Tuesday 5 February 2019

கோடித்துணி

கோடித்துணி :





ராமையா பிள்ளைக்கு தலை சுற்ற ஆரம்பித்தது, அடித்த வெயிலில் வயதின் மூப்பும் பெரிய சோர்வு ஒன்றை கொடுத்தது, வெற்றிலை பாக்கு கடை ஒன்றின் வெளியே அமர்ந்து சோடா ஒன்றை வாங்கி குடித்தவுடன் தான்  அடுத்து நடப்பதற்கான தெம்பே வந்தது, கடைத்தெருவுக்கு அவர் வருவது இது இரண்டாவதோ மூன்றாவதோ, என்றோ ஒரு தீபாவளிக்கு மனைவி மணியம்மையும் மகள் நாகமும் என இணைந்து வந்தது, கையில் இருந்த போனஸ்க்கு அதிகமான ஜவுளி வாங்கிட தனக்கு வாங்கின துவர்த்தை வேண்டாம் என கடைக்காரரிடம் சொன்னதை மணியம்மையும் நாகமும் கவனிக்கவில்லை , வீட்டுக்கு வந்து துவர்த்தை பற்றி மனைவி கேட்ட போது எதை எதையோ சொல்லி  சமாளித்தார், பிறகு மணியம்மை ராமையாக்கு தெரியாமல் பக்கத்து வீட்டு செல்லத்துடன் கடைதெருக்கு தீபாவளிக்கு முந்தின நாள் போய்  வாங்கி வந்தாள். இந்த கடைத்தெருவில் தான் எவ்வளவு  ஜனம்,நகர கூட இடம் இல்லை,குழந்தைகள் அழும் சத்தம், கடைத்தெரு வியாபாரிகள் பீபீ ஓதும் சத்தம், என சத்தம் பலவிதம், ராமையா பிள்ளைக்கு தலை மறுபடியும் சுற்ற ஆரம்பித்தது, வயதானலே வரும் அதிக இரத்த அழுத்தம், அதுவும் அவர் சைக்கிள் மிதித்த மிதி கால்களும் கூட தளர்ந்து விட்டது, இருந்தாலும் அங்கும் இங்கும் ஓடும் கூட்டத்தை பாத்தார், தனக்குளே பேசிக்கொண்டார், தீபாவளி வந்துவிட்டால் அடையும் மகிழ்ச்சிக்கு இணையான பயமும்  நடுத்தர வர்க்கத்துக்கு உண்டு, செலவு அதிகமே கோடித்துணி எடுக்கவேண்டும், பலகாரம் சுடவேண்டும், பண்டிகை அன்று காலை இட்லியும் இறைச்சி குழம்பும் சமைக்க வேண்டும், வசதிக்கு ஏற்றபடி ஆடோ,கோழியோ வாங்குவது வழக்கம், சில பகுதிகளில் மாடும் பன்றியும் கூட கிடைக்கும்.       

ராமையா வழக்கம் போல் பெரிய நாடார் கடைக்குள் நுழைந்தார், கடையில் தான் எத்தனை மாற்றம் ஆரம்பித்தில் சிறிய அறையில் பெரிய நாடார் மட்டும் ஜவுளி வியாபாரம் செய்துவந்தார், இன்று இது விரிந்து இந்த நகரில் முக்கிய வணிக நிறுவனமாய்  உயர்ந்திருக்கிறது, கடையினுள்  நாடாரின் படம் பெரிதாய்  கல்லா பெட்டிக்கு அருகிலே பெரிய மாலையுடன் போடப்பட்டு இருந்தது, நாடாரின் மருமகன் ரசீது போடப்படும் இடத்தினருகே நின்றிருந்தான், எங்கும் ஜனம் நிறைந்திருந்தது, ராமையாக்கு  ஒரு சட்டையும் வேஷ்டியும்  மருமகனுக்கும், சேலை ஒன்று மகளுக்கும் வாங்க வேண்டும், கையில் போனஸ் தொகை உண்டு, அங்கும் இங்கும் விழித்தபடி நின்றிருந்தார், கடைப்பையனை அழைத்து எங்கே என்ன வாங்க வேண்டும் என்று விசாரித்தபடி அங்கு சென்றார்.

ராமையாக்கு வயது எழுபதுக்கு அதிகம் இருக்கும், வடசேரி கடைத்தெருவில் இருக்கும் ஹோட்டல்களுக்கு, டீக்கடைக்கும் குடம் குடமாய் தண்ணீர்  நிரப்பி கொடுக்கும் வேலை, சைக்கிள் பின் கேரியரில் கயிறு போட்டு குடங்களை மாட்டி வைத்திருப்பார், தினமும் அண்ணா ஸ்டேடியம் சென்று தண்ணீர் நிரப்பி வரவேண்டும், குடத்திற்கு ஏற்றபடி கடையில் ரூபாய் வாங்கி கொள்வார், ஐம்பது வருடமாய் அதிகம் விடுப்பு எடுக்காமல் இவ்வேலையை செய்து வருகிறார், தீபாவளி பொங்கலுக்கு சில கடை முதலாளிகள் பெரிய மனது வைத்து போனஸ் கொடுப்பதும் உண்டு, மணியம்மையை இங்கே ஒரு இட்லி கடையில் வேலை பார்த்த போதுதான் திருமணம் செய்து கொண்டார், அப்போது அவர்க்கு நாற்பது வயதுக்கு மேல் ஆகிவிட்டது, அவள் அந்த கடையில் பாத்திரம் கழுவும் வேலை செய்தாள் , அவளின் அப்பா ஒழுகினசேரி ரவி வாத்தியார், நிலம் வீடு எல்லாம் உண்டு, பாழாய் போன மாம்பட்டை, ரவி வாத்தியார் வேலையையும் காவு வாங்கியது, படுத்த படுக்கையானார், மணியம்மையின் அம்மா மூக்காயி வெளியுலகம் தெரியாத பொம்பளை, அவர் ப்டுக்கையில் விழ சொந்தபந்தம் எல்லாம் இருந்த சொத்தையும்  நாடகம் பல போட்டு குடும்பத்தையே நடுத்தெருவுக்கு கொண்டு வந்து விட்டனர், ரவி வாத்தியாரும் இறந்துவிட ஆதரிக்க சொல்லிக்கொள்ள ஆள் இல்லாமல், ஒரு சிறிய வீட்டில் வாடகைக்கு வாழ ஆரம்பித்துவிட்டனர், மணியம்மை தெரிந்த ஒருவரின் மூலம் இந்த கடைக்கு வேலைக்கு வந்துவிட்டாள் , பின் ஒருநாள் ராமையாவும் மூக்காயிடம்  பெண் கேக்க அவர்களின் அப்போதைய வாழ்க்கை  நிலையும்,  ராமையா எதையும்  எதிர்பார்க்காததும் மூக்காயிக்கு சரி என பட  கல்யாணம் எளிமையாய் திருப்பதிசாரம் கோவிலில் நடந்தது, அப்போது மணியம்மைக்கு இருபத்தி நான்கு வயது .         

நாகம் பிறந்தவுடன் தான்  கையில் கொஞ்சம் காசு வேண்டும்   என்று ராமையா பிள்ளைக்கு உரைத்தது, கொஞ்சம் கொஞ்சமாய் சேர்க்க ஆரம்பித்தார், தனக்கென எதுவும் அவர் ஆசைப்பட்டது இல்லை, உடுத்தும் துணியும் கடைத்தெருவில் மலிவு விலையில் வாங்கிவிடுவார், நாகத்துக்கு எப்போதும் பண்டிகை விஷேச நேரங்களில்  கோடித்துணி உண்டு, மணியம்மைக்கு சில பண்டிகைக்கு கிடைக்கும் சிலதுக்கு கிடைக்காது, நாகம்மையும் நல்ல நிறமாய் முகவடிவோடு இருப்பாள், படிப்பு பெரிதாய் ஏறவில்லை, மலையாள பள்ளிக்கூடத்தில் பத்தாம் வகுப்போடு முடித்துக்கொண்டாள், அதற்கு மேல் ராமையா பிள்ளையும் அவளை படிக்க வைக்க விரும்பவில்லை, நல்லநேரம் அவளும் விரும்பவில்லை, வீட்டருகே இருக்கும் நெசவுகூடத்தில் டப்பா மெஷின் போட போவாள், கையில் கிடைக்கும் காசை பாதி வீட்டுக்கு கொடுப்பாள், மீதி புது படம் சரஸ்வதியிலும், பயோனியர் தியேட்டர்லயும் சென்று பார்ப்பாள், அவள் வயது ஒத்திய பெண்கள் இரவு காட்சிக்கு கூட தைரியமாய் செல்லும் காலம் அது, எங்கோ ஓரிடத்தில் எப்படி பார்த்தான் என்று  தெரியவில்லை புத்தேரி சண்முகம் பிள்ளையின் மகன் குமாஸ்தா அய்யப்பன் நேராகவே ராமையா பிள்ளை வீட்டுக்கு பெண் கேட்டு வந்துவிட்டான், முதல் பொண்டாட்டி சரசு  இருந்தும் அடுத்த பொண்டாட்டிக்கு என்ன தேவை, மூத்தவளுக்கு தான் குழந்தை இல்லையே, புத்தேரி சண்முகம் பிள்ளை வீட்டுக்கு அடுத்த வாரிசு வேண்டாமா, ஊரே மெச்சும்படி கல்யாணம், மொத்த செலவும் சண்முகம் பிள்ளையினுடையது, இருந்தும் ராமையா பிள்ளை தான் சேர்த்த காசுக்கு கொஞ்சம் பவுன் தங்கமும் போட்டார்.

நாகம் இதுவரை பார்த்திடாத வாழ்க்கை, மாடி வீடு, கலர் டீவி, காலை இட்லி தோசை மத்தியானம் சுடு சோறு குழம்பு கூட தொடு கறியும் உண்டு, ராமையா பிள்ளை வீட்டில் விஷேச பண்டிகை காலத்தில் மட்டும் தான் இட்லியும் தோசையும், சுடுசோறும் வாரம் இரண்டோ மூன்று முறைதான், அய்யப்பன் நாகத்தின் அழகிற்கு ஒருவிதத்தில் அடிமையாகவே ஆகிப்போனான், வாரம் தோறும் புதுப்படம், மாதம் தோறும் கோடித்துணி, நாகம் கனவுலகத்தில் வாழ்வதாகவே நினைத்தாள், இப்போது கூடுதலாக பவுனும் கையில் குலுங்குகிறது, மூத்த தாரம் முழு நேர வேலைக்காரியாகவே நடத்தப்பட்டாள், பொறுக்க முடியாத அவளின் அப்பா பறக்கை நடராஜபிள்ளை வடசேரி கடைத்தெருவுக்கே வந்தே ராமையா பிள்ளையிடம் சண்டை பிடித்தார், வயதான அந்த பெரியவர் நாகம் நன்றாகவே இருக்க மாட்டாள், நாசமாய் தான் என்று மண்ணை அள்ளி சாபமும் இட்டார்,ராமையா பிள்ளைக்கு தொண்டை அடைத்து வார்த்தை வரவில்லை கவலையில் அன்று அவர் வேலையும் செய்யவில்லை, இதையெல்லாம் பற்றி நாகத்திற்கு தெரிந்தும் அவள் கனவுலகில் இருந்து வெளிவரவில்லை, பின் ஒரு நல்ல நாளில் அவள் வாந்தியும் எடுக்க புத்தேரி முழுக்க சண்முகம் பிள்ளையும், அய்யப்பனும் நடந்தே வீடு வீடாய் பூந்தியும் பழமும் வழங்கினர், பின்னென்ன எவ்வளவு பெரிய சந்தோசம் இது, இருக்கும் சொத்தை அனுபவிக்க அடுத்த வாரிசு வேண்டாமா, இத்தனை களேபரத்தில் நாகத்திற்கு தனக்கு ராமையா பிள்ளை என்ற அப்பனும், மணியம்மைன்னு ஒரு அம்மையும் இருப்பதே மறந்து விட்டதா என தெரியவில்லை,அவர்களை பற்றியெல்லாம் அவள் சிந்திப்பதே இல்லை.

சரசுவின் வாழ்க்கைதான் மிகவும் கேள்விக்குறியாய் போனது, சுசீந்திரம் கோவில் திருவிழாவுக்கு சென்ற போதுதான், நடராஜபிள்ளை இறந்த செய்தி ராமையாக்கு தெரிந்தது, மனம் நொடிந்தே போனார், தாளாத குற்றஉணர்ச்சியில் தவித்தார், அன்றைய நாள் தாணுமாலையினிடம் அவர் சரசுக்காகவே வேண்டினார், நாகமோ சுத்தமாக மாறிவிட்டால், மாதமும் ஆறு ஆகிவிட்டது எல்லா பணிவிடைகளும் சரசுவே அவளுக்கு செய்ய வேண்டும், அய்யப்பனுக்கும் குழந்தை கருவில் உருவான நேரம் புத்தேரி பஞ்சாயத்து தலைவனாய் விட்டான், வேறென்ன வேண்டும் அவன் நாகத்தை லெட்சுமி தேவியாகவே பார்த்தான், அவள் சொல்லும் எல்லாவற்றிக்கும் இப்போது உம்மும் கொட்ட ஆரம்பித்த விட்டான்,

இந்த நேரத்தில்தான் தீபாவளியும் வந்து விட்டது, என்னதான் இருந்தாலும் தலை தீபாவளி அல்லவா, ராமையா பிள்ளைக்கு மனது கேட்கவில்லை, இப்போது முந்திய மாதிரி அவரால் வேலை பார்க்க முடியவில்லை இருந்தும் தினமும் குடம் குடமாய் தண்ணீர் சுமக்கிறார், மணியம்மையும் வீட்டுக்கு வெளியே சிறிதாய் இட்லி கடை ஒன்றை ஆரம்பித்து விட்டாள்,சிறிது சிறிதாய் சேமித்த பணத்தில் ஊருக்கு வெளியே இடம் ஒன்றும் வாங்கியாகி விட்டது, பெரிதாய் கவலை ஒன்றும் இல்லை, ராமையா பிள்ளையும் கிடைத்த போனஸ் பணத்தில் தான் மருமகனுக்கும், மகளுக்கும் கோடித்துணி எடுக்க இந்த பெரிய நாடார் கடையில் கால் கடுக்க நிற்கிறார்.  கையில் இருந்த மொத்த தொகைக்கும் வேஷ்டி, சட்டை, சேலையே எடுத்து விட்டார், ரசீது செலுத்தி துணி பையை எடுத்து கடைக்கு வெளியே வந்தவுடன் தான், இலகுவாக அவரால் மூச்சு விட முடிந்தது.

முந்திய நாளே வீட்டில் இவருக்கும் மணியம்மைக்கும் பெரிய வாக்குவாதம், மணியம்மை நாகத்தின் வீட்டுக்கு வர சுத்தமாய் முடியாது என்று நேரடியாவே கூறி விட்டால், இதற்குமேல் அவளை வற்புறுத்த முடியாது என்பது ராமையாக்கும் தெரியும், எனவே வற்புறுத்தவில்லை. இதற்குமுன் அவள் கருவுற்றபோது பலகாரம் வாங்கி அவள் வீட்டுக்கு இவர்கள் இருவரும் அவள் வீட்டுக்கு போனபோது பெரிதாய் அவள் மரியாதை ஒன்றும் கொடுக்கவில்லை, இவர்கள் சென்ற நேரம் அவள் டிவியில் எதையோ பார்த்து சிரித்து கொண்டிருந்தாள், இவர்களை பெரிய பொருட்டாய் ஒன்றும் அவள் கருதவில்லை, சரசுதான் இவர்களுக்கு குடிக்க காபி கொடுத்தாள், ராமையா பிள்ளைக்கு சரசுவை தலை தூக்கி பார்க்கவே திராணி இல்லை, அன்றைய இரவு முழுவதும் மணியம்மை சரசுவை பற்றியே பேசி கொண்டிருந்தாள்.

எப்படியோ கோடித்துணி எடுத்தாகிவிட்டது, ராமையா பிள்ளை மெதுவாக நடந்து குளத்து பஸ் ஸ்டாண்ட் வந்து விட்டார், அப்போதெல்லாம் புத்தேரிக்கு நடந்தே செல்ல வேண்டும், செல்லும் வழியில் அதிர்ஷ்டம் இருந்தால் மாட்டு வண்டியோ, குதிரை வண்டியோ கிடைக்கும், இப்போது பேருந்து வந்து விட்டது, சீக்கிரமாகவே சென்று விடலாம், ராமையா பிள்ளை புத்தேரிக்கு டிக்கெட் எடுத்து ஜன்னல் ஓரமாய் உட்கார்ந்து கொண்டார், இந்த ஊர் தான் எப்படி மாறி விட்டது, வயல் இருந்த இடங்களில் எல்லாம் சிறிது சிறிதாய் ஓட்டு வீடும், ஓலை வீடும் தெரிகிறது, புத்தேரி பெரிய குளமும் இரயில் தண்டவாளம் போடுகிறேன் என்ற பேர்வழியில் கொஞ்சம் காணவில்லை, புத்தேரி பெரிய குளக்கரை சாலையில் பேருந்து போகும் போது பேருந்தே சிலநேரம் காற்றின் வேகத்தில் அலத்தியது.

புத்தேரியும் வர ராமையா பிள்ளை இறங்கி நடக்க ஆரம்பித்தார், யோகிஸ்வரர் புற்று கோயில் பெரிதாய் தெரிந்தது, அங்கிருந்து மேலபுத்தேரி அம்மன் கோயில் தெருவை நோக்கி நடந்தார், தெருவெங்கும் மருமகன் அய்யப்பனின் கட்சி சின்னமே பரப்பி இருந்தது, என்னதான் இருந்தாலும் மருமகன் பஞ்சாயத்து தலைவர் அல்லவா, இருப்பினும் மனதுக்குள் ஒரு பயம் அவரை அப்பிக்கொண்டிருந்தது, அது அவர் மகளை பற்றியது, பழைய நாகம் இல்லை அவள், அப்பா அப்பாவென்று காலை சுற்றிய என் மகள் இல்லை, புது பணக்காரி, பஞ்சாயத்து தலைவரின் பொண்டாட்டி, இனி என்னன்ன உண்டோ அத்தனை குழப்பங்கள் அவரை சூழ்ந்திருந்தது, அம்மன் கோயில் வந்தது நடை சாத்தப்பட்டு இருந்தது, வெளியே இருந்த திருநீறை நெற்றி முழுக்க அப்பிக்கொண்டார், வேண்டியும் கொண்டார்.

பெரிய வீடு தெரிந்தது, கோழிகள் அங்கும் இங்கும் கொக்கரித்தபடியே அலைந்து கொண்டிருந்தது, புதிதாக வாங்கிய அம்பாசிடர் கார் வெளியே நின்றது, தூரத்தில் இருந்து அலங்கோலமாய் சிரித்தபடி மெலிந்த பெண்ணொருத்தி அருகில் வந்தாள், அவள் சரசுவேதான், ராமையாக்கு கண்கள் நிறைந்தது, எதோ நெஞ்சுக்கூட்டில் நுழைந்து அவர் இதயத்தை பிசைந்தது, கால்கள் நகர மறுத்தது, மூச்சிரைக்க ஆரம்பித்தது, சரசு அவரை அப்பா என்னாச்சு என்று அழைக்கவே அவர் சமநிலைக்கு வந்தார், பேச்சு வரவில்லை, இருந்தும் நாகம் எங்கே என்றார், அவர்கள் கடைத்தெருவுக்கு செல்ல கிளம்பி கொண்டிருப்பதாக கூறினாள், உள்ளே வந்து உட்காரவேண்டும் காப்பி கொண்டுவருகிறேன் என்று அழைத்தால், ராமையாக்கு தலை மேல் மிகப்பெரிய பாரம் இறங்கியது போல் இருந்தது.

கையில் இருந்த கட்டைப்பையை இறுகி பிடித்தபடியே உட்கார்ந்திருந்தார், நாகத்தின் பேச்சொலி கேட்டது சரசுதான் நாகத்திடம் தான் வந்திருப்பதை அறிவிக்கிறாள் என்று எண்ணிக்கொண்டார், மாடிப்படியில் அவள் இறங்கி வரும் ஓசை கேட்டது, இப்போது அவளுக்கு எட்டு மாதம் இருக்கும் அவளை பார்த்தவுடனே புரிந்து கொண்டார், நாகம் அவரை நன்றாய் கூட கவனிக்கவில்லை, கண்ணாடி முன் நின்று ஒப்பனை இட்டபடியே வரும் மாதம் சீமந்தம் நடத்த உத்தேசித்திருப்பதாகவும் கூட தீபாவளி வருகிறதல்லவா அதற்கும் சேர்த்து கோடித்துணி எடுக்க செல்கிறோம், ராமையா இங்கேயே காத்திருக்க வேண்டும், புதிய கார் வாங்கிருக்கிறோம் சீக்கிரமாக சென்று வந்திடுவோம் நீங்கள் சுடுசோறு சாப்பிட்டு வெளியே வராண்டாவில் படுத்து கொள்ளலாம்  என்றும் கூறினாள், அவள் கூறியது காதில் விழுந்தாலும், ராமையாவின் கண்கள் சரசுவை விட்டு வரவில்லை. நாகம் இருக்கும் தோரணைக்கு அவள் அப்பாவிடமா தலைதீபாவளி கோடித்துணி கேட்க போகிறாள்.

வெளியே கார் செல்லும் சத்தம் கேட்டது, வீட்டு வராண்டாவில் யாரும் இல்லை, சண்முகம் பிள்ளை கடுக்கரை வரை சென்றிருக்கிறார், அய்யப்பனும் நாகமும் டவுனுக்கு போய்விட்டனர், சரசு மட்டும் அங்கே வைக்கோல் அடுக்கிக் கொண்டிருந்தாள், ராமையா பிள்ளை தைரியம் வரவைத்து அவள் அருகே சென்று சரசு என்றழைத்தார், அவளும் பதிலுக்கு அப்பா என்றாள், குமுறி குமுறி அழ ஆரம்பித்து விட்டார், பெண்பிள்ளையை பெற்ற நானே உன்னை போன்ற ஒரு பிள்ளைக்கு பாவம் செய்துவிட்டேனே என்று கதற ஆரம்பித்து விட்டார், சரசு எந்த ஒரு எதிர்வினையும் ஆற்றவில்லை, அவள் தன்னை தான் பாவியாக நினைத்து வருந்தி கொண்டிருந்தாள், இந்த வீட்டுக்கு வாரிசு கொடுக்க முடியாத மலடி ஆகிவிட்டதை நினைத்து எத்தனையோ நாள் அவள் வருந்தி இருப்பாள், இப்போது அவள் தன்னை பழக்கப்படுத்தி கொண்டு விட்டாள், பெரிதொரு வலியை அவளுக்கு இது கொடுக்கவில்லை, அவள் உடுத்திருந்த சேலை மிகவும் நைந்திருந்தது, ராமையா பிள்ளை எவ்வளோவோ மன்றாடி கையில் இருந்த கோடித்துணியை அவளிடம் நீட்டினார், அவள் வேண்டாம் என்று மறுத்தாள், தன்னை அப்பாவாக நினைத்து நீ இதை வாங்க வேண்டும் என்று கோடித்துணியை அங்கேயே வைத்து விட்டு அவர் வெளியே சென்றுவிட்டார், சரசுவும் அதை கையில் எடுத்துக்கொண்டாள், ராமையா நடந்தே வீடு வரை சென்றார், நடந்தவற்றை மணியம்மையிடம் கூற கூட அவர்க்கு தெம்பு இல்லை, அப்படியே படுத்து கொண்டார்.

டவுனுக்கு சென்ற கார் திரும்பி வரும் சத்தம் கேட்டது, சரசு வெளியே சென்று நின்றாள், கார் வந்தவுடன் காரில் இருந்த துணிப்பைகளை வீட்டுக்குள் எடுத்து கொண்டு வைத்தாள் , நாகம் வராண்டாவை பார்த்து அப்பா போய்விட்டாரா என்று சரசுவிடம் கேட்க அவளும் ஆமாம் என்பது போல் தலை அசைத்தாள், சரசுக்கு மனது கேட்காமல் ராமையா கொடுத்த கோடித்துணியை நாகத்திடம் நீட்டினாள், திறந்து பார்க்காமலே நாகம் அவர் என்ன வாங்கிருப்பார் என்று தெரியும் உனக்கும் துணி எல்லாம் பழையது ஆகிவிட்டது, நீயே வைத்து கொள் என்று கூறி அவள் அறைக்கு சென்று விட்டாள்.                                 



                

No comments:

Post a Comment

இணைந்த கைகள்

  ஒரு மாலைநேரம், புதிய திரைப்படம். திங்கள் கிழமை,  மாலை நேரக்காட்சி,  இணைந்த கைகள்.  நிதானியுங்கள், அதே நேரம் உங்கள் மனைவி, அரசு மருத்துவமனை...