Friday 21 August 2020

என் ஆத்துமாவே, தேவனையே நோக்கி அமர்ந்திரு

 




வெயிலில் தகித்து கொண்டிருந்தது நகரம்.  நகரத்தின் விளிம்பில் தகரக்கொட்டாய்கள் மற்றும் குடிசைகள்  நிறைந்த பகுதியில், செழித்தவர்களின் குப்பைகள் ஆற்றின் நீரோட்டத்துடன்  வழிந்தோடி  பெருத்த சாக்கடையாய்  கடலோடு உறவாடும் கழிமுகம் அது. கரையின் இணையாய் நீண்ட தெருவும் அதனோடு பக்கவாட்டில் பல சந்துக்கள் வேர்ப்போல பிரிந்து மறுபக்கம் நகரத்தின் வெளிப்பிரதானச்சாலையை இணைக்கும். இச்சாலையின் இருபுறமும் கண்ணாடி கட்டிடங்களும், பன்னாட்டு நிறுவன ஊழியர்கள் தங்கும் பிரம்மாண்ட உயர்தர ஹோட்டல்களும்,  உணவகங்களும் நிறைந்து மேடான பகுதியாய் காட்சி அளிக்கும். அப்படியே எதிராய் ஈக்கள் தெருவெங்கும் ஆயும் சந்தில், பன்றிகள் படுத்துருளும் சாக்கடைகளும் நிறைந்த தாழ்வான பகுதியில்,   ஐசுவரியம் நிறைந்த அம்மையாரின் முகம் கொண்ட  பெரிய தட்டியால் முகப்பை மறைத்து இருவர் மட்டுமே கால் நீட்டி நீண்டு உறங்கப்போதுமான ஓரறை வீடு இருந்தது.  அதனுள் நெகிழிப்பாய் விரித்து  நடுங்கியபடி படுத்திருந்த மெலிந்த சிறுவனின் தலைமாட்டில் ஒரு கையில் விவிலியம் வாசித்தபடி மேரி அமர்ந்திருந்தாள். அவளின் மனம் கனம் கூடியிருந்தது. அவளின் மறுகையில் ஜெபமாலையை விரல்கள் உருட்டியபடி இருந்தது. 


சிறுவனுக்கு வயது ஏழு இருக்கலாம், ஆயினும் அதனினும் குறைவான வயதொத்த குழந்தையை போல ஒடுங்கி இருந்தது தேகம். மேல்சட்டை அணியாத உடலில், எலும்புகள் எண்ணும்படி தென்னி இருந்தது. உதடுகள் வெடித்து, பற்கள் மஞ்சள் பிடித்து, நாக்கு வெளுத்து இருந்தும், முகம் பவித்திரமான ஒளியில் திளைத்தது. தலைமாட்டில் என்றோ எங்கோ  வாங்கிய மாதாவின் உருவம் பதித்த வெள்ளை நிறக்குப்பியில் தூயஎண்ணெய் இருந்தது. மேரியின் கவனம் பைபிளில் மட்டுமே இருந்தது. இருப்பினும் அவளின் வலது கை ஜெபமாலையோடு சேர்த்து,  சிறுவனின்  தலைமயிரை அவ்வப்போது வருடியபடி இருந்தது.


சிறுவன் முனங்கும் ஓசை கேட்டதும், புத்தி தெளிந்தவளாய் குப்பியில் இருந்த எண்ணெய்யை சிறிது கையில் எடுத்து அவளின் வலதுகை பெருவிரலால் சிலுவை ஒன்றை அவனின் நெற்றியில் பூசி, மனமுருகி,  கருணையின், அன்பின் பிதாவை வேண்டினாள்.  அவ்வீட்டின் மேல்தகரத்தின் மீதுள்ள ஓட்டையின்  சிறுதுளையின் வழியே மென்ஒளி வீட்டில் விழுந்து கொண்டிருந்தது. கழுத்தில் சீழ்பிடித்த கருநிற பூனைக்குட்டி நகங்களால் ஒளியை பிராண்டி கொண்டிருந்தது. அவளின் எண்ணம் எங்கும் அற்புதங்களை நிகழ்த்தும் மன்னவர் முழுவதுமாய் நிறைந்திருந்தார். இஸ்ரவேலின் குருடர்களுக்கு ஒளியை அளித்தவர் என் பிள்ளையை கைவிடுவாரா?  கண்ணில் வழிந்தோடிய கண்ணீர் காய்ந்தபடி அவள் வேண்டிக்கொண்டிருந்தாள். சிறுவன் சிலநிமிட வேளையில் உறங்கி போனான். நோயின் தாக்கமோ! இல்லை பசியாகவோ இருக்கலாம். நேற்றிரவு சிறிது கஞ்சி குடித்தான். அதையும் சர்த்தித்து விட்டான். பானையில் வெந்நீர் கொஞ்சம் இருந்தது. அவ்வப்போது  அதனை குடிக்க கொடுப்பாள். 


எண்ணியும் தேடியும் பார்த்தும் வீட்டில் பதினைந்து ருபாய்க்கு அதிகமில்லை. இருந்த பதினைந்து ரூபாயையும் செலவு செய்யவேண்டாம் என  நினைத்திருந்தாள். ஒருவேளை நாளையும் காய்ச்சல் குறையவில்லை என்றால் மீண்டும் மருத்துவரின் கரிசனம் தேவை. பதினைந்து ரூபாய்க்கு குறைவாய் மருத்துவம் செய்யவும் அதனையும் நிறைவோடு செய்யவும் மருத்துவர்கள் இருக்கிறார்களா?. இப்பகுதி  குடிசைவாசிகள்  மத்தியில் இருபது ருபாய் மருத்துவர் பரிச்சயமானவர்.காசு கொடுத்தால் மாத்திரம் வாங்கி கொள்வார். அதையும் எண்ணிக்கொள்ளாமல் வாங்கி மேஜை டிராயரில் போடுவார். கொடுக்காவிட்டாலும் அவர் அளிக்கும் மரியாதைக்கும், மென்மையான பூரணமான புன்னகைக்கும் குறைவு இருக்காது. சில மனித நோய்களுக்கு அந்த தூய்மையான புன்னகை கூட வலி தீர்க்கும் நிவாரணி தெரியுமா?  மேரி அந்த பதினைந்தை பத்திரமாய் வைத்திருப்பது,  இரண்டு நாள் முன்பு அங்கு சென்றபோது மருத்துவம் முடித்து அவர் புன்னகைக்கும் இடைவெளியில் எழுந்து வெளியேறிவிட்டாள். இம்முறையும் அவ்விடைவெளியை பயன்படுத்திக்கொள்ள விரும்பவில்லை. 


யாரோ கதவை அசைக்கும் ஓசை கேட்டதும், தலையை லேசாய் திருப்பி பார்த்தாள். தெரியும்,  அது நிச்சயமாய்  வின்சியாக தான் இருக்க வேண்டும். அவள் ஒருத்தியை தவிர இந்த நகரத்தில் யாருக்கு மேரியின் வீட்டு விலாசம் தெரியும். வருடம் பல ஆயிருக்கும் கடைசியாய் வின்சியை தவிர,  இந்த வீட்டிற்கு வேறொருவர் வந்து. ஜோசப்புடன் வீட்டை விட்டு வெளியேறி,  குழந்தை பிறந்து, பின் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் ஜோசப் சிறை சென்றுவிட,  மகளிடம் பரிதாபப்பட்டு வந்தார் அப்பா. வீராப்பை பெரிதும் கொண்ட முறுக்கு மீசை, மெலிந்த உடல்காரர். அவரின் கண்கள் எப்போதுமே சிவந்து கோபத்தை கக்குவது போல இருக்கும், சிறுவயதில் தந்தையின் பார்வையில் படுவதையே தவிர்ப்பாள். ஆனால் பாருங்கள் காதலின் அகமறைப்பில் ஓடுகாலியாக ஆகிவிட்டாள். அதன்பின் அன்றுதான் இருவரும் சந்தித்தார்கள். வழக்கத்திற்கு மாறாய் அவர் கண்கள் நுங்கின் உள்கருக்கை போல நீரில் நிறைந்து இருந்தது. எதுவும் பேசிக்கொள்ளவில்லை. கையில் இருந்த சொற்ப தொகையை மகள் கையில் திணித்து சென்றுவிட்டார், மறுபடியும் அவர்களை காண வரவில்லை.பின்னர் சில நாட்களில் இறந்து போனார். தகவலும் இரண்டு வாரம் கழித்துதான் மேரிக்கு தெரிந்தது. வின்சி இவளோடு அதே அலுவலகத்தில் பணி புரிபவள். மேரி தலையை திருப்பி பார்த்தாள்.ஆம் அது வின்சிதான்,  அவளுடன் சிறிதாய் கூன் விழுந்த இன்னொருத்தி. முகம் எங்கும் அலையலையாய் சுருக்கங்கள் படர்ந்த கிழவியும் நின்று கொண்டிருந்தாள். ஏற்கனவே இருவர் உள்ளிருந்ததால் வின்சி மட்டுமே உள்ளே சென்றாள். மேரிக்கு கிழவி வின்சியின் அம்மாவாக இருக்க வேண்டும் என்று தோன்றியது.


உள்ளே நுழைந்தவள் அங்கிருந்த சூழலில், நிகழ்ந்து கொண்டிருந்த காட்சியை கிரகித்து கொண்டு சிலநொடி அமைதியாய் நின்றாள். உடன் வந்தவள் வெளியேயே நிற்க, மேரி பித்துபிடித்தவள் போல இவர்களின் வருகையை அறிந்தும் அமர்ந்திருந்தபடியே விவிலியத்தை புரட்டியபடி கண்களை அதிலே பதித்து இருந்தாள். வின்சிக்கு மேலும் நிசப்தம் தொடர்வதில் விருப்பமில்லை. 


"அக்கா, நேத்திக்கே சூப்பர்வைசர் திட்டிட்டார். இன்னைக்கும் வரலேன்னா.  வேலைய விட்டு போக சொல்லிட்டாரு" என்றாள்  வின்சி,  மேரியை நோக்கி. அவளின் குரல் வெண்கல மணி ஒலிப்பது போல கணீர் என்றிருந்தது.


"ஆண்டவரே,  உம்பிள்ளையை காப்பாத்தும். மன்றாடி வேண்டுகிறேன்....." நீண்ட ஜெபத்தில் ஆழ்ந்திருந்தாள் மேரி. மிகவும் சிரத்தையுடன் எழுந்தாள். வெகு நேரம் அமர்ந்திருந்ததால்,  கால்களில்  இரத்தஓட்டம் குறைந்து,  பலநூறு எறும்புகள் ஊறுவதை போல உணர்ந்தாள். எழுந்தவள் நிற்கமுடியாமல் வீட்டின் மேல் உத்திரத்தில் தாழ்வாய் கிடைமாட்டில் இருந்த மேல்தகரத்தை தாங்கி பிடித்து கொண்டிருந்த சவுக்கு கம்பை பிடித்து உடல் வழியே கால்களுக்கு கொடுக்கும் அழுத்தத்தை குறைத்து,  சீராய் இரத்த ஓட்டம் பாய வழிச்செய்தாள். மேரியின் உடலமைப்பு ஒரு சிறுமியை போல இருந்தது,  முகம் வடிவாய் இருந்தது. கண்கள் மாத்திரம் ஒளியின்றி மங்கியிருந்தது. மார்பு ஒட்டி, பொருத்தமில்லா சுடிதார் அணிந்து இருந்தாள்.


"என்ன செய்வேன். உடம்பு கொதிக்கே,  இன்னைக்கு ஒரு நாள் லீவு எடுத்துகேன்" மேரி இதனை கூறும் போதே,  இல்லை என்பது போல தலையாட்டிய வின்சி "சொன்னா கேளுக்கா, அம்மா பாத்துக்கிடுவா பிள்ளையை" என்றபடி அம்மை நோக்கி கை நீட்டினாள். 


ஆசுபத்திரி அழைத்து செல்லவும் காசு வேண்டும். ஏற்கனவே மூன்று நாட்கள் விடுப்பு எடுத்தாயிச்சு. மருத்துவர் கூறியதும் நினைவிற்கு வந்தது, மீண்டும் அவர் கூறிய வார்த்தைகள் உள்ளுக்குள் கேட்டபடியே இருந்தது. சிறுவன் உடலில் சத்து குறைபாடு உள்ளது. அதுவே எளிதாய் சளியும், காய்ச்சலும் ஏற்பட காரணமாய் இருக்கிறது. சத்தான ஆகாரம் சாப்பிட கொடுக்கவேண்டும். ஹார்லிக்ஸ், பூஸ்ட் போன்ற ஏதாவது ஒன்று வாங்கி தினசரி கொடுக்குமாறு சொல்லியிருந்தார்.


சரி, வேலைக்கு செல்வோம். இப்போதைக்கு இருக்கும் ஒரே வழி, சூப்பர்வைசரிடம் காசு கேட்பது மட்டுமே. பலமுறை வாங்கி இருக்கிறேன். கொடுப்பாரா?  கடந்த வாரம் கூட வாங்கி இருந்தேன். அவர் மிகவும் நல்லவர், இரக்கமானவர்,  கண்டிப்பாய் கொடுப்பார்,  என்றெல்லாம் யோசித்தபடி உடைகளை மாற்றி, நேற்று வடித்த சுடுகஞ்சியின் மிச்சம் ஆறி அனந்து இருந்ததில் ஒரு மிடறு குடித்து,  சிறுவனின் நெற்றியில் முத்தமிட்டு கிழவியை நோக்கி மென்மையாய் சிரித்தபடி வீட்டை விட்டு வெளியேறினாள். ஏதோ நினைவு வந்தவளாய் மீண்டும் வீட்டுக்குள் நுழைய முயற்சித்தாள். வின்சி மேரியிடம் "ஏன் என்னாச்சுக்கா",  "இல்லை அம்மாட்டா எதுனா வாங்கணும்னா காசு வேணும்ல கொடுக்க மறந்துட்டேன்" என்றாள்  மேரி. "நீ வாக்கா, அம்மாட்ட காசு இருக்கு. அது பாத்துக்கிடும். பயப்படாதே."


இருவரும் சாக்கடையும் மழைநீரும் தேங்கி நிற்கும் தெருக்கள் வழியே நடக்க ஆரம்பித்தனர். அப்பகுதி எங்கும் அழுகிய பொருட்களின் நாற்றம் வீசியது. இப்பகுதி நகரத்தின் ஓரம் புதிதாய் உருவாக்கப்பட்டு இருந்தது. நகரம் பெரிதாய் விஸ்தாரித்து மேலும் பிரமாண்டமாய் எழும்ப,  நாகரீகத்தின் கம்பீரமாய் பெரிய கட்டிடங்கள், கண்ணாடி மாடங்கள் என விரிந்தது. அங்கு ஓரமாய் வாழ்ந்து கொண்டிருந்த இப்பூர்வகுடிகள் குப்பையை போல வீசி எறியப்பட்டார்கள். எதை உருவாக்க அவர்கள் தேவைப்பட்டார்களோ, அதன் அழகை கெடுப்பது இவர்கள் என மாறி மாறி வந்த எல்லா அரசாங்கமும் இவர்களை விரட்டியது. மாறாய் இன்னும் நகரத்தின் துப்புரவு,  சில்லறை பணிகளுக்கு பெரும்பாலும் தேவைப்படுகிறார்கள். 


கடந்த வாரம் பெய்த பெருமழையின் நீர் வடியாமல் இன்னும் தேங்க, இப்பகுதியை நோய்கள் பீடித்து கொண்டிருக்கிறது. எங்கும் கொசுக்கள் பறக்கிறது. மேரியின் கால்கள் வேகமாக நடக்க, அவளை விட உயரம் குறைந்த வின்சி வேகத்திற்கு ஈடாய் நடப்பது ஓடுவது போல தெரிந்தது. மேரியின் கண்களின் முன் விரிந்திருக்கும் காட்சிகள் மனதில் பதியாதவளாய் நடந்து கொண்டிருந்தாள். 


செல்லும் வழியில் குருசடி ஒன்று இருந்தது, அதில் இருந்த அன்னை மேரியின் கையில் ஏந்திய அழகிய குழந்தையின் உருவம், அவளுக்குள் வேறு நினைவுகளை கிளறியது. ஜோசப் அவளுக்கு கொடுத்தது இன்பங்களின் உச்சத்தை. நகரத்தின் மையமாய் வழிந்தோடும் நதியின் கரையில் அவர்களின் குடிசை இருந்தது. நாறும் சாக்கடைகள் அசவுகரியம் கொடுத்தாலும், மகிழ்ச்சியாகவே இருந்தது அவனோடு இருந்த நாட்கள்.  நினைவு முடிச்சுகளில் பொதித்து வைக்கப்பட்டு இருந்த மகிழ்வான தருணங்களை அவ்வப்போது நினைத்து பெருமூச்சுடன் உதட்டின் ஓரம் மட்டுமே மிஞ்சும் புன்னகையுடன் ஆறுதல் அடைந்துகொள்வாள். கிடைத்ததில்  நிறைவாகவே வாழ்ந்தார்கள். ஜோசப் கருணையானவன்.எதையும் ஆழ்ந்து சிந்திப்பவன். கடைத்தெரு ஒன்றில் தள்ளுவண்டி உணவகம் நடத்தினான்.உதவியாய் மேரி வர விரும்பினாலும்,  வேண்டாம் என்பான். "என் கஷ்டம் என்னோடு,  நீ சந்தோசமா வீட்டுல இரு". ஒவ்வொரு ஞாயிறு காலையும்  தேவாலயம் செல்வார்கள். தேவாலய வாசலில் அமர்ந்திருக்கும் பிச்சைக்காரர்களின் கூட்டத்தில், வயதான பெண்ணொருத்திக்கு உணவருந்த காசு கொடுப்பான். அவளை பற்றி அவனிடம் விசாரித்ததில் அம்மாவின் தோழி என்பான். மாலை அவளை கடற்கரை, திரையரங்கம் அழைத்து செல்வான். அவளுக்கு விருப்பமான எல்லாவற்றையும் அறிந்து வைத்திருந்தான். பிடித்தமான பொருளை நோக்கி அவள் கண்கள் நகரும் போதே, அதனை கையில் ஏந்தியபடி வருவான். தினமும் காலை இருவரும் இணைந்தே ஜெபிப்பார்கள். 


அவர்களின் குடிசை இடிக்கப்பட்டு, அதற்கு ஈடாய் ஒதுக்கப்பட்ட வீட்டுவசதி வாரிய குடியிருப்பு,  அவனுக்கு கசப்பை கொடுத்தது. தொழிலை இழந்தான்.வெட்டி தள்ளப்பட்ட மரத்தின் பறவைகளுக்கு வேறு கூடு எளிதில் அமையலாம். மனிதர்களுக்கு அப்படியா?  காயிலான் கடையில் இரும்பு உடைப்பது,  புறநகர் பகுதியில் உள்ள கிணறுகளில் தண்ணீர் திருடி நகருக்குள் விற்பது,  என கிடைக்கும் வேலைக்கு செல்ல ஆரம்பித்தான். இதற்கிடையில் அவர்களின் தாம்பத்யத்தின் அடையாளமாய்,  இன்புறும் வகையில் மகன் பிறந்தான். அவனுக்கு கர்த்தரின் முன்னே ஜான் எனும் பெயர் சூட்டினர்.


 புதிதாய் ஒரு பழக்கம் தொற்றிக்கொள்ள ஆரம்பித்தது. வேலை முடிந்ததும் அரசாங்க சாராயக்கடைகளின் பக்கம் திரும்பினான். தினமும் குடி ஒரு பழக்கமாக மாறியது.மேரி மன்றாடி பார்த்தாள்,  அவனுக்காகவே ஜெபிப்பாள்,  ஆண்டவரை நோக்கி கத்தி வேண்டுவாள், கையில் ஜெபமாலை திருகியபடி இருக்க "ஆண்டவரே உம்பிள்ளையை காப்பாத்தும்,  வழி தவறி சென்ற ஆட்டை உம்மந்தையில் திருப்பும், நல்மேய்ப்பரே, பரமபிதாவே,  சாத்தானின் சகவாசத்தை நீக்கும்" என கண்ணீர் மல்க வேண்டுவாள். முட்டங்கால் இட்டு அவள் ஜெபிக்கும் வேலையில் ஜானும் விவிலியத்தை கையில் ஏந்தியபடி அவர்கள் வீட்டில் இருந்த அன்னைமேரி புகைப்படம் முன் நிற்பான். மேரியின் கண்ணீர் ஜானின் கண்ணிலும் வடியும். ஜோசப் காலை ஜெபிப்பதும்  இல்லை. ஞாயிறு தேவாலயம் செல்வதை தவிர்த்தான். வீட்டிற்கும் வரத்து குறைந்தது. ஆனாலும் மேரியின் மீது உள்ள அன்பு துளியும் குறையவில்லை.  போதையில் அழுவான், புலம்புவான். தன் வாழ்க்கையின் போக்கு அவனுக்கே பிடிக்கவில்லை. இருப்பினும் குடி எனும் சாத்தானிடம் அகப்பட்டுவிட்டான். 


குடியின் வெறி, வேலையில் கிடைத்த பணம் போதாமல் திருட்டிலும் ஈடுபட வைத்தது. திருட்டை ஏன் தேர்ந்தெடுத்தான். சாலையின் ஓரம்  கௌரவத்தோடு தள்ளுவண்டி கடையில் உணவகம் நடத்தியவன்,  திருடன் ஆனான். கூட்டாளியாய் பாரபாஸ் சேர்ந்து கொண்டான். ஜோசப் அவனை பாசி என்று அழைப்பான். பாசிக்கு ஒருவருடம் முன்பே திருமணம் ஆகி இருந்தது. காதல் திருமணம்,  திருமணத்தின் போது அவனுக்கு வயது பதினெட்டு மட்டுமே. ஒருநாள் எங்கோ திருடி பெரும்தொகை கிடைத்தது. ஒரு பங்கிற்கு குடித்து முடித்து பாகம் பிரிக்கும் போது,  குடிபோதையில்  இருவருக்கும் யார் பெரியவன் எனும் அகங்காரம் முற்றி, கைகலப்பில் போய் முடிந்தது. ஜோசப்பை விட பாசி வலுவானவன்.  அடி வாங்க முடியாத கையறு நிலையில், ஜோசப் அருகில் இருந்த கருங்கல்லை கையில் எடுத்து சரமாரியாக பாசியின் தலையில் தாக்க மண்டை சிதறி, மூளை வெளிப்பிதுங்கி பாசி இறந்து போனான். ஜோசப் சிறைக்கு சென்றான். 


வேகமாக நடந்தார்கள்,  சந்துகள் இல்லாத  பஜார் வந்தது. அதன் வழியே சாலையை அடைந்தார்கள். இருபக்கமும் கண்ணாடி கட்டிடங்கள். அதில் ஒன்றில் நுழைந்தார்கள் இருவரும். அவசர அவசரமாய் இரண்டாம் மாடிக்கு சென்று சிறிய உடை மாற்றும் அறைக்கு சென்றார்கள். அது பன்னாட்டு வங்கியின் தகவல் நுட்ப மையம். அங்கே ஊழியர்கள் உணவருந்தும் அரங்கில் அவர்கள் உண்டபின் மேஜை துடைத்து சுத்தப்படுத்தும் வேலை மேரிக்கு. வின்சிக்கு காபி விளம்பும் இயந்திரத்தில் பால் ஊற்றும் வேலை. கூடவே ஊழியர்கள் அருந்திக்கொள்ள பூஸ்ட், பாதாம் பொடி, ஹார்லிக்ஸ் சிறு சிறு பாக்கெட்கள் தீர தீர நிரப்பும் வேலை.


மதியநேரம் மேரிக்கு கடுமையான வேலை. ஒவ்வொரு மேஜை முடித்து அவள் ஆசுவாசப்படுத்தி கொள்ள முயலும் நேரம்,  அடுத்த மேஜைக்கு அவளை அழைப்பார்கள். மகனின் காய்ச்சல் வேறு அவளை சித்திரவதை படுத்திக்கொண்டிருந்தது. கிழவி ஆகாரம் கொடுத்திருப்பாளோ! அவன் என்ன செய்து கொண்டிருப்பான்.  புலம்பல் குறைந்திருக்குமா? பல சிந்தனைகள் மனதிற்குள் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தது. கூடவே மருத்துவர் சொன்ன அவனின் உடல்நிலை, சத்துக்குறைபாடு. ஹார்லிக்ஸ்,பூஸ்ட் நூறு ருபாய் இருக்குமா?  ஐந்து ருபாய் பாக்கெட் கிடைக்கிறதே! அதை தன்னால் வாங்க இயலாதா?  தினசரி சம்பளம் இல்லை, மாதம் பத்தாம் தேதிக்கு கிடைப்பதே அரிது. இன்றோ இருபதாம் தேதி. வாங்கிய சம்பளம் தீர்ந்துவிட்டது. எப்படியோ சூப்பர்வைசர் கொடுப்பார், கேட்டு வாங்கி கொள்ளலாம்.  


அன்றைய நாள் வேலை முடிந்ததும்,  உடைகளை மாற்றி சூப்பர்வைசர் அறைக்குள் சென்றாள். அவர் அமர்ந்திருந்தார். இவளை கண்டதும் எவ்வித உணர்ச்சியையும் வெளிக்காட்டாமல் கணினியை நோண்டியபடி உட்கார்ந்து இருந்தார். மேரி பலகீனமாக உணர்ந்தாள், அவளின் தொண்டை விக்கி வார்த்தை வராமல் சிக்கி கொண்டு இருந்தது. மெதுவாய் ஆரம்பித்தாள், 


"சார்,  பையனுக்கு காய்ச்சல். அதான் லீவு எடுத்தேன்" 


சூப்பர்வைசரின் பார்வை வித்தியாசமாய் அவளை நோக்கியது,  வாடியப்பூவை போல இருந்தாள். மேரியின் கண்களை நேருக்கு பார்ப்பதை எப்போதும் அவர் தவிர்த்து விடுவார். பரிதாபமான ஒளியிழந்த கண்கள். "இல்லமா, மேனேஜர் உன்னால என்ன திட்டிட்டார். நீங்க வேணும்னா வேற வேலை பாருங்க" என்றார் அவர். இதை கூறும் போது அவரின் தலை கவிழ்ந்தே இருந்தது. "இல்ல சார்,மன்னிச்சிருங்க இனி லீவு எடுக்க மாட்டேன்"


"சொன்னா புரிஞ்சிக்கோங்க,  இப்போல்லாம் சம்பளம் குறைவா வேல பாக்க அசாம், பெங்கால் காரங்க வராங்க. நா என்னால முடிஞ்சத செய்றேன். நீங்களும் புரிஞ்சிக்கணும்" என்றார்.


மீண்டும் கணினியில் நுழைந்து,  அவளின் முகம் காணாமல் இருந்தார். இப்போதைய சூழலில் இவரிடம் எப்படி பணம் கேட்பது. மனம் ஒடிந்து அங்கிருந்து வெளியேறினாள். அவள் அங்கிருந்து நகர்ந்ததும்,  அவளை நோக்கிய பார்வையை மீட்டு கணினியில் நுழைத்தான். அவளின் சொந்த வாழ்க்கையை அறியாத அவர் மனதிற்குள்,  அவரின் அம்மாவின் உழைப்பை உணர அவள் காரணமாக இருந்தாள். அம்மாவால்தான் தானின்று இப்படி ஒரு அலுவலகத்தில் மரியாதையான வேலையில் இருக்கிறேன். மேரியின் ஒடிசலான தேகமும், வடிவான முகமும் அவளை காணும் ஒவ்வொரு தருணமும் அம்மாவை நினைவுபடுத்தும்.


வரவேற்பறையில் வின்சிக்காக காத்திருந்தாள். வின்சி வந்தாள்,  "காசு கேக்கலாம்னு பாத்தேன்,  கேக்க முடியல. வேலையே போயிரும்னு இருக்கு, இதில எங்க அட்வான்ஸ் கேக்க". வின்சி ஒருமுறை அவளை பார்த்தபடி காத்திருக்குமாறு கூறி மீண்டும் மேலே சென்றாள். மூச்சிரைக்க வந்தவள் கைப்பையில் ஹார்லிக்ஸ் சிறிய பாக்கெட் சில இருந்தது.


"டெய்லி உனக்கு ஒன்னு எடுத்து தாரேன். நீ யோசிக்காம வா."


மேரிக்கு இது தவறாகப்பட்டது. "இல்ல வின்சி, நீ கொண்டு போய் அங்க வச்சிரு. இது வேண்டாம்"


"இதுல என்ன தப்பு,  இங்க வசதிக்கும், வாங்குற சம்பளத்துக்கும் பிரீயா  குடிக்கிறாங்க. தெரியுமா சிலபேர் நா நிக்கும் போதே பேக்ல ஒன்னு இரண்டு எடுத்து போடுவாங்க. நாம எடுத்தா என்ன பிரச்சனை. யாருக்கு தெரியப்போவுது.  இதுல ஒன்னும் தப்பு இல்லை. நீ வா, போய் அவனுக்கு பால்ல கலந்து போட்டு கொடு. பாவம் தம்பி,  உடம்புல தெம்பே இல்ல" 


"இல்ல வின்சி,  அப்பா பண்ண தப்போ என்னவோ. பிள்ளைக்கு இப்டி அடிக்கடி ஆவுது. இதுல திருடி வரது எனக்கு வேணாம். எனக்கு சரிப்பட்டு வரல"


"இதுல என்ன திருட்டு இருக்கு. நியாய தர்மம்லா இதுல வேண்டாம் அக்கா.  உன்கிட்ட காசு இருக்கா,  நமக்கு எவ்ளோ சம்பளம்.  பேசாம வா" என்று மேரியின் கையை பிடித்திழுத்து வெளியே அழைத்து சென்றாள். மேரிக்கு இதில் துளியும் விருப்பமில்லை. இருந்தாலும் மகனின் உடல்நிலை இதில் ஒப்புக்கொள்ள வைத்தது. வின்சி எதற்காக என் கஷ்டத்தை பகிர வேண்டும். அவள் கணவனை கொன்றவன் என் அன்பு காதலன் அல்லவா!. 


பாசியைக்கொன்று,  ஜோசப்பை நீதிமன்றம் அழைத்து வந்த நாள்,  கொன்றவனின் முகம்  காண வின்சி வந்தாள். அப்போது சிறுமியைப்போல இருந்தாள். கட்டிய தாலியின் மஞ்சள் கூட வெளிறவில்லை. எவ்வளவு பெரிய பாவத்தை செய்து விட்டான். ஜோசப்பை சபிக்கவே வந்திருப்பாள். அன்றைக்கு ஜான் இரண்டு வயது குழந்தை.  வந்தவள் ஓரமாய் என்னருகில் நின்றாள்.  அவளுக்கு தெரிந்திருக்கும் கொன்றது என் கணவர் என்று.  ஒருவர்க்கொருவர் பரிதாபமாய் மற்றவர் நிலை கண்டு வருந்தி பார்வையை பரிமாறிக்கொண்டோம்.  ஜானின் அழுகையை கேட்டு மேலும் நெருங்கி வந்தாள், அச்சமடைந்த நான் ஒதுங்கினேன்.பின் அவளின் காலை பிடித்து கெஞ்சி அழுதேன்,  எங்களை மன்னிக்குமாறு. மாறாக அவள் ஜானை தூக்கி கொஞ்சி அவனின் அழுகையை நிப்பாட்டினாள். இன்று நான் தங்கி இருக்கும் தகரக்கொட்டாயும் அவள் ஏற்பாடு செய்ததே. பெரிய மனதுக்காரி. இன்றும் என்னோடு துணையாய் நிற்கிறாள்.  அவளின் வயதுக்கு இன்றைக்கும் இன்னொரு திருமணம் செய்துகொள்ளலாம். ஆனால் பாசியின் மேல்கொண்ட ஆத்மார்த்தமான அன்பின் காரணமாய் தவிர்க்கிறாள்.  சில நேரம் வருத்தப்படுவாள். நான் அங்கே ஒருவேளை இருந்தால் வெளிக்காட்டி கொள்ளமாட்டாள்.


செல்லும் வழியில் மாலை மங்கும் வெயிலில் குருசடியில் அன்னை மாதா முன் மனமுருகி வேண்டினாள். காலையில் வின்சியோடு வந்தவள் அவளின் அம்மாவாக இருந்திருக்கும் எனவே நினைத்திருந்தாள். வின்சியிடம் அதை பற்றி கேட்கவே,  "இல்லக்கா, அது பாசியோட அம்மா. என்ன பெத்தவங்க இல்ல.  நா ரயில்வே ஸ்டேஷன் வெளியே பூ வித்துட்டு இருந்தேன். எங்க சித்தி தான் வளத்துச்சு.பாசி என்ன எப்டி பாத்தான்,  ஏன் அவனுக்கு பிடிச்சதுனு தெரியாது. ஸ்டேஷன்ல வாடகைக்கு ஆட்டோ ஓட்டிட்டு இருந்தான். எனக்கும் முன்னாடியே தெரியும், நல்ல பையன். ஒரு நாள் எங்கிட்ட பூ வாங்கி என்கிட்டயே திரும்ப கொடுத்தான். கேட்டா லவ்னு சொன்னான்.  கொஞ்சம் அலைய விட்டு, ஒத்துக்கிட்டேன்.  நல்ல பாத்துக்கிட்டான். ஸ்டேஷன் பக்கத்துல குடிசையை மாத்தி முப்பது கிலோமீட்டர் தள்ளி இங்க வச்சாங்க. வேல இல்ல. ஏதோ வேல பாத்தான். அப்போவும் குடிப்பான். இங்க வந்ததுக்கு அப்புறம் டெய்லி ஆயிட்டு பழக்கம். சண்டை போடுவான். பின்னாடி சமாதானப்படுத்துவான். எல்லாம் சீக்கிரமே முடிஞ்சிட்டு எனக்கு இல்லையா அக்கா.  அவன் போனதுக்கு அப்புறமும் எனக்கு ஒரு சொந்தத்தை கொடுத்துட்டு தானே போயிருக்கான்" என்று சொல்லிக்கொண்டே வேகமாய் நடந்தாள். அவளும் பாரபாஸை பாசி என்றே அழைப்பாள். இது நாள் வரை பாசியை பற்றியோ அவளின் சொந்தவாழ்க்கை பற்றியோ பேசியதில்லை. இன்று ஏனோ அவளே எல்லாம் சொல்லிவிட்டாள்.


மேரி மேலும் மனம் நொடிந்தவளாய் உடைந்து போனாள். தன் பிள்ளையை கொன்றவன் பிள்ளையை, கவனித்து கொண்டு இருக்கிறாள் கிழவி. வின்சி சொல்லி இருப்பாளா?  இது யாரின் பிள்ளை என்று,  எப்படி இருந்தாலும் ஒருவேளை கிழவி பழிக்கு நிகரான செயலை செய்து இருப்பாளா?  பலவித குழப்பம் அவளை சித்திரவதை செய்தது. நடந்து கொண்டிருந்த போதும் விவிலியத்தின் வரிகளை முணுமுணுத்தபடியே இருந்தது அவளின் உதடுகள். சிலுவையின் பெயரால் நின்ற அவளின் தூயஜெபம் அவளை சாதாரணமாய் வைத்திருக்க உதவியது. அப்படி ஒன்றும் நடந்திருக்காது. அவளின் வீடு வந்தது,  மெதுவாய்  வீட்டிற்குள் நுழைந்தாள். சிறுவன் அமர்ந்திருந்தான். கொஞ்சம் தெம்பாகத்தான் தெரிந்தான். அவன் மடியில் பூனைக்குட்டி உறங்கி கொண்டிருந்தது. கிழவி அந்த அறையிலே ஓரமாய் இருந்த அடுப்பில் பாத்திரத்தில் கஞ்சி காய்ச்சி கொண்டிருந்தாள். 


"கண்ணு,  இதுல சத்துமாவு இருக்கு. டெய்லி காய்ச்சு கொடு. சாப்பிட வச்சு தூங்க வை. நா காலைல வந்தும்  பிள்ளைய பாத்துக்கிடுகேன். நீ கவலப்படாத"


"சத்து மாவு எங்க வாங்குனீங்க" கேட்டாள் மேரி.


"பால்வாடில வாங்குனேன். இவன் ஸ்கூல் பக்கத்துல தானே இருக்கு. பைசாலாம்  கிடையாது. இந்த பாக்கெட் தீந்ததும் வேற வாங்கிக்கலாம். சின்ன பசங்களுக்கு பிரீ தான் " என சொல்லியபடி அடுப்பை அனைத்து பானையை இறக்கி,  வீட்டின் வாசல் அருகே தள்ளாடி வந்தமர்ந்தாள்.


மேரி வின்சியை பார்த்தாள். வின்சி பையில் இருந்த ஹார்லிக்ஸை வெளியே எடுக்க,  வேண்டாம் என்பது போல தலை அசைத்தாள். கிழவி மேரியிடம் 'சரிம்மா நா வாரேன்" என்று விடை பெற.  மேரி கிழவியின் மடியில் சாய்ந்தாள்.  அவளின் மனதில் அடியாழத்தில் படிந்து இருந்த அழுக்கு கொஞ்சம் கொஞ்சமாய்  கரைந்து அவளின் கண்ணீராய் கிழவியின் மடி நிறைத்தது. கிழவிக்கு எந்திரிக்க மனம் வரவில்லை,  அவளின் தலையை வருடியபடி "என்ன செய்ய எல்லாம் விதி,  பொம்பளைங்க நாம என்ன செய்வோம். நீ  மனசுல எதையும் போட்டு குழப்பிக்காத.  நீயும் எம்பிள்ள தானே,  ஆண்டவருக்கு எல்லாம் தெரியும். நடந்தது எல்லாம் சாத்தான் செயலு. எந்திரிச்சி நின்னு பிள்ளையை பாத்துக்க. நா நாளைக்கு வாரேன்" என்றாள்,  விழியின் ஓரம் வடிந்த நீரை துடைத்தபடி.


வின்சியும் கிழவியும் அங்கிருந்து நகர, மேரி அங்கிருந்த  அன்னையின் புகைப்படம் முன் மண்டியிட்டு “என் ஆத்துமாவே, தேவனையே நோக்கி அமர்ந்திரு.நான் நம்புகிறது அவராலே வரும்“ என்று ஜெபித்தாள். இலகுவாக உணர்ந்தாள். ஜான் அருகிலே ஜெபமாலையை பிஞ்சு விரல்களால் திருகியபடி அம்மாவின் தலையை வருடியபடி நின்றான். பூனைக்குட்டி ஜானின் கால்களை உடலை வளைத்து வருடியபடி அங்கும் இங்கும் சென்றது. 


No comments:

Post a Comment

இணைந்த கைகள்

  ஒரு மாலைநேரம், புதிய திரைப்படம். திங்கள் கிழமை,  மாலை நேரக்காட்சி,  இணைந்த கைகள்.  நிதானியுங்கள், அதே நேரம் உங்கள் மனைவி, அரசு மருத்துவமனை...