Wednesday 13 February 2019

தெய்வங்கள் : இயற்கை 1


எல்லையில்லா பரப்பிரம்மம் இப்பிரபஞ்சம், அண்டங்கள் விரிந்து பல நூறு கிளையாய் அங்கொன்றும் இங்கொன்றுமாய் கோடி கோடி  வெடிப்பு பிண்டங்கள் மிதந்து கொண்டிருக்கின்றன, அப்பிரமாண்ட குவியலின் சின்னச்சிறு துகளே பூமி, பல பல வேதிபிணைப்புகளின் விளைவாக பல நூறாண்டு சரல்பிணைப்பின் ஒரு முற்றுப்பெறா கண்ணியே மனிதன்,  கற்பனை என்னும் ஆதிவூற்றில் நிரம்பிய சமுத்திரத்தில் மனிதன் மூச்சடக்கி முங்கி தனக்கான பெருவெளியை உருவாக்கி கொண்டான், தர்க்கம் எனும் நிலைக்கு முன் ஆக்கம், இயக்கம் எனும் விதியின் படி கண்ணால் காண்கின்ற எல்லா படிநிலைகளையும் அவதானித்து கொண்டான், செய்ய முயலும் ஒவ்வொரு காரியங்களிலும் தவறுகளை உற்றுநோக்கினான், அதை சரிபட செய்யும் விதிமுறைகளை உருவாக்கினான், ஒவ்வொன்றும் ஒரு கோட்பாடு மற்றும் நெறிமுறைகளில் இயங்குவதை அவன் கண்டான், கணக்கற்ற தாவரங்கள், அதை உண்ணும் உண்ணிகள், அவற்றை வேட்டையாடும் கொலைமிருகங்கள், காற்றை கிழித்து கொண்டு பறக்கும் பறவை கூட்டங்கள், ஊர்பவை பூச்சிகள் என அவனோடு இவ்வுலகத்தை பங்கு போடும் பலவற்றையும் அவன் அறிந்துகொண்டான்.

           கண்டங்கள் என அவன் பிரிந்தாலும் அவன் முன் பிரமாண்டமாய் விரிந்திருக்கும் இந்த இயற்கையின் ஒவ்வொரு தன்மையும் அவனை அச்சுறுத்தியது, ஊழிக்காற்றின் வேகத்தில் அலைக்கழிந்து, மழைநீரின் ஈரத்தில் உறிஞ்சப்பட்டு, காட்டுத்தீயின் வெப்பத்தில் தகித்து, மின்னல் ஒளியில் பார்வை கூசி, இடியின் ஓசையில் அச்சப்பட்டு என இயற்கையின் ஒவ்வொரு தொடுதலும் அவனை அழுத்தியது, அது உண்டாக்கிய பயம் அவனை அதிலிருந்து விடுபட செய்ய வேண்டிய காரியம் என்ன எனும் நிலைக்கு உந்தியது, அதனை அவதானிக்க முதல் நிலை சமரசமின்றி அதனை அறிதலே என்பதை உணர்ந்துகொண்டான் ,ஆனால் இயற்கையோ விடைகளற்ற வினா போல் அவன் முன் முடிவிலியாய் விரிந்திருந்தது, அவன் கட்டுப்பாடுகளின்றி இயற்கையின் பாதையில் எவ்வித முன்முடிவுமின்றி பயணித்தான், இறுதியாய் எதுவும் மிஞ்சாத பயணம் அது, அவன் தாகத்தில் தவித்த போது மழைநீரில் பொங்கியோடிய நதி தாகம் தீர்த்தது, சிலநேரம் களைப்புற்ற அவன் மேனி சிலிர்க்கும் படி மெல்லிய தென்றல் ஒன்று அவனை வருடி சென்றது, கருமை படர்ந்த இருள் நேரம் நீலம் அடிமங்கிய வானம் ஒன்று அவன் தலைக்கு மேலே தொங்கி கொண்டிருந்தது அதில் வெண்மையாய் குளிரை பரப்பும் ஒன்றை  கண்டான், அதனோடு சிறுசிறு புள்ளியாய் மின்னி மின்னி மறையும் பல கோடி கூட்டத்தை கண்டு திகைத்தான். சிலநேரங்களில் பெரும்வெண்புகை கூட்டம் இவையெல்லாம் மறைத்து போகும் விநோதத்தை ரசித்தான், கால்கடுக்க நடந்ததாலோ இக்கால இடைவெளியில் தன்னிலை மறந்து துயில் கொண்டான்.

நடந்தவை எல்லாம் கனவோ என்பது போல் கண் விழித்து பார்த்த போது, இவ்வுலகம் வேறொரு அரிதாரம் பூசி அவனுக்காக காத்திருந்தது,  பகல் விடிந்தது, தீப்பிழம்பாய் கொதிக்கும் சுடர் ஒன்று சக்கரமாய் சுழன்று  செந்நிற கதிர்களை இப்புவி எங்கும் அனுப்பியது, அதன் ஒளியால் அவன் நிற்கும் இப்பெரும் பந்தில் கால் பதித்திருக்கும் அத்தனையும் தனக்கான சக்தியை உறிஞ்சி இயக்க ஆற்றலை சமைத்து உண்டு இயங்கியது, இயங்குதலே இங்கு அறுதிநிலை, உடல் வியர்த்து அவன் இதனை உள்வாங்கிக்கொண்டிருந்தான்,பின் மீண்டும் நடந்தான், பெரிய கரியநிற பாறை போல் ஒன்று சாதுவாய் அவன் முன் நின்றது, அதன் சதையால் முன் நீண்டிருக்கும்  ஆரம் போன்ற  கை அவனின் தலை மயிரை கோதியது, தன் கூரிய பார்வையில் அவனை உற்றுநோக்கியது, பிறகு விலகி சென்றது, நடந்தவை எல்லாம் அவனை ஆச்சரியப்படுத்தியது, பாறை ஒன்றில் சிறிய கூழாங்கல் எடுத்து அவன் பார்த்ததை செதுக்கி வரைந்தான், போகும் வழியெங்கும் மரங்களில் காய்த்து தொங்கும் காய்களை கண்டான், அதனை பறித்து கொறித்து பசியாற்றினான், சிலஇடங்களில் பழுத்து தரை தொட்டு கிடந்த பெரிய பழங்களை கண்டான், அப்பழத்தின் தோல் மிகவும் தடிமனாய் சிறுமுள் பரப்பிருந்தது, தன் இடுப்பில் இருந்த கல்லை கொண்டு அதை கிழித்து உண்டான்,  அவன் அந்நதி ஓடும் திசையிலே நடந்தான், இடைஇடையே தன் தாகம் தணித்து கொண்டான், பேரிரைச்சல் கேட்டது நதியின் வேகமும் அதிகரித்தது, அரைவளைவின் அந்த பக்கம் எதுவுமின்றி வெற்றிமிடமாய் வெம்மை தெரிந்தது, மெதுவாய் அவ்வளைவை நோக்கி நடந்தான், அவன் கால்கீழ் பெரும்பள்ளம் முடிவின்றி பரந்து விரிந்து கிடந்தது, காரிருள் சூழ்ந்தது கருமேகக்கூட்டம் தலை தாழ்த்தி அவன் முன் நின்றது, முத்துச்சிதறலாய் மழைத்துளி விண்ணிலிருந்து பொழிந்தது, சுழல்காற்றில் நீண்டுயர்ந்த மரங்கள் பெருங்குரல் எடுத்து ஆடியது, மின்னலும் இடியும் மாறி மாறி வெட்டியது, கண் முன்னே  காண்பவை எல்லாம் அவன் ஆழ்மனதில் அடியாழத்தில் சொல்லமுடியா உணர்வெளிச்சிக்கு ஆட்படுத்தியது,  ஏதாவது ஒன்றின் மிச்சம் தான் அவன் , இல்லை எதில் இருந்து  பிரிந்தோ பல்லாயிரம் ஆண்டுகள் வடிவில் அறிவில் விஞ்சிய ஒன்று அவன், எப்படியோ தான் தேடி வந்த விடை அறிந்து கண்களில் நீர் குவிந்து அறிந்தவற்றை  எண்ணி அகம் எனும் ஞானவெளியின் வெளிச்சத்தில் திளைத்தான், அவன் உள்ளில் இருந்து இப்பிரபஞ்சம் வரை நீண்டுகொண்டிருக்கும் அறிவொளி அது, அவன் தியான நிலையில் அங்கேயே வெகுநேரம்  உட்கார்ந்திருந்தான், பிறகு எழுந்து ஓவென கத்தினான், கால்கள் எம்பி எம்பி குதிக்க கைகள் காற்றில் அலைபாய்ந்தது, சில நேரம் உணர்வுகளுக்கு அப்பாற்பட்ட நிலையில் அவனை மறந்தான், எதையோ உணர்ந்தவன் போல் சற்று அமைதியானான், கைகளை கூப்பி மண்டியிட்டு தலையை இம்மண் மீது பதித்து இயற்கை அன்னையை வணங்கினான்.  


தெய்வம் பிறந்தது.                      

No comments:

Post a Comment

இணைந்த கைகள்

  ஒரு மாலைநேரம், புதிய திரைப்படம். திங்கள் கிழமை,  மாலை நேரக்காட்சி,  இணைந்த கைகள்.  நிதானியுங்கள், அதே நேரம் உங்கள் மனைவி, அரசு மருத்துவமனை...