Monday 13 January 2020

மாடன் நடை 2


வியாழன் இரவு மாடன் மனதிற்குள் எத்துணை  எதிர்பார்ப்புகள் இருந்திருக்கும். கடவுள் ஆயினும் மனிதர்கள் இடையே கோவில் கட்டி பாவம் அவரையும் ஏங்க வைத்து விட்டார்கள். மாடத்தி வர வர ஊருக்கு உண்மையாய் இல்லை, காவலுக்கும்  வருவதில்லை,ஆனால் படைக்கும் படையலில் மட்டும் பங்கு ஒழுங்காய் வேண்டுமாம் , போதாக்குறைக்கு மாடன் கோயில் சுவரை பகிர்ந்து வாழும் சரசு வீட்டு தொலைக்காட்சியின் காலை முதல் இரவு வரை ஒளிபரப்பாகும் தொடர்கள் தானோ மனித வாழ்க்கை என நம்பிவிட்டாள். அதுவே கதி என்று கிடக்கிறாள்.  மாடனுக்கு அதெல்லாம் கவலை இல்லை.  நாளை வெள்ளி, அதுவும் ஒடுக்கத்தி வெள்ளி, சித்திரை மாத வெள்ளி.  அப்படியே ஆற்றங்கரை இறங்கி நடந்தால் சுடுகாடு மயான சுடலை இருப்பார்.  போய் நலம் விசாரித்தபடியும் ஆயிச்சு, கிடைத்தால் மூன்று செம்பு சாராயமும் ஆச்சு. சாப்பாடும் பிரமாதமாய் இருக்கும், எத்தனை ஆடுகளை கோழிகளை வெட்டுவார்களோ. ஊருக்குள் ஆடு கோழி வெட்ட கூடாதென சைவ சாமி ஆக்கிவிட்டார்கள் படுபாவிகள். ஊட்டு படைக்கிறேன் என்ற பேரில் பூஜை முடியும் முன்னே அவன் அவன் வீட்டுக்கு வாளி வாளியாய் போய் கடைசியில் வாழை இலை தானே மிச்சம்.  

மயான சுடலை, ஆள் நெடுநெடு உயரம் ஏழடி இருப்பார். முறுக்கு மீசையும், சுருட்டை முடிக்கற்றையும், வெண் மொச்சை பற்களும், ஒற்றை ஆளாய் இருப்பார்.  ஒத்தையிலே நிற்பதால் எடுத்ததுக்கெல்லாம் கோவம் வரும்.  கோவம் வந்தால் எதிரில் நிற்பவன் யாராய் இருப்பினும் தூக்கி எறிந்து விடுவார்.   அநாதை குழியில் இருந்து, வெள்ளாளன்,வண்ணான், ஆசாரி,மருத்துவர், சாலியன், கிருஷ்ணவகை என நீண்டுகொண்டே ஒரு அரை மைல் போகும் மொத்த சுடுகாடுக்கும் காவல்.  பின்னே அத்தனை சாதி பயலையும் அடக்கணுமே.  கோவம் இல்லாட்டி இயலுமா. 

இருட்டியாச்சு, மாடன் நடையில் அமர்ந்திருக்கும் தாணு  தலை முதல் கால் வரை குடித்திருக்கிறான்.  மாடனுக்கு ஒருவகையில் சந்தோசம் தான்,  இன்னும் கொஞ்சம் நேரத்தில் ஆள் கிறங்கி விடுவான்.  ஆனால்,  பாருங்கள் நேரம் ஆக ஆக தெளிவானவன் போல இருந்தான்,  மாடனுக்கு பொறுக்க முடியவில்லை. 

 "தாயோளி எந்திக்கான பாரு,  நல்ல குடிச்சுட்டு இதே வேலையால இருக்கு.  சங்குல சவுட்டணும் , சேய் என்ன சென்மமோ நம்ம வாயில வந்து விழுகான்". 

தூரத்தில் தாணுவின் மனைவி நடந்து வருவது போலிருந்தது,  அவளேதான்.  மாடனுக்கு உள்ளுக்குள் ஒரு சிரிப்பு.  இப்போது நடக்கும் கூத்து வழக்கமான ஒன்றுதான்.  இருப்பினும் இன்றைய காட்சி புதிதாய் இருக்கலாம்.  

"வோய் எழும்பு,  வேலைக்கு போனீரே. சம்பளம் எங்க? ". எழுந்து நிற்க இயலாத தாணு என்ன செய்வான்.மெதுவாய் தட்டு தடுமாறி எழுந்து நின்றான். அவன் மனைவி முகம் சிவந்து இருந்தது, 

"கூட வேல பாக்கானுல மணி அவங்க மாமியார் செத்துட்டா, அங்க போனேனா, சுடுக்காட்டுல, குளிச்சுட்டு, எந்திச்சு பாக்கேன், இங்க கிடக்கேன்".

"பாவி சண்டாளா, உன்ன கட்டி ஏன் வாழ்க்கையே சீரழிஞ்சு போச்சு,  நாளைக்கு சீட்டு கட்டணும், வட்டிக்காரி வீட்டு முன்னாடி வந்து ஆடுவா, கரண்ட் பில்லு கட்டணும். தொண்டை குழி வரலா குடிச்சருக்க,  நா என்ன செய்வேன்" என கோவில் நடையிலே உட்கார்ந்து அழ ஆரம்பித்து விட்டாள். மாடத்திக்கு பொம்பளை அழுதாள் ஆகாது. "பாவி மனுஷா, இந்த பயல ஒரு காட்டு காட்டி விடுங்க, இந்த பிள்ளைய என்ன பாடு படுத்துகான்",  மாடனும் "குடிக்காதேன்னு சொன்னா கேப்பானா?, குடிகார பய" மனதிற்குள் சின்ன கிலி. அவனும் இன்றைக்கு சிறிது சாராயம் குடிக்கலாம் என எண்ணியிருந்தான்.

பெரும்பாடு பட்டு தாணுவை அவனது மனைவி கூட்டிச்சென்றாள். இன்னும் சில வீடுகளின் கதவுகள் மூடவில்லை,  காத்திருக்க வேண்டும் போலும். கோயில் பின்னால் யாரோ நிற்பது போல இருந்தது.மாடன் எட்டி பார்த்தார். சட்டைப்பையில் இருந்த பீடி எடுத்து சிறுவன் ஒருவன் பற்ற வைத்தான். யார் என பார்த்தால் தாணுவின் மகன். அடப்பாவி அப்பனை கண்டு கெட்டல்லவோ போகிறான்.

மாடன் பெருமூச்செடுத்து ஊதினார், கடும்காற்று பீடி அணைந்தது.  சிறுவன் விட்டானா?  தீப்பெட்டியில் அடுத்த குச்சி எடுத்து பற்றவைக்க போனான். கையில் இருந்த வேல்கம்பை ஓங்கி தரையில் ஊன்றி, இடுப்பில் கட்டியிருந்த கச்சை குலுங்க உடலை குலுக்கினார். அவ்விடம் அதிர்ந்து,  மணி சத்தம் கேட்கவே, கையில் இருந்தவற்றை கீழே போட்டு எடுத்தான் ஒரு ஓட்டம். மாடன் நமட்டு சிரிப்பு சிரித்தபடி வெளியே வந்தார்.

வழக்கம் போல முண்டனும் நாலுமுக்கு சந்தியில் காத்துக்கொண்டிருந்தார்.

"வாரும்,  சீக்கிரம் வந்துட்டீரே" என்றான் நக்கலுடன்.

"குமட்டுல குத்தினேன்,  கைலாசம்தான். வாடே வேகமா நட"

"இன்னைக்கு என்ன ஆளு கொதிக்கீரு,  என்ன சங்கதி"

"நேரமாயிட்டு, நட. பூஜை முடிஞ்சருக்கணும். அவர நம்ப முடியாது. மொத்தமா குடிச்சிருவாரு".

மாடன் வேகமாய் முன்னே நடக்க, அவரின் ஓட்டத்திற்கு ஈடு கொடுக்க இயலாமல். முண்டனுக்கு மூச்சு வாங்க ஆரம்பித்தது.

ஆற்றுப்பாலம் இறங்கி ஆலமூட்டு பக்கம் திரும்பினார். பழையாற்றில் தண்ணீர் சலனமின்றி ஓடி கொண்டிருந்தது. தூரத்தில் மயானத்தில் பிணம் எறிவது இங்கேயே தெரிந்தது. அருகே செல்ல நெடுநெடு உயரம் உள்ள மயான சுடலை பிணம் எரியும் சவக்குழி அருகே நின்றிருந்தார்.

மாடன் அவர் அருகே செல்ல,  முண்டன் ஒதுங்கி நின்றுகொண்டார். 

மாடன்,  சுடலையை நோக்கி "சாமிக்கு நல்ல வேட்டையோ" என்றார்.

"வாறும்,  ஊர் காவல் தெய்வமே. சரியான நேரத்துக்கு வந்துடீயீரே"

இருவரும் பேசிக்கொண்டு இருக்கும் போதே, சவக்குழியில் இருந்து அருவமான ஒன்று எழுந்து வந்தது. சுடலை அதை தன் கையில் இருந்த நீள் பிரம்பால் தட்டி தன் பக்கம் திருப்பினார். 

எதுவும் இல்லா நிறமற்ற அறுதிநிலை அது, சுருண்டு கிடக்கும் அதில் தொடக்கமும் இறுதியும் எங்கு நோக்கியும் ஒன்றாய் தோன்றும் விந்தை.

சுடலை சத்தமாய் சிரித்தபடி "விதி மனசுலாச்சா சின்ன பயலே" என்றார்.

அருவம் பேசியது "கண்டுட்டேன் எது உண்மையோ அத கண்டுட்டேன். தீச்சை கொடுக்கணும்".

அருகில் இருந்த மாடனும் முண்டனும் பேசிக்கொள்ளவில்லை. நடப்பவைக்கு சாட்சியாய் ஓரமாய் நின்று கொண்டிருந்தனர்.

"எத கண்ட".

"நிசம் என்னவோ அத, அழுற கண்ணீர்ல பொய் இருக்குமா. அத கண்டேனே,  எப்பொண்டாட்டி பிள்ளைகள அழ விட்டேனே. எம்பய குழில கங்கு போடும் போது தெவுங்கி தெவுங்கி அழுதானே. அத கண்டேனே. நிசம் என்னவோ இருக்கும் போது வேராவும் சாவும் போது வேராவும் ஆகுது"

"சரி ஆட்டம் முடிஞ்சி, ஆசை எதுவும் உண்டா. இரண்டு நாள் இங்க கறங்கலாம்"

"எது ஆசை,  புரிஞ்சி போச்சு. எதுவும் இல்லை. நிறைவு இருந்திருக்கணும். காசுக்கு அலைஞ்சேன். நேரம் இல்ல. எம்பிள்ளைகளோடு ரொம்ப நேரம் இருந்து. செத்துத்தான் வீட்டுல கிடந்தேன். கண்டுட்டேன் நிசத்த. போதும் தீச்சை வேணும்".

"சரி போ. எதுவும் இல்லாம,குறை இல்லாம. இந்த நிறைவோடு". கையில் இருந்த கம்பை அருவத்தில் தட்டி உந்தி மேலே எழுப்பி விட்டார். அருவம் கலைந்து எதுவுமின்றி மிச்சமின்றி இல்லாத ஒன்றில் கலந்தது.

சுடலை மாடன் அருகில் வந்தார். "என்ன ஊருக்காரரே. பாத்திலே இந்த பயக்கள. செத்தாதான் புரியுது. எதுவும் இல்லா புள்ளில என்ன ஆட்டம் ஆடிற்கோம்னு"

"சரிதான், நீரு செத்தவனுக்கும் நான் வாழறவனுக்கும் உள்ள வித்தியாசத்தை பாக்குறோம்".

"சரி,  வந்தது சன்னதி மாடத்துல இருக்கு. எடுத்துட்டு வாரும்" என்றார் சுடலை.

மாடன் முண்டன் பக்கமாய் திரும்ப,கையில் சாராய குப்பியோடு முண்டன் வர. மூவரும் ஆற்றங்கரையில் அமர்ந்தனர்.

1 comment:

இணைந்த கைகள்

  ஒரு மாலைநேரம், புதிய திரைப்படம். திங்கள் கிழமை,  மாலை நேரக்காட்சி,  இணைந்த கைகள்.  நிதானியுங்கள், அதே நேரம் உங்கள் மனைவி, அரசு மருத்துவமனை...