Wednesday 16 January 2019

கும்பாட்டக்காரிக்கு சோப்பு

கும்பாட்டக்காரிக்கு சோப்பு :


காக்கும் கடவுள் கணேசனை நினை 
காக்கும் கடவுள் கணேசனை நினை 

சீர்காழி கோவிந்தராஜன் உச்சஸ்தாயில் பாடும் இரண்டு வரிகள் காதில் விழுந்தவுடன் படபடவென எழுந்தேன், மணி ஐந்து இருக்கும் என எண்ணிக்கொண்டேன் அண்ணாமலை மாமா சரியாக ஐந்து மணிக்கு பக்தி பாடல்கள் போட ஆரம்பித்து விடுவார். மார்கழி மாத குளிரில் உடல் உதறியது, பக்கத்தில் மணியும், முத்துவும் அசந்து தூங்கி கொண்டிருந்தனர், கொஞ்சம் தள்ளி மகாராஜா  மாமா அடுப்பை பற்றவைத்து கொண்டிருந்தார், மெதுவாய் எழுந்து அடுப்பின் பக்கம் நின்றேன் குளிர்க்கு இதமாய் இருந்தது, இந்த குளிரிலும் மாராசா மாமா குளித்து உடம்பு முழுவதும் திருநீறை பூசி இருந்தார், நாற்பது நாள் தாடியும், மீசையும் மறைத்திருந்தது, கழுத்தில் தொங்கும் ஐயப்ப மாலை சுருண்ட அவரின் உடம்பு முழுவதும் படர்ந்திருக்கும் கரிய  முடியை தாண்டி வெள்ளி கம்பியாய் மின்னியது, மாமாக்கு பாசாங்கு இல்லா மனம், முகமும் அப்படியே முன் வழுக்கை வரை பெரிய திருநீறு பட்டையும் சந்தன குங்கும பொட்டும் வைத்திருப்பார். கோயில் விளக்குபொலிவு முடிந்து இரண்டு நாள் கழித்து மாமா சபரிமலைக்கு செல்வது வழக்கம்.

"என்ன மக்கா,  முழிச்சிட்டியா டீக்கடை  போய் எல்லாத்துக்கு டீ சொல்லிட்டு வா" என்றார்.நான் தயங்கி தயங்கி "மாமா கும்பாட்டம் நையாண்டி மேளம் லா  வந்தாச்சா" என்று கேட்டேன்.வாயில் மென்றிருந்த துளசி பாக்கு தெறிக்க "போல முட்டா பய, முத டீய சொல்லிட்டு வா, மாமாக்கு நல்ல குளிருது, இப்போதான் குளிச்சுட்டு வந்தேன்" என்றார். நான் மீண்டும் மாமா என்று ஆரம்பிக்க சிரித்து கொண்டே "எல்லாரும்  வந்தாச்சுல ஆண்டாள் வீட்ல இருக்காங்க, இப்போ உறங்கிட்டு இருப்பாங்க" என்றார். மணியும் முழித்து கொண்டான், இரண்டு பேரும் நடக்க ஆரம்பித்தோம்.

அதிகாலை லோடு லாரி சாலையின் இரண்டு ஓரமும் வரிசையாய் நின்றது, பால் பேப்பர் போடும் அண்ணன்கள், வெளியூர் கூலி வேலைக்கு செல்லும் மாமாக்கள் என கூட்டம் கடையை  மொய்த்து கொண்டிருந்தது. வைத்தி மாமா அத்தனை பேரையும் தனியாய் சமாளித்து கொண்டிருந்தார், அதிரசம் மாமா வேகம் வேகமாய் டீ ஆத்திக்கொண்டிருந்தார். எங்களுக்கும்  டீயை வாங்கி கோயிலுக்கு நடக்க ஆரம்பித்தோம், மணி மெதுவாய் ஆரம்பித்தான் "லேய் இந்தவாட்டி திருநவேலி காரியாம், ஆள் சூப்பரா இருப்பாளாம், அட்வான்ஸ் கொடுக்க போனப்ப பரமசிவ மாமா பாத்துச்சாம்,ரசவடா சொன்னான்" என்றான், "ரசவட ஒரு ஆளு, அவன் சவுடால் அடிப்பான்" என்றேன், "சத்தியமா மாப்ள மோகன் மாமாவும் சொல்லிச்சு, சூப்பரா இருப்பாளாம்" என்றான்.

போன வருடம் வள்ளியூர் முத்துசாமி குரூப் தான் கும்பாட்டம், எனக்கு தெரிந்து இரண்டு கும்பாட்டக்காரிகளும் ஆடிய ஆட்டம் எங்கள் தெரு தாண்டி எல்லோர்க்கும் இரண்டு மூன்று நாள் பேசுபொருளாக இருந்தது , அதன்பின் எங்கள் சுற்றுவட்டார பகுதிகளில் பல இடங்களில் அவர்களின்  ஆட்டமே களைகட்ட ஆரம்பித்தது, இரண்டுமே முத்துசாமி அண்ணனின் பொண்டாட்டிகள், இரவு நேரங்களில் நையாண்டி மேளகுழுவே   தனி உற்சாகத்தில் இருக்கும், வேலை முடிந்து வந்த ஊர் பெருசுகள், குடிகாரர்கள், பெண்கள், குழந்தைகள் என பெரும்கூட்டம் நிறைந்திருக்கும், நாதஸ்வரம் வாசிப்பர்களுக்கு எப்போதும் தனி மதிப்பு மற்றவர்களை விட சற்று அதிகமாக உண்டு,பெரிய தொப்பை உடைய  மேளம் வாசிப்பவர் அடிக்கும் அடியில் உடம்பின் நரம்பு மண்டலமே எம்பி எம்பி ஆட ஆரம்பிக்கும் அளவுக்கு மேள சத்தம் ஒலிக்கும், கூடவே அவர் தொப்பையும் குலுங்கும், மாடன் அழைப்பு வாசிக்கும் போது  மொத்த கூட்டமும் தெய்வ பரவசத்தில் கைகூப்பி மாடன் தீபாராதனைக்கு காத்திருக்கும் . 

நையாண்டி மேளம் என்னதான் அசத்தினாலும், எல்லோர் கண்களும் கும்பாட்டக்காரிகளையே மொய்க்கும் , இந்த கூட்டத்தில் நானும் ஒருவன் மற்றவர்கள் என்னை கவனிக்கிறார்களா என்று பயந்து பயந்து ஓட்டை கண்களில் பார்ப்பேன், அவர்களை பார்க்கும் ஒவ்வோர் நொடியும் உடம்புக்குள் ஒருவித மின்சாரம் பாய்ந்தது போல் படபடவென இருக்கும்,  கும்பாட்டக்காரிகளை பார்ப்பது தெரிந்தால் ஊர்  அண்ணன்கள் கிண்டல் செய்வார்கள் . என்னுடன் டியூசன் படிக்கும்  சங்கரியின் தோழிகள் எனக்கு எதிரிலே அமர்ந்திருந்தால் என்னால் கும்பாட்டம்  முழுவதுமாக   பார்க்க முடியாது,  பதினோரு மணிக்கு சாமியுடன் வேட்டைக்கு போய் திரும்ப கோயிலுக்கு வந்தால், சாமிக்கு ஊட்டு படைக்க ஆரம்பித்து விட்டனர், முத்துசாமி அண்ணன் மட்டும் ஒரு ஓரமாய் உட்கார்ந்து பீடி வலித்தபடி  உட்கார்ந்து  இருப்பார். கும்பம் தலையில் ஏந்தி இருவரும் ஆடும் ஆட்டம் ஏட்டிக்கு போட்டியாய் கலகலக்கும், ஊர் பெருசுகள் முத்துசாமி அண்ணனிடம் நேரடியாகவே "என்னல முத்துசாமி, இரண்டையும் எப்படிவே சமாளிப்ப, உனக்கு இதில டபுள் எம்.ஏ லா கொடுக்கணும்"  என நளியடிக்க, முத்துசாமி அண்ணன் சிரித்தே சமாளிப்பார்.       

விளக்குபொலிவு முடிந்து ஒரு வாரம் என் வயது ஒட்டிய பதின்பருவ சிறுவர்கள் கூட்டம் எல்லாமே இந்த வருடம் கும்பாட்டம் பற்றியே பேசி சிரித்து கொண்டிருப்போம். நாங்கள் எங்களை ஒரு வயதுக்கு வந்த ஆணாக நம்ப ஆரம்பித்த பருவம், முகப்பருவும் அரும்பு மீசையும் அதற்கான அறிகுறி.  நானோ  டிவியில் இடுப்பு தெரிய நடிகை ஆடும் பாடல் ஒளிபரப்பினாலே தலையை குனிந்து யாராவது நம்மை கவனிக்கிறார்களா என்றே திருடன் போல் திருட்டுதனமாய் பார்ப்பேன், இது சினிமா போஸ்டர்களிலும் உண்டு, யாராவது கடந்து போனால் பார்க்க மாட்டேன், யாரும் இல்லை என்று உறுதி படுத்தி கொண்டால் மட்டுமே பார்ப்பேன்.     

கும்பாட்டம் ஆடும் போது  ஆண்கள் பத்தோ இருபதோ சிலநேரம் நூறு ருபாய் கூட அன்பளிப்பாக கும்பாட்டக்காரிகளுக்கு அளிப்பார்கள், அவர்களும்  மைக்கில் அன்பளித்த ஆண்களின் பெயருடன் மாமா சேர்த்து நன்றி சொல்வது வழக்கம், இந்தநேரம் அன்பளிப்பு அளித்தவர்களின்  மனைவிமார் முகம் வெட்கத்திலும், சிலரின் முகம் கோபத்திலும் இருப்பதை கவனித்து இருக்கிறேன், பெரும்பாலும் கோயில் முன் கூட்டம் தீபாராதனை, அபிஷேக நேரங்களில் மட்டுமே அதிகமாய் இருக்கும். இந்த நேர இடைவெளியை பெரும்பாலும் அலுப்பில்லாமல் மகிழ்ச்சியாய் நளியாய் கொண்டு போக கும்பாட்டம் தான் பெரிதும் உதவும் .

நடன அசைவுகளில் கவர்ச்சியான  தொனி தெரியும் நேரங்களில் இளைஞர் கூட்டத்தில் விசில் பறக்கும், என்னவென்று தெரியாத வயதில் திருதிருவென முழிக்கும் சிறுவர் கூட்டத்தில் நானும் இருந்தேன், பெண்கள் கூட்டம் அந்நேரங்களில் தலை கவிழ்த்து சிரிப்பதையும் கண்டிருக்கிறேன். ஊர் ஆண்கள் சாமிக்கு முழு சந்தன காப்புக்கு பழங்களை அடுக்குவதிலும் அலங்காரம் செய்வதிலும் , பாதி பேர் ஊட்டு சமைப்பதிலும்   இதை கண்டும் காணாமல் தங்களுக்குள் பேசி சிரித்து கொண்டிருப்பார்கள், இந்த அத்தனை கூட்டத்தையும் மாராசா மாமா தனி ஆளாய் வழிநடத்தி கொண்டிருப்பார், சாமியாடிகள் சுந்தர் மாமாவும், ஆண்டாள் மாமாவும் இன்னும் சற்று நேரம் கழித்து இந்த கூட்டமே தங்களை வழிபட்டு குறி கேட்கும் என்ற பிரக்ஞையே இல்லாமல் எதையே வெறித்து உட்கார்ந்திப்பார்கள்.

இந்த வருடம் யாருக்கும்  எதற்கும் பயப்படுவதாய் இல்லை, நான் ஒரு முழு ஆம்பளையாக என்னை நானே தைரியப்படுத்தி கொண்டிருந்தேன், டீ குடித்து முடித்தவுடன் மாராசா மாமா சீக்கிரம் வீட்டுக்கு போய் குளித்துவிட்டு வர சொன்னார், விளக்குபொலிவு நேரங்களில் என் நண்பர்களுடன் கோயிலில் தான் தூங்குவோம் , நடு இரவில் மாமா தூங்கியவுடன் அருகில் இருக்கும் களத்தில் சென்று எல்லாரும் பனாமா சிகரெட் புகைப்போம், கோபாலன் அவன் அப்பாக்கு தெரியாமல் சிகரெட்  எடுத்து வருவான், ஒரு சிகரெட்டை வட்டமாய் உட்கார்ந்து வரிசையாய் புகைப்போம், அந்த நேரங்களில் கேட்ட கெட்ட வார்த்தைகளும் பதின்பருவத்திற்கே உரிய உரையாடலும் தொடரும், அவன் போன தடவை கும்பாட்ட காரிக்கு குளிக்க லக்ஸ் சோப்பு கொண்டு கொடுக்க போனானாம், போன இடத்தில் அவர்களோடு பேசியும் இருக்கிறான், ஆட்டம் நடக்கும் போது அவனை அவர்களுக்கு தெரிந்ததால் அவன் அருகே சென்று சென்று இடுப்பை ஆட்டி ஆடினார்களாம், அவன் பெருமையாய் சொன்னான். வீட்டிற்கு சென்று கதவை தட்டினேன், அம்மா வந்து கதவை திறந்தாள். படுக்கை அறையில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது, உள்ளே குளிக்க துண்டு எடுக்க போனேன்,அக்கா திரும்பி இருந்து குழந்தைக்கு தாய்பால் கொடுத்துக்கொண்டிருந்தாள் . வானின் விளிம்பில் மெலிதாக சிவந்த ஒளி பரவியது, குளித்து முடித்து அப்பாவின் காவி சாரமும், தீபாவளி சட்டையும் அணிந்தேன், அம்மா திட்டி பழைய சட்டையை கொடுத்து அணிய சொன்னார், போன வருடம் சாமி ஆராட்டுக்கு  போய்விட்டு வீட்டுக்கு  வரும் போது சட்டை முழுவதும்  சந்தனம் அப்பி இருந்த பலன்.

சுடலைமாடன் வில்லுப்பாட்டு தெருவின் எல்லா ஸ்பீக்கர்களும் பாடி கொண்டிருந்தது, தெரு முழுக்க பெண்கள் வாசல் தெளித்து கோலம் போட்டு கொண்டிருந்தனர், சரஸ்வதி காம்பௌண்ட் வெளியே சங்கரியும், குண்டு கோகிலாக்காவும் பெரிய மாக்கோலம் போட்டுக்கொண்டிருந்தனர், கோயில் வெளியே மாராசா மாமாவும், சுந்தர் மாமாவும் பேசி கொண்டிருந்தனர், என்னை அழைத்து ஆண்டாள் மாமா வீட்டுக்கு சென்று இதை கொடு என கையில் இருந்த பையை நீட்டினார். பையை வாங்கி நடக்க ஆரம்பித்தேன், உள்ளே உதட்டுக்கு பூசும் சாந்து, லக்ஸ் சோப்பு, பவுடர்,  சீப்பு, கண்ணாடி என எல்லாம் புதுசாக இருந்தது, போன வருடம் கார்த்தி போனான், இந்த வருடம் நான். கும்பாட்டகாரிகள் நல்ல அழகாக இருப்பார்கள் என்று மணி வேறு கூறினான், உடம்பு மெல்லிய உதறல் எடுத்து கை கால் முகம் எல்லாம் வியர்க்க ஆரம்பித்தது.

ஆண்டாள் மாமா வீட்டு முக்கு வரும் போதே மேள குழுவினர் பேசி சிரிக்கும் சிரிப்பொலி கேட்டது, இவர்கள்  போன வருடம் வந்தவர்களே, சிறிய பரிச்சயம் உண்டு, மனதுக்குள் ஆயிரம் கற்பனைகள், தேவயானியும் கவுசல்யாவும் ரோஜாவும் கும்பாட்ட காரிகளாய் கண்முன் வந்து கொண்டிருந்தனர், ஆண்டாள் மாமா வீட்டுக்குள் நுழையவும் வெளியே நல்ல உயரமாய் திடகாத்திரமாய் முறுக்கு மீசை வைத்து ஒருவர் பீடி வலித்து கொண்டிருந்தார், என்னை பார்த்து "என்ன தம்பி " என்றார் கணீர் என்று, "இல்லை இத கும்பாட்ட காரங்கள்ட்ட கொடுக்க சொன்னாங்க" என்று கையில் இருந்த பையை நீட்டினேன். "உள்ள ரூமுல இருக்காளுக, குடுங்க கொடுத்தருகேன்" என்றார். பெரிய கொலுசு ஒலி கேட்டது, நடுத்தர வயது பெண் ஒருத்தி வெளியே அவரை அதட்டிய படியே வந்தாள் "நீரு இன்னும் போகலியா, உம்ம வச்சுக்கிட்டு புல்லுக்கும் ப்ரோசனம் இல்ல", அவர் தலையை குனிந்து "இந்த பீடி குடிச்சுட்டு போலாம்னு இருந்தேன், இந்தா இந்த தம்பி கொண்டு வந்துட்டு" என்று என்னை நோக்கி கையை நீட்டினார். நான் அந்த பையை அவளிடம் நீட்டினேன், அவள் என்னை பார்த்து "தம்பி உள்ள லைட் எரிய மாட்டேங்குது என்னனு பாக்க தெரியுமா?" என்றாள்.

நான் அவளையே சில வினாடிகள் பார்த்தேன், ஒரு நடுத்தர வயது பெண், இவள்தான் ஒப்பனையிட்டு எங்கள் முன் கும்பம் எடுத்து ஆடும் கும்பாட்டகாரிகள். உள்ளே சென்றேன் ஒரு இளம் வயது பெண் தலைக்கு எண்ணெய் வைத்து கொண்டிருந்தார், ஒரு நாற்காலியை இழுத்து லைட்டுக்கு கீழே வைத்தேன், இரும்பு நாற்காலி இழுக்கும் போது கீச்சொலி கேட்டது ,உடனே ஒரு  குழந்தையின் அழுகை கேட்டது. அந்த நடுத்தர வயது பெண் "தம்பி பார்த்து போடப்பா, பாப்பா தூங்கிட்டு இருக்கு " என்றாள், நான் ஒரு நிமிடம்  அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற பிரக்ஞையே இல்லாமல் அப்படியே நின்றிருந்தேன்."அம்மா, தொட்டில ஆட்டு மா, நா முத குளிச்சிட்டு வந்திருகேன், பாப்பா எந்திரிக்க முன்னாடி தல காய வைக்கணும், அப்போதான் முழிச்ச உடனே பால் கொடுக்க முடியும், இல்ல கத்தி தீத்துரும்" என்றாள். நடுத்தர வயது பெண்ணும் சரி என்றாள், நான் டியூப் லைட் சோக்கை திருகி அதை எரிய வைத்து வெளியே வந்தேன், கோயிலுக்கு வெளியே மணியும், கார்த்தியும் நளி சிரிப்புடன் "என்னல இவ்ள சீக்கிரம் வந்துட்ட, ரொம்ப வேலையோ" என்றனர், பதில் கூற விருப்பம் இல்லாமல் கோயில் வேலைகளை பார்க்க ஆரம்பித்தேன்.

நேரம் ஆக ஆக கோயில் முன் கூட்டம் கூடியது, நையாண்டி மேள குழுவினர் மேளம் அடிக்க ஆரம்பிக்க, கூட தப்பு குழுவினரும்  சேர்ந்து தப்பு அடிக்க ஆரம்பித்தனர். நான் கோயில் வேலைகளை தவிர எதிலும் ஆர்வம் இல்லாதவனாய் நின்றிருந்தேன். இடையில் எல்லோரும் அமைதியாக ஆக, சலங்கை ஒளி கேக்க ஆரம்பித்தது, மனம் சில்லிட ஆரம்பித்தது, நான் ஏதோ தவறு செய்ய ஆரம்பித்தவனாய் பதற ஆரம்பித்தேன், மாராசா மாமா எதையோ கேட்க உளர ஆரம்பித்தேன், மாமா எழுந்து கோயில் திருநீறை என்னிடம் கொடுத்து அவர்களிடம் கொடுக்க சொன்னார், தயங்கி தயங்கி அவர்கள் அருகே சென்றேன், சலங்கை அணிந்த  கால்களை நோக்கியே திருநீறை நீட்டினேன், நடுத்தர வயது பெண் "லைட் எரிய வச்சுச்சே அந்த தம்பி"  என்று புன்னகை செய்ய , இளம் வயது பெண்ணின் சிரிப்பொலியும் கேட்டது, தைரியத்தை வரவழைத்து தலையை தூக்கி அவர்களை பார்த்தேன் , ஒப்பனையில் உண்மையிலே சினிமா நடிகைகளை போல் இருந்தார்கள், மனதுக்குள் எண்ணி கொண்டேன், ஒப்பனையில் அவர்கள் புறம் மட்டும் மாறுகிறது, அகம் அல்ல.  விளக்குப்பொலிவில் கும்பாட்டத்தை நான் பார்க்கவில்லை, ஓரமாய் அந்த  முறுக்கு மீசை வைத்த அண்ணனையும்  அவர் கையில் இருந்த குழந்தையையும் பார்த்தேன், இடையிடையே அந்த இளம்வயது பெண் அவரிடம் சென்று குழந்தையை தூக்கி பக்கத்தில் இருக்கும் குண்டு கோகிலாக்கா வீட்டுக்கு சென்று வருவதையும் கவனித்தேன்.  சாமி வேட்டைக்கு சென்று பூஜை முடிந்து வீட்டுக்கு செல்லும் போது மணி நள்ளிரவை தாண்டியது, வீட்டினுள் நுழையும் போது படுக்கை அறையில் விளக்கு எரிந்தது, எனக்கு அந்த மீசைக்கார அண்ணனும் கையில் இருக்கும் குழந்தையும் கண்ணில் தெரிந்தது.                                                          

   

No comments:

Post a Comment

இணைந்த கைகள்

  ஒரு மாலைநேரம், புதிய திரைப்படம். திங்கள் கிழமை,  மாலை நேரக்காட்சி,  இணைந்த கைகள்.  நிதானியுங்கள், அதே நேரம் உங்கள் மனைவி, அரசு மருத்துவமனை...