Friday 21 August 2020

ராம்

 



வானிற்கும் மண்ணிற்கும் இடையே இவ்வெளி பலயுகங்களாக மிதந்துக்கொண்டிருக்கிறது. என்ன ஆச்சரியம்? மணிக்கணக்கில், நாட்களில், வாரங்களில் வயிறை தடவியபடி படுத்திருப்பேன், அப்பொழுதெல்லாம் விரல்கள் நண்டின் கொடுக்குகளை போல வயிற்றின் மேலே ஆயும், நிலவையோ, நட்சத்திரத்தையோ வெறித்து பார்த்தபடி பலமணிநேரம் உமிழ்நீரை விழுங்கியபடி இருந்திருக்கிறேன். நிலக்கரியை அள்ள அள்ள தின்று எரியும் பெரும் அடுப்பினை போல பசி தீயாக எரிந்துகொண்டிருக்கும். நா வறண்டு கண்கள் அயர்ந்திருப்பினும், நிலவின் அருகே கண்களை அலைபாயவிட்டிருப்பேன். எத்தனை குளிர்ச்சியானது. இவ்வெளியை கடந்து தானே விழியின் ஒளி சென்றிருக்கும். ஆனாலும் இதன் இருப்பையோ, ஊஞ்சலை போல முன்னும் பின்னும் நகருவதை நான் கவனிக்கவில்லையோ, உண்மையிலே ஆச்சரியம் தான். எங்கே தவறவிட்டேன்! எப்படி தவறவிட்டேன். விடை தேடி அலைவதில் பயனில்லை. சரி, எங்கே ராம்? அவனும் இதை கடந்திருக்க வேண்டும். அவனுக்கு முன்னே நான் வந்து விட்டேனா? இல்லை அவன் வருகைக்காக காத்திருக்கிறேனா? கட்டாயம் அவன் வந்திருப்பான், இல்லை வருவான். ஒருவேளை இனிதான் வரவேண்டும் எனில், அவனுக்காக காத்திருப்பதில் மகிழ்ச்சிதான். ஆம் அவனின் சிறிய பாதங்களை கண்டு எத்தனை நாள் ஆகிறது, கொஞ்சம் பேசவும் செய்கிறான் என பாலா கூறியது நினைவில் வந்தது. என்னை போலவே இருக்கிறானாம், இதனைக்கூறும் வேளையெல்லாம் அவ்வளவு வெட்கம் அவள் குரலிலே தெறிக்கும் , முகம் எப்படி ஒளிரும் இத்தருணத்தில். எவ்வளவு இழப்பு, நான் தானே இழக்கிறேன். யாருக்காக எல்லாமே என் பாலாவிற்க்காக, துர்கா, சரஸ்வதி, லெட்சுமிக்காக மூன்று சக்திகளுக்கு அப்பா நான். கடைசியில் ராம், அயோத்திக்கு அவனை கூட்டிச்செல்ல வேண்டும், ராமஜென்ம பூமியில் என் குட்டி ராமின் பாதங்கள் படவேண்டும்.

சொர்க்கம் எங்கோ! வானத்திலோ! இல்லை. வயிறார உணவும், வீட்டிற்கு அனுப்புவதற்கு சிறிது பணமும்

கிடைக்கும் இடங்கள் எல்லாமே சொர்க்கம் தானே. உறக்கமும் தானாக வருகிறது, வயிறு நிறைந்துவிட்டால் தூங்கிவிடலாமே, மனம் கனமின்றி இலகுவாக இருந்தது. ராமிற்கு ஒரு நடைவண்டி வாங்கி கொடுக்கவேண்டும். இங்கே, கடைத்தெரு சென்று வரும்வழியில் குழந்தை ஒன்று நடைவண்டியோடு நடை பயின்றுகொண்டிருந்தது. நேரம் அறியாது அங்கே நின்றபடி என் மொழியால் அவனை உற்சாகப்படுத்தினேன். அப்பா அடிக்கடி சொல்வதுண்டு ஒரு காரியத்தை செய்துமுடிக்க ஒரு நான்கு நல்லவார்த்தை வேண்டும் என்று, நானும் ஏதோ மிதப்பில் கைதட்டி அவனை குதூகலப்படுத்த நினைக்க, குழந்தை அழுதபடி ஓடிவிட்டது, தவழ்ந்தபடியே. வந்தவர்களில் சிலரின் கண்கள் சிவந்தபடியும், நாக்கு உதடுகளினுள் மடிந்தபடியும் இருந்தது. நகர்ந்து விட்டேன், உள்ளத்தின் அத்தனை அடுக்குகளிலும் ராமின் சிரித்த முகமே நிறைந்திருக்கும். நானும் குழந்தையாக இருந்தேன். ராமும் அப்பாவாக மாறுவான். தலைகீழாக மாறும் நிலை உண்டு. ஆனால் ராமை நான் அப்பாவாக கவனிக்கிறேன். அவனின் முதல் அடியை கொண்டாடுகிறேன். இதில் பிழை இல்லையே, ஆனால் நான் அவனோடு இருந்திருக்க வேண்டும்.

தமிழ் பேசும் இப்பிரதேசம் என்னை இழிவாக பார்ப்பது போல தோன்றும், எங்கோ இருந்து வந்தவன் இவன் என்பது போல, நாங்களும் உங்கள் தூரத்துச்சகோதரர்கள் என கூவத்தோன்றும். யாருக்கும் இதில் பலனில்லையே, சதுரங்கத்தில் காய்கள் போல நீங்களும், நாங்களும் எதிரெதிரே, நகர்த்தும் அரசியல் நமக்கு புரிவதில்லை. ஆனால் எனக்கு இப்பிரதேசம் முக்கியமானது, ஆம் இங்கே நான் மூன்று வேளை உண்கிறேன், என் குடும்பமும். மகள்களில் மூத்தவள் அவள் அம்மாவிற்கு உதவியாக இருக்கிறாள். மற்ற இருவரும் பள்ளிக்கு செல்கிறார்கள், இலவசக்கல்வி. இங்கே பெண்களின் நிலை உயர்வாக உள்ளது. எங்கள் பிரதேசம் அப்படியில்லை, ராமிற்கு இதையெல்லாம் நான் சொல்ல ஆசைப்பட்டேன். அவனிற்கு எல்லாமே கிடைக்கிறது, அதற்காகத்தான் நான் இருக்கிறேனே. அவன் பிறந்து மூன்று மாதங்கள் கழித்தே அவனைக்காண நேர்ந்தது. சிவந்த மலரை போலவிருந்தான். என் கண்களில் இருந்து வடிந்த நீர் அவன் பாதங்களில் பட்டதும், அவன் சிரித்தான். என் சக்திகள் என்னை சுற்றிக்கொண்டு நின்றனர். ஒரு வாரம் தான் அங்கே தங்கமுடிந்தது. மகிழ்ச்சியான நாட்கள், எட்டு மாதங்கள் கடந்துவிட்டது. அதற்குப்பின் இங்கே திரும்பிவிட்டேன். சிலநேரம் நடப்பவை கனவுகள் போல மறுபடியும் கிடைப்பதில்லை. ராமுடன் அங்கிருந்த நாட்கள் அப்படியானவை.

எனக்கு சொந்தமாக நிலம் இருந்தது. அங்கே உருளை விதைப்போம். போதுமான எல்லாம் கிடைத்தது, இரவுகள் இனிமையாக கடந்தது, உறங்க நான் பிரயாசை பட்டதில்லை, அதன் பிறகு இப்போதுதான் நான் கண்களை மூடியவுடன் உறங்குகிறேன். ஒரு பெரிய தொழில்நிறுவனத்திற்காக என் நிலம் அற்பக்காசுக்கு வாங்கப்பட்டது. அதன் பின் நெடுநாட்கள் வெறும் ரொட்டியோடு நாட்கள் கழிந்தன. பின் எப்படியோ இங்கே வரநேர்ந்தது. அதன்பின், என் வீட்டில் மூன்று வேளையும் உணவு உண்கிறார்கள். பாலா பசுமாடு வாங்கியிருக்கிறாள் கடந்த மாதம் கூறினாள். கடனாக வாங்கிய பணம் மூலம்தான், நான் இம்மாதம் முதல் கூடுதலாக இரண்டு மணிநேரம் வேலை செய்கிறேன். அப்படியானால் குறைந்த நாட்களில் கடனை திருப்பிக்கட்டி விடலாம்.

முதலில் ஒரு சிறிய நகரத்தில் கட்டிடப்பணி, அங்கே பெரும்பாலும் பெரிய மீசைகொண்ட மனிதர்கள் தான். விறைப்பான முகம் கொண்ட மேஸ்திரி எனக்கு, ஆனால் கனிவானவர். சனிக்கிழமை எங்களுடன் அமர்ந்தே மது அருந்துவார், எங்களுக்கு வாங்கிக்கொடுப்பதை சம்பளத்தில் பிடித்துக்கொள்வார். உணவு மூன்று வேளையும் இலவசம், இரவு ரொட்டியும் சப்ஜியும் நாங்கள் சமைத்துக்கொள்வோம். என்னோடு எங்கள் பிரதேசத்தை சார்ந்த இருபது பேர் இங்கே வந்திருந்தோம். நாங்கள் கட்டியது ஒரு ஆறு மாடி வணிக வளாகம். இரண்டு வருடம் அங்கே இருந்தேன். அப்போதுதான் லெட்சுமி பிறந்தாள். பின் இங்கே தலைநகரத்திற்கு வந்துவிட்டோம். பதினெட்டு மாடி அடுக்கு குடியிருப்புகள். தொடர்ச்சியாக கட்டிக்கொண்டிருந்த பெரும் நிறுவனம் ஒன்றில் ஒப்பந்த அடிப்படையில் வேலை. இன்னும் பத்து வருடம் கவலையில்லை என்னுடன் சித்தாள் வேலை பார்க்கும் கௌரி கூறினாள். பாலா நெடுநாளாக நச்சரித்தாள் பசுமாடு வாங்க, எல்லாம் கணக்கில் கொண்டு வாங்க சொல்லிவிட்டேன் கடந்த மாதம் வாங்கிவிட்டாளாம்.

ஒரு சனிக்கிழமை மது அருந்தும்போது லாலு கூறினான், காலரா மலேரியா போல ஒரு நோய் பரவுகிறதாம். வெளிநாட்டில் இருந்து விமானத்தில் வருபவர்கள் மூலமாக பரவுகிறது என. அதன்பிறகு ஒரு வாரம் இருக்கும், எங்களை தங்கிய அறைக்கே திருப்பி அனுப்பி விட்டார்கள். ஒரு இரண்டு வாரம் எங்குமே, யாருமே வெளிவரக்கூடாது என்று. பாலாவிடம் விசாரித்தேன், அங்கே பிரச்னை எதுவுமில்லை கவனமாக இருக்கச்சொன்னாள். ராமிற்கு காய்ச்சல் என்றாள். நான் என்னிடம் இருந்த கடைசி பணத்தையும் அவளுக்கு அனுப்பிவிட்டேன். உணவிற்கு ஒரு வாரம் கவலையில்லை, மூன்று வேளையும் கிடைத்து. பின் இரண்டு வேளை என குறைந்துவிட்டது. தூக்கத்தை, பசியை என்னால் தடைபோட இயலவில்லை. அப்போதெல்லாம் விட்டத்தில் படுத்தபடி நட்சத்திரங்களை எண்ணுவேன். அதே நட்சத்திரங்கள், அதே எண்ணிக்கை போல எனக்கும் அதே பசி. கூடவே ராமை, பாலாவை, சக்தியை பற்றிய நினைவுகள். தூக்கம் இல்லாமல் போக நினைவுகளும் காரணம்.

தினமும் பாலாவிடம் இருந்து அழைப்பு வரும், ராமை பற்றியே பேச்சுக்கள் இருக்கும். காய்ச்சல் இன்னும் குறைந்தபாடில்லை. கையில் காசுமில்லை, போக்குவரத்து எங்குமே இல்லை. நான் ராமபிரானிடம் வேண்டிக்கொள்வேன். அவன் வாடியிருப்பான், ராமபிரானின் ஆட்சி நடக்கிறது என அரசாங்கமே சொல்லிவிட்டது. அயோத்தியில் பசியில் மக்கள் வாழ்ந்தார்களா? தெரியவில்லை ஆனால் நாங்கள் பசியால் வாடுகிறோம். பொய்யாகி விடாதா? நடந்ததெல்லாம். அங்கே, எல்லாருமே பெண்கள் என்ன செய்வார்கள். நான் அங்கிருந்தால் பேருதவியாக இருக்கும். ஆனால் இங்கிருந்து செல்ல வழியே இல்லை. நடந்துதான் போகவேண்டும். ஏற்கனவே சிலர் நடந்து செல்கிறார்கள் என்று கௌரி செய்தியில் பார்த்தாளாம் கூறினாள்.

ராமிற்கு காய்ச்சல் குறைந்தபாடில்லை. அவனை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்கள். எனக்கு மூச்சு அதிகமாக வாங்கியது. உணவும் நேரத்திற்கு கிடைத்தபாடில்லை. நோய் பெரிதாக பரவுகிறதாம், செய்தியை கௌரி அடிக்கடி சொல்லிக்கொண்டே இருந்தாள். கௌரி அழகான பெங்காலி பெண். அவளுக்கு குழந்தைகள் இல்லை, கணவன் எங்கோ வேறிடத்தில் வேலை பார்க்கிறான். அவனை நான் பார்த்திருக்கிறேன். மாதம் இருமுறை இங்கே வருவான். அவனின் முகம் வெண்மையான பாலின் நிறத்தில் இருக்கும். அன்றைய இரவு கௌரியும், அவனும் தூரமாய் சென்று விடுவார்கள். இங்கே நாங்கள் குலாவவா இயலும். அன்றைய நாள் பாலாவின் நினைவில் சுயமைதுனம் செய்வேன். அவ்வளவே என்னால் முடியும்.

பாலா அன்று மிகவும் அழுதாள். மிகவும் பலவீனமாக அவளின் குரல் இருந்தது, மூத்தவள் துர்கா தைரியமாக பேசினாலும், முடிந்தால் இங்கே வாருங்கள் அப்பா எங்களுக்கு தைரியமாக இருக்கும் என்றபடியே முடித்தாள். நடந்தாலும் பத்து நாட்களுக்கு மேல் ஆகும், லாலு ஒரு மிதிவண்டி ஏற்பாடு செய்தான். கூடவிருந்த மற்ற நண்பர்கள் உணவு கொஞ்சம், பணம் கொஞ்சம் கொடுத்தார்கள். ராமிற்காக என் கால்கள் சைக்கிளை மிதித்தது. தார்சாலைகள் கம்பீரமாக இருந்தது. வெயில் கொதித்தது. எங்குமே நிழலை காணமுடியவில்லை. மரங்கள் முடிந்தவரை அரசாங்கத்தால் வெட்டப்பட்டு இருந்தது. தண்ணீர் ஆங்காங்கே கிடைத்தது. சிலநேரம் பிஸ்கட், பன் கொடுப்பவருடன் நான் புகைப்படம் எடுக்க வேண்டும், அது மட்டுமே நிர்பந்தம்.

பல பிரதேசங்கள், விதவிதமான மொழி உச்சரிப்பு. கடுமையான அனல் காற்றோடு கூடிய வெயில் வாட்டியது. கிடைத்த இடத்தில் உணவு, இரண்டு நாட்கள் கடந்துவிட்டது. சைக்கிள் சிலநேரம் ஓடியபடியே இருக்கும் என் பிரக்ஞையின்றி, நினைவெல்லாம் ராம் சிரித்தபடி விளையாடி கொண்டிருப்பான். அவனுக்கு கண்ணிற்கு கீழே சிறிய மச்சம் இருக்கும், என் அப்பாவை போலவே. எப்படி இருப்பானோ, காய்ச்சல். அவன் சிறிய உடல் தாங்குமா? பாலா எப்படி சமாளிக்கிறாளோ! தினமும் மூன்றுவேளை அழைப்பாள். காய்ச்சல் குறையும், அவனை தூக்கி கொஞ்ச வேண்டும். இரவுகளில் கிடைத்தவிடத்தில் தூக்கம், கண்கள் மூடியபடி படுத்திருப்பேன். உறங்க முடியாது. உடல் அயற்சியால் ஓய்வெடுக்கவே படுத்திருப்பேன். கனவுகளில் சாலை அரக்கனை போல என்னை வாரி விழுங்கும். நான் விழும்போதெல்லாம், குழந்தையின் கைகள் என்னை தாங்கும், பாலாவின் உடல் வாசனை நாசியை துளைக்கும். ராம் தவழ்ந்து , ஒரு கட்டிலின் அடியில் நுழைவான். சாலை என்னை பிரட்டிபோடும் நான் எழுந்து, கட்டிலுக்கு அடியே தலையை நுழைப்பேன். கட்டில் என் தலையை அழுத்தும், நான் விழிப்பேன்.

அன்றைய நாள் மிகவும் உற்சாகமாக விடிந்தது. நான் இரண்டு நாட்களில் வெகுதூரம் வந்துவிட்டேன். கோதாவரியை நெருங்கி விட்டேன். நதியெல்லாம் அன்னையை போல, இப்போது அதன் மேல் எழுப்பிய பாலத்தில் நின்றுகொண்டிருந்தேன். நின்றபடி அதனை வணங்கினேன். மனிதர்கள் குறைவாகவே கண்ணில்பட்டார்கள். வெயில் தாழ்ந்துகொண்டிருந்தது. கதிரவனின் ஒளி தங்கம் போல நீரில் மின்னியது. பசி இப்போதெல்லாம் பெரிதாக வாட்டுவதில்லை. பாலாவின் அழைப்பு வந்தது. ராமபிரானை வேண்டிக்கொண்டே பேச ஆரம்பித்தேன். பேசியது துர்கா, தடுமாற்றமாக பேசினாள், வார்த்தைகள் சரியாக இல்லை. பதட்டத்தில் இருப்பது போலவிருந்தது. பாலா மயக்கமாக இருக்கிறாளாம். ராம் மூச்சின்றி இருக்கிறான். மருத்துவர்கள் எதுவுமே கூறவில்லை, எடுத்துவிட்டு செல்ல கூறிவிட்டாராம்.

கால்கள் நடுங்கி, கைகள் உதறியது. வார்த்தைகள் எழவில்லை. தேற்றக்கூட யாருமில்லை. நான் அமர்ந்துவிட்டேன். அழைப்பை துண்டிக்கவில்லை. ராமின் சிரிப்பு காதில் ஒலித்துக்கொண்டே இருந்தது. இருட்டிக்கொண்டு வந்தது. நான் அழுதுகொண்டே இருந்தேன். யாரென்று தெரியவில்லை, ஒரு வயதான பிராமணர் தோள்களை அழுத்தி புரியாத மொழியில் பேசினார். நான் அவர் கைகளை பற்றிக்கொண்டேன். சிலநேரம் என்னோடு அமர்ந்தார். பின் தோள்களை தட்டிக்கொடுத்து அங்கிருந்து சென்றார். அவரின் பாதங்களின் தடத்தை கண்டேன், அது மின்னியது.

நான் சைக்கிளை மிதிக்க ஆரம்பித்தேன். இரண்டு நாட்கள் கடந்துவிட்டது. கையில் பணமும் இல்லை. நான் நேற்றில் இருந்து எதுவுமே சாப்பிடவில்லை. பாலாவிடம் இருந்து அழைப்பும் இல்லை. இரண்டு தடவை அவளின் அண்ணன் அழைத்தார். எல்லாமே அவர்மூலம் முடிந்துவிட்டது. வேகமாக சைக்கிளில் சென்றேன். ஓய்வே இல்லை, மனம் என்னிடம் கட்டுப்படவில்லை. ராமின் கடைசி முகமும் காணக்கிடைக்கா பாவியாக உணர்ந்தேன். அது ஒரு நெடுஞ்சாலை, கால்கள் அதன்போக்கில் மிதிக்க சுயநினைவின்றி இருந்தேன். எல்லாமுமே நினைவுகளால் நிரம்பியது. தத்ரூபமாக காட்சிகள் விரிந்தது. நான் பாலாவை திருமணம் செய்தது, என் சக்திகள் பிறந்தது, ராம் பிறந்தது. ராம் என் மடியிலே சிறுநீர் போனான், சுற்றி எல்லாருமே சிரித்தார்கள் ராமும்தான். அயோத்தி செல்லவேண்டும். அவனின் பாதங்களை ராமஜென்ம பூமியில் படவேண்டும், என் பிரார்த்தனைகள். ஒளி கண்களை கூசச்செய்தது. ஏதோ மோத, பறந்தேன். தலையில் பலமான அடிபட்டது.கண்கள் சுருங்கியது. பாலா, துர்கா, சரஸ்வதி, லெட்சுமி, ராம் அங்கே நின்றார்கள். நான் எழுந்தேன். இலகுவாக உணர்ந்தேன். பறக்க ஆரம்பித்தேன்.இந்த வெளி அப்போதுதான் கண்களில் பட்டது.ஏதோ உள்ளுணர்வு ராமும் இங்கே வருவான் என சொல்ல அவனுக்காக காத்திருக்கிறேன். அவனின் பாதங்களில் முத்தமிட வேண்டும்.

No comments:

Post a Comment

இணைந்த கைகள்

  ஒரு மாலைநேரம், புதிய திரைப்படம். திங்கள் கிழமை,  மாலை நேரக்காட்சி,  இணைந்த கைகள்.  நிதானியுங்கள், அதே நேரம் உங்கள் மனைவி, அரசு மருத்துவமனை...