Friday 22 November 2019

ஐரீன்


ஒருவரின் மேல் உருவாகும்  பிரியம் இந்தந்த காரணிகளில் பிறக்க வேண்டும் என்ற நிர்பந்தம் ஏதுமில்லையே? அவளை கண்ட முதல் தருணம் இன்னும் ஏன் நினைவுகளை விட்டு விலகவில்லை.  நான் அதனை போகாது தடுத்து அடைத்து வைத்துள்ளேனா?  எதுவாயினும் அது என்னுள் உண்டாக்கும் குதூகலமும், சந்தோச கொந்தளிப்பும் எனக்கானவை.

சில நினைவுகள் கனவுகளை போல, காலை விடிந்ததும் கலைந்து விடுவதை போல, சட்டென்று கடந்து போகும். எந்நேரமும் நம்முள் அழுத்தி வைக்கப்பட்டு நம்மோடு பயணிக்கும். சிலரும் அப்படித்தான், பேருந்திலோ, இரயிலிலோ நம்மோடு பயணிக்கும் பயணியை போல மணி நேரங்களிலோ, நாட்கணக்கிலோ நமக்கே தெரியாமல் நம்மோடு பயணிப்பார்கள். அப்படிதான் அன்றைய நாள் பணி நிமித்தமாய் சந்தித்த நபர் தன்னை அறிமுகப்படுத்தும் போது "ஐரீன்" என்ற பெயரை கூறினார்.

எட்டாம் வகுப்பில் நுழைந்த வருடம்,  இன்னும் ஓர் வருடம் காத்திருக்க வேண்டும் முழுகால் சட்டை அணிய!,  ஒரே பள்ளியில் படித்த ஊர்  நண்பர்கள்.  அதுவும் என் இருக்கையை, உணவை, திருட்டு பீடியை பகிரும் நண்பனும் கூடவே.  பள்ளிக்கு செல்வதும், வீடு திரும்புவதும் அவனோடு.  ஐந்து பைசாக்கு கிடைக்கும் பாக்கு மிட்டாயும், விக்ஸ் மிட்டாயும் வாங்கி சட்டைப்பையில் நிறைத்து சாப்பிட்டுக்கொண்டே நடப்போம்.  பள்ளி விட்டதும் டியூசன் பின் விளையாட்டு என கவலைகள் இல்லா வாழ்க்கை,  அதிகபட்ச ஆசை பாய் கடையில் வாரம் ஒரு நாள் இரவுணவுக்கு பரோட்டா. வார இறுதிக்கு காத்திருப்போம்.பம்பரம், கலச்சி, ஆவியம் மணியாவியம் என விளையாட்டுகள் நீண்டுகொண்டே போகும். ஆகாரம் தேவையில்லை. 

ஒரு முன்மதிய நேரம், நாங்கள் தெருவின் நடுவே  விளையாடிக்கொண்டிருந்தோம்.  தெருமுனையில் ஆட்டோ ஒன்று வந்தது, உள்ளேயிருந்து முப்பத்தைந்து வயது இருக்கும் பெண் ஒருவர் இறங்கினார்.  அவள் பின் ஐந்து ஆறு வயதிருக்கும் சின்ன பெண்ணொருத்தி, தொடர்ந்து இவளும் இறங்கினாள். பாவாடை சட்டை அணிந்திருந்தாள், கிறிஸ்தவர்கள் போல பொட்டு, நகை எதுவும் இல்லை. எங்களை கடந்து பூட்டி கிடந்த சுப்பிரமணி வீட்டை திறந்து உள்ளே சென்றனர். 

என்னை இல்லை இல்லை எங்களை கடந்து செல்லும் போது, அவளின் தலை குனிந்தே இருந்தது.  எனக்குள் ஒருவித பதட்டம், நான் இதுவரையில் உணராதது.  அவள் போய் வீட்டின் உள் நுழையும் வரை. கண் சிமிட்டவில்லை அவளை நோக்கி இருந்த விழிகளை மீட்டு இயல்பு நிலைக்கு திரும்ப சில வினாடி நேரம் பிடித்தது. 

பின்னர் கடந்த ஒவ்வொரு காலை மாலை வேலையும் அவள் வெளியே வருவது பள்ளிக்கு செல்லவும், டியூசன் செல்ல மட்டுமே.  நகரின் பெரிய கிறிஸ்தவ பள்ளியில் படித்தாள். ஞாயிறு அதிகாலையிலே தேவாலயம் செல்வாள், அதற்காகவே அத்துணை வருடம் இல்லாமல் ஞாயிறு சூரியன் விடிவதை காண நேர்ந்தது.  

எப்படியோ என் நண்பனுக்கும் என் புதிய மாற்றம் உணர்ந்தது.  அதுவும் நன்மைக்குத்தான்.  ஒரு மதிய நேரம் எப்போதும் போல இல்லாமல் எங்கள் தெரு பெண்கள் மட்டும் அவர்கள் வீட்டுக்குள் நுழைந்து பேசி சிரித்தபடி வெளியே வந்தார்கள்.  என் அம்மையும் தான். 

"அம்மா என்னாச்சு அங்க, ஏன் எல்லாரும் போறீங்க"

"உனக்கு எதுக்குல அதுலாம், பெரிய மனுஷன் ஆயிட்டியோ"

"சொல்லும்மா என்னாச்சு"

"அது மேரியம்மா மூத்த பொண்ணு இருக்குல்ல அவ பெரிய மனுஷி ஆயிட்டா"

எனக்கும் அக்கா, பெரியம்மாவின் மகள் இருப்பதால் அதன் அர்த்தம் புரிந்தது.  "சரி அவ பேரு என்னம்மா".  என் அம்மை என்னை வித்தியாசமாய் முறைத்தாள், பின் "ஐரீன்" என்றாள். 

"ஐரீன்", முதல் முறை அவள் பெயரை என் அம்மையின் வாயாலே கேட்டேன். பெரியவளாய் ஆன அடுத்த நாள்,  கிறிஸ்தவர் என்றாலும் தலைக்கு தண்ணீர் ஊற்றும் சடங்கு கழிக்க முடிவு செய்தனர். எனக்குள் ஒரு கேள்வி இருந்தது. "அவளின் அப்பா எங்கே". மனதிற்குள் அழுத்தி வைக்க முயன்றும் அம்மையிடம் கேட்டு விட்டேன்.

"முத்து மாறி ரெண்டு பொம்பளை பிள்ளைகள விட்டுட்டு சண்டாள பாவி வேற எவ கூடையோ போய்ட்டான். எனக்கு மட்டும் அப்டி ஒருத்தன் வந்திருக்கணும் சங்குல சவுட்டி இருந்த நாள் போதும்னு என் தாலிய அறுத்திருப்பேன்". அம்மை சொன்னதும் எனக்குள் அவள் மேல் இன்னும் பிரியம் கூடியது.

அம்மை மேலும் தொடர்ந்தாள் "அந்த அம்மாதான் வலை கம்பெனில வேல பாத்து ரெண்டு பிள்ளைகளையும் வழக்குது,  அவங்க அப்பன் குடிகார பய போல, அப்பப்போ இங்க வந்து தொட்டிப்பய குடிக்க ரூவா கேப்பானா, பாவம் மூணும்".

மேலும் சங்கடம் ஆனா மனநிலை,  நியாபகம் இருக்கிறது. யாரோ ஒருவன் அவள்  வீட்டு முன் நின்று சண்டையிட்டு இருந்தான். தெரு மக்கள் தான் தலையிட்டு தீர்த்து வைத்தனர்.அவன் தான் அப்பனாய் இருக்க வேண்டும். குடி தான் எல்லாம் என்றால்,  எதற்கு குழந்தை பெற்று கொள்கிறார்களோ. 

தலைக்கு தண்ணீர் ஊற்றிய நாள் தெருவில் உள்ள பெண்கள் எல்லாம் அவள் வீட்டில் தான் இருந்தார்கள். வெளியே கோவில் நடை பக்கத்தில் பாய் விரித்து இட்லி, சாம்பார்,  ரசவடை, கேசரி என பந்தி போய் கொண்டிருந்தது. எனக்கு அவளை பார்க்க வேண்டும், முதல் முறையாய் தாவணி கட்டிய அவளை காண வேண்டும். 

சிறிய வீடு அது, அவளை சுற்றி தோழிகளாய் இருக்க வேண்டும். அவளை மறைத்து நின்றிருந்தனர். எவ்வளோவோ எட்டியும் அவள் நெட்டி சுட்டியை தாண்டி பார்க்க முடியவில்லை. ஒருவழியாய் அவளின் முகம் தெரிந்தது. பெரிய சாந்து பொட்டு, அவளின் சாதாரண முகம் அன்று பவுடர் அதிகமாய் தெரிந்தது. கூட்டத்தில் யாரோ என்னை தள்ளி சாப்பாடு பந்தி அருகே அழைத்து சென்றனர். ஆனால் அன்றைய இரவு உறக்கம் இல்லை, அவளின் பொட்டு வைத்த அந்த முகம் எண்ணங்களை நிறைத்தபடி இருந்தது.

எத்தனை ஞாயிறுகள் கடந்து இருக்குமோ, ஒவ்வொரு முறையும் அவளிடம் பேச முயற்சி செய்தும் இயலவில்லை. அவளின் அருகில் நிற்க கூட தைரியம் இல்லை. அவளின் முகத்தை எட்டி பார்த்த அத்தருணம் மட்டுமே, நினைவில் எஞ்சி இருந்தது. 

அரையாண்டு பரீட்சை நேரம்,  அடுத்த நாள் கணித தேர்வு டியூசன் செல்ல வீட்டில் இருந்து வெளியே வந்தேன். அவளின் வீட்டு முன் காவல் அதிகாரி சில பேர் நின்று இருந்தனர். புரியாமல் விழித்தபடி அங்கு சென்றேன். அவளை அழுதபடி கண்டேன், அவள் அம்மா அழவில்லை. என்ன  என்று விசாரித்து முடிப்பதற்குள் அவள் குடும்பம் அங்கிருந்து நகர்ந்தது. தெரு முனையில் ஆட்டோ வந்தது,  அதற்குள் அவளின் அம்மா, தங்கை,  அவளும் ஏறினாள். ஆட்டோ அங்கிருந்து நகர ஆரம்பிக்க வெளியில் தலையை எட்டி என்னை பார்த்தாள், நான் அறிந்து அன்று தான் அவள் என்னை பார்த்தாள். ஆட்டோ அங்கிருந்து சென்றது.

அடுத்த நாள் அவள் வீட்டு சாமான்களை மாற்றி கொண்டிருந்தனர். என்னவென்று புரியவில்லை, ஏன் என்ன நடக்கிறது என புலம்பி நிற்கும் போதே என் அம்மை முன்னாடி நின்று கொண்டிருந்தாள்.

"மேரிக்க மாப்ள, குடிகார பய ரயில் ல விழுந்துட்டானாம்,  சவம் செத்தும் கெடுக்கான், அவங்க அம்மா மேக்க முளகுமூடு அங்கேயே போறாங்களாம்".

எனக்கு என்னவென்று அறிந்து கொள்ளும் வயது இல்லை, இருப்பினும் என் கண்கள் கலங்கி இருந்தது. என் மனதில் ஒரு பெயர் மட்டும் பதிந்தது "ஐரீன்". இதோ என் முன்னால் இன்னொரு ஐரீன்.  இது அவளாக இருக்குமோ!.

No comments:

Post a Comment

இணைந்த கைகள்

  ஒரு மாலைநேரம், புதிய திரைப்படம். திங்கள் கிழமை,  மாலை நேரக்காட்சி,  இணைந்த கைகள்.  நிதானியுங்கள், அதே நேரம் உங்கள் மனைவி, அரசு மருத்துவமனை...