Wednesday 22 January 2020

உடைந்த குடை (Shyness and Dignity)





உடைந்த குடை (Shyness and Dignity):

ஒரு மனிதன் இருந்தான், வாழ்ந்தான், பின் ஒருநாள் இறந்தான். 

ஒளி, இருட்டு என்போமோ?  இல்லை ஒளி, ஒளியின்மை என்போமா? ஏதோ ஒன்று இல்லாத நிலையில் இன்னொன்று பிறக்கிறது என்றால் அது இல்லாத ஒன்றை குறிக்கும் நிலையா?  எல்லா நிலையும் ஒரு செயலால் இன்னொரு நிலையை அடைகிறது என்று வைத்துக்கொள்வோம்.  முன்பிருந்த ஒன்று இல்லாமல் போயிச்சா?  இல்லை புதிதாக இன்னொன்று பிறந்ததா?  இங்கே மெய்நிலை எது?  இருந்த ஒன்று இல்லாமல் ஆனதா?  இல்லை புதிதாய் ஒன்று பிறந்ததா?  எவ்வித பிதற்றல் இல்லாமல் எதையும் நாம் உணர்ந்துகொள்வதிலே அவதானித்து கொள்கிறோம்?  இதாவது சரியா?.

தத்துவம் என்றால் தர்க்கங்கள் மட்டுமா?  தேற்றம் என்போமே?  அதன் மூலம் உருவாக்கப்படும் விதிகள் மற்றும் கோட்பாடுகளின் மெய்மை கொண்டு அறுதியாய் அகப்படும் இறுதி படிநிலையா?  எது எதுவாயினும் தர்க்கங்கள் மூலம் தத்துவம் முழுமை அடையுமா? சரி தத்துவத்தை தர்க்கங்கள் அடிப்படையில் சென்றடையும் அகதரிசனம் என்று கூறலாம் அல்லவா!.

எலியாஸ் சராசரி நார்வேஜிய மொழி ஆசிரியர் இல்லை. அதுவே போதுமானதாய் இருக்கிறது எங்கும் சஞ்சலப்பட! சலிப்பற்ற பதின்பருவ மாணவர்களின் முதிர்ச்சியற்ற எதிர்வினை அவன் பாடவேளையில் மனம் லயித்து,  பரவசம் பீறிட,  உள்ளக்குள் கிளர்ச்சியுடன் விவரிக்கும் இப்சனின் 'காட்டு வாத்து' எனும் நாடகத்தின் தன்மையை,  முடிச்சுகளை அவிழ்க்க?  இதைத்தான் இப்ஸன் ஒளித்து வைத்துள்ளார் இக்கூற்றுகள் வழியே என அவர்களை ஒப்புக்கொள்ள,  இதை ஒப்புக்கொள்ள என்பதை விட,  அறிய அல்லது,  புரிய இல்லை இல்லை,  உணர வைப்பதில் தோல்வி அடைய வைக்கிறது.

சரிதான், எதனாலோ இந்நார்வேஜிய வகுப்பில் அமர்ந்திருக்கும் இம்மாணவர்களின் எதையும் கற்றுக்கொள்ளவிரும்பா மனப்பான்மையா இவரின் அன்றைய கசப்புகளுக்கு காரணமாய் ஆகியிருக்கும். முப்பது பக்கங்கள் மேல் இப்சனின் 'காட்டு வாத்து' நாடகத்தின் மருத்துவர் ரெல்லிங் எனும் கதாபாத்திரம் மேல் ஏனோ அதீத ஈடுபாடு. இத்தனைக்கும் அவருக்கு தெரியும் அக்கதாபாத்திரத்தின் முக்கியம். அது எங்கே பேசுகிறது. நம் வாசிப்பை மிகக்கவனமாக, ஒவ்வொரு வரியையும் மிகக்கவனமாக மெதுவான மேலும் பிடிமானத்தை இன்னும் அழுத்தமானதாக தாக் ஸூல்ஸ்தாத் இறுக்கி பிடிக்கிறார். அயர்ச்சியை நாமும் உணர்வோம்,  ஏன் வெறுப்பை எலியாஸ் மேல் உமிழக்கூட செய்யலாம்.

நாவலின் ஆங்கில தலைப்பு 'Shyness and Dignity' கூச்சமும் கண்ணியமும். எலியாஸ் எங்கெல்லாம் கூச்சப்படுகிறான்,  ஜோஹான் எனும் ஆளுமை முன் மட்டுமே பெரும்பாலும், பின் ஏவா எனும் பேரழகி முன். அன்றையச்சூழலின் பாடத்திட்டங்கள், இளம் தலைமுறையின் நிலையாண்மை என பல காரணிகள் அவனை சமநிலையை குலையசெய்கிறது. எதையும் மேலாக மட்டுமே அறிந்த ஆசிரியர் மந்தையில் நுழைய விரும்பவில்லை. ஜோஹான் எனும் அற்புதமான தத்துவ அறிஞரின் நண்பன் அல்லவா அவன். சிலநேரம் அவன் நிழல் எனவும் அவனை எண்ணி சிலாகித்து இருக்கிறான். தான் எனும் அகநிலையை அகங்காரத்தை  ஜோஹான் முன் எங்கே உணர்கிறான். உண்மையிலே எலியாஸ் கண்ணியமானவன்,  ஈவா முன் அடிமையை போலவே பிற்பகுதி வருகிறான். அழகின் முன் மண்டியிடுகிறான், பெருமிதம் பொருக திரிகிறான். எங்குமே அத்துமீறவில்லை. அவளின் எண்ணங்களுக்கு மதிப்பளிக்கிறான்.

ஜோஹான் ஈவா எங்கு ஒருவருக்கொருவர் வாழ்வின் அழியா பக்கங்களை நிரப்புகிறார்கள். ஜோஹான் எதார்த்தம் நிரம்பியவன். அறிந்திருந்தான் நிகழும் காலமாற்றத்துக்கு ஏற்ப தன்னை வடிவமைக்க முற்பட்டான். கார்க்சின் மார்கிசியம் வழியே அவன் கண்டடைந்த தரிசனம் உழைப்பின் வர்க்கம் மேலே மெல்லிதாய் உருவாகியிருக்கும் கட்டுப்படுத்தும் ஒரு அமைப்பு. அதனை எளிதாய் முதாலாளித்துவம் என எண்ணவியலாது. அறிவியல் வளர்ச்சியின் அசுரவேகம்,  மனிதனை பொருளியல் நோக்கி உந்துகிறது. அதன் பகட்டு முகமாகவே விளம்பரம் நோக்கி திரும்புகிறான் இந்த தத்துவ அறிஞன்.

ஈவா பேரழகி,  பெண்ணிற்கு ஒரு குணம் உண்டு. தன்னை விட வலியவன் முன் தன்னை ஒப்படைப்பது. ஈவா அதைத்தான் செய்தாலோ! ஜோஹான் எனும் வசீகர இளைஞனிடம் அவளின் அத்தனை கர்வங்களையும் இழந்து நிற்கிறாள். அவனின் அன்பு ஒன்றுக்காக மட்டுமே எடுத்த முடிவா?  பெரிதாய் விளங்கவில்லை இவர்களின் உறவு.

மாறாய் எலியாஸ் ஆரம்பம் முதலே ஈவா மீது கிறக்கத்துடனே வருகிறான். அவளின் அழகு இவனை பொசுக்குகிறது, அவளில் மட்டுமே முழுதாக தன்னை இழக்கிறான். சிக்கலான இந்த உறவு, மேலும் சிக்கலாக ஆகிறது ஜோஹானின் புறப்பாட்டிற்கு பின்.

எலியாஸ் ஈவா மனமொத்த தம்பதிகளை போல இருபது வருடங்கள் மேலாக ஒரே வீட்டில் வசித்து வந்தாலும்,  சில இரவுகள் மாயமாய் உணர்வுகள் கொப்பளிக்க முயங்கினாலும்,  ஈவாவின் அகம் எலியாஸை எப் படிநிலையில் நிறுத்துகிறது. எலியாஸ் எவ்வளவு முயன்றும் அவள் கண்களை தாண்டி ஊடுருவ முடியவில்லை. இந்த அலைக்கழிப்பு எப்போதும் வெறிபிடித்த நாயினை போல அவனுள் கட்டுண்டு இருந்தாலும், இப்போதெல்லாம் அவனின் மனம் சீழ்பிடித்து விட்டது.

ஆணின் கண்களுக்கு அழகாய் தெரியும் ஒரு பெண்ணின் உணர்வு எப்படி இருக்கும் தெரியுமா?  ஈவா தன் அழகை எண்ணி என்றும் மனம் குளிர மகிழ்ந்திருக்க மாட்டாள். சராசரி பெண்ணை போல  இச்சமூகம் எங்குமே அவளை நடமாட விட்டுவைக்கவில்லை. துரத்தும் பார்வையில் வினோதமான ஆண்களின் செய்கையால் அவள் நொடிந்து போய் இருப்பாள். இதுவும் கூட எலியாஸ் உடனான புதிய வாழ்க்கைக்குமான காரணியாக இருக்கலாம். 

ஈவா  நாற்பதை நெருங்கிய வேலையில் இயல்பானோதொரு பெண்ணாக மாறுகிறாள். ஆண்களின் ஊசி பார்வைக்கு  அவள் தேவையில்லை,  எங்குமே சுதந்திரமாய் திரியலாம், கடைத்தெருவில் பிறரின் உடைகளை, அணிகலன்களை பார்த்து வெதும்பலாம்.  அவளின் அழகின் பின் மறைந்து இருந்த அவளின் உண்மையான வெளிப்பதத்தை  எலியாஸ் ஆச்சரியமாகவே கண்டான்.

எலியாஸுக்கு காமிலா (ஜோஹான் ஈவாவின் மகள்) மேல் அதீத அன்பு எப்போதும் இருந்தது, அது ஈவாவின் மகள் எனும் காரணம் மட்டும் அல்ல, அது அவன் உயிர்த்தோழன் ஜோஹானின் மகள் என்பதால்.

இந்நாவலின் ஒருபகுதியில் எலியாஸ் குழப்பம் அடைகிறான்,  இச்சமூகம் எழுத்தாளர்களை எங்கே வைத்துள்ளது. அவர்களுக்கு எதாவது அந்தஸ்து இருக்கிறது,  அவர்கள் மேல் ஏதாச்சும் சம்பிரதாய மதிப்பு இருக்கிறதா?  இக்கேள்விக்கு இன்றைக்கும் பொருந்தும்.

அடைத்து வைத்திருக்கும் எல்லா ஆற்றாமைகளும் பொருமி,  ஒருசேர அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அணையில் உள்ள நீரின் இயக்கம் சமநிலையில் அசைவின்றி இருந்தாலும்,  ஏதோ ஒரு வடிகால் திறக்கும் போது எதையும் பிடிங்கி எரியும், அடித்து நொறுக்கும். இதிலா இப்படி ஒரு வேகம் இருந்தது என்பதை போல இருந்தது அவரின் செய்கை அந்த பின் மதிய வேலையில். நிகழ்ந்த எதுவும் மாறப்போவது இல்லை, உடைந்த குடை மீண்டும் உபயோகபடப்போவதில்லை. 

அந்த சாம்பல் நிற காலை அவருக்குள் ஏன் அவர்களுக்குள் நிகழ்த்த போகும் மாற்றங்களை அறியாமல் வழக்கமான சலிப்பான போலி அன்பான பரஸ்பர விடைபெறுதலோடு அவர் சென்றார்.
ஈவாவிற்கு  ஜோஹான் விட்டுச்சென்ற வாழ்க்கையில் எலியாஸ் நுழைந்தான் எனில்,  அங்கே இல்லாமைக்காக அவள் வருந்தும் தருணங்களில், எலியாஸின் வருகை அவளை எங்குமே மகிழ்விக்க வில்லையா.  பிறகு எதற்கு அவர்கள் இணைத்திருந்தார்கள்.  இந்த உண்மையில்லா,  பிடிப்பற்ற,  போலியான வாழ்க்கையை எதற்காக வாழ்கிறார்கள்.

தாக் ஸூல்ஸ்தாத் ஓரிடத்தில் சொல்கிறார்  மனதின்  போலி பிரமைகளை நீக்கி விட்டால் அங்கே மகிழ்ச்சிக்கு இடம் இருக்காது. உண்மைதான் நாம் மகிழ்ச்சியாக வாழ எத்தனை போலி பிரமைகளை கட்டமைத்து உள்ளோம், இருப்பினும் நாம் மகிழ அப்போலி பிரமைகளை இருக்க பிடித்து கொள்வோம்.

ஏன் என்றால் நாம் பிறந்தோம்,  வாழ்கிறோம்,  பின் ஒரு நாள் சாவோம்.


No comments:

Post a Comment

இணைந்த கைகள்

  ஒரு மாலைநேரம், புதிய திரைப்படம். திங்கள் கிழமை,  மாலை நேரக்காட்சி,  இணைந்த கைகள்.  நிதானியுங்கள், அதே நேரம் உங்கள் மனைவி, அரசு மருத்துவமனை...