Tuesday 5 February 2019

அப்பா எனும் கண்ணாடி

அப்பா எனும் கண்ணாடி :





"வர்மா" பாலாவின் புதிய படம், படத்தின் டீஸர் வெளியான நாளில், அலுவலக நண்பர் ஆந்திராவை பூர்விகமாக கொண்டவர் என்னிடம் கேட்ட கேள்வி "ஜி தமிழ்நாட்ல வர்மானா பெரிய சாதியா?", நானும் புரியாமல் ஏன் என்று கேட்டேன், அவர் ஆந்திராவில் "அர்ஜுன் ரெட்டி உயர்சாதி கதாநாயகன்"  என்றார். தமிழகத்தில் எவராலும் வெளிப்படையாக தான் இன்னார் , இந்த சாதி என்று வெளிப்படையாக கூறுவது ஒருவித அசௌகரியம். சிறுவயதிலே சாதி எனும் பிம்பத்தை உடைத்தவர் என் அப்பா,  என் அப்பா உயிருடன் இருப்பது வரை எங்கள் சமுதாய கோயிலில் மாற்று சமுதாய நண்பர்கள் அப்பாவின் பெயருக்காக கொடைக்கு  உரிமையோடு வருவதுண்டு , என் சிறுவயதில் அப்பாவின் நண்பர் ஒருவரை அண்ணன் என்று அழைத்ததும் அவர் உரிமையோடு "லெட்சுமண அண்ணன் எனக்கு அண்ணன்லா, நா உனக்கு சித்தப்பா, சித்தப்பான்னு கூப்டு மக்கா" என்றார். காட்டுநாயக்கன் தெரு மூக்கன் மாமா ஆற்றுக்கு குளிக்க போகும்போது "மருமகனே பாத்து குளிங்க" என்று கவனமாக நான் நீச்சல் அடிக்கும் போது கண்காணிப்பார். இப்போதும் ஊருக்கு செல்லும் நாட்களில்  நாடார் கடை மாமா இன்னும் என்னை சிறுபிள்ளையாய் பாவித்து "பிள்ளே, பழம் சாப்பிடு ..இன்னா வீட்டுக்கு போய் பேரனுக்கு கொடு" என்று சொல்வதுண்டு.

பாபா திரைப்படம் வந்த புதிதில் நானும் நண்பர்களும் தண்டவாளத்தில் ரஜினியை போல் பீடி குடித்து தண்டன் எனும் சிறிய கஞ்சா வியாபரியிடம் கையும் களவுமாக பிடிபட்டோம், அவன் எங்களை பார்த்ததுமே "லேய், யாருலாம் இருக்கிறீங்க லெட்சுமண அண்ணன் பையன், அணிலுக்கு மக்கமாரு, கிருஷ்ண அண்ணன் பசங்க" என பார்த்த உடனே அடையாளம் கண்டுபிடித்தான். அன்று வீட்டில் அப்பா ஒரு அடி அடிக்கவில்லை, எப்போதும் அப்பா என்னை அடிப்பதில்லை, எல்லாத்துக்கும் சேர்த்து அம்மா ஒருத்தி போதும்.

அப்பா ஒரு பெரும் குடிகாரர், பெரும்பாலும் இந்த வகையறா மாற்றாக வேறு பல நல்லமுகங்கள் கொண்டிருந்தாலும், குடிகாரன் எனும் பிம்பமே முதன்மையாய் பின் அனைத்தையும் மறைத்திடும். அப்பா பெரும் சமையல்காரர் எங்கள் பகுதியில் முஸ்லீம் நண்பர்கள் ரம்ஜானுக்கு சமைக்க  பிரியாணி அப்பாவையே சமைக்க அழைப்பதுண்டு, கிறிஸ்தவ நண்பர்கள் கிறிஸ்துமஸ்க்கு அழைப்பர், ஊரில் பாதி பரோட்டா மாஸ்டர்கள் அப்பாவை இப்போதும் மறக்காமல் நான் ஊருக்கு சென்றால் நினைவு கூறுவதுண்டு, அப்பா யாரிடமும் சாதியையும் பார்த்ததில்லை, மதமும் பார்த்ததில்லை.

"இன்ஸா அல்லாஹ்", "கர்த்தருக்கு ஸ்தோத்திரம்", "முருகா" அப்பாவின் வாயில் எப்போது யாரை அழைப்பார் என அவருக்கு மட்டும்தான் தெரியும், அப்பா அதிகபட்சம் ஒரு கடையில் வேலை பார்த்தது இரண்டு வருடங்கள், குறைந்த பட்சம் இரண்டு மணி நேரங்கள், அப்பா பிடிக்காத இடத்தில், சூழ்நிலையில் எப்போதும் தன்னை வருத்தி வேலை பார்ப்பது இல்லை,ஆசாரிபள்ளம் பாய், மினு மனு குமார் மாமா , மேலும்  பேர் தெரியாத பலர் அப்பாவை தேடி வீட்டுக்கு வருவதுண்டு காரணம் அப்பா அடுப்பை பற்ற வைத்து ஆள் காணாமல் போயிருப்பார், அடுத்த நாள் அதே கடைக்கு சென்று எப்போதும் போல் வேலை செய்வார், ஆனாலும் யாரும் அப்பாவை வேலையை விட்டு அனுப்பியதில்லை.                                     

சிறுவயதில் வெளியே விளையாடி விட்டு வீட்டுக்கு வரும் போது அப்பா நெற்றியில் திருநீறு பட்டையும், உடல் முழுதும் சந்தணம் அப்பியும் உட்கார்ந்து இருந்தார், அருகே போகும் போது வாழை இலையில் கறித்துண்டுகள் கிடந்தது, என்னை பார்த்து "லேய், இங்க வா உட்காரு, ஏ பிள்ள இவனுக்கும் சேர்த்து சோறு போடு, இந்தா மட்டன் கறி இருக்கு சேர்த்து சாப்பிடு" என்றார், நான் மட்டன் விரும்பி இல்லை, இருந்தும் சரி என்றேன். வாயில் வைத்து மெல்லும் போது ஒருவித நெய்யும் மைதாவும் கலந்து இருப்பது போல் சவுசவுன்னு இருந்தது, அப்பாவிடமே "அப்பா இது ஒருமாரி இருக்கு எனக்கு வேண்டாம் நீ எடுத்துக்கோ" என்றேன். அவரும் பன்றிக்கறி உடலுக்கு நல்லது என்று சொல்ல எனக்கு வாந்தியே வந்துவிட்டது, பின்னர் தான் அம்மா "காட்டுநாயக்கன் தெரு கொடைல  போய் வாங்கிட்டு வந்திருக்காரு, உங்க அப்பா அங்க சாமியாடிலா " என்றாள்.

அப்பா பள்ளி படிப்பையும் ஆறாவது வரையோடு முடித்து கொண்டவர், திருநெல்வேலி அப்பா பிறந்து வளர்ந்த ஊர், அங்கே சாதி பெருமை கொஞ்சம் தூக்கலாக எல்லா சாதிக்கும் உண்டு, உயர்ந்த தாழ்ந்த என்ற பாகுபாடு சாதிப்பெருமை பேசும் போது கிடையாது, அங்கே பிறந்தவர் எப்படி இதை இலகுவாக உடைத்தெறிகிறார் என்று நான் யோசிப்பதுண்டு, அதற்கு குடியும் ஒரு காரணமா என்று கூட நினைத்ததுண்டு, சாதியை பொருளாதார நிலை சில இடங்களில் உடைப்பது போல், கூலி வேலைகள் பல இடங்களில் உடைத்தெறிகிறது , கட்டிடவேலை, வர்ணம் பூசும் வேலை,சுமை தூக்குவது, காயலான் பொருட்கள் தூக்குவது என அப்பா செய்த மற்ற பல வேலைகளில் பணி முடிந்தபின் அனைவரும் ஒன்றாக மது அருந்த செல்வதுண்டு, இவர்கள் மற்றோரை மாமன் அண்ணன் சித்தப்பா அப்பா என உறவுமுறை வைத்தே அழைப்பதுண்டு. இந்த நேரங்களில்   குடியும் கூட சாதிய அடையாளங்களை  சில இடங்களில் உடைக்கிறதோ  என தோன்றியது உண்டு.
வாழ்க்கை எனும் பெரும்நீட்சியில் நான் பொருளாதார சார்ந்து ஒரு வித தன்னிலை அடையும் போது அப்பா என்னுடன் இல்லை,  பெரும்பான்மை நண்பர்கள் தனக்கான வாழ்வியலில் கடந்து போகும் பல தருணங்களில் "இத எங்க அப்பா இருந்தா இப்படி பண்ணிருப்பார், நா இப்போ இப்படி இருக்க எங்க அப்பாதான் காரணம் , எல்லாம் எங்க அப்பா சொல்லிக்கொடுத்தது" என கூறியதை பலமுறை கேட்டதுண்டு, அவர்களுக்கான பொருளாதார படியையும் அப்பாக்கள் ஏற்கனவே கட்டி எழுப்பியிருப்பார்கள், இவர்கள் அதை தொடர்ந்து கட்டி அவர்களுக்கு வேண்டியதை எழுப்ப வேண்டியதுதான். இப்படி பட்ட தருணங்களில் எனக்கு அவர்மீது பெருங்கோபம் வந்ததுண்டு.

அவர்மூலம் நான் கற்றுக்கொண்டது தான் என்ன?, அப்பா திராவிடம், பெரியாரியம், தலித்தியம் என பெரிதாக எதையும் கற்றுக்கொள்ளாதவர், அப்பா திட்டாத அரசியல் தலைவர்களே எனக்கு அறிந்தவரை இல்லை, தலைவர்கள் தவறு செய்யும் போது குடித்துவிட்டு  பொதுவெளியில்  கொச்சையான வார்த்தைகளில் திட்டினால்  தான் அப்பாக்கு ஆத்திரம் குறையும், “வை.கோபால்சாமி” அப்பா அப்படி தான் அழைப்பார், இவர்தான் கொஞ்சம் அப்பாவின் வார்த்தைகளில் தப்பித்தது, இருப்பினும் சாதியில் மதங்களில்  அப்பாக்கு இருக்கும் தெளிவு என்னை ஆச்சர்யப்படுத்த வைப்பது காரணம் அப்பா மனிதர்களை இதற்கு அப்பால் தான் கவனிக்கிறார், யாரையும் அவரின் சாதியின் மதத்தின் அடிப்படையில் எடை போடுவது இல்லை, எளிமையாக அவர்க்கும் அப்பாக்கும் இடையே இருக்கும் அன்பு, நெருக்கம்  மற்றும் நம்பிக்கையின் அடிப்படையிலே அவர் தன் மனதிற்கு இணக்கமாய் வைக்கிறார்.

நானும் அப்பாவும் பேசிய வார்த்தைகளை ஒரு அறுபது பக்கம் நோட்புத்தகத்தில் எழுதி முடித்துவிடலாம், நான் என்ன படித்திருக்கிறேன் என்பதே அவர் இறக்கும் வரை அவருக்கு தெரியாது, ஒருமுறை அப்பாவின் நண்பர் அப்பாவிடம் இவன் என்ன படிக்கிறான் என்று கேட்டதற்கு ஐ.ஏ.எஸ் என்றார், ஒருவேளை அவரின் ஆசையாக அது இருந்திருக்கலாம், அப்பா பணத்தின் மீது பற்று இல்லாதவர், முரணாய் குடிக்கும் நேரம் தவிர, என்னையும் இவ்வளவு சம்பாதிக்கணும், வீடு வண்டி வாங்க வேண்டும் என்று கூறியதே இல்லை, அவர் என்னிடம் அடிக்கடி  கூறுவது   "ஒருத்தன் செத்தாதான் எவ்வளவு சம்பாதிச்சிருக்கானு தெரியும்" , இதை அவர் இறந்து ஒருமாதம் வரை உணர்ந்தேன். 

பிள்ளையார் சதுர்த்தியை முன்னிட்டு எங்கள் பகுதிகளில் வழிபட்ட பிள்ளையார் சிலைகளை கடலில் கரைக்க ஊரையே சுற்றி லாரி டெம்போக்களில் செண்டை மேளம் முழங்க அழைத்து செல்வது,வண்டி முன்னே  இளைஞர் கூட்டம் ஆடியபடியே செல்லும், அப்பா நாற்பது வயதுகளிலே தலையில் ரிப்பன் கட்டி லாரியின் முன்பக்க மேடையிலே கத்தியபடி கொண்டாடி செல்வார், நான்தான் கூச்சப்பட்டு கூட்டத்தில் ஒதுங்கி நிற்பேன்,அவரோ "லேய், சபரி வா வண்டில ஏறு" என்பார் , நான் முடியாது என்று ஒதுங்கிவிடுவேன், ஊர்க்கொடைகளில் நையாண்டி மேளம் தொடங்கி கும்பாட்டம் ஆடும் நேரங்களில் அப்பா இருந்தால் நான் அங்கு செல்ல மாட்டேன், அப்பாவின் ஆட்டம் அங்கு தெரிந்துகொண்டிருக்கும், வாழ்வில் எனக்கான நெறிமுறைகளை யாருக்காகவும் விடமுடியாது எனும் உணர்வுநிலையை  நான் அடையும் நேரத்தில் தான் உணர்ந்தேன் அப்பா கொண்டாட்டங்களை தவற விட்டதில்லை, வாழ்க்கையின் ஒரு அங்கமாக அதை அவர் கொண்டிருந்தார், அதனால் தான் அவரால் ஒரு தசரா விழாவில் புலி வேடமிட்டு ஆட முடிந்தது, அதன்பின் அவர் புலி வேடம் மறுபடி தரிக்கவில்லை, வேடம் போட்ட அடுத்தநாள் உடம்பு முழுவதும் இருந்த பெயிண்டை உரிக்க நானும் அம்மாவும் பட்ட பாடும், அதற்கு அவர்பட்ட வலியும், அவர் பொறுமையாக ஒரே இடத்தில் அதிகநேரம் இருந்தது அன்றுதான். கொண்டாட்டம் தான் அவரின் வாழ்க்கை, எதையும் கொண்டாடி தீர்ப்பது என அவர் என்றுமே மகிழ்ச்சியுமாக இருப்பார்.

அப்பாவின் சமையலுக்கு பெரும் மரியாதை எங்கள் ஊரில் உண்டு, அப்பாவின் நண்பர்கள் "குடி மட்டும் உங்க அப்பனுக்கு இல்லனா,டாப்ல வந்திருப்பான், இப்போ இருக்கிற பாதி பேருக்கு தொழில் கத்து கொடுத்தவண்டே" என்பார்கள்,  ஆனால் அப்பா அதையெல்லாம்  பெரிதாக எடுத்து கொள்வதில்லை, அம்மா வைக்கும் மீன் குழம்பை நான் எவ்வளவு முயற்சி செய்தாலும் அதே சுவை வருவதில்லை என அப்பா கூறியதுண்டு, பெரும் அதிசயமாய் அதிக நாட்கள் ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி விடுதியில் அப்பா சமையல் செய்தார், இன்றைய தலைமுறைக்கு ஏற்றபடி அந்த நேரங்களில் அவர் புதுப்புது பதார்த்தங்களையே சமைத்தார், தான் பெரிதும் விரும்பும் ஒன்றில் புதிதாய் கற்றுக்கொள்வதிலும் ஆர்வமாய் இருந்தார், அவர் இறக்கும்வரை சமையலை சுயமாய் மேம்படுத்தி கொண்டேதான் இருந்தார்.
        
அப்பாக்கு யாராவது குடிக்காதே, குடும்பத்தை பார் என்று அறிவுரை கூறினால் பிடிக்காது, அதை அவர் தனக்குள் ஏற்றிக்கொள்வதே கிடையாது, அவரும் அறிவுரை கூறி நான் கண்டதில்லை மாறாக அவர் இறந்த நாள் முந்திய  இரவுதான் என் வயதுடைய நண்பன் அதிகமாய் குடிப்பதை கேள்விப்பட்டு அவனை அழைத்து "ரொம்ப குடிக்காத மக்கா, குடிக்காதன்னு மாமா சொல்ல மாட்டேன், ஆனா மாமா மாறி குடிக்காத"  இதுதான் கடைசி அறிவுரை, சிறுவயதில் நண்பர்கள் கூட சேர்ந்து ஒருமுறை நான் குடித்தபோதும் "லேய் குடிக்காதான்னு சொல்ல மாட்டேன், அப்புறம் நீ ஒழுங்கான்னு கேப்ப , என் மகன் லா, அப்பா மாதிரி ஆயிராத", அவர்க்கும் குடி குறித்து அவர் மேல் பெரிதாய் வருத்தம் உண்டு, அவர் உண்மையிலே குடிஅடிமை, விடிந்ததுமே குடிக்கத்தான் அவருக்கு தோன்றும், சபரிமலைக்கு விரதம் இருந்த நேரங்களிலும் குடிப்பதை அவரால் நிறுத்த முடியவில்லை, குடி ஒரு மனிதனை எப்படி இந்த சமுதாயத்தில் அடையாளப்படுத்துகிறது ,  குடும்பத்தில் அவன் மதிப்பும் தான் என்ன? அவராலே அவர் மூலம் உணர்ந்தேன்.  

அவரை புரிந்து கொள்ள இதுவரை நான் முயற்சி செய்ததில்லை, அவரும் என்னை புரிந்துகொள்ள முயற்சி செய்திருக்க மாட்டார் என்றே நான் நம்புகிறேன், அவரின் மூலமே நான். அவர் செய்த தவறுகளில் இருந்து பிறந்த  சிறு திருத்தம், அவரின் நீட்சியே நான், கண்ணாடி முன் நின்று பார்க்கையில்  ஒரு பக்கம் நானும் மறுப்பக்கம் அப்பாவுமே எனக்கு தெரிகிறார், ஒருவன் இவ்வாழ்க்கை சார்ந்த எல்லா அவதானிப்புகளையும் அப்பாவிடமிருந்தே பெறுகிறான், அந்தவகையில் என்முன் இவ்வுலகம் மேல் எவ்வித பழிப்பும் இல்லாமல் விளையாடும் என் மகனுக்கு நான் அதே கண்ணாடியாய் இருக்க வேண்டும்.




                              

No comments:

Post a Comment

இணைந்த கைகள்

  ஒரு மாலைநேரம், புதிய திரைப்படம். திங்கள் கிழமை,  மாலை நேரக்காட்சி,  இணைந்த கைகள்.  நிதானியுங்கள், அதே நேரம் உங்கள் மனைவி, அரசு மருத்துவமனை...