Saturday 16 February 2019

சித்தி விநாயகர் கோயில் தெரு

             



      உமையபங்கனேரி ஆறுமுகம் தாத்தா இறந்த அடுத்த நாள் ஆண்கள் காடாற்றுக்கு போனபின் காந்தி இழவு வீடு இருக்கும் முக்குத்தெருவுக்கு சென்றாள், வீட்டுக்கு வெளியே நாற்காலிகள் சிதறியிருந்தது , ஓட்டு மேல் போடப்பட்ட தென்னை ஓலை கீழே சரிந்து கிடந்தது   , உதிரி பூக்கள் வீட்டு முன்ஓடையில் குவித்து வைக்கப்பட்டு இருந்தது , ஒருகால் செருப்பு ஒன்றும் அதில் புதைந்திருந்தது, முன்மங்களாவில் இருந்து அடுக்காளை வரை கதவு திறந்து கிடந்தது, துஷ்டி விசாரிக்க வந்த பெண்கள் ஒரு கையால் வாயை மெதுவாக பொத்தியும் திறந்தும் குசுகுசுவென கதை அடித்து கொண்டிருந்தனர், காந்தி வெளியே நின்று    "யம்மோவ் வெளுப்பு துணி இருந்தா போடுங்க" என்று கத்தினாள் , தாத்தா சம்சாரம் மாடவிளக்கு அருகே சுருண்டு படுத்திருந்தாள், மருமகள் இரண்டு பேரும் ஆளுக்கொரு பக்கம் சென்று ஆங்காங்கே சுருட்டி கிடந்த துணிகளை பொருக்கி வந்தனர், மெட்ராஸ் காரி வீட்டு திண்ணையில் அமர்ந்து செய்தித்தாள் பிரட்டிக்கொண்டிருந்தாள்.

          மூத்தவள் பெரிய வேஷ்டியை வாசல்  முன் விரித்து மொத்தமாய் துணியை போட்டதும் காந்தி உச்சஸ்தாயில் கத்தினாள், "இங்கேருக்கா ஒழுங்கா எண்ணி போடு, இல்லே துணிய காணும் மணிய காணும்னு எங்க மேல பழிய போட்ருவீங்க, ஒவ்வொன்னா போட்டுக்க", இவள் கூறியதை கேட்டு மூத்தவள் துணிகளை போட இளையவள் சின்ன காகிதத்தில் துணிகளின் எண்ணிக்கையையும் வகையையும் குறித்து கொண்டாள், பெகளம்   முடிந்ததும் மெட்ராஸ் காரி மெதுவாய் எழுந்து வந்தாள், காந்தியை நோக்கி "சரிம்மா உள்ள வந்து டீ குடிச்சிட்டு போமா" என்றாள், மூத்தவளும் இளையவளும் திருதிருவென விழித்தனர், பின்னே ஒரு வண்ணாத்தி வெள்ளாளன் வீட்டுக்குள் செல்லலாமா,    "ஏன் கா உன் வீட்டு தீட்டு எனக்கும் புடிக்கத்துக்கா" என்று கோபப்பட்டவள் , "துணி  ரெண்டு நாள் கழிச்சு கிடைக்கும் " என்றபடி நடையைக்கட்டினாள், பாவம் மெட்ராஸ் காரி ஊருக்கு ஒரு கட்டுப்பாடு, சம்பிரதாயம் உண்டு என்று அறியாதவள், இதுவும் ஊருக்கேற்றபடி மாறிக்கொள்ளும்.     

        காந்தி முப்பது, முப்பத்தைந்து வயதை ஒட்டிய பெண்,கருமையான ஒடிசலான தேகம், ஒட்டிய வயிறு, எப்போதும் வெளிறிய பாவாடையும் சட்டையும் அணிவாள், கூந்தலை பின்னி சட்டை நிறத்துக்கு ஏற்றபடி ரிப்பன் கட்டிக்கொள்வாள், இவளுக்கு இரண்டு அக்கா மூத்தவள் ரெத்தினம், இளையவள் முத்து, இந்திரா நகர்  இறக்கத்தில் வண்ணான்குடியில் இவர்கள் குடியிருந்தனர், வீட்டுமுன்  அடையாளமாய் பெரிய கரியநிற மண்பானை புகை கக்கிய படி இருக்கும்.

           மூட்டை மூட்டையாய் துணிகளை கட்டி பழையாறு வண்ணான்துறைக்கு  பொழுது விடியும் முன்னே சிறு கூட்டம்  செல்லும், ஆற்றங்கரை ஓரம் பெரிது பெரிதாய் கருங்கற்கள்  நிரப்பி துவைப்பதற்கு வசமாய்  எழுப்பிருந்தனர், கரையிறங்கி நுழையும் பாதையில் தென்னந்தோப்பு இருந்தது   வெவ்வேறு, நிறங்களில் துணிகள் நீளமான கயிறுகளில்  தென்னையில்  கட்டப்பட்டு காற்றின் வேகத்தில் அசைந்தாடும், துணி அலச, குத்தி துவைக்க, அடித்து வெளுக்க என தனி ஆள்   உண்டு, தூக்குவாளியில் கஞ்சியும் துவையலும் கட்டிக்கொண்டு அத்தனையும் துவைத்து காயப்போட்டு, காய்ந்ததை எடுத்து மடிக்கும் போது கருக்கள் நேரமாயிடும், இடையிடையே  பாட்டு கச்சேரியும் உண்டு.
       
              ரெத்தினத்திற்கும் மற்ற பெண்களை போல ஜோராக கல்யாணம் நடந்தது, மாப்பிள்ளை பாண்டிக்காரன், எல்லாம் சரியாகத்தான் போய்க்கொண்டிருந்தது, ஒருநாள் வீட்டு வாசல் முன் வள்ளியூர்காரி வந்து ஒப்பாரி வைத்தாள், சேதி அப்போதுதான் இவளுக்கு உரைத்தது, வந்தது  முதல்  சம்சாரம், ஆங்காரம் எடுத்த ரெத்தினம் அவனை வாரியலை எடுத்து அடித்தே விரட்டினாளாம், இந்த சம்பவம் நடந்தபின் மூன்று பெண்கள் தனியாய் வசித்தாலும் எள்ளளவு கூட ஆண்கள் நுழைய முடியாது, ரெத்தினத்தின் வைராக்யம் தான்  என்னவோ தங்கச்சிகள் கூட கல்யாணம் கட்டிக்கொள்ள விருப்பப்படவில்லை.
       
                இப்போதைக்கு வெளுப்புக்கு ஆட்கள் குறைவு, ஒன்றிரண்டு குடும்பங்களே இன்றும் இதை தொடர்ந்து செய்துவருகின்றனர்,   வண்ணாக்குடியில் எல்லோர் வீட்டிலும் குழந்தைகள் பள்ளிக்கூடத்திற்கு செல்ல ஆரம்பித்துவிட்டனர்,  அக்கா தங்கச்சிமாரின் பாட்டா வழி உறவுமுறை இசக்கிமுத்துவும் நாகராஜனும் அரசாங்க அலுவலகத்தில் வேலை பார்க்கின்றனர், வண்ணான்குடியில் பள்ளி சென்ற முதல் தலைமுறை இருவரும் , இதுவும் காமராஜர் காலத்தில் வீட்டுக்கே சென்று குழந்தைகளை பள்ளிக்கு இழுத்து வந்து படிக்க வைத்ததால் நடந்தது, படிப்பில் கெட்டிக்காரனாக இல்லாமல் இருந்தாலும், இடஒதுக்கீட்டில் அரசுவேலையும் கிடைத்தது,     அக்கம்பக்கம் வசித்த பலர்    இதை பார்த்து பொசுங்க ஆரம்பித்தனர், டீக்கடையிலும் சலூனிலும் இவர்கள் காதுப்படவே பொரும ஆரம்பித்து விட்டனர், அதிலும் இசக்கிமுத்து சைக்கிள் ஓட்டி போகும் போது தாங்க முடியாத சூடு சிலர் பின்னால் ஏறி மூலக்கடுப்பு வந்தவர்களும் உண்டு.

      வண்ணான்குடியில் ஆட்கள் வேறு தொழில் செய்ய ஆரம்பித்தனர், இன்று ஊர்காரர்களுக்கு துணி வெளுக்க காந்தி குடும்பம் மட்டுமே, வாரத்திற்கு இரண்டு மூன்று நாளைக்கு  ஆற்றங்கரை செல்லுமளவுக்கே தொழில் இருந்தது  ,மற்ற நாள் இவர்கள் தேவையில்லை, துவைப்பு இயந்திரமும் வந்தாச்சு , ஒருவேளை துஷ்டி விழுந்தால் இவர்கள் இல்லாமல் காரியம் நடக்குமோ, வீட்டில் இழவு விழுந்தால்  நாவிதனை தேடுவதுதான் பெரிய வேலை, பாடை கட்டணும், கதம்பம் அடுக்கி கடைசியில் ஆத்துமண்ணை  எழுப்பி குழி போட அவனை விட்டால் ஆள் இல்லை,   இப்போதெல்லாம் ஊர்குடிமகன் என்று நாலைந்து ஊருக்கு ஒரு நாவிதன், அவனும் வேறு தொழில் செய்ய ஆரம்பித்துவிட்டான், ஆனால் துஷ்டி வீட்டில் கிடைக்கும் வருமானம் உபரி வருமானம் அல்லவோ,,எரியூட்டி வந்த அடுத்த நாள் காடாற்று, இறந்து எரியூட்டிய  நாள் வரைக்கும் குவிந்த அழுக்கு துணிகளை வீட்டில் துவைக்க கூடாது, வண்ணான் மட்டுமே வெளுக்க வேண்டும். காந்தி வீட்டில் அடுப்பெரிவதற்கு இதை விட்டால் வேறு வழியில்லை. 

            நெடுநாளாய் ஊர்க்கூட்டம் கூடவேண்டும் என்று இசக்கிமுத்துக்கு ஒரு எண்ணம் உண்டு, ஊரை சுற்றி எல்லா தெருக்களிலும் கோயில் உண்டு, ஆனால் இங்கே ஒரு சாமியும் இல்லை, இவர்கள் தெய்வம் மாடனும் ஆத்தங்கரைக்கு செல்லும் பாதையில் தான் கோயில் கொண்டுள்ளார், கோயில் என்று கூறமுடியாது பழுத்த ஆலமூடின் முன் எழுப்பப்பட்ட மண் பீடம் மட்டுமே, வெள்ளி செவ்வாய் விளக்கு ஏற்றி வழிபடுவதை தவிர, ஆண்டுக்கு ஒருமுறை வரி பிரித்து  சித்திரை கடைசி வெள்ளி சேவல் பலிகொண்டு ஊர்க்கொடை நடத்துவது  வழக்கம், இசக்கிமுத்துக்கு தோன்றியது மாடனை இங்கே மண் பிடித்து எழுப்பி  வழிபடுவது அல்ல, வெள்ளாளத்தெரு, ஆசாரிமார் தெரு, சாலியர் தெரு, செட்டித்தெரு, சன்னதி தெரு, ரதவீதியில் வழிபடுவது  போல பிள்ளையார் கோயில், கோயிலை எழுப்பி கும்பாபிஷேகம் நடத்த வேண்டும், மொத்த ஊருக்கும் அன்னதானம் போடவேண்டும் . இந்த எண்ணத்தை இவர்களிடம் கூறி சம்மதம் பெற வேண்டும், வீட்டுக்கு வரி பிரிக்க வேண்டும், எம்.எல்.ஏ, கவுன்சிலர் இவர்களிடம் பெரிய நன்கொடையும் , கடைத்தெரு வியாபாரிகளிடமும் கிடைக்கும் நன்கொடையை வசூலித்து கொள்ள வேண்டும், இது சாத்தியமா என்பது அவனுக்கு தெரியாது, ஆனால் இதை எப்படியாவது தன் தலைமுறையில் செய்து காட்டவேண்டும் என்ற உந்துதல் அவனுக்கு இருந்தது.
       
              இதைப்பற்றி நாகராஜனிடமும் பேச்சுக்கொடுத்தான், நாகராஜன் அப்பிராணி, தாசில்தார் அலுவலகத்தில் கணக்கர் வேலை, வேலைக்கேற்ற மரியாதையை எதிர்பார்த்தான், அவனுக்கு அடுத்தபடி உதவியாளர் வேலை பார்க்கும் முத்துசாமிக்கு கிடைக்கும் கால்வாசி மரியாதை கூட அவனுக்கு கிடைக்கவில்லை என்பதே நிதர்சனம், ஏன் நாகராஜனின் பெயர் கூட முதுகுக்கு பின்னால் வெளுப்புக்காரன்தான், உள்ளூர பொருமி என்ன லாபம், எதிர்த்து கேட்க திராணி இல்லை, எத்தனை நாள் இதை எண்ணி வருந்திருப்பான், தூக்கமின்றி தவித்திருப்பான், ஆக இசக்கிமுத்துவின் யோசனை சரி என்றே பட்டது, நாகராஜனும்  ஒத்துக்கொண்டான். இசக்கிமுத்துவும் சாதாரண ஆள் இல்லை, புலியை பூனையாக்குவான், எலியை யானையாக்குவான், இதனாலே ஆட்சியர் அலுவலகத்தில் ஊரில் என்ன வேலை நடக்க வேண்டுமென்றாலும் பெரிய தலைகள் இவன் வீட்டிற்கு நேரில் வந்து பேசி போவதுண்டு, காலம் மாறித்தானே ஆக வேண்டும், நம் பிள்ளைகளும் தலை குட்டப்பட்டே வாழ வேண்டுமா, பல சிந்தனைகள், இறுதியாக இசக்கிமுத்துக்கு காரியம் முதல்வகையில் கைகூடியது, வண்ணான்குடிக்கு புது பெயரும் முடிவு பண்ண வேண்டும்

     இசக்கிமுத்துக்கு தெரியும் வண்ணான்குடியில் நாகராஜனுக்கு இருக்கும் மதிப்பும் மரியாதையும் அதிகம், ஆள் அப்பிராணி எனவே இல்லை என்று சொல்லாது கேட்போருக்கு உதவி செய்யும் குணம் படைத்தவன், இவன் சொன்னாலே காரியம் நடக்கும், ஊர்கூட்டம் நாகராஜன் வீட்டிலே நடக்க விருப்பப்பட்டான், நாகராஜனும் சரி என்கவே, கூட்டம் கூடும் நாளும் முடிவாயிச்சு. ஊர்மக்கள் நாகராஜன் வீட்டு முற்றத்தில் கூடினர், இசக்கிமுத்து இவனிடம் கூறிய எல்லாவற்றையும் கூட்டத்தில் எடுத்துரைத்தான், ஆதரவும் ஒரு சேர எதிர்ப்பும் உண்டானது, காந்திக்கு  கோயில் கட்டுவது கூட பெரிதாய் தோன்றவில்லை ஆனால் தெரு பெயரை மாற்றினால் எங்கே தன் தொழில் கெடுமோ என்ற அச்சம் மனதில் உருவானது.

        கூட்டத்தில் எல்லோரும் அமைதியாய் நிற்க, காந்தி குரல் எழுப்பினாள் "அண்ணே, எல்லாம் சரி கோயிலு கட்டுவோம், சேந்து சாமி கும்பிடுவோம்,தெருக்கு எதுக்கு புது பேரு, எங்க மூணு பேருக்கு இருக்க ஒரே பொழப்பு துணி வெளுக்கதுதான், வண்ணான்குடி பேர மாத்தினா வெளுக்க வாரவன் எங்க போவான், இப்போவே ஆடிக்கும் அமாவாசைக்கும் தான் வேல,  இதுல எதாவது இடஞ்சல் வந்தா, நாங்க நாண்டுக்கிட்டுதான் நிக்கணும்", "இங்க பாரு பொம்பளைகளா, இது ஊரு ஒண்ணா எடுத்துருக்க முடிவு, இதுனால உங்களுக்கு ஒன்னும் இடஞ்சலு வராது, வருமானம் வரத்தான் செய்யும்,, வேல நடக்கும், ஆனா இனி எவனும் நம்மல வண்ணான்குடி, வண்ணான் லா கூப்பிட கூடாது" என்றதும், கூடியிருந்த மக்களுக்கு எதுவானாலும் சுற்றியுள்ள ஊர்களில் இருப்பது போல் நமக்கும் ஒரு கோயில் என்பதே பிரமிப்பை கொடுத்தது, அக்கா தங்கச்சிமாருக்கு மாத்திரம் மனம் சங்கடத்துடன் குழம்பி இருந்தது. ஊரே விளக்கை அணைத்து நிம்மதியாய் உறங்கியது, ஒரு வீட்டில் மட்டும் விளக்கு எரிந்து கொண்டிருந்தது                

                ஒருவழியாக அனைவரும் ஒருசேர கோயில் கட்டுவது என முடிவு செய்தனர், தெரு தொடக்கத்திலே கோயில் கட்ட இடம் தேர்வு செய்தனர், இசக்கிமுத்து முனிசிபாலிட்டியில் எல்லாவற்றையும் கவனித்து கொண்டான்,  எம்.எல்.ஏ வை அழைத்து அடிக்கல்   நாட்டினர், வடலிவிளை தங்கப்பன் மேஸ்திரி கோயில் எழுப்ப, மைலாடி கணபதி ஸ்தபதி சிலை வடிக்க என எல்லாம் முடிவாயிச்சு, முதல் பெரும்தொகையை நாகராஜன் கொடுக்க இசக்கிமுத்து அறகுழு பொறுப்பை எடுத்து வேலையை முழுவீச்சில் செய்தான், எல்லாவற்றிக்கும் கணக்கு எழுதினான், கோயிலும் எழும்பியது.

             சாமிக்கு பெயர் தேர்வு செய்வதுதான் பாக்கி இருக்கும் வேலை, ஊரே கூடி வடிவீஸ்வரம் ராமய்யரை பார்த்து பெயர் தேர்வு செய்ய கோரினர், பலபெயர்கள் விவாதித்து இறுதியாக சித்தி வினாயகர் முடிவு செய்யப்பட்டது, ராமய்யர் தலைமையில் எம்.எல்.ஏ முன்னிலையில் அஷ்ட மகா கும்பாபிஷேகம்   நடந்தது, இரண்டு நாள் கலை நிகழ்ச்சிகள் என விழா களைகட்டியது, இசக்கிமுத்துக்கும் நாகராஜனுக்கும்  விழா முடிவில் எம்.எல்.ஏ சால்வை போர்த்தி மரியாதை செலுத்தினார்.

                   ஒரு வாரம் கழிந்து, இசக்கிமுத்து தெரிந்த பெயிண்டரை அழைத்து தெருமுகப்பில் 'சித்தி விநாயகர் கோயில் தெரு' என பெரிதாய் எழுத சொன்னான், அந்த வழியாக சென்ற அக்கம்பக்கத்தினர் இதை ஆச்சர்யமாகவே கண்டனர், எது எப்படியோ இனி இது வண்ணான்குடி கிடையாது சித்திவிநாயகர் கோயில் தெரு என்பதில் நாகராஜனும் இசக்கிமுத்துவும் பெரு மகிழ்ச்சி அடைந்தனர்.

            வருடாபிஷேகமும், பன்னிரண்டு முறைக்கொரு நடத்தும் கும்பாபிஷேகமும் இருமுறை செழிப்பாய் நடந்து முடிந்தது, சித்தி விநாயகர் சுற்றுவட்டாரத்தில் பிரசித்தி ஆனார், திருநீறில் நனைத்த கயிறை இக்கோயிலில் பூஜித்து கையில் கட்டிக்கொண்டால் வியாதி குணமாகுமாம், கோயிலை சுற்றியிருந்த ஓலை குடிசையும், ஓட்டு வீடும் காணாமல் போயாச்சு, மாடிவீடுதான் எங்கும், அலங்கார கற்கள் விதித்த வீதி, சாக்கடைகள் எல்லாம் சிமெண்டால் மேல் வாக்கில் மூடி கிடந்தது, தண்ணீர் தொட்டி புதிதாய் போன ஆண்டுதான் திறக்கப்பட்டது.

           அந்திநேரம், பள்ளி விட்ட குழந்தைகள் தெருவில் சுதந்திரமாய் விளையாடிக்கொண்டிருந்தனர், பூநூல் சட்டைக்கு வெளியே  தெரிய வெளுத்த  குண்டு பையன்  கண்களை பொத்திக்கொண்டு எண்களை எண்ண ஆரம்பிக்க, சிலுவை கழுத்தில் தொங்க சுருள் முடி பையனும், கருத்த சட்டை போடாத பையனும் ஒழிய இடம் தேடி தட்டழிந்தனர், இதனிடையே குழந்தைகள் இடையே சிரிப்பு சத்தம், ஒழுங்காய் வாராத நரைத்த தலையும், பாவாடை சட்டையும் அணிந்த ஒடுங்கிய ஒருத்தி தலையில் துணி மூட்டையை சுமந்து கொண்டு தெருவில் இருந்த ஒரே இருண்ட குடிசையில் நுழைந்தாள், குழந்தைகள் அவள் பின்னாலே ஓடி நளி அடித்து கொண்டிருந்தனர், குடிசையில் இருந்த கிழவி ஒருத்தி வெளியே வந்து குழந்தைகளை விரட்டினாள் ,"எட்டி காந்தி ஏண்டி இவ்ளோ நேரம், சீக்கிரம் வாளியை எடுத்துட்டு போய் டீ வாங்கிட்டு வா" என்று மூட்டையை சுமந்து வந்தவளை பார்த்து கூறினாள்.

           இதையெல்லாம் தூரத்தில் இருந்து கவனித்த  வயதான, தடித்த, முடி எல்லாம் வெண்பஞ்சாய் நிறைத்த ஒருவர் மனதுக்குள் நினைத்து கொண்டார் "இந்த சனியங்கல இங்க இருந்து விரட்டணும்" , மெதுவாய் நகர்ந்து கோயில் வெளியே இருந்த திருநீறை நெற்றியில் பூசிக்கொண்டே "உம்மால தான் நல்லாருக்கேன் ஆண்டவா" என்று வேண்டிக்கொண்டார், இக்கோயிலை பார்க்கும் போதெல்லாம் வடக்கூரில் வாங்கிப்போட்ட  தென்னத்தோப்பும் நியாபகம் வருவதுண்டு, கோயில் முன் வேண்டி நிற்கும் போதே, பின்னால் இருந்து இன்னோர் வயதானவர் "ஏலேய், இசக்கி முத்து வா போவோம்" என்றார், இவரும் "இந்தா வந்துட்டே நாகராஜா" என்றபடி அங்கிருந்து நடந்து  முக்குதெரு ஆறுமுகம் வீட்டுக்குள்  நுழைந்தனர்.                                                                               

No comments:

Post a Comment

இணைந்த கைகள்

  ஒரு மாலைநேரம், புதிய திரைப்படம். திங்கள் கிழமை,  மாலை நேரக்காட்சி,  இணைந்த கைகள்.  நிதானியுங்கள், அதே நேரம் உங்கள் மனைவி, அரசு மருத்துவமனை...