Tuesday 26 November 2019

நனையாத குடை





அலுவலகத்தில் இருந்து திரும்பும் போதுமுள்ள  இறுகிய முகத்துடனே இருந்தேன்.  லிப்ட்க்காக காத்திருக்கும் அளவு பொறுமை இல்லை.  முன்தள்ளிய சிறிய தொப்பையை சுமந்து கொண்டு படிக்கட்டுகள் வழியே கீழிறங்குவதே என்னை போன்றவருக்கு உடல் பயிற்சிதான்.  இத்தனைக்கும் மூன்றாவது மாடிதான். என்னை கடந்து வயதில் இளைய ஒல்லியான
 இளைஞன் ஒருவன் வேகமாக இறங்கி சென்றான்.  தரைத்தளம் சென்று வாகன நிறுத்தத்தில் ஆக்டிவாவை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு பறந்தேன் வழக்கமான 40 கி/ம வேகத்தில். பெங்களூரின் குளிர் அந்த நகரத்தையே குளிர்சாதன பெட்டியில் அடைத்து வைத்தது போலிருந்தது.

வெள்ளிக்கிழமை என்றாலே இந்த துறை சார்ந்த சிலர்க்கு திருவிழா மனநிலைதான். வீட்டுக்கு செல்லும் வழியிலே எனக்கு பிடித்தமான ராயல் சேலஞ்ச் கால் குப்பியும், கருப்பு திராட்சை கொஞ்சமும் வாங்கி கொண்டேன். வீட்டை திறந்து சோபாவில் அமர்ந்தேன். வீடு மிக சுத்தமாக இருந்தது. ஜன்னல் ஓரங்களில் அறையின் மேல் ஓரங்களில் வலை இல்லை. காகித சிதறல்களோ, வெட்டிய காய்கறியின் மிச்ச மீதியோ எதுவும் தரையில் இல்லை.

நானும் சகியும் மீராவும், மூவரும் இணைந்து கைகளை தூக்கியபடி நாவினை வெளிநீட்டி கடற்கரை மணலில்,  பின்மதிய வேளையில் எடுத்த புகைப்படம்  பொருத்தி இருந்த டிவியின் மேல் இருந்தது. டிவியை ஆன் செய்து, யூடுபில் இளையராஜாவின் பாடல்களை பாடவைத்தேன். குளியலறை சென்று என்னை சுத்தப்படுத்தி எனக்கு பிடித்தமான கண்ணாடி டம்ளரில் 45மில்லி விஸ்கி ஊற்றி,  90மில்லி தண்ணீர் ஊற்றி ஒரு மடக்கு குடித்தேன். அடுத்து திராட்சையில் வாயில் போட்டு மென்றேன். இந்த விஸ்கியும் திராட்சையும் என்றைக்குமே என் நண்பனை நியாபக படுத்தும்.

இளையராஜாவின் 'மன்றம் வந்த தென்றலுக்கு' பாடல் ஆரம்பிக்கும் போது என் கைபேசியில் சகி அழைத்தாள், அது எப்படி சகி என அழைப்பிலே தெரியும். அவளுக்கென தனி அழைப்பு மணி ராஜாவின் 'வளையோசை' புல்லாங்குழல் இசைத்துணுக்கு,  வெள்ளிக்கிழமை தவறாது நடப்பதில் இவளின் அழைப்பும் ஒன்றே. கைபேசி அழைப்பை ஏற்றேன், 

"ஹலோ மணி, வீட்டுக்கு வந்துடீங்களா, என்ன பண்றீங்க"

"இப்போதான்மா வந்தேன், பாப்பா வீட்டுக்கு வந்துட்டாளா. சும்மா டிவி பாத்துட்டு இருக்கேன்"

"பாப்பா வந்துட்டா,  உள்ள புக் படிச்சுட்டு இருக்கா. நீங்க பழக்கி விட்ட பழக்கம்  எப்போவும் புக்ஸ் தான்,  நைட் நேரத்துக்கு தூங்க மாட்றா. சரி அங்க எத்தனையாவது ரவுண்டு"

"சீ இன்னைக்கு மூட் இல்ல, குடிக்கல. போன வாட்டி அப்டித்தான், நைட் குடிச்சுட்டு காலைல பயங்கரமா தலைவலி." நான் பேசிக்கொண்டிருக்கும் போதே அவள் இடைமறித்தாள். 

"ஹலோ, எத்தன வாட்டி சொல்லிருக்கேன். இதே டையலாக் பன்னிரெண்டு வருஷமா எல்லா சனிக்கிழமை காலைலயும் சொல்றீங்க ஆனா ட்ரிங்க்ஸ் பண்றத விடல"

"ஏங்க ஒரு நிமிஷம் பாப்பா பேசணுமாம்"

"அப்பா"

"சொல்லுமா, என்ன படிக்கிற"

"கொற்றவை,  நெஸ்ட் வீகென்ட் த்ரீ டேஸ் லீவ் வருது.என்னைய மதுரை கூட்டிட்டு போறிங்களா"

"சரி மா, அப்புறமா அப்பா டிக்கெட் இருக்கானு பாத்து போட்டுடறேன்"

"லவ் யூ அப்பா, சரி நா இப்போ மதுரை சாப்டர்  வந்துட்டேன். நாளைக்கு காலைல நிறைய பேசணும்". 

"சரி மா, லவ் யூ. சீக்கிரம் தூங்கு சரியா". "சரிப்பா".

"ஏங்க அவள கெடுகிறதே நீங்கதான். கேட்டது எல்லாம் கொடுக்கீறீங்க". அவள் பேசிக்கொண்டிருக்கும் போதே அடுத்த 45மில்லியும் ஒரு  திராட்சையும் முடிந்தது.

"இல்ல மா,  அவ கேட்டது எல்லாம் நா பண்ணல. அதுலே எது சரியோ அத மட்டுமே பண்றேன். ஆனா என் பொண்ணு எப்போவும் சரியானத மட்டுமே கேக்கிறா".

"போதும் பா,  உங்க அப்பா மக புராணம். சரி நைட் என்ன டின்னர்".

"இன்னும் முடிவு பண்ணல, தோசை மாவு இருக்கு. ஸ்விக்கில செட்டிநாடு சிக்கன் கறி ஆர்டர் பண்ணனும்".

"ஸ்விக்கில ஆர்டர் பண்றத குறைங்க, ஒரு நிமிஷம் அவர் வந்துட்டாரு. நா வைக்கிறேன். எப்போ போல லேட்டா வராம நாளைக்கு சீக்கிரம் வாங்க" என்ற படி தொடர்பை துண்டித்தாள்.

ராஜாவின் 'ராஜா என்பார் மந்திரி என்பார், ராஜ்ஜியம் இல்லை ஆள' பாடல் ஒலித்து கொண்டிருந்தது.

அவளை விரட்டி காதல் செய்யவில்லை. ஒரே கல்லூரி, அதுவும் ஒரே வகுப்பு அதற்கான சந்தர்ப்பத்தை உருவாக்கவில்லை. முதல் வருடம் பெரிதாய் ஈர்ப்பு ஒன்றுமில்லை. பின் எந்த தருணம், சூழல் அவளை கவனிக்க வைத்தது என நினைவில் இல்லை. நாங்கள் படித்த காலம் பொறியியல் அவ்வளவு பரிச்சயம் கிடையாது, எங்கள் கல்லூரி தோவாளை மலையின் நேர் பின்புறம் அமைந்திருந்தது. புதிதாக திறக்கப்பட்ட கல்லூரி,  கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்கள், ஊரில் இருந்து கல்லூரிக்கு அழைத்து வர பேருந்து என எல்லாம் உண்டும். நான் ஒழுகினசேரி,  அவள் வடிவீஸ்வரம் பேருந்தும் ஒன்றே.  அவ்வூரில் மழை பொழிந்தபடி இருக்கும்,  தாழ்ந்து மிதக்கும் கார்மேக கூட்டம் எப்போதும் மழை பொழிய தயாராய் இருக்கும். 

அதுவும் ஒரு மழை நேரம்,  செமஸ்டர் தேர்வின் போது,  எங்கள் பேருந்தில் அன்றைய நாள் மாணவர்கள் குறைவு. கல்லூரியை பேருந்து அடையும் போது பேய் மழை. என் கையில் குடை இல்லை,  என் முன்னால் அவள் இறங்கி விட்டாள். புத்தகத்தை சட்டைக்குள் மறைத்து நான் படிக்கட்டு வழியே தலையை வெளி நீட்டும் போது அவள் குடையுடன் எனக்காக நின்றிருந்தாள். நான் கீழிறங்க குடைக்குள் என்னை அடைத்துவிட்டாள். 

அளவில் சிறிய குடை,  மழை துளி மேல்பட அவள் என்னிடம் மேலும் நெருங்கினாள். என்னையும் மழையில் நனையாதவாறு உள்ளே வர சொன்னாள். எதுவும் உணர்ந்து அதன்படி நடக்கும் நிலையில் நான் இல்லை,  இழுத்துக்கொண்டு  போவது போல் அவளோடு நடந்தேன். மழை நீரோடு மண்ணும் இணைந்த கலங்கிய நீர் போல நானும் அவளும் நடந்து தேர்வு அறையை அடைந்தோம். அந்த குடை முழுக்க நிறைந்திருந்த பவுடர் மணமும்,  அவளின் மணமும் என்னுள் முழுதாய் இறங்கி இருந்தது. அன்றைய தேர்வு முடிந்து பேருந்தில் ஏறி வீடு திரும்பிக்கொண்டிருந்தோம். மழை மேகம் கலைந்து ஒரு செவ்வொளி பரவி இருந்தது,  பேருந்தின் ஜன்னல் இருக்கையில் அமர்ந்திருந்த அவளின் முடியில் பட்டு ஜொலித்தது,  பேருந்து  அவள் நிறுத்தத்தை அடைந்தது. அதன் அருகே டீக்கடை ஒன்று உண்டு, எப்போதும் ராஜாவின் பாடல்கள் ஒலிக்கும். அவள் இறங்கும் போது 'கோடைகால காற்றே' பாடல் இதமாய் காதில் நுழைந்தது. அவள் இறங்கி நடக்க ஆரம்பித்தாள்,  பேருந்து மெதுவாய் வளைவில் திரும்ப நான் அவள் போகும் பாதையில் தலையை திருப்பி பார்த்தேன்,  அவளும் பார்த்தாள்.

கல்லூரி நாட்களில் மகிழ்ச்சியான நேரங்கள் கல்வி சுற்றுலா செல்வது. பெயர் தெரியாத அலுவலகத்தின் பெயரை முன்வைத்து பிடித்தமான இடங்களுக்கு செல்வது வழக்கம். அது மூன்றாம் வருடம் அதிரப்பள்ளி அருவிக்கு சென்றோம்,  நாங்கள் நண்பர்கள் கூட்டம் அவசரமாய் அருவியின் கீழ் பகுதிக்கு இறங்கி சென்றோம்,  அவளோடு போகவே ஆசை ஆனால் நண்பர்கள் விடவில்லை. அருவியின் சாரல் எங்களை நனைத்து விட்டது,  நனைந்தபடியே நின்றிருந்தோம்,  தோழிகள் கூட்டம் எங்களருகே வந்தது. சாரலின் ஒரு துளி அவள் புருவத்தில் ஒற்றை வைரம் போல் மின்னியது. இதுதான் சரியான தருணம் என அவள் அருகே சென்றேன். மெதுவாய் உரையாடலை ஆரம்பித்தேன்.

"எவ்ளோ பெரிய அருவி இல்ல"

"சூப்பரா இருக்கு" என்று கைகளை கன்னத்தில் வைத்து சிரித்தாள்.

"புன்னகை மன்னன் இங்க தான் எடுத்தாங்க" என்றேன். அவளுக்கு ஏற்கனவே தெரியும் இருந்தும் "அப்படியா" என்றாள்.

"இதே மாதிரி இன்னொரு நாள் உன்கூட இங்க வரணும்"

"வந்துட்டா போச்சு"

"அன்னைக்கு உன் கைய என்னோட கையால இறுக்க பிடிச்சுக்கணும்" எனும் போதே. என் கைகளை இறுக்க பிடித்து "அது ஏன் இன்னொரு நாளைக்கு" என்றபடி என்னை பார்த்து மென்மையாய் சிரித்தாள். அருவியின் ஓலம் என் மனதிற்குள் பேரொலியாய் ஒலித்தது. 

சட்டென்று எழுந்தேன். நினைவில் மூழ்கி விட்டால் நேரம் போவது தெரியாது. 90மில்லி தான் முடிந்திருந்தது. அடுத்த மில்லியை ஊற்றி விட்டு என் கல்யாண வீடியோவை டிவியில் ஓட விட்டேன். நானும் அவளும் ஒல்லியாய் இருந்தோம். தாலி கட்டும் நேரம் என் கைகள் நடுங்கியது. கட்டிய உடன் சுற்றி இருப்பவரை மறந்து அவள் நெற்றியில் முத்தமிட்டேன். பால்யம் எப்படி ஏங்க வைக்குமோ, அதே போல் என்னை ஏங்க வைக்கும் தருணங்களில் இதுவும் ஒன்று, மற்றொன்று மீராவை என் கைகளில் நான் முதன்முறை வாங்கிய தருணம். யாரிடம் கூறினாலும் நம்பவில்லை,  என் மீரா அன்று என்னை பார்த்து புன்முறுவல் கொண்டாள்.

வேகமாய் அடுத்த மில்லியை ஊற்றி முடித்துக்கொண்டு, படுக்கைக்கு சென்றேன். அவள் என்னோட இருந்த நாள் வரை குடித்து விட்டு சாப்பிடாமல் என்னை உறங்க விட்டதில்லை. என்னை விட்டு பிரிந்து இன்றோடு ஆறே முக்கால் வருடம் ஆகி விட்டது. அப்போது மீராக்கு ஆறு வயது,  என்னவென்று அறியாத வயதில் அவளுக்கு நான் கொடுத்த பெரும் துயரம் அது. ஏன் எங்களுக்குள் அப்படியொரு சண்டை. மீராவின் நான்கு வயது முதல், ஆறு வயது வரை. முழுதாய் இரண்டு வருடம் மகிழ்ச்சியாக நினைத்து பார்க்க ஒரு நாள் கூடவா இல்லை. ஏன் சண்டை, எதற்கு என்ற காரணமும் இல்லை. அவளை நான் ஏன் பிரிய வேண்டும்.

மிக தைரியமான பெண் அல்லவா சகி,  எதற்கு அவளை வெறுத்தேன். எனக்குள் எழும் பல குழப்பங்களுக்கு சரியான பதிலை அவள் அளித்ததா? இல்லை சில நேரங்களில் என்னை மிஞ்சிய அவளின் முதிர்ச்சியா?  எங்கே அவளிடம் நான் கீழிறங்கி போக வேண்டும் என்ற ஆணின் பொறாமையா?  தாழ்வுணர்ச்சியா?  இதன் விடை எது. அவளை வேலைக்கு செல்லாதே எனுமளவுக்கு நான் ஏன் மாறினேன். மொத்தமாய் எது என்னை மாற்றியது. வேலையில் அவளின் சம்பளம் இல்லை அவளின் முன்னேற்றமா?  அவள் என்னவள் அல்லவா?  இருப்பினும் ஏன் இத்தனையும் வேகமாய் கடந்தது. வாழ்வின் என் பெரும்சுமையை குறைத்தது தான் இவள் செய்த தவறா?  இல்லை என்னை முந்தி செல்லும் அவளின் திறமையா?  எதுவாயினும் கடந்து போன, நான் இறங்கி இருக்க வேண்டிய தருணங்களை  முற்றிலுமாய் இழந்துவிட்டேன், அதைவிட தவிர்த்து விட்டேன் என்பதே சரியாய் இருக்கும்.

பிரியும் தருணம் கூட என்னிடம் உடைந்து அழுதாளே, குழந்தைக்காக இதை நாம் ஏன் மறுமுறை சிந்திக்க கூடாது என,  எத்தனை நாட்கள் நான் வருவேன் என்று  காத்திருந்து திரும்பி சென்றிருப்பாள்.நான் விரும்பியது இதுதானோ என்னிடம் அவள் தோற்க வேண்டும். இதையெல்லாம் இன்று யோசிக்கும் நான், அன்று அம்மனநிலையிலே இல்லை. 

மீராவுக்கு ஏழு வயது தொடங்கிய நேரம். அவள் இரண்டாவது திருமணம் பற்றி என்னிடம் பேசி முடிவெடுக்க வந்தாள். நான் அவளின் எண்ணங்களை சொல்லி முடிக்கும் வரை தலையை நிமிர்ந்து பார்க்கவில்லை. கடைசியாய் எதாவது சொல்ல விரும்புகிறாயா எனும் போது,  வாரத்திற்கு இரண்டு நாள் மீரா என்னோடு வர வேண்டும் எனும் போது, சரி என தீர்க்கமாய் சொல்லி வேகமாய் நடந்து சென்றாள்.

நான் அடுத்த வார இறுதி மீராவை அழைத்து செல்ல அவளின் வீட்டு முன் ஆட்டோவில் இருந்து இறங்கினேன். அவனும் அவளோடு வந்தான். என்னை பார்த்து புன்னகையுடன் நலம் விசாரித்தான். மீராவின் ஒவ்வொரு பிறந்த நாளுக்கு மட்டும் அவள் வீட்டுக்கு செல்வது வழக்கம். நாட்கள் வேகமாய் செல்ல, இன்று எனக்கு ஒரு நல்ல தோழியை போல  என்னுடன் பயணிக்கிறாள். அதுவும் அவளாக முன் வந்து என்னிடம் கூறியது. என் மனதில் இன்றைக்கும் இவளை தவிர பெண்ணொருத்தி இல்லை.

 நினைவுகள் ஒவ்வொன்றும் உறங்க விடவில்லை. ஒரு வழியாய் உறங்கி போனேன். காலை எழுந்த போது கைபேசியில் இரண்டு விடுபட்ட அழைப்புகள் மீராவோடது. அவளை விட்டு பிரிந்த நாட்களில் எனக்கு பெரிதும் துணையாய் இருந்தது புத்தகங்களே. இன்னொன்று ராஜா. என் எல்லா மனநிலைகளுக்கும் அவரின் இசை ஏதாவது ஒன்று கூடவே பயணிக்கும். புத்தகங்கள்  என் மகளோடு அவளின் அன்னையை தவிர்த்து பேச பெரிதும் உதவியது. மீராவுக்கு குறும்செய்தி அனுப்பி, இதோ அவளுக்காக நான் புதிதாய் வாங்கிய புத்தகங்களை என் பையில் நிரப்பி குளிக்க சென்றேன். வழக்கமான உணவகத்தில் மூன்று இட்லிகளை விழுங்கி அவள் வீட்டுக்கு சென்றேன்.

எப்பொழுதும் செய்வது தானே அவளின் வாசல் கதவருகே ஹார்ன் இருமுறை அழுத்தினேன். இந்த ஊரிலும் மழை பெய்யும் நேரம் முடிவு செய்ய இயலாது. சிறிய சாரல் பொழிய ஆரம்பித்தது. மீரா எனக்காக வெளியே காத்திருந்தாள். அவள் பின் இருக்கையில் ஏறி வண்டி சிறிது தூரம் சென்று இருக்கும். சகியின் குரல் பின்னால் கேட்டது.

"மீரா, ஒரு நிமிஷம் குடை எடுத்திட்டு வரேன். நில்லுங்க"

வண்டியை ஓரம் கட்டினேன்,  அவள் ஓடி வந்தாள். கையில் குடை. சாரலின் ஒரு துளி அவளின் ஒற்றை புருவத்தில்  வைரம் போல மின்னியது.

"பாத்து போங்க, மழைல நனையாதீங்க" என்றாள்.

சரி என்று தலையை ஆட்டி கிளம்பினோம். மீரா கேட்டாள். 

"போன்ல நல்லாதானே பேசுறீங்க, அப்புறம் ஏன் நேர்ல அம்மாட்ட பேச மாட்ரிங்க".

இதற்கான விடை எனக்கு தெரியும். ஆனால் என் மகளுக்கு அது தெரிந்து ஒருவேளை என்னை வெறுத்து விடுவாளோ என எண்ணி வேறு விஷயங்கள் பேசி அவளை மாற்றினேன். நான் ஆண் என்றதே, பெண் எனக்கு கீழே எனும் சராசரி ஆணின் மனநிலை அன்று. இன்றோ என்னுடன் பின் இருக்கையில் என் தோளை இறுக்கி பிடித்து இருக்கும் மீரா என்னை மாற்றுகிறாள். ஏன் இதே நான் சகியின் இறுக்கத்தில் மாறவில்லை. மகளுக்கும் மனைவிக்கும் ஆண் மனதின் வேறுபாடு தான் என்னவோ.

 சகியின் அன்பு பரிசுத்தமானது,  ஆண் எனும் இறுமாப்பே அன்பு எனும் அடை மழையில் என்னை முழுதாய் நனைக்காத குடையாய் மறைத்து விட்டது. ஆம் மழை பெய்தும் நனையாத குடை நான். 

நான் மணியன் சகுந்தலா. வயது முப்பத்தேழு.






1 comment:

  1. மனித மனம். அதுவும் ஆணின் மனம் மாறுபட்டது. ஒரு பெண் தனது அன்னையாகவோ அல்லது தனது மகளாகவோ இருக்கும் போது வரும் நேசத்தை விட தனது மனைவியிடம் காட்டும் நேசம் குறைவு தான்.. அதுவும் காதலியாக இருக்கும்போது வேறு. மனைவியாக மாறியவுடன் வேறு.. கதை வாசிக்க நன்றாக இருந்தது.

    ReplyDelete

இணைந்த கைகள்

  ஒரு மாலைநேரம், புதிய திரைப்படம். திங்கள் கிழமை,  மாலை நேரக்காட்சி,  இணைந்த கைகள்.  நிதானியுங்கள், அதே நேரம் உங்கள் மனைவி, அரசு மருத்துவமனை...