Thursday 16 January 2020

குற்றமும் தண்டனையும்: ஒன்று (நம் கையில் இருக்கும் கோடாரி)



சராசரியாக கடந்து போகும் குடிகாரர்களை நினைவில் வைத்துக்கொள்ள யார் விரும்புவார்கள்.  சர்த்தித்ததை  வாயின் ஓரத்தில் வடித்து, உடல் நாறும் உடலோடு அலைவர்களை வாழும் சமூகம் எந்நிலையில் ஒன்றி கவனிக்கிறது.  மாறாக வெறுத்து தள்ளும் மனப்போக்கில்,  இங்கே உனக்கு இடமில்லை என்று உந்தி தள்ளுவதை போல விரட்டப்படுகிறார்கள்.  குற்றமும் தண்டனையும் முதல் அத்தியாயம் குடிகாரர்கள் நிரம்பி இருக்கிறார்கள்.

  ரஸ்கோல்நிகாஃப் யார், அவன் இந்த சராசரி குடிகாரர்களுக்குள் என்ன செய்கிறான்.  வீதிகளில் அலைகிறான்,  மனம் குழம்பி தவிக்கிறான்.  பிரமை பிடித்தவன் போல திரிகிறான்.  குடியை வெறுக்கும் குடிகாரர்களே அதிகம்,  ஆனாலும் ஏன் குடிக்கிறார்கள்.  சோகம் மறக்க குடி, மகிழ்ச்சியின் உச்சம் குடி, வெறுப்பின் முனையில் குடி, மொத்தத்தில் குடியை மறக்கவே குடி.  ஆரம்பம் முதலே தோற்றவனாய் வருகிறான்.  சுயமாய் எடுத்த முடிவா 'அது'?  ஆம் 'அது'தான். மதுக்கடையில் எவரோ பேசியது கேட்டல்லவா?  செயலை சிந்தித்தவனும் இவனில்லை, மாறாக ஒரு சூழலின் முனையில் இவனும்,  மறுமுனையில் கிழவியும் அமர்ந்திருக்கிறார்கள்.

அது காலம் எனும் சங்கிலி ஒவ்வொரு சரடிலும் பலர் இழுக்க.முன்னும் பின்னும் நகர்ந்து, அதை நிகழவைக்க கிழவியின் சகோதரி தேவைப்படுகிறாள். ஆம் சந்தையில் அவனுக்கு 'அது' நிகழவேண்டிய சரியான தருணத்தின் குறிப்பை தருகிறாள். பரிதாபப்பட வேண்டிய ஒருத்தி,  அவளும் அழகுதான். புறம் அன்றி அகத்தின் வழி அழகை சுமப்பவள்.

குடிகாரன், இழிவானவன், கையாலாகாதவன், ஏமாற்றுக்காரன். இவனை எப்படி அழைக்க, மதுக்கடையில் ரஸ்கோல்நிகாஃப் முன் பெரும் பிரசங்கம் எதற்கு, தன்னை எதிலிருந்து விடுவிக்கும் என அதனை கருதினான். மாறாக எல்லாவற்றிலும் அவன் குணநலன்கள் எல்லாவற்றிலும் எஞ்சுவது, பெரிதாய் விஸ்தாரமாய் எழும்புவது பெரும் மலையாய் அவனை,  அவனின் பிரமாண்டமான அவன் உருவம் ஒத்த அழுக்கான சீழ்பிடித்த, அக்குள் நிறைத்து நீண்டு அழுக்கு பிடித்த மயிரு கொண்ட அவனே அல்லவா. அது அவனின் தாழ்வுணர்ச்சியோ.

ஏனோ, பெரும் அழகு கொண்ட சிங்காரி காத்ரீனா ஏன் இவன் வாழ்வில் நுழைந்தாள். எதன் மிச்சம், இவளின் கடந்தகாலம். காதலில் திளைத்தவள், எதிர்மாறாய் வெறுப்பை மட்டுமே சுமந்து இவனுடன் வாழ்ந்தாள். ரூபிள்களுக்காகவா பன்றி கறியை சமைத்து பரிமாறினாள். எத்தேவையின் பொருட்டு இவனோடு வாழ சம்மதித்தாள். அவளின் விதி அவளாலே சமைக்கப்பட்டது. இணையாய் சோனியாவின் உடையதும்.

ரஸ்கோல்நிகாஃப் என்பவன் அறிந்த ஒரே தூய ஆன்மாவாய் வருகிறாள். ஆம், அன்னையை,  துனியாவை விட அவனுள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி விட்டாள். துனியாவின் திருமணம் அவனுக்கு ஒருவித நெருடலை கொடுக்கிறது. அன்னை எழுதிய கடிதத்தில் பல வரிகள் இதற்கு நியாயம் சேர்க்கிறது. திடமானவள், அறிவானவள், எதையும் சகிப்பவள் அண்ணனிற்காக எடுக்கும் பெரும்துயரின் தொடக்கமாகவே அவளின் திருமணத்தை கருதுகிறான்

அத்திருமணம் எதற்கு,  யாருக்கான தியாகம். தியாகத்தின் பாவத்தை அவனுக்கு கொடுக்க போகிறாள். இதுவும் பாவமல்லவா. அன்னையும் தங்கையும் நிம்மதியான வாழ்வில் நுழைய போகிறார்கள். அதனை அளிக்கும் வல்லமை இவனுக்கு இல்லை. உண்மையிலே இதுதான் நிம்மதியா, ஏற்றுக்கொள்ளும் வாழ்க்கை,  அவன் தங்கையின் சகிப்பு அன்னையிடம் இருந்தே இவளுக்கும் கடந்திருக்கவேண்டும். எவ்வளவு பெரிய பைத்தியக்காரத்தனம்.

ஏன் சோனியா முக்கியமானவள்,  காத்ரீனாவின் பசி ஆற்றவா,  வேசி ஆனாள். இல்லை என்பதே சரி, பின் அவள் தந்தைக்காகவா. இதுவுமல்ல. பெரும் கருணை கொண்டவள்,  காத்ரீனா பெற்ற மூன்று குழந்தைகளின் பசி தீர்க்கவே அம்முடிவை எடுத்திருக்க வேண்டும். இல்லை காத்ரீனாவின் முதல் பெண் குழந்தை வேசி ஆகிருப்பாளோ! ஆம் பெரும் கருணை கொண்ட பேரன்னை அவள். அப்பாவத்தை அக்குழந்தை சுமந்திருக்கும். குடிப்பதற்கு சோனியாவிடம் ரூபிள் வாங்கிய அக்குடிக்கார தந்தை, குடிப்பதெல்லாம் சோனியாவிற்கு அவனால் நேர்ந்த துயருக்கா.

ரஸ்கோல்நிகாஃப் அடைந்திருக்கும் துன்பத்திற்கு,  அவனின் கொடும் கனவிற்கும் என்ன தொடர்பு. இரக்கமின்றி அடிவாங்கும் அந்த குதிரை, அச்சூழலில் அவனுள் எழுந்த விந்தை என்ன, எதை உணர்த்த அக்கனவு.

அங்கே எல்லாமுமாய் அவனே நிற்கிறான், எல்லாமும் அவனுள் இருக்கும் குணங்களே, ஆம் அவனின் இயல்புகள் அல்லவா அது. அவனை அழுத்தும் பெரும் காயங்களின் வடிவே அக்குதிரை. அவனிடம் பிறந்த அக்கொடிய எண்ணத்தின் உருவமே அக்குதிரை காரன்.  எங்கோ மிஞ்சி நிற்கும் கருணையின் மூலமே அச்சிறுவன். அவனை நல்வழிப்படுத்தும் அவன் கற்ற நூல்களின் போதனைகள் அவன் முன்னே தந்தையாய் அதிலிருந்து விலகவே அவனை அழைக்கிறது.

அக்கனவே மொத்தமும். எங்கோ குடிகாரனாகி,  ரஸ்கோல்நிகாஃபாகி,  துனியாவாய், அன்னையாய், காத்ரீனாவாய், கொலையான சகோதரிகளாக உணர்ந்த, உணர்வுகளை அனுபவித்த நான்.  சோனியாவை தரிசிக்க மட்டுமே விரும்புகிறேன்.

முதல் அத்தியாயம் என்னுள் கடத்தியது இதுவே,  பாவம் செய்ய தவிர்த்தாலும்,  எப்படியோ கோடாரியை தவிர்க்க முயலும் நான் அறிவதில்லை. கோடாரி எங்குமில்லை,  அது என்னுள்,  என் கைகளில் இருக்கிறது. நான் இல்லை இல்லை என்றாலும் கோடாரி இருக்கிறது. நிலை கண்ணாடியில் தெரிகிறது,  முகம் நிறைத்து கனிவோடு நிற்கும் என் கைகளில் ரத்தம் சொட்ட சொட்ட கோடாரியும் இருக்கிறது.

No comments:

Post a Comment

இணைந்த கைகள்

  ஒரு மாலைநேரம், புதிய திரைப்படம். திங்கள் கிழமை,  மாலை நேரக்காட்சி,  இணைந்த கைகள்.  நிதானியுங்கள், அதே நேரம் உங்கள் மனைவி, அரசு மருத்துவமனை...