Saturday 11 January 2020

கோம்பை





மட்டி குலையை கயிறில் மாட்டும் போதே  நாடாருக்கு எரிச்சல் கூடியது.  மட்டி பரவாயில்லை அடுத்து ஏத்தன் குலை. ஆள் கசண்டி, கஞ்சப்பிசினாரி. கருத்த  உழைத்த தேகம்.சிறிதாய் வளமாய் முன் பிறந்திருக்கும் தொப்பையின் மேலே தொப்புள் உள்மறைய கட்டியிருக்கும் சாரம். காலில் லூனார்ஸ்,  வாங்கி பலயுகம் ஆயிருக்க வேண்டும்.   தேய்ந்து தேய்ந்து மறுப்பக்கம் நோக்கினால், இப்பக்கம் மங்கலாய் காணலாம். வயதை அறிய விசாரணை தான் வேண்டும். சரியான சீரான பற்கள் வரிசை, நாடார்களுக்கு பொதுவாய் உழைப்பில் அபரிதமான ஈட்டு நம்பிக்கை. இதன் இணைக்காரணியோ இவர்க்கு கோபம் அதிகம், அசல் நாடாரை விட.

 வழக்கமாய் இங்குதான் அலைவான், இன்றென்ன ஆளையே காணும்.  மனதிற்குள் யோசித்தபடியே வெளியே ஓடு இறங்கி மிச்சம் நீண்டிருக்கும் பனையில் கட்டிய கயிறில் மட்டியை மாட்டவும் குழையின் அடியில் மெலிந்த இரு கை தாங்கி கொண்டது.  

"நாடாரே, கீழ தொங்குது.  தூக்கி பிடிச்சு மாட்டும்" என்றான் கோம்பை. 

நாடாருக்கு கோபம் பொங்கி, ஓங்கி படாரென்று அவன் முதுகில் அடித்தார்.  "பட்டிக்கு கொழுப்ப பாத்தியா,  கட்டழிஞ்சு போவோனே.  தூக்கி பிடில புலையாடி மவனே" என்றார். 

"நானும் குழையத்தான் வோய் சொன்னேன், அடிச்சிட்டீரே" என்றான் கண்கள் கலங்கியபடி. 

மொத்தமாய் எல்லா தொங்க விட்டவுடன்.  நாடார் பத்து ரூபாயை நீட்டினார், அவருக்கும் அவனுக்குமாய் டீ கடையை நோக்கி டூர் டூர் என்று வாயால் ஒலி எழுப்பி, அவன் மட்டுமே அறிந்த முன்னே நிற்கும் குதிரையை எழுப்பி அதன் மேல் ஏறி டீ கடைக்கு சென்றான். 

கோம்பை இதுவா பெயர், சூர்யபிரகாஷ் இதுதானே இட்ட பெயர். சாலியர் தெருவில் வீடு, அப்பா பள்ளிக்கூட வாத்தியார்.  கைக்குழந்தையில் என்ன குற்றம் கூற முடியும்,  மூன்று வயதை கடந்தவுடன் தான் சிறிது விளங்க ஆரம்பித்தது. இடது வாயின் ஓரம் வடியும் எச்சில், அங்கொன்றும் இங்கொன்றுமாய் முளைத்த பற்கள்,  எப்போதும் முன்மடிந்த நாக்கு,  அங்கும் இங்கும் அலைக்கழிந்து நிற்காது ஓடும் கால்கள்.  சிலநேரம் அசையாது எதையோ உற்றுநோக்கும் பாவம். 

அப்பனுக்கோ காரணமா வேண்டும்,  இது போதாது.  மாலை வரை கையில் புத்தகம், பின்னிரவு வரை மதுகுப்பி.  அம்மைக்கு வாய் உண்டு, உண்ண மட்டுமே.  இவன் பிறந்து என்ன வருத்தமோ, ஆள் மெலிந்து விட்டாள்.  அப்பனின் அங்கலாய்ப்பு அடுத்த குழந்தையின் அழுகுரல் அவ்வீட்டில் இவனை அடுத்து ஒலிக்கவில்லை. 

வினோதம் என்னவென்றால் இத்தெருவில் இரண்டு வீட்டுக்கு ஒருவர் சூர்யபிரகாஷ் போல,  யார் வீட்டு இசக்கியின் சாபமோ. எது எப்படியோ புதிதானவரின் கண்களில் நுழையும் இத்தெருவின் காட்சி கொஞ்சம் மனதை சங்கடப்பட வைக்கும்.

குடியின் வெறியோ, மகனின் நிலை கண்ட கையறு நிலையோ, எதுவும் செய்யவியலா இயலாமையோ. எதை தீர்க்க அப்பாவின் கைகளின் உள்காய்ப்புக்கு இவன் வேண்டும். விவரம் அறியும் வயதில் பாதி நாட்களை அவன் சங்கிலியில் கழித்திருந்தான். சங்கிலிக்கு பெரிதொன்றும் தேவையில்லை. பேச்சிலோ செய்கையிலோ காணவியலா காரியம், சட்டென ஆள் எங்கோ மாயமாகும் கண்ணன். பின் சுடுகாட்டிலோ, தோப்பிலோ பிடித்து அடிமாடாய் வீட்டுக்கு அழைத்து வர வேண்டும். இதுதான் சங்கிலியின் சேதி. சிறுவயதில் சூரியனை பெரிய மின்விளக்கு என்றே அவன் அறிந்திருந்தான். நிலவு மென்மையாய் ஒளி பரப்பும் பெரிய இரவு விளக்கு அவ்வளவே. 

எந்த போதி மரத்தின் அடியில் உட்காந்தோரோ, இல்லை எந்த சித்தார்த்தனை கண்டாரோ அவனை அடிப்பதை கைவிட்டார். மாறாய் என்றும் குடியை விடவில்லை. ஐந்து வயதில் காலில் மாட்டிய சங்கிலி அவன் பத்தொன்பது வயதில் தான் திறந்தது. 

சில பெண்கள் சபிக்கப்பட்டவர்கள்,  கட்டியவனையா இல்லை பெத்தவனையா எவனுக்காக வருத்தப்பட, கண்ணீர் சிந்த. மெலிந்த தேகம் மேலும் சிறுக்கும். நேரத்திற்கு பொங்க,  துணி துவைக்க, வீடு பெருக்க பாதி நேரம் அதிலே கழிந்து விடும். இவனின் பீயும் மூத்திரமும் இப்போதெல்லாம் ஒழுங்காய் அவனே வெளியேற்றி விடுகிறான். சிலநேரம் பெத்தவளின் கண் முன்னே அம்மணமாய் ஓடுவான். அம்மைக்கு எத்தனை வயதிலும் மகன் மகன் மட்டுமே. 

அவிழ்ந்த சங்கிலியின் பதினான்கு வருட இறுக்கம், அதன்பின் இரவில் மட்டுமே வீட்டில் தஞ்சம் அடைவான். இருமி இருமியே நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் அம்மைக்கு தினம் இரவு அவன் வீட்டிற்கு வந்தாலே ஆசுவாசம் தான். அப்பனுக்கு குடலிறங்கி குடி குறைந்து, கோவிலும் கோவிலும் என நாட்கள் நீள்கிறது. வாத்தியார் சோலி மாதம் பென்சன் கிடைக்கிறது, வீடும் சொந்தம். வாழ்வதற்கு தகும் இச்சிறிய குடும்பத்திற்கு.


கடைத்தெருவுக்கு பத்தொன்பது வயது முதல் வருகிறான். இப்போது நாற்பதை நெருங்கி இருக்கும். இன்றைக்கும் நிக்கர், மேலே வெளிறிய ஒரு சட்டையை அணிந்திருப்பான். மாதம் ஒருமுறை அப்பா ஒழுங்காய் முடி வெட்டி விடுகிறார், கூடவே சவரமும். இன்றும் வாய் ஒழுகுகிறது, ஒழுங்காய் அவனே துடைக்க பழகி கொண்டான். காலில் செருப்பு அணிவதில்லை. எப்படியோ நகங்களை சீராய் வெட்டி கொள்வான். கால்களின் இடைவெளியை சீராய் வைப்பதில் என்ன கஷ்டமோ, நிற்கும் போது வலது கால் முன்னே வளைந்துபின்னி இடது பின்னே நிற்கும். நடப்பதில் குறையில்லை, என்ன குதிகால் முதலில் நிலம் தொடும்.

கடைத்தெரு வந்த புதிதில், இதோ இதே நாடார் கடையில் வாழை பழம் வேண்டும் என அடம்பிடிக்க,  நாடார் தலையில் தட்டி காசு கேட்டுள்ளார். "பழம், பழம் " என கூறியதையே திரும்ப திரும்ப சொல்லி கொண்டிருந்தான். கோவக்கார நாடார் நாக்கை மடித்து "தள்ளி போல எரப்பாளி, பட்டி. தொழில் நேரத்துல" என கத்த,  உடனே பக்கத்தில் இருந்த வெஞ்சன சாமான் கடையில் கை நீட்டி காசு கேட்டுள்ளான், அவர் பயந்த சுபாவம். வேண்டா வெறுப்பாய்   முதலாளி காசை கொடுக்க,  நாடார் பழத்தை நீட்டியுள்ளார்.

அன்றைய நாள் வெஞ்சன சாமான் கடையில் அமோக வியாபாரம். ஜோசியம், கைராசியில் நம்பிக்கை கொண்ட முதலாளி அடுத்த நாளும் அவன் கையில் காசை கொடுக்க அவன் வாங்கவில்லை. மாறாய் பக்கத்தில் இருந்த சைக்கிள் கடையில் காசு வாங்கி நாடார் கடையில் பழம் வாங்கி உள்ளான். அன்றைக்கு என ஊரில் பலர் சைக்கிள் பஞ்சர் போல,  ஓரளவுக்கு லாபமே. 

அப்போதில் இருந்தே இவனாய் கை நீட்டி காசு கேட்டால் யாரும் மறுப்பதில்லை, பதிலாய் எல்லாருக்கும் அதில் விருப்பமே. இருப்பினும் இவன் என்றைக்கும் வாங்குவதில்லை,  சிலநேரம் வாரக்கணக்கில் மாதக்கணக்கில் காசு யாரிடமும் வாங்க மாட்டான்.

ஒரு நாள், நாடார் கடைத்தெரு வியாபாரிகள் கூட்டத்தில் "ஆளு கோம்பையன் மாரி இருந்தாலும், கை ராசி காரனாக்கும். உத்தேசிக்கணும் இவன மாரி ஒருத்தன் மாட்ட. கிடக்கட்டும் எங்கனியும். ஆளுக்கு மாசம் கொஞ்ச காசு கொடுப்போம். முதலயா கொடுக்க போறோம்." என்று சொல்ல. நாடாரின் பேச்சுக்கு மறுபேச்சு இன்றி எல்லாரும் ஒத்துக்கொள்ள கோம்பைக்கும் ஒரு வேலை கிடைத்தாயிச்சு. பேரும் புதிதாய் கோம்பை என சூட்டியாச்சு.

பின்னே அவன் செய்யும் வேலைக்கும் கூலிக்கும் மரமேறி  பலா பறித்தவனுக்கு கொட்டை கொடுத்தது போல.  லாபம் தானே அவர்களுக்கு,  கோம்பைக்கு பத்து காசும் ,ஒரு  பாளையம்கோட்டான் பழமும் ஒன்றுதான். கொடுப்பதை வீட்டில் கொடுத்து விடுவான். கிடைப்பதை உண்பான், சுகபோகி எதிலும் நிறைவை கண்டான். இதுதானே எங்கே பலர்க்கும் இல்லாதது.

நாடார் கடையின் ஓடு சாய்விற்கு மேலே விளம்பர பலகை ஒன்றை வைக்க விரும்பினார். பன்னாட்டு குளிர்பான நிறுவனம் இலவசமாய் கொடுத்த பெயர் தகர பெயர் பலகையை. ஆமாம் பெரிதாய் அவர்களின் முன்மொழிவும், கீழே சிறிதாய் நாடாரின் கடை பெயரும் இருந்தது அவ்வளவே. வந்தவர்கள் அரை மணிநேரத்திற்குள் மேலே கட்டி அடுத்த கடைக்கு விரைந்தனர். கடைத்தெருவில் உள்ளோரின் கண்கள் அந்த விளம்பர பலகையை நின்று ஒருநிமிடம் கவனிப்பதில் என்ன பெருமையோ, உள்ளூற மகிழ்ச்சிதான். நாடார் தினம் ஒருமுறை மேலே விளம்பர பலகையை பார்த்துக்கொள்வார். கோம்பைக்கு என்னவோ அந்த பலகையில் வெறுப்பு. வழக்கமாய் கடையின் ஓட்டு சாய்வின் அந்தப்பக்கம் எழும்பி நிற்கும் புளியமரத்தின் பின்நிழலை அதன் வழியே நோக்குவதில் இவனுக்கு விருப்பம். அக்காட்சியை மறைத்து விடுகிறது.

வருடம் முழுவதற்கும் விட்டு விட்டு மழை பொழியும் ஊர். மழையோடு ஊழிக்காற்றும் இணைந்து கொண்டு பேயாட்டம் போட்டது. கடை திறந்தாலும், சாமான் வாங்க ஆள் வருவதில்லை. பாதி கடை பூட்டி இருந்தது. கடைத்தெரு சாலை எங்கும் அங்கங்கே மழை நீர் கட்டி, ஆண்டவன் அதான் நாஞ்சிலை ஆண்டவன் நெஞ்சிலே செருகும் பட்டயமாய் கிடந்தது. 

அந்நாட்களிலும் கடைத்தெருவுக்கு கோம்பை சரியாய் வருவதுண்டு. எந்த வருகைப்பேட்டில் ஒப்பிட வேண்டுமோ. நாடார் கடையை பண்டிகை நாள், வெயில், மழை என  எப்போதும் பின்னிரவில் பூட்டி காலை விடியும் முன்னே திறந்திடுவார். எள்ளு போல இடம் என்று சொல்லி சொல்லியே மூன்று நான்கு ஏக்கர் வாங்கி விட்டார். காடும் நிலமும் வீடும் இருந்தும் இரண்டில் ஒரு தீபாவளிக்கு தான் சட்டை வேஷ்டி.

அன்றைய நாள் காற்றின் வேகம் மெல்ல அதிகரித்தபடியே இருந்தது. கடைத்தெருவில் பெரும்பாலும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. நாடார் கடையின் மேலே மாட்டியிருந்த பலகையின் ஒருபக்கம் கயிறு அறுந்து,  காற்றின் வேகத்தில் அதன் போக்கிலே இழுத்தபடி ஆடிக்கொண்டிருந்தது. 

நாடார் கடையில் இருந்த நீண்ட சவுக்கு கம்பின் துணைகொண்டு அவிழ்ந்த கயிறின் ஒருபக்கத்தில் கம்பை அடைகொடுத்து வைத்தார். சொல்லிவைத்தார் போல கோம்பையும் வந்து சேர்ந்தான்.

"லேய், மேலே மெல்ல ஏறி. அந்த கயிறை இறுக்கி கட்டு" என்று அவனை மேலே ஏற்றி விட்டார். நெடுநாள் மழை ஓட்டின் மேலே பாசி பிடித்து இருந்தது. கவனமாய் கால்களை அதன் மேல் வைக்க, நாடார் அவனை கவனித்தபடி இருந்தார். 

கயிறை இறுக்க அடைகொடுத்த கம்பை நீக்கி,  பலகையை வசமாய் தொடையில் வைத்துக்கொண்டான். நாடாருக்கு பயம் எங்கே கீழே விழுந்து விடுவானோ என்று. "லேய்,  பிள்ளே பதுக்க செய்யணும். கவனம் " என்று கத்தியபடியே நின்றார்.

சட்டென்று வீறு காற்று,  கடையின் பின்னிருக்கும் புளியமரத்தின் கொப்பெல்லாம் ஆயிரம்கை விரித்து ஆடியது. மாட்டிய எல்லா கயிறும் அவிழ்ந்து,  அவனின் கை நவிழ,  தொடையில் இருந்த ஒருமுனையின் கூர் ஆழ பதிந்து, இரத்தம் சொட்ட.கோம்பை வலியால் துடித்தான். நாடார் அவனை மெதுவாய் பிடித்து கீழிறக்கி,  கடையில் இருந்த துணியை புண்ணில் சுற்றிகட்டி அவனை இழுத்துக்கொண்டு, பக்கம் இருந்த ஆசுபத்திரி அழைத்து சென்றார். கோம்பையின் கண்ணில் நீர் வழிந்தபடியே இருந்தது. புண்ணில் மருந்து வைத்து, மாத்திரைகளையும் வாங்கி  வீட்டிற்கு கொண்டு விட்டார். நாடார் கோம்பையின் வீட்டிற்கு வருவது அதுவே முதல்முறை. 

பெரிய வீடு, சுண்ணாம்பு கண்டு பலவருடம் ஆயிருக்க வேண்டும். "ஆள் உண்டா" பலமுறை அழைத்து உள்ளே நுழைந்தார்,  நீண்ட வீடு,  வரிசையாய் அறைகள்,  எல்லாம் தூசும் சிலந்தி வலையும் படிந்து. மெலிந்த கூன்கிழவி சமையல் அறையில் கஞ்சி வடித்துக்கொண்டிருந்தாள். நாடார் அவளை அழைத்தாள்,  கோம்பை அரைமயக்கத்தில் இருந்தான். 

"பிள்ளைக்கு அடிபட்டுட்டு,  ஆசுபத்திரி கூட்டிட்டு போனோம்.  இன்னாருக்கு மருந்து" என கையில் இருந்த மருந்தை அம்மையிடம் நீட்டினார்.

எதுவும் பதில் கூறாது வாங்கிகொண்டாள். ஏதோ ஒரு அறையிலிருந்து வெளிவந்த அப்பனோ எதுவும் கேட்காது, அவர்களின் மீது பார்வையை சிலநொடிகள் வீசி இருமியபடியே அவர் அறைக்குள் நுழைந்தார்.

அந்த வீட்டில் இருந்து வெளிவந்த நாடார், ஏதோ பெருத்த கனத்தை வாங்கிதான் வந்தார். கோம்பையின் நினைவு அடுத்த நாளும் நாடாருக்கு இருந்தது. வியாபார சூட்டில் நாளை செல்லலாம் என நினைத்து கொண்டார்.

நேரம் விடிந்து, கடையில் தெரிந்தவனை நிறுத்தி, கோம்பையின் வீட்டிற்கு விறுவிறுவென மிதித்து சைக்கிளில் சென்றார். வீடு திறந்து கிடந்தது. அழைத்தும் யாரும் வரவில்லை. மெதுவாய் உள்நுழைந்தார்,  ஏதோ அறையில் துணி அலசும் சத்தம் கேட்டது. கோம்பையை தூங்க வைத்த அதே அறைக்கு சென்றார். 

கோம்பை படுத்திருந்தான் புலம்பியபடியே,  அருகே உண்டும் சிந்தியும் கஞ்சி தட்டம் கிடந்தது. மெதுவாய் கையை பிடித்தான்,  அனலாய் கொதித்து கொண்டிருந்தது உடல். அம்மையை அழைத்தார் அவள் உடல் நடுங்கியபடி "காய்ச்சல் அடிக்கா" என்றாள், நீர் ஒழிகிய கண்களோடு.  அவள் ஏதோ புலம்பினாள், நாடாருக்கு விளங்கவில்லை.

எதை நினைத்தாரோ,  அவனை இறுக்கி பிடித்து தோளில் தூக்கி வந்த சைக்கிளை விட்டு ஆசுபத்திரிக்கு நடந்தார். வைத்தியம் முடிந்து,  அவர்க்கு ஏதோ வீட்டில் விட மனம் எழவில்லை. 

கடையின் உள்ளேயே அவர் மதியம் உறங்க சிறிது இடம் உண்டு, அங்கேயே போர்வை விரித்து அவனை கிடத்தி கவனித்து கொண்டார். இரண்டு நாள் இருக்கும், கோம்பை விழிப்பான், உண்பான் பின் உறங்குவான். 

மழை விட்டு சூரியனின் மென்மஞ்சள் ஒளி வீசி கொண்டிருந்தது. விற்று தீர்ந்த ஏத்தன் குலையை நீக்கி புதிதாய் கட்டிய கயிறில் தொங்கவிட குலையை தூக்கவும்,  மெலிந்த கை குழையின் அடிதாங்கி கொண்டது. 

"நாடாரே, குலையை தூக்கி கட்டும்" என்றான் கோம்பை.

"எரப்பாளி,  தூக்கி பிடில. இரண்டு மூணு நாளாயிட்டு பிள்ளைய இப்டி பாத்து. தூக்கி பிடிமோ"  என்றார்.

No comments:

Post a Comment

இணைந்த கைகள்

  ஒரு மாலைநேரம், புதிய திரைப்படம். திங்கள் கிழமை,  மாலை நேரக்காட்சி,  இணைந்த கைகள்.  நிதானியுங்கள், அதே நேரம் உங்கள் மனைவி, அரசு மருத்துவமனை...