Monday 27 January 2020

பாரபாஸ்




சிலுவையில் அறையப்பட்டார்.  நம் பாவங்களை சுமந்து கொண்டு மனிதகுமாரர். முதுகின் உள்தோளையும்  ஊசி போல  துளைக்கும் கொடூர சவுக்கடியின் வலியும். உள்ளங்கைகளில்  கால்களின் பாதங்களில் அடிக்கப்பட்ட நரம்புகள், எலும்புகள் வழியே துளைத்த  ஆணியின் வேதனையும்.இறப்பின் திறப்பை கொடுத்துக்கொண்டிருந்த வேளையிலும் அவர் முன் நின்ற யூத கொடும் வீரர்களுக்காக மனமுருகி ஆண்டவரிடம் ஜெபித்து கொண்டிருந்தார்.  அவர்களை மன்னிக்க கோரி மன்றாடினார்.  இதை எல்லாம் தூரத்தில் நின்றபடி பாரபாஸ் கவனித்து கொண்டிருந்தான். 

அறிந்திருப்போமா! அறையப்பட்ட சிலுவை கர்த்தருக்கானது இல்லை என்பதை.  யூத நீதிமன்றம் முன்பு இயேசு விசாரணையின் பொருட்டு நின்றபோது அவர் அறிந்திருப்பாரா அவர் சுமக்கவிருக்கும் சிலுவை யாருக்கானது என்பதை.  கொள்ளைக்காரன்,  கொலைகள் செய்தவன், பிறரின் இரத்தம் கைகளில் வழிந்தோடிய ஒருவனின் பாவக்கறையையும் சேர்த்தே தன் தோள்களில் சுமக்க போகிறார் என்று. 

அறிந்திருக்கவில்லை பாரபாஸ், கொல்கோதா நோக்கி சிலுவையுடன் செல்லும் மெலிந்த உடல் காரர், சிவந்த இரத்தக்கறை படிந்த தோள்களில், மேலும் சவுக்கடி விழ, தலையில் சூடிய முட்கிரீடம் மென்மையான நெற்றியை குத்தி கிழிக்க, தெம்பின்றி தத்தி தத்தி நடந்த அந்த ஒல்லியான உடல்வாகு கொண்ட மனிதர் அவனின் வாழ்வில் இனி அவன் கடக்கவிருக்கும் எல்லா நிகழ்வுகளிலும் பெரும் தாக்கத்தை கொடுக்க போகிறவர் என்று.

அவர் சிலுவையில் அறையப்பட்டு, உயிர் பிரியும் தருணம் வரையிலும் அங்கிருந்தான். சிலுவையில் அறையப்பட்ட சிலநொடி இருட்டு அவ்விடத்தை சூழ்ந்தது. உண்மையிலே குழப்பமாகவும் பதட்டமாகவும் உணர்ந்தான். நெடுங்காலம் சிறையில் இருந்ததால் கண்கள் வெளிச்சத்திற்கு பழகவில்லையா! இருக்குமா,  அவரை கண்ட முதல்நொடி கூட அவரை சுற்றி பரிசுத்தமான ஒளி பரவி இருந்ததாகவே உணர்ந்தான். வீதி வழியே அவர் போகும் பாதையெங்கும் அவனும் சென்றான். பரிகசித்து திட்டிய மக்கள் வெள்ளம் வழியே அவர் செல்ல,  கண்ணீரோடு அவரை பின்தொடர்ந்த அன்னையிடம் கூறமுடியுமா? அது என் சிலுவை என்று. அவன் பார்வையில் மேல் உதடு பிளந்த பரிச்சியமான இளம் பெண்ணொருத்தியும் சென்றாள். அவள் மேரி மேக்தலினா இருக்குமா?. அவரின் உயிர் பிரிந்த பின்னே அங்கிருந்து நகர்கிறான்.

பின் அவளை ஜெருசலம் சந்தில் சந்திக்கிறான். பாரபாஸ் அவளிடம் கேட்கிறான் அவரை பற்றி, அவள் கூறுகிறாள். கடவுளின் மகன் அவர் என்று. கடவுளின் மகனா? ஆம் கடவுளின் மகன் தான். ஏழைகளின், குருடர்களின், தொழுநோயாளிகள் கடவுள் அவர்.கைவிடப்பட்டவர்களின் கடவுள், எளியவர்களின் கடவுள் அவர். அதுவரையில் சாவில் இருந்து தப்பிய ஒருவன், அகம் மகிழ்ந்த ஒருவன். அருவருப்பு அடைகிறான். அவன் மேலா?  இது தற்செயலா இல்லை எழுதப்பட்ட விதியா?  அவருக்கு இது முன்பே தெரிந்து இருக்குமா?.  உண்மையிலே அவரின்  இரட்சிப்பை நிறைவோடு அளித்திருப்பாரா?.  என்ன முட்டாள்தனம் கடவுளின் குழந்தையாக இருக்க அவரால் எப்படி முடியும். சிறுபிள்ளையை போல இந்த ஜனங்களை ஏமாற்றி இருப்பாரா?  சித்து விளையாட்டு காரனாய் இருப்பார் போலும். உண்மையிலே கடவுளின் மகன் தன்னை காப்பாற்றிக்கொள்ள திராணி இல்லாதவர் எப்படி இரட்சிக்க வந்தவறாய் இருப்பார். உமிழ்ந்திருப்பான். ஆனாலும் நம்பாமல் தவிக்கிறான், இது உண்மையாக இருந்தால்,  நான் அனுபவிக்க இருந்த துயரத்தை, சாவை ஏன் என்னிடம் இருந்து பிடிங்கினார். பொய் புளுகுகிறாள் என்றே தோணிச்சு,  ஒருவேளை உண்மையாய் இருந்தால் அவர் அளித்த இந்த உயிர் எதற்காக? எதன் பொருட்டு என்னுடைய சிலுவையில் அறையப்பட்டார். அப்போது நான் வாழும் இப்பிறவி அவருடையது அல்லவா?  சீ முட்டாள் தனம். 

அவரின் போதனைகள் என்ன என்று அவளிடம் மேலும் வினவினான். அவர் போதித்தது "ஒருவருக்கொருவரை நேசியுங்கள்" என்றாள். மடத்தனம் எப்படி சுயநலம் இன்றி இன்னொருத்தவரை நேசிக்க முடியும். பாரபாஸ் குழம்பி தவித்தான். அவளோடு சேர்ந்தே பருத்த பெண்தோழி வீட்டிற்கு செல்கிறான். குடிக்கிறான், எவ்வளவு குடித்தும் அவனுக்குள் எறிந்து கொண்டிருந்த அக்கேள்விக்கு விடை மட்டும் இல்லை. அதன் பின் ஜெருசலம் நகரின் எல்லா சந்துகளிலும் அலைகிறான். மேலும் மேலும் அவரை பற்றி அறிகிறான். மேல் உதடு பிளந்த அப்பெண்ணின் வழியே அவரை முதன் முதலாக அறிந்து கொண்டான்.

ஒருநாள் வழியில் எதேச்சையாய் பீட்டரை சந்திக்கிறான். துயருற்று அமர்ந்திருக்கிறான்,  ஆம் இயேசுவை யார் என்று தெரியாது என்று சொன்னான் அல்லவா அவனே தான். அவன் மூலம் அவர் உயிர்த்தெழ போவதை அறிகிறான். அன்றைய இரவு கல்லறை முன் பதுங்கி கிடக்கிறான். ஆனால் உயிர்த்தெழல் மேல் உதடு பிளந்த அவளுக்கு மட்டுமே காணக்கிடைக்கிறது. அங்கு தானே இருந்தான், ஏன் அவனுக்கு அற்புதம் தெரியவில்லை. அவள் இவனிடம் அதுபற்றி கூற,  மறுக்கிறான். கடவுளின் மகனுக்கு எதற்கு இரண்டு நாள் தேவைப்படுகிறது. அய்யோ அபத்தம்,  சாவையே தவிர்த்திருக்க முடியுமே. பொய்,  எல்லாம் பிதற்றல். ஏன் இப்படி அவரை தொழுகிறார்கள்.  நம்பிக்கை,  என்ன அப்பட்டமான பகட்டு நம்பிக்கை. முட்டாள்கள். அலைக்கழிப்பில் மிதக்கிறான்,  யார் இவர்.  உண்மையிலே கடவுளின் மகனா?  தேவை இல்லாத கேள்வி. அலைந்து அலைந்து இயேசு அற்புதம் மூலம் பிழைக்கவைத்தவன் உடன் இரவுணவு உண்கிறான். அங்கும் நம்பிக்கை இல்லை. இவனும் புளுகுகிறான். ஜெருசலேம் நகர வீதிகளில் அரசிற்கு தெரியாமல் கிறிஸ்தவர்கள் கூடும் சபைகளில் ஓரமாய் அவர்களை கவனிக்கிறான். ஒவ்வொருத்தரும் அவரின் மகத்தான அற்புதங்களுக்கு சாட்சி சொல்கிறார்கள்.  பீட்டர் சொல்கிறான், மேல் உதடு பிளந்த பெண்ணும் சொல்கிறாள்.  கூட்டம் ஆமோதிக்கிறது. அவரின் மகிமையை எண்ணி, மனமுருகி வேண்டுகிறது. அய்யோ! என்ன இது நாடகம்,  அவர் கடவுளா?  இவர்கள் நம்பும் புது உலகத்தை உருவாக்க வந்தவரா?.

குருட்டு கிழவனால் காட்டி கொடுப்பட்டு கல்லடி பட்டு இருக்கிறாள். அவள் மேல் முதல் கல்லெறிந்தவனை குடல் சரிய குத்தி கொள்கிறான். பின் சடலத்தை சுமந்துகொண்டு ஜெருசலேம் விட்டு நகர்கிறான். அவளுக்கான கல்லறையில் தூங்க வைக்கிறான். அவள் வரும் முன்னே அவளுக்காக காத்திருக்கிறது பிறக்கும் போதே இறந்து பிறந்த குழந்தை. அது இவன் மூலமே பிறந்தது. அலைந்து திரிந்து தன் கொள்ளைக்கூட்டத்தோடு சேர்கிறான். முன்பை விட எதிலும் ஆர்வம் இல்லாதவனாய் இருப்பவனை அவர்கள் வெறுக்கிறார்கள்.  பாரபாஸ் அவனை பார்ப்பவரை அச்சுறுத்தும் முகதழும்பை உடையவன். அது வெட்டுக்காயம். அதை பரிசளித்தது அவன் தந்தை எலியாஹு. அவன் தாய் ஒரு வேசி, பலரோடு இரவை வேண்டாவெறுப்பாக கழித்தவள்.  ஆனால் இவனுக்கு தெரியும் இவன் தந்தை எலியாஹு.  அப்பனின் சாவு மகன் கையாலே கிடைக்கிறது.  மன உளைச்சலில் அங்கிருந்தும் நகர்கிறான். அவனுக்கு இருக்கும் ஒரே கேள்விக்கு விடைதேடி.

பின் சஹாக் வருகிறான். அவனும் கிறிஸ்தவன்.  கடவுளின் அடிமை என்றே தன்னை அழைத்து கொள்கிறான். இவன் மூலமே கடவுளை அணுகுகிறான் நெருக்கமாக. அதிலும் வெறுப்பு கொண்டவனாய் கடவுளை மறுக்கிறான். அதிசயம் நடக்கிறது, சஹாக்கை சந்தித்தது சுரங்கத்தில், அங்கு அடிமையாகவே காலம் தள்ளுகிறான்.  அவனுக்கு சஹாக் என இணைக்கப்பட்ட சங்கிலியில் இருவருமாய் நாட்களை கடக்கிறார்கள். முதுமை நெருங்கி விட்டது அவனிடம் இந்நாட்களில்.  கடவுளின் கிருபை என சஹாக் நம்ப அவர்கள் தப்பிக்கிறார்கள். 

விதியின் விளையாட்டு, ரோம் கவர்னரை சந்திக்க வேண்டிய கட்டாயம்.  அவர் முன்னே சஹாக் அவனின் கடவுள் இயேசு என்கிறான். விளைவு சிலுவையில் அறையப்பட்டு உயிர் இழக்கிறான். அதே வேலையில் கடவுளை மறுக்கிறான் பாரபாஸ்.  உயிர் பிழைக்கிறான். கடவுளை கடைசி தருணம் வரை தேடுகிறான். அவனின் மறுப்பிற்கு அவனிடம் பதில் இருக்கிறது. ஆம் இன்னும் கடவுளை அவன் உணரவில்லை. அற்பத்தனமான  நம்பிக்கை அவனிடம் இல்லை,  கடைசி வரை கடவுளை தேடுகிறான். கடவுளின் குழந்தையை,  அவன் ஏற்றுக்கொள்ளாத போதனையை போதித்த 'ஒருவரை ஒருவர் நேசியுங்கள்' எனும் மனிதத்தை அவன் நம்பவில்லை.  உவப்பானதாக இல்லை, மனிதர்கள் சுயநலம் கொண்டவர்கள் எப்படி இன்னொருத்தரை நேசிக்க முடியும். அதுவும் பணம் படைத்த வசதியான செல்வந்தர்கள் ஏழைகளை, நோயாளிகளை,  வயதான கைவிடப்பட்டவர்களை, எளியவர்களை, விளிம்பில் நிற்பவர்களை நேசிக்க முடியும். அறிவாளிகள் முட்டாள்களை நேசிப்பார்களா? வலியவன் தன்னைவிட எளியோரை எப்படி நேசிப்பான். அவர்களை அதிகாரத்தின் பெயரால் ஒடுக்கி தனக்கு கீழே வைத்துக்கொள்வான் அடிமையாக்கி. 

பாரபாஸை விரும்பிய, அவனோடு படுக்கையை பகிர்ந்தமைக்கு அவனை எண்ணி வருந்திய பருத்த பெண் மட்டுமே நம்பினாள்,  பாரபாஸ் உடலில் இயேசுவின் ஆவி புகுந்து விட்டது. உண்மையிலே அப்படியா? அவரின் மகத்தான தியாகம் மனித குலத்திற்க்காக இருந்தாலும்,  அவர் சுமந்த சிலுவை பாரபாஸ் உடையது அல்லவா.  அவர் அளித்த உயிர் அல்லவா இது. அப்படிப்பட்ட எண்ணமே,  அவரை தேடி அலைய அவனை உந்தியது. பெரும் மலையை போல வியாபித்த அவரின் போதனை அவனை வாட்டியது.  அவரின் கருணை மழையில் நனைந்தான். யாரும் அறியாத இயேசுவை அவன் அறிய முயற்சிதான். கடைசி மூச்சு வரை திண்டாடினான். அறிய முடியாத கேள்வியின் பதில் அல்லவா அவர்.  

நானும் பாரபாஸ் தான்,  என் பாவத்தின் சிலுவையும் அவர் சுமந்து கொண்டிருப்பார்.  ஆனால் நான் கிறுக்குத்தனமாக சொல்வேன்,  ஆதாரத்தோடு நிரூபிப்பேன் அவர் கடவுளின் மகன் இல்லை என்று,  அவரும் அதையே விரும்பி இருப்பார். ஏன் என்றால் அவர் எளியவர். எளியவர்களோடு, நோயாளிகளோடு உறவாடியவர். பிறர் பாவத்தை மன்னிப்பவர். அவர் மனிதன் தான் எனக்கு, எப்படி வாழ வேண்டும் என்ற மகிமையை கற்றுக்கொடுத்தவர், வாழ்ந்து காட்டியவர். ஒருவேளை அவரே என்னிடம் நான் கடவுளின் மகன் என்று கண் முன் தோன்றி கூறினால் நான் சொல்வேன் இருந்து விட்டு போங்கள் கடவுளின் மகனாக! நான் உங்களை பூஜிப்பேன் முழுமையாக, அப்பழுக்கின்றி ஏன் என்றால் நீங்கள் போதித்தீர்கள் "ஒருவரை ஒருவர் நேசியுங்கள்" என்று.  கடைசியாக சொல்வேன் அவரிடம் நான் பாரபாஸ் கடைசி வரை உங்களை தேடிக்கொண்டிருப்பேன்.

No comments:

Post a Comment

இணைந்த கைகள்

  ஒரு மாலைநேரம், புதிய திரைப்படம். திங்கள் கிழமை,  மாலை நேரக்காட்சி,  இணைந்த கைகள்.  நிதானியுங்கள், அதே நேரம் உங்கள் மனைவி, அரசு மருத்துவமனை...