Thursday 21 February 2019

தெய்வங்கள் : அன்னை






பெருந்திரள் கூட்டம் மலைநாடு நோக்கி நகர்ந்தது, மலைநாட்டு தலைவன் காணும் காட்சி பிரமிப்பாய் அவன் கண் முன் விரிந்தது, இரை நிரப்பி ஊரும் பெரும்பாம்பை போல் இருந்தது நெய்தல் மக்களின் வருகை, வந்ததன் நோக்கம் என்னவென்று தலைவன் வினவினான், இருபனை உயர அலைகள் பல குடிவாழும் குடில்கள் மேல் ஆவேசம் கொண்டு மோத மிதவைகளும் கடலோடு போனது, இருந்த கூட்டமும் பாதியாய் ஆனது, மூத்த கிழவன் விரக்தியில் சொன்னான், துயர் தந்த பீதி நெய்தல் மக்கள் முகம் நிறைத்து அப்பிருந்தது. மூத்த கிழவன் இது பெரும்பாவம் என்றுரைத்தான்,

நெய்தல் மக்கள் குலத்தில் பிறந்த பெண் குழந்தை, இதுவரை காணா மலர்ச்சி கொண்ட கமலமுகம், குலவழக்கப்படி மூத்த கிழவன் முழு நிலவு நாளில், பெரும்மழை இரவில், ஒளிவீச்சாய் வானில் பெருங்கோடாய் மின்னல் பல கிளை பரப்பி வெட்டி மின்ன, பேரொலியாய் இடியும் முழங்க, குழு மொத்தமும் முழங்காலிட்டு கைகள் இரண்டும் வான் நோக்கி அரைக்கண் மூடி உணர்ச்சிப்பெருக்கில் நிலையிழந்து நின்றது, மூத்த கிழவன் கையில் அழகிய கன்னி நெய்தல் மலர் சூடி நடப்பதை அறியா மடந்தையாய் நின்றாள், வானில் இருந்து சிந்திய வெளிச்சம் குறைய குறைய கருமை படர்ந்தது, நாகப்பாம்பின் மணி பெரிதாய் மாறி நிலவை மறைக்கும் அபசகுனம் இந்நாள் என மூத்த கிழவன் மட்டும் அறிந்திருந்தான், விளிம்பு மட்டும் மின்னும் மோதிரமாய் மீதி இருந்து வெள்ளி கீச்சாய் கண் கூச செய்தது .

பெரும்பாவம் பிடித்து குடி மொத்தமும் அழியும் என்று முன்னோர் வகுத்த நாள் இதுவன்றோ, பலி கேட்கும் இக்கடலுக்கு  உயிர்பலியாய் கன்னி வேண்டும் என்றும் குறித்திருந்தமையால் கையில் ஏந்திய எதுவும் அறியா சிறுமியை கடல் அருகே அழைத்து சென்றான், பாதி முறிந்த பனை ஒன்றை கடற்கரை மணலில் ஊன்றி இருந்தனர், கன்னியை இறங்கி அப்பனை மேல் தலை வைத்து கடல் பார் என கிழவனும் சொல்ல அறியா சிறுமியும் சொன்னதை கேட்டாள், மிளா முதுகில் பிடுங்கிய எலும்பை கூறாக்கி நெடிய  வாள் வைத்திருந்தான் கிழவன், மங்கிய வெளியில் எல்லையில்லா நீலக்கோடு விரிந்து கிடந்தது, தரை தொடும் அலையை வருவதும் போவதுமாய் சிறுமி கண்டுகொண்டிருந்தால், காற்றை உள்ளிழுத்து கிழவன் ஒட்டிய வயிறை காற்றால் நிரப்பி பெருங்குரலெடுத்து கூவினான், பெய்யும் மழையை பாதி கீறி போவது போல வீசிய வாளின் வேகம் பனை மேல் கிடந்த பாவி சிறுமியின் உடல் வேறு தலை வேறு ஆக்கியது. முன்னின்ற கடலின் கோபமோ அலையின் வேகம் வெறியேறி கிடந்த உடலையும் தலையையும் உள்கொண்டு போனது, மறைத்த நாகமும் விலகி ஓட கருமை நீங்கி வெண்குளிர் வெளிச்சம் பரவியது, நெருங்கிய பீடை விலகி போனதாய் மூத்த கிழவன் கூக்குரலிட்டான்.

திங்கள்கள் ஓட, அடிநிலம் பெரும்குலுங்கு குலுங்கியது, அச்சம் கொண்ட கிழவனும் முன்னோர்கள் சொன்ன குகையை அடைந்தான், இதற்கு முன்னே பலி கொடுக்க சொன்ன அதே வழியில் ஏதும் செய்ய இயலாது, மலைநாடு செல்வதே உயிர் பிழைக்கும் வழி என குறிப்புகள் சொன்னது, குடியிருப்பை அடைந்து இடம் பெயர்தல் வேண்டும் என்று அனைவருக்கும் உரைத்தான், அவசியமான பொருட்களை மட்டும் கையில் கொண்டு பெண்கள் குழந்தைகள் கிளம்ப ஆண்கள் கூட்டம் ஆடும் குதிரையும் கட்டிக்கொண்டு பின்னே சென்றது, மூத்த கிழவன் முன்னின்று நடக்க பறவை கூட்டம் வான் நிறைத்து மலை முகடை நோக்கி பறந்தது. ஆடும் குதிரையும் கை தவிர்த்து வெறிகொண்டு முன் ஓட ஆரம்பித்தது, நடப்பது என்னவென்று யூகிக்கும் முன்னே, இருபனை உயர அலைகள் பல பின் வந்த பாதி கூட்டத்தை சுருட்டிக்கொண்டு உள்ளே போனது அஞ்சிய கூட்டம் முன்னோக்கி நகர்ந்து மலைநாடை அடைந்தது.    

அனைத்தையும் அறிந்த மலைநாட்டு கிழவன், நடந்தது எல்லாம் நடக்க வேண்டியதே, கடல் வாரி கொண்ட கன்னி, அதன் குழந்தையே, அவள் ஆளும் பரப்பு அது, வந்ததன் நோக்கம் எதுவென்று அறியும் வல்லமை நம் எவர்க்கும் இல்லை, போன கன்னியே இனி உங்கள் தெய்வம், அவளே என்றும் குமரியாய் உம்குலம் காக்கும் அன்னை, என்றும் கூறினான்.


மலை இறங்கி நெய்தல் கூட்டம் கடற்கரைக்கே சென்றது, கடலே அன்னையானது, அச்சிறுமியே என்றும் கன்னியாய் தெய்வமாய் நின்றாள், காலம் வேகமாய் ஓட, கன்னி அன்னையே வழி வழியாய் கதை பல சேர்ந்து மேலும் பிரமாண்டமாய் அக்குலத்தோடு வாழ்ந்து வந்தாள், கடல் உள்நோக்கி வெகு தூரம் சென்றிருந்தது, இரு கரும்பாறை வெளியே தெரிந்தது, வல்லம் ஏறி சிறு கூட்டம் ஒன்று இருபாறைக்கும் சென்றது, கடல் நீரில் ஊறிய பாறைகள் ஒன்றின் மேல் ஒற்றை  கால் ஊன்றிய தடம் சிறிதாய் தெரிந்தது, அவர்கள் கதை ஒன்றின்படி கன்னி அன்னை இக்கடல் உள் ஒற்றைக்கால் ஊன்றி பெருந்தவம் செய்கிறாள், சிலிர்த்த கூட்டம் அவ்வொற்றை காலடி இதுவென மண்டியிட்டு வணங்கியது, கன்னி அன்னையே மேலும் விஸ்தாரமாய் குமரி அன்னையாய் விரிந்தாள்.                                       

No comments:

Post a Comment

இணைந்த கைகள்

  ஒரு மாலைநேரம், புதிய திரைப்படம். திங்கள் கிழமை,  மாலை நேரக்காட்சி,  இணைந்த கைகள்.  நிதானியுங்கள், அதே நேரம் உங்கள் மனைவி, அரசு மருத்துவமனை...