் குலமொழியில் பாட ஆரம்பித்தான். கைகளை மேலே உயர்த்தி, முழங்காலிட்டு, மெதுவான குரலில் பாட ஆரம்பித்தான். அவனின் வெளிறிய உதடுகள் வழியே மொழி வளைந்து திரிந்து எழுந்தது. அது கேட்பதற்குக் காற்றுடன் ஊடுருவி உயிர்க்கொண்டு குழைவது போல இருந்தது. ஆன்மாவை நெருக்கி முத்தமிடுவது போல மென்மையாய் அவ்விடத்தின் சூழலை அழகாய் மாற்றிக்கொண்டிருந்தது. மாலிக் மெதுவாய்த் தலையைத் தூக்கி, “எல்லோரும் சென்றுவிட்டார்கள் அல்லவா?” என்று கேட்டான்.

“கடவுளே நன்றி, மாலிக் நீ அமைதியாகப் படுத்துக்கொள். தலைவரே சமிக்ஞை கொடுத்துவிட்டார். நான் உன்னோடு இருப்பேன். கடவுளுக்கு நன்றி.”

“அய்யோ முட்டாளே! நீயும் நம்பிவிட்டாயே. இது எல்லாமே என்னுடைய திட்டம். வெயிலில் எவ்வளவு நேரம் கால் வலிக்க நின்றிருப்போம். உணவுகூடச் சரியான அளவு கிடைக்கவில்லை. முதியவர்களுக்கும் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பெருமளவு சென்றுவிட, இளைய வயதில் இருக்கிறோம் எனும் காரணத்தால் குறைவான அளவே கடந்த இரண்டு வாரமாக நமக்குக் கிடைத்திருக்கிறது. வயிறு எல்லோருக்கும் பொதுவானதுதானே.”

தம்போ இன்னும் தெளிவில்லாதவன் போல, “நண்பா, நாம் தலைவரிடம் அனுமதி பெற்றே வந்திருக்கலாம். இது ஏமாற்று வேலை. அவர் நல்லவர். அனுமதித்து இருப்பார்.”

மாலிக் தலை சாய்ந்தபடியே, “அதற்காக நாம் கடவுளிடம் மன்னிப்பைக் கேட்கலாம். அவர் மன்னிப்பார். இரக்கமானவர் அல்லவா இலாஹ்.” இருவரும் சிலநொடி கண்களை மூடி இறைவனிடம் மன்னிப்பைக் கோரினர்.

வெயிலில் களைப்படைந்த இருவருக்கும் பனைமர நிழல் ஆசுவாசமாக இருந்தது. ஓலைகள் உரசி வீசிய காற்று இதமாய் இருந்தது. இருவருக்கும் மற்றொருவர் துணையாய் இருப்பது நிம்மதியைக் கொடுத்தது. மாலிக் தம்போவை நோக்கி, “நீ பேசும் மொழிக்கும் பாடிய பாடலின் மொழிக்கும் எவ்வித ஒற்றுமையும் இல்லையே. அப்படி நீ என்ன வேண்டினாய்?”

தம்போ வழக்கமான புன்னகையுடன், “அது எங்கள் மூதாதையரின் மொழி, அதற்குப் பெயர் இல்லை. வாய்ப்பாட்டு வழியாகவே என் அன்னையிடம் இருந்து கற்றுக்கொண்டேன். இறைவனிடம் நேரடியாக உரையாடும் மொழி. நான் பாடியது கடவுளை நம்முடன் அழைக்கும் பாடல். அதன் அர்த்தம் ‘இறைவனே, நீயே முதலானவன், நீ பாறையைப் போலக் கடினமானவன், நீ மழையைப் போல இரக்கமானவன். நீ காற்றைப் போல நிறைந்திருப்பவன், நீ நெருப்பைப் போலத் தூய்மையானவன். நீ ஆகாயத்தைப் போலப் பரந்திருப்பவன். என் துக்கத்திலும் மகிழ்ச்சியிலும் என்னுடன் இருப்பவன். உன்னை அழைக்கிறேன், என்னிடம் வா. என் தோள்களை உன் கைகளால் வருடு. என் காயங்கள் ஆறி, என் வலிகள் குறையும்’.” கூறிவிட்டு மெலிந்த கைகளால் தாடையைத் தடவினான்.

மாலிக் தம்போவை நோக்கி, “ஆம், இறைவன் நம்மோடு இருப்பார். நம்முடைய இறைவன்தானே அப்பெரிய வாயில் கதவின் மறுபுறம் இருப்பவர்களுக்கும்? எந்த மொழியிலும், எந்த இனத்தவருக்கும் இறைவன் பொதுவானவனாகத்தானே இருக்க வேண்டும்? இந்தப் பிரபஞ்சம் ஒன்றுதான் எனில், இது ஒருவழியில்தான் உருவாக்கப்பட்டிருக்கும் எனும் பட்சத்தில், அதனை உருவாக்கியவனும் ஒருவனாகத்தானே இருக்க முடியும்? நம்மை ஏன் அவர்களுடன் வாழ அனுமதிக்க மறுக்கிறார்கள்? நாம் என்ன சபிக்கப்பட்டவர்களா?”

தம்போ பதிலேதும் சொல்லாமல் தலையை வானை நோக்கி வெறித்தபடி இருந்தான். நீலவண்ணம் வியாபித்து விரிந்திருந்தது. சிறுவனாய் இருந்தபொழுது கதைகள் இல்லாத இரவே அவனுக்கில்லை. பாய்ந்தோடும் விலங்குகளும் உயரப் பறக்கும் பறவைகளும் அவனுள் நிறைந்திருந்தன. அவனுடைய அம்மா பெரும்கதைகளின் ஊற்றாகவே அவனுக்குத் தெரிந்தாள். எப்போது கேட்டாலும் கைகளைக் காற்றில் ஆட்டியபடி கதைகளைச் சொல்வாள். அற்புதமான கதைச்சொல்லி. அவன் பிறந்தபொழுது வானத்தில் வெண்ணொளி வீசி, பறவைகளும் விலங்குகளும் அவனின் வீட்டு முன் வந்து பாடியபடி வாழ்த்தியதாம். சிறுத்தைப்புலி ஒன்று அவன் கால்களை நாவைக்கொண்டு வருடி ‘உனக்கு என்னைப் போன்ற வேகமான கால்கள் கிடைக்கும்’ என்றும், யானை ஒன்று ‘நீ என்னைப்போல வலுவானவனாக வருவாய்’ என்றும், நீண்ட அலகுடைய நாரை ‘காற்றைக் கிழித்துக்கொண்டு நீ பறப்பாய்’ என்றும் வாழ்த்தியதாம். இவை அனைத்தையுமே நேரில் அவன் கண்டதில்லை. அவற்றின் உருவங்களையும் கதைகள் வழியாகவே அவன் உருவகப்படுத்திக்கொண்டான்.

நீண்ட நேரம் அமைதியாகவே இருந்த தம்போவை மாலிக் படுத்தபடியே பார்த்துக் கொண்டிருந்தான். இதுபோன்ற சமயங்களில் அவனிடம் பேசிப் பலனேதுமில்லை. வழக்கமான ஒன்றுதான் இது. மாலிக் கண்களை மூடிக்கொண்டான். வானில் எங்கிருந்தோ வீசிய குண்டுகள் அவன் மேல் விழுவதைப் போல உணர்ந்தான். மாலிக், சிவந்த தேகம் உடையவன். பழுப்பு நிற முடியும் நீலக்கண்களும் நீண்ட கூரிய மூக்கும் எந்நிலையிலும் அவனை அழகான தோற்றத்தில் காட்டும். குண்டுமழை பொழியும் பிரதேசத்தில் பிறந்தவன். பிறந்தது முதலே ஓரிடத்தில் நிலையாய் வாழாதவன், ஓடிக்கொண்டே இருந்தான். அவன் பிறந்த பிரதேசத்தில் இயல்பாகவே குண்டுகள், துப்பாக்கிகள் வெடிக்கும் சத்தம் ஒலித்துக்கொண்டே இருக்கும். சிறுவனாய் இருக்கும்போது ஒரு கொடிய இரவில் தந்தையையும் தாயையும் இழந்தவன். இவனுக்கும் சொல்லிக்கொள்ள உறவு என்று யாருமில்லை. அன்றில் இருந்து நகருதலையே நிலையாய்க் கொண்டவன்.

தம்போ மத்தியகிழக்கு நாடுகளின் மையமான பிரதேசத்தில் ஒரு உணவகத்தில் உதவியாளனாகப் பணிப்புரிந்து கொண்டிருந்த சமயம் அஜிதனைச் சந்தித்தான். அவன் இந்தியத் துணைக்கண்டத்தைச் சார்ந்தவன். எப்போதும் புன்னகைப்பது போலவே காட்சியளிக்கும் ஒரு முகம் அவனுக்கு. மெலிந்த உடலை கொண்டிருந்தாலும் வலுவானவனாக இருந்தான். அவ்வூரில் வெப்பம் படரும் முன்னே விழிப்பான். பிறகு உடலை வளைத்து சிலமணி நேரம் பலவித நிலைகளில் நிற்பான். அவனின் கடவுள்கள் தம்போவிற்கு ஆச்சரியத்தை அளித்தன. அஜிதன் சொல்வான், “எங்களுக்குப் பலகோடி தெய்வங்கள் உண்டு, அழிவையும் பிறத்தலையும் இருத்தலையும் அவர்களே கொடுக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் முதன்மையானது பிரம்மம். அதுவே எல்லாம், எல்லாமும் அது.”

அக்காலகட்டம், எங்கும் நோய்கள் மனிதர்களைக் காவு வாங்க ஆரம்பித்திருந்தது. புவி வெப்பமாகி, என்றிலிருந்தோ அமைதியாய் உறங்கிக் கொண்டிருந்த வைரஸ்கள் மீண்டும் உயிர்த்தெழ, பிணந்தின்னிக் கழுகுகள் எங்கும் வட்டமிட்டுக் கொண்டிருக்கின்றன. உலகநாடுகள் அவசர அவசரமாய்ப் பிரகடனங்கள் பிறப்பித்து நோய்களுக்கு மருந்து கண்டுபிடிக்க முயற்சிக்க, இருப்பினும் புதிய நோய்கள் பிறந்துகொண்டே இருந்தன. இப்போதைக்கு உலக மருத்துவக் குழுமத்திற்கு இருக்கும் பெரும் சவால் சார்சின் புதிய பரிணாமம். மனிதர்கள் ஒவ்வொரு வைரஸுக்கு மாற்று மருந்தைக் கண்டறிய அவை அதற்கு எதிராய் வேறொரு பரிணாமத்தில் தன்னை மீள்உருவாக்கம் செய்கின்றன. தம்போ எவ்வித நோயாலும் பாதிக்கப்படவில்லை. இருப்பினும் அச்சம் அவனைச் சூழ்ந்துகொண்டிருந்தது. அந்நாட்களிலும் அஜிதன் இயல்பாகவே இருந்தான். சிலநாட்களில் அஜிதன் லாசா செல்லப் போவதாகக் கூறினான். அவர்களின் இறுதிச் சந்திப்பில் அஜிதன் தம்போவிடம், “இதனை எதன்கணக்கில் எடுத்துக்கொள்ள? நடப்பவை எல்லாமே வினையின் பயன். நம்முடைய எல்லா செயலும் அதன் வினைப்பயனும் எப்போதுமே நம்மைப் பின்தொடரும். நியூட்டனின் மூன்றாம் விதியைப் போன்றது. எந்த ஒரு வினைக்கும் அதற்கு சமமான எதிர்வினை உண்டு. இன்னொரு விதி உண்டு, பலர் அறியாதது. ஒன்றின் இயல்பை, அமைப்பை, தன்மையைத் தொடர்ந்து மாற்றிக்கொண்டே இருந்தால், ஒரு நிலையில் அது தன்னைத் தானே மீண்டும் அழித்து, உரித்து மீளுருவாக்கம் அடையும். அந்நிலையில் பழைய தன்மையும் இயல்பும் அமைப்பும் மீண்டும் வந்தடையும். அதுதான் நிகழ்கிறது நம் பிரபஞ்சத்திற்கு. நடக்கும், அதுதான் இயங்குதல். வட்டம் போலச் சுற்றிக்கொண்டே இருக்கும். நின்றுவிடுவது அபத்தம். இயங்கு! தம்போ நீ எங்கிருந்து வந்தாய்? இப்போது எங்கேயிருக்கிறாய்? நீயும் செல், நீயும் பயணி. வாழ்வை ருசிக்கத் தெரிந்தவன் பயணி.”

தம்போ தயக்கத்துடன், “ஒவ்வொரு இரவும் என்னை ஏங்க வைக்கிறது. நிஜத்தில் நான் மிகவும் முன்னெச்சரிக்கை நிறைந்தவனாய், எதிலும் நுண்ணுணர்வைப் படரவிடுகிறேன். விளைவு என் கற்பனை வற்றிவிட்டது. இரவு ஏனோ என்னிலை கொஞ்சம் மாறுதலாகச் செயல்படுகிறது, அங்கே இந்த தம்போ இல்லை. அவனுக்குப் படர்ந்த பார்வை இல்லை. ஒரே தீர்க்கமான பார்வை, ஒருத்தியை நோக்கி. அவளின் மொழியில் ஒரு உலகம் வாழ்கிறது. எல்லாமுமே நிறைந்த உலகம். அது ஒரு ஏகாந்தவெளி. அதனை ஆளுபவள் என் அம்மா. எங்கோ ஒரு மூலையில் அவள் வாழ்கிறாள் என்பதை என் உள்மனம் நிச்சயப்படுத்துகிறது. அவளின் கதைகள் இன்னொருமுறை என் முன்னே விரியும். அவள் மட்டுமே என் பயணம். எங்கே செல்வேன்? பயணிக்க வேண்டும், ஆனால் திசை எது?” என்றான்.

அஜிதன் மென்புன்னகையுடன், “ஒன்றை நீ தேட விழைகிறாய், தேடலே இல்லாமல்,” என்றபடி நகர்ந்தான். தம்போ அச்சந்திப்பின் பின், பல பிரதேசங்களுக்கு சென்றிருப்பான். இறுதியில் இத்தீவில் இப்பனையின் அடியிலே கதைச்சொல்லிக்காகக் காத்திருக்கிறான்.

தம்போ கண்களை மூடியிருந்தான். பின் விழிக்கையில் பனைமரம் தலைசிலுப்பிக் கைகளை விரித்து, தாழ்ந்து அவனை அள்ளிக்கொண்டது. அதன் கிளைகள் சுருள்சுருளாய் நீண்ட முடியாய்க் காற்றில் பறந்தன. தம்போவின் கைகள், கால்கள், உடல் சிறுத்து அவனைக் குழந்தையாய் ஆக்கின. பனைமரம் சுருங்கி ஒரு கதைச்சொல்லியாய் மடியில் அவனை கிடத்தி, விரல்களால் கன்னத்தை வருடி, உதடுகளால் நெற்றியில் முத்தமிட்டது. கண்கள் கூச விரல்களால் கண்களைக் கசக்கி மறுமுறை விழித்துப் பார்த்தான். சுற்றிலும் தகரக்கோட்டைகள், வெக்கையான புழுங்கல் வாடை வீசும் தெருக்கள். அவனின் சிறிய கண்கள் அவளை நோக்க, உதடுகள் மெலிதாய் விரிய அவள் சிரித்தாள். எழுந்து தன்னைப் போர்த்திய துணியை அவள் விரிக்க, எல்லையெங்கும் பசுமை தெறிக்கும் புல்வெளி பிறந்தது. ஆளுயர மரங்கள் மஞ்சள் வண்ணப் பூக்களை அவன்மேல் உதிரச் செய்தன. பூனை முனங்கும் ஓசை கேட்டு அவன் தலையைத் திருப்பினான். சிறுத்தைக்குட்டி ஒன்று ஓடிவந்து அவளின் பாதங்களைச் சுற்றிச் சுற்றி ஓடியது. அவன் கண்களில் ஒளி மறைய, பெரும்நிழல் விழ, அவன் கைகளை மேலே தூக்க நீண்ட அலகுடைய நாரை இவன் பக்கமாய் வந்திறங்கியது. நிலம் அதிர பயம் கொண்டு நடுங்கினான். மலை ஒன்று பெரும் சாளரம் போலக் காதுகளை வீசி, அதன் தும்பிக்கையால் அவனின் தேகம் பட வருடியது. அவனின் கதைச்சொல்லி அவனருகே அமர்ந்தாள், கண்களில் நீர் கசிந்துகொண்டிருந்தது. தம்போவின் கை, கால்கள், உடல் நீண்டு தற்போதைய நிலையை அடைந்தான். அவளின் பாதங்களைத் தொட்டான், ஈரமான நிலத்தைபோலக் குளிர்ச்சியாய் இருந்தன. மாலிக்கின் குரல் கேட்டுப் பட்டென விழித்தான். பனைமரம் காற்றில் அசைந்தாடிக்கொண்டிருந்தது.

மாலிக் மெலிதான குரலில் கூறினான், “தீவின் புதிய அதிபர் ருக்லா, கடும் சர்வாதிகாரி. அமைதியான பிரதேசம் எனப் பல நூற்றாண்டுகள் முன் பெயரெடுத்த நார்வேஜிய இனத்தைச் சார்ந்தவர். இப்பெரும் சுவர் எழுப்பும் திட்டம் வடிவமைத்தது அவரே. மருந்துகள் இல்லை என்று நம்பும் நோய் பிடித்த மனிதர்களைச் சுவருக்கு வெளியே வலுக்கட்டாயமாக அனுப்பிவிடுவதைச் சட்டமாக இயற்றியவர்.”

உண்மையில் அன்றைக்கும் அத்தீவைத் தவிர வேறு பிரதேசங்களில் மனிதர்கள் வாழ்ந்தார்கள். எப்படியோ அவர்கள் இத்தீவைக் கண்டுபிடிக்க, பெரும் கப்பல்களில் அகதிகளைப் போலக் கூட்டம் கூட்டமாய் மக்கள் இங்கே வந்துகொண்டு இருக்கிறார்கள். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கமே மனிதகுலம் அச்சுறும்படி அமைந்தது. இந்தியத் துணைக்கண்டமும் சீனா பிரதேசமும் புதிய நோய்க்கொல்லி நுண்கிருமிகளால் தாக்கப்பட்டு நிலைகுலைந்து போயிருந்தன. மனிதர்கள் நம்பிக்கையிழந்துவிட்டார்கள். அந்நம்பிக்கையை இன்றும் மீட்டெடுக்க இயலவில்லை. இந்நூற்றாண்டின் இப்பாதி கொஞ்சம் இரக்கம் காட்டியது. கண்டங்கள் அறியா இத்தூரப்பிரதேசம் பசிபிக் பெருங்கடலின் ஒரு முனையில் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிய, பணம் படைத்தோர் உரிய முறையில் கடவுச்சீட்டு பெற்று இங்கே தஞ்சம் புகுந்தார்கள். பெரும்பாலான உயிரினங்களின், தாவரங்களின் டிஎன்ஏ அவர்களிடம் இருந்தன. முடிந்தவரையில் எல்லாமே மறுஉருவாக்கம் செய்யப்பட்டன. மொழிகள் பாதுகாக்கப்பட வேண்டியவை எனக் கருதினார்கள். அவையனைத்தும் கணினிகளில் சேமிக்கப்பட்டன. விடுபட்டுப்போன மொழிகள் மக்களிடம் தேடப்பட்டுப் பாதுகாக்கப்பட்டன. நிம்மதியான இரவுகள் அவர்களைக் கடந்துபோயின. எல்லாமே நல்லபடியாகப் போய்க்கொண்டிருந்த வேளையில், புதிய நோய் எல்லாவற்றையும் பாழாய் ஆக்கிவிட்டது. இந்தத் தீவே பெரிய மருத்துவமனை போலக் காட்சியளித்தது.

அதேவேளை, எப்படியோ தம்போவும் மாலிக்கும் இத்தீவை கண்டறிய, ஏற்கனவே அகதிகளாய் வந்தவர்கள் உள்நுழைவதற்குப் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கிவிட்டனர். தம்போ இங்கே வருவதற்கு வாழ வேண்டும் என்ற பிடிப்பு மாத்திரமே காரணமில்லை. ஒரு கனவு போல, அவனின் அம்மா இங்கே வாழ்வதை ஆழ்மனம் நிச்சயப்படுத்தியது. காரணத்தோடு கூடிய நம்பிக்கை இறுக்கமானது. எல்லாமே நடந்தாக வேண்டும். தம்போவின் பதின்வயதில் எங்கோ நகர்ந்து போய்க்கொண்டிருந்த அவர்களின் ஓடம் இறுதியாய் ஒரு பெரிய கப்பலை அடைந்தது. பெண்களையும் குழந்தைகளையும் ஏற்றுக்கொண்ட அக்கப்பல், வாலிபனாய்க் காட்சியளித்த தம்போவை அனுமதிக்கவில்லை. அவனோடு சேர்த்து எத்தனையோ அப்பாக்களுக்கு அண்ணன்களுக்கு அது அவர்களின் வேர்களோடு இறுதிச்சந்திப்பாய் அமைந்தது. தம்போவின் அம்மா அக்கப்பலின் மேல் நின்றபடி கைகளால் ஒரு கதையை வரைய ஆரம்பித்தாள். அது ஒரு ஊர்ச்சுற்றிக் குருவியின் கதை. அவள் கைகளின் அசைவில் தோன்றிய மொழி தம்போவின் விழிகளுக்கு மாத்திரம் புரியும்படி இருந்தது. அது வீட்டை விட்டுத் தனியே செல்லும் குருவியின் பயணம். அதில் கழுகுகள் நிறைய. வெயில் தகிக்கும் நீர் வற்றிப்போன நிலம் அது. எங்கெங்கோ பறந்து திரிந்து தனக்கான துணையைத் தேடியபின் அக்குருவி கூடு திரும்பும்.

தம்போ அடிக்கடி அக்குருவிக்கதையை நினைவில் காண்பான். பின், எங்கெங்கோ அலைந்து திரிந்து கடைசியில் அவனும் இத்தீவில் நுழைந்துவிட்டான். கூடவே மாலிக்கும் இருக்கிறான். இவர்கள் தீவிற்கு வந்தடைந்த கப்பலில் தினம் இருமுறை மாத்திரமே உணவு கிட்டும். அதிலும் சிலசமயம் இளைஞர்களுக்கு ஒருமுறை மாத்திரமே உண்ண உணவு மிச்சம் இருக்கும். உணவில்லாத நிலையில் ஒருநாள் தன்னிடம் இருந்த மிச்சம் பிடித்த ரொட்டிகளை மாலிக்கிற்கு அளித்தான். ஒருநாள் பழக்கம் தினமும் தொடர்ந்தது. தம்போ எதையும் உண்டு வாழப் பழகியவன். நாள் முழுவதும் தண்ணீர் போதும். முற்பிறவியில் ஒட்டகமாய்ப் பிறந்திருப்பான் போல. ஆனால் மாலிக் பசியால் தினமும் துடித்தான். பசியால் பிணைத்த உறவு இருவருக்கும். அவர்கள் வந்திறங்கிய வேளை, நோய் இங்கே கப்பலில் உள்ள எவருக்கும் பீடிக்கவில்லை. ஆயினும் மரணத்தின் பெயரால் அச்சப்பட்ட மனித இனம் அப்பெரும்சுவரைத் தாண்டி இவர்களை அனுமதிக்கவில்லை.

மாலிக் மல்லாந்து படுத்தவாறு, “உன்னைச் சந்திக்கும் முன் சாவுக்காகக் காத்திருந்தேன். இப்போது அதனைத் தள்ளிப்போடுகிறேன். உன் அம்மாவைக் காண வேண்டும். ஒருகதை அவளின் கைகள் அசையக் கேட்க வேண்டும், பின் இறக்க வேண்டும்.”

“ஏன் சாவைப் பற்றியே சிந்திக்கிறாய்? உன்னை மகனாகவே அவள் பாவிப்பாள். நாம் இணைந்து மகிழ்ச்சியான நாட்களை வரவேற்போம்,” என்றான் தம்போ. “அவள் கூறிய கதை ஏதும் நினைவில் உண்டா?”

“நிச்சயமாக, பெரும்தீ நெருப்பைப் பற்களாய்க் கொண்ட அரக்கன் போல ஜுவாலைகளைப் பசுமையான காடு எங்கும் வீசி எரித்துக்கொண்டிருந்தது. விலங்குகள் எல்லாம் ஓடி ஒளிந்து பயத்தால் நடுங்கி வேறுபக்கமாய் நகர ஆரம்பித்தன. ஒரு கழுகு மாத்திரமே உயரப் பறந்து அந்தக் காட்டையே சுற்றிச் சுற்றி வந்தது. வானை அவ்வப்போது நோக்கியது, விசாலமான வெளியில் மேகங்களே இல்லை. இரண்டு நாள் ஆனது, தூரப்போயிருந்தால் வாழ இடம் உண்டு. உணவும் இல்லை. களைப்பில் பறந்தது. நம்பிக்கையில் மாத்திரமே பறந்தது. தீடீரென வானம் இருண்டது, மழைமேகங்கள் பொழிய ஆரம்பிக்க சிலமணி நேரங்களில் நெருப்பு அமிழ்ந்து காடு அமைதியானது. கழுகு கீழிறங்கியதும், சாம்பலில் இருந்து புழுக்கள் வெளியே வர, அதை உண்டது. எல்லாமே நம்பிக்கையால் நடந்தன. அழிவு என்பது இன்னொன்றின் பிறப்பே.” என்றவாறு அமைதியானான் கண்களை மூடியபடி.

மாலிக் அவன் தோள்களை அழுத்தி, “நாமும் நம்புவோம், உன் அம்மா ஒருவேளை சுவையான உணவுகளோடு நமக்காகக் காத்திருக்கலாம்,” என்றான் புன்னகைத்தபடி.

தம்போவுக்கு உள்நுழைய இப்போராட்டம் தடையாய் இருந்தாலும் சுவரின் அப்பக்கத்தில் அவனின் அம்மா இருப்பதாகவே நம்பினான். அதனாலே, எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு இங்கே இப்போது காத்திருக்கிறான். பெரும்கதைகளுடன் அக்கதைச்சொல்லி இன்னும் உயிர் வாழ்கிறாள். அவள் கதைகளில் அப்பெரும் கண்டத்தின் ஓடும் கொலைமிருகங்களும் பெரிய சாந்தப்பிராணிகளும் உயரப் பறக்கும் பறவைகளும் அவளோடு காத்திருக்கின்றன. அதனை அவளின் மகனிடம் சொல்லியாக வேண்டும். இது போதாதா தம்போ உயிர் வாழ்வதற்கு? மாறாக, மாலிக் எல்லாவற்றையும் இழந்துவிட்டான். அவன் வயிற்றையும் இழந்துவிடவே துடித்தான். எப்போதும் பசியால் வாடும், கொடும் வலியில் துடிக்கும் அவனின் சிறிய வயிற்றைத் தூக்கிச் சுமக்கவே அருவருப்பில் அலைந்தான். கப்பலில் அவனுக்கு அறிமுகமான தம்போ, நம்பிக்கையில் சுழன்று திரிந்த ஒரு ஈயாகவே மாலிக் கண்களுக்கு அகப்பட்டான். இருவருக்குமே நிச்சயமற்ற எதிர்காலம் இருந்தாலும், தம்போ அங்கே நம்பிக்கையுடனும் மாலிக் நம்பிக்கையற்றவனாகவும் திரிந்தார்கள்.

போராட்டம் உச்சநிலையை அடைந்தது. தலைவர் இன்னும் அதே கூரிய பார்வையுடன் அப்பெரிய வாயில் கதவை வெறித்தபடி நின்றுகொண்டிருந்தார். இளம்தாய்மார்கள் இடுப்பில் ஏந்திய குழந்தைகளின் வாயின் ஓரமாய் எச்சில் வழிய நின்றுகொண்டிருந்தார்கள். வயதானவர்கள் ஒருவரை ஒருவர் தாங்கியபடி, தலை கவிழ்த்து விழி மாத்திரம் அப்பெரும் வாயில் கதவை உதவி கிட்டாதா எனும் வெறுமையுடன் நோக்கிக் கொண்டிருந்தனர்.

வெகுநேரம் ஆகியிருக்க வேண்டும். சுவரின் ஒருபக்கக் கதவு திறந்து, வெண்ணுடை தரித்த சிலர் வருவது போலிருந்தது. தம்போவும் மாலிக்கும் பனைமரத்தின் அடியில் இருந்தபடி எல்லாவற்றையும் கவனமாகக் கண்காணித்துக் கொண்டிருந்தனர். உண்மைதான் சிலர் வந்தது. சில நிமிட இடைவேளையில் கதவுக்கு வெளியே காத்திருக்கும் கூட்டத்திலிருந்து இரண்டுபேர் இவர்களை நோக்கி வருவது போலிருந்தது. வந்தவர்கள், இருவரில் யாருக்காவது ஆங்கிலமும் அரபியும் தெரியுமா எனக் கேட்டார்கள். மாலிக் ஆமாம் என்பது போலத் தலையசைத்தான். மாலிக்கைத் தலைவரோடு உள்நுழைய அனுமதித்தது கூட்டம். தம்போ மாலிக்கை நோக்கி, “அருமையான சந்தர்ப்பம், என் அம்மா நிச்சயமாக எனக்காக உள்ளே காத்திருக்கக்கூடும். நீ அவளிடம் கூறு நான் வெளியே காத்திருக்கிறேன் என்பதை. சிலநிமிடங்கள்தான் இடையே இருக்கின்றன எனக்கும் அம்மாவுக்கும். சொல் அவள் கதைகளைக் கேட்க நான் வந்துவிட்டேன்” என்றான்.

இருவருக்கும் பெரிய பேச்சுவார்த்தைகள் எதுவும் ஏற்கனவே நிகழாமல் போயிருந்தாலும், தம்போ பலமுறை அவனின் அம்மா பற்றி மாலிக்கிடம் பேசியிருந்தான். மாலிக் சரி என்பது போலத் தலையை அங்கும் இங்கும் ஆட்டினான்.

தலைவரும் மாலிக்கும் வந்தவர்களோடு உள்நுழைந்தார்கள். கதவு மூடும் இடுக்கு வழியே மாலிக் தம்போவைப் பார்த்துக் கையசைத்தான். சுவரின் வெளியே காத்திருந்த எல்லாருக்கும் இது ஒருவகையில் வெற்றியாகவே பட்டது. தம்போவிற்கு எண்ண எண்ணப் பலமணி நேரம் ஆகியிருந்த மாதிரி தோன்றியது. தீடிரெனப் பெரும் சத்தம் கேட்க, வானில் வலசை போகும் பெரும்பறவைக் கூட்டம் போலப் புள்ளிகள் தோன்றின. அவை கூட்டத்தை நோக்கி வந்தன. எல்லாமே கொத்துக்குண்டுகள். இருந்தவர்கள் மேலே தெறிக்க, தம்போவின் தலை மட்டும் தனியாய் அவ்வொற்றைப் பனைமரத்தின் மேல் எழும்பி நின்ற ஓலையில் விழுந்து நின்றது. அதன் கண்கள் சுவரின் உள்பக்கம் தெரியும் வண்ணம் இருந்தன. அதில் மாலிக் தம்போவின் அன்னையின் அருகில் செல்வது போல மங்கலாய்த் தெரிய, கண்கள் மூடின.


என் ஆத்துமாவே, தேவனையே நோக்கி அமர்ந்திரு

 




வெயிலில் தகித்து கொண்டிருந்தது நகரம்.  நகரத்தின் விளிம்பில் தகரக்கொட்டாய்கள் மற்றும் குடிசைகள்  நிறைந்த பகுதியில், செழித்தவர்களின் குப்பைகள் ஆற்றின் நீரோட்டத்துடன்  வழிந்தோடி  பெருத்த சாக்கடையாய்  கடலோடு உறவாடும் கழிமுகம் அது. கரையின் இணையாய் நீண்ட தெருவும் அதனோடு பக்கவாட்டில் பல சந்துக்கள் வேர்ப்போல பிரிந்து மறுபக்கம் நகரத்தின் வெளிப்பிரதானச்சாலையை இணைக்கும். இச்சாலையின் இருபுறமும் கண்ணாடி கட்டிடங்களும், பன்னாட்டு நிறுவன ஊழியர்கள் தங்கும் பிரம்மாண்ட உயர்தர ஹோட்டல்களும்,  உணவகங்களும் நிறைந்து மேடான பகுதியாய் காட்சி அளிக்கும். அப்படியே எதிராய் ஈக்கள் தெருவெங்கும் ஆயும் சந்தில், பன்றிகள் படுத்துருளும் சாக்கடைகளும் நிறைந்த தாழ்வான பகுதியில்,   ஐசுவரியம் நிறைந்த அம்மையாரின் முகம் கொண்ட  பெரிய தட்டியால் முகப்பை மறைத்து இருவர் மட்டுமே கால் நீட்டி நீண்டு உறங்கப்போதுமான ஓரறை வீடு இருந்தது.  அதனுள் நெகிழிப்பாய் விரித்து  நடுங்கியபடி படுத்திருந்த மெலிந்த சிறுவனின் தலைமாட்டில் ஒரு கையில் விவிலியம் வாசித்தபடி மேரி அமர்ந்திருந்தாள். அவளின் மனம் கனம் கூடியிருந்தது. அவளின் மறுகையில் ஜெபமாலையை விரல்கள் உருட்டியபடி இருந்தது. 


சிறுவனுக்கு வயது ஏழு இருக்கலாம், ஆயினும் அதனினும் குறைவான வயதொத்த குழந்தையை போல ஒடுங்கி இருந்தது தேகம். மேல்சட்டை அணியாத உடலில், எலும்புகள் எண்ணும்படி தென்னி இருந்தது. உதடுகள் வெடித்து, பற்கள் மஞ்சள் பிடித்து, நாக்கு வெளுத்து இருந்தும், முகம் பவித்திரமான ஒளியில் திளைத்தது. தலைமாட்டில் என்றோ எங்கோ  வாங்கிய மாதாவின் உருவம் பதித்த வெள்ளை நிறக்குப்பியில் தூயஎண்ணெய் இருந்தது. மேரியின் கவனம் பைபிளில் மட்டுமே இருந்தது. இருப்பினும் அவளின் வலது கை ஜெபமாலையோடு சேர்த்து,  சிறுவனின்  தலைமயிரை அவ்வப்போது வருடியபடி இருந்தது.


சிறுவன் முனங்கும் ஓசை கேட்டதும், புத்தி தெளிந்தவளாய் குப்பியில் இருந்த எண்ணெய்யை சிறிது கையில் எடுத்து அவளின் வலதுகை பெருவிரலால் சிலுவை ஒன்றை அவனின் நெற்றியில் பூசி, மனமுருகி,  கருணையின், அன்பின் பிதாவை வேண்டினாள்.  அவ்வீட்டின் மேல்தகரத்தின் மீதுள்ள ஓட்டையின்  சிறுதுளையின் வழியே மென்ஒளி வீட்டில் விழுந்து கொண்டிருந்தது. கழுத்தில் சீழ்பிடித்த கருநிற பூனைக்குட்டி நகங்களால் ஒளியை பிராண்டி கொண்டிருந்தது. அவளின் எண்ணம் எங்கும் அற்புதங்களை நிகழ்த்தும் மன்னவர் முழுவதுமாய் நிறைந்திருந்தார். இஸ்ரவேலின் குருடர்களுக்கு ஒளியை அளித்தவர் என் பிள்ளையை கைவிடுவாரா?  கண்ணில் வழிந்தோடிய கண்ணீர் காய்ந்தபடி அவள் வேண்டிக்கொண்டிருந்தாள். சிறுவன் சிலநிமிட வேளையில் உறங்கி போனான். நோயின் தாக்கமோ! இல்லை பசியாகவோ இருக்கலாம். நேற்றிரவு சிறிது கஞ்சி குடித்தான். அதையும் சர்த்தித்து விட்டான். பானையில் வெந்நீர் கொஞ்சம் இருந்தது. அவ்வப்போது  அதனை குடிக்க கொடுப்பாள். 


எண்ணியும் தேடியும் பார்த்தும் வீட்டில் பதினைந்து ருபாய்க்கு அதிகமில்லை. இருந்த பதினைந்து ரூபாயையும் செலவு செய்யவேண்டாம் என  நினைத்திருந்தாள். ஒருவேளை நாளையும் காய்ச்சல் குறையவில்லை என்றால் மீண்டும் மருத்துவரின் கரிசனம் தேவை. பதினைந்து ரூபாய்க்கு குறைவாய் மருத்துவம் செய்யவும் அதனையும் நிறைவோடு செய்யவும் மருத்துவர்கள் இருக்கிறார்களா?. இப்பகுதி  குடிசைவாசிகள்  மத்தியில் இருபது ருபாய் மருத்துவர் பரிச்சயமானவர்.காசு கொடுத்தால் மாத்திரம் வாங்கி கொள்வார். அதையும் எண்ணிக்கொள்ளாமல் வாங்கி மேஜை டிராயரில் போடுவார். கொடுக்காவிட்டாலும் அவர் அளிக்கும் மரியாதைக்கும், மென்மையான பூரணமான புன்னகைக்கும் குறைவு இருக்காது. சில மனித நோய்களுக்கு அந்த தூய்மையான புன்னகை கூட வலி தீர்க்கும் நிவாரணி தெரியுமா?  மேரி அந்த பதினைந்தை பத்திரமாய் வைத்திருப்பது,  இரண்டு நாள் முன்பு அங்கு சென்றபோது மருத்துவம் முடித்து அவர் புன்னகைக்கும் இடைவெளியில் எழுந்து வெளியேறிவிட்டாள். இம்முறையும் அவ்விடைவெளியை பயன்படுத்திக்கொள்ள விரும்பவில்லை. 


யாரோ கதவை அசைக்கும் ஓசை கேட்டதும், தலையை லேசாய் திருப்பி பார்த்தாள். தெரியும்,  அது நிச்சயமாய்  வின்சியாக தான் இருக்க வேண்டும். அவள் ஒருத்தியை தவிர இந்த நகரத்தில் யாருக்கு மேரியின் வீட்டு விலாசம் தெரியும். வருடம் பல ஆயிருக்கும் கடைசியாய் வின்சியை தவிர,  இந்த வீட்டிற்கு வேறொருவர் வந்து. ஜோசப்புடன் வீட்டை விட்டு வெளியேறி,  குழந்தை பிறந்து, பின் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் ஜோசப் சிறை சென்றுவிட,  மகளிடம் பரிதாபப்பட்டு வந்தார் அப்பா. வீராப்பை பெரிதும் கொண்ட முறுக்கு மீசை, மெலிந்த உடல்காரர். அவரின் கண்கள் எப்போதுமே சிவந்து கோபத்தை கக்குவது போல இருக்கும், சிறுவயதில் தந்தையின் பார்வையில் படுவதையே தவிர்ப்பாள். ஆனால் பாருங்கள் காதலின் அகமறைப்பில் ஓடுகாலியாக ஆகிவிட்டாள். அதன்பின் அன்றுதான் இருவரும் சந்தித்தார்கள். வழக்கத்திற்கு மாறாய் அவர் கண்கள் நுங்கின் உள்கருக்கை போல நீரில் நிறைந்து இருந்தது. எதுவும் பேசிக்கொள்ளவில்லை. கையில் இருந்த சொற்ப தொகையை மகள் கையில் திணித்து சென்றுவிட்டார், மறுபடியும் அவர்களை காண வரவில்லை.பின்னர் சில நாட்களில் இறந்து போனார். தகவலும் இரண்டு வாரம் கழித்துதான் மேரிக்கு தெரிந்தது. வின்சி இவளோடு அதே அலுவலகத்தில் பணி புரிபவள். மேரி தலையை திருப்பி பார்த்தாள்.ஆம் அது வின்சிதான்,  அவளுடன் சிறிதாய் கூன் விழுந்த இன்னொருத்தி. முகம் எங்கும் அலையலையாய் சுருக்கங்கள் படர்ந்த கிழவியும் நின்று கொண்டிருந்தாள். ஏற்கனவே இருவர் உள்ளிருந்ததால் வின்சி மட்டுமே உள்ளே சென்றாள். மேரிக்கு கிழவி வின்சியின் அம்மாவாக இருக்க வேண்டும் என்று தோன்றியது.


உள்ளே நுழைந்தவள் அங்கிருந்த சூழலில், நிகழ்ந்து கொண்டிருந்த காட்சியை கிரகித்து கொண்டு சிலநொடி அமைதியாய் நின்றாள். உடன் வந்தவள் வெளியேயே நிற்க, மேரி பித்துபிடித்தவள் போல இவர்களின் வருகையை அறிந்தும் அமர்ந்திருந்தபடியே விவிலியத்தை புரட்டியபடி கண்களை அதிலே பதித்து இருந்தாள். வின்சிக்கு மேலும் நிசப்தம் தொடர்வதில் விருப்பமில்லை. 


"அக்கா, நேத்திக்கே சூப்பர்வைசர் திட்டிட்டார். இன்னைக்கும் வரலேன்னா.  வேலைய விட்டு போக சொல்லிட்டாரு" என்றாள்  வின்சி,  மேரியை நோக்கி. அவளின் குரல் வெண்கல மணி ஒலிப்பது போல கணீர் என்றிருந்தது.


"ஆண்டவரே,  உம்பிள்ளையை காப்பாத்தும். மன்றாடி வேண்டுகிறேன்....." நீண்ட ஜெபத்தில் ஆழ்ந்திருந்தாள் மேரி. மிகவும் சிரத்தையுடன் எழுந்தாள். வெகு நேரம் அமர்ந்திருந்ததால்,  கால்களில்  இரத்தஓட்டம் குறைந்து,  பலநூறு எறும்புகள் ஊறுவதை போல உணர்ந்தாள். எழுந்தவள் நிற்கமுடியாமல் வீட்டின் மேல் உத்திரத்தில் தாழ்வாய் கிடைமாட்டில் இருந்த மேல்தகரத்தை தாங்கி பிடித்து கொண்டிருந்த சவுக்கு கம்பை பிடித்து உடல் வழியே கால்களுக்கு கொடுக்கும் அழுத்தத்தை குறைத்து,  சீராய் இரத்த ஓட்டம் பாய வழிச்செய்தாள். மேரியின் உடலமைப்பு ஒரு சிறுமியை போல இருந்தது,  முகம் வடிவாய் இருந்தது. கண்கள் மாத்திரம் ஒளியின்றி மங்கியிருந்தது. மார்பு ஒட்டி, பொருத்தமில்லா சுடிதார் அணிந்து இருந்தாள்.


"என்ன செய்வேன். உடம்பு கொதிக்கே,  இன்னைக்கு ஒரு நாள் லீவு எடுத்துகேன்" மேரி இதனை கூறும் போதே,  இல்லை என்பது போல தலையாட்டிய வின்சி "சொன்னா கேளுக்கா, அம்மா பாத்துக்கிடுவா பிள்ளையை" என்றபடி அம்மை நோக்கி கை நீட்டினாள். 


ஆசுபத்திரி அழைத்து செல்லவும் காசு வேண்டும். ஏற்கனவே மூன்று நாட்கள் விடுப்பு எடுத்தாயிச்சு. மருத்துவர் கூறியதும் நினைவிற்கு வந்தது, மீண்டும் அவர் கூறிய வார்த்தைகள் உள்ளுக்குள் கேட்டபடியே இருந்தது. சிறுவன் உடலில் சத்து குறைபாடு உள்ளது. அதுவே எளிதாய் சளியும், காய்ச்சலும் ஏற்பட காரணமாய் இருக்கிறது. சத்தான ஆகாரம் சாப்பிட கொடுக்கவேண்டும். ஹார்லிக்ஸ், பூஸ்ட் போன்ற ஏதாவது ஒன்று வாங்கி தினசரி கொடுக்குமாறு சொல்லியிருந்தார்.


சரி, வேலைக்கு செல்வோம். இப்போதைக்கு இருக்கும் ஒரே வழி, சூப்பர்வைசரிடம் காசு கேட்பது மட்டுமே. பலமுறை வாங்கி இருக்கிறேன். கொடுப்பாரா?  கடந்த வாரம் கூட வாங்கி இருந்தேன். அவர் மிகவும் நல்லவர், இரக்கமானவர்,  கண்டிப்பாய் கொடுப்பார்,  என்றெல்லாம் யோசித்தபடி உடைகளை மாற்றி, நேற்று வடித்த சுடுகஞ்சியின் மிச்சம் ஆறி அனந்து இருந்ததில் ஒரு மிடறு குடித்து,  சிறுவனின் நெற்றியில் முத்தமிட்டு கிழவியை நோக்கி மென்மையாய் சிரித்தபடி வீட்டை விட்டு வெளியேறினாள். ஏதோ நினைவு வந்தவளாய் மீண்டும் வீட்டுக்குள் நுழைய முயற்சித்தாள். வின்சி மேரியிடம் "ஏன் என்னாச்சுக்கா",  "இல்லை அம்மாட்டா எதுனா வாங்கணும்னா காசு வேணும்ல கொடுக்க மறந்துட்டேன்" என்றாள்  மேரி. "நீ வாக்கா, அம்மாட்ட காசு இருக்கு. அது பாத்துக்கிடும். பயப்படாதே."


இருவரும் சாக்கடையும் மழைநீரும் தேங்கி நிற்கும் தெருக்கள் வழியே நடக்க ஆரம்பித்தனர். அப்பகுதி எங்கும் அழுகிய பொருட்களின் நாற்றம் வீசியது. இப்பகுதி நகரத்தின் ஓரம் புதிதாய் உருவாக்கப்பட்டு இருந்தது. நகரம் பெரிதாய் விஸ்தாரித்து மேலும் பிரமாண்டமாய் எழும்ப,  நாகரீகத்தின் கம்பீரமாய் பெரிய கட்டிடங்கள், கண்ணாடி மாடங்கள் என விரிந்தது. அங்கு ஓரமாய் வாழ்ந்து கொண்டிருந்த இப்பூர்வகுடிகள் குப்பையை போல வீசி எறியப்பட்டார்கள். எதை உருவாக்க அவர்கள் தேவைப்பட்டார்களோ, அதன் அழகை கெடுப்பது இவர்கள் என மாறி மாறி வந்த எல்லா அரசாங்கமும் இவர்களை விரட்டியது. மாறாய் இன்னும் நகரத்தின் துப்புரவு,  சில்லறை பணிகளுக்கு பெரும்பாலும் தேவைப்படுகிறார்கள். 


கடந்த வாரம் பெய்த பெருமழையின் நீர் வடியாமல் இன்னும் தேங்க, இப்பகுதியை நோய்கள் பீடித்து கொண்டிருக்கிறது. எங்கும் கொசுக்கள் பறக்கிறது. மேரியின் கால்கள் வேகமாக நடக்க, அவளை விட உயரம் குறைந்த வின்சி வேகத்திற்கு ஈடாய் நடப்பது ஓடுவது போல தெரிந்தது. மேரியின் கண்களின் முன் விரிந்திருக்கும் காட்சிகள் மனதில் பதியாதவளாய் நடந்து கொண்டிருந்தாள். 


செல்லும் வழியில் குருசடி ஒன்று இருந்தது, அதில் இருந்த அன்னை மேரியின் கையில் ஏந்திய அழகிய குழந்தையின் உருவம், அவளுக்குள் வேறு நினைவுகளை கிளறியது. ஜோசப் அவளுக்கு கொடுத்தது இன்பங்களின் உச்சத்தை. நகரத்தின் மையமாய் வழிந்தோடும் நதியின் கரையில் அவர்களின் குடிசை இருந்தது. நாறும் சாக்கடைகள் அசவுகரியம் கொடுத்தாலும், மகிழ்ச்சியாகவே இருந்தது அவனோடு இருந்த நாட்கள்.  நினைவு முடிச்சுகளில் பொதித்து வைக்கப்பட்டு இருந்த மகிழ்வான தருணங்களை அவ்வப்போது நினைத்து பெருமூச்சுடன் உதட்டின் ஓரம் மட்டுமே மிஞ்சும் புன்னகையுடன் ஆறுதல் அடைந்துகொள்வாள். கிடைத்ததில்  நிறைவாகவே வாழ்ந்தார்கள். ஜோசப் கருணையானவன்.எதையும் ஆழ்ந்து சிந்திப்பவன். கடைத்தெரு ஒன்றில் தள்ளுவண்டி உணவகம் நடத்தினான்.உதவியாய் மேரி வர விரும்பினாலும்,  வேண்டாம் என்பான். "என் கஷ்டம் என்னோடு,  நீ சந்தோசமா வீட்டுல இரு". ஒவ்வொரு ஞாயிறு காலையும்  தேவாலயம் செல்வார்கள். தேவாலய வாசலில் அமர்ந்திருக்கும் பிச்சைக்காரர்களின் கூட்டத்தில், வயதான பெண்ணொருத்திக்கு உணவருந்த காசு கொடுப்பான். அவளை பற்றி அவனிடம் விசாரித்ததில் அம்மாவின் தோழி என்பான். மாலை அவளை கடற்கரை, திரையரங்கம் அழைத்து செல்வான். அவளுக்கு விருப்பமான எல்லாவற்றையும் அறிந்து வைத்திருந்தான். பிடித்தமான பொருளை நோக்கி அவள் கண்கள் நகரும் போதே, அதனை கையில் ஏந்தியபடி வருவான். தினமும் காலை இருவரும் இணைந்தே ஜெபிப்பார்கள். 


அவர்களின் குடிசை இடிக்கப்பட்டு, அதற்கு ஈடாய் ஒதுக்கப்பட்ட வீட்டுவசதி வாரிய குடியிருப்பு,  அவனுக்கு கசப்பை கொடுத்தது. தொழிலை இழந்தான்.வெட்டி தள்ளப்பட்ட மரத்தின் பறவைகளுக்கு வேறு கூடு எளிதில் அமையலாம். மனிதர்களுக்கு அப்படியா?  காயிலான் கடையில் இரும்பு உடைப்பது,  புறநகர் பகுதியில் உள்ள கிணறுகளில் தண்ணீர் திருடி நகருக்குள் விற்பது,  என கிடைக்கும் வேலைக்கு செல்ல ஆரம்பித்தான். இதற்கிடையில் அவர்களின் தாம்பத்யத்தின் அடையாளமாய்,  இன்புறும் வகையில் மகன் பிறந்தான். அவனுக்கு கர்த்தரின் முன்னே ஜான் எனும் பெயர் சூட்டினர்.


 புதிதாய் ஒரு பழக்கம் தொற்றிக்கொள்ள ஆரம்பித்தது. வேலை முடிந்ததும் அரசாங்க சாராயக்கடைகளின் பக்கம் திரும்பினான். தினமும் குடி ஒரு பழக்கமாக மாறியது.மேரி மன்றாடி பார்த்தாள்,  அவனுக்காகவே ஜெபிப்பாள்,  ஆண்டவரை நோக்கி கத்தி வேண்டுவாள், கையில் ஜெபமாலை திருகியபடி இருக்க "ஆண்டவரே உம்பிள்ளையை காப்பாத்தும்,  வழி தவறி சென்ற ஆட்டை உம்மந்தையில் திருப்பும், நல்மேய்ப்பரே, பரமபிதாவே,  சாத்தானின் சகவாசத்தை நீக்கும்" என கண்ணீர் மல்க வேண்டுவாள். முட்டங்கால் இட்டு அவள் ஜெபிக்கும் வேலையில் ஜானும் விவிலியத்தை கையில் ஏந்தியபடி அவர்கள் வீட்டில் இருந்த அன்னைமேரி புகைப்படம் முன் நிற்பான். மேரியின் கண்ணீர் ஜானின் கண்ணிலும் வடியும். ஜோசப் காலை ஜெபிப்பதும்  இல்லை. ஞாயிறு தேவாலயம் செல்வதை தவிர்த்தான். வீட்டிற்கும் வரத்து குறைந்தது. ஆனாலும் மேரியின் மீது உள்ள அன்பு துளியும் குறையவில்லை.  போதையில் அழுவான், புலம்புவான். தன் வாழ்க்கையின் போக்கு அவனுக்கே பிடிக்கவில்லை. இருப்பினும் குடி எனும் சாத்தானிடம் அகப்பட்டுவிட்டான். 


குடியின் வெறி, வேலையில் கிடைத்த பணம் போதாமல் திருட்டிலும் ஈடுபட வைத்தது. திருட்டை ஏன் தேர்ந்தெடுத்தான். சாலையின் ஓரம்  கௌரவத்தோடு தள்ளுவண்டி கடையில் உணவகம் நடத்தியவன்,  திருடன் ஆனான். கூட்டாளியாய் பாரபாஸ் சேர்ந்து கொண்டான். ஜோசப் அவனை பாசி என்று அழைப்பான். பாசிக்கு ஒருவருடம் முன்பே திருமணம் ஆகி இருந்தது. காதல் திருமணம்,  திருமணத்தின் போது அவனுக்கு வயது பதினெட்டு மட்டுமே. ஒருநாள் எங்கோ திருடி பெரும்தொகை கிடைத்தது. ஒரு பங்கிற்கு குடித்து முடித்து பாகம் பிரிக்கும் போது,  குடிபோதையில்  இருவருக்கும் யார் பெரியவன் எனும் அகங்காரம் முற்றி, கைகலப்பில் போய் முடிந்தது. ஜோசப்பை விட பாசி வலுவானவன்.  அடி வாங்க முடியாத கையறு நிலையில், ஜோசப் அருகில் இருந்த கருங்கல்லை கையில் எடுத்து சரமாரியாக பாசியின் தலையில் தாக்க மண்டை சிதறி, மூளை வெளிப்பிதுங்கி பாசி இறந்து போனான். ஜோசப் சிறைக்கு சென்றான். 


வேகமாக நடந்தார்கள்,  சந்துகள் இல்லாத  பஜார் வந்தது. அதன் வழியே சாலையை அடைந்தார்கள். இருபக்கமும் கண்ணாடி கட்டிடங்கள். அதில் ஒன்றில் நுழைந்தார்கள் இருவரும். அவசர அவசரமாய் இரண்டாம் மாடிக்கு சென்று சிறிய உடை மாற்றும் அறைக்கு சென்றார்கள். அது பன்னாட்டு வங்கியின் தகவல் நுட்ப மையம். அங்கே ஊழியர்கள் உணவருந்தும் அரங்கில் அவர்கள் உண்டபின் மேஜை துடைத்து சுத்தப்படுத்தும் வேலை மேரிக்கு. வின்சிக்கு காபி விளம்பும் இயந்திரத்தில் பால் ஊற்றும் வேலை. கூடவே ஊழியர்கள் அருந்திக்கொள்ள பூஸ்ட், பாதாம் பொடி, ஹார்லிக்ஸ் சிறு சிறு பாக்கெட்கள் தீர தீர நிரப்பும் வேலை.


மதியநேரம் மேரிக்கு கடுமையான வேலை. ஒவ்வொரு மேஜை முடித்து அவள் ஆசுவாசப்படுத்தி கொள்ள முயலும் நேரம்,  அடுத்த மேஜைக்கு அவளை அழைப்பார்கள். மகனின் காய்ச்சல் வேறு அவளை சித்திரவதை படுத்திக்கொண்டிருந்தது. கிழவி ஆகாரம் கொடுத்திருப்பாளோ! அவன் என்ன செய்து கொண்டிருப்பான்.  புலம்பல் குறைந்திருக்குமா? பல சிந்தனைகள் மனதிற்குள் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தது. கூடவே மருத்துவர் சொன்ன அவனின் உடல்நிலை, சத்துக்குறைபாடு. ஹார்லிக்ஸ்,பூஸ்ட் நூறு ருபாய் இருக்குமா?  ஐந்து ருபாய் பாக்கெட் கிடைக்கிறதே! அதை தன்னால் வாங்க இயலாதா?  தினசரி சம்பளம் இல்லை, மாதம் பத்தாம் தேதிக்கு கிடைப்பதே அரிது. இன்றோ இருபதாம் தேதி. வாங்கிய சம்பளம் தீர்ந்துவிட்டது. எப்படியோ சூப்பர்வைசர் கொடுப்பார், கேட்டு வாங்கி கொள்ளலாம்.  


அன்றைய நாள் வேலை முடிந்ததும்,  உடைகளை மாற்றி சூப்பர்வைசர் அறைக்குள் சென்றாள். அவர் அமர்ந்திருந்தார். இவளை கண்டதும் எவ்வித உணர்ச்சியையும் வெளிக்காட்டாமல் கணினியை நோண்டியபடி உட்கார்ந்து இருந்தார். மேரி பலகீனமாக உணர்ந்தாள், அவளின் தொண்டை விக்கி வார்த்தை வராமல் சிக்கி கொண்டு இருந்தது. மெதுவாய் ஆரம்பித்தாள், 


"சார்,  பையனுக்கு காய்ச்சல். அதான் லீவு எடுத்தேன்" 


சூப்பர்வைசரின் பார்வை வித்தியாசமாய் அவளை நோக்கியது,  வாடியப்பூவை போல இருந்தாள். மேரியின் கண்களை நேருக்கு பார்ப்பதை எப்போதும் அவர் தவிர்த்து விடுவார். பரிதாபமான ஒளியிழந்த கண்கள். "இல்லமா, மேனேஜர் உன்னால என்ன திட்டிட்டார். நீங்க வேணும்னா வேற வேலை பாருங்க" என்றார் அவர். இதை கூறும் போது அவரின் தலை கவிழ்ந்தே இருந்தது. "இல்ல சார்,மன்னிச்சிருங்க இனி லீவு எடுக்க மாட்டேன்"


"சொன்னா புரிஞ்சிக்கோங்க,  இப்போல்லாம் சம்பளம் குறைவா வேல பாக்க அசாம், பெங்கால் காரங்க வராங்க. நா என்னால முடிஞ்சத செய்றேன். நீங்களும் புரிஞ்சிக்கணும்" என்றார்.


மீண்டும் கணினியில் நுழைந்து,  அவளின் முகம் காணாமல் இருந்தார். இப்போதைய சூழலில் இவரிடம் எப்படி பணம் கேட்பது. மனம் ஒடிந்து அங்கிருந்து வெளியேறினாள். அவள் அங்கிருந்து நகர்ந்ததும்,  அவளை நோக்கிய பார்வையை மீட்டு கணினியில் நுழைத்தான். அவளின் சொந்த வாழ்க்கையை அறியாத அவர் மனதிற்குள்,  அவரின் அம்மாவின் உழைப்பை உணர அவள் காரணமாக இருந்தாள். அம்மாவால்தான் தானின்று இப்படி ஒரு அலுவலகத்தில் மரியாதையான வேலையில் இருக்கிறேன். மேரியின் ஒடிசலான தேகமும், வடிவான முகமும் அவளை காணும் ஒவ்வொரு தருணமும் அம்மாவை நினைவுபடுத்தும்.


வரவேற்பறையில் வின்சிக்காக காத்திருந்தாள். வின்சி வந்தாள்,  "காசு கேக்கலாம்னு பாத்தேன்,  கேக்க முடியல. வேலையே போயிரும்னு இருக்கு, இதில எங்க அட்வான்ஸ் கேக்க". வின்சி ஒருமுறை அவளை பார்த்தபடி காத்திருக்குமாறு கூறி மீண்டும் மேலே சென்றாள். மூச்சிரைக்க வந்தவள் கைப்பையில் ஹார்லிக்ஸ் சிறிய பாக்கெட் சில இருந்தது.


"டெய்லி உனக்கு ஒன்னு எடுத்து தாரேன். நீ யோசிக்காம வா."


மேரிக்கு இது தவறாகப்பட்டது. "இல்ல வின்சி, நீ கொண்டு போய் அங்க வச்சிரு. இது வேண்டாம்"


"இதுல என்ன தப்பு,  இங்க வசதிக்கும், வாங்குற சம்பளத்துக்கும் பிரீயா  குடிக்கிறாங்க. தெரியுமா சிலபேர் நா நிக்கும் போதே பேக்ல ஒன்னு இரண்டு எடுத்து போடுவாங்க. நாம எடுத்தா என்ன பிரச்சனை. யாருக்கு தெரியப்போவுது.  இதுல ஒன்னும் தப்பு இல்லை. நீ வா, போய் அவனுக்கு பால்ல கலந்து போட்டு கொடு. பாவம் தம்பி,  உடம்புல தெம்பே இல்ல" 


"இல்ல வின்சி,  அப்பா பண்ண தப்போ என்னவோ. பிள்ளைக்கு இப்டி அடிக்கடி ஆவுது. இதுல திருடி வரது எனக்கு வேணாம். எனக்கு சரிப்பட்டு வரல"


"இதுல என்ன திருட்டு இருக்கு. நியாய தர்மம்லா இதுல வேண்டாம் அக்கா.  உன்கிட்ட காசு இருக்கா,  நமக்கு எவ்ளோ சம்பளம்.  பேசாம வா" என்று மேரியின் கையை பிடித்திழுத்து வெளியே அழைத்து சென்றாள். மேரிக்கு இதில் துளியும் விருப்பமில்லை. இருந்தாலும் மகனின் உடல்நிலை இதில் ஒப்புக்கொள்ள வைத்தது. வின்சி எதற்காக என் கஷ்டத்தை பகிர வேண்டும். அவள் கணவனை கொன்றவன் என் அன்பு காதலன் அல்லவா!. 


பாசியைக்கொன்று,  ஜோசப்பை நீதிமன்றம் அழைத்து வந்த நாள்,  கொன்றவனின் முகம்  காண வின்சி வந்தாள். அப்போது சிறுமியைப்போல இருந்தாள். கட்டிய தாலியின் மஞ்சள் கூட வெளிறவில்லை. எவ்வளவு பெரிய பாவத்தை செய்து விட்டான். ஜோசப்பை சபிக்கவே வந்திருப்பாள். அன்றைக்கு ஜான் இரண்டு வயது குழந்தை.  வந்தவள் ஓரமாய் என்னருகில் நின்றாள்.  அவளுக்கு தெரிந்திருக்கும் கொன்றது என் கணவர் என்று.  ஒருவர்க்கொருவர் பரிதாபமாய் மற்றவர் நிலை கண்டு வருந்தி பார்வையை பரிமாறிக்கொண்டோம்.  ஜானின் அழுகையை கேட்டு மேலும் நெருங்கி வந்தாள், அச்சமடைந்த நான் ஒதுங்கினேன்.பின் அவளின் காலை பிடித்து கெஞ்சி அழுதேன்,  எங்களை மன்னிக்குமாறு. மாறாக அவள் ஜானை தூக்கி கொஞ்சி அவனின் அழுகையை நிப்பாட்டினாள். இன்று நான் தங்கி இருக்கும் தகரக்கொட்டாயும் அவள் ஏற்பாடு செய்ததே. பெரிய மனதுக்காரி. இன்றும் என்னோடு துணையாய் நிற்கிறாள்.  அவளின் வயதுக்கு இன்றைக்கும் இன்னொரு திருமணம் செய்துகொள்ளலாம். ஆனால் பாசியின் மேல்கொண்ட ஆத்மார்த்தமான அன்பின் காரணமாய் தவிர்க்கிறாள்.  சில நேரம் வருத்தப்படுவாள். நான் அங்கே ஒருவேளை இருந்தால் வெளிக்காட்டி கொள்ளமாட்டாள்.


செல்லும் வழியில் மாலை மங்கும் வெயிலில் குருசடியில் அன்னை மாதா முன் மனமுருகி வேண்டினாள். காலையில் வின்சியோடு வந்தவள் அவளின் அம்மாவாக இருந்திருக்கும் எனவே நினைத்திருந்தாள். வின்சியிடம் அதை பற்றி கேட்கவே,  "இல்லக்கா, அது பாசியோட அம்மா. என்ன பெத்தவங்க இல்ல.  நா ரயில்வே ஸ்டேஷன் வெளியே பூ வித்துட்டு இருந்தேன். எங்க சித்தி தான் வளத்துச்சு.பாசி என்ன எப்டி பாத்தான்,  ஏன் அவனுக்கு பிடிச்சதுனு தெரியாது. ஸ்டேஷன்ல வாடகைக்கு ஆட்டோ ஓட்டிட்டு இருந்தான். எனக்கும் முன்னாடியே தெரியும், நல்ல பையன். ஒரு நாள் எங்கிட்ட பூ வாங்கி என்கிட்டயே திரும்ப கொடுத்தான். கேட்டா லவ்னு சொன்னான்.  கொஞ்சம் அலைய விட்டு, ஒத்துக்கிட்டேன்.  நல்ல பாத்துக்கிட்டான். ஸ்டேஷன் பக்கத்துல குடிசையை மாத்தி முப்பது கிலோமீட்டர் தள்ளி இங்க வச்சாங்க. வேல இல்ல. ஏதோ வேல பாத்தான். அப்போவும் குடிப்பான். இங்க வந்ததுக்கு அப்புறம் டெய்லி ஆயிட்டு பழக்கம். சண்டை போடுவான். பின்னாடி சமாதானப்படுத்துவான். எல்லாம் சீக்கிரமே முடிஞ்சிட்டு எனக்கு இல்லையா அக்கா.  அவன் போனதுக்கு அப்புறமும் எனக்கு ஒரு சொந்தத்தை கொடுத்துட்டு தானே போயிருக்கான்" என்று சொல்லிக்கொண்டே வேகமாய் நடந்தாள். அவளும் பாரபாஸை பாசி என்றே அழைப்பாள். இது நாள் வரை பாசியை பற்றியோ அவளின் சொந்தவாழ்க்கை பற்றியோ பேசியதில்லை. இன்று ஏனோ அவளே எல்லாம் சொல்லிவிட்டாள்.


மேரி மேலும் மனம் நொடிந்தவளாய் உடைந்து போனாள். தன் பிள்ளையை கொன்றவன் பிள்ளையை, கவனித்து கொண்டு இருக்கிறாள் கிழவி. வின்சி சொல்லி இருப்பாளா?  இது யாரின் பிள்ளை என்று,  எப்படி இருந்தாலும் ஒருவேளை கிழவி பழிக்கு நிகரான செயலை செய்து இருப்பாளா?  பலவித குழப்பம் அவளை சித்திரவதை செய்தது. நடந்து கொண்டிருந்த போதும் விவிலியத்தின் வரிகளை முணுமுணுத்தபடியே இருந்தது அவளின் உதடுகள். சிலுவையின் பெயரால் நின்ற அவளின் தூயஜெபம் அவளை சாதாரணமாய் வைத்திருக்க உதவியது. அப்படி ஒன்றும் நடந்திருக்காது. அவளின் வீடு வந்தது,  மெதுவாய்  வீட்டிற்குள் நுழைந்தாள். சிறுவன் அமர்ந்திருந்தான். கொஞ்சம் தெம்பாகத்தான் தெரிந்தான். அவன் மடியில் பூனைக்குட்டி உறங்கி கொண்டிருந்தது. கிழவி அந்த அறையிலே ஓரமாய் இருந்த அடுப்பில் பாத்திரத்தில் கஞ்சி காய்ச்சி கொண்டிருந்தாள். 


"கண்ணு,  இதுல சத்துமாவு இருக்கு. டெய்லி காய்ச்சு கொடு. சாப்பிட வச்சு தூங்க வை. நா காலைல வந்தும்  பிள்ளைய பாத்துக்கிடுகேன். நீ கவலப்படாத"


"சத்து மாவு எங்க வாங்குனீங்க" கேட்டாள் மேரி.


"பால்வாடில வாங்குனேன். இவன் ஸ்கூல் பக்கத்துல தானே இருக்கு. பைசாலாம்  கிடையாது. இந்த பாக்கெட் தீந்ததும் வேற வாங்கிக்கலாம். சின்ன பசங்களுக்கு பிரீ தான் " என சொல்லியபடி அடுப்பை அனைத்து பானையை இறக்கி,  வீட்டின் வாசல் அருகே தள்ளாடி வந்தமர்ந்தாள்.


மேரி வின்சியை பார்த்தாள். வின்சி பையில் இருந்த ஹார்லிக்ஸை வெளியே எடுக்க,  வேண்டாம் என்பது போல தலை அசைத்தாள். கிழவி மேரியிடம் 'சரிம்மா நா வாரேன்" என்று விடை பெற.  மேரி கிழவியின் மடியில் சாய்ந்தாள்.  அவளின் மனதில் அடியாழத்தில் படிந்து இருந்த அழுக்கு கொஞ்சம் கொஞ்சமாய்  கரைந்து அவளின் கண்ணீராய் கிழவியின் மடி நிறைத்தது. கிழவிக்கு எந்திரிக்க மனம் வரவில்லை,  அவளின் தலையை வருடியபடி "என்ன செய்ய எல்லாம் விதி,  பொம்பளைங்க நாம என்ன செய்வோம். நீ  மனசுல எதையும் போட்டு குழப்பிக்காத.  நீயும் எம்பிள்ள தானே,  ஆண்டவருக்கு எல்லாம் தெரியும். நடந்தது எல்லாம் சாத்தான் செயலு. எந்திரிச்சி நின்னு பிள்ளையை பாத்துக்க. நா நாளைக்கு வாரேன்" என்றாள்,  விழியின் ஓரம் வடிந்த நீரை துடைத்தபடி.


வின்சியும் கிழவியும் அங்கிருந்து நகர, மேரி அங்கிருந்த  அன்னையின் புகைப்படம் முன் மண்டியிட்டு “என் ஆத்துமாவே, தேவனையே நோக்கி அமர்ந்திரு.நான் நம்புகிறது அவராலே வரும்“ என்று ஜெபித்தாள். இலகுவாக உணர்ந்தாள். ஜான் அருகிலே ஜெபமாலையை பிஞ்சு விரல்களால் திருகியபடி அம்மாவின் தலையை வருடியபடி நின்றான். பூனைக்குட்டி ஜானின் கால்களை உடலை வளைத்து வருடியபடி அங்கும் இங்கும் சென்றது. 


நான், நாய், பூனை

 





நான் சாலையில் வேகமாக நடந்துக்கொண்டிருந்தேன்.  கடந்த சிலநாட்கள் போல 'நான்' என்றால் 'நான்' மாத்திரம் அல்ல. பூனையும், நாயும் மற்றும் நானும் சாலையில் வேகமாக நடந்துக்கொண்டிருந்தோம்.  நடப்பதற்கு ஏதுவான காலநிலை, கருத்திருந்த வானம் சாரலை மட்டுமே அவ்வப்போது தெளித்துக்கொண்டு இருந்தது, முச்சூழ் மலையும் நேரடியாய் வானில் இருந்து இறங்கிய காற்றை நிலம் எங்கும் பரப்பிக்கொண்டிருந்தது. எங்கே நடக்கிறேன் என்ற பிரக்ஞை எனக்கில்லை, நாயோ அங்கும் இங்கும் வெறித்தபடி வந்துகொண்டு இருந்தது. ஒருவேளை அதற்கு பிரக்ஞை இருக்கலாம்.  இப்போதெல்லாம் நாக்கு வெளிநீட்டி எச்சில் ஒழுக நான் அனுமதிப்பதில்லை, எனவே வாய் மூடியே இருந்தது, ஆயினும் மூச்சு பலமாக வாங்கிக்கொண்டு இருந்தது. இங்கே பூனையும் இருக்கிறது, சாலையில் வேகமாய் வாகனங்கள் சீறிப்பாய்வதால் பத்திரமாய் வந்துக்கொண்டு இருந்தது. நான் என்றுமே எதிரே வருபவரை கூர்மையாய் கவனிப்பதில்லை, கடந்து போகும் காட்சிகள் மட்டுமே. உயிரற்ற பொருட்கள் மட்டுமே என் கண்களில் நுழையும். அவையும் வெறும்குப்பைகளாக இல்லாமல், விலைமதிப்பற்ற பொருட்களின் மீது பதியுமாறு,  இங்கே ஒரு பொருளின் மதிப்பு தீர்மானிக்கப்படுவது அது என்னிடம் இருக்கிறதா?  என்பதனை  பொறுத்தது. நாய் வித்தியாசமானது,  அதன் கண்கள் எந்நேரமும் நாலாபக்கமும் சுழன்று கொண்டேவரும்.  ஆனால் காட்சிகள் நினைவில் நிற்காது.  பூனைக்கு எதிலுமே நாட்டம் இல்லை. அதன் நடையை, ஆம் அதன் நடையை மாத்திரம் கவனிக்கிறது, தன்னை மட்டுமே ஆழமாக,  எவ்வளவு ஆழம் என்றால் பள்ளிகொண்டவனின் தொப்புளில் நான்முகன் தோன்றிய தாமரைத்தண்டின்  வேரினை காண விழைவதை போல. தான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும்  முதல்மாதிரி வைக்கிறது.  உண்மையிலே ஒவ்வொரு அடிக்கும் ஒரே சீரான இடைவெளி இருக்கிறது. நாய் இந்நேரம் மாத்திரம், பூனையை போல சீராக நடக்கிறது. பூனை எதையும் உற்றுநோக்காது, இருப்பினும் பதிந்தவை என்றாகியும் தெளிவாய் கண்முன் விரியும்.  ஆக நான், நாய், பூனை சாலையில் நடந்துக்கொண்டிருந்தோம், வேகமாக, இன்னும் வேகமாக. ஏன் நடக்கிறோம் எனக்கு 'அது' உடனடியாக தேவைப்படுகிறது.


எதிரே, அகண்ட பெருவெளியில் சுழலும் பந்தின் ஒருசுழற்றியின் ஈடுக்கு இணையாய் வேகமாய் பருத்த, தோள் கடந்து தொங்கும் பெரும் கூந்தல்காரர் வந்தார். அதிகம் உயரம் இல்லை என்றாலும், குள்ளம் என குறைக்கூற முடியாது.  அவரின் வேகத்திற்கு காரணமாக கரும்பரி அவரிடம் இருந்தது, கூடவே குள்ளநரி ஒன்றும். வந்தவரில் இருவர் எங்களை நோக்காது இருப்பினும், நரி கண்டுவிட்டது. என் பூனை ஒளிய முயற்சிக்க, நாய் அதற்கு முன்னே பேச்சை கொடுக்க எத்தனித்தது. நரியின் பார்வை நாயிடம் திரும்ப, பூனை ஒளிந்துக்கொள்ள தேவை ஏற்படவில்லை. எனக்கு எதிரே நின்றவரின் தோற்றம் பழைய கௌபாய் திரைப்படங்களை நினைவுக்கு கொண்டுவந்தது. நீலநிற ஜீன்ஸ் மிகவும் வெளிறி இன்னும் சிலதினங்களில் பழுப்பு நிறத்தை அடைந்துவிடும் போல, காலின் கரண்டை தொடும் பேண்டின் விளிம்பு நூல்பிரிந்து இருந்தது. கோடு போட்ட நீலமும் சிவப்பு வடிவம் சட்டையின் கசங்களை குறைத்துக்காட்டியது.  அவரில் இருந்து எழும்பிய  வியர்வை வாடை பூனைக்கு ஒவ்வாமையை கொடுத்தாலும், அதன் கண்கள் குதிரையை நோக்கியே இருந்தது. குதிரையோ இங்கே எதிரே நிற்பவர், எவரின் மீதும் பார்வையை திருப்பாது கர்வமாய் நின்றது. இன்னும் சிறிதுநேரம் இங்கே நிற்பதால் இழக்க ஏதுமில்லை என்ற எண்ணமே பூனையை நிற்க அனுமதித்தது. நாயோ எப்போது பேசலாம் என்பது போல வாயை திறந்ததால் , நானும் அமைதியாய் நின்றேன். என்னிடம் இருந்த நாயைப்போல அவரிடம் இருந்த,  நரியும் ஆசைப்படுகிறது போல, அதுவும் முன்னங்காலை உயர்த்தி ஏதோ சமிக்கை கொடுத்தது.  நாய்தான் அவரிடம் 'அது' இருப்பதை மோப்பம் பிடித்துவிட்டது,   


"டோப் இருக்கா அண்ணாச்சி", நாய் எடுத்த எடுப்பிலே நேரடியாய் விஷயத்திற்கு வந்துவிட்டது. வெளிப்படையாக கேட்டதை குதிரையும் பூனையும் விரும்பவில்லை போலும், பூனை என் காலுக்கு இடையே குலைந்து, காலிடுக்கில் நெளிந்து என்னை அதன்பக்கம் இழுக்க, குதிரை வந்தவரை கனைத்து, முன்னங்கால்களை தூக்கி, மகாபலியின் தலையை ஒரு அடியில் மிதித்த குள்ளனின் பாத பதிஅதிர்வை பரப்பியது. அவரும் நானும் எங்களிடம் இருந்த இரண்டையும் ஓரம்கட்டி, 


"டோப் இருக்கு அண்ணாச்சி, ஆளு லேகை தெரியு. அதுக்குன்னு பொசுக்குன்னு கேட்டுட்டிலே" என்றார்.


"மண்டகனம், பொறுக்கல.  வெளியே ரவுன்சு வருவோம்னு வந்தேன். நீரு எதிர நிக்கேறு. சரி வந்தது வகை, எத்தன இழுப்புக்கு அயிட்டம் இருக்கு"


"பத்து, பதினஞ்சு இழுப்பு வரும். நாம உரிஞ்சத பொறுத்து.  வச்சு இருபதும் இழுக்கலாம். ஆனா உம்ம இழுப்புக்கு அஞ்சு தாண்டுமானா சந்தேகம் தான்"


அவரின் குதிரை, ராமரின் அசுவமேத யாகத்தில் வருவது போல கர்வமாய் நின்றது. நரியும், நாயும் அசையாமல் நின்றது. பூனை, யாரின் விழிகளிலும் தன் உருவம் பதியாமல் என் காலிடுக்கில் நின்றிருந்தது. நாய் அங்கும் இங்கும் தலையை சிலுப்பி,  ஓரமாய் இறங்கியிருந்த இந்தியாவின் நீண்ட கழிப்பறையை நோக்கி கண்களை செலுத்தவும், நரியும் அதனை உணர்ந்துகொண்டு எங்களை அங்கே செல்ல நிர்ப்பந்தித்தது. உள்ளே சென்றவுடன், தண்டவாளத்தின் மறுப்பக்கம் ஆற்றை நோக்கி இறங்கும் பாதையில் ஒற்றையாய் இருந்த வேம்பின் அடியில் அமர்ந்தோம். கருக்கள் நேரம் ஆகிவிட்டது, கூட காலநிலையும் சேர்ந்து வானம் இருட்டிக்கொண்டு இருந்தது.


இருவரும் எதிரெதிரே அமர, பேண்டின் மேல்பட்டை வழியே இடுப்பின் கீழே கைவிட்டு சிறிய பொதி ஒன்றை வெளியே எடுத்தார். அவரின் சட்டைப்பாக்கெட்டில் இருந்த சிகரெட்டை என்னிடம் கொடுத்தார், நான் வேகமாக கீழே கிடந்த சிறுக்குச்சியை எடுத்து புகையிலை அனைத்தையும் வெளியே எடுத்தேன். அதற்குள் அவர், பொதியில் இருந்த இலைகளையும், விதைகளையும் உள்ளங்கையில் பெருவிரலால் அழுத்தி தேய்த்து கொடுத்தார், விதைகளை மட்டும் நீக்கி, இலைகளை தேய்த்து சிறுசிறு துகளாய் பின் அனைத்தையும் சேர்த்து பொடிபோல் ஆக்கிக்கொண்டார். நாயும் நரியும் அங்கிருந்து நகர்ந்துவிட்டது. பூனையும் குதிரையும் மட்டுமே அங்கிருக்கிறது. சிலநொடிகளில் கையில் இருந்தவற்றை சிகரெட்டில் நுழைத்து பற்றவைத்தார். பின் எனக்கும் கொடுத்தார். ஆளுக்கு ஒரு இழுப்பு வீதம் இழுத்துக்கொண்டே இருக்க, கால்கள் தரையில் மோதி, உந்தி என்னை அத்துவானவெளிக்கு அனுப்ப, என்னிடம் கனமாய் தொங்கிக்கொண்டிருந்த என் ஆன்மா நெஞ்சில் அடைத்துக்கொண்டிருந்த கூட்டை நொறுக்கி, என்னிடம் இருந்து எழும்பியது. கைகள் பலமாய் உணர, எதையும் பொருட்படுத்தாது என் உதடுகள் புன்னகையில் விரிந்தது. அதேவேளை  என்னிடம் இருந்த பூனை ஒவ்வொரு இழுப்புக்கு உருவத்தில் பெரியதாக மாறிக்கொண்டு இருந்தது. மாறாக குதிரை உருவம் சிறுத்துக்கொண்டே வந்தது. ஒரு கட்டத்தில் இரண்டும் ஒரே உருவத்தில் இருந்தது.


நான்  "எங்கயோ போய்ட்டு இருந்தீரு. நான்தான் இங்க திருப்பிட்டேனோ". 


அவர்  "எங்க போக. எங்க போனாலும் ஏத்தமும் இறக்கமும் உண்டுலா அண்ணாச்சி."


"அது சரிதான், ஏறும்போது பைய போறோம், இறங்கும் போதும் ஓட்டமாலா இருக்கு. ஆனா கடைசி  ஓட்டம் நின்னுதானே ஆகணும்"


"சரியா சொன்னீரு, ஆளு இளசுட்டேரே, உடம்புக்கு ஏதும் சோமில்லையா"


"அதுலாம் ஒன்னும் இல்லை" எனக்குள்ளே கேட்டுக்கொண்டேன் என் நிலை அவ்வளவு பரிதாபகரமான தோற்றத்திலா இருக்கிறது. நினைத்துக்கொண்டே தாடையில் கை வைக்க அது கழுத்தை தாண்டி முள்முள்ளாய் நீண்டு நிற்கும் தாடியை ஒதுக்கி கன்னத்தை தொட்டது, கடந்து போய்க்கொண்டே இருக்கிறேன். எல்லாமுமே, பகற்கனவு போல உறுத்தினாலும் என்னுடைய நிலைக்கு யாரும் பழியேற்க முடியாது. நானே வருத்தி ஏற்றுக்கொண்டது. ஆயினும் சிலகேள்விகள் நிலைகுலைய செய்யுமல்லவா, 


"சாப்பாட்டுக்கே வழி இல்லையோ"


இக்கேள்வி மேலும் ஆத்திரத்தை பெருக்குகிறது. இருப்பினும் மென்மையாக பதில் அளித்தேன். காரணம் 'அது'. 


 "சோத்துக்கு நிறைய வழி இருக்கு. டெய்லி நாராஜா கோயில்ல மதியம் சாப்பாடு. பஸ் ஸ்டாண்ட்ல ஒரு மணி நேரம் நின்னேனா நூறு ரூவா தேத்திரலாம்."


ஆற்றங்கரையின் ஓரமாய் நின்ற தென்னம்பிள்ளைகள் காற்றில் அசைந்து இன்பமான ஒலியை பரப்பிக்கொண்டு இருந்தது. உள்ளே சென்ற 'டோப்' இறகை போல மனதை மெலிதாக்க, இனி நடப்பவை எல்லாம் எளிதாக முடியும் என்பது போலவிருந்தது.  இந்த நாயும், பூனையும் சிலநாட்களாக என்னிடம் தொற்றிக்கொண்டது. வந்த புதிதில் யாரிடமும் இவை உங்கள் பார்வைக்குள் விழுகிறதா?  எனக்கேட்க வசைகள் தான் பதிலாய் வந்தது.  சரி, அவரோடு வந்த குதிரையும், நரியும் எனக்கு மட்டுமே தெரிந்திருக்கும், அவரே அறிந்திருக்க வாய்ப்பில்லை என்று எண்ணிக்கொண்டேன்.


"வேற காரியம் என்ன" என்றார் வேம்பில் உடலை  சாய்த்தபடி அவர், வேம்பின் அருகே பாறாங்கல் ஒன்று கிடந்தது. ஒருவன் தூக்குமளவுக்கு எடை இருக்கும். என் கண்கள் அதை சட்டென நோக்கியது. பின், மீண்டும் அவரிடம், 


"காரியம் ஒன்னும் இல்லவோய்.  சட்டுனு திரும்பாதையும். பின்ன ஆத்துக்கு அந்தப்புரம் பாரும். ஒரு கருத்த குண்டன், முறுக்கு மீசைக்காரன், எருமை கூட நிக்கானா"


அவர், தலையை திருப்பி ஆற்றின் மறுப்பக்கம் கண்களை சுழற்றினார்.  அங்கே எருமைக்கூட்டம் போய்க்கொண்டு இருந்தது. அருகே இவர் சொன்ன லேகையில் ஆள் யாரும் நிற்பதாய் தெரியவில்லை. 'எவன் நின்னா நமக்கென்ன, இழுத்தாச்சு போவோம்' என மனதிற்குள் நினைத்துக்கொண்டே, 


"நாலஞ்சு எரும தான் நிக்கு அண்ணாச்சி, நா கிளம்புறேன்.இன்னொரு நாளைக்கி பாப்போம்" என்றார்.


"கொஞ்சம் இருவோய். சொல்லத கேளு." ஆக, குண்டனும் எனக்கு மட்டுமே தெரிகிறார்கள்.


நான், பேசிக்கொண்டு இருக்கும் போதே, அவர் எழுந்து இங்கிருந்து நகர ஆரம்பித்தார். உருவத்தில் பெரிதான பூனை, புலி போல நின்றிருந்தது. சட்டென, உறுமி அவர் சட்டை காலரை பிடித்து கண்களால் அமரச்செய்தது. பூனை, இல்லையில்லை இப்போது புலி. தேவைப்படும் நேரம் மாத்திரம் காரியத்தை செய்யும்.


உடனே, 'சல்ல எடவாடுகிட்டலா மாட்டிகிட்டேன்' என எண்ணிக்கொண்டே எரிச்சலோடு அமர்ந்தார், ஆமாம் அவர் உதடுகள் முனங்குவது எனக்கு தெரிகிறது. ஆனால், இவரை இங்கே அமர்த்தியாக வேண்டும்


 

"நாலஞ்சு வாரம் இருக்கும், ஒரு நாலு ஆராம்பலி போயிருந்தேன். அங்க நம்ம கூட்டு உண்டு. தெக்கூறுல வடக்கால போனா ஒரு பெரிய குளம் வரும். பக்கத்துல பழைய இடுகாடு உண்டு. குளம் உமக்கு தெரியும், இடுகாடு தெரிய வாய்ப்பில்லை." அமர்ந்திருந்தவர் என்னை கவனிக்கிறாரா என்பதை புலி அடிக்கடி உறுதிப்படுத்திக்கொண்டது.


"ஆராம்பலி பழைய நாஞ்சில் நாட்டு வாசலு அப்போ, அங்க ஒரு பிள்ளைமாரு திருவாங்கூருக்கு சிங்கி போட்டு, காவலுக்கு நிக்கேனு உத்தரவு வாங்கிருக்காரு. காவலுக்கு ஆள வச்சுக்கிட்டு, ராசட்ட இருந்து வாராத பாதி ஆட்டைய போட்டுட்டு மீதி காவக்காரனுக்கு போகும்.  ஆளுக்கு வயசு உண்டு, ரெண்டு மூணு பொண்டாட்டி. சாராயம் கீராயம் எந்த பழக்கமும் கிடையாது. ஆனா பாத்துக்கிடுங்க பிள்ளைக்கு அவருக்கு பொறவு வாரிசு இல்லை" சற்று அமைதியானேன்.  தூரத்தில் இன்னும் எருமையோடு குண்டன் நிற்பது தெரிந்தது.


"சரி உமக்கு கல்யாணம் ஆகலையே" அவரிடம் கேட்டேன்.


"யோவ், நா இப்போ உள்ள பயக்க சொல்லுகாம்ல நைன்டீஸ் கிட்டுனு. அத மாதிரி"


"அப்போ வயசு முப்பதா உமக்கு கத அடிக்காதையும்" என்றேன் சிரித்தபடி. 


"இல்லவோய், அது நாப்பது ஆகு. இன்னும் கல்யாணம் ஆகலைன்னு சொல்றேன்"


"சரி, கதையை பாதில விட்டுட்டேன். அவருக்கு பிள்ள இல்லையா. வயசு ஆகியும் அரிப்பு நிக்கல. அப்போ கிழக்கே இருந்து பஞ்சம் பிழைக்க இங்க ஆட்காரு வருவா.  அதுல கிளி மாதிரி இருக்கிற பிள்ளைகள தூக்கிருவாரு. பிள்ளையும் இல்லை, அரிப்பும் நிக்கல. கண்டவள்ட்டயும் அவரு குட்டி வளரதுல பிடித்தக்குறவு. நல்ல ஓத்துட்டு வெளிய சொல்லலைனா விட்ருவாரு. இல்ல நா சொன்னமலா குளம், அதுக்கு மறுகரைல பொதச்சருவாரு"


"சண்டாள பாவியாலா இருக்கான், இந்த வெள்ளாள பயக்களே இப்படித்தான். நான்லாம் அரிப்பு எடுத்தா போய் கைல பிடிச்சுட்டு வந்துருவேன். கதம் கதம்" என்று மேலே கதை கேட்க ஆர்வமாய் இருந்தார். புலியும், அவரிடம் இருந்த குதிரை இல்லை சிறுத்துப்போய் இப்போது கழுதையும் அமைதியாய் நின்றது. நாயும் நரியும் எங்கு சென்றதோ இன்னும் காணவில்லை. 


"அப்புறம் என்னாச்சு,  ஆளு கொஞ்ச நாளுல மெலிஞ்சி போய், பொன்டாட்டிலாம் வேற யாருகூடயோ போய், ஒருநாள் அவரு வீட்டு பக்கமா போனவன் பொண நாத்தம் அடிக்க உள்ள போய் பாத்திருக்கான் ஆளு செத்து அஞ்சு ஆறு நாலு ஆயிருக்கும்.  இவரு சங்கதி ஊருக்கு தெரியுமே.  பயக்க வீட்டோட சவத்தை போட்டு எரிச்சுட்டானுங்க. வீடு இப்போவும் பாக்கலாம் இடிஞ்சு போய் கிடக்கும்"


"ஆளுக்கு வந்தது எய்ட்ஸா இருக்கும். அப்போ உள்ள ஆட்காருக்கு இதுலாம் தெரியாதுலா. "


"ஆமா, என்ன எழவோ. பின்ன அவரு செத்து கொஞ்ச நாலு கழிச்சு. இன்னொருத்தன் குளத்துக்கு மறுகரைல நிலம் வாங்கி மாங்கா போட்ருக்கான். எழவு அவ்வளவு கசப்பு மாங்கா, நாரு  நாரா சவுரி மாங்கா. உரம் கிரம் போட்ருக்கான். ஒன்னும் எடுபடல. அப்புறம் மேற்கே ஒரு மந்திரவாதியை பிடிச்சு, சொக்கரான் எவனோ செய்வினை வச்சுட்டானான்னு பூச போட்ருக்கான். தோப்பு முழுக்க இசக்கி நிக்கா. எல்லாம் அந்த பிள்ளைமாரு ஓத்த பொம்பள. "


"யோவ், இருட்டிட்டு வேற வருகு. நாம இருக்கிற இடமும் சரியில்ல. நீ வேற இசக்கி மயிறுனு பயம் காட்டாதவோய். "


"மோண்டுராதா.  நா சொன்னேன்ல நாலஞ்சு வாரதுக்கு முன்னாடி போனேன்னு. அப்போதான் ஒரு பய இந்த கதையை சொன்னான். அந்த பிள்ளைமாரு பணமா எதையும் சேக்கலையாம், எல்லாம் பவுனு.  சாவதுக்கு முன்னாடி எங்கயோ பொதச்சருக்காரு. "


"எல்லாத்தயுமா பொதச்சு வச்சுட்டாரா"


"ஆமா, நம்ம பய ஒருத்தன் சொல்லித்தான் நா அரிஞ்சது.  ஆராம்பலி நம்ம ஜில்லாவுக்கே டோப்க்கு நடுசென்டரு, அங்கேர்ந்துதான் மொத்த சப்ளை. டோப் வாங்க போய் ரகசியம்லா கிடச்சருக்கு. "


"அதுக்குன்னு வீட்லயும், குளத்துலயும், இடுக்காட்டுலயும் போய் தோண்டுவீரா. வேற வேலைய பாரும். நேரமாச்சு நா போனும்"


"இருக்கு, குலசேகரத்துல ஒரு மந்திரவாதியா பார்த்தேன். பவுனு இருக்கது இசக்கிக்கு தெரியும். அத சாந்திபடுத்தினா ரகசியம் தெரியும்"


"இந்த காலத்துலயும் நீரு இதுலாம் நம்புகீரே. இதுலாம் பிராடு, காச சீரழிக்காதேயும். மந்திரவாதி பயக்க இப்படித்தான் அலையான் ஊருக்குள்ள"


"அப்போ, இசக்கினு நா சொன்னதுக்கு எதுக்குவே அரண்டேயீரு. எல்லாம் நிசம், நாம கண்டுக்காம போற வர ஒன்னும் புரியாது.  நின்னு கவனிச்சா எல்லாம் கண்ணு முன்னாடி வந்து போகும். நீ இருக்க வேப்பமரத்துலே ஒரு இசக்கி உண்டு. சின்னதுல இந்தப்பக்கம் ஒரு பய வெளிக்கி இருக்க வரமாட்டோம். நா அப்போவே சீம,  ஒருநாள் வந்துட்டு அதுவும் கருக்கள் நேரத்துல, இங்க வெளிக்கி இருந்துட்டு போறேன். கொஞ்சம் நடந்திருப்பேன். ஓங்கி ஒரு அடி குறுக்குள்ள, எடுத்தேன் வீட்டுக்கு ஓட்டம். நமக்கு நடந்தா அது நிசம், அடுத்தவனுக்கு நடந்தா அது பிராடு. " நான் சொல்லிமுடிப்பதற்குள் அவர் எழுந்துவிட்டார். அவர் முகத்தில் பயம் அப்பியிருந்தது. பேண்ட் பாக்கெட்டில் கைவிட்டு இன்னொரு பொட்டலத்தை வெளியே எடுத்தார். நான் எதிர்ப்பார்க்கவில்லை இன்னொரு டோப் பொட்டலம்.  நான் சிரிக்க, அவர் "நயிட்க்கு வச்சுருக்கேன். கிளாரா இருக்கு. சிரிக்காதையும் வாரும் இழுப்போம்".


அவரே, எல்லாவற்றையும் செய்தார். அவரிடம் சிகரெட் இல்லை, கையில் இருந்த பீடியிலே முன்பு போல தேய்த்து சுருட்டி ஆளுக்கு இழுக்க ஆரம்பித்தோம். இப்போது கருத்த குண்டன் இன்னும் அருகே, அவர் தலைமாட்டில் நின்றிருந்தான். புலி முன்பக்க கால்களை நீட்டி பாய்வது போலவிருந்தது.  கழுதை படுத்தேவிட்டது.


"ஏதோ மந்திரவாதி வழி இருக்குன்னு சொன்னானே, என்னது"


"இசக்கிய சாந்திபடுத்த நட்டசாம பூச பண்ணனும். இளங்கிடா, சேவலை அறுக்கனும். வேற மை ஒன்னும் கேட்டாரு"


"கண்ணுக்கு வைக்கிற மையா"


"இல்லையா, உமக்கு தெரியுமா.  குடுகுடுப்பைக்காரன் பச்சைபிள்ளைக செத்தா நைட் சுடுகாட்டுல கிடையா கிடப்பான்.  எதுக்கு தெரியுமா. பொணம் எரிக்கும் போது,  மெதுவா அதுக்க மூளையை மட்டும் எடுத்து வச்சுப்பான். அதுல செய்ற மைக்கு முன்னாடி பேய்க ஒன்னும் பிடுங்க முடியாது"


"சரி, இதுவும் அதே மாதிரி மையா"


"ஏறத்தாழ ஒரேமாரிதான். ஆனா, இவாளுக்கு சக்தி அதிகம், எல்லாமே மோசமான சாவு, தலைநசுங்கி, எரிச்சு கொன்றுக்காண் சண்டாளப்பய. சக்தி அதிகம். அதுக முன்னாடி நிக்கும் போது, நம்மள அடிச்சர கூடாது. அதுக்கு தான் மை தேவ,  அப்புறம் தான் அதுக தேவைய கேட்டு செய்யமுடியும். இசக்கி அடிக்காம நிக்க கன்னி கழியாத ஆம்பள மை வேணும். அதுவும் அஞ்சு ஆம்பளையோடது வேணும்"


"அப்போ, நீரும் இனி சுடுகாட்டுலே கிடையா கிடக்க போறியா" என்று கூறியபடியே சிரித்தார். 


நான் எழுந்து நின்றேன். அவர் பார்வையை எங்கோ திருப்பி இருந்தார்.  நான் நகர்ந்து பாரங்கல்லுக்கு அருகே குனிந்தேன். 


"கன்னி கழியாத அஞ்சு பொணத்துக்கு எங்க போவீரு. வருஷம் ஆகும். அதுக்குள்ளே இசக்கியே போயிருவா"


நான் நிதானமாய் "இனி நாலுதான் தேவ" என்றபடி கல்லை அவர் தலையில் போட்டேன். புலியின் வாயில் கழுதையின் கழுத்து இருந்தது. எங்கோ சென்ற நாய்,  ஓநாய் போல திரும்பிவந்தது. அதன் வாய் சிவந்த இரத்தம் படிந்து இருந்தது. கருத்த குண்டனும் அங்கிருந்து நகர, தேவையான 'அதை' எடுத்துக்கொண்டு நானும், புலியும், ஓநாயும் சாலையில் ஏறி வேகமாக நடக்க ஆரம்பித்தோம். ஆம், இன்னும் வேகமாக, எனக்கு 'அது' வேண்டும். 







இணைந்த கைகள்

  ஒரு மாலைநேரம், புதிய திரைப்படம். திங்கள் கிழமை,  மாலை நேரக்காட்சி,  இணைந்த கைகள்.  நிதானியுங்கள், அதே நேரம் உங்கள் மனைவி, அரசு மருத்துவமனை...